Advertisement

கல்யாணவீட்டின் கலாட்டாக்கள் -8
“நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு? எதுக்கு இந்தக் கொலவெறி” எனப் பாண்டி கேட்க,
சக்கரையும் அதையே ஆமோதித்தான்.
“இப்ப ரெண்டுபேரும் ஏன் பேய உளவு பாக்க சொன்னமாரி பதறுறீங்க?” எனக் கேட்க,
“பேய கூடப் பாத்துடலம்மா. ஆனா இந்தச் சாமியார பாக்குறது ரொம்பக் கஷ்டம். அதுவும் அவன் கூட இருந்துகிட்டே அவன் போறவர இடத்தெல்லாம் உன்ட சொல்ல சொல்லுறியே… இதுக்குப் பதிலா நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போகச் சொல்லு நாங்க தைரியமா போயிட்டு வரோம்” எனப் பாண்டி கூற,
“அப்படியா! சரி இன்னைக்கு நைட் ரெண்டு பேரும் போயிட்டுவாங்க” எனச் சளைக்காமல் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு சொல்ல,
“ஏம்மா நீ தங்கச்சியா? இராட்சசியா ?” என பாண்டி கூற, சக்கரையோ, “ஒரு பேச்சுக்கு சொன்னா நிசமாலுமே போகச் சொல்லுற. அவனை விட நாங்க உன்டதா உஷாரா இருக்கணும் போல” எனக் கூற, கனல்விழி சிரித்துவிட்டாள்.
“அண்ணே இதோ பாருங்க! விளையாடாதீங்க. நான் இன்னும் ஒருவாரந்தா இங்க இருக்க முடியும். அப்புற நான் ஹாஸ்டெல்க்கு போய்டுவேன். அதுக்குள்ள அவரைப் புரிஞ்சுக்கணும். முடிஞ்சா ரெண்டு வார்த்தை பேசணும். உதவி பண்ணமுடியுமா ? முடியாதா?” என முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு கேட்க ,
“சரி சொல்லுறோம். ஒருவேளை நீ சிக்கிட்டேனு வச்சுக்கோ சிட்டா பறந்திடனு. தயவு பண்ணி எங்களைக் கோர்த்துவிட்டராத தாயே” என பாண்டி உத்தரவாதம் கேட்க , “கனல்விழியை நம்பினோர் கைவிடப்படார்” என ஆசி போலக் கைகளை உசத்தி கூற, அதற்குள் அவர்களின் வீடும் வந்திருக்க, அவசரமாகத் தொலைபேசி எண்களைப் பரிமாறியபடி, முல்லையின் அன்னையிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு சக்கரையும் பாண்டியும் சென்றனர்.
அதன் பின் வந்த நாட்களில் ஆங்காங்கே கதிரவனைக் கண்களுக்குள் நிரப்பிக்கொண்டாள் விழி. ஆனால் அருகில் சென்று பேசவில்லை. தைரியம் என்பது வேறு நாணம் என்பது வேறு. அவனைப் பார்த்த நொடி படபடப்பாக உணர்ந்தாள்.
பட்டாம்பூச்சியாய் பறந்தாள்; பார்க்கின்ற காட்சிகளை மறந்தாள்; கண்ணில் கதிரவனின் தோற்றம் மட்டுமே! நெஞ்சில் அவனின் மீதான காதல் மட்டுமே;
***
நீ இருக்கும் இடத்திலே
நிலழாகவும்
நிஜமாகவும்
நான் இருப்பேன்
நீ என்றென்றும் என் வயிற்றில் நிறைந்திருப்பாய்
– எனக் காற்றில் கலந்து வந்த பிரியாணியின் மணத்தை நுகர்ந்தபடி மனதில் இந்த வரிகளைக் கூறிக்கொண்டவன் சோமாஸ் பாண்டிய!
“ஆசிப் வெட்ஸ் சாரா” என்ற எழுத்துக்கள் பதித்த பேனர் வரவேற்க, பிரியாணியின் மனமும் கோழிப்பிரட்டல் கொதிக்கும் வாடையும் பாண்டியின் மனதை கயிறில்லாமல் கட்டி இழுத்துக்கொண்டிருந்தது. அவனுடைய கால்கள் மண்டபத்திற்குள் நுழைய பரபரவென்று துடித்துக்கொண்டிருந்தது.
நல்லி எலும்பையும் கோழி கறியையும் மெல்ல வேண்டிய பாண்டியின் வாய் கதிரவனையும் சக்கரையையும் மெண்டுக்கொண்டிருந்தது.
“படுபாவிங்க… தாலிகட்டி முடிக்கபோறேங்க போலவே. மொத பந்தில சாப்பிடறவங்கள பார்த்த அடுத்தப் பந்திக்கு எலும்பு கூடத் தேறாது நினைக்கிறேன். டேய் மாப்பிள்ளைங்களா வாங்கடா… இன்னைக்குதா இவனுங்களுக்கு எல்லா வேலையும் வரும். பாய் வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா, வந்து தொலைங்கடா” எனத் திட்டிக்கொண்டிருந்தான்.
அவனை மேலும் கடுப்பேற்றவென்று கனல்விழி வந்து சேர்ந்தாள்.
“அண்ணே! அவரு வந்துட்டாரா ?” எனக் கேட்க, பாண்டி கொதிநிலைக்கே சென்றுவிட்டிருந்தான்.
“கொஞ்சமாவது பிரியாணியோட மௌசு தெரியுதா? இவைங்க கூடலாம் கூட்டு வச்சிருக்க என்ன சொல்லணும்” என வாய்விட்டே முனங்கியபடி கூற, எதிரே கதிரவன் வந்துக்கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்துவிட்டவள், பாண்டியின் வார்த்தைகளைக் காதில் வாங்காமல் சற்று தள்ளி நின்று மறைந்துகொண்டாள்.
அவர்களின் மனப்பொருத்தமாகவோ தற்செயலாகவோ இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருக்க இறக்கை இல்லாமல் மனவானில் சிறகுவிரித்தாள். கரும்பச்சை நிற சட்டையும் வெள்ளை வேட்டியும் கதிரவன் கட்டியிருக்க, இவளோ வெண்பட்டுச் சின்னச் சருகையிட்ட கரும்பச்சை பார்டர் போட்ட பாவாடை தாவணியில் வந்திருந்தாள்.
“என்னடா நாங்க வரும்போது ஏதோ சொல்லிட்டு இருந்த போல?” எனக் கேட்டபடி கதிரவன் பாண்டியின் தோளில் இலகுவாகக் கைபோட்டு அழைத்துச் செல்ல, முதல் பந்தி முடிந்துவிட்ட கோபத்தில் இருந்த பாண்டி, “நீ போட்டிருக்கச் சட்ட என்ன கலர்?” எனச் சம்பந்தா சம்மந்தம் இல்லாமல் ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தான்.
“என்ன நக்கலா? இது என்ன கலர்னு தெரியாதா ? பச்சை கலர்” எனக் கூற, “பச்சை கலர் சட்ட போட்டவங்களுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்” எனக் கூறியபடி முகைத்தை திருப்பிக் கொள்ள, சக்கரையும் கதிரவனும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி சிரித்துக்கொண்டனர்.
“அடேய்! உன்னோட கோபத்துக்குக் காரணம் தெரியும். பிரியாணி தான ? உன்னோட இலைல மட்டன் பீசும் சிக்கென் பீசும் இருக்குறதுங்க நாங்க பொறுப்பு” எனக் கூற, சந்தோசத்தில் கண்களை அகல விரித்தவன், ” சத்தியமா?” என ஆசையாகக் கேட்டான்.
“ஆமா மச்சா… வா. போறோம் வாழ்த்து சொல்றோம். மொய் எழுதிட்டு சாப்பிட்டு வரோம்” எனக் கதிர் கூற, “கதிரவ யாரு, என்னோட மச்சான்ல! பெரிய மனுஷன்டா நீ” என நாவு நிறைய எச்சிலை ஊறவிட்டுக் கூறினான். மூவரும் கலகலத்து பேசி சிரித்துக்கொண்டே போக, சற்றே இடைவேளை விட்டு அவர்களுக்குப் பக்கவாட்டில் வந்த விழி, கதிரவனின் நிழலோடு தன் நிழலை சேர்த்து வைத்து மையல் கொண்டாள்.
விண்ணின் கதிரவனால்
இம்மண்ணில் ஓவியமாய்
என்னவனின் நிழல்
நிஜத்தில் தான் உன்
தோளுரசி கைகோர்க்க முடியவில்லை
நிழலிலாவது என் தோள்கள்
உன் கைசேரட்டும்
இவர்கள் உள்ளே செல்ல, ஆசிப் மற்றும் சாராவின் நிக்காஹ்(திருமணம்) நடந்துகொண்டிருந்தது. மணமகனும் மணமகளும் தனித் தனி அறையில் இருக்க மணப்பெண்ணைச் சுற்றிலும் பெண்கள் கூட்டமும், மணமகனை சுற்றி ஆண்கள் கூட்டமும் நிரம்பி வழிந்தது.
பெண்ணிடம் திருமணத்திற்குச் சம்மதமா என்று கேட்டு மூன்று முறை அப்பெண்ணும் சம்மதம் என்று கூறிய பின்னர்த் திருமணச் சான்றிதழில் மணமகளின் கையொப்பம் வாங்கிக்கொள்ள, அவர்களின் உறவு முறையில் வயதான சுமங்கலி பெண்ணை அழைத்து மணமகளின் கழுத்தில் கருகமணி கோர்த்த தங்க சரடை போட்டுவிட, மணமகனிடமும் சம்மதம் பெற்றுக்கொண்டு கையொப்பம் வாங்கிவிட, அங்கே அழகான நிக்காஹ் நிறைவடைந்திருந்தது.
உறவுகளில் ஒருவர் வந்து இனிப்பு மிட்டாய்களைக் கூட்டத்தை நோக்கி வீச அது மண்டபம் முழுக்க மிட்டாய் மழையைப் பொழிந்தது. கல்யாணத்திற்கு வந்திருந்த சிண்டுகளும் வாண்டுகளும் எம்பி எம்பி பிடித்து விளையாட, பெரியவர்களும் கூட அதை எடுத்துத் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்து கொண்டிருந்தனர்.
இன்னும் சிலரிடம் அவர்கள் முயற்சியே செய்யாமலே மிட்டாய் வந்து சேர்ந்தது. மிட்டாய்களைத் தூவும்போது அமர்ந்திருப்போர் மடிகளில் மிட்டாய்க்கள் தானே வந்து விழ, அப்படியே கதிரவனின் மடியிலும் ஒரு மிட்டாய் வந்து விழுந்திருந்தது.
அவன் கைகளில் அதை எடுக்க, அவனுக்குச் சற்று தள்ளி நின்று கதிரவனை விழுங்கும் பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள் கனல்விழி.  
அவள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே, பாண்டி , “மாப்ள சூப்பர்…இங்க கொண்டா சாப்பிடுவோம்” என வாங்க போக, பாண்டியை உறுத்து விழித்துக்கொண்டிருந்தாள் விழி.
“என்ன எங்கையோ கருகுது…” என மைண்ட் வாய்சில் பேசியபடி பாண்டி கண்ணை உருட்டி நாலாபுறமும் பார்க்க, அவனுக்கு மேல் விழிகளை உருட்டி உருட்டி முறைத்தபடி கனல்விழி நின்றுக்கொண்டிருந்தாள்.
“தங்கச்சி எதுக்கு இப்படி நிக்கிது?” என எண்ணியவனாய் பார்வையால் கேட்க, அவளோ சைகையில், கதிரவனிடம் இருக்கும் மிட்டாய் தனக்குத்தான் வேண்டுமென்று கூற, “அடச்சீ, இந்த அம்பது காசு மிட்டாய்க்குத்தான் புகை வந்துச்சா? என்ன காதலோ கண்றாவியோ ?” என நினைத்துக்கொண்டு, “சரி சரி நான் சாப்பிடல” என மெல்ல உதடு அசைத்துச் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, அங்கே வந்தது ஒரு சின்ன வாண்டு.
“மாமா, எனக்கு அந்த மிட்டாய் தரீங்களா?” எனக் கேட்க, “கண்டிப்பா செல்லம்…இந்தாங்க” எனக் கதிரவன் அந்தக் குழந்தையின் கைகளில் தூக்கி கொடுத்துவிட, இதைக் கவனிக்காத பாண்டி, மிட்டாயோடு வருவதாய்க் கனல்விழிக்குச் சமிங்கையில் சில பல சத்தியங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தான்.
அவனின் வாக்குறுதிகளைக் கண்டு குளிராமால் இன்னமும் சூடாகக் கனல்விழி இருக்க, “என்ன நடந்தது ?” எனப் பேசியபடியே திரும்பி பார்க்க, அந்தக் குழந்தை மிட்டாயை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டிருந்தது.
“ஆத்தி…. இவன் என்ன டக்குனு வள்ளலா மாறிட்டான். அந்தப் புள்ளவந்து என்ன வையுமே. சும்மாவே சுடுகாட்டுக்குப் போகச் சொல்லுது. தூரமா இருந்து பார்க்கும் போதே காரமா முறைக்கிது. கிட்ட போனா மண்டையில நச்சுனு கொட்டிடுமோ? என்ன டா பாண்டி உனக்கு வந்த சோதனை ? மான மருவாத ரொம்ப முக்கியம் பாண்டி!
நீ சாப்பிடறதுக்காக இப்படிப் பிடிங்கி சாப்பிடலாம். சாப்பிடவும் செஞ்சிருக்க, தப்பில்ல! இப்ப அடுத்தவுங்களுக்காகவும் பிடிங்கனும் போலவே” என மனதில் எண்ணியவனாய், மெல்ல கனல்விழியைப் பார்க்க அங்கே அவள் இல்லை. ஆனால் கைபேசி அலறியது.
“ஹலோ…” என்று பாண்டி சொன்னதுதான் தெரியும். அதற்குமேல் கனல்விழி வறுத்தெடுத்துவிட்டாள்.
“பாண்டி அண்ணே! எனக்குத் தெரியாது. .கண்டிப்பா அந்த மிட்டாய் எனக்கு வேணும்…. எப்படியாச்சும் வாங்கிக்கொடுங்க” எனக் கூற, “என்னமா உன்னோட ரோதனையா போச்சு ? ஒரு சின்ன மிட்டாய்க்கா இம்புட்டு அக்கபோரு. வேணும்னா அவன்ட சொல்லியே உனக்கு ஒரு பாக்கெட்டே வாங்கித்தரச் சொல்லுறே.” எனப் பாவமாகக் கூற, இவள் அவனை விடப் பாவமாக, “இல்ல அண்ணே! எனக்கு அதே தான் வேணும். வேற வேணாம்” எனப் பிடிவாதம் பிடித்தாள்.
“அப்படி என்னதான் இருக்கு?” எனப் பண்டி சலித்துக்கொள்ள,
“அது வந்து…நீங்க சொன்னீங்கள்ள? கதிரவன் மனச மாத்தி கல்யாணம் பண்றது கஷ்டம்னு. அதுனால இங்க கல்யாணத்துல தூவுற மிட்டாய் அதுவா அவர் மடியில வந்து விழுந்து, அந்த விழுந்த மிட்டாய் என்னோட கைக்கு வந்துச்சுனா கண்டிப்பா என் காதல் ஜெயிக்கும்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். எல்லாம் நீங்க இருக்கத் தைரியம்லா தான் வேண்டிகிட்டே. இப்ப என்னடானா, அது அந்தக் குழந்தைகிட்ட போய்டுச்சு. ப்ளீஸ் அண்ணே. அந்த மிட்டாய் தான் வேணும். வாங்கித் தாங்க” என அடம்பிடிக்க,
“ஐயோ காதலுச்சு அவனைக் கரெக்ட் பண்றத விட்டுபுட்டு, இப்படி மிட்டாய் வந்தா அவனுக்குக் காதல் வரும்னு நம்புதே! அட ராமா! என்ன ஏன் இதுங்க கூடக் கூட்டு சேர்க்குற” எனப் புலம்பியபடியே அந்தச் குழந்தையை தேடி போக, அவனைத் தடுத்த சக்கரையோ, “டேய் எங்க என்ன விட்டுத் தனியா போற ? பந்திக்கு போறியா ? இருடா நானும் வரே” எனத் தொத்திக்கொள்ள, அந்த நேரம் சரியாகக் கதிரவனின் அம்மாவும் கல்யாணத்திற்கு வந்திருக்க, மகனும் தாயும் அமர்ந்து பேச தொடங்கினர்.
திருமணம் முடிந்த பிறகு பெண்ணையும் மாப்பிள்ளையையும் மேடையில் அமரவைத்திருக்க ஒவ்வொருத்தராக வந்து வாழ்த்து சொல்லி சென்றுக்கொண்டிருந்தனர். கூட்டம் அதிகமாக இருக்கவே, அம்மாவோடு செல்லலாம் என்று கதிரவனும் அமர்ந்திருந்தான். லிங்கம் வரவில்லை. அன்று முகூர்த்த நாள் என்பதால் அதே நாளில் இரண்டு சுப நிகழ்வு இருக்க, லிங்கம் அதற்குச் செல்ல, பார்வதி இங்கே வந்திருந்தார்.
பாண்டியோடு சென்ற சக்கரை, “என்னடா இங்கிட்டு போயிட்டு இருக்க ? பந்தி அந்தப் பக்கம்” எனக் கூற, “அடேய் நான் பந்திக்கு போகல. பாசமலர்க்காகப் போயிட்டு இருக்கேன்” எனக் கூறியபடி அனைத்தையும் விளக்க, “அடேய் பாண்டி! என்னடா இதெல்லாம்” எனக் கேலியாகச் சக்கரை பார்க்க, “இல்ல இல்ல. விழி மறுபடியும் கால் பண்ணுச்சு. அந்தச் சாக்லட் கைக்கு வந்தா தான் கல்யாணம் நடக்குமாம். அதுனால கண்டிப்பா கண்டுபிடிக்கச் சொல்லுச்சு” எனச் சீரியஸாகக் கூற, சக்கரையும், “இந்தப் பிள்ளைங்கமட்டும்தாண்டா இப்படி எதாவது நடந்தா அப்படி நடக்கும்னு சொல்லி ஏதாச்சும் பண்ணுதுங்க. சரி அது நம்பிக்கையை ஏன் கெடுப்பானே? விழி இப்படி நம்பிடுச்சுல, நாம கண்டிப்பா அந்த சாக்லட்டை வாங்கிக் கொடுத்திடலாம்” எனப் பேசியபடி வந்தவர்கள் அந்தக் குழந்தையைக் கண்டுபிடித்திருந்தனர்.
“பாப்பா…அங்க ஒரு மாமாட்ட மிட்டாய் வாங்குனீல? அத எனக்குத் தரியா ? நான் வேற சாக்லட் தரே. கொடு பாப்பா” என மண்டியிட்டு பாண்டி கேட்க, அடுத்த நொடி பாண்டியின் காதுகள் பிளக்கும் அளவிற்கு அந்தக் குழந்தை கத்தியது. “அத்தை….” எனக் கத்த, அங்கிருந்து வந்துகொண்டிருந்தார் ரேடியோ ரோசா.
“ஆத்தாடி…இந்த அக்கா எதுக்குடா வருது?” எனச் சக்கரையைப் பார்க்க, அவனும், “இவுங்க எங்க இங்க?” என்ற ரீதியில் பார்த்து நிக்க, அதற்குள் குழந்தையிடம் வந்த ரோசா, “ஏண்டி கத்துற?” எனக் கேட்க, “அத்தை, இவுங்க புள்ளபுடிச்சிட்டு போறவங்க” என அந்த வாண்டு ஒரு அணு குண்டை வீசியது.
“என்னடா? ஊர் சுத்துறீங்கன்னு பார்த்தா , புள்ளையா பிடிக்க வந்தீங்க? அடியே போதும்பொண்ணு இங்க வா…” என இன்னொருவரை துணைக்கு அழைக்க, “சிக்கிட்டோம். இனி சிதைக்காம விடாதே” எனப் பாண்டி கதற, “ரோசா அக்கா…இப்ப எதுக்குக் கோவப்படுறீங்க ? எங்களைத் தெரியாதா உங்களுக்கு. இந்தப் பாப்பா பார்க்கா அழகா இருக்கே, கொஞ்சலாம்னு பார்த்தோம். அதுக்குள்ள கத்திடுச்சு. இது உங்க சொந்தமா ? அதானே பார்த்தே!. ஏண்டா பாண்டி நான் சொல்லல?” என ரோஸாவிடம் ஏதோ கூறியவன் பாண்டியிடமும் ஏதோவொன்றை வினவ, பாண்டி திருத் திருவென்று முழித்தான்.
“எதடா?” என பாண்டி நேரம் காலம் தெரியாமல் உளற,
“டேய் மறந்துட்டியா? குழந்தை அழகா இருக்குதே! நம்ம ரோசாக்கா சாயல் வேற இருக்கமாதிரி இருக்குனு சொன்னேனே? மறந்துட்டியா” எனப் பாண்டியின் காலை அழுத்தியபடி கூற, சக்கரை போகின்ற போக்கை புரிந்துகொண்டவன் சட்டென்று பல்டி அடித்து, “ஆமாம் மாப்பு. சொன்ன! அட நீ சொன்னது நெசமாகிடுச்சு பாரே” என அதிசயம் போலப் பேச, அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டாலும், அதை அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த ரோசாவிற்கோ பெருமை பிடிபடவில்லை.
அவருடைய அகலமான முகத்தில் அகன்ற புன்னகை மலர, அவர் அழைத்திருந்த போதும்பொன்னும் வந்து சேர்ந்திருந்தார்.
“என்ன அக்கா…கூப்டியா? என்ன சேதி” என இவர்கள் இருவரையும் ஒருமார்கமாகப் பார்த்தபடி, ரோசா மறந்திருந்த விஷயத்தை நினைவுபடுத்த, “அட! இனி இந்தம்மாவ வேற சமாளிக்கணுமா? கனல்விழி….” எனப் பல்லை கடித்துக்கொண்டனர். அதற்குள் இந்தச் சச்சரவுக்குக் காரணமான குழந்தையோ வேறு எங்கோ ஓடிவிட்டிருந்தது.
ரோசா மறுபடியும் கூற ஆரம்பிக்கும் பொழுது, பாண்டி, “அக்கா…அத அப்புறம் சொல்லிக்கலாம். இங்க இருந்த உங்க வீட்டு புள்ள எங்க?” என எடுத்துக்கொடுத்துப் பேச்சை திசை திருப்ப, “ஆமா! எங்கடி போன துர்கா ?….” எனக் கத்தியபடி நாலாபுறமும் அந்தக் குழந்தையின் பெயரை சொல்லி அழைக்க, “அத்த..இதோ வந்துட்டேன். இந்த அக்கா பெரிய மிட்டாய் தந்தாங்க” எனக் கனல்விழியின் கைகளைப் பற்றியபடி வந்துகொண்டிருந்தது.
வந்தவளை அவர்களுக்கு நன்கு தெரியும் என்பதால், அதோடு குழந்தையின் கையில் பார்த்த ஐம்பது ருபாய் மிட்டாய் ரோசாவின் மனதை சமன் செய்ய, “என்னமா ? மாமா வீட்டுக்கு வர உனக்கு இம்புட்டு வருசமா ? ஊருல அம்மா சௌக்கியமா ?நீ மட்டும்தா வந்தியா?” எனப் பேச்சு நீண்டுகொண்டே போக, அவர்களின் கேள்விக்குக் கனல்விழி பதில்சொல்லிக்கொண்டிருக்க, முல்லையும் வந்து இணைந்துகொண்டாள்.
“ஏப்புள்ள துர்கா! அக்காவுக்கு எதுக்குச் செலவு வச்ச ?” என ஒப்புக்குக் கேட்டுக்கொண்டிருக்க, “அக்காக்கு நான் சாக்கி கொடுத்தே. அக்கா எனக்குக் கொடுத்துச்சு” எனச் சொல்ல, அவருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் பாண்டிக்கும் சக்கரைக்கும் புரிந்துவிட்டது.
“விஷ விஷ விஷ….” எனப் பாண்டி துர்கா பாப்பாவை அர்ச்சனை செய்துகொண்டிருந்தான். சக்கரையோ, “இதே தான நானும் இந்தக் குட்டி பிசாசுகிட்ட சொன்னே. அதுக்கு எங்களைப் புள்ள பிடிக்கிறவனு சொல்லி, இந்த ரேடியோகிட்ட மாட்டிவிட்டு, இப்ப அதே வேலைய பன்னிட்டு வந்திருக்கு” என எண்ணிக்கொண்டிருந்தான்.
இதற்கிடையில் போதும்பொண்ணு வேறு, “அப்போ ரோசா அக்கா, நான் போவட்டா ? பந்தி ஆரம்பிச்சுட்டாங்க” எனக் கூற, ரோசாவும், “நானு வரேன் டி ” எனக் கூறி அங்கிருந்து இடத்தைக் காலி பண்ண, கனல்விழி பாண்டியையும் சக்கரையையும் பார்த்து புன்னகைத்துக்கொண்டாள்.
முல்லைக்கு நடந்த எதுவும் தெரியவில்லை. அவள், விழியைச் சாப்பிட அழைப்பதற்காக வந்திருந்தாள். இவர்கள் விஷமமாகச் சிரிப்பதை பார்த்து என்னவென்று கேட்க, விழியோ, “உங்க அண்ணா மடியில ஒரு சாக்லேட் விழுந்துச்சு டி. அத நான்தான் சாப்பிடணும்னு நினைச்சே. அதுக்குதான்” எனக் கூறி கையிலிருந்த மிட்டாயை பொக்கிஷமாகக் காட்ட, பாண்டியோ, “மிச்சத்தையும் சொல்லு. அந்த மிட்டாய் கைக்கு வந்தா தான் கல்யாணம் நடக்கும்னு நினச்சுக்கிட்டியே, அதையும் சொல்லு” எனக் கூற, சக்கரையோ, “என்னமா இதெல்லாம் ?” என்று கேட்க, கலகலத்து சிரித்தவள், “அய்யோ பாண்டி அண்ணா நம்பிடீங்களா ? பச்சை புள்ளையாவே இருக்கீங்க போங்க. சும்மா அப்படிச் சொன்னாதான் நீங்க தேடுவீங்கன்னு கப்ஸா விட்டேன்” எனக் கூற , “கப்ஸாவா ? மாப்ள அந்தக் கம்ப எடுடா ?” எனப் பாண்டி பொய்யாக மிரட்ட, அதற்கும் விழி புன்னகை முகமாகவே நின்றாள்.
“ஏம்மா? இந்த ஐம்பது காசு சாக்லேட்க்கு எங்களை அந்த ரேடியோகிட்ட மாட்டிவிட்டுட்டியே, அந்தப் பாப்பா மட்டும் அது கதிரவன் கொடுத்ததுனு சொல்லிருந்தா, ரோசாக்கா இதவச்சு மாலையே பின்னியிருக்கும். புறவு உன்னோட காதல் கதைதான் ஊரெல்லாம் மணத்திருக்கும். இதெல்லாம் தேவையா ??” எனக் கொஞ்சம் தீவிரமாகச் சக்கரை கேட்க,
“இல்ல அண்ணே! இது அவர்கிட்ட வந்தது. அது எனக்கு வரணும்னு தோணுச்சு…. இது ஒருமாதிரி பீல். சொன்னா புரியாது. காதலுச்சாதான் புரியும்” என ரசித்துக் கூறியவளை, முல்லை வெட்டவா குத்தவா என்று பார்க்க, பாண்டியோ, “அப்போ மிட்டாய் சாப்டினனும்னா காதலிக்கணுமா ?” என அதிமுக்கிய கேள்வியைக் கேட்டுவைத்து, அதற்குப் பதில் சொல்லு என்று சக்கரையிடம் நின்றான்.
“அடே!…..” எனச் சக்கரை நறநறவென்று பல்லை கடிக்க, அவரக்ளை நோக்கி கதிரவனும் அவனுடைய அம்மாவும் வந்துவிட, கனல்விழியைப் பார்த்துவிட்ட கதிரவன், “இவ எங்க இங்க?” என யோசனையாகப் புருவத்தை நெரித்தபடி அவள் மீது சில நொடி பார்வையைச் செலுத்தியவன், மீண்டும் அங்கு அப்படி ஒருத்தி நிற்பதை கவனிக்காதவனை போலப் பாண்டியிடம் கேள்வி கேட்க, பாண்டியோ “இப்ப என்னத்த சொல்லுவே? ஒருஒருத்தர்கிட்டையும் சமாளிச்சு சமாளிச்சே வயசாகிடும் போல” என மனதினில் சலித்துக்கொண்டான்.
“என்ன பாண்டி சத்தத்தையே காணோம்?” எனக் கேட்டபடியே விழியைச் சந்தேகமாகப் பார்க்க, அதற்குள் முல்லையைப் பார்த்துவிடப் பார்வதி அவளிடம் பேச, அப்படியே  பேச்சு விழியிடம் செல்ல, பார்வதிக்கு கேட்காதவாறு மெல்ல பாண்டி சர்க்கரை அருகில் வந்த கதிரவன், “என்ன இவ ? இங்கயும் நாடகமாட வந்துட்டாளா ?” எனக் கேட்க, “ஏப்பா ? அது நல்ல பொண்ணுப்பா. நீயா எதாவது பேசாத” எனச் சக்கரை கூற, பாண்டியோ தீவிர சிந்தனையில் இருந்தான்.
“டேய் பாண்டி. என்ன ஆச்சு ? எந்தக் கோட்டையைப் பிடிக்க இம்புட்டு யோசனை ?” எனக் கதிரவன் வினவ,
“அது ஒண்ணுமில்ல மாப்பு. செத்த நேர முன்னால, நம்ம போதும்பொண்ணு அக்கா வந்துட்டு போச்சு. அத பத்திதான் யோசிச்சுகிட்டு இருந்தே” எனக் கூறினான்.
“அதுல யோசிக்க என்ன இருக்கு?” எனச் சக்கரை வினவ,
“பின்ன இல்லையா? போதும் பொண்ணுனு யாராச்சும் பேரு வைப்பாங்களா? இப்படிப் போய் வச்சுருக்காங்களேன்னுதான்”
“வைப்பாங்க பாண்டி! தொடர்ந்து பெண் குழந்தையா பொறந்தா, இதோடு போதும் பொண்ணு. அடுத்து ஆண் வாரிசு கொடுன்னு இறைவன்கிட்ட வேண்டிக்கிட்டு இப்படிப் பேரு வைக்கிறது வழக்கம். அதா இப்படி வச்சிருக்காங்க” எனக் கதிரவன் விளக்கம் கூறினான்.
“ஓ அப்போ எனக்கும் ஆம்பள பிள்ளை வேணும்னா போதும்பொண்ணுனு வச்சிடலாம்ல மாப்பிள?” எனப் பாண்டி ஆர்வமாகக் கேட்க, “வைக்கலாம் வைக்கலாம்…. ஆனா அதுக்குமுன்னாடி நீ கட்டிக்கப் பொண்ணு வேணுமே” எனக் கதிரவன் கூற,
“அடபாவி! ஏண்டா வாயவைக்கிற ? மாப்புனு பாத்தா எப்பவும் ஆப்பு வைக்கிறதுலையே குறியா இருக்கான் யா” எனப் புலம்ப,
“பின்ன? குழந்தைல பொண்ணு ஆணுன்னு பிரிச்சு பார்க்கலாமா? அப்படியொரு எண்ணம் உனக்கு வந்துச்சுனு வச்சுகோ, அப்புற உன்னோட கல்யாணத்துக்கு நான்தான் வில்லன்” எனச் சிரித்துக்கொண்டே கதிரவன் கூற, “இப்பமட்டும் என்னவா ? இப்பயும் நீயே தான்” என மெல்ல முணுமுணுக்க, “என்ன அங்க சத்தம் ?” எனச் சக்கரை எடுத்துக்கொடுக்க, கதிரவன் முறைக்க, பாண்டி பேந்த பேந்த முழிக்க, பார்வதிகூட வாய்விட்டு சிரித்தார்.
அந்த இடமே சிரிப்பில் அழகாக நிறைந்திருந்தது. கனல்விழிக்கு கதிரவனின் கம்பீரமும் நேர்மையும் தெரியும். ஆனால் இப்போது அவன் நண்பர்களிடம் பழகும் விதமும், அன்னையிடம் காட்டும் பாசமும் இன்னும் இன்னும் அவனை ரசிக்க வைத்தது.
எட்டநின்று மூன்றாம் நபராய் இல்லாமல், அவனோடு ஒட்டி நின்று உரிமையாய் பழக ஆசை வேகமாக வளர்ந்துகொண்டே சென்றது.
அதன் பிறகு, கதிரவன் அம்மாவோடு சைவ சாப்பாட்டிற்குச் செல்லலாம், அவர்கள் தனியாக இருப்பார்கள் என்று பாண்டியையும் சக்கரையையும் அழைக்க, அவர்கள் முகம் போன போக்கில், சரி தான் மட்டும் செல்லலாம் எனக் கதிரவன் எண்ணம்கொண்டிருக்க, அதற்குள் இடைபுகுந்தாள் விழி.
“அம்மா…நீங்க சைவமா? நானும்தான். இந்த முல்ல பிரியாணி சாப்பிட போய்டுவா ? நான் எப்படித் தனியா போகனு யோசிச்சுகிட்டே இருந்தே. நல்லவேளை நீங்க வந்தீங்க ?” எனக் கதிரவன் அவன் நண்பர்களோடு அசைவ பந்திக்கு செல்லட்டும் என்று கூற, இங்கு முல்லையோ பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டிருந்தாள்.
“அடியே அப்போ நான் யாருகூடப் போறது?” என விழியன் காதை கடிக்க, “அதா வள்ளி வந்துருக்காதானே! அவ கூடப் போ” எனச் சாதாரணமாகச் சொல்ல, “பெரியவங்க சும்மாவா சொன்னாங்க” என பெருமூச்சுவிட்டபடி முல்லை பொறுமினாள்.
“அப்படி என்ன சொன்னாங்க? எதுக்குச் சம்பந்தா சம்மந்தம் இல்லாம பேசுற ?”
“ஆமா ஆமா இப்ப நான் பேசுறது அப்படிதாண்டி இருக்கும். யாரை வேணுனாலும் நம்பலாம். குடி போதையில இருக்கவங்களையும் காதல் போதையில இருக்கவங்களையும் நம்பவே கூடாதுனு சும்மாவா சொல்லி வச்சாங்க” என முல்லை கூற,
“ஏண்டி இதெல்லாம்மா சொல்லி வச்சிருக்காங்க?” என விழி அதிசயம் போலக் கேட்டுவைத்து அதற்கும் முல்லையிடமிருந்து முறைப்பை பரிசாகப் பெற்றுக்கொண்டாள்.
“சரி சரி கூல். நான் அவருக்காக மட்டும் போகல. நிஜமாவே அத்தைக்காகவும்தான். அவுங்க கிட்ட பேசுன இந்தக் கொஞ்ச நேரமே ரொம்ப நல்லா இருந்துச்சு. அவுங்க முகத்தைப் பார்த்தாலே ஒரு மாதிரி நெருக்கமான பாசம் வருது” என உணர்ந்து சொல்ல, அதற்கும் முல்லை கிண்டலடித்தாள்.
“ஹ்ம்ம்ம் பாசமும் வரும் கொஞ்சம் விட்ட பாயசமும் வருதுன்னு சொல்லுவ. சரி சீக்கிரம் போயிட்டு வா” எனக் கூறி வள்ளியுடன் செல்ல, கதிரவன் அம்மாவிடம் கேட்டுவிட்டுச் சென்றான்.
அங்கிருந்து செல்வதற்கு முன்னால், கனல்விழி மீது நம்பாத பார்வை ஒன்றை பதிக்கவும் தவறவில்லை. ஒருவழியாகப் பந்திமுடிந்து வர, வாசலுக்கு வந்த பார்வதி கதிரவனிடம் கனல்விழியைக் குறித்து ‘நல்ல பெண்’ என்று கூற, கதிரவன் மனதில், “ஒருவேளை நாமதான் தப்பா புருஞ்சுகிட்டோமோ ?” என்ற எண்ணம் எழ, “அடடா! அந்தப் பொண்ணு போன்-அ என்ட கைகழுவுறப்ப கொடுத்துச்சு. அத வாங்காமலே முல்லை வரவும் போய்டுச்சு. நான் வீட்டுக்கு கிளம்புறே. நீ அந்தப் பொண்ணுட்ட கொடுத்திடறியா ?” எனக் கேள்வியாக முகம்பார்க்க, அவனும் பாண்டி அல்லது சக்கரையிடம் கொடுத்துக் கொடுக்கச் சொல்லலாம் என்ற எண்ணத்தில் சரி என்பதாய் கைபேசியை வாங்கிவிட்டு, அன்னையை வழி அனுப்பியவன் திரும்பி பார்க்க அந்தோ பரிதாபம் அங்குப் பாண்டியும் இல்லை சக்கரையும் இல்லை.
“எங்கடா போனானுங்க?” என்ற கேள்வியோடு அவர்களைத் தேட, எப்படிக் கிடைப்பார்கள்? . பார்வதி அம்மா கூறுவதை அவர்களும் கேட்டுக்கொண்டுதானே இருந்தார்கள். கதிரவனே சென்று கொடுத்தால் ஒருவேளை அவர்களுக்குள் பேசும் சந்தர்ப்பம் அமையும் என்று எண்ணிய நொடியில் இருவரும் மண்டபத்தில் ஓர் ஓரத்தில் ஒளிந்துகொள்ள, இவனே விழியிடம் நேரடியாகச் சென்று கொடுக்க வேண்டிய சூழல்.
கதிரவனிடம் ஒருமுறையாவது பேசிடமாட்டோமா என்ற எண்ணத்துடன் அன்றைய முழுப் பொழுதையும் கனல் விழி கழித்துக்கொண்டிருக்க, இப்போதோ அவளைத் தேடி வருபவனை அறியாமல் முல்லையிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“அட்ரா சக்க. பின்னி பிடலெடுத்துப்புட்ட புள்ள. எப்படியோ பார்வதி அம்மாவ கவுத்திட்ட” என முல்லை உற்சாகமாகக் கூற,
“ஆமா முல்ல. நீ சரியாதா சொல்லுற” என்ற விழியன் வார்த்தைகள் கதிரவனின் செவிகளில் மிகச் சரியாக விழ, சட்டென்று அப்படியே நின்றுவிட்டான்.
“ச்சா…என்ன பொண்ணு இவ. எங்கம்மாட்ட பேசுனதும் நாடகமா ? இவ எதுக்கு இப்படி நடிக்கிறா? மூஞ்சில அடிச்சாப்புல கேட்ருவோமா ? வேணா. இவ முல்ல கூட இருக்கா. முருகேசன் சித்தப்பாக்கு தெருஞ்சுவளாவும் இருக்கலாம். இவ எக்கேடு கெட்டு போனா நமக்கென்ன?” என எண்ணியபடியே அங்கிருந்து அகன்றவன், ஒரு குழந்தையை அழைத்து அவளுடைய கைபேசியைச் சேர்க்கும்படி கூறிவிட்டு சென்றுவிட்டான்.
இதை எதையும் அறியாத விழியோ, முல்லையிடம், “ஆமா டி. கௌந்தது உண்மை தான். ஆனா அவுங்க இல்ல. நான்!
எவ்ளோ அன்பான மனுஷி அவுங்க. அவுங்களுக்கு மருமகளா போறவ நிச்சய கொடுப்பன பண்ணியிருக்கணும்” என மனமார சொல்ல, “பாருடா உன்ன நீயே கொடுத்துவச்சவன்னு சொல்லிக்கிறியா?” என அதற்கும் முல்லை ஓட்ட, “ஆமா! அதுல என்ன தப்பு” என ஏட்டிக்குப் போட்டியாக விழி பேசிக்கொண்டிருக்க, அவளுடைய கை பேசியை ஒரு குழந்தை வந்து கதிரவன் கொடுத்ததாகக் கொடுத்து செல்ல, கனல்விழியின் கண்கள் ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் விரிந்தது.
அவன் கையிலிருந்த மிட்டாய் இவள் கை சேர்ந்ததையே பொக்கிஷமாகப் பார்த்துக்கொண்டிருக்க, தன்னுடைய கைபேசியை அவன் பத்திரமாகச் சேர்த்ததை எண்ணி எண்ணி காதலுடன் அவனை நினைவுகளால் நெருங்கிக்கொண்டிருக்க, கனல்விழியே பொய்யானவள் என்ற பிம்பத்துடன் கதிரவன் அவளைப் பற்றிய நினைவுகளை விட்டு வெகு தூரம் சென்றுக்கொண்டிருந்தான்.

Advertisement