Advertisement

வஞ்சினம்

                      அதிகம் சூட்டை கிளப்பிவிடாத மங்கலான கதிர்வீச்சை பாய்ச்சிக்கொண்டிருந்த ஆதவன் மேற்கே சரிய தொடங்கிய பொழுது அது. மனிதர்கள் மட்டுமல்லாது, பட்சிஜாலங்களும் பறவைகளும் கூடப் பலவித ஒலியை கிளப்பிவிட்டபடி தம்தம் இருப்பிடம் விரைய தொடங்கிய நேரமது. இவை அனைத்தையும் தனது புரவியின் மீது பயணித்தபடியே கவனித்துக்கொண்டிருந்தான் பாண்டியநாட்டு வீரன் கதிரவன். இந்தக் காட்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் இடையே அவனது மனக்கண்ணில் வந்து வந்து போனாள் கனலி. அவனின் தலைவி; பொருள் ஈட்ட வெகுதொலைவிற்கு வந்திருந்தவன் நீண்ட நெடிய நாட்களாய் அவளைக் காணாது, காலத்தை நெட்டி தள்ளியபடி ஓட்டிக்கொண்டிருந்தான். வந்தகாரியம் நிறைவுற அந்த ஒத்தையடி பாதையிலிருந்து விலகி புரவியைச் *சிறுமலை மீது தட்டிவிட்டிருந்தான்.

“இன்னும் சில காத தூரமே, சில நாழிகையே. விரைந்து என்னவளை பார்க்க சென்றுவிடுவேன். என்னைக் காணாமல் அவள் எத்தனை துயரம் கொண்டாளோ? அவளைவிட்டு இனி பிரியமாட்டேன் என்று வாக்குறுதி அளிக்கவேண்டும். அடடா இருள் கவிழ்ந்து விட்டதே, இருக்கட்டும் விரைந்து சென்றுவிடலாம்” என்றெல்லாம் தனது எண்ணங்களை ஓட்டியபடியே பயணித்துக்கொண்டிருந்தான்.

மங்கலான நிலவொளியில், சிறுமலையின் அடர் மூங்கில் மரங்களுக்கிடையே கனலியின் நினைவுகளைச் சுமந்தபடி பயணித்துக்கொண்டிருந்தவனின் சிந்தனையைத் திடிரென்று ஏற்பட்ட அசுர காற்று கலைத்துச் சென்றது…

*சிறுமலைபாண்டியநாட்டில் உள்ள மலை: அது மூங்கில் காடும், கூதளம்பூ தோட்டமும், கலைமான் கூட்டமும் நிறைந்த இடம்.  Ref: அகம் 47

திடீரென்று ஏற்பட்ட விபரீதத்தால், மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரச தொடங்க,  ஒரு சில கண்ணிமைகளில் மூங்கில்கள் பற்றி எரிந்தன. மேலும் மூங்கில்கூடுகள் வெடிக்கத்தொடங்கின. ஒரே நாழிகையில் சிறுமலையெங்கும் தீயின் ஜுவாலை கொழுந்துவிட்டெறிய அவ்விடமே அதிபயங்கரமாகிற்று.

சேணக்கயிற்றை அதிவிரைவாக முடிக்கிவிட, புரவியும் ஆபத்தின் அறிகுறி அறிந்து கூதளம்பூக்கள் குளம்படியில் நசுங்குவதையும் பொறுத்தப்படுத்தாமல் தனது எஜமானை சுமந்தபடி ஓட்டம் பிடித்தது. கோர நெருப்பின் தாண்டவத்தைக் காண சகிக்காத கலை மான்கூட்டங்களோ புரவிச்செல்லும் பாதையில் இடையூறாக அங்குமிங்கும் தறிகெட்டு ஓடின.

காடுமுழுவதுமாய்த் தீ மெல்ல மெல்ல பரவிக்கொண்டே வர, எத்தனைமுயன்றும் கதிரவனினால் முழுதாக அதிலிருந்து வெளிவர இயலவில்லை. எரிந்துக்கொண்டிருந்த மரமொன்று முறிந்து கதிரவனின் கைகளில் சரிய அவனதுவலகரம் நெருப்பால் கருகத்   தொடங்கியபொழுதும், அதைப் பொருட்படுத்தாது புரவியை அதிவிரைவாகச் செலுத்தி மலையின் அடிவாரம் வந்தவன் அத்துடன் நினைவிழந்து மயங்கி சரிந்தான்.

டம் டம் டம் என முரசொலி நாலாபுறமும் ஒலிக்கத் தொடங்க அஃது அரைமயக்கத்தில் தீக்காயமுற்றிருந்தவன் செவிகளிலும் தப்பாது விழவே மிகவும் சிரமப்பட்டு மெல்ல இமைப்பிரித்தான் கதிரவன். மங்கலான உருவம் கண்முன் தோன்ற, தோன்றியவள் கனலி என்றுணர்ந்துக்கொண்டவன், அதன்அடையாளமாய் இதழ் பிரிக்காமல் தனது உதட்டோரம் சிறு புன்னகையைத் தவழவிடவும் செய்தான். சப்தம் ஒலித்த திசையை நோக்கி படுத்திருந்தவாக்கிலே சாளரத்தின் வழி கண்களை ஓட்டினான். வீதியில் ஆங்காங்கே குளம்படி சப்தங்கள் ஒலித்துக்கொண்டிருக்கப் பூரணக் கவசமணிந்து பாண்டியநாடு போர்வீரர்கள் அங்குமிங்கும் அலைந்துக்கொண்டிருத்தபடியால் பாண்டியநாட்டில் ஏதோ ஓர் அசாதாரணச் சூழல் நிலவுவதைத் தெளிவற்றுப் படுத்திருந்த நிலையிலும்கூட நன்கு உணர்ந்துக்கொண்டான்.

பிரிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு மெல்ல உதடுகள் பிரித்து, “கனலி என்ன சப்தம் அது ? போர் முரசை போன்று ஒலிக்கின்றதே. நமது இல்லத்திற்கு எவ்வாறு வந்து சேர்ந்தேன்”

“சுவாமி அது போர் முரசொலிதான், அதைப் பிறகு விவரிக்கிறேன். தங்களை மலை அடிவாரமக்கள் எம்மிடம் கொண்டுசேர்த்தார்கள். தற்பொழுது தாங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள். தமது வலது கரத்தில் நெருப்பின் தாக்கம் அதிகம் ஏற்பட்டதால், சிலகாலங்களுக்குத் தாங்கள் தங்களுடைய வலக்கரத்தை உபயோகிக்க வேண்டாம். இளம்சூட்டில் பால் தருகிறேன். சிறிது அறிந்துவிட்டுக் கண்ணயருங்கள்”

“கனலி நான் கேட்டதற்குப் பதில் கூறுவாயாக. போர் முரசொலியா? அதைப் பற்றிய செய்தியை தாமதிக்காது கூறு” என்று திட்டமான குரலில் வினவவே, கனலி வேறு வழியற்று கூறவிழைந்தாள்.

“ஆம், போர் தான், நம் நாட்டின் மீது சோழ மன்னன் பெருநற்கிள்ளி, சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை மற்றும் இவர்களுடன் குறுநில மன்னர்களான திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய எழுவரும் போர்த்தொடுகின்றனர். நமது மன்னரோ *ஐம்படைத் தாலி கூடக் கலையப்படாத முதிரா இளைஞன். ஆனால் அச்சம் என்றால் என்னவென்று கேட்பவர் போல, நம் மன்னர் கம்பீரமாய், கம்பீரத்தின் மருவுருமாய் *வஞ்சினம் கூறிவிட்டு வெண்சங்கு முழங்க போர் முரசு இடியெனக் கர்ஜிக்க எதிரிகளை நடுநடுங்கவைக்கப் புறப்பட்டுள்ளார். அவரின் வீரமொழி கேட்டவர்கள் பச்சிளம் குழந்தையாக இருப்பினும் கூட பாசறை நோக்கி வாளேந்தி சென்றிப்பர் சுவாமி. அத்தனை துணிச்சல் அவரது ஒவ்வொரு செய்கையிலும் வெளிப்பட்டது.” என்று கூறிய கனலியின் குரலில் உணர்ச்சி மிதம்மிஞ்சிக்கிடந்தது.

*ஐம்படை தாலி : குழைந்தைகள் அல்லது முதிரா இளைஞன் அணிவது. Ref: புறம் 77

*வஞ்சினம் : தான் இதை செய்யாவிடில் எனக்கு இன்னது நேரட்டும் என்று ஊரறிய அறிவிப்பது. Ref: புறம் 72

“வஞ்சினமா? அவர் கூறியதை இன்னும் விளங்க கூறு. அதில் என்ன கூறினார் நம் அரசர்” என்று வினவிய கதிரவனின் குரலில் வியப்பும் பாண்டிய தேச பற்றும் மன்னரின் மீது மதிப்பும் மண்டிக்கிடந்தன.

தன்னவனின் கேள்விக்குப் பதிலுரைக்க முயன்ற கனலியின் கண்கள் தேச பற்றால், மன்னரின் வீரத்தால் உணர்ச்சி பிழம்பாய் மாறியது. ஏதோ கனவில் சஞ்சரிப்பவள் போல மன்னரின் வஞ்சினத்தைக் கூறத்தொடங்கினாள். “நம் நாட்டின் மீது  படையெடுத்துவரும் எழுவரின் முரசையும் வெண் கொற்றகுடையையும் கைப்பற்றுவேன். அவ்வாறு செய்ய இயலாது போனால் என்னை என் மக்கள் கொடியவன் என்று தூற்றட்டும், புலவர் பெருமக்கள் என்னைப் பாடாது போகட்டும், என்னை நம்பி வாழும் எனது மக்கள் என்னிடம் ஈகை கேட்டு வரும் பொழுது ஈகை அளிக்கும் நிலையில் நான் இல்லாது போகட்டுமென்று கூறியுள்ளார்” என்று கூறியவள் இன்னும் கனவிலிருந்து மீளாதவள் போன்று வெற்றி செய்தி கேட்கும் நாளுக்காய் காத்திருப்பவள் போன்று எங்கோ பார்வையைப் பதித்திருந்தாள்…

கனலியின் கூற்றைக் கவனித்துக்கொண்டிருந்தவன் ஏதோ சிந்தனைவையப்பட்டவனாக ஓரிரு கண்ணிமைகள் தாமதித்தான், பிறகு திட்டமான குரலில், “கனலி, நான் நமது பாண்டிய படையைப் பின்தொடர போகிறேன். அதற்கு வேண்டிய காரியங்களை இப்பொழுதே கவனி” என்று கூறவே, இத்தனை நேரமிருந்த உணர்ச்சி கனலிக்கு சட்டென்று அறுபட, நெருப்பைத் தொட்டவள் போன்று விக்கித்து நின்றாள்.

“சுவாமி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? நீங்கள் நலமாக இருக்கும் பொழுது நானே தங்களை ஆலம் சுற்றி வழியனுப்புவேன். தற்போது தீ காயமுற்று, தாங்கள் இருக்கும் நிலையில் செல்வது உத்தமம் அல்ல” என்று பரிதவிப்புடன் கூற, “கனலி நாட்டின் கடமையே முதன்மை. உடல் சுக குறைவு என்பது சாக்கு. நம் மன்னரின் திடத்தில் பாதியேனும் அவரது பிரஜைகளுக்கு இருக்க வேண்டாமா?” என்று கூற, கனலி மன்றாடத் தொடங்கினாள்.

அவளது புலம்பலை கேட்க சக்தியற்றவனாகக் கதிரவன் இறுதியாக அவ்வார்த்தைகளை உதிர்த்தான். “கனலி மன்னர் மட்டுமல்ல, இப்பொழுது நானும் வஞ்சினம் கூறுகிறேன் கேள். எனது இடது கரம் இப்போரில் நமது நாட்டிற்காக வாள் ஏந்தாமல் போகுமாயின் என் எரிந்த வலக்கரத்தில் வாள் பிடித்து, பயனற்று இருக்கும் இடக்கரத்தை வெட்டி எறிவேன். இஃது உன் மீது ஆணை. சொல் இப்பொழுது நான் என்ன செய்யவேண்டமென்பதை நீயே சொல்” என்று திட்டமாக ஒலித்தது கதிரவனின் குரல்.

முழுவதுமாக உடைந்த குரலுடன், கலங்கிய விழிகளுடன் “தங்களுக்காகக் காத்திருப்பேன்” என்ற சொற்களை வேறு வழியில்லாத நிலையில் அவளது உதடுகள் முணுமுணுத்தன. “கலங்காதே கனலி. என் வாழ்வின் ஆதாரம் நீ. இருப்பினும் நம் பாண்டிய நாட்டு பணியே முதல் பணியாக இருக்கவேண்டும். போரில் வெற்றிக்கண்டு நான் திருப்பினால் என் வாழ்வனைத்தும் உனக்கே முழுவதும் சொந்தம் ” என்று கனலியின் கண்களை ஊடுருவியபடி கூறிவிட்டுக் கிளம்பினான்…

எங்கும் டணார் டணார் என்று வாட்களோடு வாள் உரசும் சப்தங்களும், புரவிகள் கனைக்கும் ஓசைகளும், வீரர்களின் கூச்சல்களும், வேல் பாய்ந்து வலியால் அலறிய யானையின் ஓலங்களும் நிறைந்து காணப்பட்டது தலையாலங்கானத்துச் சமர்களம். பாசறையில்  வானத்து மின்னலோடு போட்டியிட்டு பளிச் பளிச்சென்று *நெடுஞ்செழியனின் வாள் மின்னிக்கொண்டிருந்தது. எதிர்த்துவரும் பகைவர்களைப் பதம்பார்க்க மின்னலென ஒளிர்ந்துக்கொண்டிருந்தது.

செழியன் பாசறையில் வாள் மின்னியது : Ref நற்றிணை 387

வீரர்களின் கூட்டத்தில் ஒருவனாய் தனது இடக்கரம் கொண்டு லாவகமாய் வாளை சுழற்றியபடி முன்னேறிக்கொண்டிருந்தான் கதிரவன். அவன் சென்றதிக்கில் எதிர்த்துவரும் வீரர்கள் அனைவரும் குருதி வெள்ளத்தில் மிதக்க தொடங்கினர். கதிரவனின் வீரத்தை காணசகிக்காத சேர போர் வீரன் ஒருவன் கதிரவன் முன்பு எதிர்பட்டான்.

”தலைக்கனம் வேண்டாம் பாண்டிய வீரனே, என்னிடம் உன் ஜம்பம் பலிக்காது, எனது வாளுக்கு முன் உனது உயிர் அரைக்காசுக்கு பெறாது” என்று கோபம் கண்களில் கொப்பளிக்கக் கூறிக்கொண்டிருந்தான் சேரவீரன்.

“இது தலைக்கனம் அல்ல. தலைமையான கடமை; உனது வாளுக்குப் பதில் கூற எனது வாளும் சித்தமாக உள்ளது”

“வேண்டாம் பிழைத்து போ. இந்தப் போர்க்களம் விட்டு ஒழிந்து போ. உன் ஒரு கையாவது மிஞ்சும்”

“சேர வீரனே, என்னோடு பேசவேண்டாம். எனது வாளுடன் மட்டும் பேசுவாயாக” என்று கூறிய கதிரவன் கவனத்துடன் வாளை சுழற்றவே இரண்டு வாள்களும் மிகுந்த உக்கிரத்துடன் மோதிக்கொண்டன.

இரெண்டு நாழிகைகள் தொடர்ந்த இருவரின் போரில், சேர நாட்டு வீரனின் வாள் கதிரவனின் வலது தோள்ப்பட்டையில் தொடங்கி மார்புவரை இரங்க அதே கணம் கதிரவனோ சேரனின் விலாவில் கூர் வாளை பாய்ச்சியிருந்தான்.

உதிரம் உதிர தொடங்கிய வேளையிலும் கண்கள் சொருக நின்ற கதிரவனிடம் தள்ளாடிய நிலையில் சேரன், “பாண்டிய வீரனே உனது ஒருகையை வைத்து உன்னைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன். வீரனிடம் மன்னிப்பு கேட்பது எனக்குப் பெருமையே. எனது உயிர் இவ்வுடலை விட்டு நீங்க இன்னும் சில கண்ணிமைகள் உள்ளன. அதற்குள் விரைந்து உன் வாள் கொண்டு என் மார்பை பிளந்துவிடு. எனதுயிர் மார்பை கிழித்ததாலே பிரிய வேண்டும்” என்று குளறலுடன் சேர வீரன் கூற, கதிரவன் செய்வதறியாது நின்றான். அவனது உயிரும் உதிருகின்ற குருதியின் வழி குறைந்துக்கொண்டே வர, ஒரு கணம் அசையாது திக்ப்ரமை கொண்டு நின்றான். “தாமதிக்காதே பாண்டிய வீரனே, எமது குலத்தில் *இறந்து பிறந்த குழைந்தையைக்கூட மார்பில் கூர்வாளை பாய்ச்சிய பிறகே ஈமக்கடன் செய்வோம். எனதுயிர் போர்க்களத்தில் மார்பில் புண் இல்லாது மடியக்கூடாது” என்று கூறவே, கண்ணிமையும் தாமாதிக்காமல் கதிரவனின் வாள் சேரவீரனின் மார்பை கிழித்துக்கொண்டு ஊடுருவியது.

சேரர்கள்: பிறந்த குழந்தை இறந்தாலும், இறந்தே பிறந்தாலும்,  அது வீரம் உடையது அன்று  என எண்ணி அதனை வீரமுடையதாக ஆக்க அதனை வாளாள் வெட்டி ஈமக்கடன் செய்வது வழக்கம். Ref: புறம் 74

அத்துடன் நிற்க சக்தியற்றவனாக நிலத்தில் சரிந்த கதிரவன் கண்கள் அஸ்தமனத்தை நோக்கி மெல்ல மெல்ல மூடத்தொடங்கினாலும் விழிகள் முழுதாக மூடாது வானத்தை வெறித்துக்கொண்டிருந்தன. அடுத்த ஒரு நாழிகையில் “தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வாழ்க வாழ்க ” என்ற கூச்சல் எட்டுத்திக்கிலும் எதிரொலிக்கக் கதிரவனின் கண்களில் திருப்தியும், உதட்டில் குறுஞ்சிறுப்பும் தவழ தொடங்கியது. கனலியின் காதலை பின்தள்ளி களத்திற்கு வந்தவன் பாண்டிய வெற்றிமுரசொலி கேட்டபிறகு அவனது உள்ளமானது மீண்டும் கனலியின் எண்ணங்களைச் சுமக்க தொடங்கியது.

நாட்டிற்காக வஞ்சியவளிடம் வஞ்சினம் கூறிவந்தவன், ஒருமுறையேனும்  அவளின் மதிமுகம் காண அத்தருணத்தில் ஏங்கினான். உயிர் கரைந்துக்கொண்டிருந்த வேளையிலும் இமைகளை மூடாது விழித்திருந்தபடியே உயிர்துறக்க முனைந்தான்.

இறந்தாலும் அவனது பார்வை பாவையைச் சந்திக்கும் என்ற நம்பிக்கையில்…..

 

Advertisement