Advertisement

மகனோ தந்தையோ -5

“அய்யா கதிரு… என்னய்யா நடக்குது இங்க? நீ எதுக்குயா ஊரவிட்டு போவணு ?”  எனக் கேட்க, “அம்மா நீ எதுக்குப் பஞ்சாயத்துக்கு வந்த? உன்னோட தலகட்டு தலைவர பாரு…பாத்தே உன்ன பஸ்பமாக்கிடுவாரு போல. மொத கிளம்பு. மிச்சத்தை நாளைக்குத் தோப்பு வீட்ல பேசிகலாம்” என  தாழ்வான குரலில் முணுமுணுத்தபடி அவரை அங்கிருந்து அனுப்ப முயல, அவரோ பிடிவாதமாக நிற்க, இந்தக் காட்சியைக் கனல்விழியும் கண்டாள்.

அவள் மனதில் தன்னால்தான் என்ற எண்ணம் மேலோங்கியது. ஏனோ பார்வதி அம்மாவின் அழுகை அவளை அசைத்தது.

இதற்கிடையில் ஒரு பெரியவர், “என்னப்பா கதிரு, ஏது மாத்தி சொல்ல நினைக்கிறியா ? பஞ்சாயத்த முடிச்சுவிட்டரலாமா  ?” என வினவ,

பார்வதி ஒரு தவிப்பு கலந்த பார்வையை மகன் மீது நிலைக்கவிட, கண்களால் மெல்ல ஆறுதல் சொல்லியவன், “எந்த மாற்றமும் இல்ல. தப்பு செய்யாம தல குனிஞ்சு மன்னிப்பு கேட்டுதா இந்த ஊருல இருக்கணும்னு எந்த அவசியமும் எனக்கில்ல.

அப்படி மன்னிப்புகேட்டு தான் இருக்கணும்னு வந்துச்சுனா அதுக்கு என்னோட மனசாட்சி ஒத்துக்காது என்ன பெத்த அம்மாவும் ஒத்துக்கமாட்டாங்க.

அவுங்களுக்கு அவுங்க புள்ளையோட மரியாத தாங்க முக்கிய” என லிங்கத்தைப் பார்த்துக்கொண்டே, பார்வதியிடம் கண் சிம்மிட்டியபடி லேசான முறுவலுடன் கூற, அவனின் செய்கையில் பார்வதி கூடக் கண்ணீரை உதிர்த்தபடியே லேசாகப் புன்னகைத்தார்.

அந்தச் சிறு நிகழ்வு, தாய்க்கும் மகனுக்கும் உள்ள அலாதியான அன்பின் வேராய் கனல்விழிக்குத் தெரிந்தது.

கூட்டம் முடிந்ததென்று, மகேஷின் கூட்டத்தார் அங்கிருந்து நழுவ போக, “எங்கய்யா போறீரு ? எல்லாரு அப்படியே நில்லுங்க” என உரக்க ஒலித்தது லிங்கத்தின் குரல்.

“அதா பஞ்சாயத்துல தீர்ப்பாயிடுச்சுல…” என வாய்க்குள்ளே மென்னு முழுங்க, “நீங்க கதிர் மேல கொடுத்த பிராத விசாரிச்சாச்சு. கதிரவ உங்க மேல கொடுத்த புகாரை விசாரிக்கணும்ல” எனத் திட்டவட்டமாகக் கூற, தங்களது பெண்களைப் பஞ்சாயதத்திற்கு அழைத்து வர நேரிட்ட பெற்றோர்களும் ‘ஆமா ஆமா ‘ எனக் குரல்கொடுக்க, மகேஷ் சுந்தர் மற்றும் அவனுடைய கூட்டாளிகளின் முகம் வெளிற தொடங்கியது.

“உங்க பசங்க மேல கதிரவப் பிராது கொடுத்துருக்கா. அதுக்கு நம்ம முனுசாமி அய்யாவும் சாட்சி. இப்ப பிள்ளைங்களைப் பெத்தவங்களு தப்புப் பண்ணவனுகளுக்குத் தண்டன வேணுன்னு சொல்லிட்டாங்க. அதுனாலா இதுல பேச எதுவு இல்ல.

உங்க பிள்ளைங்களுக்கான தண்டன என்னனு இன்னு செத்த (சில) நேரத்துல பஞ்சாயத்து கூடி உத்தரவு கொடுக்கு. பொறுங்க” எனத் துணை பஞ்சாயத்து தலைவர் கூற, முழி பிதுங்கி மகேஷின் மாமா நின்று கொண்டிருந்தார்.

தேவை இல்லாமல் பஞ்சாயத்தைக் கூட்டி தவறு இழைத்துவிட்டோமோ எனச் சிந்தித்தவராக நின்றிருந்தார். மகேஷும் அவனுடைய குடும்பமும் விடுமுறைக்கென வந்திருந்தது. நாளையோ நாளை மறுநாளோ கிளம்பிவிடும். பஞ்சாயத்துத் தீர்ப்புப் பக்கத்தூருக்காரனை எங்கே பாதிக்கப் போகிறது ? தாம் தான் தேவை இல்லாமல் உள்ளூர் ஆட்களைப் பகைத்துக்கொண்டோமோ ? என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தார்.

சொந்தத்திற்காகச் சுற்றத்தை பகைத்துவிட்டது பெரும் தவரென்று அவர் உணர்ந்திருந்த போது நிலைமை கைமீறி விட்டிருந்தது.

அவர்களுக்கான தீர்ப்பையும் துணை பஞ்சாயத்து தலைவரே அறிவித்தார். லிங்கத்தின் முகம் மிகவும் கடினமாக இருந்தது.

அவருக்குப் பார்வதி பஞ்சாயத்திற்கு வந்ததில் கொஞ்சமும் இஷ்டமில்லை. பெரிய வீட்டுபெண்கள் பஞ்சாயத்து வருவதை அவர் ஏற்கமாட்டார். ஆனால் தன் மனைவியை வரவைத்த கதிரை என்ன செய்யலாம் என்ன செய்தாலும் தகும் என்று தகித்துக்கொண்டிருந்தார். வேண்டாத மருமக கைபட்டா குத்தம் கால் பட்டா குத்தம் போல இங்கே வேண்டாத மகன் கதிரவன். அவன் என்ன செய்தாலும் லிங்கத்திற்கு அது பிடிக்காத ஒன்றே.

“தீர்ப்பு என்னனா… கதிரவனுக்குக் கொடுத்த அதே தீர்ப்பு தா…. இன்னும் சொல்லப்போனா பிள்ளைங்களுக்காகத் தப்ப தட்டிக்கேட்ட கதிரவனவிட இந்தப் பசங்களுக்குக் கடுமையான தண்டன தா கொடுக்கனு.

இருந்தாலு ஒரே தீர்ப்பையே கொடுக்கலாம்னு பெரிய மனுஷனுங்க எல்லாக் கூடி முடிவெடுத்துருக்கோம்” எனக் கூற அனைவர்க்கும் பக்கென்று இருந்தது.

இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை பண்ணுமாறு கோரிக்கை விடுக்க, இப்போது லிங்கம் தடாலடியாக அறிவித்தார்.

“படிக்கிற வயசு பிள்ளைங்ககிட்ட வம்பு வளந்தவங்கள போலீஸ்ல புடிச்சு குடுக்காம இந்தத் தண்டன தரதே குறவுதே… உம்ம மவனுங்கள பிள்ளைங்களைப் பெத்த அப்ப ஆத்தாட்ட மன்னிப்பு கேட்க சொல்லுங்க. இல்ல மூணுவருச இந்த ஊருக்கூட ஓட்டும் கூடாது. உறவு கூடாது.

இதயு மீறினா உங்க குடும்பத்துக்கே அதே தண்டனைனு பஞ்சாயத்துல முடிவு பண்ணியிருக்கு. சம்மதம்னா ஊரோட ஒத்து இருங்க. இல்ல ஒதுக்கி வச்சிடுவோ” எனத் திட்டவட்டமாக அறிவிக்க, கைகளைப் பிசைந்தபடி அவரவர் மகன்களைச் சாடியபடி நின்றிருந்தனர்.

வேறு வழியே இல்லாமல் தங்களின் மகன்களை ஊரைவிட்டு தள்ளி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தம் தம் மகன்களை மன்னிப்பு கோர சொல்ல, மகேஷின் மாமானும் அவன் வெளியூராக இருந்தாலும் போலீஸ் அது இதுவென்று பேச்சை எடுத்திருந்ததால் வேறு வழியே இல்லாமல் அவர்களையும் சமாளித்து மன்னிப்பு கேட்க வைத்திருந்தார்.

அனைவரும் மன்னிப்புக் கேட்டிருந்த போதும் ஊரோடு ஒத்திருக்கலாம் என்ற நிலையிலிருந்த போதும் கூட அனைவரும் ஒருவித இறுக்கமான நிலையிலிருக்க, சண்டியாராக ஊரை சுற்றிய இளவட்டங்களோ தலை குனிந்து நின்றனர். ஆனால் அவர்களுக்கு அப்படியே எதிராய் ஊரை விட்டு அடுத்து மூன்று வருடம் ஒதுங்கி இருக்கப் போறவனோ அதே திமிருடன் மிடுக்காக நின்றிருந்தான். ஆம் மகேஷை சேர்ந்தவருக்கு அது திமிர்தான்.

ஆனால் அவனின் தோரணை முருகேசனுக்கும் கந்தசாமிக்கும் திமிராகத் தெரியாமல் மாறாகத் தன்மானமாகத் தெரிந்தது. பெண்களைச் சீண்டி தங்களின் வீரத்தை காட்டும் இளசுகளின் மத்தியில் இவன் உண்மையான வீரனாகத் தெரிந்தான்.

கூட்டம் கலையலாம் என்று அறிவிக்க, அனைவரும் தங்களுக்குள் பேசியபடி கலைந்து செல்ல பெண்ணைப் பெற்றவர்கள் ஒருசிலர் வந்து, “உனக்கு அப்படியே உன்னோட தாத்தா குணம்யா…” எனத் திருஷ்டி கழிப்பதை போலச் சொல்லி செல்ல, அதைக் கேட்ட பார்வதி, மகனை அடுத்த மூன்று வருடத்திற்குப் பார்க்க முடியாது என்பதை அறிந்தும் தன் கவலை மறந்து தன் தந்தையை மகனில் பார்க்க ஆரம்பித்தார்.

எனக்கு உயிர்தந்தவரே

நான் உயிர்கொடுத்தவனின்

உருவமாகவும்

நான் வாழ காரணமாகவும்

என் முன்னே.

என் சந்தோசத்தின் வேராக

உயிரின் பிடிமானமாக

என்னுள் உதித்தவன்

இன்று என் வாழ்வின்

கதிரவனாக……..

ஒருவழியாக அனைவரும் சென்றுவிட, முருகேசன் மற்றும் கந்தசாமியின் குடும்பமும் பாண்டி சக்கரையும் அவர்களோடு கதிரவனும் பார்வதியும் நின்றிருக்க, கதிரவன் அருகில் வந்தவர், “உன்னோட வயசு குறைவுதா ஆனாலு நீ செஞ்ச காரிய பெருசு கதிரவா… எங்கவீட்டு புள்ளைக்கு இம்புட்டு உதவி செஞ்சியே, அவ யாருனு உனக்குத் தெரியுமா ?, கண்ணு இங்க வா…” எனக் கனல்விழியை அழைக்க, அவள் வருவதற்குள், “இல்ல வேணா சித்தப்பா. அந்தப் புள்ள பேரு வெளில வர கூடாதுனு தான இவ்ளோ செஞ்சே. எதுக்கு இப்ப இங்க கூப்பிடறீங்க. யாருனு தெருஞ்சுகிட்டு நா என்ன செய்யப் போறே… அதெல்லாம் ஒன்னு வேணா. ஆனா ரொம்பத் தைரியமான பொண்ணு. அந்தத் தைரிய எப்பயும் குறையவே கூடாது. அது பொண்ணா பொறந்த ஒவ்வொருத்தவங்களுக்கு முக்கியம். குறிப்பா அழறது சுத்தமா ஆவாத வேல” என முருகேசனிடம் கூறினாலும் பார்வை மொத்தமும் பார்வதியிடமே.

இந்த விளக்கம் பார்வதிக்கு பல விஷயங்களைப் புரியவைத்தது. எதற்காகத் தன் மகன் இந்த விஷயத்தில் உள்நுழைந்தான் உட்பட. தன்னுடைய அழுகை தன் மகனை எத்தனை தூரம் பாதித்திருக்கிறதென்றும் புரிந்துகொண்டார். கூடிய வரையிலும் தைரியம் இல்லையென்றாலும் கூட மகன் முன்னிலையிலாவது திடமாக இருப்பது போலக் காட்டிக்கொள்ள வேண்டும் என உறுதி செய்துகொண்டார்.

அந்த நொடி பார்வதி தன் கண்ணில் துளிர்த்த நீரை கைகளால் துடைக்க, குற்ற உணர்வில் முதல் முறையாகத் துளிர்த்த கண்ணீர் துளியை ஏன் எதற்கு என்று தெரியாமல் கனல்விழியின் கைகளும் தானாகத் துடைத்தெறிந்து.

“அழமாட்டேன்” என்பதாய் விழியின் நெஞ்சம் பேசியது.

சூழல் சற்று இறுக்கமாகவே செல்ல, அதை விரும்பாத சக்கரை, “டேய்…ரொம்ப நேரமா கேக்கனும்னே இருந்தே. எப்படிடா அந்தச் சுந்தரோட அப்பா ஏற்பாடு பண்ணின அந்த மூணு ஆளுங்களையும் துரத்தின. அந்த ரோசாக்கா கூட அதோட அல்லக்கைய கூப்டுட்டு உடனே போய்டுச்சு. அப்படி என்ன தாண்டா செஞ்ச ?” எனத் தலையைப் பிய்த்துக் கொண்டு கேட்க, “அது சப்ப மேட்டர் மாப்பு. ரோசக்கா வீட்டுக்காரரு சிவகங்கை ஸ்வீட்டிய பாக்க போனாருனு சொன்னே. அதா மனுஷ பின்னாடியே போய் அடிவெளுத்திடுச்சு போல. யாரு யார அடிச்சாங்களோ தெரியல. ஆனா அடி விழுந்தது கான்போர்ம். பாத்தல வேட்டி சட்டலாம் எப்படி இருந்துச்சுனு …” எனப் பாவனையாகக் கூற, அனைவரும் சிரிக்க, சக்கரை மட்டும்,”அப்படியாடா… அப்போ அந்த மூணு முறுக்கு மீசையும் சுவீட்டி பாக்கதா போனாங்களா?” என வினவ, பலத்த சிரிப்புடன், “டேய் முறுக்கு மீசைங்க ஸ்வீட்டிய தேடி போகல. அது அவுங்க பொண்டாட்டிகிட்ட சொன்ன பொய்”

“அப்போ அவுங்க எதுக்கு போனாங்க?”

“சாப்பிடதா”

“என்ன சாப்பிடறதுக்கா? பஞ்சாயத்தை வச்சிட்டு சாப்பிடவா  ? அதெப்படி போனாங்க?”

“அவுங்கள போக வச்சே டா. ஒரு பரோட்டா வாங்குன இரண்டு பரோட்டா இலவசம்னு சொன்னே. அதா ஓட்டிட்டாங்க”

“என்னது ஒண்ணுக்கு இரண்டு இலவசமா? எந்த முட்டாப்பய கடைலடா குடுக்குறானுங்க ? எப்படிக் கட்டுப்படியாகு ?” எனத் தீவிரமாகச் சிந்திக்க,

“அட சக்கரப் அள்ளி கொடுக்குற வள்ளலை அப்படிப் பேசாதடா…சாமி கண்ண குத்திடும்டா.  அதோட  உன்ன நீயே முட்டாளுனு சொல்லலாமா?”

“என்னடா சொல்லுற?” எனப் பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டே வினவ,

“ஆமா மாப்பு. உன்னோட கடைக்குத்தா அனுப்புனே. கடைக்கார பையன்ட நீ கொடுக்கச் சொன்னதா சொல்லிட்டு வந்துட்டேனே. இப்ப உங்க ஐயனும் ஆத்தாவும் போனதும் விஷய தெரிஞ்சு உன்ன டின்னு கட்ட ரெடியா நிப்பாங்க பாரு”

“அடே! இததா நீ பாத்துக்கிறே நீ பாத்துக்கிறேன்னு சொன்னியா ? இருடா இன்னைக்கு உன்ன கொள்ளாம விடமாட்டே” எனத் துரத்த

“பரோட்டா தந்த பாரி வள்ளல்… வாழ்க வாழ்க” எனக் கத்தியபடி சிரிப்பினூடே பாண்டி ஓட, அவனைத் துரத்தியபடி சக்கரை ஓட, அங்கிருந்த நிலைமை தலைகீழாக மாறி அனைவரது முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

அந்தச் சிரிப்பு மறைவதற்குள் முருகேசனிடம் வருகிறேன் என்பதாய் தலை அசைத்துவிட்டு பார்வதியை அழைத்துக்கொண்டு போய் வீட்டில் விடுவதெற்கென அவன் சென்றுவிட, கனல்விழிக்கு கதிரவன் மீது அபரிவிதமான மரியாதை தோன்றியது.

அடுத்துவந்த நாட்கள் வேகமாக உருண்டோடியது.

தேவி விழியை ஊருக்கு அழைத்துச் சென்றவர், தண்டனை வாங்கிய மகேஷும் சுந்தரும் மீண்டும் பழி தீர்க்க நேரம் பார்ப்போர்களோ என எண்ணியே கொடியின் ஊருக்கு சில காலம்  போகக்கூடாது எனக் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்.

பாண்டியும் சக்கரையும் கதிரவனைப் பிரியவேண்டிய நிலையிலும் அவன் கலங்காமலிருக்க ஏதாவதொரு குரங்கு சேட்டையைப் பண்ணி அவனைச் சிரிக்க வைத்து சிரித்துக்கொண்டிருந்தனர். பார்வதி கூடத் தனிமையில் மகனின் பிரிவை எண்ணி துயரங்கொண்டாலும் அவன் முன்னால் தன்னைத் திடமாகவே காட்டிக்க முயற்சி எடுத்தார்.

அதோ இதோவென்று அந்த ஆண்டு முழுப் பரிட்சையும் அனைவருக்கும் நிறைவு பெற, தேவி பிடிவாதமாக விழியை காரைக்குடியில் உள்ள ஒரு புகழ்பெற்ற பெண்கள் மேல்நிலை பள்ளியில் சேர்த்துவிட ஏற்பாடு செய்திருந்தார். விடுதியில் தங்கி படிப்பது விழிக்கு சற்றே விருப்பம் இல்லையென்றாலும், தேவி படிப்பை நிறுத்தும்படி கூறவில்லையே, அதுவே போதும் என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.

கதிரவன் கிளம்பு நாள் நெருங்க நெருங்க பார்வதி பரிதவிக்கத் தொடங்கினார் வீட்டிற்குள் மட்டும்.

“என்ன அண்ணி, காலங்காத்தால காப்பித் தண்ணி குடுப்பீகனு வந்தா கண்ணகசக்கிட்டு உக்காந்துருக்கீங்க. வீடான வீட்டுல காலங்காத்தால விடியா மூஞ்சியாட்ட தொங்க போட்டு வச்சிருக்கீங்க” என நக்கலாகக் கூறியபடியே பல்கூடத் தேய்க்காமல் அறையிலிருந்து நேராக அடுக்களை நோக்கி வந்திருந்தாள் பாரிஜாதம்.

“என்னமா? என்ன உங்க அண்னிட்ட கேட்டுட்டு இருக்க ?” எனத் தங்கையைத் தொடர்ந்து லிங்கம் வர, “என்னத்த கேட்க ? ஒரு காபிக்கு தா அண்ணே இந்தப் பாடு. அவுங்க மக ரவுடித்தனம் பண்ணிட்டு ஊரவிட்டு போனா அதுக்கு நம்மல்லா புன.

நா வீட்டோட இருக்குறது, எம்புருஷ இந்தத் தோப்புத் துறவுலா பாக்குறது உன்னோட பொண்டாட்டிக்குச் சுத்தமா பிடிக்காது. நீ இல்லாட்டி என்ன மதிக்கக் கூட மாட்டாது. இப்ப மகனுக்கு எதிரா தீர்ப்பு சொல்லிட்டனு உம்மேல இருக்கக் கோவத்தை எம்மேல காட்டுது.

ரொம்பத் தலைவலிக்கிதுன்னு ஒரு காப்பித்தண்ணிக்கு தா வந்தே. அதுக்கு மூஞ்ச திருப்புராக. இதுக்குத் தான் அவுங்க அவுங்க வீட்ல இருக்கணும்னு சொல்றது. எங்கெளுக்கென்னத் தலையெழுத்தா… இங்கன வந்து உக்காரனும்னு. ஏதோ கூடப் பொறந்த பொறுப்பு ஒத்தையா அல்லாடுத்தேன்னு தான அந்த மனுஷன கூட்டிட்டு இங்க வந்தே. சொல்லுனே, உன்னோட மகன பாத்துக்கணும்னு தான எம்மவள கூட ஹாஸ்டெல்ல சேத்துவிட்டே.” என எங்கெங்கோ போய் எதை எதையோ சேர்த்து எப்படியோ முடிக்க, லிங்கத்திற்குச் சுறு சுறுவென்று கோவம் வந்தது.

வழக்கம் போலத் தங்கை சொல்வது மட்டுமே உண்மை என்று நம்பியவர் , பார்வதியிடம், “இதோ பாரு. நானு எம்புள்ள மாறனு முக்கியம்னா இங்க இரு. இல்ல அந்தக் கதிரவ தா வேணும்னா அவ பின்னாடியே போய்டு. உன்ன யாரும் இங்க பிடிச்சு வைக்கல.

மாறனு உன் வயித்துல தான பொறந்தா. இல்ல அவன தவுட்டுக்கு வாங்குனியா? மூத்தவ மேல இருக்கப் பாசத்த கொஞ்சமாச்சு இவ மேல காட்டிருக்கியா?” எனக் குதிக்க, மாறனும் லிங்கம் போட்ட சத்தத்தில் உள்ளிருந்து வெளியே வந்தான்.

மாறன் கதிரவனை விட இரண்டு வருடங்கள் சிறியவன். பயந்த சுபாவம் உடையவன். கதிரவனைப் போலக் கை பேசாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் வாய் பேச கூட யோசிப்பவன்…

அவன் பிறப்பிலே பயந்த சுபாவம் உள்ளவனா ? அல்லது பார்வதியை போலவே வளர்ந்த சூழல் அப்படி அவனை மாற்றியதா என்பதைப் பார்வதி இன்னமும் அறியமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.

கதிரவன் தோளுக்கு மேல் வளர்ந்தும் கூட இன்னும் அந்த வீட்டில் அவர் அடங்கிப் போக ஒரே காரணம் மாறன் தான்.

லிங்கத்திற்குக் கதிரவன் மீது வெறுப்பை உண்டாக்கியதை போல மாறன் மீதும் லிங்கத்திற்கு வெறுப்பைப் பாரிஜாத்தால் வரவைக்க முடியவில்லை. ராசி இல்லாதவள், அபசகுனம் எனப் பார்வதிக்கும் பார்வதி செய்யும் செயல்களுக்கும் பச்சை குத்தியவளால் மாறனுக்கும் அதே போல் என்ன முயன்றும் செய்ய முடியவில்லை. மாறன் லிங்கத்தின் அன்பு மகன். ஆனால் அதை ஒருபோதும் அவர் மாறனிடம் காட்டியத்திலை. அவருக்குக் காட்ட தெரியாதோ அல்லது அதுவும் பாரிஜாதத்தின் மாயமோ.

லிங்கத்திடம் மாறனின் நலனுக்குக் கண்டிப்பை காட்டு என்று கூறியவள் மாறனிடம் லிங்கத்தைப் பற்றிய பயத்தை விதைத்தாள். லிங்கத்தின் அதட்டலும் பார்வதியின் பயமும் கதிரவனின் ஒதுக்கமும் பாரிஜாதத்தின் வஞ்சக பாசமும் மாறனை ஒரு பயந்தாகொள்ளியாக மாற்றியிருந்தது.

அதற்கு அவளுடைய கணவன் மச்சக்காளையும் கூட்டு. அவ்விருவருக்கும் லிங்கத்தின் சொத்து முழுக்க ஆழ வேண்டுமென்ற பேராசை. ஆனால் லிங்கத்திற்கு இரண்டும் ஆண் பிள்ளைகளாகப் போய்விடப் பல வருடமாகத் திட்டமிட்டு ஒரு மகனை குடும்பத்தை விட்டு பிரித்தும் ஒரு மகனை பயந்த சுபாவம் உள்ளவனாகவும் வளர்ந்திருந்தனர்.

பார்வதி மாறனை நெருங்கும் போதெல்லாம் லிங்கத்திடம் ஏதாவது ஒன்றை கிளப்பி, “நீ விடு. அவன என் தங்கச்சி பாத்துக்கும். உன்ன விட நல்லாவே மாறன பாரிஜாததாலதான் பாக்க முடியும்” எனப் பெற்ற தாயை மகனிடம் அண்டவிடாமல் லிங்கத்தின் வாயலையே கூறவைத்து தன் திட்டங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தாள் லிங்கத்தின் தங்கை.

மாறனிடமோ பார்வதியை பற்றி, “உங்க ஆத்தாக்கு மூத்தவன் தா உசத்தி. நீ இல்ல” எனக் கூறி கூறி அவனிடமும் ஒரு தவறான பிம்பத்தைச் சித்தரித்து வைத்திருந்தாள்.

ஆனால் நேரில் பார்க்கின்ற மாறனுக்குத் தன் தாயை நினைத்தால் குழப்பம் மட்டுமே மிஞ்சும். அதுவும் வளர வளர பாரிஜாதம் சொல்வது உண்மையா ? தன் தாயை பார்த்தால் அப்படித் தெரியவில்லையே என்று அடிக்கடி மனம் குழம்பத் தொடங்கியது.

இருப்பினும் இத்தனை வருடங்களாகப் பயத்தை ஊற்றி ஊற்றி வளர்த்திருக்க, மாறனுக்கு எதற்கெடுத்தாலும் பயம் மட்டும் தான். தனக்கு வேண்டியதையே வாய்விட்டு கூறாதவன் தன் தாய்க்கு எதிராக நடப்பதை எப்படிக் கேட்பான்.

மாறனை பார்க்கும் பொழுது நமக்குத் தோன்றும் புகழ் பெற்ற வரி யாதெனில் ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவர் ஆவதும் , தீயவர் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே’.

மாறனின் இந்த மாற்றம் அன்னையின் வளர்ப்பால் இல்லை. அன்னை வளர்க்க முடியாததால். ஒருவேளை பார்வதி துணிந்திருந்தால் என்றோ இதற்கெல்லாம் ஒரு முடிவு வந்திருக்குமோ. அவரது பயம் அனைத்தயும் மாற்ற முடியாத நிலையில் வந்து நிறுத்தியிருந்தது.

“என்ன உம்மவ பின்னாடியே போறியா? ஆனா ஒன்னு. போனா மறுபடியும் இந்த வாசல மிதிக்கவே முடியாது” என இறுக்கமாகக் கூறினார். அவரின் இந்தக் கடினம் பார்வதி போனால் தனக்கொன்றுமில்லையென்றா ? அல்லது என்னை விட அவன் தான் உனக்கு முக்கியமா என்றா ?. அந்தக் கடினத்தின் காரணம் பார்வதியின் மீதிருந்த பிடித்தமின்மையா ? அல்லது பிரிந்திருக்க முடியாது என்பதா ? அவரின் செயல்களுக்கான விளக்கம் அவருக்கே வெளிச்சம்.

வழக்கம் போல எதுவும் பேச பிடிக்காமலோ பேசி இவர்களிடம் புரியவைக்க முடியாதென்பதாலோ சோர்ந்து அடுப்படிக்கு சென்றவர் பாத்திரங்களை உருட்ட தொடங்கிக் காபி கலக்க, பாரிஜாதம் காபியின் மனத்தைச் சுவாசித்தபடியே பார்வதியை நோக்கி வெற்றி பார்வை பார்த்து வைத்தாள்.

“அய்யா, நேரமாச்சா…” என வேக வேகமாகத் தோப்புவீட்டிற்குள் பார்வதி நுழைய, அவரின் தந்தை ராஜன் படத்தின் முன்னால், தீபம் ஏற்றி மானசீகமாக ஆசீ பெற்றுக்கொண்டிருந்த கதிரவனிடம், “தாத்தா ஆசீர்வாத உனக்கு எப்பவும் இருக்குயா” எனக் கூறியபடி கையிலிருந்த வங்கி கணக்குப் புத்தகத்தைக் கதிரவன் கைகளில் திணிக்க என்ன என்பதாய் அவன் பார்த்து வைத்தான்.

“அய்யா…இதுல உங்க தாத்தா அந்தக் காலத்துலயே நாலு இலட்ச ரூபா போட்டு வச்சுட்டாரு. அவருக்குப் பின்னாடி நடக்கப் போறது முன்னமே தெரிஞ்சதோ என்னவோ. இப்ப வட்டியோட சேத்து அதிகமாவே ஆகியிருக்கு.

இங்க இருந்தவரை உன்னோட படிப்பு செலவுனு இந்தக் கிராமத்துல ஒண்ணுமில்ல. அதுனால இந்தத் தொகைய நா எடுக்கவுமில்லை, வேற யார்டையும் சொல்லவுமில்ல. அவருக்கு மட்டும் தெரியும். ஆனா அவரு கண்டுக்கமாட்டாரு. உங்க அத்தைக்குத் தெரியாம இத்தனை வருஷமா பொத்தி பொத்தி வச்சிருந்தே.

இத நீ வச்சுக்கோ. படிப்புக்கு உபயோகமா இருக்கு. பத்தலனா அம்மாட்ட சொல்லு” என அவனின் கைகளைப் பிடித்தபடியே கூற, கலங்காமல் திடமாகவும் தெளிவாகவும் பேசும் பார்வதியை முதல் முறையாகக் கதிரவன் அங்கே பார்த்தான்.

அவனுக்கு அழுகை இல்லாமல் பேசும் பார்வதி புதிது. அந்தப் புதிய அவதாரத்தைப் பார்வதி எடுப்பதற்குக் காரணமே கதிரவன் தான். அன்று முருகேசனிடம் கூறிய வார்த்தை தான். கதிரவனுக்காகப் பெரிதாக எதுவுமே செய்யமுடியாத நிலையிலிருந்தவர், இப்போது அவனுக்காக அவன் முன்பாக மட்டுமாவது அழுகை கூடவே கூடாது என்று முடிவெடுத்திருந்தார்.

அவர்களின் பேச்சின் போதே அங்கு வந்து சேர்ந்த பாண்டியும் சக்கரையும் கூட அமைதியாகவே இருந்தனர்.

இத்தனை நாட்கள் ஒன்னும் தெரியவில்லை என்றாலும் இன்று கிளம்பும் தருணம் கனமாகவே அவர்களுக்கும் இருந்தது.

பேருந்தில் ஏற்றிவிட வழி அனுப்ப பார்வதியோடு சக்கரை பாண்டியும் வர, பார்வதி, “எப்பா பாண்டி… கதிரவனுக்குச் சாப்பாடு வாங்கிட்டு வா ராசா. கண்டிப்பா சாப்பிடனு அய்யா. ரோசத்த அன்னத்துமேல காட்டக்கூடாது எப்பவும் ” எனக் கூற, அவர்கள் சொல்லிமுடிப்பதற்குள் வேக வேகமாகச் சென்றவன் இட்லி கூடவே வடை பஜ்ஜி போன்ற பலகாரமும் வாங்கிவந்து கதிரவன் கைகளில் திணிக்க, பேருந்தும் நெருங்கி வந்துக்கொண்டிருந்தது.

சக்கரை லேசாகக் கண்லங்க, பாண்டியோ திருத் திருவென்று முழித்துக்கொண்டிருந்தான்.

“என்னடா முழிக்கிற?” எனச் சக்கரை வினவ,

“இல்ல கிளம்புற நேரத்துல நீ கதிருகிட்ட குச்சியால அடிவாங்குவியா? இல்ல கட்டையால அடிவாங்குவியா ? அப்படினு தான் யோசிச்சே மாப்பி”

“ஏன் டா?”

“பின்ன பொண்ணுங்க அழுதாலே காட்டு கத்துக் கத்துவான். நீ அழுதா என்ன செய்வா ?” என எடுத்துக்கொடுக்க,

“ஆமா மாப்பி. கொஞ்சம் சீரியஸ் ஆகிட்டே. சரி சரி” எனத் தங்களுக்குள் பேசிக்கொள்ள,

“என்னடா என்ன விட்டுட்டு அங்க பேசுறீங்க?” என்று வந்து நின்றான் கதிரவன்.

சக்கரை சொல்லாத என்பதாய் கண்ணசைக்க, பாண்டியோ கதிரவனிடம் என்ன சமாளிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

“என்னடா பாண்டி முழிக்கிற? என்ட எதுவும் சொல்லனுமா ?” என வினவ, மூக்கை மூக்கை உறிந்து வாசம்பிடித்த பாண்டி, “மாப்பு உன்ட ஒன்னு கேட்கவா ?”

“அட கேளு பாண்டி” எனக் கதிரவன் என்னவோ ஏதோவென்று கூற, சக்கரையும் கூட என்ன என்றபடி பார்த்திருந்தான்.

“ஒன்னுமில்ல மாப்பு. உன்ட கொடுத்த பார்ஸல்ல இருந்து கம கமனு சோமாஸ் வாட வருதுடா. ஒன்னே ஒன்னு எடுத்துக்கவா ?” எனப் பாவமாய்க் கேட்க,

“டேய்… நீ கேட்கவந்த அந்த ஒன்னு இது தானா?” எனக் கதிரவன் கடுப்பாகக் கேட்க

“ஏண்டா இரெண்டு கொடுக்கப் போறியா?” என ஆர்வமாகக் கேட்க, கதிரவன் முறைத்த முறைப்பில் சட்டென்று அடங்கியவனாகா,

“மாப்பு ஒய் டென்ஷன். ஒன்னே ஒன்னு தானடா கேட்டேன்? ஏண்டா உனக்குச் சாப்பிட வேணுமா ?” என மீண்டும் பாவமாகக் கேட்க, கதிரவன் சிரித்தே விட்டிருந்தான்.

பார்வதி சக்கரை என்று அனைவரும் சிரிக்க அந்தச் சூழலே அழகாக மாறியிருந்தது.சிரிப்பலைகளோடே கதிரவன் மதுரை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்திருந்தான்.

Advertisement