Advertisement

காற்றின் மொழி



இறுதி அத்தியாயம்



சிவகாமி ஒரு நிமிடம்தான் குழம்பினார். அடுத்த நிமிடம் சுதரித்துக் கொண்டார்.


“இன்னைக்குக் காலையில சீக்கிரம் எழுந்தா இல்ல… அதுதான் அலுப்பா இருக்கா. இல்லைனா மதிய சமையலுக்கு அவளும் கூட வந்து வேலை செய்வா.” என்றவர்,


“நான் வாசுகிட்ட பேசினேன். அவன் உன்னைப் பத்தி தான் குறை சொல்றான். அவ அப்பா அம்மாவை வரக் கூடாதுன்னு எல்லாம் நீ சொல்லக் கூடாது இல்லையா.”


“நீயும் கொஞ்சம் அனுசரிச்சு போ…” எனச் சிவகாமி சொல்ல, கஸ்தூரிக்கு முகம் இருண்டு விட்டது.


அப்போது ஸ்வேதா எழுந்து வந்தவள், அவளும் வேலையில் ஈடுபட்டாள்.


“ஏன் ஸ்வேதா அதுக்குள்ள வந்திட்ட? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே.”


“போதும் அத்தை. மதியம் சாப்பிட்டு தூங்கிக்கிறேன்.” என்றாள்.
மாமியாரும் மருமகளும் சேர்ந்து வேலைப் பார்ப்பதை பார்த்ததும், கஸ்தூரிக்கு தாங்க முடியவில்லை.


“நான் எங்க வீட்டுக்கு போறேன்.” என அவர் கிளம்ப,


இரு என்று எல்லாம் சிவகாமி சொல்லவில்லை. சரி போ என்றுவிட்டார்.


இப்போது வீட்டுக்குப் போனால், மதியத்துக்கு வேறு சமையல் செய்ய வேண்டுமே, ஆனாலும் போகிறேன் என்று சொல்லிவிட்டு இருக்க முடியாமல், வேறு வழியில்லாமல் கஸ்தூரி கிளம்பி சென்றார்.


மதியம் உண்டு விட்டு அலுப்பில் நந்தா ஸ்வேதா இருவரும் நன்றாக உறங்கி விட, என்னதான் தங்கையிடம் விட்டுக் கொடுக்காமல் பேசிவிட்டாலும், சிவகாமிக்கு கஸ்தூரி சொன்னதே மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.


அவர் ஹால் சோபாவிலேயே சாய்ந்து உட்கார்ந்து இருக்க, அப்போது நந்தா எழுந்து வந்தான். அவர் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தவன், “என்ன மா உடம்புக்கு முடியலையா?” எனக் கேட்டான்.


“இல்லை டா… லேசா தலை வலிக்குது.” எனச் சமாளித்தார்.


“காலையில சீக்கிரம் எழுந்தது உங்களுக்கும் அலுப்பா தான இருக்கும். நீங்க மதியம் கொஞ்ச நேரம் கூடத் தூங்கலையா.” என்றவன், “இருங்க நான் உங்களுக்கு டீ போட்டுக் கொண்டு வரேன்.” என டீ போட சென்றான்.


சிவகாமியும் அவனுடன் சமையல் அறைக்குச் சென்றவர், “ஸ்வேதா வீட்ல அவளை அழைச்சிட்டுப் போகக் கேட்டாங்க இல்லை, நீ ஏன் அனுப்பலை?” என மகனிடம் கேட்டுப் பார்த்தார்.


“நல்லா இருக்கும் போது நம்ம வீட்ல வச்சிக்கிட்டு, உடம்பு முடியாத நேரம் அவங்க வீட்டுக்குப் பார்த்துக்கச் சொல்லி அனுப்புறது. எனக்கு நியாயமா தோணலை.”


“பொண்ணுங்க ரெஸ்ட் எடுக்கணும்ன்னா அம்மா வீட்டுக்குத்தான் போகணுமா?”


“அவளுக்கு முடியாத போது, நாம பார்த்தா தான மா.. நம்ம குடும்பத்து மேல அவளுக்கு ஒட்டுதல் வரும்.”


“கல்யாணம் ஆன பெண்ணுக்கு அவங்க அம்மாவே எல்லாம் பண்ணா, மாமியார் மேல எப்படிப் பாசமோ, அக்கறையோ வரும்.”


“இவங்க நமக்கு என்ன பண்ணாங்க. அப்படித்தானே நினைக்கத் தோணும்.”


“ஓ… இப்ப நான் உன் பொண்டாட்டிக்கு பார்த்தா, நாளைக்கு அவ எனக்குப் பார்ப்பான்னு சொல்ற.”


“நீங்க அவளுக்குப் பார்க்களைனாலும் அவ உங்களுக்குப் பார்ப்பா.. ஆனா அது கடமையா இருக்கும், அக்கறையா இருக்காது. புரியுதா உங்களுக்கு.”


மகன் சொன்னது புரிந்ததால், அதுவரை இருந்த கலக்கம் மறைந்து சிவகாமியின் முகம் மலர… அதைக் கவனித்த நந்தா “திடிர்ன்னு என்ன மா விசாரணை?” என்றான்.


“இல்லை…” எனச் சிவகாமி இழுக்க…


“உங்க தங்கச்சி என்ன சொன்னாங்க?” நந்தா நேரடியாகக் கேட்க,


“இல்லை நான் உன் பொண்டாடிக்கு வேலை பார்த்தா… நீங்க என்னை அப்படியே வேலை செய்யப் போட்டுடுவீங்கன்னு சொன்னா. வேலைக்காரின்னு வேற சொன்னா டா.”


“இனிமே சொன்னா சொல்லுங்க, என் மருமகளுக்கு நான் பார்க்காம யாரு பார்ப்பான்னு. இது என்னோட வீடு, என் வீட்ல நான் வேலைப் பார்கிறேன், உனக்கு என்னன்னு கேளுங்க.”


“நான் அவகிட்ட எதுவும் விட்டுக் கொடுத்து சொல்லலை. இருந்தாலும், என்னவோ மனசு குழப்பம்.”


“அம்மா ஒன்னு புரிஞ்சிக்கோங்க, உங்க மருமகளுக்கு நீங்கதான் பார்க்கணும், அதே போல உங்களுக்கு அவதான் பார்க்கணும். நீங்க வேற யார் பேச்சையும் கேட்டு குழப்பிக்காதீங்க.”


அப்போது முரளியும் வந்துவிட, “என்ன ரெண்டு பேரும் தனியா என்ன பேசுறீங்க?” என்றான்.


“இன்னைக்கு இவங்க தங்கச்சி வந்தாங்க இல்ல… எதோ கொளுத்தி போட்டுட்டு போயிட்டாங்க போலிருக்கு.” என நந்தா விவரம் சொல்ல…


“உங்களுக்குப் பொண்ணு இருக்கா… இல்லையில, அப்புறம் மருமகளை மகள் மாதிரி பார்க்க வேண்டாமா?”


“அண்ணிக்கு மட்டும் இல்ல.. என் பொண்டாட்டிக்கும் நீங்கதான் பார்க்கணும்.” என்றான் முரளி அதிகாரமாக.


முரளி சொன்னதைக் கேட்டு நந்தாவும் , சிவகாமியும் சிரித்து விட்டனர். அப்போது ஸ்வேதா எழுந்து வர… நந்தா மனைவிக்கு மட்டும் ஹார்லிக்ஸ் கலக்கினான்.


“எனக்கு டீ இல்லையா?” ஸ்வேதா பாவமாகக் கேட்க,


“டீ காபி எல்லாம் நீ இப்ப குடிக்கக் கூடாதுன்னு தெரியும் இல்ல…. அப்புறம் ஏன் கேட்கிற?” என்றான் நந்தா.


“பாவம் டா ஒரு நேரமாவது குடிச்சிட்டு போகட்டும்.” எனச் சிவகாமி மருமகளுக்குப் பரிந்து கொண்டு வர…


“நீங்க அவளுக்குச் சப்போர்ட் பண்ணீங்கன்னா… வீட்ல இனிமே யாருக்குமே டீ இல்லை.” என்றவன், ஹாலில் சென்று மனைவியின் அருகே உட்கார்ந்தான்.


“மாசமா இருக்கிற பொண்ணுங்க எதுக்கும் ஏங்க கூடாதுன்னு சொல்வாங்க. இல்லைனா உன் பிள்ளைக்குத் தான் காதில இருந்து சீழ் வழியும் பார்த்துக்கோ.” என்றதும்,


நந்தா ஸ்வேதாவை பார்த்து அப்படியா என்றவன், “சரி இந்தா என்னோட டீயில கொஞ்சம் குடிச்சிக்கோ.” எனக் கொடுத்தான்.


நந்தா பேச்சுச் சுவாரஸ்யத்தில் கவனிக்கவில்லை. அதற்குள் ஸ்வேதா பாதி டீயை குடித்து இருந்தாள்.


“அடிப்பாவி ! இவ பக்கத்தில உட்கார்ந்து டீ கூடக் குடிக்க முடியாது போல.” என்றவன், “ஒழுங்கா உன் பாலைக் குடி.” என அதட்டினான்.


ஸ்வேதா பாலை வைத்துக் கொண்டு முழிக்க… அவன் போனதும் உனக்கு டீ போட்டுத் தரேன் எனச் சிவகாமி கண்ணைக் காமிக்க… நந்தா பார்த்தாலும் கண்டுகொள்ளவில்லை.


கஸ்தூரி வேலைக்காரி என்று சொன்னது, அம்மாவை மிகவும் பாதித்து இருக்கிறது என அவனுக்கு நன்றாகவே புரிந்தது.


“அம்மாவுக்குத் தலைவலி ஸ்வேதா, நீ பார்த்துக்கோ.” என அவன் மனைவியிடம் சொல்ல,


“நீங்க தண்ணியில கை வைக்காதீங்க. நான் பார்த்துகிறேன்.” என்றவள், அதன் பிறகு சிவகாமியை எந்த வேலையும் செய்யவிடவில்லை. மறுநாள் கூடக் காலை சீக்கிரமே எழுந்து அவளே வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


நம்மையே வேலை செய்யப் போட்டுடுவான்னு நினைச்சோமே அப்படி நினைக்கிறவ, இப்படி இருப்பாளா…மாசமா இருக்கிற சாக்கை வச்சு படுத்து தானே இருப்பா.


அவளுக்கு நீங்கதான் பார்க்கணும், உங்களுக்கு அவதான் பார்க்கணும் என மகன் சொன்னது தான், அப்போது அவருக்கு நினைவு வந்தது.


முரளி சொன்னதும் சரிதான். நமக்கு என்ன பொண்ணா இருக்கு, மருமகள்களைத் தானே பெண்ணா நினைக்கணும். நாம ஏன் அப்படி நினைக்காம போனோம் என நினைத்து வருந்தினார்.


“எனக்கு ஒன்னும் இல்லை. நீ போய் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு.” என ஸ்வேதாவை அனுப்பிவிட்டு, அவர் வேலையைத் தொடர்ந்தார்.


ஸ்வேதா கருவுற்றதில் இருந்து எங்கேயும் வெளியே செல்லவில்லை. மாலை கோவிலுக்காவது கூடிட்டு போங்க என அவள் நந்தாவை நச்சரிக்க, சரி என்று சொல்லி இருந்தான்.


ஸ்வேதா பட்டுபுடவை கட்டி தயார் ஆக…. சிவகாமி அவருடைய கல் பதித்த நெக்லஸ் கொண்டு வந்து ஸ்வேதாவுக்குப் போட்டு விட்டார்.


“கோவிலுக்குப் போயிட்டு வந்து நான் திருப்பித் தந்திடுறேன்.” என ஸ்வேதா சொல்ல,


“நான் இப்ப நெக்லஸ் எல்லாம் போடுறது இல்லை. இதை நீயே வச்சுக்கோ.” என்றார்.


ஸ்வேதா நந்தாவைப் பார்க்க, “உன் மாமியார் உனக்குக் கொடுக்கிறாங்க. நீ ஏன் என்னைப் பார்க்கிற?” என்றான் அவன் சிரித்துக் கொண்டு.


“அம்மா, என் பொண்டாட்டிக்கும் இப்படிப் போடுவீங்க இல்ல…” முரளி கேட்க,


“அவளுக்கும் வச்சிருக்கேன் டா… இப்பவே வேணா வாங்கி வச்சுக்கிறியா? பொண்டாட்டி வர்றதுக்குள்ளையே இந்தப்பாடு படுத்துறான். இன்னும் வந்துட்டா என்ன ஆட்டம் ஆடுவானோ.” சிவகாமி சொன்னதைக் கேட்டு, முரளி பொய்யாக முறைக்க, மற்றவர்கள் சிரித்தனர்.


ஸ்வேதா ஒரு பத்து நாட்கள் சென்று பிறந்த வீட்டில் சீராடி விட்டு வந்தாள். அதன் பிறகு ஒன்பது மாதத்தில் வளைகாப்புச் செய்து பிரசவத்திற்குத் தான் அவள் வீட்டிற்குச் சென்றாள்.


ஸ்வேதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறக்க, இவர்கள் வீட்டில் இருவருமே ஆண்கள் தானே, பெண் குழந்தை என்றதும், நந்தா வீட்டில் தலையில் வைத்துக் கொண்டாடினர்.


“வீட்டுக்கு முதல் குழந்தை, அந்த மஹாலக்ஷ்மியே பிறந்திருக்கா…” எனக் குழந்தையைப் பார்க்க வந்தவர்களிடம் எல்லாம், சிவகாமி சொல்லி மகிழ… பெண் குழந்தை தானா என எதாவது சொல்லி பத்த வைக்கலாம் என்ற கஸ்தூரியின் எண்ணம் பலிக்கவில்லை.


குழந்தைக்கு மூன்று மாதங்கள் சென்று வரலக்ஷ்மி எனப் பெயரிட்டு, இவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.


ஸ்வேதா வீட்டிற்குள் வந்ததும், குழந்தையைச் சிவகாமியிடம் கொடுக்க, “ஆனாலும் அண்ணி உங்களுக்கு மாமியார் மேல இவ்வளவு பாசம் இருக்கக் கூடாது. அது எப்படி அண்ணி அப்படியே எங்க அம்மாவை அச்சு எடுத்த மாதிரி பெத்து இருக்கீங்க.” என்றான் முரளி.


உண்மையில் வரலக்ஷ்மி அவள் பாட்டியைக் கொண்டு தான் இருந்தாள். சிவகாமி நல்ல நிறம், அதே போல நிறமும், முக ஜாடையும் கொண்டு இருந்தாள்.


பேத்தியை கையில் வாங்கிய சிவகாமிக்கு அவ்வளவு பூரிப்பு. “அம்மா, இனிமே உங்க பேத்தி உங்க பொறுப்பு. நீங்கதான் அவளை வளர்க்கணும்.” என்றான் நந்தா.


ஸ்வேதா எதாவது நினைத்துக் கொள்ளப் போகிறாள் எனச் சிவகாமி பார்க்க, அவள் புன்னகை முகமாகத்தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


நந்தா சொன்னது போலப் பகலில் வரலக்ஷ்மி சிவகாமியிடம் தான் நிறைய இருந்தாள். அன்று கஸ்தூரி வந்திருந்தார். அவர் இப்போதும் வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் இத்தனை நாள் ஸ்வேதா இங்கு இல்லாததால்… வந்து அக்காவிடம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு சென்று விடுவார்.


இப்போது ஸ்வேதாவும் வந்து விட…. மீண்டும் கலகத்தை ஆரம்பித்தார். குழந்தைக்கு மூன்று மாதம் முடிந்து விட்டதால்… திட உணவு கொடுக்க ஆரம்பித்தனர். சிவகாமி பகல் வேளையில் பேத்திக்கு செர்லாக் கொடுத்துக் கொண்டிருந்தார்.


“அக்கா, லக்ஷ்மி அப்படியே உன்னை மாதிரியே இருக்கா… நீங்கதான இவளை வளர்க்கிறீங்க, பாருங்க பெத்தவங்களை விட உன்கிட்டதான் பாசமா இருப்பா. இவளுக்கு நீங்களே எல்லாம் பண்ணுங்க.” எனச் சாதாரணமாகச் சொல்வதைப் போலக் கஸ்தூரி சொல்ல,


சிவகாமி உடனே மருமகள் முகத்தைத்தான் பார்த்தார். ஸ்வேதா முகம் மாறிவிட்டது. பின்னே பாசமாக இருப்பாள் எனச் சொல்வது வேறு, அது என்ன பெற்றவர்களை விடப் பாசமாக இருப்பாள் என்று சொல்வது. பெற்றவர்களுக்கு ஈடு யாருமே கிடையாது.


“மகனும் மருமகளும் தன்னை நம்பி தங்கள் பிள்ளையையே கொடுத்திருக்கிறார்கள். அதை இந்தக் கஸ்தூரி கெடுத்து விடுவாள்.” எனச் சிவகாமிக்கு அச்சம் வர,


“பிள்ளைங்க முதல்ல அவங்க பெத்தவங்களுக்குதான் பிறகுதான் மத்தவங்களுக்கு. நந்தாவும் ஸ்வேதாவும் என்கிட்டே குழந்தையை வளர்கிற பொறுப்பைக் கொடுத்திருக்காங்க. அதுக்காக எல்லாமே நானேன்னு ஆகிடாது.”


“அப்பா அம்மாவோட பாசம் தான் முதல்ல. நாம பெரியவங்க செல்லம் தான் கொடுப்போம், பெத்தவங்க தான் கண்டிப்பும் காட்டுவாங்க.”


“எங்க வீட்ல இந்தப் பிரிச்சுப் பார்க்கிறது எல்லாம் இல்லை. நாங்க எல்லாம் சேர்ந்து தான் செய்வோம்.” என அடித்துப் பேசி விட, ஸ்வேதா முகம் தெளிய, கஸ்தூரி முகம் கருத்தது.


இவதான் பையன் மருமகள்ன்னு சேர்ந்து இல்லாம இருக்கா.. எனக்கும் யாரும் இல்லாம பண்ணிடுவா போலிருக்கு எனச் சிவகாமிக்குப் பயம் வந்துவிட்டது.


“நீ என்ன உன் பேரனை பார்க்க போகலையா?” என்றவர், “எனக்கு இந்தச் சின்னகுட்டியோடவே நேரம் சரியா போயிடுது. நான் முன்ன மாதிரி டிவி கூட இப்ப பார்க்கிறது இல்லை. இனிமே நீ இங்க வரும் முன்ன போன் பண்ணி, என்னைக் கேட்டுட்டு வா.”


“உனக்குக் குழம்பு தரேன். எடுத்திட்டு கிளம்பு.” எனச் சிவகாமி சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றுவிட, கஸ்தூரியும் வேறு வழியில்லாமல் கிளம்பினார்.


“இனிமே நான் கூப்பிடாம இங்கே வராதே.” என்பதைச் சிவகாமி சுற்றி வளைத்து சொல்லி விட்டார்.


ஸ்வேதா அன்று இரவு கணவனிடம் எல்லாவற்றையும் சொல்ல, “அம்மா தான் அவங்க தங்கச்சிகிட்ட சொல்லணும். அவங்களே சொல்லிட்டாங்க, அப்ப அவங்களுக்கு அவங்க தங்கையைப் பத்தி புரிஞ்சிடுச்சுன்னு தானே அர்த்தம். இனிமே பிரச்சனை இருக்காது.” என்றான்.


கணவன் என்ன சொன்ன போதிலும் ஸ்வேதாவின் மன சிணுக்கம் குறையவில்லை. அதை உணர்ந்தவன் “இப்ப நீ என்ன டி பண்ணப் போற? குழந்தையை எங்க அம்மாகிட்ட கொடுக்காம இருக்கப் போறியா?” எனக் கோபமாகக் கேட்டான்.


“நான் ஒன்னும் அப்படிச் சொல்லலை.”


“இல்ல நீ சொல்லித்தான் பாரேன். பிறகு நான் யாருன்னு உனக்குத் தெரியும்.”


“நான் சும்மாதான் இருக்கேன், நீங்க ஏன் என்னைத் தேவையில்லாம திட்றீங்க? நான் ஒன்னும் யாரு பேச்சையும் கேட்டுட்டு ஆட மாட்டேன். எனக்குச் சுய புத்தி இருக்கு.”


“இருக்கா… இருந்தா சரிதான்.” என நந்தா சிரிக்க, ஸ்வேதா அவனை அடித்தாள்.


“அம்மா அவங்க பேத்தியை வளர்க்கட்டும், உனக்கும் வேணா ஒன்னு சீக்கிரம் ரெடி பண்ணிடலாம்.”


“நீங்க வேற எதுக்கோ ரூட் போடுறீங்க?”


“புருஷனை காயப் போட்டு வச்சிருக்கோமேன்னு எல்லாம் கவலை இல்லை. எப்பப் பாரு பஞ்சாயத்து தான் இந்த வீட்ல. மனுஷனை நிம்மதியா இருக்க விடுறீங்களா டி….” நந்தா பேசிக் கொண்டிருக்கும் போதே, ஸ்வேதா தன் இதழால், அவன் இதழை மூட,


இனிமேல் பேசுவானா என்ன? ஸ்வேதா ஆரம்பித்த காதல் பாடத்தை , நந்தா தொடர ஆரம்பித்தான். இங்கே இவர்கள் வேறு உலகில் இருக்க, அங்கே சிவகாமி பேத்தியை தூங்க வைத்துக் கொண்டு இருந்தார்.


குடும்பங்களில் அனுசரித்துப் போவதும், விட்டுக் கொடுத்து போவதும் மிகவும் முக்கியம். எப்போதும் குறையே பாராட்டிக் கொண்டிருந்தால்… உறவுகள் விட்டுத்தான் போய் விடும்.


உண்மையில் குறையே இருந்தாலும், அந்தக் குறையைக் கூட நல்லவிதமாகச் சொல்லத் தெரிந்தவர்களின் உறவு வலுப்படுமே அன்றி உடையாது.


இந்தச் சூட்சமம் தெரிந்தவர்கள் சிலரே… தெரிந்தவர்கள் வாழ்வில் என்றும் ஆனந்தமே.


Advertisement