Advertisement

ஊர் பஞ்சாயத்து9

கதிரவனை அருகிலிருந்து பார்க்க முடிந்த குதூகலத்தில் கனல் விழி துள்ளி குதித்தபடி மனதில்,” இன்னும் நாலுநாள் இருக்கு. அதுக்குள்ள அவரை இன்னும் தெருஞ்சுக்கணும். முடிஞ்சா ஒரே ஒரு வார்த்தையாவது பேசணும்” என எண்ணம் கொள்ள, அதைத் தடை செய்யவென வந்தது கந்தசாமியிடமிருந்து அழைப்பு.

“மச்சா, தேவிக்கு உடம்பு சுகமில்லை. கொஞ்சம் விழியை அனுப்பி வைக்கிறீங்களா ? இவளை தனியா விட்டுபுட்டு வர தோது படல. நீங்க சிரமா பார்காம வந்து விட்டீங்கனா இன்னும் காலேஜ் தொறக்க நாலு நாள் இருக்கே. கொஞ்ச அவ அம்மாவுக்கு விழி ஒத்தாசையா இருப்பா” எனக் கூற, முருகேசனும் விழியுடன் சேர்த்து முல்லை கொடியையும் அனுப்புவதாகக் கூறினார்.

முருகேசன் பேச்சிலிருந்து புரிந்துகொண்ட விழி சட்டென்று அனைத்தையும் மறந்தவளாய், “மாமா, அம்மாக்கு என்ன ஆச்சு ? அம்மா எவ்ளோ முடியாட்டியும் அவுங்களே பார்த்துப்பாங்களே. என்னைக் கூப்பிடறாங்கன்னா கண்டிப்பா அம்மாக்கு ரொம்ப முடியல போல. நான் அப்பாகிட்ட பேசுறே மாமா” எனப் பதற்றத்துடன் கனல் விழி கூற, “இரு பாப்பா. அழாத….. ஒன்னுமிருக்காது அம்மாக்கு. இப்ப மணி அஞ்சாச்சு. தேங்கா லோட் எடுக்குறவங்களுக்குப் பணத்தைக் கொடுத்துட்டு உடனே கிளம்பிடலாம். அங்க மாப்பிள்ளையும் என்னோட மருமகனும்தான் எல்லாத்தையும் ஒண்டியா பாக்குறாங்க. நம்மவேற போன போட்டு நேரக்கடத்த வேண்டா.

முல்ல கொடியும் நாலுநாள் அங்கனவே இருக்கட்டும். நீங்க ரெண்டு பேரு புறப்படுங்க” எனக் கூறியபடி தன் மனைவியையும் மகளையும் கூட அழைத்து விஷயம் இதுதான் என்று கூறிவிட்டு, வெளியே புறப்படும்போது தகவல் சொல்லுபவன் வந்து நின்றான்.

“என்ன ராசையா? இன்னைக்கு எதுவும் பஞ்சாயத்தா ? என்ன தாக்கல் கொண்டு வந்திருக்க ?” எனக் கேட்டபடி வாசலில் கிடந்த செருப்பை மாட்டியபடியே தோளில் துண்டை உதறி போட்டுக்கொண்டவர்,  தகவல் சொல்ல வந்திருந்த ராசய்யாவிடம் கேட்க, அவன் கூறிய தகவலில் ஒரு நிமிடம் முருகேசன் யோசனையானார்.

சிறு யோசனைக்குப் பிறகு, “ஏம்பா நிசமாதா சொல்லுறியா ?” என மீண்டும் உறுதிப்படுத்தும் குரலில் கேட்க, “ஆமா முருகேசன் அண்ணே. நான் எதுக்குத் தப்பா சொல்ல போறே… ? இன்னும் எல்லாருக்கும் போய்த் தகவல் சொல்லணும். ஒருமணிநேரத்துல பஞ்சாயத்து கூடுது. வந்துடுங்க அண்ணே” எனக் கூறிவிட்டு அவன் அடுத்த வீட்டிற்குச் செல்ல, இவர் மீண்டும் வீட்டிற்குள் வந்தார்.

“என்னங்க போன ஜோருக்கே வந்துடீங்க? அண்ணியைப் பார்க்க இப்பவே பொறப்படுவோமா? கிளம்பித்தா இருக்கே” என அவர்பாட்டிற்கு முருகேசனின் மனைவி மல்லி பேசிக்கொண்டிருக்க, “செத்த பொறுமா….” எனக் கூறியபடியே கந்தசாமிக்கு அழைத்தார்.

வெளியில் சென்ற மாமா திடுமென வந்ததுமட்டுமல்லாமல் ஏதோ யோசனையோடு யாருக்கோ அழைக்கவும், அம்மாவுக்கு என்னவோ ஏதோவென்று பதறியபடி உள்ளறையிலிருந்து விழி வெளியே வர, கந்தசாமி அழைப்பை ஏற்றிருந்தார்.

“மாப்பிள, இராவுக்குப் புறப்படலாம்தா கிளம்பினோம். ஊருல பஞ்சாயத்தைக் கூட்டிருக்காங்க. வீட்டுக்கு ஒருத்தர் அவசியம்னாலும், நான் தேவிக்காகக் கிளம்பிருப்பே. ஆனா இந்த முறை பிராத, நம்ம புள்ள மரியாதைய காப்பாத்துனானே அந்தப் பையன் மேல கொடுத்துருக்கானுங்க” எனக் கூற மறுமுனையில் கந்தசாமி, “யாரு? அந்தப் பையன் கதிரவன் மேலையா?” எனக் கேட்க, அதற்குள் கனல்விழி, “கதிரவனா இருக்கக் கூடாது” என மனதிற்குள் ஜபித்துக்கொண்டிருக்க, முருகேசன் கூறினார்.

“ஆமா கதிரவன் மேல தான்! அதா வேற யாருனாலு சட்டபண்ணாமா கிளம்பிருப்பே. ஆனா கதிரவன் நம்ம புள்ளைக்காண்டி நிண்டான்ல. அதுவும் பிராது கொடுத்தது மச்சக்காளை. அவனோட மாமா.

அந்த ஆளு கொஞ்சம் ஒருமாதிரி. அவனுக்குக் கதிரவனைச் சுத்தமா பிடிக்காது. பஞ்சாயத்து தலைவரு லிங்கம், கதிரவனோட அப்பாதான். ஆனாலும் அவரு இந்தப் பையனுக்கு எப்பவும் துணையா நிண்டது இல்ல.

இவனுக்குப் பேச ஆளு இல்லாட்டி, ஏதாவது வேலைய காட்டிப்புடுவானுங்க. சனக்கட்டு இல்லாட்டி ஏறி மேஞ்சிடுவானுங்க. தேவிக்கு ரொம்பச் சுகமில்லையா ? இன்னைக்கு ஒரு ராத்திரி இருந்து கோழிப்பிட (கோழி கூப்பிட, அதாவது அதிகாலை) கூட்டியாந்துறே. நீ என்ன சொல்லுற மாப்பிள? உன்னால சமாளிக்க முடியுமா ? இல்ல மல்லி பின்னாடி பிள்ளைங்களை அனுப்பிட்டு நான் காலையில வரவா ?” எனக் கேட்க, கந்தசாமி பதில் கூறுவதற்குள் விழியின் நெஞ்சம் அடித்துக்கொண்டது.

“ஐயோ, அவருமேல என்ன பிராது? அதுவும் சொந்த அத்த புருஷனே ஏன் கொடுத்திருக்காரு? மாமா என்னவோ சொல்லுறாரே… சொந்த அப்பவே மகனுக்குத் துணையா நிக்கமாட்டாருனு. என்னவா இருக்கும் ? ஆண்டவா இந்த நேரத்துல அம்மாக்கும் இப்படி இருக்கே… இங்க இவருக்கு எதுவும் ஆகக்கூடாது. அம்மாக்குச் சீக்கிரம் சரி ஆகிடனும்.

இப்பதான் செய்யாத தப்புக்கு ஊரு உறவ விட்டு ஒதுங்கி இருந்துட்டு வந்திருக்காரு. அவரு மேல என்னத்த குத்தம் சொல்ல போறாங்களோ?… நான் இப்ப ஊருக்கு போவேனா ? இல்ல இங்க இருப்பேனா? இதென்ன சோதனை” என மனதிற்குள் புலம்பத் தொடங்கியிருந்தாள்.

கந்தசாமி மறுமுனையில் என்ன சொன்னாரோ, “அப்படியா சொல்லுற மாப்பிள. சரி. ” என்று கூறி அலைபேசியை வைத்துவிட, விழிக்கு ஒருநிமிடம் எதுவுமே புரியவில்லை.

கதிரவனுக்கு எதிராக எதுவும் இருக்கக் கூடாது, தன் அன்னையிடமும் சீக்கிரம் செல்லவேண்டும் என்று மனது அடித்துக்கொண்டது. “மாமா…” என்ற தவிப்புடன் விழி முருகேசனை அழைக்க, அவரோ இந்தப் பதற்றம் தேவிக்கானது மட்டும் என்று எண்ணம் கொண்டு, “அம்மாக்கு ஒன்னு ஆகாது பாப்பா…பதறாத. நான் மாப்பிள்ளைக்கிட்ட பேசிட்டே. காலையில வந்தா போதும்னுட்டாரு. நான் பஞ்சாயத்துக்குப் போயிட்டு வாறே. நீ வீட்ல இரு தாயீ. முல்லகூடவும் அத்தகூடவும் இருமா” எனக் கூறியபடி வெளியேற, இவளுக்கு என்ன பிராது ? எதற்காக ? என்று எதுவும் தெரியாமல் தலை குழம்பியது. அதோடு அம்மாவின் நலம் வேறு!

சரி தந்தைக்கு அழைக்கலாம் என்று தன் கைபேசியிலிருந்து அழைக்க, “பாப்பா…உனக்குதா அப்பா முதல போட்டே. உனக்குப் போனே போகல பாப்பா. நீ ஒன்னு கவலைப்படாத. இராத்திரி வேலையில மல்லி அத்தையோட தனியா வரவேனா. காலையில மச்சா கூட்டியாருவாரு.

அம்மாவை நானும் அண்ணனும் பாத்துக்குறோம் பாப்பா. அம்மாக்கு ஒண்ணுமில்லை” எனச் சிலபல தைரியத்தைக் கூறி அழைப்பை துண்டிக்க, இப்போது விழியின் மனம் தாயின் நலனை பற்றிய கவலையில் சற்றே தெளிந்திருந்தது.

ஆனால் அடுத்தக் கவலை பூதாகரமாக உருவெடுத்து நின்றது. அது கதிரவனுக்கு என்ன பிரச்சனையோ என்ற எண்ணமே!

எப்படியாவது தானும் கூட்டத்திற்குச் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். ஆனால் செல்வதற்கு வழி ? அதுதான் தெரியவே இல்லை. அன்று ஒருநாள் நின்றதையே அவர்கள் குடும்பம் ஏற்றுக்கொள்ளவே இல்லை. வயதிற்கு வந்த பெண்ணைப் பஞ்சாயத்திற்கு அந்த ஊரில் யாருமே அழைத்துச் செல்லவே மாட்டார்கள். அப்படியிருக்க இவள் சென்று பார்ப்பது, சாத்தியமே இல்லாத ஒன்று. அதே சமையம் கதிரவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமலும் வெறுமனே வீட்டில் இருக்கவும் அவள் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

இன்னும் சில நிமிடங்கள் தான்….. பஞ்சாயத்து கூடிவிடும். என்ன என்ன என்ற கேள்வியோடு எப்படிப் போவது என்று சட்டென்று துணிந்து முடிவெடுத்துவிட்டாள். அதுதான் கனல்விழி! எந்தச் சூழலிலும் உடைந்து அமரும் வழக்கம் இல்லாதவள். எத்தனை நெருக்கடியான சூழலில் பதற்றம் கொள்ளுவாள் தவிரப் பயம் கொள்ளமாட்டாள்; கவலை கொள்வாளே தவிரக் கண்ணீர் வடிக்கமாட்டாள்;

பிரச்சனையை என்னவென்று சிந்தித்து எதிர்கொள்வாளே தவிரப் பயந்து ஒளிந்துகொள்ள மாட்டாள்; இன்றைய பஞ்சாயத்திற்குச் செல்லவேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்த பிறகு போய்தான் பார்ப்போமே என்று துணிந்துவிட்டாள்.

பிரச்சனையை வருமென்று எண்ணி தான் நேசிக்கின்றவனின் கடுமையான சூழலில் அவனைத் தனித்து விடுவதா ? கூடவே கூடாது! என்ன தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

“முல்ல! எனக்குப் பஞ்சாயத்தைப் பார்க்கணும்” என உறுதியான குரலில் விழி முல்லை கொடியின் முன் நிற்க, “ஏ ? என்ன விளையாடறிய ? அதெப்படி முடியும் ? எந்தப் புள்ளையும் அங்க போக அனுமதி கிடையாது. அதுலயும் எங்க அம்மாவுக்குத் தெருஞ்சுச்சு வெட்டி கூறுபோட்ரும்” என சுத்தி முத்தி பார்த்தபடி மல்லியின் காதில் விழாதபடி முல்லை கண்டிப்புக்குரலில் முணுமுணுக்க, “உனக்குப் பயமா இருந்தா நீ வராதா! ஆனா நா போகணும். எனக்கு ஒன்னுனா அவரு வந்து நின்னாருல்ல. நான் போய் எதுவும் பண்ணமுடியாது தான். அதுக்காக இங்கயே ஒளிஞ்சுக்கச் சொல்றியா? என்னால முடியாது. அங்க நடக்குறத பார்க்கணும். அவரையும் பார்க்கணும். புருஞ்சுக்கோ” எனச் சொல்ல முல்லை என்ன செய்வதென்று தெரியாமல் நின்றாள்.

“இவ்ளோ வியாக்கியானம் பேசுறவ, என்ன செய்றதும்னு நீயே சொல்லு. எனக்கு இது சரியா படல. என்ன செய்யணும்னு பிடிபடல. இதப்பாரு புள்ள, ஒண்ணுக்கு இரண்டு தடவ நல்லா யோசனை பண்ணி முடிவ பண்ணு… கண்டிப்பா போய்த்தா ஆகணுமா ?” எனக் கேட்க, சில நிமிடங்கள் விழி அமைதியாக நின்றாள்.

“என்ன யோசிச்சிட்டியா?” என மீண்டும் முல்லையே கேட்க, ஹ்ம்ம் என்பதாய் தலை அசைத்தாள் கனல்விழி.

“என்ன ? போகணுமா? போகவேணாமா? ” என முல்லை கேட்க,

“நான் யோசிச்சது போறதுக்கா இல்ல போகவேணாமானு இல்ல. எப்படிப் போறதுன்னுதான்” எனக் கூற, “அடிப்பாவி!” என வாயில் கை வைத்தாள் முல்லை.

“இதோ பாரு! இங்க மல்லி அத்தைகிட்ட இருந்து மட்டும் ஏதாவது சொல்லி வெளியே போய்டலாம். அப்புறம் நான் சக்கரை அண்ணே கிட்ட சொல்லி அவுங்க கடைல மறஞ்சுக்குவே. அவுங்க கடையில இருந்து பார்த்தா கூட்டம் நடக்குற இடம் கண்டிப்பா தெரியும். என்ன இங்க இருந்து வெளில கூப்டு போரதுமட்டும் நீ பார்த்துக்கோ” என விழி கூறிவிட, முல்லையோ, “எம்புட்டு அசால்ட்டா பேசுற புள்ள நீ… சிக்குணோம்னு வச்சுக்கோ அதோட நம்மள அடிவெளுத்திடுவாங்க. நீ தைரியசாலிதான். அதுக்காக இப்படியா? வேணாம்புள்ள. ஒருமுறை நல்ல யோசிச்சுக்கோ” எனக் கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே மல்லி அங்கு வந்துவிட, முல்லை திருட்டு முழி முழிக்கத் தொடங்கினாள்.

மறுபுறமோ, பார்வதி தோப்புவீட்டில் கதிரவனின் கைகளைப் பிடித்தப்பிடி, “உனக்கு இந்த ஊரு வேணாம் கதிரவா…. உன்ன வாழவும் விடமாட்டாங்க சாகவும் விடமாட்டாங்க. நான் உன்ன பார்க்கமுடியாட்டியும் பரவாயில்ல. அது நான் வாங்கி வந்த சாபம்னு நினச்சுக்கிறே. நீ இங்னவே இருந்தனா தொட்டதெல்லாம் குத்தம்னு உன்ன வம்பு இழுக்கவே அந்தப் பாரிஜாதமும் மச்சக்காளையும் கங்கணக் கட்டிட்டு திரிவாங்க. எதுக்கு ஐயா இந்தப் பாவி வயித்துல வந்து புறந்த?” என எவ்ளவோ முயன்றும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணைக் கசக்கியபடி கூற, கதிரவனுக்கு முகம் இறுகியது.

“அம்மா, அழறத நிறுத்துங்க. நான் எதுக்கு ஊரைவிட்டு உன்னைவிட்டு போகணும்? யாருக்கு நீ எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனா நீ என்ன பெத்தவ. நான் வாழறதும் வாழணும்னு நினைக்கிறதும் உன்னோட முகத்தைப் பார்க்கத்தான். யாரும்மா அந்த மச்சக்காளையும் பாரிஜாதமும்? இன்னும் எத்தனை நாளைக்கு அவனுங்கள நினச்சு ஒதுங்கி போவீங்க ? நான் நம்மவீட்ட விட்டு வந்தேனா அதுக்குக் காரணம் என்ன வச்சு உன்ன தினமும் எதாவது ஏசுராங்கனு மட்டும்தான். அது அவுங்களுக்குப் பயந்து இல்ல. உம்மேல இருந்த பாசாத்தால.

பஞ்சாயத்தைக் கூட்டிட்டா, எல்லா அவுங்களுக்குச் சாதகமா வந்திடுமா ? நீ உன்னோட புள்ளைய என்ன நினைச்ச? ஓடி போற கோழைனா ? நான் போகணும்னா அது நானா நினச்சா மட்டும் தான் முடியும்.

இந்த நாலு வருசமா நான் ஊருல இல்லாததுக்காரணம் அவுங்க சொன்ன தீர்ப்பு இல்ல. என்னோட பயணம். எப்படியும் நான் படிக்க வேற ஊருக்கு போகணும். தொழில் தொடங்கவும் வேல கத்துக்கவும் வேற ஊருக்கு தான் போகணும். இதெல்லாம் மனசுல வச்சுதான் போனே. அத நீங்க புருஞ்சுக்கோங்க!

நம்ம இடத்துல வந்து மத்தவங்க வாழ இடக்கொடுக்கலாம். தப்பில்ல. ஆனா நம்மளையே ஆள நினச்சா அதுக்கு நம்ம விட்டு கொடுத்துப் போகக் கூடாது. இன்னைக்குப் பஞ்சயாத்துல இதுக்கு ஒரு முடிவு கட்டுறே” எனக் கதிரவன் பேச பேச, கொஞ்சம் துவண்டு போய் இருந்த பாண்டியும் சக்கரையும் கூடச் சுறுசுறுப்பாக மாறினர்.

பார்வதியின் அழுகை கதிரவனின் பேச்சைக்கேட்டு சற்றே குறைந்திருந்தாலும் அவர் மனதில், “நான் அன்னைக்கே சரியான முடிவு எடுத்திருந்திருக்கணுமோ…” என்ற கேள்வி ஆயிரமாவது முறையாக முளைத்துக்கொண்டுதான் இருந்தது.

ஊரே கூடி நிற்க, லிங்கத்தின் முகம் கடினமாகவும் வெறுப்பாகவும் இருந்தது. மச்சக்காளை ஒருபுறம் திமிராக நிற்க, பாரிஜாதமோ ஒரு வெற்றி பார்வையுடன் நின்றிருந்தார். அண்ணன் தானே தலைவர். நிச்சயம் நமக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துவிடும் என்ற அசைக்க முடியாத எண்ணம். அதுமட்டுமில்லாமல் வீட்டிலையே தேவையான அளவுக்கு அவரிடம் சில பல விஷயங்களையும் கண்ணீர் நிறைந்த நாடகங்களையும் அரங்கேற்றிய இங்கு வந்திருந்தார்.

“இப்படி ஆளாளுக்கு அமைதியா இருந்தா எப்படி? ஏம்ப்பா மச்சக்காளை. பிராது கொடுத்தவன் நீ? என்னனு நீயே ஆரம்பி. சட்டுபுட்டுனு விஷயத்துக்கு வா. எல்லாத்துக்கும் சோலிகிடக்குதுல ”

எனக் கூட்டத்தில் ஒரு முதியவர் குரல் குடுக்க, தன் தோளில் கிடந்த துண்டை சற்றே உதறி போட்டபடி, “நானு சுத்தி வளைக்க விரும்பல. எல்லாருக்கும் சோலி கிடக்குதுனு சொன்னீங்கல. அந்தச் சோலி யாருக்கும் கெட்டுட கூடாதுனு தான் இந்தப் பஞ்சாயத்தே” எனப் பெரிய பீடிகையோடு ஆரம்பித்தார்.

இதுவரை தன் மீது பிராது கொடுக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமே கதிரவன் அறிந்த ஒன்று. அது எதைப் பற்றியது என்பதைப் பஞ்சாயத்துக் குழுவில் மச்சக்காளை தெரிவிக்கவில்லை. கதிரவன் உட்பட அங்கிருந்த யாருக்கும் இவன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் என்னவென்றே தெரியவில்லை. மச்சக்காளையும் பெரியதொரு பீடிகை தர, அனைவரும் அதை அறிந்துகொள்ள ஆர்வமானர்.

பாண்டிக்கும் சக்கரைக்கும் என்னவென்று தெரிந்தாலாவது ஏதாவது மாற்று வழி யோசிக்கலாமே என்று தோன்றியது.

முருகேஷனோ, “என்னவந்தாலும் சரி. கதிரவனை விட்டுட கூடாது” எனத் தனக்குள் சொல்லிக்கொண்டார்.

லிங்கமோ, “இவனால எப்பவும் எனக்கு அவமானம் தான்” எனக் கதிரவன் குறித்து நினைத்துக்கொண்டார்.

“இந்தாப்பா மச்சக்காளை. விளக்கமா சொல்லு” என மற்றொருவர் வினவ, அவர் கூற தொடங்கினார்.

“இத பாருங்கய்யா, தொழில் தர்மம்னு ஒன்னு இருக்கு. நம்ம ஊருக்குனு நியாயத் தர்ம இருக்கு” என கூற, பாண்டியோ “ஏன்டா சக்கர, நியாயத் தர்மத்தை பத்தி யாரு பேசுறதுனு ஒரு நியாய வேணாமா டா ?” எனக் கேட்டு கிசுகிசுத்தான்”

“நான் இப்ப சொல்லவரது ஒரு முதலாளியா மட்டுமில்ல. தொழிலாளியோட கஷ்ட நஷ்டம் தெரிஞ்சவனா பேசுறே” என மச்சக்காளை கூற,

வேகமாகச் சக்கரையின் காதை கடித்த பாண்டி, “பெருச்சாலிமாதிரி மூஞ்ச வச்சுக்கிட்டு முதலாளியாம். டேய் நாட்டுல இந்த முதலாளிங்க தொல்லை தாங்க முடிலடா… ” எனக் கிண்டலடிக்க, சக்கரையோ, “இப்ப என்னதான்டா பிரச்சனை?” எனக் கடுப்பாக வினவ, “அதில்ல மாப்பி… நாலு சுவரும் ஒரு கூரையும் வச்சிருக்கவன்லாம் மொதலாளியாம்” எனக் கூறி வாய் பொத்தி சிரிக்க, சக்கரையோ உஷ்ணமாகப் பாண்டிக்குப் பின்னால் இருந்த அவனின் பரோட்டா கடையைப் பார்த்தபடி இவனை முறைக்க, பாண்டியோ, “என்ன மாப்பியோட லுக்கு லெந்தியா போகுது…எங்க பாக்குறான் இவன் ?” என யோசித்தபடி பின்னாடி பார்க்க, அங்கோ நாலு சுவர் ஒரு கூரையுடன் சக்கரையின் பரோட்டா கடை இருந்தது.

அதைப் பார்த்த பாண்டி எச்சிலை விழுங்கியபடி, “பொங்கிட்டேனோ ? பரோட்டாவை கட் பண்ணிடுவானோ ?” எனப் பதறி போய், “மாப்பி…உன்ன போய்ச் சொல்லுவேனா ? நீ யாரு ? ஓசியில் பசி போக்கும் பாரியே, பரோட்டா சூரியே … ச்சி ச்சி…பாராட்டோ ஓனரே…நான் அவரைச் சொன்னேன்டா” என மைக் பிடித்து மேடையில் பேசுபவனைப் போலப் பாவனைக் காட்ட, சக்கரையோ,”டேய் அமைதியா பாரு…” என அவனை அடக்க, “மாப்பி அந்தாளு மூஞ்ச பாக்கமுடிலனு தானே உண்ட பேசுறே. ஒரே எரிச்சல் எரிச்சலா வருது… ” எனக் கூற,

சக்கரையோ, “அடேய்! அவரு மச்சக்காளாடா..” எனக் கூற, “நான் மட்டுமென்ன எச்சகளனா சொன்னேன் ?” என வாயடிக்க, இலேசாகச் சிரித்தவனாய், “மாப்பிச் சும்மா இருடா…” என அடக்கினான் அவனை.

இவர்கள் ஒரு புறம் முணுமுணுத்துக்கொண்டிருக்க, அதை அறியாதவராய் மச்சக்காளை மேற்கொண்டு தொடர்ந்தார். “அத ஒட்டுமொத்தமா அழிக்கவே கங்னகட்டிட்டு இந்தக் கதிரவன் வந்திருக்கான். அய்யா பஞ்சாயத்துப் பெரியவங்களே…. ஒரு ஹோட்டலுக்கு எதுத்தாப்புல இன்னொரு ஹோட்டலு வைக்கமாட்டாங்க. ஒரு மளிகை கடைக்கு எதுத்தாப்புல இன்னொன்னு இருக்காது. ஏன்னா வியாபாரம் பாதிக்கும்னு. நம்ம ஊருல பல வருசமா இப்படித்தான் நடப்புல இருந்துட்டு வருது.

அது எல்லாத்தயும் இவன் மாத்தபாக்குறான். அப்படிச் சொல்றதைவிட என்னோட இறால் பண்ணைய நம்பி இருக்க மீனவ தம்பிகளையும், பண்ணையில வேல பாக்குற ஆளுங்க வயித்துலயும் அடிக்கிறதுக்குனே என்னோட பண்ணைக்குப் போட்டியா நம்ம ஊருளையே இன்னொரு இறால் பண்ண வைக்க எல்லா வேலையும் இவன் தொடங்கிட்டான்.

ஒரே ஊருல இரண்டு பண்ணை இருந்தா, அது வியாபாரத்தைப் பாதிக்காதா? இல்ல பெரியவங்கனு எங்ககிட்ட கலந்து ஆலோசிச்சு முடிவு செஞ்சானா? என்னோட தனிப்பட்ட விஷயம்னா பரவா இல்லைங்க. இதையே பொழப்பா நம்பி வாழுற ஜனங்க வயித்துல இவன் அடிக்கப் பாக்குறான். இத எப்படி என்னால பொறுத்துக்க முடியும் ?

இதுக்கு இந்தப் பஞ்சாயத்து தான் ஒரு முடிவு பண்ணனும். ஒரு ஊருல இரண்டு பண்ணை இருக்குறது எல்லா வகைளையும் வியாபாரத்தைப் பாதிக்கும். அதுல வேல பாக்குற மனுஷ மக்களோட வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். அதுனால இந்தப் பையன் ஆரம்பிக்க இருக்குற பண்ணையை உடனே தடுத்த நிறுத்தணும்னு தீர்ப்பு சொல்லணும்னு கேட்கிறே” என மூச்சுப்பிடிக்க, ஊர்மக்களின் நன்மை தான் முக்கியம் என்பது போல முன்னிலை படுத்தி மச்ச காளை பேசி முடிக்க, பாரிஜாதமோ முந்தானையால் வாயை மூடி மூக்கை உறிஞ்சியபடி அண்ணனிடம் ஜாடை காட்ட லிங்கமோ வீட்டில் பாரிஜாதம் சொன்னதை நினைவு கூர்ந்தார்.

“அண்ணே! இந்தக் கதிரு இருக்கானே, அவன் எமகாதகன். உன்ன அசிங்க படுத்தணும்னே உன்னோட பண்ணைக்குப் போட்டியா ஒரு இறால் பண்ணைய ஆரம்பிக்கப் போறானாம்

உன்ன அசிங்க படுத்தணும்னே பன்றான். பண்ணையப் பாத்துக்குறது எம்புருஷன்னாலும், அவரை இந்தப் பைய எதுத்து நிக்கிறது உன்ன அசிங்க படுத்தத்தான்” எனப் பேசியது இப்பவும் லிங்கத்தின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

இதற்குள் கூட்டத்தில் இருந்த ஒவ்வருவரும் ஒவ்வருவிதமாகப் பேச, முருகேஷனோ, “அட பாவி! கதிரவனை அவன் வீட்டைவிட்டே போக வச்சீங்க. இப்ப அவன் ஏதோ தொழில் தொடங்க போறான் போல, அதுக்கும் விடமாட்டாங்க போலவே. இதெல்லாம் ஒரு குத்தமாடா…” என மனதிற்குள் குமைந்தவராய், பஞ்சாயத்தில் வாயெடுக்கப் போக, அதைக் கவனித்துவிட்டு மச்சக்காளை வேகமாக, “கூட்டத்துல ஆளாளுக்குப் பேசிட்டு ஆட்டத்தைக் களைக்காம, நேரடியா குத்தசெய்தவனே ஒத்துக்கிட்டு ஒதுங்குறது நல்லது. பஞ்சாயத்து தலைவரு தான் எனக்கு ஒரு நியாயத்தைச் சொல்லணும்” என முருகேசனை பேசவிடாமல் மச்சக்காளை உட்புக, ஆனாலும் முருகேசன் விடுவேனா என்பது போல, “அதெப்படி ? யாரு பேசக்கூடாதுன்னு கூட்டத்தை உங்க வீட்ல ரூமை பூட்டிக்கிட்டு வைக்க வேண்டி தான? எதுக்கு ஊரகூட்டனும் ? அதுவும் இது ஊருக்காகக் கூட்டப்பட்ட பஞ்சாயத்து தான ? அதுல ஊருக்குறாங்க பேசுறது எப்படி ஆட்டத்தைக் களைக்கிறதா இருக்கு ? எனக் கேள்விமேல் கேள்வி எழுப்ப, பஞ்சாயத்தில் நின்ற ஒரு சிலர், ” அட ஆமா! முருகேச சொல்றது சரியாதான் படுத்து” எனக் கூற, வேறு சிலரோ, “பதில கதிரவச் சொல்லட்டும்” எனக் கூறினர்.

இப்படியே பேச்சு அங்கொன்றும் இங்கொன்றும் நீண்டு சலசலக்க தொடங்கியது.

இதற்கிடையில் கனல் விழி, மல்லியிடம் வள்ளியின் வீட்டிற்குச் செல்வதாய்க் கூறிவிட்டு போக்கு காட்டி இருளில் மறைந்து மறைந்து அடித்துப் பிடித்துச் சக்கரையின் கடைக்கு வந்து சேர்ந்தாள். சக்கரையிடம் முன்பே கூறியிருந்தபடியால், அவள் நின்று கூட்டத்தைப் பார்ப்பதற்கு ஏதுவான இடத்தைக் கூறிவிட்டு, கடையில் வேலை பார்க்கும் பையனையும் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிட, கடையில் யாரும் இல்லை.

ஒரு தடுப்புக் கட்டை மட்டும் வைத்துக் கடை மூடப்பட்டுள்ளது என்ற பலகையை வைத்து சென்றுவிட, அந்தப் புறமாக வருவோர் யாருமில்லை.

கனல்விழியின் பார்வை முழுவதும் கதிரவன் மீதே. கூடியிருக்கும் எல்லாரும் ஏதோவொன்று பேச, கதிரவன் மட்டும் நின்ற தோரணை அவளை ஆச்சரியப்படுத்தியது.

அவனுடைய பார்வை மச்சக்காளையை ஊடுருவியது. அந்தப் பார்வை வீச்சிற்கு மச்சக்காளை ஒன்னும் பயம் கொள்ளவில்லைதான். இருந்தாலும் கதிரவனின் பார்வையை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் அவ்வப்போது பார்க்கும் திசையை மாற்றிக்கொண்டே இருந்தார். தன் மீது தான் புகார் என்ற எண்ணமே இல்லாமல் யாரோ யாரையோ பற்றிப் பேசுகின்றனர் என்ற தோரணையில் நின்றிருந்தான்.

வெகுநிதானம் வெகுசாதாரணம் அசாத்திய துணிச்சல் அப்படியொரு உடல் மொழி அவனிடம். தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கனல்விழிக்கே கதிரவனின் திடம் ஆச்சர்யமென்றால் அருகில் இருந்து பார்த்தோர் அசந்து விட்டிருந்தனர்.

மச்சக்காளையும் அவனுடைய கூட்டாளிகளும் இன்னும் அவனுக்குக் கூஜா தூக்குபவரும், “பிராது இவன் மேல நம்ம கொடுத்துருக்கோமா? இல்ல இவன் நம்ம மேல கொடுத்துருக்கானா ?” என்றே குழம்பத் தொடங்கியிருந்தனர்.

இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த கனல்விழியோ, “எதுவந்தாலும் இவரு சமாளிப்பாரு போலவே. நம்மதான் ரொம்பக் குழம்பிட்டோம். சரி சரி சட்டுபுட்டுனு முடுச்சிடாமா இன்னும் கொஞ்சம் இழுங்க. இன்னைக்குவிட்டா அப்புற எப்ப இவர பாக்குறதுனே தெரியல” என ஆசை தீர கதிரவனை ரசிக்கத் தொடங்கினாள்.

“என்னப்பா ஆளாளுக்குப் பேசிகிட்டு. எனக்கென்னவோ மச்சக்காளை சொல்றதுதான் நியாயம்னு படுது. புதுசா ஆரம்பிகிறேன்னு, நல்லா ஓடிட்டு இருக்குறத கெடுத்துப்புட்டா” என ஒருசிலர் குரல் கொடுக்க, அதற்கு ஏற்றார் போல, “ஆமா! சரியாதா மாப்பிள சொல்ற. இந்த இளவட்ட பசங்க எடுத்தோ கவுத்தோம்னு எதையாவது பண்ணிப்புட்டு போயிடவும் வாய்ப்பு இருக்கு” எனப் பேச, கூட்டத்தில் கதிரவனுக்கு எதிரான குரல் வலுக்கத் தொடங்கியது.

Advertisement