Advertisement

காற்றின் மொழி


அத்தியாயம் 1



“என் வீட்டுத் தோட்டத்தில்
பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி
எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னைகீற்றை
இபோதே கேட்டுப்பார்
என் நெஞ்சை சொல்லுமே…”


அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் படலை பாடிக்கொண்டு, ஹாலில் இருந்த கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தாள் ஸ்வேதா…


ஸ்வேதா அழகு பதுமை எல்லாம் இல்லை. ஆனால் குறைவாகவும் சொல்ல முடியாது. கோதுமை நிறத்தில், சராசரிக்கும் சற்றுக் கூடுதல் உயரம். மெலிவான உடல் வாகு, லட்சனமான முகம். பார்த்தால் இருபத்தியைந்து வயது எனச் சொல்ல முடியாது.


“ஸ்வேதா மாப்பிள்ளை போட்டோ பார்த்தியா டி?” சமையல் அறையில் இருந்து அம்மாவின் குரல் வர…


ஐயோ பார்க்கலைனா விட மாட்டாங்க என நினைத்த ஸ்வேதா, “அம்மா, எல்லாம் உறுதி ஆகிடுச்சு தான… சும்மா எல்லாம் என்னால யார் போட்டோவும் பார்க்க முடியாது.” எனப் பதிலுக்குச் சத்தமாகக் கேட்க,


“இல்லைனா உன்கிட்ட போட்டோ காட்டுவோமா…” எனக் குரல் மட்டும் வந்தது.


“சாமி படம் முன்னாடி இருக்கு பாரு. எடுத்து பார்த்திட்டு சொல்லு. பையன் வீட்ல சரின்னு சொல்லிட்டாங்க. நாம்தான் சொல்லணும்.”


தலையை வாரி முடித்தவள், கைகழுவி விட்டு வந்து நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு, சாமி அறைக்குச் சென்றாள்.


ஸ்வேதாவிடம் மாப்பிள்ளையைப் பற்றிய, எதிர்ப்பார்ப்போ, படபடப்போ இல்லை. வீட்டில் வரன் பார்த்து இருக்கிறார்கள், கடமைக்குத் தான் தன்னிடம் கேட்கிறார்கள் என்றும் தெரியும். அப்படி நன்றாக இல்லாத வரனை பார்த்தும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு முழுத் திருப்தி. அதானால் தான் போட்டோ காட்டும் வரை வந்திருக்கிறது.


மனதில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், கவரில் இருந்த போட்டோவை எடுத்து பார்த்தவளுக்கு, தன் கண்ணையே ஒரு நிமிடம் நம்ப முடியவில்லை.


இது நிஜமாகவே அவன்தானா, புகைப்படத்தை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தவள், அவன் தானா என உறுதி செய்துகொள்ள…. கூடவே இருந்த பயோ டேட்டாவை எடுத்துப் படித்துப் பார்த்தாள்.


பால குரு நந்தன் M.sc., என்று இருந்தது. மற்றும் அவனது மற்ற விபரங்கள் இருந்தது. அவனே தான் என நினைத்தவள், சமையல் அறைக்கு விரைந்தாள்.


“அம்மா, அவங்க வீட்ல எல்லோரும் என்னோட போட்டோ பார்த்தாங்களா மா…”


“நாளைக்குப் பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு சொல்றேன். என்ன போட்டோ பார்த்தாங்களான்னு கேட்கிற?” என்றார் அவர் கடுப்பாக.
நேரில் வரட்டும் பார்த்துக் கொள்வோம் என்று இருந்தாள்.


மறுநாள் பெண் பார்க்க மாப்பிள்ளையைத் தவிர அனைவரும் வந்திருக்க… ஸ்வேதா இன்னும் தவித்துப் போனாள். வேறு யாரிடமும் கேட்க முடியாமல், தன் சின்ன அக்காவிடம் மெதுவாகக் கேட்டுப் பார்த்தாள்.


“ஏன் கா மாப்பிள்ளை வரலை?”


“அவருக்கு அவங்க வீட்ல பார்த்தா போதுமாம்.” என்றாள்.


“இன்னும் அந்தத் திமிர் போகலை… என்னைப் பத்தி யோசிக்கிறானா பாரு. இப்பவும் அவனைப் பத்தி தான் யோசிக்கிறான்.” என மனதிற்குள் நன்றாகத் திட்டினாள்.


மீண்டும் அவனின் போட்டோவை எடுத்து பார்த்தாள். முன்பு பார்த்தது போல இல்லை அவனது தோற்றம். ஆள் இப்போது வாட்ட சாட்டமாக இருந்தான். ஏற்கனவே ஆள் நல்ல நிறம், இப்போது இன்னும் கூடி தெரிந்தான்.


பொண்ணு பார்க்கவே வரலை. போட்டோவாவது பார்த்திருப்பானா இல்லையா தெரியலையே….


நிஜமாகவே இவனுக்குப் பொண்ணு நான்தான்னு தெரியுமா? தெரியாதா? என அதையே நினைத்து குழம்பிக் கொண்டு இருந்தவள், அவனையே அழைத்துக் கேட்டு விடுவது என முடிவு செய்து, அவனின் புகைப்படத்திற்குப் பின்னே இருந்த கைபேசி எண்ணிற்கு அழைத்தாள்.


“ஹலோ…” என அந்தப் பக்கம் அவனின் குரல் கேட்க,


“நந்தாவா…” எனக் கேட்க வந்தவள், “பாலா குரு நந்தா இருக்காங்களா?” என மாற்றினாள்.


“நான் தான் சொல்லு.” என அவன் தெரிந்தது போலப் பேச…


“நான் ஸ்வேதா பேசுறேன்.” என்றாள்.


“தெரியுது சொல்லு.”


“எங்க வீட்ல உங்களைதான் எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க. உங்களுக்கு நான் எந்த ஸ்வேதான்னு தெரியும் இல்ல…”


“தெரியும், இதுக்குதான் போன் பண்ணியா?”


“ஆமாம்.”


“அப்ப சரி வச்சிடுறேன்.” என நந்தா சொல்ல…


சரியான திமிர் பிடிச்சவன் என நினைத்தவள், “நான் இந்த மாப்பிள்ளை வேண்டாம்ன்னு, வீட்ல சொல்லப் போறேன்.” என்றாள்.


“சரி சொல்லிக்கோ.” என்றான் அலட்சியமாக.


“நான் இன்னும் அதே ஸ்வேதா தான், திமிர் பிடிச்ச, கர்வம் பிடிச்ச ஸ்வேதா தான்.”


“அது தான் எனக்குத் தெரியுமே…” என்றவனின் குரலில் கேலி இருக்க…


“தெரிஞ்சிட்டு ஏன் என்னைக் கல்யாணம் பண்றீங்க? நீங்களே உங்க வீட்ல வேண்டாம்ன்னு சொல்லுங்க.”


“எனக்கு நிறைய வேலை இருக்கு, போன்னை வை.” என்றவன், வைத்து விட்டான்.


இதுவரை அவன் தன்னை யாரென்று தெரியாமல் திருமணதிற்குச் சரி என்று சொல்லி இருப்பான் என நினைத்து இருந்தாள். அவன் தன்னைத் தெரிந்தே தான் சொல்லி இருக்கிறான் என்றதும், ஸ்வேதாவிற்கு மனதிற்குள் அப்படி ஒரு கோபம் எழுந்தது.


அப்பா வந்ததும் சொல்லணும், இந்த மாப்பிள்ளை வேண்டாம்ன்னு. வேற நல்ல மாப்பிள்ளை பார்க்க சொல்லணும் என நினைத்துக் கொண்டாள்.


இரவு ஒன்பது மணி போல வீட்டிற்குச் சண்முகம் வந்ததும், ஆளுக்கொரு பாத்திரம் கையில் கொண்டு வந்து, ஹாலில் டிவி முன்பு உட்கார்ந்து சாப்பிட்டனர். இரவு உணவு எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவது வழக்கம். சங்கீதா கர்ப்பமாக இருப்பதால்… அவளும் இப்போது இங்குதான் இருக்கிறாள்.


எல்லோருமாக உட்கார்ந்து இரவு உணவு சாப்பிடும் போது, சண்முகம் அவராகவே பேச்சை ஆரம்பித்தார்.


“மத்த ரெண்டு பொண்ணுங்களுக்கு வரன் பார்கிறதுகுள்ள… எவ்வளவு கஷ்ட்டப்பட்டோம். ஆனா நம்ம ஸ்வேதாவுக்கு, நாம வரன் தேடுறதுக்குள்ள அதுவே தானா அமைஞ்சிடுச்சு.”


“நல்ல இடம், அதுவும் இங்க பக்கத்திலேயே இருக்காங்க. குடும்பமும் நல்ல குடும்பம்.”


“ஆமாங்க, நமக்கோ மூன்னுமே பொண்ணுங்க. மத்த ரெண்டு பேருக்கு தான் தள்ளி அமைஞ்சது. ஸ்வேதாவாவது நம்ம பக்கத்திலேயே இருப்பா.” என்றார் அவரின் மனைவி பார்வதி மகிழ்ச்சியாக.


அப்பா அம்மா பேசுவதைக் கேட்ட பிறகு, இந்த மாப்பிள்ளை வேண்டாம் எனச் சொல்லவும் ஸ்வேதாவுக்கு மனம் வருமா?


ஸ்வேதா அவள் வீட்டில் மூன்றாவது பெண். மூத்தவள் சுகன்யா அவளுக்குத் தோஷ ஜாதகம். ஆளும் பார்க்க சுமாராக இருக்க… வந்த வரன் எல்லாம் தட்டிக் கொண்டே சென்றதில், அவள் திருமணம் தாமதமாக முடிந்து இருக்க… இப்போது அவள் சென்னையில் இருக்கிறாள். அவள் கணவன் குமாரர் பத்திர பதிவு அலுவலகத்தில் வேலைப்பார்கிறார்.

அடுத்து இருந்த சங்கீதாவிற்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்து இருந்தது. அவள் கரூரில் இருக்கிறாள். அவள் கணவருக்கு சொந்த தொழில் இருக்கிறது.  


அக்காள்கள் இருவருக்கும் மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் முடிப்பதற்குள், தந்தை எவ்வளவு சிரமபட்டார் என்பது அவள் அறிந்தது தான். தானும் அவரைக் கஷ்ட்டபடுத்த வேண்டுமா என்ற எண்ணத்தில், அவரிடம் திருமணம் வேண்டாம் என எதுவும் சொல்லாமல், சாப்பிட்டு எழுந்தாள்.


ஸ்வேதாவின் குடும்பம் நடுத்தர வர்க்கத்திற்கும் சற்று மேல். அவள் அப்பா சேலம் மார்க்கட்டில் லாரி ஆபீஸ் வைத்திருக்கிறார். சேலம் மற்றும் பக்கத்து ஊர்களுக்குச், மார்க்கட்டில் இருந்து காய்கறிகளை ஏற்றி செல்ல… சொந்தமாக இரண்டு லாரிகள் இருக்கிறது. அது தவிர மார்க்கட்டில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு நாள் வட்டிக்குப் பணம் கொடுப்பவர். அதாவது காலையில் கொடுத்து மாலையில் வாங்கி விடுவார்.


அந்த மார்க்கட்டில் சண்முகத்தைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவரும் நியாயமான வட்டி வாங்குவதால்… சுற்று வட்டாரத்தில் அவருக்கு நல்ல பெயர் உண்டு.


பூர்வீக சொத்து என்று எதுவும் இல்லை. எல்லாம் அவர் உழைத்துச் சேர்த்தது தான். இருக்கச் சொந்த வீடு, அது தவிரச் சில சொத்துக்கள் உண்டு.

மகள்களுக்கு ஆளுக்கு அறுபது சவரனும், திருமணச் செலவுக்குப் பணமும் சேர்த்து வைத்திருக்கிறார். முதல் இரண்டு பெண்களுக்கு, நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்து விட்டார். இப்போது இருப்பது ஸ்வேதா மட்டுமே.


ஸ்வேதாவை மகனைப் போல வளர்த்தார். மகன் இல்லாத குறை அவருக்கு இல்லவே இல்லை. மத்த இரண்டு பெண்களை அவர் மார்கட் பக்கமே வர விடமாட்டார். ஆனால் ஸ்வேதாவுக்கு எந்தக் கட்டுப்படும் இல்லை. அவள்தான் இப்போது லாரி ஆபீசை முழுவதும் நிர்வாகம் செய்கிறாள். சண்முகம் வட்டி தொழிலை மட்டும்தான் பார்த்துக் கொள்கிறார்.


தனக்கு ஒரு ஆண் மகன் இருந்தால் கூட இந்த அளவுக்கு இருந்திருப்பானா என அவருக்குத் தெரியாது. அவளுக்கு உள்ளுரிலேயே அதுவும் பக்கத்திலேயே சம்பந்தம் அமைந்தது அவருக்கு வெகு திருப்தி.


சாப்பிட்டு படுக்க வந்த ஸ்வேதா, நந்தாவின் பயோடேட்டாவை எடுத்து வைத்து ஆராய்ந்தாள்.


அவனுக்கு அடுத்து ஒரு தம்பி இருந்தான். அப்பா இல்லை அம்மா மட்டும் தான். சேலத்தின் முக்கிய வீதியில், அவர்களின் கடை இருந்தது. கட்டிடம் கட்ட தேவையான அனைத்தும் அவர்களிடம் கிடைக்கும். எமென்ட். மணல் ஜல்லி, அதோடு சேர்த்துப் பெரிய பெயிண்ட் கடையும் வைத்து இருந்தனர். அவர்கள் வீடும் அங்கே அருகிலேயே இருந்தது.


பெரிய ஆளுங்க தான். இன்னும் பெரிய இடமே பார்த்து இருக்கலாமே, எதுக்கு நம்ம வீட்ல எடுக்கிறாங்க? என நினைத்துக் கொண்டாள்.


இரு குடும்பத்துக்கும் பொதுவான ஆட்கள் மூலம், அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தை நடந்து, இன்று மாப்பிள்ளை வீடு பார்க்க, ஸ்வேதாவை தவிர மற்ற அனைவரும் சென்று இருந்தனர். வரும் போது திருமணத் தேதி எல்லாம் குறித்து விட்டு வந்தனர்.


அன்றும் வழக்கம் போல இரவு உணவு எல்லோரும் சேர்ந்து சாப்பிட. “நான் கூடப் பொண்ணு பார்க்க கூட மாப்பிள்ளை வரலையே… எப்படி இருப்பாரோன்னு நினைச்சேன். ஆனா நாங்க அவங்க வீட்டுக்கு போனதுல இருந்து, அவர் எங்க கூடவே இருந்து பேசிட்டு இருந்தார்.”


“நம்மைப் பத்தி அவருக்கு நல்லாவே தெரிஞ்சு இருக்கு. உங்க ஆபீஸ் கூட உங்க பொண்ணு தானே பார்த்துக்கிறா, கல்யாணத்துக்குப் பிறகு கூட அவளே பார்த்துக்கட்டும்ன்னு சொன்னார்.” எனப் பார்வதி மகிழ்ச்சியாகச் சொல்ல,


“அவர் என்ன எனக்குப் பெர்மிஷன் கொடுக்கிறது. எங்கப்பாவோடது நான்தான் பார்த்துப்பேன்.” என ஸ்வேதா மனதிற்குள் இருந்த எரிச்சலை, வெளியே காட்டி விட,

மகள் பேசியதில் சண்முகம் முகம் சுருங்க, “அது என்ன இப்படிப் பேசுறது? கல்யாணத்துக்கு அப்புறம் மாப்பிள்ளை சொல்றது தானே கேட்கணும்.”


“அவங்க பெரிய ஆளுங்க. அவங்களுக்கு வீட்டு மருமகளை வெளியே அனுப்பணும்ன்னு தேவை இல்லை.”


“அவர் நமக்காகத்தான் சொல்றார். அது புரிஞ்சிக்காம பேசுற. இப்படித்தான் அவங்க கிட்டயும் பேசுவியா?? அப்போ என்னைத்தானே என்ன பொண்ணு வளர்த்து வச்சிருக்கான்னு கேவலமா நினைப்பாங்க.”


“இவ அங்க போய் எனக்கு இந்தப் பேரு வாங்கித் தர்றதுக்கு, இந்தக் கல்யாணமே வேண்டாம். நான் இப்பவே அவங்க வீட்ல சொல்லிடுறேன்.” என அவர் கத்தி தள்ளி விட்டார்.


அவர் எப்போதுமே அப்படிதான். பாசமானவர் தான். ஆனால் மகள்களிடம் கண்டிப்பும் அதிகம் காட்டுவார். மூன்று பேருமே பெண் பிள்ளைகள், எந்தத் தவறும் நடந்து விடக் கூடாது என்றுதான் இந்தக் கண்டிப்பு.


சன்முகத்தின் வயதான அம்மா இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர், “அவ சின்னப் பொண்ணு தானே தெரியாம சொல்லிட்டா விடு. இங்க பேசுற மாதிரி அங்கப் போய்ப் பேசுவாளா என்ன? அதெல்லாம் பேச மாட்டா. நீ சும்மா தேவை இல்லாதது எல்லாம் பேசாத.” என மகனை அடக்கியவர்,


“ஸ்வேதா, நீயும் யாரு என்னன்னு பார்க்கம எடுத்து எரிஞ்சு பேசக்கூடாது. உங்க அப்பா ரெண்டு பொண்ணே போதும்ன்னு இருந்தான். என் பையனுக்கு ஒரு ஆண் வாரிசு வேணுமேன்னு, நான்தான் வற்புறுத்தி மூன்னாவது பெத்துக்க வச்சேன். அதுவும் பொண்ணா போயிடுச்சேன்னு, நான்தான் வருத்தப்பட்டேன். ஆனா உங்க அப்பா வருத்தப்படவே இல்லை. சந்தோஷமாத்தான் இருந்தான்.”


“மூன்னு பேருக்கும் கல்யாணம் முடிச்சிட்டு, என் பையன் தனியா இருப்பானே, யாரு பார்ப்பான்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா கடவுள் அந்தக் கவலை இல்லாம செஞ்சிட்டார்.”


“நீ இங்க பக்கத்தில இருக்கப் போற. அதுவும் நீதான் உங்க அப்பாவுக்குப் பார்க்கிறேன்னு தெரிஞ்சு தானே, அந்தத் தம்பியே அப்படிச் சொல்லி இருக்கு. அப்ப நீ இப்படிப் பேசலாமா சொல்லு?”


தம்பியாம் தம்பி அந்தத் தொம்பியை பத்தி எனக்குத்தானே தெரியும், இவங்களுக்கு என்ன தெரியும்? என ஸ்வேதா மனதிற்குள் நினைத்தாலும், வெளியே ஒன்னும் காட்டிக் கொள்ளவில்லை.


“அவங்ககிட்ட நல்லபடியா நடந்து நல்ல பேரு வாங்கணும். என்ன இப்படிப் பொண்ணு வளர்த்து வச்சிருக்காங்கன்னு, அவங்க யாரும் நினைக்காதபடி, போற இடத்தில உங்க அப்பா அம்மாவுக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கணும். சரியா கண்ணு.” எனப் பாட்டி சொல்ல……


“சரி பாட்டி, இனிமே இப்படி நடதுக்க மாட்டேன்.” என்றாள் ஸ்வேதா. அதன் பிறகே வீட்டினர் நிம்மதியாக இருந்தனர்.


காலம் தான் எவ்வளவு மாற்றம் செய்கிறது. ஒரு காலத்தில், நந்தாவின் மீது அவ்வளவு விருப்பம் கொண்டிருந்தாள் ஸ்வேதா… நந்தாவோ அவளை ஒரு பொருட்டாகக் கூட மதித்தது இல்லை.


இன்று அப்படியே இருவரின் விருப்பங்களும் தலைகீழ். அவன் விரும்பி வர… இவள் வேண்டா வெறுப்பாகத் திருமணதிற்குச் சம்மதிக்கிறாள்.


அறைக்கு வந்து கட்டிலில் விழுந்தவள், “இரு நீ தனியா என்கிட்டே மாட்டாமலா போகப் போற… அப்ப இருக்கு உனக்கு.” என மனதிற்குள் நந்தாவை வறுத்து எடுத்துக் கொண்டு இருந்தாள்.


அது தெரிந்து தானே, அவனும் இன்னும் அவளைப் பார்க்காமல் இருக்கிறான். திருமணம் வரை பார்க்கும் உத்தேசமும் இல்லை.



Advertisement