Advertisement

நினைவெல்லாம் கதிரவன் – 7

“என்னடி சொல்லுற? மறுபடியும் சொல்லு” என வாயை பிளந்தபடி வினவினாள் முல்லை கொடி.

“ஹ்ம்ம் சொல்லிட்டா போச்சு… நான் அவரை இன்னும் பக்கத்துல இருந்து காதலிக்கப் போறேன்” என மீண்டும் அதே வார்த்தைகளைக் கூறினாள்.

“ஏ புள்ள, கொஞ்சம் முன்னாடி கூடக் காதல் இல்லனு சொன்ன. இப்ப எப்படி மாறின?”

“ஆமா! நான் தா சொன்னேன். இல்லனு சொல்லலியே. நான் காதல் இல்லனு சொன்னது அப்போ. இது இப்போ…”

“என்னடி வடிவேல் டயலாக்லாம் விடுற? ஒரு நிமிஷத்துல எப்படி டி முடியும் ?

“பொண்ணு பார்க்க வர ஒரு நிமிசத்துல வந்தவனைப் புருஷனா ஏத்துக்கச் சம்மதம்னு சொல்ல முடியும்னா, கதிர ஏன் நான் என்னோட துணையா நினைக்க முடியாது?”

“கேக்குறவ கூதரையா இருந்தா குதிரை குத்தாட்டம் போடுதுனு சொல்லுவ டி…” என முல்லை நீட்டி முழங்க,

“முல்ல கொடி பழமொழி சூப்பர் போ. ஆனா இத இதுக்கு முன்னாடி கேட்டதில்லையே”

“நான் கூடாதா கேட்டதில்லை. ஏதோ வாயில வந்தத சொன்னே. நீ மட்டும் காதலு கன்றாவினு உளறலாம், நான் ஏதும் உளற கூடாதா ?”

“ஹே… நான் ஒன்னு உளறலை புள்ள. மனசுல தோணுனத சொன்னே. என்னோட அப்பாமாதிரி ஒருத்தன் தான் என்னோட புருஷன். உங்க அண்ணாகிட்ட நான் முழுசா என்னோட அப்பாவை பாக்குறேன்.

இத்தன நாளா இருந்தது மரியாதனு நினைச்சேன். ஆனா என்னவோ அவரு அடிச்ச நிமிஷம் யாரையும் இதுவரைக்கும் கை நீட்டாதவரு என்னை அடிச்சது எனக்கென்னமோ அது எங்களுக்குள்ள வரபோற உறவோடு ஆரம்பம்னு தோணுது.”

“என்ன சொல்லுறா இவ? அடிவாங்குனதுல லூசாகிட்டாலோ ? நிசமாவே நல்லாத்தா இருக்காளா ? இல்ல அண்ணா அடிச்சதுல மண்டை குளம்பிடுச்சா..” எனத் தீவிரமாகத் தனக்குள் சிந்தித்துக் கொண்டிருக்க, அவள் முகத்தின் முன் கைகளை ஆட்டியபடி கனல்விழி அழைத்துக்கொண்டிருந்தாள்.

“முல்ல! அடங்கு… உன்னோட கற்பனையைக் கண்ட்ரோல் பண்ணு. நான் தெளிவாதா

பேசுறேன்.

கட்டின பொண்டாட்டிய அடிக்கிறதே தப்புனு சொல்லுறவரு தன்னோட பொண்டாட்டிய எப்படிப் பாத்துப்பாரு ? நம்ம ஊருல பாதிப்பேரு மனைவியைத் தனக்குக் கீழ உள்ள ஒருத்தினு நினைக்கிறப்ப, பொண்ணுங்கனா பலவீனம்னு எல்லாரும் சொல்றப்ப, நான் பாக்குற மனுஷங்கள இருந்து உங்க அண்ணா மட்டும் வித்தியாசமா தெரியிறாரு….

எனக்கு அவர்மேல் காதல்வர காரணம் அவரோட தைரியமும், ஒரு பொண்ணு பாக்காமாட்டாளானு அம்புட்டு பசங்களும் சுத்துறப்ப பொண்ணு நானே நேர்ல வந்து பேசியும் என்ன அடிச்சிட்டு போறாரு பாரு அந்த கண்ணியமும்தா.

எதோ என்ன தப்பா புரிஞ்சிட்டு கோவப்பட்டுருக்காரு நினைக்கிறேன். எதுவா இருந்தா என்ன ? அந்தக் கோவத்துலதான் அவரோட குணத்தை நான் பார்க்க முடிஞ்சது.

அவர் கை என்னோட கன்னத்துல பதிஞ்ச நிமிஷமே அவரோட உருவம் என்னோட மனசுல பதிச்சிருச்சு… நான் முடிவு பண்ணிட்டேன்” எனத் தீர்மானமாகக் கூறினாள். அவள் முகம் சாதாரணமாக இருந்தாலும் குரலில் உறுதி வெகுவாக இருந்தது.

‘மின்னல் இடி விழுகுறப்ப காதல் வந்து பாத்துருக்கே! மேளம் கொட்டு அடிக்கிறப்ப காதல் வந்துகூடப் பாத்துருக்கே! இதென்னடா புதுசா கன்னத்துல அடி விழுகுறப்பலாம் காதல் வருது… இது புது ட்ரெண்டாவுல இருக்கு’ என மனதில் புலம்பியவளாய் முல்லை கொடி, அதைக் காண்பிக்காமல் வெளியே, “சரி நெஸ்ட் ?” எனக் கேட்க, “ட்விஸ்ட்” எனப் பதிலளித்தாள் கனல்விழி.

“ட்விஸ்ட்டா… அப்படினா ஏதோ ஆப்ப ரெடி பண்ணிட. யாருக்கு அந்த ஆப்பு?”

“வேற யாருக்கு முல்ல, உனக்குதாண்டி…”

“முல்ல முல்லனு நல்லா தர டி தொல்ல. இதோ பாரு என்ன வம்புல மாட்டி விட்டுடாத. உங்க அம்மா அன்புலயும் குறை வைக்காது அடியிலையும் குறவைக்காது.

தன்னோட பொண்ணுனாலும் அண்ணனோட பொண்ணுனாலும் அடி ஒண்ணுதா… பாரபட்சம் பாக்காம அடி வெளுத்திடும்டி. என்ன விட்டுடு ராசாத்தி” எனக் கெஞ்ச, அதைக் காதில் வாங்காதவளாய் கைபேசியை எடுத்து முருகேசனுக்கு அழைத்தாள்.

“மாமா… எனக்கு உங்கள அத்தையலாம் பாக்கணும் போல இருக்கு. எனக்குக் காலேஜ் திறக்க இன்னும் ஒருவாரமிருக்கு. அம்மாட்ட நீங்க கொஞ்சம் என்ன அனுப்பிவைக்கச் சொல்லி சொல்லுங்களே…ப்ளீஸ் மாமா” என மறுமுனையில் இருந்தவரிடம் சலுகையாகக் கெஞ்ச, இங்கு முல்லையோ, “அப்பா…ஏமாந்துடாதீங்க. அவ பாக்கணும்னு நினைக்கிறது மாமா மாமான்னு சொல்றது உங்கள இல்ல. அவளோட கதிர் மாமாவா…ஏமாந்திடாதா பா…” என மனதிற்குள் புலம்பிக்கொண்டிருக்க, அதற்குள் கனல்விழி வெற்றி புன்னைகையுடன் கைபேசியை அணைத்திருந்தாள்.

காதலும் களவும்

இரட்டை குழைந்தையோ ?

அடுத்தடுத்து என்னுள் பிறந்துவிட்டன!

எனத் தன் செயல்களை நினைத்தவளாய் கனல்விழி சிந்தித்தாள்.

ஆனால் என்ன பயன் ? மேற்கொண்டு ஆராய விடாமல் அவளின் காதல் நெஞ்சம் கனவுகளை நோக்கி இழுத்தது. கதிரவனை அறிந்துகொள்ளும் ஆர்வம் அரும்பானது;மலரானது;மயக்கும் மனம் பரப்ப தொடங்கியிருந்தது;

இதழ் முழுவதும் விரிந்த ரோஜா இதழாய் மலர்ந்திருந்தது. இமை முழுவதும் மூடாமல் வண்ண வண்ண கனவுகளைச் சுமந்திருந்தது. நெஞ்சு நிறையக் கதிரவனின் நினைவுடன், அவனின் ஊர் போகும் நிமிடத்திற்காய் தவம்கிடக்கத் தொடங்கினாள்.

கந்தசாமியும் முருகேசனும் தேவியிடம் பல உத்தரவாதங்களைக் கொடுத்து மகேஷ் மற்றும் சுந்தரால் எந்தப் பிரச்சனையும் வராது என்று எடுத்துக்கூறி கொடியுடன் சேர்த்து முருகேசன், கனல்விழியையும் அழைத்து வந்திருந்தார்.

முல்லைக்கொடிக்கும் சந்தோசமே! முதலில் குடும்பத்தை நினைத்து அஞ்சினாலும், விழி சொல்வது போலக் கதிருக்கு நிகர் வேறு யாராக இருக்க முடியும்? அதிலும் கனல்விழி மிகவும் தைரியமானவள். எதையும் யோசித்து முடிவெடுப்பவள். முடிவெடுத்தபின் எதிலிருந்தும் எப்போதும் பின்வாங்காதவள். காரணமின்றி யோசிக்காமல் செய்கின்ற பழக்கம் அவளுக்கு இல்லவே இல்ல. அதனால், அவளின் இந்த முடிவும் சரியாகவே இருக்குமென்றும், இல்லை என்றாலும் கூடச் சரி செய்துவிடுவாள் என்றும் நம்பிய முல்லை, அதற்கு மேல் இதைப் பற்றிச் சிந்திக்கவில்லை.

கதிரை தவிர வேறு ஒருவனைச் சொல்லியிருந்தால் நிச்சயம் முல்லையின் மனம் சமாதானம் கொண்டிருக்காது. ஆனால் கனல்விழி காதலிப்பது கதிரவனை. கதிரவன் மீதிருந்த மதிப்பும் முல்லையின் மனம் சமாதானம் அடைய ஒரு காரணம்.

முருகேசனின் வீட்டின் கொல்லைப்புறத்தில் அமர்ந்திருந்தவளின் நினைவு முழுக்கக் கதிரவனே.

“எப்படியோ வந்துட்டே! பொய்யே பேசாத என்ன பொய் சொல்லி இங்க வரவச்சுட்டாங்க. அவரு எங்க வரவச்சாரு ? நீயே தான கிளம்பி வந்த” என்ற மனசாட்சியின் கேள்வியைத் தவிர்த்துவிட்டு அடுத்த நினைவுக்குள் சுகமாக மூழ்க தொடங்கினாள்.

“அவர நிச்சயமா எனக்குப் பிடிச்சிருக்கு… ஆனா எப்போ இருந்து? நிஜமாவே என்ன அவரு அடிச்சப்பதா காதல் வந்துச்சா? இல்ல, அந்த மகேஷ் கும்பல்கிட்ட இருந்து என்ன காப்பாத்த மறிச்சு நின்னாரே… அப்போ இருந்தேவா ?

இல்ல பஞ்சாயத்துல என்ன நுழைக்காம பேசுனரே அப்போவா?

இல்ல பொண்ணுங்க எதுக்கு அழுக கூடாதுனு சொன்னாரே..அப்போவா ?

இல்ல பொண்ணுமேல கை நீட்டுறவனோட கைய உடைக்கணும்னு இப்போ சொன்னாரே..அந்த நிமிஷமா ?

எந்த நிமிஷம்னு தெரியல. ஒருவேளை முன்னாடியே வந்திருந்தா கூட இத்தன வருஷத்துல அவரோட ஞாபகம் இருந்தா கூட, எனக்கு அது காதல்னு தோணல.

காதல்னு தோணலையா? இல்ல தெரியலையா ?

சரி எது எப்படியோ இந்த நிமிஷம் எனக்குத் தெரிஞ்சிருச்சு. என்னோட மனசுல அவருதா” என மனதிற்குள் அவளாகவே கேள்விகேட்டுக்கொண்டு பதிலையும் கூறிக்கொண்டு சிமெண்ட் தண்ணீர்த்தொட்டிக்கு பக்கத்தில் மண்டிக்கிடந்த நித்யகல்யாணி பூவை ஒவ்வென்றாகக் கொய்து கொய்து போட்டிருந்தாள். அவள் அமர்ந்திருந்த இடம் முழுவதும் இவள் பிய்த்துப் போட்டிருந்த பூக்களே இவளது காதல் பித்துக்குச் சாட்சியாகின. தன்னைத் தானே தலையில் லேசாக ஒரு கொட்டுவைத்துக்கொண்டவள் அதற்கும் சிரித்துக்கொண்டாள்.

என்ன செய்கின்றாள் என்ற உணர்வே இல்லாமல் ஆனந்த நினைவுகளில் மூழ்கி எதையோ செய்துகொண்டிருந்தாள்.

நினைவுகளில் நீயிருக்க

நிதானத்தில் நானில்லை

நிஜம்தன்னில் நீயிருக்க

நிஜத்தில் என் மனம் அங்கில்லை

நித்திரைகளில் நீயிருக்க

நிமிடமும் நித்திரை இல்லாமல் நான்

யாதுமாகி நீயிருக்க

ஞாயுமாக நான் மாற மாட்டேனோ?

கனல்விழியைப் பொறுத்தவரை காதல் பாவமல்ல! காதலித்து ஏமாற்றுவதும் துரோகம் செய்வதும் அந்தக் காதலை விட்டுக்கொடுப்பதும் தான் பாவம்.

தனக்கான கோட்பாடாக, தான் ஒருவனைக் காதலிக்கக் கூடாது. அப்படிக் காதலித்துவிட்டால் வேறொருவனைக் கரம்பிடிக்கக் கூடாது, என உறுதியாக நம்புபவள். இது அவள் மனதில் எப்போதும் இருக்கின்ற வலுவான சிந்தனை. அவள் முடிவெடுத்துவிட்டாள் தனக்கானவன் கதிரவன் தான் என்று.

அன்று கதிரவனின் எண்ணமும் கோவமும் அவளுக்கு இனித்தது. அந்த இனிப்பின் சுவையில் எதற்காகத் தன்னைக் கடிந்துகொண்டான்? எதற்காகக் கைநீட்டினான் ? என்றெல்லாம் எண்ணவே இல்லை. அதை எண்ணும் எண்ணமும் இல்லை.

நடந்தது நடந்ததே!

அதை ஆரையவோ அலசவோ எப்போதும் பிரியப்படமாட்டாள். அடுத்தது என்ன ? என்ற சிந்தை மட்டுமே அவளிடம்.

ஒருவேளை அதை ஆராய்ச்சி செய்திருந்தால், கதிரவன் மனதில் இவளை பற்றிய எண்ணம் என்னவாக இருக்குமென்று அறிந்திருப்பாளோ எண்ணவோ?

விதியை வெல்லும் சக்தி யாரிடம்தான் இருக்கிறது ? ஒருவன் அடிக்க, அடிவாங்கிய ஒருத்தி அவன் மீது காதல் கொள்வாளா? ஆனால் கனல்விழி காதல் கொண்டாள். அந்த நிமிடம், அவளுள் காதல் மலர, மலர்ந்த அந்த நிமிடத்தை உருவாக்கியது விதியை அன்றி யார் ?

இரண்டொரு நாட்கள் கடந்த நிலையில், பக்கத்துவீட்டு வள்ளி மூச்சிரைக்க ஓடிவந்து, “ஏண்டி கொடி, வளையல் வண்டிக்காரே கள்ளுக்கால் கிட்ட வந்துருக்காண்டி… வா புதுசு புதுசா வளையல் கொண்டு வந்துருக்காங்க” என எட்டூருக்கு ஒலிபெருக்கி இல்லாமலே கேட்கும் அளவிற்குக் கத்திக்கொண்டிருந்தாள்.

முல்லையும் அவள் அன்னை மல்லியிடம் காசை வாங்கிக்கொண்டு கையோடு கனல்விழியை அழைத்துக்கொண்டு புறப்பட்டிருந்தாள்.

“ஏண்டி வள்ளி. நிசமாவே புது டிசைனு இருக்கா ?” எனச் சந்தேகமாகக் கேட்டுக்கொண்டு முல்லை வேக வேகமாக நடந்தாள்.

“ஆமா! சிங்கம் வளையல் வந்திருக்கு டி” என வள்ளி கண்கள் நிறைய ஆசையாகக் கூற, முல்லையும், “ஐ… சூர்யா பட வளையல்… வா வா வித்துறபோது. சீக்கிரம் போவோம்” எனத் துரிதப்படுத்தினாள்.

“ஹா ஹா… சிங்கப்படத்துல அனுஸ்கா எங்கடா கண்ணாடி வளையல் போட்டிருந்தாங்க… விக்கிறவன் தான் உளறுறானா? இதுங்களும் நம்புதுங்க” என மனதில் எண்ணி சிரித்துக்கொண்டாள் கனல்விழி.

கிராமங்களில் இதுவொரு வழக்கம். அப்போதைக்கு அண்மையில் வெளியான படங்களின் பெயர்களைச் சொல்லி இதுபோலப் பொருட்களைக் கடை பரப்ப உடனே அது காலியாகிவிடும். கிராமபெண்களின் மனதினை படிக்கதெரிந்தவன் போல வளையல் வண்டிக்காரன்.

அதாவது வளையல் தேர்வு செய்யும் விஷயத்தில் மட்டும் படிக்கத் தெரிந்தவன் என்பதே சரி. பெண்களின் முழு மனதையும் அறிந்த ஆண்மகன் இங்கு எவருமில்லையே…

மற்றவை இருக்கட்டும். இப்போது முல்லை பதற்றமாகச் சென்றுகொண்டிருந்தாள்.

கொஞ்சம் தாமதமாகச் சென்றாலும் அந்தத் தெருவில் உள்ள அனைவரும் புது வகையான வளையலை எடுத்துவிடுவார்களே. அந்தப் பதற்றம்தான் முல்லையிடம்.

அவளின் பதற்றத்திற்குச் சற்றும் குறையாமல் கனல்விழியும் சென்றாள். ஆனால் காரணம் தான் வேறு…. ‘கள்ளுக்கால்’ என்ற வார்த்தைதான் காரணம். அதற்கு அருகில் தானே சக்கரையின் ரொட்டி கடை உள்ளது. அங்கே கதிரவன் இருப்பதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம் என்பதால் கொஞ்சமேனும் அவனை அருகினில் பார்த்திட மாட்டோமா என்ற ஆவலில் சென்றுகொண்டிருந்தாள்.

இருதயம் படக் படக் என்று அடிக்க, ஒருவித பரவசத்தோடும் இதுவரை கண்டிராதா ஆனந்தத்தோடும் செல்ல, அவளின் எண்ணத்தின் நாயகன் அவளை ஏமாற்றத்து நின்றிருந்தான். அருகில் செல்ல செல்ல கனல்விழியின் கால்கள் பின்ன தொடங்கியது.

இன்னும் நாலே எட்டுவைத்தால் கதிரவனுக்கு மிக அருகில் கனல்விழி. ஒவ்வொரு அடியாக மெல்ல மெல்ல எடுத்துவைக்க, சட்டென்று ஒலித்த கதிரவனின் கைபேசி இவளை காணாமலே எதிர்புறமாகக் கைபேசியுடன் பேசுவதற்காகச் சென்றிருந்தான்.

அவன் செல்ல செல்ல தான் கனல்விழியினால் மூச்சை சீராக உள்ளிழுத்து விட முடிந்தது.

“விழி, எதுக்கு இம்புட்டுப் பதட்டம். அவரு கிட்ட போறதுக்கே இம்புட்டு அச்சம்னா எப்படிக் காதல சொல்லி சம்மதம் வாங்கிச் சம்பந்தம் பணறதோ ? தைரியம் ரொம்ப முக்கியமடி விழி. கெத்தா கெத்தா இரு… ஸ்டெடி… பயப்படாத” என அவளுக்கு அவளே தைரியம் கொடுத்து மனதினில் பேசிக்கொண்டாள்.

இப்படித் தனக்குள் பேசியபடி சென்றவளை சட்டென்று பாண்டியின் குரல் தேக்கியது.

“சக்கர, டேய் வரது அந்தப் புள்ளடா…கோவில்ல கதிரவா அடிச்சானே…” என மெல்லமாகத் தான் முணுமுணுத்தான். ஆனால் அது விழியின் காதில் துல்லியமாக விழுந்தது.

“ஏன்டா வேறவொரு பொண்ணா இருந்தா இவன் இருக்கத் திசை பக்கமே தலைவச்சிருக்காது…இந்த பொண்ணு என்னடா மறுபடியும் வருது? ” எனச் சக்கரை அக்கரையாகக் கூற, அதற்குப் பாண்டி பதில் கூறுவதற்கு முன்னதாக அவர்கள் முன்பாகவே போய் நின்றாள் நம் நாயகி.

“சரிதா அண்ணன்மார்களா…. எல்லாப் பிள்ளைகளும் தலைவச்சுப் படுக்கக் கூட யோசிக்குங்க. நானும் அப்படித்தா… இப்ப வந்தது வளையல் வாங்க” எனப் பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட பாண்டி, “அப்படியா நல்லவேளை பாசமலரே… இல்லனா உம்மேல வர கோபத்தை எங்ககிட்ட காட்டு காட்டுனு காட்டிடுவான். தப்புச்சுட்டோம்டா மாப்ள” என கூறினான்.

சட்டென்று அவளுடைய அண்ணன் என்ற அழைப்பில் அவளை அவசரமாகத் தங்கையாகத் தத்தெடுத்துக்கொண்டனர்..

“எதுக்கு இம்புட்டு அவசரமா முடிவுக்கு வரீங்க? நான் இன்னும் முடிக்கல. தலைவச்சுதா படுக்கமாட்டேனு சொன்னே. ஆனா ஒரு கால் வைக்கலாம்னு இருக்கே” எனக் கூற,

“என்ன பாசமலரே சொல்லுற? காலா? புரியலையே” எனச் சக்கரை வினவ,

“ஆமா! கால். வலது கால் வச்சு அவரோட அம்மாக்கு மருமகளாகலாம்னு முடிவுபன்னிருக்கே”

“ஆத்தாடி! இது முடிவா? இல்ல எங்க சோலிய முடிக்கச் சதியா ?” என வாய்விட்டு அலறினான் பாண்டி.

“ஏ அண்ணே இப்படிப் பயப்படுறீங்க?”

“பின்ன என்னமா? அவனுக்குச் சம்சாரியம்லாம் செட்டே ஆகாது. சாமியார்தான். அவனுக்குப் பொண்ணுங்களே பிடிக்காது….” எனக் கூறிமுடிக்கவும், கதிரவன் கைபேசி அழைப்பை துண்டிக்கவும் சரியாக இருந்தது.

“மாப்ள, கதிர் வராண்டா” என உஷார் படுத்த, “தங்கச்சி ஓடிடுமா… உன்ட பேசுற பார்த்தா கோவப்படுவான்” என அவளைக் கிளப்ப முயல, விழிக்கு சட்டென்று மனதில் பாரம் ஏறிக்கொண்டது.

கனத்த மனதுடன் வேகமாக வளையல் வண்டிக்கருகே சென்றாள். பெண்கள் இருக்கும் திசை ஏறெடுத்து பார்க்காத காரணத்தினால் விழியைக் கதிரவன் கவனிக்கவில்லை.

அவளுடைய மனம் முழுவதும், அவருக்குப் பெண்களைப் பிடிக்காதா ? ஏன் ? என்ற கேள்வியே…. பரப்பிவைக்கப்பட்டிருந்த கண்ணாடி வளையல் குவியலுகளுக்குள் மனம் செல்ல மறுத்தது. வளையலை பார்ப்பதை போல, சற்று தள்ளி அமர்ந்திருந்த கதிரவனை விழி அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பாண்டியும் சக்கரையும் ஏதோ கூற அதற்குக் கதிரவனின் கடினமான உதடுகள் அளவாகப் புன்னகை சிந்த, அதற்குள் தன்னைத் தொலைத்துக்கொண்டிருந்தாள்.

இவளின் பார்வையைப் பாண்டியும் கவனித்துவிட்டான்.சக்கரையிடம் செய்கை காட்ட, அவனும் கனல்விழியின் ஏக்கப்பார்வையைக் கவனித்துவிட்டான்.

இருவருக்குமே, கனல்விழியைத் தெரியும்….

பஞ்சாயத்து முடிந்ததற்கு மறுநாள் முருகேஷனுடன் கந்தசாமி தேவி எனக் கிளம்பும் தருவாயில் கடைவீதியில் பார்த்திருந்தனர். என்னவோ பார்த்தா அன்றே கள்ளம் கபடம் இல்லாத தெளிவான அவளுடைய முகம் அவர்கள் மனதில் பதிந்து போனது. முருகேஷனுடன் பேச, அவர்களை விழியிடம் அறிமுகப்படுத்த, இவளும் “ரொம்பத் தேங்க்ஸ் அண்ணா” என உணர்ந்து இரண்டு பேரிடமும் நன்றி சொல்ல ஓரிரு நிமிடத்தில் பேசிய ஓரிரு வார்த்தைகளில் கனல்விழி மீது இனம்புரியாத நற்பெயர் உண்டாகியது.

அதன் பிறகு ஓரிருமுறை கனல்விழியின் ஊருக்கு கடைக்கான பலசரக்கு எடுக்கப் போகும்போது இருவரும் பார்த்திருந்திருக்கின்றனர். அப்போதும் அவளுடைய நிமிர்ந்த தோற்றத்தோடு அதே வெள்ளந்தி சிரிப்போடு கடந்துவிடுவாள்.

ஆவுடையார் கோவிலில் கதிரவன் அடித்த பிறகே, அது கனல்விழி என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவள் யாரென்று சொல்லவரும்போது கதிரவன் அதைக் கேட்க தயாராக இல்லை.

“அவளைப் பத்தி என்ட பேசணும்னு நினைக்காதீங்க. அவ்ளோதா சொல்லுவேன்” என உறுதியாகக் கூறிவிட, அவன் கூறிய குரலிலிருந்த தொணி அவர்களை மேற்கொண்டு அந்தப் பேச்சை எடுக்கவிடவில்லை.

கனல்விழியின் மீது நல்லெண்ணம் இருந்தது. ஆனால் அதற்குமேல் சிந்தித்ததில்லை. அந்தப் பெண் மனதில் கதிரவனுக்கான காதல் இருக்குமென்று அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை.

ஆனால் இன்று அவள் சொன்னதும் கதிரவனைப் பின்தொடரும் அவளுடைய பார்வையும், “அட! இது நடந்தா நிஜமா நல்லாத்தான் இருக்கும். பிள்ளைங்களே பிடிக்காதுன்னு சொல்லிட்டு இருக்கா… இவன ஆசைப்படற பொண்ணு வந்தா இவனையும் மாத்திடும்” என இருவரும் ஒரே திசையில் தனித்தனியாக யோசனையைப் பறக்கவிட்டனர்.

அவர்களின் யோசனையைக் கலைத்தது கதிரவனின் குரல்.

“மாப்புள்ளைங்களா… நம்ம ஊருலயே இறால் பண்ணை வைக்க நம்மள பாக்க ஒருத்தரு வராரு. ஓரெட்டு பாத்திட்டு வந்திடலாமா ?” எனக் கூப்பிட, கனல்விழியிடம் பேச இதைவிட ஒரு சிறந்த நேரம் அமையாது என்று உணர்ந்தவர்கள், வரவில்லை என்று கோரஸ் பாடினர்.

“என்னங்கடா? இரெண்டு பெரும் நான் கூப்பிடாட்டியும் பின்னாடியே வருவீங்க ? இப்ப என்னாச்சு ?”

“உன்னோட பொன்டாட்டிட பேச போறோம் மச்சி” எனப் பாண்டி யோசிக்காமல் சொல்லிவிட,

சக்கரை அவன் கால் மீது சட்டென்று ஓங்கி மிதிக்க வலியில் அலறியபடியே, “ஒரு புளோவ்ல சொல்லிட்டேன் டா… அதுக்கு இப்படியா மிதிப்ப? இருடி உன்னவச்சுக்கிறே” எனச் சக்கரையின் காதோரமாய்க் கிசுகிசுத்தான்.

“அடே பாண்டி…இப்ப என்ன சொன்ன நீ? மறுபடியும் சொல்லு” என முறைத்தபடி கேட்க, “ஹீ ஹீ மாப்ள… இந்தச் சோமாஸ் பாண்டி ஒருவாட்டி சொன்னா ஒரேவாட்டித்தா சொல்லுவா. இரண்டாவது தடவா கேட்டா…” என என்னசொல்வதென்று தெரியாமல் எதையோ உளறியபடி சமாளிக்க,

“இரண்டுவாதுவாட்டி கேட்டா…” என்ற கேள்வியுடன் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு ஓரடி முன்வர, “இரண்டாவதுவாட்டி கேட்டா மறந்துடுவேன்னு சொல்ல வந்தேன் மச்சி” எனக் கூற, இடையே ஆபத்பாண்டவனாய் உள்புகுந்தான் சக்கரை.

“கதிரவா, நீ என்ன இவன்ட கேள்வி கேட்டுட்டு இருக்க. அவ போண்டா டி சாப்பிட என்ன கூப்பிட்டான். அதைத்தான் சொன்னான். அதுவும் அவனோட சொந்த காசுல வேற வாங்கித் தரானாம். அதா நானு வரலன்னு சொன்னே. இத தவிர அவ என்ன சொல்லப்போறான் ? இல்ல நான்தான் என்ன சொல்லபோறே ?” என ஒருவாறாக முடிக்க,

“ஓ…போண்டா டி ஆ? அத ஏன் டா பொண்டாட்டின்னு சொன்ன… உதைபடப் போற பாரு” எனக் கூறிவிட்டு நடக்க, “ஸ்ஸ்… இப்பவே கண்ண கட்டுதே” எனப் பாண்டி பெருமூச்சு விட்டான்.

கதிரவனை ஒருவழியாகச் சமாளித்து அனுப்பிவிட்டு வளையல் வண்டிக்காரன் அருகே வந்து பேசுவது போலக் கனல்விழியிடம் தெளிவாகக் கேட்கவேண்டும் என நினைத்தபடி பாண்டியும் சக்கரையும் அருகே வந்தனர்.

“வண்டிக்காரரே… எங்க அம்மாக்கு புது டிசைன் வளையலா காட்டும்…” என வந்துணிக்க,

“புதுசாத்தானே..? எக்கச்சக்கமா இருக்கு. இந்தா இது அனுஸ்கா வளையல்” எனக் கூற, கனல்விழியைப் பார்த்துக்கொண்டே அவர் சொன்னதைச் சரியாகக் காதில் வாங்காத பாண்டியோ, “என்னது குஸ்காவா ? எங்க எங்க” எனக் கேட்டுவைக்க, வண்டிக்காரர் முறைத்த முறைப்பில், ஈஈ என்று பல்லைக்காட்டியபடி “சரி அண்ணே சரி அண்ணே…வேலையப்பாரு. அந்த…. அந்த அம்மா வளையல் கேக்குது கட்டிக்கொடு அண்ணே” எனக் கூறியபடி அங்கிருந்து நழுவ போக, சக்கரையோ கனல்விழியிடம், “தங்கச்சி வா…இருட்டாகிடுச்சு. நாங்க வந்து விட்றோம்” எனப் பொதுவாக அழைக்க, கனல்விழி முல்லையைப் பார்க்க, “நம்ம சக்கர அண்ணாதான, அம்மா ஒன்னு சொல்லாது. வா மேலவீதி இருட்டிக்கிடக்கும். லைட் கம்பத்துல பல்பு பீஸ் போய்டுச்சு. வெளிச்ச பத்தல. இவுங்க வந்தா நல்லதுதா” எனக் கூற அவர்களுடன் வள்ளியும் இணைந்துகொண்டாள்.

வள்ளியும் முல்லையும் முன்னாடி நடக்க, கனல்விழியிடம் பேசியபடி சக்கரையும் பாண்டியும். வீதியில் வெளிச்சம் குறைவு அதோடு அனைவரும் டிவி சீரியலில் மூழ்கிவிடும் நேரமாதலால் மேலவீதியில் நடமாட்டம் அதிகமில்லை.

அது இவர்களது பேச்சுக்கு கண்ணு மூக்கு வைக்கும் சாத்தியக்கூறை குறைத்துவிட்டது.

“ஏம்மா தங்கச்சி…நீ சொன்னது நிசந்தானா?”

ஆம் என்பதாய் தலை அசைத்தாள்.

“இதெல்லா ஒத்து வருமான்னு யோசிச்சியாமா ?”எனச் சக்கரை வினவ

“வாழ்ந்தா அவர்கூட மட்டும்தா” என்ற வார்த்தைகளில் பாண்டி சக்கரையின் மற்ற கேள்விகளை அடியோடு நிறுத்திவிட்டிருந்தாள்…

“எல்லாச் சரிதா… ஆனா நடக்குமானுதா தெரியல. இதுல நீ நிறையா பொறுமையா இருக்கணும். நிறையா நிறையா போராடனும்” எனச் சற்றே யோசனையாகச் சக்கரைக்கூற, “ஏண்ணா ? குடும்பத்துல யாரும் எதுப்பாங்களோ ?” என இவளும் சற்றே கவலையாகக் கேட்க,

“குடும்பத்துல எதுத்தா கூடப் பாத்துக்கலாம். ஆனா குடும்ப நடத்த போறவனே எதுப்பான். அவனை மல்லுக்கட்டி சரிக்கட்டி அதுக்கப்பறம் தாலிகட்டி…ஸ்ஸ்ஸ்சப்பா இப்பவே கண்ணைக்கட்டுதே அப்படினு ஆகிடும்” என இம்முறை பாண்டி சொன்னான்.

சொன்னவனுக்கே மூச்சு வாங்கியது….

“ஏ அப்படி? அவருக்குக் கல்யாணம் பிடிக்காதா ?”

“அவனுக்குப் பொண்ணுங்கள பிடிக்காது பாசமலரே! பொண்ண பிடிச்சாத்தான கல்யாணம்” எனப் பாண்டி சொல்ல,

“ஏன்? ஏதாச்சு காதல் தோல்வியா ?” எனப் பரிதவிப்புடன் கேட்டாள். பாண்டியின் பதில் வருவதற்குள் ஏனோ படபடப்பாக உணர்ந்தாள்.

“உம்..க்கும்… உங்கக்கா எங்கக்கா அவரக்கா… அவனுக்குக் காதலூனா பாவக்கா. இவனுக்குக் காதல்னு ஒன்னு வந்தாத்தானே அது தோல்வி அடைய. இவனுக்குப் பொண்ணுங்கனா பிடிக்காது” என்று கூறியவன் பாண்டியே

“அப்பாடா…. அப்படினு ஒரு நிமிசமாச்சும் நிம்மதியா இருக்கவிடுறீங்களா? இதோ பாருங்க அண்ணா… என்ன விஷயம்னு சட்டு புட்டுன்னு சொல்லுங்க. சும்மா ஜவ்வுமிட்டாய் மாதிரி இழுக்காம” எனப் பொறுமை இழந்தவளாய் இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

“அட என்னமா? நாங்க சொல்றதெல்லாம் கேட்டு சாக் ஆவணு பாத்தா காண்டாகுற. ஒரு கவலையே இல்லையே உன்ட” எனப் பாண்டி இடையில் புகுந்து சந்தேகம் கேட்க,

“இதோ பாருங்க… இந்தக் கவலைப்படறது, கண்ண கசக்குறதெல்லாம் எனக்குச் செட் ஆகாது . அவர்க்குக் கல்யாணமும் ஆகல. அவரு மனசுலயும் யாருமில்ல. அதுனால இதுல கவலைப்படச் சாக் ஆக ஒண்ணுமே இல்ல. எது எப்படினாலும் அத நான் பார்த்துகிறே. இப்ப விசயத்த சொல்லுங்க ?”

“நீ அவனுக்கு ஏத்த ஜோடிதா. ஏனா, அவனுக்குக் கண்ண கசக்குற பொண்ணுங்கள சுத்தமா பிடிக்காது. ஆனா உனக்குதா அழுகறதே பிடிக்காதே. அதுனால உனக்கு அவனுக்கு ஒத்து வரும்னு தோணுது.” எனச் சக்கரை கூற,

“சூப்பர் அண்ணே! வந்ததுல இருந்து இப்பதா நல்ல வார்த்த சொல்லிருக்கீங்க”

“சரிம்மா! அடுத்த என்னபண்ணலாம்னு இருக்க ?” என அவர்கள் வினவ,

கனல்விழி சொல்ல, அவளின் பாசமலர்கள் கதறினார்கள்.

Advertisement