Advertisement

காற்றின் மொழி


அத்தியாயம் 11



சில நாட்கள் கஸ்தூரி வராமல் இருக்க… வீடு அமைதியாக இருந்தது. சிவகாமியும் ஜாடை பேசுவது எல்லாம் இல்லை. அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.


மறுவாரம் வந்த முரளியும் வித்தியாசத்தை நன்றாகவே உணர்ந்தான். மாமியாரும் மருமகளும் சேர்ந்து சமையல் செய்தனர்.


சிவகாமி மட்டன் பிரியாணி செய்ய, ஸ்வேதா தேவையானது எல்லாம் நறுக்கிக் கொடுத்தாள்.


“எங்க அம்மா பண்ற பிரியாணி சூப்பரா இருக்கும், நீ பார்த்து கத்துக்கோ.” நந்தா சொல்ல,


“அவங்கதான் நல்லா பண்றாங்க இல்ல.. அப்புறம் நான் ஏன் கத்துக்கணும்? அவங்களே பண்ணட்டும்.” என்றாள் ஸ்வேதா.


“அது தானே நான் இருக்கும்போது, அவ ஏன் பண்ணனும்? மெதுவா கத்துக்கலாம்.” என்றார் சிவகாமியும்.


“என்ன அண்ணா திடிர்ன்னு மாமியாரும் மருமகளும் இவ்வளவு ராசி ஆகிட்டாங்க. இன்னைக்குக் கண்டிப்பா சேலத்துல புயல் வரப் போகுது.” முரளி சொல்ல,


“நாங்க ரெண்டு பேரும் இதுக்கு முன்னாடி ஏதோ சண்டை போட்ட மாதிரி சொல்றீங்க முரளி. நாங்க எப்ப சண்டை போட்டோம்?” என ஸ்வேதா குறும்பாகக் கேட்க,


“அது தானே டா, நீங்களா மாமியார் மருமகள்குள்ள பிரச்சனையை உண்டு பண்ணிடாதீங்க.” என்றார் சிவகாமியும்.


“நீங்க ரெண்டு பேரும் எங்க சண்டை போட்டீங்க? அண்ணன் தம்பி எங்களைத் தான் சுத்தல்ல விட்டீங்க.” நந்தா சொல்ல,


“ஆமாம் அண்ணா, ஆனா இந்தப் பொம்பளைங்க பேச்சை மட்டும் இனி எப்பவும் கேட்க கூடாது. இவங்களுக்காக நாம பேசினா, இவங்க ரெண்டு பேரும் எப்படிக் கதையையே மாத்துறாங்க பார்த்தீங்களா?”


“நல்லது தான் விடு. இனி மாமியார் மருமகள் ஒருத்தரை பத்தி ஒருத்தர் எதாவது புகார் கொண்டு வரட்டும், அப்ப பார்த்துக்கலாம்.” நந்தா சொல்ல,


“வந்தா அப்புறம் பேசுங்க.” என்றாள் ஸ்வேதாவும் மிடுக்காக.


“பார்ப்போம், பார்ப்போம் எவ்வளவு நாளுன்னு நாங்களும் பார்க்கிறோம்.” நந்தா கிண்டலாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.


சிவகாமி பிரியாணி போட்டுவிட்டு, டிவி பார்க்க சென்று விட்டார். ஸ்வேதா கோழி வறுத்துக் கொண்டு இருந்தாள். அப்போது சமையல் அறைக்கு வந்த முரளி, “அண்ணி. உங்களையும் அம்மாவையும் இப்படிப் பார்க்கவே சந்தோஷமா இருக்கு.” என்றான்.


“நான் எங்க வீட்ல இருந்து வந்ததுல இருந்தே அத்தை என்கிட்டே நல்லத்தான் நடந்துகிறாங்க முரளி.”


“அது அண்ணன் அன்னைக்குப் போட்ட போடுல கொஞ்சம் அரண்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.”


“அப்படி என்ன பண்ணார் உங்க அண்ணன்?” என ஸ்வேதா ஆர்வம் ஆக.


“என் பொண்டாட்டிக்கு சுயமரியாதை இருக்கு, நீங்க அவளையும் அவங்க வீட்டையும் மதிக்கலைனா, நான் தனிக் குடித்தனம் போய்டுவேன்னு சொன்னார்.”


“ஓ… அவர் சும்மா சொல்லி இருப்பார். அதெல்லாம் அவங்க அம்மாவை விட்டு வரமாட்டார்.”


“எனக்கும் தெரியும் அண்ணி. நானே பெங்களூர் கூடிட்டு போய் வச்சிக்கிட்டுமான்னு கேட்டதுக்கு, மாட்டேன்னு சொல்லிட்டாரே.”


“அத்தை நல்லவங்க தான் முரளி. ஆனா யாராவது பேசினா அப்படியே மாறிடுறாங்க.”


“யாரோ என்ன, அவங்க தங்கச்சி தான். சரியான விஷம் அது.”


“இப்ப கொஞ்ச நாளா இந்தப் பக்கம் வரலை.”


“நல்லது, இவங்க ரெண்டு பேரும் பார்க்காம இருந்தா ரொம்ப நல்லது அண்ணி.”
அது எப்படிப் பார்க்காம இருப்பாங்க என ஸ்வேதா நினைத்துக் கொண்டாள்.
மதியம் அனவைரும் சேர்ந்து உட்கார்ந்து உணவருந்தினர். “ரொம்ப நல்லா இருக்கு அத்தை உங்க பிரியாணி.” ஸ்வேதா மனதார பாராட்ட,


“விடு இனிமே மாசம் ஒருநாள் பிரியாணி பண்ணிடலாம்.” என்றார் சிவகாமி மகிழ்ச்சியாக.


இவர்கள் பேசியது கேட்டது போல, அன்று மாலையே கஸ்தூரி வந்து நின்றார். சில நாட்களாக வராத தங்கை வந்ததும், சிவகாமியும் அவரைத் தாங்க ஆரம்பித்தார்.


“பிரியாணி பண்ணி இருக்கேன். சாப்பிடு கஸ்தூரி.”


“ஆமாம் பிரியாணி ஒண்ணுதான் எனக்குக் கேடு. நானே இந்தக் கால் வலியில கிடந்து அவஸ்த்தை படுறேன்.”


“இன்னும் கால் வலிக்குதா?”


“ஆமாம், கால் வலியை வச்சிக்கிட்டு. வீட்ல என்னால ஒரு வேலையும் பார்க்க முடியலை.”


“ஐயோ பாவம், நீ உன் வீட்டுக்காரரை பார்க்கணும், இல்லைனா வாசுகிட்டவாவது போய் இருப்ப.”


“அவன்தான் என்னை வேண்டாம்ன்னு அப்படியே ஒதுக்கிட்டானே. வளைகாப்பு கூட இங்க வைக்கலையாம். கேட்டா அவன் பொண்டாட்டி அலையக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாராம்.”


“நான் வளைகாப்பு இங்க வச்சு, அப்படியே பிரசவமும் இங்கேயே பார்த்து, குழந்தை பிறந்த பிறகு அஞ்சு மாசத்தில அனுப்பலாம்ன்னு நினைச்சு இருந்தேன்.”


“இனி பாரு அவன் மாமியாரை அங்க கூப்பிட்டு வச்சுப் பிரசவம் பார்த்துப்பான். அவனுக்கு நான் தேவை இல்லை.”


“பார்த்தா ஊமை மாதிரி இருந்தா… எப்படி என் மகனை மயக்கிட்டான்னு பாரு. இனிமே நான் ஒத்தையிலேயே கிடக்க வேண்டியது தான்.” எனக் கஸ்தூரி கண்ணீர் விட, தங்கை வருந்துவது பார்த்து அக்காவும் வருத்தப்பட்டார்.


தங்கைக்கு மதியம் செய்த பிரயாணி, இன்னும் மற்ற தின்பண்டங்களைக் கொடுத்து, முரளியை கொண்டு போய், அவர் வீட்டில் விட்டுவிட்டு வர சொன்னார்.


அதோடு சும்மாவா இருந்தார். “அவன் பார்க்கலைனா போறான். உனக்கு நான் இருக்கேன். இங்க வா, இல்லை முடியலைனா ஒரு போன் பண்ணு, நான் அங்க வரேன்.” என வேறு சொல்லி அனுப்பினார்.


அவர் சொன்னதைக் கேட்டு மகன்களுக்குக் கிலிப்பிடித்தது என்றால், அது மிகை அல்ல, அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே சிவகாமி, வாசுவையும் அவன் மனைவியையும் திட்டிக் கொண்டு இருந்தார்.


முரளியும் கஸ்தூரியை விட்டுவிட்டு உடனே திரும்பி விட்டான். இப்படித் தன் தங்கை கஷ்ட்டப்படுகிறாளே எனச் சிவகாமி வருத்தப்பட்டுக் கண்ணீர் சிந்த,
“இது அவங்களா தேடிக்கிட்டது தான் மா…” என்ற நந்தா தொடர்ந்து,


“இருக்கும்போது மருமகளை என்ன பாடு படுத்தினாங்க. அப்பவே மருமகளை ஒழுங்கா நடத்தி இருந்தா, இன்னைக்கு இந்த நிலைமை வருமா?” என்றான்.


“இத்தனை நாள் அவதான் வீட்டு வேலை எல்லாம் பண்ணா. மருமகள் வந்ததும் அவ பன்னட்டும்ன்னு நினைச்சா, இதுல என்ன டா தப்பு?”


“வேலை பண்றது இல்லை மா பிரச்சனை. நம்ம வீட்ல கூடத்தான் ஸ்வேதா வேலை பண்றா. ஆனா எப்படி மருமகளை நடத்துறோம்ன்னு இருக்கு இல்ல… வேலைக்காரி மாதிரி நடத்தினா… அவங்களும் எவ்வளவு நாள் பொறுமையா இருப்பாங்க.”


“சரி கஸ்தூரி செஞ்சது தப்புன்னே வச்சுப்போம், அதுக்காக வாசு அம்மாவை விட்டுடுவானா? இதே அவன் பொண்டாட்டி அப்படி இப்படி இருந்தாலும் விட்டுடுவானா என்ன?’


“நீ ஆயிரம் தான் சொல்லு, பசங்களுக்கு அம்மான்னா ஒரு மாதிரி பொண்டாட்டின்னா ஒரு மாதிரி தான்.” சிவகாமி சொல்ல, மகன்கள் இருவரின் முகமும் மாறியது.


இருவருமே அம்மாவுக்காக அப்படிப் பார்ப்பார்கள், சிவகாமி சொன்னது அவர்களையும் சேர்த்துச் சொன்னது போலத்தான் இருந்தது. அதனால் வருத்தம் கொண்டனர்.


அதுவரையில் இவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஸ்வேதா, “ஏன் அத்தை ஒருத்தரை வச்சு எல்லோரையும் அப்படிச் சொல்றீங்க?”


“எனக்கு மத்தவங்களைப் பத்தி தெரியாது. ஆனா உங்க பசங்க அப்படி இல்லை. இப்ப நானே இவரைத் தனியா கூப்பிடுறேன்ன்னு வச்சுக்கோங்க. உங்க பையன் வந்திடுவாரா என்ன?”


“வரமாட்டார், அப்ப தனிக் குடித்தனம் போறேன்னு சொன்னது கூடச் சும்மாதான்.” என்றாள்.


“நான் இவங்களைச் சொல்லலை ஸ்வேதா, வாசு அவங்க அம்மாவை எதிர்த்து பேசினதே இல்லை. ஆனா அவனே இப்படி மாறிட்டானே, அதுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு.”


“எதிர்த்து பேசி இருந்தாருன்னு வச்சுக்கோங்க. அப்பவே அவங்க குடும்பத்தில இருக்கப் பிரச்சனை சரி ஆகி இருக்கும். முதல்லையே அவர் அம்மா தப்பு செஞ்ச போதே கண்டிச்சிருந்தா… இந்த அளவுக்கு வந்திருக்காது.” முரளி சொல்ல,


தான் என்ன சொன்னாலும், தன் அம்மாவுக்குப் புரியாது என நினைத்த நந்தா, “அம்மா, வாசு உங்க தங்கை பையன் தானே… நீங்க அவனையே கேளுங்களேன். உங்களுக்கு அவனைக் கேட்க உரிமை இருக்கு. அவனும் என்ன நினைக்கிறான்னு தெரிஞ்சிக்கலாம்.” என்றவன், தன் செல்லில் வாசுவை அழைத்தான்.


“அண்ணா, சொல்லுங்க அண்ணா.”


“வாசு, நல்லா இருக்கியா? வீட்ல எல்லோரும் சவுக்கியமா?”


“எல்லோரும் நல்லா இருக்கோம் அண்ணா, அங்க அண்ணி பெரியம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா?”


“எல்லோரும் நல்லா இருக்காங்க. அப்புறம் அம்மா உன்னோட பேசணுமாம்.” என்றவன், செல்லை சிவகாமியிடம் கொடுத்தான்.


சிவகாமி முதலில் அவனிடம் நலம் விசாரித்தவர், “ஏன் டா உங்க அம்மா முன்ன பின்ன இருந்தாலும், அவளை இப்படித் தனியா விட்டுடுவியா? பாவம் அவளே உடம்பு முடியாம கஷ்ட்டபடுறா.” எனச் சிவகாமி ஆரம்பித்தது தான் தெரியும், அந்தப் பக்கம் வாசு பொரிந்து தள்ளி விட்டான்.


“நாங்க மட்டும் அவங்களை நினைச்சா போதுமா பெரியம்மா, அவங்க எங்களை நினைக்க வேண்டாமா.”


“வேணும்ன்னே ஓவியாவோட அப்பா அம்மாவோட சண்டை போட்டுடாங்க. மாசமா இருக்கிற பெண்ணை அவங்க பார்க்க வர வேண்டாமா? அவங்களை வரக் கூடாதுன்னு சொல்றாங்க. இதை எப்படிக் கேட்க முடியும்?”


“ஓவியா என்ன செஞ்சாலும் குறை தான் சொல்றாங்க. மாசமா இருக்கிற பொண்ணுன்னு கூடப் பார்க்காம வேலை வாங்கிட்டே இருக்காங்க. நான்தான் குறையோட பிறந்தேன், என் குழந்தையாவது நல்லா பிறக்க வேண்டாமா?”


“சரி டா, நீ சொல்றது எல்லாம் சரிதான். உங்க அம்மாவுக்கு எடுத்து சொல்ல வேண்டியது தான.. அதுக்காக வெட்டிட்டு போவியா?”


“சொன்னா எங்க பெரியம்மா கேட்கிறாங்க. உடனே கத்தி சண்டை போடுறாங்க, அப்புறம் முனங்கிட்டே இருக்காங்க. இதுல சாபம் வேற கொடுக்கிறாங்க. பெத்த பையனுக்கே யாராவது சாபம் கொடுப்பாங்களா? நீங்களே சொல்லுங்க.”


“நீ கேட்கிறது நியாயம்தான். ஆனா பாவம் அவளுக்கு முடியலையே டா…”


“அதெல்லாம் சும்மா பெரியம்மா, நான் வேலைக்கு ஆள் வச்சுக்கச் சொல்லிட்டேன். அதுக்கும் என்கிட்டே பணம் வாங்குறாங்க. ஆனா ஆள் வச்சுக்கலை. இதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்?”


“அவங்களோட சேர்ந்து இருக்கிறது எல்லாம் ஒத்து வராது. அவங்க ஒன்னு மாத்தி ஒன்னு பிரச்சனை பண்ணிட்டே இருப்பாங்க. அவங்களுக்குத் தனியா இருக்கிறது தான் சரியா வரும்.”


“நீங்க எனக்குச் சொல்றதுக்குப் பதில் உங்க தங்கச்சிக்கு சொல்லுங்க.” என்றவன், போன்னை வைத்து விட்டான்.


நந்தா போன்னை ஸ்பிகரில் தான் போட்டு இருந்தான். அதனால் எல்லோருக்குமே அவன் பேசியது கேட்டது.


“இப்ப தெரியுதா மா உங்க தங்கச்சியோட லட்சணம். இனிமே அவங்களுக்குப் பரிஞ்சிட்டு பேசாதீங்க. அவங்களை ஒழுங்கா இருக்கச் சொல்லுங்க.” என்றான் நந்தா.


“அம்மா சொன்னா மட்டும் கேட்டுடுவாங்களா? நீங்க கொஞ்சம் அவங்ககிட்ட இருந்து விலகி இருந்துக்கோங்க மா, அது தான் நம்ம குடும்பத்துக்கு நல்லது.” என்றான் முரளி.


“அண்ணன் உங்களை நல்லா பார்க்கனும்ன்னு நினைக்கிறார். அண்ணியும் நல்லா குனமாதான் இருக்காங்க. நீங்க உங்க தங்கச்சி பேச்சை கேட்டுட்டு எதாவது பிரச்சனை பண்ணிக்காதீங்க மா.” எனத் தன் அம்மாவிடம் முரளி தனியாகப் பேசிவிட்டே பெங்களூர் கிளம்பி சென்றான்.


அன்று இரவு அறையில் நந்தாவும் ஸ்வேதாவும் பேசிக் கொண்டு இருந்தனர்.


“இனிமேலாவது அம்மா அவங்க தங்கச்சியைப் புரிஞ்சு நடந்துப்பாங்களா?”


“என்ன இருந்தாலும் அவங்க தங்கச்சி இல்லை. அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுப்பாங்களா என்ன?”


“நீ என்ன ரொம்பக் கூல்லா இருக்க? அவங்க வந்து போனா எல்லோரையும் விட உனக்குத்தான் பிரச்சனை வரும்.”


“நான் ஏன் யாரோ ஒரு மூன்னாம் மனுஷியைப் பத்தி கவலைப் படணும். அதுவும் நீங்க எனக்குச் சப்போர்ட் பண்ணலைனா பரவாயில்லை. நீங்கதான் எனக்கு இவ்வளவு சப்போர்ட் பண்றீங்களே.”


“எனக்காகத் தனிக் குடித்தனம் எல்லாம் போறேன்னு உங்க அம்மாகிட்ட சொன்னீங்களாம்.”


“நம்ம வீட்டுக்குள்ள நாம அடிச்சிக்கலாம், சேர்ந்துக்கலாம். ஆனா அதுக்காக உங்க வீட்ல இருக்கவங்களை மரியாதை இல்லாம நடத்த கூடாது இல்ல…”


“அதுவும் நம்ம வீட்ல நடக்கிற எல்லா விசேஷத்துக்கு அவங்க வரணும். அம்மா இப்படிப் பண்ணா, உங்க வீட்ல இருந்து எப்படி வருவாங்க.”


“இந்த ஒரு தடவை விட்டா, அம்மா எப்பவும் அப்படியே நடந்துப்பாங்க. அதுதான் அப்படிச் சொன்னேன். அது பொய்யும் இல்லை.”


கணவனின் பேச்சு ஸ்வேதாவுக்கு ஆச்சர்யம் தான்.“எனக்கு தெரிஞ்சு நிறைய ஆம்பிளைங்க தப்பே செஞ்சாலும், அவங்க அம்மாவுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க.”


“நான் அப்படியெல்லாம் கிடையாது, இதே நீ தப்பு செஞ்சாலும் நான் கண்டிக்கத்தான் செய்வேன்.”


“அப்படியா…” எனப் பொய்யாக ஆச்சர்யம் காட்டிய ஸ்வேதா, எட்டி நந்தாவின் கன்னத்தில் லேசாக அடித்து, “இப்ப கண்டிங்க பார்க்கலாம்.” என்றாள் வேண்டுமென்றே.


இதற்குக் கோபமா வரும். நந்தா புன்னகையுடன், “இதுக்குக் கண்டிக்கக் கூடாது, தண்டிக்கணும்.” என்றவன், ஸ்வேதாவை அருகில் இழுத்து, அவள் கன்னத்தை வலிக்காமல் கடித்து வைத்தான்.


அதன்பிறகு ஸ்வேதா பதிலுக்கு கடிக்க, எனத் தண்டனையில் ஆரம்பித்துக் கூடலில் முடிந்தது.


முரளி சில நாட்கள் சிவகாமியை தன்னுடன் பெங்களூர் அழைத்துச் சென்று வைத்துக் கொண்டான். அதனால் கஸ்தூரியும் இங்கே வர முடியவில்லை.


நந்தாவுக்கும் ஸ்வேதாவுக்கும் வாழ்க்கை இன்பமாகச் சென்றது. அதை இன்னும் அதிகரிப்பது போல… ஸ்வேதா கருவுற்றாள். நந்தாவை கையில் பிடிக்க முடியவில்லை.


“உங்க லட்ச்சியம் நிறைவேறப் போகுதா, இப்ப சந்தோஷமா?” ஸ்வேதா கேட்க,


“ரொம்பச் சந்தோஷம் டி.” என்றவன், மனைவியை இறுக அனைத்துக் கொண்டான்.


“கொஞ்சம் லேட் ஆகிடுச்சு இல்ல…”


“கல்யாணம் ஆன உடனே கர்ப்பம் ஆனாலும் கஷ்ட்டம் தான் ஸ்வேதா. நாம புரிஞ்சிக்கக் கொஞ்சம் டைம் கிடைச்சது. அப்புறம் நாமளும் இத்தனை நாள் என்ஜாய் பண்ணோம் இல்ல…” என்றவன் கண்சிமிட்ட, ஸ்வேதா அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.


நந்தா தன் அம்மாவை அழைத்து விஷயம் சொன்னவன், அவரை உடனே கிளம்பி வர சொன்னான். முரளியும் சிவகாமியை கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றான்.


ஸ்வேதாவுக்கு அதிகமாக மசக்கை இல்லை என்றாலும், காலையில் எழுந்துகொள்ளச் சிரமப்படுவாள். பதினோரு மணிக்கு மேல் தெளிவாக இருப்பாள். இரவும் அவள் உறங்க நள்ளிரவுக்கு மேல் ஆகிவிடும்.


நந்தா கடைக்குச் செல்வதற்கு முன் அவனோடு காலை உணவு சாப்பிடுபவள், திரும்பப் படுத்து உறங்கி விடுவாள். சிவகாமி தான் காலை உணவும் சமைத்தார்.

பதினோரு மணி போல நந்தா வந்து, அவளுக்குப் பழங்கள் உரித்துக் கொடுத்து சாப்பிட வைத்துவிட்டு செல்வான். அதன்பிறகு ஸ்வேதாவும் மதிய சமையலில் சிவகாமிக்கு உதவி செய்வாள்.


மதிய ஓய்வுக்குப் பிறகு மாலை வேலைகளை எப்போதும் போல ஸ்வேதாவே செய்து விடுவாள். இரவு உணவும் அவள்தான் செய்வாள்.


ஸ்வேதாவின் வீட்டில் இருந்து அவள் பெற்றோர் வந்து அவளைப் பார்த்து விட்டு சென்றனர். அவர்கள் தங்களுடன் ஸ்வேதாவை அழைத்துச் செல்லக் கேட்டனர்.


“எனக்கு ஒன்னும் இல்லை. அவளுக்கு வர இஷ்ட்டம்ன்னா, நீங்க கூடிட்டு போங்க.” என்றார் சிவகாமி. ஆனால் நந்தா தான் விடவில்லை.


“இப்ப அவளுக்கு இங்க செட் ஆகிடுச்சு. மூன்னு மாசம் முடியட்டும், அப்புறம் அனுப்பி வைக்கிறேன்.” என்றான். அவனே மாமனாரின் லாரி அலுவலகத்திற்கும், ஒரு ஆள் பார்த்துக் கொடுத்து விட்டான்.


அவர்களின் டைல்ஸ் கடையின் வேலை முடிவடைந்து, கடை திறப்பு விழாவை முக்கிய உறவினர்களை மட்டும் அழைத்துச் செய்தனர்.


நந்தாவின் பக்கம் அவனுடைய அத்தை, மாமா, சித்தி என நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் சொன்னவர்கள், அதே போல ஸ்வேதாவின் பெற்றோர் மற்றும் சகோதரிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்தனர்.


காலை பிரம்ம முஹுர்த்தத்தில் கடையில் பூஜை செய்து விட்டு, வீட்டில் வைத்து காலை உணவு பரிமாறினர்.

ஸ்வேதா அங்கே இங்கே நடக்க, “நீ ஒழுங்கா ஒரு இடத்தில உட்கார மாட்டியா?” என நந்தா அவளைக் கடிந்து கொண்டான்.


அவன் கண்டிபப்தைப் பார்த்த சிவகாமியும்,”நீ உட்காரு ஸ்வேதா, அதுதான் நாங்க இத்தனை பேர் இருக்கோம் இல்ல… நாங்க பரிமாற மாட்டோமா.” என்றார்.


கஸ்தூரியும் கடை திறப்பு விழாவுக்குத் தன் கணவருடன் வந்திருந்தார். எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடும் போது, நந்தாவின் அத்தை, “கடை ரொம்ப நல்லா இருக்கு. உன் பொண்டாட்டி வந்த நேரம், நீ உன் தொழிலை இன்னும் விரிவு படுத்தி இருக்க… எல்லாம் அவ ராசி தான்.” என்றார்.


அது போதாது கஸ்தூரிக்கு, வேண்டுமென்றே ஸ்வேதாவை மட்டம் தட்டும் எண்ணத்தில்,“கடையை மட்டும் விரிவு படுத்தினா போதுமா. குடும்பத்தை இல்லை விரிவாக்கணும். ஒரு குழந்தை குட்டின்னு வந்தா இல்ல சந்தோஷமா இருக்கும்.”


“எங்க அக்காவுக்கு ஒரு பேரன் பேத்தி வரணும்ன்னு, நான் சாமி எல்லாம் கும்பிட்டுட்டு இருக்கேன்.” என வசனம் பேசிவிட்டு, எல்லோரின் முகத்தையும் நோட்டம் விட, எல்லோரின் முகமும் வாடுவதற்குப் பதில், மகிழ்ச்சியை அல்லவா காட்டியது.


“ஸ்வேதா இப்போ கர்ப்பமா தான் இருக்கா கஸ்தூரி. மூன்னு மாசம் ஆனா பிறகுதான் வெளிய சொல்லனும்ன்னு, வேற யார்கிட்டயும் சொல்லலை.”

சிவகாமி புன்னகையுடன் சொல்ல, கஸ்தூரி முகம் அஷ்ட்ட கோணல் ஆனது. ஆனால் மற்றவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.


நந்தாவுக்கும் ஸ்வேதாவுக்கும் வாழ்த்துச் சொன்னவர்கள், இப்படி இரு, அப்படி இரு என ஒரே அறிவுரை வேறு வழங்கினார்கள்.


உறவினர்கள் காலை உணவு முடிந்து கிளம்பி விட, ஸ்வேதா வீட்டினரும் விடைபெற்று சென்றனர்.


ஸ்வேதா களைப்பாக இருப்பதைப் பார்த்த நந்தா, “நீ போய் ரெஸ்ட் எடு.” என்றவன், கடைக்குச் சென்றுவிட்டான். கஸ்தூரி மட்டும் இருக்க, சிவகாமி மதிய சமையல் செய்தார்.


“என்ன அக்கா நாட்டில் யாரும் குழந்தை பெத்துக்கலையா என்ன? உன் மருமகளை உன் மகன் அந்தத் தாங்கு தாங்குறான்.”


“அவன் பொண்டாட்டி படுத்திருக்க, நீ வேலை பார்க்கிறதா?”


“உனக்கு விவரமே பத்தலை கா… நீ இப்படி இருந்தா. உன்னை வேலைக்காரி ஆக்கிடுவாங்க.”


ஸ்வேதா கருவுற்று இருப்பது அறியாமல், அதை வைத்து கஸ்தூரி கலகம் செய்ய நினைத்தார். ஆனால் அது முடியவில்லை. தான் தோற்று போவதா என்ற எண்ணத்தில், அடுத்து வேறு ஒரு விஷயத்தில் குட்டையைக் குழப்ப ஆரம்பித்தார்.


தங்கையின் பேச்சை கேட்ட சிவகாமியும், ஒரு நிமிடம் அப்படித்தானோ எனக் குழம்ப ஆரம்பித்தார்.













Advertisement