Advertisement

கனல்விழியின் கதிரவன் -21

அக்க்ஷதை பூமழை மணமக்களின் மீது பொழிய கைகளில் திருமாங்கல்யத்துடன் கதிரவன் சாந்தினியின் முகம் பார்த்திருக்க, சற்று முன்பு பார்வதி பூஜையில் வைத்திருந்த பரம்பரை தாலியை தன் நெஞ்சில் சுமந்தபடி வந்து நின்றாள் விழி. மாப்பிளை தாலி கட்டுவதைப் பார்க்க ஆவலாக இருந்த மக்கள், மணமக்களுக்கு இடையே வந்து நின்ற விழியைக் குழப்பத்துடன் பார்க்க, தாலிக்கொடியுடன் நின்றிந்த தன் மகளைக் கண்ட கந்தசாமியோ உறைந்து போனார். அதே நிலை தான் முருகேசன் மல்லி மற்றும் முல்லைக்கும்.

யாருடைய எண்ணங்கள் எப்படிச் செல்கிறது என்ற எந்தக் கவலையும் இல்லாமல், யாருடைய பார்வையையும் சட்டை செய்யாமல், நிமிர்ந்த தலையுடன் நேர்கொண்ட பார்வையுடன் நின்றிருந்தவள் சாந்தினியை நோக்கி, “இஃது என்னோட இடம்” எனக் கூறியதோடு பேசிக்கொண்டிருக்கும் அதே நொடியிலையே கதிரவனின் கைகளில் இருந்த தாலியையும் பற்றியிருந்தாள்.

மணவறையில் பிடித்தமில்லாமல் அமர்ந்திருந்த கதிரவனுக்கு முதலில் விழி இப்படித் தாலியுடன் வந்து நின்றதே உரைக்கவில்லை. பிறகே சாந்தினியிடம் பேசவும் என்னவோ ஏதோவென்று அவன் யோசிக்க அந்தக் கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கைகளிலிருந்து தாலியை பற்றியிருக்கக் கதிரவனுக்கு இப்போது சுறுசுறுவென்று கோபம் வர, அவனுக்கு ஈடான அதே கோபம் அங்கிருந்த அனைவர்க்கும் வந்தது. அதிலும் குறிப்பாக மச்சக்காளை பாரிஜாதத்திற்கு.

“ஏய்! அறிவிருக்கா ? நீ பாட்டுக்க வந்து கட்டப்போற தாலிய பிடிங்குற? யாருமா நீ ?” எனப் பாரிஜாதம் வர,

“ஏப்பா இந்தப் பொண்ணு யாரு. அது ஏன் தாலிய பிடிங்குது?” எனக் கூட்டத்தில் ஒருவர் சலசலக்க,

“எப்பா இது முருகேசன் தங்கச்சி மவ, பக்கத்து ஊரு” எனக் கூற, “அந்தப் பொண்ணுக்கு என்னவாம்?” என வேறொருவர் கேட்க, அவளை அதட்டவேண்டிய இடத்திலிருந்த கந்தசாமி முருகேஷனோ உறைந்துவிட்டிருந்தனர். விழியின் கழுத்தில் இருந்த மாங்கல்யம் அவர்களுக்கு அளவுகடந்த அதிர்ச்சியைத் தந்திருந்தது.

அதற்குள்ளாக மணமேடையில் இருந்து எழுந்தவன், “ஏ என்ன பண்ணிட்டு இருக்க ?” என நறநறவென்று கடித்த பற்களின் நடுவே வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, அது அச்சு பிறழாது அனைவரின் பார்வையிலும் விழுந்தது.

“அட இவுங்க இரெண்டு பேருக்கும் முன்னாடியே பழக்கம் இருக்கும் போலவே” என ஆளாளிற்குப் பேச்சை தொடங்க, மல்லி சென்று தேவிக்கும் பார்த்திபனுக்கு நடந்துகொண்டிருக்கும் நாடகத்தைக் கைபேசியில் தகவல் சொல்லி உடனே கிளம்பி வரும்படியாகக் கூற, முல்லை அப்படியே நின்றுவிட்டிருந்தாள்.

ஊராரின் யூகங்கள் வளர்ந்துகொண்டே செல்ல, கந்தசாமி கோபமாக, “கனல் விழி..நீ என்ன பண்ணிட்டு இருக்க?” என்றபடி இதுவரை அதட்டியே இராந்தவர் கோபம் தெறிக்க முன்வர, விழியோ, “அப்பா… ப்ளீஸ் இது என்னோட வாழ்க்கை. நான் இப்ப பேசவேண்டிய நேரம். பேசுக்கிறேன். அதுக்கப்புறம் நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கிறேன்” எனக் கைகூம்பி கேட்க, அவள் கேட்டதென்னவோ மன்றாடிதான். ஆனால் காலமும் அவள் உபயோகித்த வார்த்தையும் என் வாழ்க்கையில் தலையிடாதீர்கள் என்ற பொருளை கந்தசாமிக்கு தந்துவிட மனம் உடைந்து போனார்.

வாழ்க்கையில் இதுவரை தான் கண்டிராத துயரத்தை முதன் முதலாக அனுபவித்தார்.

“ஏமா? தாலிய பிடிங்கிட்டு எதுக்கு என்னனு சொல்லாம இப்படி நின்னா என்ன அர்த்தம் ? உங்க அப்பாவையும் பேசவிடமாட்டிங்கிற. கல்யாண பொண்ணோட அம்மா கேட்ட கேள்விக்கும் பதில் இல்ல. எங்களைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுதாம் ?” எனக் கூட்டத்தில் ஒருவர் கேட்க,

“எல்லாரும் மன்னிச்சிடுங்க. இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது. அத தடுக்கத்தான் தாலிய பறிச்சேன்” என நிதானமாகவே கூறினாள்.

“நீ பாட்டுக்க வந்து திடுதிப்புனு சொன்னா என்ன அர்த்தம்? பொண்ணுவீடும் மாப்பிளை வீடும் சம்மதிச்சுக் கல்யாணம் நடக்குது. நடுவுல நாட்டாமை பண்ண நீ யாருமா?” என இன்னொருவர் கேட்க,

“பொண்ணு வீடும் மாப்பிள்ளை வீடும் சம்மதிச்சா மட்டும் போதாதுங்க. பொண்ணும் மாப்பிள்ளையும் சம்மதிக்கணும். இதுல இந்த இரெண்டு பேருக்குமே சம்மதம் இல்ல” எனக் கொஞ்சம் கூடப் பயம் இல்லாமல் துணிந்துப் பேசினாள் விழி.

மேலும் அவளே தொடர்ந்து, “இந்தக் கல்யாணத்துல விருப்பமா இல்லையானு நீங்களே இவுங்கள கேட்டு பாருங்க..” எனக் கூற,

“அத சொல்ல நீ யாரு? எங்க புள்ளைங்ககிட்ட நாங்க கேட்டு பண்ணுவோம், கேட்காம பண்ணுவோம். இதுல தலையிட உனக்கு யாரு உரிமை கொடுத்தது ?” எனப் பாரிஜாதம் குரல் உயர்த்த, சாந்தினிக்கு இதில் விருப்பம் இல்லையோ என்ற எண்ணம் தோன்றவே மறைந்திருந்த மாறன் வெளியே வந்து மணமேடை முன் நிற்க, சாந்தினி மாறனை பார்த்துவிட்டாள்.

இத்தனை நேரமும் ஒரு வித விரக்தியும், அதன் பின் குழப்பமும் சூழ்ந்திருக்க, கடும் கோடையில் கண்ட சாரலாய், மாறனின் முகம் கண்டவுடன் மலர்ந்தாள். அந்த ஒரு நொடி நேற்றைய இரவு தன் தாய் மாறனை பற்றிக் கூறிய அனைத்தும் மறந்தவளாய் காதல் மட்டுமே நிறைந்தவளாய் நின்றிருந்தாள்.

“வந்துடீங்களா?” என்ற வார்த்தை ஓசையின்றி உதடு மட்டும் அசைந்து வெளிவர, சாந்தினியின் பார்வையின் அர்த்தத்தை எப்போதும் அவள் சொல்லாமலே புரிந்துகொள்ளும் மாறன், அவள் கண்களில் வழிந்த நீரையும், ஓசையின்றி உதிர்ந்த வார்த்தையையும் அவள் இதழ் அசைவினில் உணர்ந்துகொண்டான்.

அவனுக்கு ஒருகணம் ஒன்றுமே புரியவில்லை.

“அப்போ அத்த சொன்னது? அப்படி ஏதும் இல்லையா ? சாந்தினிய பார்த்தா பிடிச்சுக் கல்யாணம் பண்றது போல இல்லையே. கண்டிப்பா இவ என்னோட சாந்தினிதான்” என எண்ணத்தை ஓட்ட, அடுத்து பாரிஜாதத்தின் வார்த்தைகள் முழுமையாக மாறனின் சந்தேகத்தைப் போக்கியது.

“அட என்ன ஊருகாரங்க எல்லாம் இவளை பேசவிட்டு வேடிக்கப் பாக்குறாங்கன்னா, அண்ணா நீயும் என்ன மசமசன்னு நிக்கிற? சாந்தினிதான உன்னோட வீட்டுக்கு மருமகளா வரணும்னு இருக்குது. அதுதான் உனக்கு அந்தஸ்த்தை தரும்.

அதோட கதிர் மாப்பிள்ளைக்கு இன்னைக்குக் கல்யாணம் நடந்து ஆகணும். இரண்டு பேரும் இனி நம்ம வீட்லதான் இருக்கணும். எல்லாமே உனக்குத் தெரியும்தானே? தெருஞ்சுமா நீ சும்மா நிக்கிற. நீ வாய் தொறந்து பேசு அண்ணே. நீ பேசுனா இங்க கண்டதுங்களும் வந்து வாலாட்டாதுங்கல” எனப் படபடவென்று பட்டாசாகப் பொறிய, மாறனுக்கு இப்போது பாரிஜாதத்தின் வார்த்தைகள் மீதே சந்தேகம்.

“அத்த என்ட பேசுனத்துக்கும் இப்ப பேசுறதுக்குச் சம்மதமே இல்லாத போல இருக்கே. இந்தக் கல்யாணத்துல இவுங்களுக்குச் சம்மதம் இல்லனு சொன்னாங்க. ஆனா இப்போ இந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்க இவ்ளோ ஆர்வம் காட்டுறாங்க. சொல்ல போனா நடந்தே தீரணும்னு இவுங்கதான் மெனக்கெடுறாங்க. ஆனா கதிரவன் தாலி கட்ட எந்த ஆர்வமும் காட்டலியே. இந்தப் பொண்ணு யாரு ? எதுக்கு இந்தக் கல்யாணத்த நிறுத்த போராடுது ?

எது எப்படியோ என்னோட சாந்தினியோட பார்வையே தெரிஞ்சிடுச்சு. அவளுக்குக் கதிர் அண்ணனோட கல்யாணத்துல விருப்பமில்லை. நிச்சயம் இதுக்குப் பின்னாடி என்னவோ இருக்கு… இல்ல இத விடக் கூடாது. எதாவது பண்ணனும். எனக்கு என்னோட சாந்தினி வேணும்” என மனதிற்குள் முடிவு செய்ய, இங்கு லிங்கமோ,

“இந்தம்மா…பொண்ணு, எதுக்கு இங்க வந்து கல்யாணத்த நிறுத்துற? போறவறவங்களாம் வந்து நின்ன பேச இங்கன என்ன பட்டிமன்றமா நடக்குது? போமா..மொத வெளில போ. நல்ல காரியம் நடக்குறப்ப வந்து நின்னுக்கிட்டு” என லிங்கம் அதட்ட,

“இதோ பாருங்க…நான் எதையும் கெடுக்க வரல. யாரோட வாழ்க்கையும் கெட்டு போகாம இருக்கத்தான் வந்தே. இப்ப இம்புட்டுத் தூரம் கூட்டத்துல நின்னு பேசுறேனா, இத்தனை பேர சமாளிக்கணும்னு எனக்குத் தெரியாதா ? இல்ல உண்மையில்லாத விஷயத்தைப் பேசுனா நான் தான் அசிங்கப்பட்டுப் போகணும்னு எனக்குத் தெரியாதா…

எல்லாமே தெருஞ்சுதான் பேசுறே. அப்படினா என்னோட பக்கட்டு உண்மை இருக்குனு தானே அர்த்தம். நீங்க பஞ்சாயத்து தலைவருத்தனே. நீங்களே நியாயத்தைக் கேளுங்க… “

“என்னத்தமா கேட்க சொல்லுற? நீ சொல்லுறத கேட்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்ல. ஏப்பா முருகேஷா, உங்க வீட்டு புள்ளைய கண்டிச்சு வைக்க மாட்டீங்களா ?” என மச்சக்காளை எகிற, இம்முறை மாறன் முதல் முறையாக வாய்த் திறந்தான்.

ஏனெனில் மச்சக்காளையின் பதற்றத்தில் மாறனின் சந்தேகம் ஊர்ஜிதம் ஆனது.

“மாமா…அவுங்க எதோ சொல்லவராங்க. சொல்ல விடுங்களேன். ஏன் ஆளாளுக்குப் பேசுறீங்க. உண்மை இல்லாததைச் சொல்லவரலைனு சொல்லிட்டாங்க தானே.

அண்ணனும் சாந்தினியுமே சும்மா இருக்காங்க” என மாறன் அவன் பங்கிற்கு எடுத்து கூற, கதிரவனோ மனதினில், “ஆமா! சும்மாதான் இருக்கேன். ஆனா இந்தப் பொய்க்காரி போடற நாடகத்தைப் பாக்குறதுக்காக இல்ல. இவனாலயாச்சும் இந்தக் கல்யாணம் நின்னா சரிதான். அம்மாக்கிட்ட வாக்குக் கொடுத்துட்டேன். சம்மதம்னு. இப்ப நானே பின்வாங்கவும் முடியாது. அந்த ஒருகாரணத்துக்காகத்தான் அமைதியா இருக்கேன். அப்படி இவகிட்ட என்னதான் உண்மை இருக்கு ?” என மனதிற்குள் நினைத்தான்.

“உண்மைய நான் சொல்லுறே” எனக் கதிரவன் மனதோடு கேட்ட கேள்விக்கு விழி கூட்டத்தின் நடுவே கூறினாள்.

அவளே தொடர்ந்து, “எல்லாரும் நல்லா கேட்டுங்கோ. இந்த அவசர கல்யாணத்துல நாலு பேருக்குச் சம்மந்தம் இல்ல. அது யாரு யாருன்னா சாந்தினி மாறன் கதிரவன் அப்புறம் நான். என்னோட பேரு எதுக்கு இதுல வருதுன்னு இப்ப யாரும் கேட்கவேண்டாம்.

நான் கண்டிப்பா அத சொல்லுறேன். இப்ப அவசியமான விஷயம் என்னென்னா , சாந்தினிக்கும் மாறனுக்கும் ஏன் உடன்பாடு இல்லனு நீங்களே கேளுங்க. உங்களுக்கு உண்மை தெரிஞ்சிடும்” எனக் கூறியவள், லிங்கத்தை நேருக்கு நேராகப் பார்த்து, “அய்யா நீங்களே விசாரிங்க. உங்க புள்ள உங்ககிட்ட போய்ச் சொல்லமாட்டாருனு நம்பிக்கை இருந்தா உண்மைய கேளுங்க” எனச் சட்டென்று கூறிவிட, அவளின் துணிச்சல் அதுவும் லிங்கத்திடம் நேருக்கு நேராக நின்று பேசும் துணிச்சல் அனைவரையும் வாயடைக்க வைத்தது. ஏன் பாரிஜாதமே ஒரு கணம் ஆடிவிட்டார்.

“மாறா, அந்தப் புள்ள என்ன சொல்லிக்கிட்டு இருக்கு? உனக்கு இந்தக் கண்ணாலத்துல சம்மதம் இல்லையா ? ஏன் ? அதோட கண்ணாலத்துக்கு வரமுடியாது வேல இருக்குதுனு நீ சொன்னதா உங்க அத்த சொன்னா. நீ என்னடானா திடுதிப்புனு வந்து நிக்கிற. அதுவும் இம்புட்டு நேரம் என்னோட கண்ணுல படாம சரியா இந்தப் புள்ள பேசுறப்ப வந்து நிக்கிற ? உன்ன எதுக்கு இந்தப் பொண்ணு வம்புல இழுக்குது?” எனச் சரமாரியாகக் கேள்விகளை அடுக்க, மாறன் புரிந்துகொண்டது ஒன்றே ஒன்று. அது பாரிஜாதம் தன்னிடம் கூறிய கதையைப் போலவே லிங்கத்திடம் கூறியிருக்கிறார் என்று. தான் தான் திருமணத்திற்கு வரவில்லை என்று கூறியதாக லிங்கத்திடம் பாரிஜாதம் கூறியதை அறிந்த மாறன், சுதாரித்துக்கொண்டான்.

“இனியும் நான் பேசாம இருக்கக் கூடாதுங்க அப்பா. என்ன சுத்தி என்ன நடுங்குது ஏது நடக்குதுன்னு எதுவும் எனக்குத் தெரியல. ஆளாளுக்கு ஒன்னு ஒன்னு சொல்லுறாங்க. ஆனா கல்யாணம் நடக்குற விஷயமே எனக்கு நேத்து இராத்திரி என்னோட பிரின்ட் சொல்லித்தான் தெரியும்.

அத நிறுத்தத்தான் அடிச்சு பிடிச்சு ஓடியந்தே.” என ஒருவாறு உண்மையை உரைக்க, அதைக் கேட்ட சாந்தினியின் கண்களில் புது ஒளி பிறந்தது. இதற்கிடையில் பாரிஜாதம் ஏதோ கூற வர, விழி அவரைத் தடுத்து, “அட இருங்க சின்னமா… அய்யாவும் அவரோட மகனும் பேசிக்கிறாங்க. நீங்க எதுக்குக் குறுக்க ? செத்த இருங்க” என அடக்க, அவர்களைக் கண்டுகொள்ளாமல் லிங்கமோ, “என்ன சொல்லுறடா ? எதுக்குக் கண்ணாலத்தை நிறுத்த நினைச்ச ?” என யோசனையாகக் கேட்க, “அது வந்து…சாந்தினியும் நானும் ஒருத்தர் ஒருத்தர விரும்புறோம் அப்பா” எனத் தயங்கி தயங்கி ஒருவாறு கூறிவிட, அங்கே பெருத்த அமைதி.

லிங்கம் பார்வதி பாரிஜாதம் மச்சக்காளை என அனைவரும் ஸ்தம்பித்திருந்தனர். பாரிஜாதத்திற்கும் மச்சக்காளைக்கும் தங்களின் திட்டத்தின் ஆணி வேர் ஆட்டம் காணவே அவர்களும் ஆடிப்போயினர்.

இவர்களின் நிலை இப்படியென்றால் கதிரவனோ அப்படியே கற்பாறையைப் போல இறுகி போனான்.

“தம்பி ஆசைப்படற பொண்ணு கழுத்துல போய்த் தாலி கட்ட போனேனா? சா…” எனத் தன்னைத் தானே திட்டி கொண்டான். “என்ன காரிய செய்ய இருந்த  ” என எண்ணியபடி மாறனின் முகத்தை ஏறெடுத்து பார்த்தவன், “அப்படியா ? உண்மையைத்தான் சொல்லுறியா ?” என்ற கேள்வியைத் தாங்கிய பார்வையைப் பார்க்க, மாறனும் கதிரவனின் பார்வை புரிந்து தலை அசைத்தான்.

“ஏமா சாந்தினி இந்த மாறன் சொல்லுறதெல்லாம் உண்மையா?” என லிங்கம் அதிர்ச்சி விலகாமல் சாந்தினியிடம் வினவ, அவளும் மெல்ல பயந்தபடியே ஆம் என்பதாய் தலை மட்டும் அசைக்க, துணிச்சலாகக் கூறியிருந்தாலும் மாறனுக்கு உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது உண்மையே. சாந்தினி ஆம் என்று கூறிய பின்பே அவனுக்கு உயிர் வந்திருந்தது.

“அப்போ எதுக்கு அன்னைக்கு உங்க அத்த போன்ல கேட்டப்ப கதிரவனைக் கட்டிக்க ஆசைப்படறதா சொன்ன?” என லிங்கம் உறும, அவளோ திடுக்கிட்டு ஓரடி பின்நகர்ந்து இலேசான தடுமாற்றத்துடன், “மாமா, நான் கதிர் மாமா பேர சொல்லவே இல்ல. நீங்களும் சொல்லவே இல்ல. நீங்களும் அத்தையும் சேர்ந்து கேட்கவும் நான் மாறன் மாமாவை சொல்லுறீங்கன்னு தான் நினச்சு பேசுனேன். ஏனா கதிர் மாமா விஷயத்துல நீங்கதான் தலையிட மாடீங்களே. நேத்து இராத்திரிதான் கதிர் மாமாதான் மாப்பிள்ளைனே தெருஞ்சுச்சு.” என அழுகையுடன் கூற,

“இத முன்னாடியே சொல்லி தொலைக்க வேண்டிதானே… இப்ப என்னத்துக்கு அழகுற?” என லிங்கம் கடிய, பாரிஜாதத்தைச் சாந்தினி பார்க்க ,அவர் பெரிதாகத் தன் கண்களை உருட்டி மிரட்ட, சாந்தினியின் அழுகை தான் பெரிதானதே தவிர அதற்கு மேல் அவள் பேசவில்லை.

“இப்போ புரியுதா? நான் எதுக்கு இந்தக் கல்யாணத்த நிறுத்துனேனு. உண்மை இல்லாம நான் எந்த விஷயமும் பண்ணமாட்டேன்” என விழி கூற, கூட்டத்தில் இருந்தோர்கள் அனைவரும் விழியன் புறம் சாய்ந்தனர்.

ஆனால் ஆத்திரம் அடங்காத பாரிஜாதமோ, “இதப்பாரு டி… நாங்க எங்களோட பொண்ண மூத்தவனுக்கோ இளையவனுக்கோ யாருக்கோ கட்டுறோம்.

அது எங்க இஷ்டம். இதுல பேசவும் செய்யவும் நீ யாரு ? நீ எங்களுக்கு ஒட்டா உறவா ? ஒரு மண்ணும் கிடையாது. அப்படியிருக்க அழைக்காத விருந்தாளியா வந்து வம்பு பண்ணுறியே உனக்கு வெக்கமா இல்ல.

அண்ணே இதோ பாரு இவ பேச்செல்லாம் கேட்காத. எது எப்படியோ நாம பேசுனப்படி இணைக்குக் கதிரவனுக்குக் கண்ணாலம் நடந்தாதான் நல்லது. அதுக்கு உண்டானா ஏற்பாட பாரு.

இதோ பாரு டி… வந்தோமோ மூக்குப் புடிக்கத் தின்னோமானு இரு. நாட்டாமை பண்றதெல்லாம் உன்னோட வீட்லயோ இல்ல நீ போற வீட்லயோ வச்சுக்கோ. போற வர வீட்ல எல்லாம் வச்சிக்காத. அப்புறம் அசிங்கப்பட்டுப் போவ…” எனக் கூற, விழி அதற்குச் சற்றும் அசராமல் பதில் கொடுக்க, அந்தப் பதிலை கேட்ட பாரிஜாதம் தான் சிதறிப் போனார்.

பாரிஜாதம் மட்டும் அல்ல, அங்கிருந்த ஓவ்வொருவரும். குறிப்பாகக் கதிரவன். “இவ இப்ப என்ன சொன்னா ? நான் கேட்டது சரியா?” என மீண்டும் தனக்குள் அவள் கூறியதை ஓட்டிப்பார்க்க, அவள் கூறியது இது தான்.

“சின்னமா போற வர வீட்டுல நின்னு பேசல. என்னோட புகுந்த வீட்டுக்காகத்தான் பேசுறேன். என்ன புரியலையா ? நன் ஏதோ பொழுதுபோக்குக்காகப் பேசுறேன்னு நினைச்சுடீங்க போல. அப்படி நினச்சா உங்க தப்பு அது.

நான் பேசுனது என்னோட புருஷனுக்காக. என்னோட வீட்டுக்காரு யாருனு ரொம்ப யோசிக்காதீங்க. இவரு தான்…” எனக் கதிரவனைக் கை காட்டியிருக்க, முன்பு இருந்ததை விட இப்போது நிசப்தத்திலும் நிசப்த்தம்.

கந்தசாமி பேசும் சக்தியை முழுவதுமாக இழந்தவராக நின்றிருந்தார். முருகேசன் தான் “விழி, நீ என்ன பேசிகிட்டு இருக்க ? தெருஞ்சுதான் பேசுறியா ?” எனக் கேட்க, “மாமா… ப்ளீஸ்… என்ன மன்னிச்சிடுங்க. நான் சொல்றதெல்லாம் உண்மைதான். எல்லாமே தெருஞ்சுதான் பேசுறேன். ஆனா நான் யாருக்கு எந்தக் கெடுதலும் பண்ணல, நினைக்கல. அதுனாலதான் இவ்ளோ தையறியாமா நின்னு பேசுறேன்.

நான் முழுசா சொல்லி முடிச்சிடறேன். உங்களுக்கு மட்டுமில்ல. இங்க கூடியிருக்க மொத்த ஜனத்துக்கும்.

நானும் இவரும் ஒருத்தர ஒருத்தர் நேசிச்சோம். சரியான நேரத்துல வீட்ல பேசலாம்னு இருந்தோம். ஆனா சந்தர்ப்ப சூழ்நிலையிலா, இவரோட அம்மாக்கு அவுங்க பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் பண்ணி கொடுத்துட்டாரு. எனக்கும் துரோகம் பண்ண முடியாம அம்மாக்கு கொடுத்த சத்தியத்தயும் மீர முடியாம துடிச்சாரு.

எனக்கும் என்ன பண்ணனே தெரியல.

சாந்தினியை கல்யாணம் பண்றது இரெண்டு பேருக்குமே பண்ற துரோகம்னு நினைச்சாரு. மனசுக்குள்ளையே வெந்து நொந்து போய் இருந்தவருக்குச் சட்டுனு என்ன தோணிச்சுனு தெரியல. அம்மா பூஜைக்காகக் கொடுத்திருந்த அவுங்க பரம்பரை தாலிய என்னோட கழுத்துல கட்டிட்டாரு.

கட்டிட்டு ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னாரு. எந்தச் சூழ்நிலையிலும் காதலிக்கிறேன்னு ஆசைவார்த்தை காட்டி ஏமாத்துறது ரொம்பப் பெரிய துரோகம்னு. நான் ஒரு பொண்ண ஏமாத்துனா அது இன்னொரு பெண்ணான எங்க அம்மாவுக்குத் தான் அவமானம். அப்படியொரு அவமானத்தை எங்க அம்மாக்கு தர மாட்டேன். நானே கொடுத்த சத்தியத்தை மீறி இந்தக் கல்யாணத்த நிறுத்துறேன்னு சொன்னாரு.

அப்போதான் நான் சொன்னேன். நீங்க நிப்பாட்டுனாதான் சத்தியத்தை மீறின மாதிரி இருக்கும். இந்தக் கல்யாணத்த நான் நிப்பாட்டுறேன்னு சொன்னேன். இந்தக் கல்யாணத்த நிப்பாட்ட வர வழியிலதான் தெருஞ்சுகிட்டேன் மாறனும் சாந்தினியும் விரும்புறாங்கனு. விதிதான் சதி பண்ணி பிரிச்சுருக்குன்னு. அதுனால அவுங்கள சேர்த்து வைக்கணும்னு முடிவு பண்ணினே” எனப் பாரிஜாதத்தையும் மச்சக்காளையும் பார்த்துக் கொண்டே கூற, அவர்கள் இருவரும், “இவள என்ன செய்யலாம்… கொண்ணு புதைக்கலாமா இல்ல வெட்டி வீசலாமா” என்ற பாவனையில் கொலைவெறியில் பார்த்திருந்தனர்.

லிங்கமும் பார்வதியும் கதிரவனைப் பார்த்த பார்வை கதிரவனுக்கு ஒரு நிமிடம் உலகமே தலை கீழாகச் சுற்றுவதைப் போல இருந்தது.

விழி பேச பேச கதிரவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. “என்ன உளருறா ?” என்பதைப் போலப் பார்த்திருந்தவன், பின் அவளின் பேச்சின் போக்கும் வீரியும் அறிந்து மனதிற்குள், “இவளோட திட்டமென்ன ?” என யோசிக்க ஆரம்பித்தான்.

“ஏ… என்ன விட்டா உம்பாட்டுக்கப் பேசிக்கிட்டே போற? காதல் கண்றாவி தாலி அது இதுனு ஏதேதோ உளறுற?” எனக் கதிரவன் எகிற, கூட்டத்திலிருந்து வெளிவந்தார் ரோசா.

“என்ன கதிர் தம்பி? இந்தப் புள்ள சொல்றத இல்லனு சொல்ல வருவீங்க போல…அப்படி சொல்லவந்தா அத இதோட நிப்பாட்டிருங்க. இந்தப் புள்ள சொல்றது எல்லாமே உண்மைன்னு உங்க தம்பி விஷயத்துலையே வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சே.

அதோட நீயும் அந்தப் பொண்ணும் கடலுக்குள்ள போய்ச் சுத்துனது எனக்குத் தெரியாதுனா நினச்சா? அன்னைக்குதான் உங்கள கையும் களவுமா பிடிச்சேன்ல.

அன்னைக்கு ஆசிக்கு கண்ணாலத்துல உன்ட இருக்க மிட்டாய்க்காக எங்கவீட்டு பிள்ளைக்குப் பெரிய மிட்டாய் வாங்கிக் கொடுத்தப்பவே யோசிச்சேன். அது மட்டுமா நீயும் தான் அன்னைக்குக் கூட்டத்துல அவ்ளோ வரிஞ்சுக்கட்டுணியே. யாருக்கும் தெரியாம இருக்கலாம், ஆனா எனக்குத் தெரியுமே” எனச் சில வருடங்களுக்கு முன்னால் நடந்திருந்த பஞ்சாயத்தைப் பற்றியும் கூறினார். ஆனால் அது அந்தச் சமயத்தில் கதிரவனுக்குச் சரியாகப் புரியவில்லை.

“நான் இவளுக்காகப் பேசுனேனா? எப்போ?” என எரிச்சலுடன் நின்றான்.

மேற்கொண்டு அவனை யோசிக்க விடாமல் ரோசாவே தொடர்ந்து,

“உனக்காண்டியும் உன்னோட குடும்பத்துக்காகவும் பெத்த அப்பனையே எதுத்து பேசிட்டு ஒத்தையா நின்னு போராடுது. அதுகிட்ட என்னவோ குரலை உசத்துற?

இந்தப் பா இந்தச் சோலியெலாம் இங்கன வேணாம். உங்க காதலுக்குச் சாட்சி நான் இருக்கேன். ” என ரோசா தன் பங்கிற்கு வந்து பேச, அனைவரும் விழிக்கு ஆதரவாகினர்.

கூட்டத்தில் இருந்த மற்றொருவரோ, “ஏப்பா..உங்க அம்மாக்காக இந்தப் புள்ளைய காதலிக்கவே இல்லனு சொல்லாதப்பா. தாலியும் கட்டிப்புட்டு இப்படிச் சொல்லுறியே. ஆத்தா பார்வதி, நீ சொல்லுற பொண்ணைத்தான் கட்டிக்குவேன்னு உம்மவ சத்தியம் பண்ணிருக்கானாம்ல. பேசாம இவ தான் உன்னோட மூத்த மறுமவனு சொல்லிடு தாய்.

துடுக்கா பேசுனாலும் ரொம்பத் தைரியமான பொண்ணு தாய். பேசாம இரெண்டு பேருக்கும் இங்னவே கண்ணாலத்த முடிங்க” என மற்றொருவர் கூற,

வேறு ஒரு பெண்மணியோ, “ஆமா யாரு இல்லாம திருட்டு தாலி தானே கதிரவன் கட்டியிருக்கான். காலத்துக்கும் அதே சொல்லே நிலைச்சிடும். அதுனால மறுபடியும் கட்ட சொல்லுங்க. என்ன முருகேசன் அண்ணே. உனக் வீட்டு பொண்ணு தானே..நீங்க ஒன்னு சொல்ல மாட்டுறீங்க…” எனக் கூற,

முருகேஷனோ ஏதும் சொல்லமுடியாதவராகக் கந்தசாமியை பார்க்க, அவரோ, “எனக்குப் பொண்ணுன்னு ஒருத்தி இருந்தா… அவ செத்துட்டா….” எனக் கூறியபடி விழியை நேருக்கு நேராகப் பார்க்க, இருவரது கண்களும் கலங்கி இருந்தது.

“உனக்குத் தைரியத்தை மட்டும் தானே சொல்லி கொடுத்தே. தைரியமா பொய் சொல்ல சொல்லிக்கொடுக்கலியே… ” எனக் கந்தசாமியின் மனம் ஊமையாகக் கதற,

“அப்பா… நான் சொன்னது பொய் தான். ஆனா அது யாரையும் கெடுக்க இல்ல. இந்த ஒரு பொய் பலபேரோட நிம்மதிய காப்பாத்தும். அதுக்காகத்தான் பா சொன்னேன். முக்கியமா ஒரு உயிரை காப்பாத்தும்பா… ” வார்த்தையில்லாமல் மனதோடு பதில் சொல்ல,

“யாரோட உயிரை காப்பாத்துணியோ தெரியாது. ஆனா இனி உன்னோட அப்பா ஒரு நட பொணம்தான். அத மறந்திடாதா…” என்ற விரக்தி வார்த்தைகளை அவரின் கண்கள் பிரதிபலிக்க,

“அப்பா…ப்ளீஸ் என்ன மன்னிசிடுங்க” என இவள் கண்கள் கெஞ்ச,

“செத்து போனவங்கனாலா மன்னிக்க முடியாதுமா” என்ற கதறல் வார்த்தைகள் கந்தசாமியின் இறுகிய தோற்றம் விழிக்கு கூறியது.

தந்தை மகள் இருவரும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆனால் இருவரும் பேசிக்கொண்டனர். அதுதான் அவர்களின் இறுதியான பேச்சா என்பதை விதிதான் நிர்ணையிக்க வேண்டும்.

துண்டை உதறி தோளில் போட்டபடி அங்கிருந்து விலகப் போனவரை குரலொன்று தடுத்து நிறுத்தியது.

Advertisement