Advertisement

அன்பா ? வம்பா ?  24

தோள்களைத் தொட்டவுடன் சட்டென்று விழி திரும்பி பார்க்க அங்கே பாண்டியும் சக்கரையும். எப்போதும் எதற்கும் கவலை பட்டு பார்த்திராத அவர்களை முதன் முறையாக அப்படிப் பார்த்தது விழிக்கு என்னவோ போலிருந்தது.

“என்னாச்சு அண்ணா? பாண்டி அண்ணா நீங்களுமா ?” என அவர்களைப் பார்த்து கேட்க, அவர்களோ

“நாங்க உன்கிட்ட கேட்கணும் விழி. நீ நல்லாத்தானே இருக்க மா ?” எனச் சக்கரை வினவ,

“ஆமா! ஏன் திடிர்னு கேக்குறீங்க ?”

“இல்லமா தங்கச்சி, கதிரவப் பேசுனது நாங்களும் கேட்டோமே. மாப்புள உன்மேல எவ்ளோ வெறுப்பா இருக்கான் பார்த்தல. உன்ன அவ இவ்ளோ வெறுக்கிறானேமா. அவனோட அம்மாவை காப்பாத்துறேன்னு உன்னோட வாழ்க்கைய தொலைச்சுட்டியோன்னு தோணுது மா” எனச் சக்கரை கூற,

“ஆமா விழி. உப்பு சப்பில்லாத சாப்பாடு போல உன்னோட வாழ்க்கையையும் எதுவுமில்லாமலே போயிடும்னு பயமா இருக்கு” எனப் பாண்டியும் அவனுக்குத் தெரிந்த வகையில் கவலை கொள்ள,

சட்டென்று விழி சிரித்துவிட்டாள். வேறு யாராக இருந்தாலும் இந்த நிலையில் சிரிக்க மாட்டார்கள் தான். ஆனா விழி வித்தியாசமான பெண்.

“இவளுக்கு எதாவது ஆகிடுச்சோ” எனக் கவலையாய் சக்கரை பார்க்க, ” யாராச்சும் கிச்சுகிச்சு மூட்டிடங்களா ? இல்ல துக்கம் தொண்டைல அடைச்சுக்கிட்டதுனால விழி அழுகுறது சிரிக்கிறமாதி இருக்கோ ? இருக்கும். ஏன்னா இந்தச் சீன்ல இந்தப் புள்ள அழுகதான செய்யணும்” எனத் தீவிரமாகப் பாண்டி சிந்திக்க,

அவர்களின் பார்வையின் பொருள் புரிந்து விழி பதில் சொன்னாள்.

“பாண்டி அண்ணா! நீங்க செம்ம போங்க. கவலையா இருக்கும்போது கூடச் சாப்பாடு வச்சே ஆறுதல் சொல்லுறீங்க. பட்டய கெளப்புறீங்க.

என்ன சொன்னீங்க ? உப்புச் சப்பு இல்லையா ? அப்போ உப்புக் காரம் எல்லாம் சேர்த்திடுவோம். இதுக்கு எதுக்கு இப்படி முகத்தை வச்சிட்டு உம்முனு சுத்துறீங்க ? உங்க தங்கச்சிக்கு அவளுக்குப் பிடிச்சவனோட கல்யாணம் நடந்திருக்கு. சும்மா ஜம்முனு சுத்தமா அழுது வடியிறீங்க ?” எனக் கேட்க,

சக்கரையோ, “ஆனா அவனுக்குப் பிடிக்கலியே” எனக் கூற

பாண்டியோ, “உன்ன சுத்தமா பிடிக்கல. அவ்ளோ வெறுப்பா பேசுறான். இப்ப உன்னோட வாழ்க்கை எப்படி இருக்குதெரியுமா ? சிக்கலா இருக்க இடியாப்பம் மாதிரி. இவ்ளோ கோபத்தோட இருக்கவன நினச்சு பயப்படாம நீ என்ன சிரிச்சுக்கிட்டு இருக்க ? காலையிலிருந்து இந்த நிமிஷம் வர உன் மேல இருக்கக் கோபத்தை அவன் கொஞ்சம் கூட விடல” எனப் பாண்டி கேட்க,

“அண்ணே! அத நீங்களே சொல்லிட்டீங்களே. என் மேல ரொம்பக் கோவமா இருக்காருன்னு. எதுவுமே இல்லாம இருக்குறதுக்குக் கோபமா இருக்குறது எவ்ளவோ மேல்.

என்ன கண்டுக்காம இருந்திருந்தா ஒருவேளை நான் கவலை பட்டிருப்பேன். ஆனா இப்ப கோபத்துல இன்னைக்கு நாள் முழுக்க என்ன பத்தி மட்டுமே தானே நினைச்சிருக்காரு. பொறவு என்ன ? சீக்கரமே வெறுப்ப விருப்பா மாத்திடுவோம். என்ன நான் சொல்றது?”

“உனக்குக் கொஞ்சம் கூடக் கவலையவோ பயமாவோ இல்லையா விழி? உங்க அப்பா அம்மாக்குனு எல்லாருக்கும் எவ்ளோ கஷ்டம் ? ” எனச் சக்கரை கேட்க,

“அண்ணே! இது நான் தெருஞ்சு எடுத்த முடிவு. உக்காந்து அழுதா சரி ஆகிடுமா ? இல்ல பயப்படுறதுனால எனக்குப் பதிலா வேற யாரவது வந்து சரி பண்ண போறாங்களா ? கிடையவே கிடையாது. அதோட எனக்கு அழுகறது பிடிக்காது.

இப்ப அழுதா எங்க அப்பாவோட வளர்ப்பு தோத்து போய்டும்.

நான் அத்தைக்காகப் பண்ணினேன்தான். ஆனா அத்தைக்காக மட்டும் இல்ல. அவருக்காகவும் என்னோட காதலுக்காகவும்.

எங்க அப்பா அம்மாவை கஷ்டப்படுத்திட்டேன் தான். நான் இல்லனு சொல்லல. ஒருவேளை இப்படிப் பண்ணாட்டியும் அவுங்க காலம் முழுக்கக் கஷ்டப்பட்டிருப்பாங்க.

என்னோட காதல் ஒரு தலை காதல். எப்படியும் இரெண்டு வீட்டை சம்மதிக்க வச்சு, அவரைச் சம்மதிக்க வச்சு இந்த ஜென்மத்துல எங்க கல்யாணம் நடக்க வாய்ப்பில்லை. இப்படி எதாவது நடந்தாதான் வாய்ப்பு. இவரு இல்லாம வேற யாரையும் எப்பயும் என்னால கல்யாணம் பன்னிருக்க முடியாது. ஏன் யோசிக்கக் கூட முடியாது.

அப்படியிருக்கக் கல்யாணம் பண்ணாமலே அவுங்க பொண்ணு வீட்டோட இருந்தா அது அப்பவும் அவுங்களுக்குக் கஷ்டம் தானே.

அதுனால நடந்து முடிஞ்சது நினைச்சோ பேசியோ ஆவப்போறது ஒண்ணுமே இல்ல. இனி நடக்கப் போறத மட்டுப் பார்க்கலாம்.

எனக்கு நம்பிக்கை இருக்கு. இன்னைக்கு நான் அவருக்காக என்னலாமோ செஞ்சு இங்க வந்துருக்கேன். ஒரு நாள் அவரு எனக்காக என்ன வேணுனாலும் செய்யத் தயாரா இருப்பாரு. அவரோட காதலுக்குக் கண்டிப்பா நான் தான் சொந்தக்காரி.

அதுனால என்ன நினச்சு வருத்தப்படாதீங்க.

நீங்க இரெண்டு பேரும் அவர்கூட இருங்க. அது போதும் எனக்கு” எனத் தெளிவுடன் பேச, சக்கரை பாண்டி என இருவரும் குழப்பம் நீங்க தெளிவாக உணர்ந்தனர்.

நேரம் சென்றது…

இருவருக்குமான அறைகள் தயாராக இருந்தன.

மாறன் காதலுடனும் கதிரவன் கடுப்புடனும் அவரவர் அறையில்.

மாறனும் சாந்தினியும் இயல்பான அழகான வாழ்க்கைக்குக் காதலால் அஸ்திவாரமிட தொடங்க, அதற்கு நேர் மாறான கோபத்துடன் கதிரவன் ஒரு நிலையில் இல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டிருந்தான்.

“வரட்டும்… பொய் சொல்லி ஏமாத்தி கட்டிக்கிட்டா சந்தோசமா இருந்திடுவாளா? அம்மாவும் அவளுக்குச் சாதகமா ஒரு பொய்க்காரிய நல்லவ வல்லவனு சொல்லுறாங்க. அம்மாக்கிட்ட பேசி என்ன நாடகம் போட்டாளோ?

பொம்பள பிள்ளையைக் கைநீட்ட கூடாதுனு பாக்குறேன். இல்லனா நடக்குறதே வேறயா இருக்கும். இன்னைக்கு அவ வாயத் தொறந்து ஒரு வார்த்த, ஒரு வார்த்த கூடப் பேச கூடாது. என்ட பேசுறதுக்குத் தைரியம் இனி அவளுக்குக் கனவுல கூட வரக்கூடாது.

என்கிட்ட பேசினாத்தானே நீ கதை அளக்க முடியும். இனி நான் பேசுறத மட்டும் தான் நீ கேட்கணும். கேட்கவே முடியலன்னு நீயாவே என்ன விட்டு போகணும். அப்படியே போகாட்டியும் ஏண்டா இவன பொய் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு நீ நினச்சு நினச்சு வேதனை படணும்” என அவளின் மேல் உள்ள மொத்த கோபத்தையும் கொட்டுவதற்குத் தயாராக இருந்தான்.

அடிப்பட்ட சிங்கமாய் உறுமலுடன் கதிரவன்.

இதை எல்லாம் அறிந்தே எதிர்பார்த்தே அறைக்குள் நுழைந்தாள் கதிரவனின் பொய்க்காரி.

அவளைப் பார்த்தவுடன் கதிரவனுக்கு அப்படியொரு கோபம். எங்கே கை நீட்டிவிடுவோமோ என்ற அச்சம். அவளைப் பார்க்க பார்க்க தணலில் ஊற்றப்பட்ட எண்ணையாய் மனது கொழுந்துவிட்டெறிய தொடங்க சட்டென்று தன்னைக் கட்டுக்குள் கொண்டுவர சுவற்றின் பக்கமாகத் திரும்பி நின்றுகொண்டான். சுவற்றில் கையை இறுக மூடி ஒரு குத்துக் குத்தினான். மெல்ல மெல்ல தன்னை நிதானப்படுத்திக்கொண்டு அவளிடம் கண்டிப்புடன் சொல்ல துணிந்தான்.

உன்னோட நாடகத்தையும் நடிப்பையும் வேற எங்கையாவது வச்சுக்கோ. என்கிட்ட என்ன பேசியும் நெருங்கவோ ஏமாத்தவோ முடியாது. அதையும் மீறி எதாவது தில்லுமுல்லு பண்ணனும்னு நினச்சா நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்கமாட்டேன் என்பதைச் சொல்வதற்காக அவன் திரும்ப, அதே சமயம் சரியாக அவனை முந்திக்கொண்டு விழி பேச தொடங்கியிருந்தாள்.

“ஒரு நிமிஷம்!

நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு எனக்குத் தெரியும். ‘இதோ பாரு உன்னோட வேலையெல்லாம் என்கிட்ட வேணாம். மீறி கல்யாணத்துல போல வேற எதாவது பண்ணனும்னு நினச்சா நிலமை வேற மாதிரி ஆகிடும்’ அப்படினு தானே சொல்ல வந்தீங்க.

இதுக்கு எதுக்குங்க நீங்க இவ்ளோ கோபப்பட்டுச் சொல்றீங்க. அதெல்லாம் வேணாம்.” என மிகவும் இலகுவாகக் கூற, கதிரவனுக்கு முதலில் கோபத்தை மீறிய ஆச்சர்யம். அதன் பின் அவளின் இலகுவான பேச்சை பார்த்துக் கோபம் என்று அவன் சிந்தனை ஓட, அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தவள், “அட இவ எப்படி நாம சொல்லணும்னு நினச்சத சொல்லுறான்னு பாக்குறீங்களா ? ரொம்பலாம் யோசிக்காதீங்க.

கட்டாயத் தாலிய கட்டவச்சவளா பார்த்தா காதல் சொல்லவா தோணும். கட்டைய எடுத்து அடிக்கதான் தோணும். அத வச்சுதான் சொன்னேன். ஹா பொறவு நீங்க பாட்டுக்க அன்னைக்குக் கோவத்துல கோவில்ல அடிச்ச போல அடிச்சிடாதீங்க.

நான் பார்க்கத்தான் கொஞ்சம் பூசுன மாதிரி நல்லா தெரிவேன். ஆனா ஓர் அடிகூடத் தாங்க மாட்டேன். சட்டு புட்டுன்னு கை வைக்கிற வேலையெல்லாம் வேணாம். மீறி பண்ணினா..?” எனச் சொல்லாமல் இழுக்க,

கதிரவனோ நீ பண்றதுக்கெல்லாம் நின்னு பேசுறது தான் தப்பு. கோவில்ல கொடுத்த போல ஒன்னு வச்சாத்தான் அடங்குவ என்பதாக அவளைப் பார்க்க அதைப் புரிந்தவளாக, “உள்ள போயிருவீங்க! ” என விழி கூற, கதிரவன் கோபத்தையும் மீறி “என்ன ?” என்று கேட்டே விட, “பண்ணினா என்ன னு தானே கேக்குறீங்க. அப்படிக் கை வச்சா கொலை கேஸ்ல உள்ள போயிருவீங்கன்னு சொன்னே. ஏன்னா நான் அம்புட்டு வீக்” எனப் பாவமாக முகத்தை வைத்து கூற, கதிரவன் யோசிக்கத் தொடங்கினான்.

“யாரிவள் ? சம்மதமே இல்லாம கல்யாணத்த நிப்பாட்டுனா. எல்லாரையும் எதித்துப் பேசி தனியா போராடி ஏதேதோ கட்டுக்கதையெல்லாம் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டா.

மாறனுக்கும் சாந்தினிக்கும் இவளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல. ஆனாலும் அவுங்க காதலிக்கிறது இவளுக்குத் தெரிஞ்சிருக்கு. அம்மா இவளுக்குச் சாதகமா நிக்கிறாங்க.

கூட்டத்துல அவ்ளோ துணிச்சலா பேசுனவ இங்க ரொம்பச் சாதாரணமா பேசுறா. அதுவும் என்ன ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டு என்கிட்டையே எதுவுமே நடக்காத மாதிரி பேச்சு. என்னதான் வேணும் இவளுக்கு ? எதுக்கு இப்படியெல்லாம் பண்றா?” என விழியைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்க, விழியோ தரையில் தலையணையைப் போட்டு படுத்துவிட்டிருந்தாள்.

உடனடியாக உறக்கம் அவளைத் தழுவவில்லை. ஆனாலும் முழித்திருந்தால் கதிரவன் சண்டை போடுவானோ அல்லது இனிமே என்கிட்ட பேச முயற்சி பண்ணாத  அப்படினு சொல்லிடுவானோ என எண்ணியே தூங்கிவிட்டத்தைப் போலப் பாசாங்கு செய்தாள்.

“இன்னைக்கு எப்படியோ அவரு நினைச்சதெல்லாம் சொல்லவிடாம பண்ணிட்டோம். வெற்றிகரமா தப்புச்சாச்சு… நாளைக்கு? நாளகழிச்சு ? சரி இதே போல எதாவது பண்ணுவோம். அவரை நம்மகிட்ட பேசாம மட்டும் போய்டவே கூடாது. விழி எப்படியாச்சும் சமாளிச்சிடு டி” எனத் தனக்குத் தானே கூறிக்கொள்ள,

சட்டென்று கதிரவனுக்கு நினைவில், “வந்தவொடனே இவளை ஒரு வார்த்த பேச விடக்கூடாதுனு நினைச்சோமே. இப்ப இவ நம்மள கடைசிவரைக்கும் பேசவே விடலையே?” எனத் தோன்ற, “இவளை சும்மா விடக் கூடாது” என முணுமுணுத்தபடி திரும்ப விழியோ அசதியிலும் அலுப்பிலும் அவளையே அறியாமல் உறங்கிவிட்டிருந்தாள்.

உறங்குபவளை பார்த்தவன், “ச்சா…எங்க இருந்து வந்து தொலஞ்சாளோ” என நினைத்தபடி சென்று படுத்தவன் விடியற் காலையிலையே கண் அயர்ந்தான்.

மறுநாள் காலையில் கண்விழித்த போது பொழுது நன்றாக ஏறி இருந்தது. தோப்பு வீட்டில் தான் இருப்பதாக நினைத்தவன், கடைக்குச் சென்று தேநீர் குடிக்க வேண்டுமே எனச் சோர்வுடனும் சிவந்த கண்களுடனும் எழ அவன் முன் தேநீரின் நறுமணம் தவழ கோப்பையைக் கையில் பிடித்திருந்தவளை பார்த்ததும் அவனுக்குச் சட்டென்று மீண்டும் ஒவ்வென்றாக நினைவு வர, வெறுப்புடன் அவளைப் பார்த்தபடி எதுவும் பேச விரும்பாதவனாய் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.

சிறிது நேரம் கழித்து, “இவகிட்ட எதுக்கு இந்த அம்மா கொடுத்து விட்டாங்க. எவள பார்க்கவே பிடிக்கலீயோ அவளே காலங்காத்தால வந்து நிக்கிறா. இந்நேரம் போய் இருப்பாளா ? கண்டிப்பா. முஞ்சில அடிச்ச மாதிரி வந்த பின்னாடியும் யாரும் அங்க இருக்க மாட்டாங்க. இவளும் இருக்கமாட்டா. அம்மாகிட்ட இத பத்தி பேசணும். அவகிட்ட ஒருவார்த்தை கூட பேச கூடாது.” எனப் பலவாறாக யோசித்துப் பிறகு அவளை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் எனச் சிந்தித்து ஒருவாறு தற்சமயம் அவள் அறையில் இருக்கமாட்டாள் என்ற பெரும் நம்பிக்கையில் வெளியே வர, அவளோ மிகவும் சௌகரிகமாகவும் நிதானமாகவும் அவனுக்குக் கொண்டு வந்த தேநீரை சொட்டு சொட்டாக மிடரி குடித்துக்கொண்டிருந்தாள்.

அவளைச் சற்றும் அங்கே எதிர்ப்பார்க்காத கதிரவன் ஒரு நொடி ஸ்தம்பித்தான். இந்த முறை நூறில் ஒருபங்காகக் கோபம் குறைந்து அதற்குப் பதிலாகச் சலிப்பு தோன்றியது.

“இவ இன்னமும் போகலையா?” என்ற நினைப்பில் இருந்தது சலிப்பே. ஆனாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், “உனக்கு அறிவு இருக்கா ? வேணாம்னு சொன்னா போய்த் தொலையவேண்டிதானே ? இங்க உக்காந்து என்னத்த பண்ணுற. ” என எரிச்சலுடன் அதட்டினான். ஒரு வார்த்தைகூடப் பேச கூடாது என்று நினைத்தவன் ஒரு வாக்கியமே பேசி இருந்தான்.

“அறிவெல்லாம் எனக்கு நிறையவே இருக்கு. அதுனாலதான் இங்க உக்காந்துருக்கேன்ங்க. உங்க பாரிஜாதம் அத்தைக்கும் உங்கள போலவே என்னைப் பிடிக்கல. அதா என்கிட்ட தப்புக் கண்டுபிடிக்கப் பின்னாடி சுத்துறாங்க. நிம்மதியா ஒரு டீ கூடக் குடிக்க முடில. பசிக்கவேற செஞ்சிடுச்சு. அதுனால தான் புத்திசாலித்தனமா இந்த உக்காந்து டீ கொடுக்குறேன்” எனக் கூறிவிட்டு, மீண்டும் தேனீரை பருக, கதிரவனுக்கு இவளின் பதிலில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இருந்தாலும் அவளின் பதிலினால் கடுப்படைந்தவன் அவளுக்குப் பதில் கொடுத்தே தீர வேண்டுமென்று, “நல்லா நடிக்கிற. ஆனா அத நம்ப நான் ஆள் இல்ல. நீ பயப்படறவளா ? நேத்தே பார்த்தேனே. நீ பேசுன பேச்சையும் ஆடுன நாடகத்தையும்” என வெறுப்புடன் கூற,

தேனீர் கோப்பையைக் கீழே வைத்தவள், “நீங்க சொல்றது சரிதான். நான் பயப்படுற ஆளு இல்லதான். உங்க அத்த பேசுனா திருப்பிக் கொடுத்துடுவேன்தான். ஆனா நான் நேரடியா பேசுனா அந்த அம்மா என்கிட்ட பேசாம அத்தைகிட்ட அஃதாவது உங்க அம்மாகிட்ட அதோட வேலைய காட்டும். அதுக்காக மட்டும் தான் தள்ளி இருக்கேன்.

அப்புறம் என்ன சொன்னீங்க ? நேத்து நாடகம் ஆடினேனா ? அப்போ மாறன் சாந்தினி காதலிக்கிறாங்கனு சொன்னேனே அது கூட நாடகம்னு சொல்றீங்களா ?” என அவன் முன் நின்று, தன் பார்வையை அவன் கண்களுக்குகுள் ஊடுரவவிட்டு கேட்க, கதிரவன் ஒரு நிமிடம் ஒரே நிமிடம் அவனின் கோபத்தை மறந்தவனாக அவளையே பார்த்திருந்தான்.

அவன் அப்படிப் பார்த்திருந்ததற்குக் காரணம் அவளுடைய கண்களின் அழகு அல்ல. அஃது அழகாககவே இருந்த போதும் அது கதிரவனின் மனதில் பதியவில்லை. அவனுடைய கருத்தில் பதிந்தது அந்தக் கண்களில் இருந்த தையிரியம். அந்தக் கண்களில் இல்லாத கண்ணீர்.

அவனுடைய எண்ணமோ, “எல்லாப் பொண்ணுங்களும் அழுது தன்னை நிரூபிக்க மாட்டாங்களா ? அழுது ஆதரவு தேட மாட்டாங்களா ? சொன்ன பொய் மறைக்க அழமாட்டாங்களா ? பொண்டாட்டிய பிடிக்காத புருஷன் முன்னாடி அழாம இப்படித் தைரியமா பேசுற பொண்ணும் இருக்கா ?” என்பதாய் இருந்தது.

பிறகு அவனே அவனுடைய கேள்விக்குப் பதிலாக, ” என்னது பொண்டாட்டி புருஷன ? அப்படியா இப்ப நான் நினச்சேன்? கிடையாது! நான் சொன்ன வார்த்தைக்கு எந்த அர்த்தமும் இல்ல. அது சாதாரணமான வார்த்தைதான்.

அதெப்படி அர்த்தம் இருக்குறத மாறும் ? அதுவும் இந்தப் பொய் காரிக்கிட்ட.

நேத்து இருந்து நானும் பாக்குறேன். கொஞ்சம் கூட இவ அழவே இல்லையே. மனமேடைல அழுத்திருப்பாளோ. நான் கவனிக்கலியே…

ஊரே கூடி நிற்க பொய் சொல்லி அத்தனை பேரையும் சமாளிச்சு எம்மேலையே பழிய போட்டு என்னையே குற்றவாளியாக்கி கல்யாணம்ங்கிற பேர்ல எனக்கே தண்டனை கொடுக்குற அளவுக்குச் சாமர்த்தியம் இருக்கவளுக்கு இஃது என்ன பெரிய காரியமா ?” என நினைத்துக்கொண்டு, அவளின் கேள்வியை உதாசீனப்படுத்திவிட்டு, அவள் மீது வெறுப்பைக் கொட்டும் பார்வையொன்றை வீசிவிட்டு சென்றுவிட்டான்.

அவனின் கோபம், அறையின் கதவை பட்டென்று திறந்து படாரென்று அறைந்ததிலிருந்து நன்றாகவே விழிக்குப் புரிந்தது. அப்படிப் புரிந்தவுடன் மெல்ல அவளுடைய இதழ்கள் வளைந்து இலேசாகச் சிரிக்க, அந்த நேரம் சரியாகப் பதறியபடி பார்வதி உள்ளே வந்து கதவை தாழ் போட்டார்.

“என்ன அத்த ? என்ன ஆச்சு ?” என விழி கேள்வியாகக் கேட்க,

“இல்லமா! நாம பேசுறது வெளிய தெரிய கூடாதுன்னுதான். இந்த வீட்ல தூசு துப்பட்டைக்குக் கூடக் காது இருக்கு. சரி அத விடு, கதிரவன் எதுவும் சொல்லிட்டானாமா ? அடிக்க ஒன்னும் செஞ்சிடலியே. எனக்கு உன்ன நினச்சு இரா தூக்கமே இல்ல. விடியகாலையில கேட்கலாம்னு பார்த்த பாரிஜாதம் உன்னையே நோட்டம் விடுது. பாத்து சூதானம பொழச்சுக்க ஆத்தா.

எனக்கு நெஞ்சுகிடந்து பக்கு பக்குனு அடிச்சிக்குது.

இப்ப வேற கதிரவ கோபமா போறது போலத் தெரியுதே. எதுவும் சண்டை போட்டானா ?” எனப் பரிதவிப்புடன் வினவ,

“அவரு சண்டை போடல அத்தை. நான்தான் அவரைச் சண்டை போடா வச்சேன். அவரு நேத்து என்கிட்ட பேசவே கூடாதுனும் நான் பண்ணின வேலைக்கு என்ன பார்த்து நாலு வார்த்த நறுக்குன்னு கேட்டுபுட்டு அதுக்குப் பொறவு என்னோட மூஞ்சிலையே முழிக்கக் கூடாதுனு முடிவு பண்ணி வச்சிருந்துருப்பாருனு நினைக்கிறேன்.

எனக்குத் தான் உங்க மகன பத்தி தெரியுமே. அப்படி மட்டும் நடந்துட்டா, அவ்ளோதான் என்னோட நிலமை. அவரு சண்டை கட்டுனா பரவா இல்ல. ஆனா என்கூடப் பேசாமலே போய்ட்டா, யாருக்கு நட்டம் ? பொறவு எப்படி எம்மேல நாட்டம் வரும்.

அதுக்குதான் அவருகிட்ட ஏட்டிக்கி போட்டியா பேசி பேசி அவரையும் பேச வச்சேன்” எனக் கூறியவள், ஒரு நிமிடம் நிதானித்து மெல்ல உள்ளே சென்ற குரலில், “அவரு சந்தோசமா இருக்கணும் அத்த. ஆயுசுக்கும் அவருக்கு அன்ப கொடுக்கணும்னு ஆசைப்பட்ட நானே அவருக்குச் சொல்ல முடியாத கஷ்ட்டத்தைக் கொடுத்துட்டே. உங்ககிட்டையும் அவரு சரியா பேசல நேத்துல இருந்து.

இப்படி அமைதியா இருந்தா அவரு தனியா உணர்ந்துருவாரு. அதுனாலதான் அவரைக் கோபப்படுத்துறது போலவாச்சும் பேசி இப்போதைக்கு அவரோட தனிமையைத் தொரத்தணும்னு முடிவு பண்ணிட்டேன். என்னதான் நான் அன்பா பேசினாலும் இப்ப அது அவருக்குத் தப்பா தான் தெரியும்.

அதா அன்பா இல்லாட்டி பரவா இல்ல, கொஞ்சம் வம்பா பேசலாம்னு முடிவு பண்ணிட்டேன்” எனக் கூறி முடிக்கும் பொழுது விழியின் துடுக்குத் தனம் தலை தூக்கி இருந்தது.

மருமகளின் தைரியமும் அவள் தன் மகன் மீது கொண்ட காதலையும் பார்க்கும் போது பார்வதிக்கு வாழ்க்கை மீது புதிதாக ஒரு பிடிப்பு ஏற்பட்டது.

மீண்டும் அவருடைய மனம், “எல்லாம் சரியாகிடும். எம்மருமக சரி பண்ணிடுவா” என எண்ணியது.

“சரி அத்த! வாங்க வெளில போலாம்” எனக் கூற, அவரோ தயங்கி, “இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டுமா” என்றார். ஏன் என்று கேள்வியாக விழி பார்க்க, அவளின் பார்வையின் அர்த்தம் புரிந்து சிறு தயக்கத்துடனே, “அது வந்து… உங்க மாமனாரு ஏதோ முக்கியச் சோலியா பொறப்படுறாரு. எதுத்தாப்புல நான் வந்து எதாவது கெட்டுக்கிட்டு போச்சுன்னா அடுத்து ஒரு வாரத்துக்கு ரொம்ப மோசமா பேசுவாங்கமா. அதுவும் ரொம்ப வருஷம் கழிச்சு கதிரவன் வந்திருக்கான். அவன் காதுல கேட்டுட்டா அவன் வேற இப்ப என்ன செய்வான்னு சொல்ல முடியாது. சின்னத்துலையே அப்படி ரோஷப்படுவான். இப்ப கேட்கவே வேணாம். எதுக்கு என்னால ஒரு பிரச்சனை. நான் எப்பவும் போல ஒதுங்கியே இருக்கேன். அந்தப் பாரிஜாதம் பார்த்துப்பா” எனப் பயமும் விரக்தியும் கலந்து கூற, விழி யோசிக்கலானாள்.

அதே சமயம் விழியின் அறை கதவு படபடவென்று தட்டப்பட்டது.

Advertisement