Advertisement

காற்றின் மொழி



அத்தியாயம் 10



சிறிது நேரத்தில் ஸ்வேதா சாதரணமாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தாலும், நந்தா மீது கொண்ட சிணுக்கம் மட்டும் இன்னும் அவளுக்குக் குறையவில்லை. அதை நந்தாவும் உணர்ந்தான்.


மதியம் எல்லோரோடும் சேர்ந்து உணவு அருந்துவிட்டு, நான்கு மணி போல அங்கிருந்து விடைபெற்றனர். நந்தா வண்டி ஓட்ட, ஸ்வேதா அவன் பின்னே அமர்ந்து இருந்தாள்.


அவள் அவனைப் பிடிக்காமல் உட்கார்ந்து இருக்க, வேண்டுமென்றே நந்தா வண்டியை வேகமாகச் செலுத்த, விழுந்து விடுவோம் என்ற பயத்தில், ஸ்வேதா அவனை நெருங்கி உட்கார்ந்து, அவன் இடையைப் பிடித்துக்கொள்ள, “அப்படி வா டி வழிக்கு.” என நந்தா சிரித்துக் கொண்டான்.


வீட்டிற்கு வந்த ஸ்வேதாவைப் பார்த்து, “உன் அக்கா நல்லா இருக்காளா? குழந்தை நல்லா இருக்கா?” எனச் சிவகாமி கேட்க,


“நல்லா இருக்காங்க அத்தை.” என்ற ஸ்வேதாவுக்கு ஆச்சர்யம் என்றால்… சோழியன் குடுமி சும்மா ஆடாது எனத் தெரிந்து, அண்ணனும், தம்பியும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.


ஸ்வேதா இல்லாத ஒருவாரமும் சிவகாமி அல்லவா எல்லா வேலைகளையும் பார்த்தார். அதோடு நந்தா வேறு தனிக்குடித்தனம் போய் விடுவேன் என மிரட்டி இருந்தானே… அதனால் வந்த மாற்றம்.


மருமகள் வந்ததும் சிவகாமி டிவியின் முன்பு உட்கார்ந்து விட, பாத்திரம் கழுவி, துணி மடித்து, மதிய சமையலில் மீதம் என்ன இருக்கிறது என்று பார்த்து, இரவுக்குச் சமைக்க என ஸ்வேதாவின் நேரம் சென்றது.


அண்ணன் தம்பி இருவரும் வந்ததும், சேர்ந்து இரவு உணவு உண்டு முடித்தனர்.

இரவு உணவு முடிந்து சிறிது நேரத்தில் முரளி பெங்களூர் கிளம்பி விட, நந்தாவும் அவர்கள் அறைக்குச் சென்றுவிட, சிவகாமி மட்டும் உட்கார்ந்து நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் இரவு பத்தரை மணி வரை பார்த்துவிட்டுத்தான் படுக்கச் செல்வார்.


“இவ ஏன் இன்னும் வராம இருக்கா?” என நினைத்த நந்தா ஸ்வேதா என்ன செய்கிறாள் எனப் பார்க்க வந்தான். அப்போதுதான் அவள் பாத்திரம் தேய்த்து முடித்து இருந்தாள்.


சரி வரட்டும் என அவன் அங்கேயே காத்திருக்க, ஆனால் அவளோ இஸ்த்திரி பெட்டியை எடுத்துக் கொண்டு அவள் உட்கார, தன்னைத் தவிர்க்க வேண்டுமென்றே செய்கிறாள் என்பதை உணர்ந்தவன், மின் இணைப்பை எடுத்து விட்டு, இஸ்த்திரி பெட்டியை கையேடு அறைக்குள் கொண்டு சென்று விட்டான்.


அவன் பின்னே அறைக்குள் வந்த ஸ்வேதா, “இப்ப எதுக்கு அதை எடுத்திட்டு வந்தீங்க?” எனச் சண்டையிட,


“என்னைக் கோபப்படுத்திப் பார்க்க நினைக்கிறியா? ஒழுங்கா வந்து படு டி.” என்றான்.


ஸ்வேதா சென்று துணிகளை எடுத்து வைத்து விட்டு வந்தவள், நைட்டி மாற்றி விட்டு, கீழே படுக்கும் எண்ணத்தில், கட்டிலில் இருந்து தலையணையை எடுக்க,


“இன்னைக்குக் கீழே படுத்த, அப்புறம் வாழ்க்கை முழுக்க, நீ தனியாதான் படுக்கணும். அதை மனசுல வச்சிட்டு செய்.” நந்தா கோபமாகச் சொல்ல,


அவன் குரலில் இருந்த உறுதியை உணர்ந்தவள், “ஐயோ ! எதோ கோபத்தில பண்ணா… இவன் நிஜமாவே நம்மைத் தள்ளி வச்சிடுவான் போலிருக்கு.” எனப் பயந்து, கட்டிலில் அவன் அருகில் படுத்துக் கொண்டாள்.


நந்தா எழுந்து உட்கார்ந்தவன், “இப்ப என்ன உனக்குப் பிரச்சனை?”


“நான் இதுக்குதான் அதைப் பத்தி பேசாம இருந்தேன். நீதான் கேட்ட.”


“உனக்காக நான் பொய் சொல்ல முடியாது.”


“நான் தானே எனக்கு அவ வேண்டாம்ன்னு விலகினேன். அப்புறம் உன்னையும் நான்தான் விரும்பி கல்யாணம் பண்ணேன். இன்னும் என்ன வேணும் டி உனக்கு?”


“சரி லவ் பண்ணவ தைரியம் இருந்தா நேர்ல வந்து சொல்ல வேண்டியது தான. உன்னால நான் தேவை இல்லாத வேலைப் பார்த்து, வீணா எனக்குதான் மனசு கஷ்ட்டம்.”


“நீ என்ன என்னை ஆட்டி வைக்கலாம்ன்னு பார்க்கிறியா? தொலைச்சிடுவேன் சொல்லிட்டேன்.”


“கொஞ்சம் இடம் கொடுத்தா தலையில உட்கார்ந்திட்டு ஆடுறது.”
நந்தா திட்டிய திட்டில் ஸ்வேதா மறுபக்கம் திரும்பி படுத்து, தூங்குவது போலக் கண்ணை மூடிக் கொண்டாள்.


ஸ்வேதா எதாவது பேசுவாள் என நந்தா எதிர்பார்த்து இருந்தான். அவள் மெளனமாக இருக்க, அவனும் அமைதியாகப் படுத்துக் கொண்டான். சிறிது நேரம் சென்றும் இருவருமே உறங்கவில்லை.


“ஸ்வேதா..” நந்தா அழைக்க, அவள் பதில் சொல்லவில்லை.
ரொம்பப் பேசிட்டோமோ என நினைத்தவனுக்கு அவளை அப்படியே விட்டு உறங்கவும் மனம் வரவில்லை.


மனைவியைத் தன் பக்கம் திருப்பியவன், அவள் கண்ணீரைப் பார்த்ததும் பதறிப் போய் விட்டான். அவள் கண்ணீரை துடைத்து, அவளை இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.


“நிஜமாவே ரொம்பச் சாரி. நீ இப்படி அழாத. எனக்கு ரொம்பக் கஷ்ட்டமா இருக்கு.” என்றான்.


“எனக்கு அப்பவே உங்களை ரொம்பப் பிடிக்கும். ஆனா லவ் சொல்ல எல்லாம் தைரியம் இல்லைங்கிறதை விட… ரெண்டு அக்காவை வச்சிட்டு காதலிகிறேன்னு சொல்லவும் ஒருமாதிரி இருந்துச்சு.”


“அப்பத்தான் வினோதினி அக்கா கல்யாணத்துல உங்களைப் பார்த்தேன். அப்ப மனசுல ஒரு நம்பிக்கை வந்துச்சு.”


“நாம ரெண்டு பேரும் சொந்தக்காரங்க. உங்களுக்கு என்னைப் பிடிச்சிருந்தா, வீட்ல பேசி கல்யாணம் பண்ணிக்கலாமேன்னு ஒரு ஆசை. அதனாலதான் வினோதினிகிட்ட என் ஆசையைச் சொன்னேன்.”


“எனக்குத் தெரியும், அது உங்க காதுக்குப் போகும்ன்னு. ஆனா நீங்க என் பிரண்டை லவ் பண்றேன்னு தெரிஞ்ச போது, நான் ரொம்ப உடைஞ்சிட்டேன். உங்ககிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாமோன்னு எல்லாம் நினைச்சேன்.”


“எங்க அப்பாவை அப்பத்தான் சிலபேர் தாக்கிட்டுப் பணத்தைக் கொண்டுட்டு போயிட்டாங்க. அப்ப அவருக்குப் பதில் ஆபீஸ் போக ஆரம்பிச்சேன். அப்புறம் அதையே சாக்கா வச்சிட்டுக் காலேஜ் போக மாட்டேன்னு சொல்லிட்டேன்.”


“எனக்கு உங்களையும் ஸ்வேதாவை சேர்த்து பார்க்கவே பிடிக்கலை. அது எனக்கு ரொம்பக் கஷ்ட்டமா இருந்துச்சு. காலேஜ் வந்தா உங்க ரெண்டு போரையும் பார்க்கணும். அதுதான் வர மாட்டேன்னு சொல்லிட்டேன்.”


“நீங்களும் இதே ஊரா, எத்தனை நாள் உங்களை வழியில எங்காவது பார்க்க மாட்டோமான்னு தேடி இருக்கேன்னு தெரியுமா?”


“ஆர். ஸ்வேதாவுக்குக் கல்யாணம் ஆனது எனக்குத் தெரியும். வினோதினியும் கல்யாணம் பண்ணி வெளிநாடு போயிட்டா அதனால உங்களைப் பத்தி யார் கிட்டயும் கேட்க முடியலை.”


“அப்புறம் நானே இனிமே அவ்வளவுதான், வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கணும். அதுதான் நம்ம விதின்னு மனசை தயார் பண்ணி வச்சிருந்தேன். அப்ப பார்த்தா உங்க போட்டோவை கொடுக்கிறாங்க.”


“நிஜமா எனக்கு நம்பவே முடியலை. அப்ப கூட எனக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு நான்தான் பொண்ணுன்னு தெரியாதுன்னு நினைச்சேன்.”

“நீங்களும் பொண்ணு பார்க்க வரலையா… அப்ப உங்களுக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலையோன்னு தான் நினைச்சேன்.”


“நீங்க தெரிஞ்சா என்னை வேண்டாம்ன்னு சொல்லிடுவீங்கன்னு நினைச்சேன். திரும்ப என்னால ஒரு ஏமாற்றத்தை தாங்க முடியாது. அதனாலதான் நானே உங்களுக்குப் போன் பண்ணேன்.”


“நீங்க வேண்டாம்ன்னு சொல்றதுக்கு முன்னாடி, நானே வேண்டாம்ன்னு சொல்லிடலாம்ன்னு நினைச்சேன். அப்புறம் எங்க வீட்டோட நிலைமை சொல்ல முடியலை. ஆனாலும் கல்யாணம் நடக்கிற வரை, கொஞ்சம் பயமாவே தான் இருந்தது.”


“கல்யாணம் முடிஞ்சதும் ஹப்பாடான்னு அவ்வளவு நிம்மதி.”


“எனக்குப் புரியுது, அப்ப உங்களோட நிலைமை, ஆனாலும் மனசு ஏத்துக்க மாட்டேங்குது.”


ஸ்வேதா சொல்வதைக் கேட்க கேட்க நந்தா உணர்ச்சி குவியலாக மாறிப் போய் இருந்தான். அவனுக்குச் சிறிது நேரம் பேச்சே வரவில்லை. ஆனால் தோளில் இருந்த மனைவியைத் தனது இறுகிய அணைப்பால் மார்புக்குக் கொண்டு வந்திருந்தான். ஸ்வேதாவும் அவனது மார்பில் வசதியாகத் தலை வைத்துக் கொண்டாள்.


முதலில் காதல் என்பது என்ன? அது ஒரு உணர்வு தான். அது யாருக்கு யார் மீது வேண்டுமானாலும் தோன்றலாம். ஆனால் அதை எல்லோரும் ஒரே மாதிரி உணர்வதில்லை. சிலருக்கு ஈர்ப்பு, சிலருக்கு விருப்பம், சிலருக்கு வசதி .ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே ஆழமான அன்பு. அந்த ஆழமான அன்பு கொண்டவர்கள் மட்டுமே உண்மையான காதலை உணர முடியும்.


நிறையப் பேர் காதலிக்கலாம், ஆனால் எல்லோரும் உண்மையாகக் காதலிக்கிறார்களா? கிடையாது. அப்படி உண்மையாகக் காதல் கொள்ளாதவர்களின் காதல், ஒன்று தோல்வியில் முடியும் அல்லது அவர்களின் திருமணம் தோல்வியில் முடியும்.


தனக்கு வந்தது காதல் அல்ல வெறும் ஈர்ப்பு என்பதை உணர்ந்துதான் நந்தா விலகிக் கொண்டான். அதே தான் ஆர். ஸ்வேதாவின் நிலையும். கல்லூரியில் நிறையப் பெண்களின் கனவு நாயகனாக இருப்பவன், அவனே காதலை சொல்லும்போது, அவளுக்கு மறுக்க மனம் வரவில்லை. அதனால் காதலை சொல்லி, வீணான மன வருத்தத்திற்கு ஆளானார்கள்.


உண்மையில் அப்படி விலகவும் நிறைய மன திடம் வேண்டும். அது எல்லோருக்கும் இருப்பது இல்லை. வெறும் ஈர்ப்பை காதல் என நம்பி, அதற்காக என்னனவோ செய்து, கடைசியில் பெற்றோரை தூக்கி எரிந்து திருமணம் செய்து, கடைசியில் அந்தத் திருமணத்தையும் தோல்வியில் முடிப்பார்கள். அதுதான் வேதனை. உண்மையில் இதில் பாவப்பட்டவர்கள் பெற்றவர்கள் தான்.


தன் மனைவி தன் மீது கொண்ட காதல் உண்மையானது, ஆழமானது என நந்தாவுக்குப் புரிந்தது. அதனால்தான் இவ்வவளவு, வேதனையும் வருத்தமும் கொள்கிறாள் என்பதை நன்றாகே உணர்ந்தான்.


“ஸ்வேதா…” அவன் அழைக்க, அவளிடமிருந்து பதில் இல்லை. அவன் தலையைத் தூக்கிப் பார்க்க, அவள் நன்றாக உறங்கி இருந்தாள்.
அவள் உச்சியில் இதழ் பதித்து, வெகு நேரம் அவளை வருடியபடி இருந்தவன், பின்பு உறங்கிப் போனான்.


காலையில் அவன் எழுந்த போது ஸ்வேதா அறையில் இல்லை. அவனுக்கும் கைபேசியில் அழைப்புகள் வரத் தொடங்கின, அதுவும் திங்கட்கிழமை அதிகமாகச் சிமெண்ட், ஜல்லி, மணலுக்கு ஆர்டர்கள் வரும். நந்தா வேலையாக இருக்க, ஸ்வேதாவும் காலை வேலை முடித்து விட்டு, தன் தந்தையின் அலுவலகம் சென்றாள்.


கடையில் கட்டுமான பனி நடப்பதால்.. நந்தா மதியம் சாப்பிட்டதும் கிளம்பி விட்டான்.


கஸ்தூரி சென்னைக்கு மகன் வீட்டிற்கு ஒருவாரம் சென்று வந்திருந்தார். மருமகளைப் பற்றிப் புகார் சொல்லிக் கொண்டு இருந்தார்.


“வாஷிங் மெஷின் வாங்கிக் கொடுத்திருக்கான். இப்ப ஒரு வேலையும் இல்லை  அவளுக்கு. இரண்டு பேருக்கு சமைக்க எவ்வளவு நேரம் ஆகும், நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி எழுந்துகிறா போலிருக்கு… நல்லா வெயிட் போட்டு இருக்கா.”


“இன்னும் ஒரு வாரம் இருக்கலாம்ன்னு பார்த்தேன். வாசு என்னைக் கேட்காமலே டிக்கெட் போட்டுட்டான்.” என்றார்.


ஸ்வேதாவுக்கு அதைக் கேட்டு ஒரே சிரிப்பு. நன்றாக வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.


“கஷ்ட்டப்பட்டுப் பெத்து வளர்த்தது எல்லாம் நாம. ஆனா பொண்டாட்டின்னு ஒருத்தி வந்ததும், இந்தப் பசங்களுக்கு எங்க இருந்து தான் அவ்வளவு பாசம் வருதோ, தெரியலை. அப்படியே டக்குன்னு மாறிடுறாங்க.” கஸ்தூரி சொல்ல, அதைக் கேட்டு ஸ்வேதா முகம் மாற,


“போச்சு இவ எதாவது அவ புருஷன்கிட்டே சொல்லி வச்சா. அவன் நம்மகிட்டதான் பாய்வான்.” என நினைத்த சிவகாமி, “உன் பையன்தான் அப்படி இருக்கான். எங்க நந்தா எல்லாம் அப்படிக் கிடையாது. என்னை விட்டுத் தனியா போகமாட்டான்.” என்றார் பெருமையாக.


சிவகாமி சொன்னதைக் கேட்டு கஸ்தூரியின் முகம் இருண்டு விட்டது. “என் பையன் கூட நல்லவன் தான். அவன் பொண்டாட்டி தான் சரி இல்லை.” என்றார். ஆனால் தங்கைக்குப் பரிந்து சிவகாமி எந்தப் பதிலும் சொல்லவில்லை.


அன்று மருத்துவமனைக்குச் செல்லும் நாள். ஆனால் கஸ்தூரி அங்கே இருக்காமல், உடனே கிளம்பி விட்டார். அக்காவின் மீது கோபம். மாமியாரின் பேச்சு ஸ்வேதாவுக்கும் ஆச்சர்யம் தான்.


இரவு வந்த நந்தாவும், “என்ன மா சாப்பிடீங்களா?” என விசாரித்தான். சாப்பிட்டேன் என்ற சிவகாமி, அவனிடம் கடை வேலைகள் பற்றி விசாரித்தார்.


நேற்று மனதில் இருந்ததை நந்தாவிடம் சொன்னதினாலோ என்னவோ, ஸ்வேதாவுக்குக் கோபம் எதுவும் இல்லை. எப்போதும் போலச் சாதாரணமாக இருந்தாள்.


அவள் அறைக்குள் சென்றபோது, கட்டிலில் சாய்ந்திருந்த நந்தா, அவளைப் பார்த்து கையை நீட்ட, உடனே அவனிடம் சென்றாள். அவளைத் தன் மீது சாய்த்தவன், “நேத்தே பேசனும்ன்னு நினைச்சேன். நீ தூங்கிட்ட.” என்றான்.


“உங்களை நான் ரொம்பக் கஷ்ட்டபடுத்திட்டேனா.”


“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நீ என்கிட்டே சொல்லாம யார்கிட சொல்வ. நான்தான் உன்னைப் புரிஞ்சிக்கலை.”


“நேத்து நீ பேசினதை கேட்டு, அப்படியே நான் எங்கையோ போயிட்டேன்.”


“உண்மையா சொன்னா, நான் உன்னோட காதலை பெரிசாவே எடுத்துக்கலை. அந்த வயசுக்கு வர்ற ஈர்ப்புன்னு தான் நினைச்சு இருந்தேன். நீ இவ்வளவு தீவிரமா என்னை விரும்பி இருப்பேன்னு எல்லாம் சத்தியமா எதிர்ப்பார்க்கலை.”


“சரி பரவாயில்லை விடுங்க. ஆனா என்னைக் கல்யாணம் பண்ண நினைச்ச பிறகாவது, என்கிட்ட வந்து பேசி இருக்கலாம் இல்ல.”


“என்ன பேச சொல்ற? ஏற்கனவே உனக்குத் தெரிஞ்சே ஒரு பொண்ணுகிட்ட காதலை சொல்லி இருக்கேன். உன்கிட்ட வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு எப்படிக் கேட்கிறது? அதுதான் வீட்ல பார்த்த மாதிரி இருக்கட்டும்ன்னு நினைச்சேன்.”


“ஆனா உனக்குத் தெரியாது. உன் வீட்ல, என் வீட்ல பேசி சம்மதம் வாங்கிறதுகுள்ள, நான் எவ்வளவு பாடுபட்டேன்னு.”


“எங்க அம்மா இன்னும் வசதியா பார்க்கலாம்ன்னு சொன்னாங்க. உங்க வீட்ல இது எங்களுக்குப் பெரிய இடம்ன்னு யோசிச்சாங்க.”


“எல்லாரையும் சரி கட்டிறதுக்குள்ள, நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும். வினோதினி அப்பாவுக்கு நான் உன்னைக் கல்யாணம் பண்ண விரும்புறேன்னு புரிஞ்சிடுச்சு. அவர்தான் ரெண்டு பக்கமும் பேசி சம்மதம் வாங்கினார்.”


“நீ என்ன நினைப்பேனே எனக்கு அப்ப புரியலை. ஆனா கல்யாணத்தை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டேன்னு எதோ நம்பிக்கையும் இருந்துச்சு.”


“ஒருவேளை இருவர் வீட்டிலும் சம்மதிக்காமல் போய் இருந்தால்…” அதை நினைக்கவே ஸ்வேதாவுக்குக் கலக்கமாக இருக்க, அவள் இன்னும் நந்தாவை இறுக அணைத்தாள்.


அவள் என்ன நினைத்து பயப்படுகிறாள் என நந்தாவுக்குப் புரியாமல் இல்லை.

“அப்படியெல்லாம் உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்து இருக்க மாட்டேன்.” என அவன் சொன்னதும் தான் அமைதியானாள்.


“இனிமே பழசை நினைக்காத. நாம கல்யாணம் பண்ணிகிட்டோம். நான் உன்னோட நந்தா தான். நீ என்னோட ஸ்வேதா தான்.” என்றவன், அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

இப்போது ஸ்வேதா மனதில் இருந்த வருத்தம் கலக்கம் எல்லாம் விலகி சென்றிருக்க… நிறைவான மனதுடன் கணவனை அனைத்துக் கொண்டாள்.

Advertisement