Advertisement

யாரிவனோ- 4

என் மரியாதை நிலைக்க

உன் சுயமிழந்து

செல்கிறாயே

நீ சுயமிழந்தாலும்

சுயம்பாய் மாறினாய் என்னுள்

உன் நினைவுகளை

என் நினைவில்

விட்டுச் செல்கிறாய்

இனி என்றும் பாதுகாப்பாக

உன் செயல் என் இருதயத்தில்

நன்றியுடன்

———- கதிரவனைக் கண்ட கனல்விழி

வீட்டிற்கு வந்த கனல்விழியினுள் கனலை போலவே கோபம் தகித்துக்கொண்டிருந்தது. “எவ்ளோ தைரியமிருந்திருந்தா லவ் பன்றேன்னு சொல்ல சொல்லிருப்பான். பொம்பள பிள்ளைங்கனா அம்புட்டு லேசா போய்டுச்சா. அவன…. இன்னு நாலு சாத்து சாத்திருக்கணு. ஆனா அதுக்குள்ள இடைல ஒருத்தவங்க வந்தாங்களே.

அவுங்க யாருனு கூட நா பாக்கலியே. எவ்ளோ உசரம். அவுங்க பின்னாடி நா முழுசா மறஞ்சே போய்ட்டேன். ஆனா அவுங்க மட்டும் வராட்டி அந்தப் பொறுக்கி எருமைங்க அம்புட்டு என்ன சுத்தி வளச்சுருப்பானுங்க” என நினைக்க அவளுடைய தைரியத்தையும் மீறி கண்ணீர் முணுக்கென்று வந்துவிட்டிருந்தது.

கந்தசாமி எத்தனை தைரியத்தைப் போதித்திருந்த போதும் அவளின் வயதிற்கு இந்தச் சம்பவம் பெரிதே. கூட்டமாக அவளைவிடப் பெரிய ஆண்கள் அவளைச் சுற்றி வளைக்க வந்த நொடியை நினைத்துக் கோபம் கண்ணீர் பயம் என்று அனைத்துமே வந்தது. மனதுக்குள் கோவத்தோடு பயமும் லேசாக வளர தொடங்கியிருக்கச் சரியாக முருகேசனை கொடி அவசர அவசரமாகத் தோப்பிலிருந்து அழைத்து வந்திருந்தாள்.

‘அப்பா’ என்று ஆரம்பித்து முல்லை கொடி அனைத்தையும் கூற, முருகேசன் வந்த நொடி விழிக்கு இன்னும் அழுகை பெருகியது. கந்தசாமி அந்த இடத்தில் இல்லையே. மாமாவும் அத்தையும் என்ன சொல்வார்களோ ஏது சொல்வார்களோ ஒரு வேலை தன் அன்னையைப் போல ”அடக்க ஒடுக்கமா போயிருந்தா, உன்ட எப்படி ஒருத்தன் இப்படிப் பேசவருவா ?” எனத் தேவி கேட்பதை போலக் கேட்டு வைப்பார்களா என்றெல்லாம் அந்த நொடி எண்ண தொடங்கியிருந்தாள்.

உடனே தன் தந்தையிடம் ஓட வேண்டும் போல இருந்தது. பதினான்கு வயதே நிரம்பப்பட்ட சிறு பெண்ணின் மனநிலை அப்படித் தானே இருக்கும்.

ஆனால் கனல்விழியின் பயத்தை முருகசனின் வார்த்தைகள் நொடியில் களைந்தன.

“விழி… நீ எதுக்கு பாப்பா அழுகுற. உன்ட வம்பு வளத்தவன கதறவிடல எம் பேரு முருகேச இல்ல. கண்ண தொட மொதல்ல” என அவளுடைய தலையை வருடிக்கொடுக்க, முருகசனின் மீதிருந்த பாசம் அந்த நொடி மரியாதையுடன் கலந்து பன்மடங்கு ஆகிற்று விழியின் மனதில்.

கையோடு கந்தசாமிக்கு அழைத்துத் தகவல் கூற, உடன் தேவியும் புறப்பட்டார். தந்தைக்காகக் காத்திருந்த விழியின் செவியில் வாசலில் யாரோ அழைக்கும் சப்தம் கேட்க, ஊருக்குள் தகவல் சொல்பவன் வந்திருப்பதாகக் கொடி கூறினாள். காதை பட்டை தீட்டி கூர்மையாக உற்று கேட்க, செய்தி இதுதான்.

“முருகேசண்ணே, ராவுக்கு (இரவு) பஞ்சாயத்தைக் கூட்டிருக்காங்க. எல்லாரு வீட்லயு சொல்லிட்டு வர சொன்னாங்க. வரப்ப உங்க பொண்ணையும் புதுசா வந்துருக்க உங்க உறவு பிள்ளையையும் வர சொன்னாங்க” எனக் கூற, விஷயம் கை மீறிவிட்டிருந்ததை முருகேசன் உணர்ந்தார்.

விழிக்குப் பஞ்சாயத்தைப் பற்றிப் பிரமாதமாக எந்தவொரு எண்ணமும் இல்லை. ஆதாலால் குறிப்பாகப் பெண்பிள்ளைகளை அழைத்து வர சொல்லியிருப்பதின் வீரியம் அவள் உணரவில்லை. அவளின் தைரியமும் கந்தசாமியின் வருகையில் தான், பயமும் அவரின் வருகையில் தான். அதாவது அவருடன் வந்துகொண்டிருக்கும் தேவியைக் குறித்த பயம்.

“வந்தது அம்மா என்ன சொல்லு” என்பது மட்டுமே விழியின் எண்ணமாக இருந்தது. பஞ்சாயத்துக்குச் செல்லவேண்டும் என்று மட்டும் தெரிந்துகொண்டவள், அதற்கு மேல் அதைப் பற்றி யோசிக்கவில்லை.

ஆனால் கனல்விழியைப் பற்றி மட்டுமே மகேஷின் குடும்பம் யோசித்துக்கொண்டிருந்தது. “எவ்வளவு திண்ணக்கமிருந்தா அந்தக் கழுத எம்மவன அடிச்சிருப்பா?” என ஏகத்துக்கும் மகேஷின் அப்பா குதிக்க, மகேஷின் மாமனும் அவனுடைய மகன் சுந்தரும் அதாகப்பட்டது மகேஷை சூடேற்றிவிட்டவனும் பக்க வாத்தியங்களாக மாறி கனல்விழியைப் பஞ்சாயத்தில் அசிங்கப்படுத்தும் முடிவோடு இருந்தனர்.

இதில் மகேஷின் அம்மா மட்டும் விதி விலக்கு. “ஏண்டா சும்மாவா ஒரு பொண்ணு இப்படி அடிச்சிருப்பா ? நீ என்ன செஞ்சுவச்சனு மறைக்காம ஒளிக்காம சொல்லு” என வினவ, மகேஷை முந்திக்கொண்டு சுந்தர், “அத்த நீ என்ன அவைங்க பக்கமா பேசுற. நம்ம மகேஷு ஒன்னு பண்ணல. நேத்து பள்ளிக்கூடக் கண்காட்சில பிரச்சன. டீச்சர்கிட்ட அந்தப் புள்ள இவன தேவ இல்லாம மாட்டிவிட்ருச்சு.

அத என்னனு இன்னைக்குப் பதுசா தா மகேஷு கேட்டான். அதுக்குப் போய் அந்தச் சண்டைக்காரி இப்படிப் பண்ணிட்டா” என வேகா வேகமாக எட்டுக்கட்டி பேசினான்.

அவனுக்கு அவன் பாடு. எங்கே மகேஷின் உண்மை வெளியே வந்தால் கூடவே தானும் தன்னுடைய நண்பர்களும் பிள்ளைகளிடம் வம்பு வளர்கின்ற சங்கதியும் சந்திக்கு வந்துவிடுமோ என்ற அச்சமே அவனை முந்திக்கொண்டு பேச வைத்தது.

“நேத்து என்ன பிரச்சன?” என மேற்கொண்டு மகேஷின் தாய் கேட்ட வார்த்தைகள், அவரின் கணவன் போட்ட அதட்டலில் மீண்டும் தொண்டை குழியிலே புதைந்து விட்டிருந்தது.

“இதொண்ணு ஆவுற போலத் தெரில மச்சா, நீ நம்ம மகேச அடிச்ச புள்ளைய அசிங்கப்படுத்த வழிய சொல்லு” என மகேஷின் தந்தை வினவ,

“இருக்கு மாப்புள்ள. நம்மட்ட ஏகப்பட்ட விஷய இருக்கு. மொதல்ல அந்தப் புள்ள வெளியுறு, இன்னொன்னு வேற இன அவுங்க. அது மட்டுமில்லாம அந்தக் கதிரவ வேற உள்ள வந்துருக்கான்… அவனு அந்தப் புள்ளையு ஒரே சமூக. இத வச்சு அதுங்க இரெண்டையு சேத்து அந்தப் புள்ளைய வாழ்க்கை முழுக்கத் தல நிமிர விடாமா செஞ்சு காட்டுறே மாப்புள. அதுக்கான எல்லா ஏற்பாடு செஞ்சுட்டே. பஞ்சாயத்துல பிராது கொடுத்துட்டு வந்த நிமிஷமே இதுக்கான வேலையில இறங்கிட்டே” எனக் கூற, மகேஷும் சுந்தரும் ஒருவரை ஒருவர் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்துக்கொண்டனர்.

“அப்பா, அப்படினா அவுங்க ரெண்டு பேரு மேல மட்டுத் தா பிராதா?” எனச் சுந்தர் ஒருவித அச்சத்துடன் கேட்டான். காரணம், நேரடியாக விழியை விசாரித்தால் நேற்று முதல் இன்று வரை நடந்த அத்தனையும் வெளியே வந்துவிடுமே, அதை விட அனைத்து பெண்களின் மீதும் ஆரம்பித்தால் இந்தப் பிரச்சனையைத் திசை திருப்ப முடியுமே என்பது அவன் எண்ணம்.

அவனின் எண்ணத்தின் தந்தையாகவே செயல்பட்டிருந்தார் சுந்தரின் தந்தை.

“இல்ல, அதுங்க மட்டுமில்ல. வந்துருந்த அம்புட்டு புள்ளைங்க மேலயுதா. ஒருத்தி இப்படிக் கை நீட்டி அடிக்கிறானா அதுக்குக் கூட இருந்த நண்டு சிண்டுகளுதான உசுப்பேத்தியிருக்கு. அதுனால அத்தன குடும்பத்தையு நிக்க வச்சாத்தான் அதுங்களுக்குப் புத்தி வரும்.

அதோட மகேச அடிச்ச பிசாசு மேல மட்டும் புகார் கொடுத்தா அந்தப் பிள்ளையோட அப்பாக்காரே வாத்தியாராம்ல. அவ அவுங்க ஊர்ல தலகட்டு உள்ளவன் போல. அங்க இருந்து கூட்டத்தோட வந்துட்டா, அது நமக்குச் சிக்கல் ஆகிடும்.

எல்லாரையும் கூப்டாதா பிரச்னையோடே வீரிய தெரியாம வந்து நம்மட்ட தனியா சிக்குவாணுங்க” என விளக்கம் கூற, மகேஷிற்கும் சுந்தரத்திற்கு வன்மம் கலந்த ஆணவத்துடன் சந்தோசம்.

“சரி சரி மாப்புள என்ன ஏற்பாடு பண்ணியிருக்கீங்க?” என மகேஷின் தந்தை வினவ அவர் வினவியவுடன் மூன்று ஆண்களும் அவருடன் மூன்று பெண்களும் தென்னந்தட்டி கதவை திறந்தபடி உள் நுழைந்தனர்.

“இதோ வந்துட்டாங்கல. இவுங்கதா… மாப்புள நம்ம பேசுனா தப்பா போய்டும், வேணும்னே சொல்றோம் நிரூபி அப்படி இப்படினு பஞ்சாயத்துல பேசவே வெள்ள வேட்டி சட்டையோட வந்துருவானுங்க. வேல வெட்டி இல்லாதவனுங்க.”

“இவுங்க என்ன மாப்புள பண்ணுவாங்க?”

“அட! நீ அசலூருல. அதா உனக்குத் தெரில. இவுங்க மூனுபேரு பஞ்சாயத்தை நமக்குச் சாதகமா மாத்திடுவாங்க. என்ன அண்ணே நா சொல்லறது சரி தான ?” என அவர்களைப் பார்த்து வினவ,

“ஆமா அப்பு. நான் அந்தப் புள்ளையோட ஜாதிய இழுப்பே. இதோ இங்க நிக்கிறானே அவே வெளியுறு உள்ளுறுனு பிரச்சனையா பெருசாக்குவான், இதோ மூணாவதா நிக்கிறானே இவன் அந்தப் புள்ளைக்கு உதவி பண்ணின கதிரவனோட சேத்து வச்சு பேசுவான்.

நீங்க புள்ளைய பெத்தவங்க. பாதிக்கப்பட்டவங்க போல அமைதியா நின்னா போதும். நீங்க இந்தப் பிரச்சனையெல்லா தொடாதீங்க.

கமுக்கமாக நில்லுங்க. நீங்க பேசுனா வேற மாதிரி போயிடு. அதுவே நாங்க பேசுனா நாலு பேரு நாலுவிதமா பேசுறாங்கனு முடிஞ்சிடு.

நீங்க பிராத கோவிலுக்குப் போயிட்டு வந்த அம்புட்டு பிள்ளைங்க மேலையு சொல்லுங்க. அதுங்களோட அப்ப ஆத்தாளுங்களே பதறிக்கிட்டு அவுங்க பிள்ளைகளை ஒதுங்க சொல்லி அந்தச் சண்டிராணிய மட்டு கோர்த்து விடுவாங்க. அப்போ எல்லாப் பிள்ளைகளு சேந்து நம்ம தம்பிய அடிச்ச புள்ளைய கைகாட்டிடுங்க. அதுக்கு அப்புற அதுவே பெரிய சாட்சில.

அப்போ அந்த முருகேச குடும்ப மட்டு தனியா நம்மட்ட சிக்கிடு.

அத வச்சே நாங்க பேசுனப்படி கூட்டத்துல விட்டு அந்தப் புள்ளையையும் அது கொடும்பத்தையும் அசிங்க படுத்திடுவோம் ” எனப் பெருமையாகக் கூறியபடி மீசையைத் தடவிக்கொடு சிரிக்க, அவர்களோடு வந்த அவர்களின் மனைவி மார்களும் சிரித்துவிட்டு, “நீங்க கவலைய விடுங்க அண்ணே. எல்லாத்தயும் என்னோட வீட்டுக்காரரு பாத்துப்பாரு” என உடன் வந்திருந்த ரோசா கூற, அவரைப் பற்றி அறிந்த சுந்தர் நமட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

“ஏண்டா அந்த அம்மா பேசினது சிரிக்கிற?” என மகேஷ் வினவ, “அந்த அம்மா பேரு என்னனு தெரியுமா?” எனச் சுந்தர் வினவினான்.

“எதோ ரோசாக்கா வருதுன்னு எங்க அம்மா பேசிட்டு இருந்தாங்க. ரோசாத்தான அவுங்க பேரு?”

“ஆமாம் ரோஸாவே தான். ஆனா சாதா ரோசா இல்ல”

“பின்ன ஊட்டி ரோஸ் ஆ?” எனக் கடுப்படிக்க

“டேய் அது இல்ல டா… ரேடியோ ரோசா. ஒரு விஷய பேச ஆரம்பிச்சா அது காட்டுத் தீயவிடச் செம்ம பாஸ்ட்டா போயிடு. அதான் அந்த ராங்கிக்காரியும் சண்டியரும் என்ன ஆகா போறாங்கன்னு நினச்சு சிரிச்சே” எனக் கூற இப்போது மகேஷும் அப்படியா என்ற பாவனையில் வெற்றி சிரிப்புச் சிரித்தான்.

அதே நேரம், “ஆத்தி ரேடியோ ரோசாவா… ” எனப் பீதியுடன் ஒலித்தது தட்டி மறைவில் பதுங்கியிருந்த சோமாஸ் பாண்டியின் குரல்.

ஓட்டமும் நடையுமாகக் கதிரவன் இருந்த தோப்பு வீட்டிற்குப் போனவன் சக்கரையின் கேள்வியைப் பொருட்படுத்தாமல், “கதிரூ நீ சொன்னது நிசதா மாப்பு. அவைங்க வீட்ல பெரிய கூட்டமிருக்குது. கூடவே நம்ம ரோஸாக்காவும்”

“என்னது ரேடியோ ரோசாவா?” எனச் சக்கரை கேட்க,

ஆம் என்பதாய் பாண்டி தலை அசைத்தான்.

“நீ மேல சொல்லு பாண்டி” எனக் கதிரவன் கேட்க, நடந்த அனைத்தையும் பாண்டி சொல்லி முடித்தான்.

“கதிரூ எப்படிடா அவனுங்க ஏதாவது செய்வானுங்கனு யோசிச்ச? சரி அது எப்படியோ..தேவ இல்லாம நீ ஏன்டா இதுல போய் நுழையிற? உனக்கோ பொண்ணுங்கனாலே பிடிக்காது. சும்மாவே உனக்கும் உங்க ஐயனுக்கு ஆவாது. அப்புற எதுக்கு டா ? “

“இப்பவும் எனக்குப் பிடிக்காது தான் டா… பொண்ணுங்கள பிடிக்காதுனுங்கிறதுக்காகக் கண்ணுமுன்னாடி நடக்குற தப்ப எப்படிச் சகிச்சுக்க முடியும்? அது என்னால எப்பவுமே முடியாது டா. எங்க வீட்ல நடக்குறது சகிக்க முடியாம தான் வீட்டைவிட்டே வந்தேன்.

எங்க அம்மா ஆரம்பத்துலையே ஒருவார்த்த எதுத்து பேசிருந்தா இத்தன வருசமா குனிஞ்சு போகவேண்டிய அவசியம் வந்திருக்காது.

பொதுவா எல்லாப் பிள்ளைகளும் கண்ண கசக்கிதா பாத்துருக்கே.

ஒன்னு எங்க அம்மாவை போலப் பேச முடியாம அழுதோ இல்ல எங்க அத்தைய போலப் பிராடு பண்றதுக்காகவே அழுதோ தான் பாத்துருக்கே. ஆனா இந்தச் சின்ன வயசுல ஒரு பொண்ணு தைரியமா பயப்படாம எதுத்து நிக்கிது.

இதுல மட்டும் அவனுங்க சொல்ற போல நடத்திட்டா, அதுக்கு அப்புற ஊரும், ஊரு வாயும் சேந்து ஜென்ம ஜென்மத்துக்கு அந்தப் புள்ளய தல நிமிரவிடாம பண்ணிடுவாங்க. அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி உண்மைய மறச்சு, மறுபடியும் பேசுறதுக்குக் கூட யோசிக்கிற அளவுக்குக் கொண்டு வந்து நிப்பாட்டிருவாங்க.

என்னோட அம்மா என்ட பேசவே பாத்து பாத்து யோசிச்சு வார்த்தையை விடுதுடா. இதுக்குக் காரண என்ன ? அவுங்கள பேசவிடாம ஆக்குனதுதா..

அப்படியொரு விஷய இந்தப் பொண்ணுக்கு நடக்கக் கூடாதுனு தோணுதுடா. அதுமட்டுமில்ல, அவனுங்க பொம்பள பிள்ளைங்ககிட்ட ரொம்ப வம்பிழுக்குறானுங்க. அதுவும் தெரிய வரனும்ல. எனக்குப் பிள்ளைங்களைப் பிடிக்கலைன்னா அது என்னோட தனிப்பட்ட விஷயம். அதுக்காகப் போற வர பொண்ணுங்கள கஷ்டப்படட்டும்னு எப்படி டா நினைக்கிறது ?

ஏதோ நம்மனால முடுஞ்சுத்த பண்ணுவோம்டா.

அந்தப் புள்ள யாருனுலாம் எனக்குத் தெரியாது. அவ்வளவு ஏ எனக்கு அந்தப் பொண்ணு முகக் கூடச் சரியா தெரியாது. இருந்தாலு அந்தப் புள்ள பேரு வெளில வரமா பாத்துக்கணும். அதுக்கு என்ன பண்றதுனு மட்டும் யோசிங்க. அந்த மூணு பேரு அவனுங்க பொண்டாட்டிமாறுகளும் பஞ்சாயத்துல கலந்துக்காம இருக்க வழி என்னனு யோசிங்க” எனக் கதிரவன் தீர்மானமாகச் சொல்ல, அவன் சொல்வதின் அர்த்தம் உணர்ந்து மற்ற இருவரும் ஏற்றுக்கொண்டனர்.

“அதெல்லா சரி தான். ஆனா அந்த மூணு பேரையும் எப்படிச் சமாளிக்கிறது ?” எனச் சக்கரை வினவ,

“பாண்டியை நம்பினோர் கைவிடப்படார்” என ஆசீர்வதிப்பதை போலக் கைகளை உயர்த்தி அவன் கூற,

“அதுக்கு நாங்க உன்ன நம்பணும்ல…” எனச் சக்கரை நக்கலடிக்க

“நக்கலா அடிக்கிற? இரு டி உன்ன கதறவிடுறே” என மனதிற்குள் கருவியவன், “கதிரூ அந்த மூதேவன்களும் ரேடியோவும் என்னோட பொறுப்பு. அந்தக் கூட்டத்த நீ சமாளிச்சுக்க” என உறுதியாகக் கூற, சக்கரை தன்னுடைய  அதிமுக்கிய கேள்வியை முன்வைத்தான்.

“அதென்னெடா மூதேவன்?”

“இது தெரியாது? அதுக்குதாண்டா இந்தப் பாண்டி வேணுன்னு சொல்றது. மூதேவிக்கு ஆப்போசிட் தா மூதேவன்” எனக் காலரை தூக்கிவிட்டபடி கெத்தாகக் கூற, சக்கரை அவனை வழக்கம் போல அடிக்கத் துரத்தி சென்றான்.

இரவு நடக்கவிருக்கும் கூட்டத்தைப் பற்றிச் சிறிதும் அச்சமில்லாமல் ஓடுகின்ற நண்பர்களைப் பார்த்து வழக்கம் போலக் கதிரவன் சிரித்துக்கொண்டிருந்தான்.

அதோ இதோவென்று ஊரின் கூடத்திலிருந்த பஞ்சாயத்துக் கல்லில் அனைவரும் கூடியிருந்தனர். கைலியுடன் சுற்றி திரிந்த அல்லக்கைகள் கூடப் பஞ்சாயத்தென்றவுடன் வெள்ளை வேட்டி சட்டைக்குக் கஞ்சி போட்டு மனதிலே நாட்டாமை சரத்குமாராகத் தங்களைப் பாவித்துக்கொண்டு நெடுக அமர்ந்திருக்க, அவர்களுக்கு சற்று தள்ளி ரோசா அக்காவும் மற்ற இரண்டு பெண்களும், பாண்டியால் மூன்று தேவன்கள் என்று குறிப்பிடபட்டவர்களும் நின்றிருந்தனர்.

பஞ்சாயத்துத் தலைவர்கள் வருவது மட்டுமே மிச்சமிருந்தது. காலையில் கோவிலுக்குக் கொடியுடன் சென்றிருந்த அத்தனை பெண்களும் தம் தம் பெற்றோர் சகிதம் கண்ணைக் கசக்கி கொண்டு நின்றிருக்க, அவர்களின் அழுகையைப் பார்த்து இப்போதே மகேஷ் சிரித்துக்கொண்டான்.

கனல்விழி சற்று தள்ளி தன் அன்னைக்குப் பின்னால் நின்றிருந்தாள். அதற்குக் காரணம் தேவியே. விழி பயம் கொண்டது போலவே தேவி காளி அவதாரம் எடுத்திருந்தார். பஞ்சாயத்தில் தான் சொல்லாமல் ஒரு வார்த்தை கூடப் பேசக்கூடாதென்றும் ஊர் முன்னிலையில் பேசினால் நாளை எவரும் பெண் கேட்டு வரமாட்டார்களென்றும் இனியாவது பெற்றோர் சொல்வதைக் கேட்டு நடக்கும்படியுமென ஆயிரம் உபதேசத்தை அளித்தே அழைத்து வந்திருந்தார். கந்தசாமியின் ஆதரவு கரம் கூட விழிக்கு உதவவில்லை. சிறு பெண்ணைப் பஞ்சாயத்து என்று இழுப்பதில் அவருக்குமே உடன்பாடில்லை. அதிலும் முருகேசன் ”நம் பெண்ணை எப்படிப் பேசப்போகின்றார்களோ” எனக் கூறியிருக்க அந்த வார்த்தை பெண்ணைப் பெற்ற தகப்பனாய் அவரைப் பதறவைத்தது.

கதிரவனுடன் சக்கரை நிக்க, அவர்களை விட்டு பாண்டி மெல்ல சுந்தரத்தின் அப்பா ஏற்பாடு செய்துவைத்திருந்த ஆட்களின் பின்புறமாகச் சென்றான்.

சென்றவன் பக்கத்திலிருந்தோரிடம் ஏதோ ஒன்று கூற, அந்த மூவரில் ஒருத்தர் மட்டும் பாண்டி சொல்லும் விஷயத்தில் ஆர்வமானார்.

” அடேய், நீ சொல்றது நிசமா?”

“அடா ஆமா அண்ணே. நா என்னத்துக்கு பொய்ச் சொல்ல போறே? இன்னும் அரை மணிநேரந்தான்”

“நல்ல விஷயமாவுல சொல்லுற. ஆனா பஞ்சாயத்து ஆரம்பிச்சிடுமே” எனக் கூறியபடி யோசிக்க,

“அட நீ வேற ஏ அண்ணே. நம்ம ஊருல என்னைக்கு சொன்ன நேரத்துக்கு நடந்துருக்கு. அதெல்லா நடக்காது. நீயும் உனக்கு வேண்டிய ஆளுங்களும் போய்ட்டுவாங்க. அப்புற அண்ணே பொம்பளைங்களுக்கு இல்ல. ஒன்லி ஜென்ட்ஸ்” எனக் கூற,

“சரில பாண்டி. சீக்கிரமா வந்துடறேன்” எனக் கூறிவிட்டு மற்ற இருவரையும் அழைத்துக்கொண்டு சற்று தள்ளி நின்ற மனைவி மார்களிடம் கூட ஏதும் சொல்லாமல் ஓடிவிட்டிருந்தனர்.

சண்டை மூட்ட வந்த மூவரும் மூட்டை முடிச்சுடன் கிளம்ப, சக்கரை “எப்பட்றா பண்ணினான் ?” என்ற ரீதியில் சிந்தித்துக்கொண்டிருக்க, ரோசாவும் அதே சிந்தனையாகப் பார்த்திருந்தார்.

அவரே பாண்டியை அழைத்து, “பாண்டி என்னோட வீட்டுக்காரரு எங்க போறாரு ?” என வினவினாள்.

“அட ரோசாக்கா? நீயுமா இங்க இருக்க” என அப்பாவியாகப் பாண்டி வினவ,

“ஆமா! அதுக்கென்னடா இப்ப ?”

“உனையும் மாமாவையும் நான் எப்படி நினைச்சே தெரியுமா? அட என்னைய கூட  விடுக்கா! இந்த ஊரு உங்கள எப்படிப் பாக்குது தெரியுமா ?”

“எப்புடிடா?”

“சரவணா பாத்தியாக்கா?”

“அடி செருப்பால! யார பாத்து என்ன வார்த்த கேட்டடா. எம்புருஷண தவிர வேற எவனையும் நான் பாக்கமாட்டேண்டா. எவண்டா அந்தச் சரவணா?”

“எக்கோ இப்படி உலகத் தெரியாம இருக்கியே கா. ‘சரவணா’ படம் பேரு. இப்ப ரிலீஸ் ஆச்சுல்ல. சிம்பு ஜோதிகா. அது போலத் தான் நான் உனையும் உம்ம வீட்டுக்காரையும் நினைச்சிருந்தே”

“அப்படியா சொல்லுற. நா சோதிகாவா?” என வெக்கப்பட்டுக்கொண்டே வினவ, பாண்டியோ மனதில், “சோதிகாவுக்கு வந்த சோதன” என நினைத்துக்கொண்டு, “அட! ஆமக்கா” என்றான்.

“ஆனா அந்தப் படத்த நான் பாக்கலியேடா? வேனும்ம்னா சில்லுனு ஒரு காதல் ஜோதிக்காவா நினைச்சுக்கோடா” என எடுத்துக்கொடுக்க,

“இதுவேறையா? எல்லா என்னோட கிரக” என மனதில் தன்னைத் தானே கொட்டிக்கொண்டவன், “ஆமா ஆமா நீ அந்த ஜோதிகாதான். உம்ம புருஷ சூர்யாதான்.

ஆனா உன்னோட வாழ்க்கையில ஐஸ்வர்யா இல்லனு நினைச்சேன்க்கா, பாவி ஐஸ்வர்யாவும் வந்துப்புட்டா” என நெஞ்சில் கை வைத்து கூற,

“டேய் என்ன டா சொல்லுற? விளக்கமா சொல்லு”

“அக்கோவ் அந்தப் படத்துல போலவே உம்ம புருஷன தேடி சிவகங்கை ஆட்டக்காரி சுவீட்டி சுவீட்டோட வந்துருக்கா கா. அந்தப் புள்ளைய பாக்கத்தானுக்கா பஞ்சாயத்த கூட விட்டுபுட்டு அங்க போயிருக்காரு” எனக் கை காட்டா, “அட பாவி மனுஷா, ஜோதிகா கணக்கா நா இருக்க உனக்குக் கேக்குதா பூமிகா?” எனக் கூறியபடி வேக வேக மாகப் போக, மற்ற இரு பெண்களும் முழித்துக்கொண்டு நின்றிருந்தனர்.

“என்ன கா? நீங்க ரெண்டு பேரு போகலையா ?”

“நாங்க எதுக்குப் போகனு?”

“ஏனா…ரோசாக்க வீட்டுக்காரரு கூடவே உங்க புருஷனுங்களும் ஸ்வீட்டிய பாக்க போய் அரைமணி நேர மாச்சு” எனக் கூற அவர்களும் விழுந்தடித்துக்கொண்டு ஓடினர்.

காலரை தூக்கிவிட்டபடி சக்கரையின் அருகில் வர, பஞ்சாயத்தும் தொடங்கியிருந்தது. ஆதலால் உடனடியாக ஏதும் விசாரிக்க முடியாமல் பஞ்சாயத்தைப் பார்க்க தொடங்கினான் சக்கரை.

“இங்க பாருங்க. இந்தப் பைய மகேஷு வெளியூறு. நம்ம ஊருக்கு வந்த பயல அடிச்சுப்புட்டதா அவனோட மாமா பிராது கொடுத்துருக்காரு. பிராதுல நம்ம ஊரு புள்ளைங்க பேரு நம்ம லிங்க அய்யாவோட மவ கதிரவன் பேரும் இருக்கு.

பஞ்சாயத்து ஆரம்பிக்கட்டும். மொதல்ல யாரு பேசுறது ?” எனக் கேட்க, தலைவராக அமர்ந்திருந்த லிங்கத்தின் முறைப்பை சட்டை செய்யாமல் கதிரவன் ஓரடி முன் வந்து நின்றான்.

“இதோ பாருங்க. நான்தா அந்தப் பயல அடிச்சே. எதுக்காக நீங்க நம்ம ஊரு புள்ளைங்களலாம் இழுக்குறீங்க ? பாருங்க நம்மஊருல இருக்கக் கால்வாசி புள்ளைங்க வந்து கண்ண கசக்கிட்டு நிக்கிதுங்க.

இப்ப சொல்லுறே, எந்தப் பொம்பள பிள்ள பேரும் இங்க சபையிலே வர கூடாது. அதுங்க நாலு இடத்துக்குப் படிக்கபோவணு வேற வீட்டுக்கு கண்ணால கட்டி போகனு. இப்படி ஏகப்பட்ட விஷயமிருக்கு. உங்க எல்லார் வீட்லயும் பிள்ளைங்களும் இருக்கு.

அவன் என்ன பண்ணுனானு என்ட கேளுங்க, நான் என்ன பண்ணுனேனு நானே சொல்லுறே. இதுக்கு மேல வயசு பிள்ளைங்க பேர எடுக்காதீங்க” எனக் கொஞ்சமும் பயமில்லாமல் மிரட்டலாகவே கூற, அங்கிருந்த பெரியவர்கள் சில, “இவன குத்தவாளியா கூப்பிட்டமா ? இல்ல தலைவரா கூப்பிட்டமா ?” எனத் தங்களுக்குள் அவன் தோரணையைக் கண்டு குழம்ப, இன்னும் சில பெண்கள், “ஆமா! கதிரவச் சொல்றது சரி தா… பிள்ளைங்க பேர இழுக்க வேணா; கூடாது” எனக் குரல் கொடுத்தனர்.

முதல் பேச்சிலே தங்கள் திட்டத்தைத் தவிடு பொடியாக்கிய கதிரவனை மகேஷின் குடும்பம் க்ரோதத்துடன் பார்க்க, முருகேசனும் கந்தசாமியும் சற்றே நிம்மதியுடன் பார்த்தனர். தேவிக்குப் பின்னால் நின்ற கனல்விழிகூட மெல்ல எட்டி பார்த்து, “இவுங்க யாரு ? ஒருவேளை காலைல என்ட குச்சியைக் கேட்டாங்களே..அவுங்களா இருப்பாங்களோ?” எனச் சிந்திக்கத் தொடங்கினாள்.

லிங்கத்திற்குக் கதிரவனைப் பிடிக்காது போனாலும், அவன் கூறும் பொருள் மெய் என்பதால் அவன் கூறியதற்கு மறுப்புத் தெரிவிக்காமல், “சட்டு சட்டுனு பேசுறாருல்ல..அப்படியே துறை எதுக்கு அசலூரு பையன அடிச்சாருனு சொல்ல சொல்லுங்க” எனச் சத்தமாகக் கூற, “சொல்றேன். அசலூருக்காரே நம்ம ஊரு பிள்ளைங்ககிட்ட வம்பு வளத்துருக்கான்… மொத்தமா இந்தச் சுந்தர் கூடச் சுத்துற அம்ம்புட்டு பசங்களும் கோவில் போயிட்டு வந்துட்டு இருந்த பிள்ளைங்கள வழி மறச்சு தகராறு பண்ணிருக்காங்க. நான் பாத்ததினாலா நாலு அடியோட விட்டேன். இதே பொண்ண பெத்தவங்க பாத்துருந்தா அந்தப் பைய தோலை உறிச்சு உப்புக்கணப் போட்ருப்பாங்க.

ஞாயமா பாத்தா, ஊரு விட்டு ஊரு வந்து வம்பு பண்ற இந்த மகேஷயும் அதுக்கு உடைந்த போற இந்தச் சுந்தரையும் தான் பஞ்சாயத்துல நிப்பாட்டி இருக்கணும். நம்ம ஊரு புள்ளைங்க பயந்துகிட்டு நிக்குறத பாத்து இவனுங்க முந்திக்கிட்டானுங்க.

அசலூருல இருந்து வந்து இங்க நம்ம பிள்ளைங்கக்கிட்ட வம்பு பண்றதுக்குத் தில்லு யாரு தந்தது ? எல்லா இந்தச் சுந்தரும் அவனோட கூட்டாளிகளுதா…

ரொம்பநாளாவே இந்தக் கத ஓடுது. அய்யா..நீங்க சொல்லுங்க. இந்தப் பசங்க பண்ற அட்டூழியத்த” எனக் காலையில் தன்னிடம் புகார் கூறிவிட்டு சென்ற பெரியவரை சாட்சிக்கு இழுக்க, பாண்டிக்கு பகிரென்றானது.

“அட மாப்புனு பாத்தா இவ நமக்கும்ல சேத்து ஆப்பு வைக்கப் பாக்குறா…அந்த பெருச எதுக்குடா இழுக்கிற? அது என்னயும்ல கோத்துவிடும்” எனப் புலம்பிக்கொண்டிருந்தான்.

ஆனால் அவர் கதிரவன் கேட்டதற்கு, “ஆமா ..பஞ்சாயத்து ஆளுங்களா கதிரவச் சொல்றாப்புல இங்க நிக்கிற இளவட்ட பூரா பொட்ட பிள்ளைங்க பின்னாடிதா சுத்துறாங்க. போறவரப்ப சீண்டி நானே பாத்துருக்கே” எனச் சாட்சி கூற, சபையில் அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு சிலர் அந்த அடாவடி கும்பலுக்கு எதிராகக் கருத்தை பதிக்க, இன்னும் சிலர் மகேஷ் அயலூரான் எப்படி நம் பெண்களிடம் வம்பு வளர்க்கலாமென்று பேச தொடங்கினர்.

இந்தப் பேச்சை மகேஷின் குடும்பமும் சுந்தரத்தின் குடும்பமும் அவர்களின் கூட்டாளிகளும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

தாங்கள் எதை எதையெல்லாம் வைத்து கனல்விழியையும் கதிரவனையும் தாக்கலாம் என்று நினைத்திருந்தார்களோ அதே ஆயுதம் இருமுனை கத்தியாய் தங்களை நோக்கியே திருப்பப்பட்டதையும் ஊர் மக்களும் கதிரவனின் பேச்சில் அவன் புறமாகச் சாய்வதையும் கண்டு தாங்கள் அழைத்து வந்த மூவரையும் தேட, அவர்கள் அங்கு இல்லவே இல்லை.

கதிரவன் பேசியதற்கு முருகேசனும் கந்தசாமியும் களத்தில் இறங்கி பேச, அவர்களுக்குத் துணையாக இன்னும் நாலு நபர்கள் பேச எனக் கதிரவனின் பக்கம் வலு பெற தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் கடைசிவரை கனல்விழியின் பெயர் வெளியே வராமல் கதிரவன் பார்த்துக்கொண்டான்.

கூட்டத்தில் இருந்த அனைவரும் கதிரவன் தான் மகேஷை அடித்ததாகவே நினைத்திருந்தனர். ஆனால் மகேஷின் குடும்பத்திற்குத் தெரியுமே. ஆகையால் கனல்விழியை எப்படியும் இழுப்பதென்ற முடிவிலே அவர்கள் இருக்க, “இத பாருங்க. எல்லாச் சரி தான்… ஆனா எம்மவன அடிக்க இவுங்க யாரு? தப்புனா என்ட சொல்லுங்க. நாங்க பாத்துக்குறோம். ரோட்ல போற வரவ அடிக்கிறதுக்கா எம்புள்ள இருக்கா ?” என எகிற, மகேஷின் மாமாவோ, “ஆமா, மகேச இப்ப அடிச்சவங்க யாருனு தெரியனு. அத எதுக்கு எவனோ சொல்லனு. மகேஷே சொல்லுவா…சொல்லுடா” என அதட்ட, சொல்வதற்கு முன்பாக மகேஷ் கதிரவனின் முகம் பார்க்க, அதில் இருந்த மிரட்டும் தொனி அவனை மிரள வைத்தது.

“அட மகேஷு சொல்லுப்பா…அதா உம்ம மாமா சொல்ல சொல்லுறாருல்ல. ஏ தயங்குற. மென்னு முழுங்காம சட்டுனு சொல்லு. இம்புட்டு யோசிக்க நீ என்ன பொம்பள பிள்ளைக்கிட்டயா அடிவாங்குன ? இல்லைல” எனக் கதிரவன் பாண்டியிடமும் சக்கரையிடமும் ஜாடை காட்டியபடி பேச, பாண்டி முன்வந்து, “ஏப்பா ஒருவேள மகேஷு யோசிக்கிறத பாத்தா பிள்ளைங்ககிட்ட தா அடிவாங்கிட்டா போலவே. அய்யய்ய. இதென்னெண்டா” எனப் பாவனையாக முகத்தைச் சுழித்துப் பேச, சக்கரையோ, “டேய் அப்படிலா இருக்காது பாண்டி. அப்படியிருந்தா இனி ஒரு பய மகேச அவைங்க ஊருல கூட மதிக்க மாட்டானுங்களே” எனக் கூறினான்.

“ஆமா சக்கர, அதுமட்டுமா பொம்பள பிள்ளைக்கிட்ட அடிவாங்கிட்டு நாளப்பின்ன எப்படிப் பொண்ணுக்கேட்டு போவானுங்க”

“அட பாண்டி. நிறுத்துயா…அவனை அடிச்சது நான் தாணு கதிரே சொல்லுறா. அப்புற எதுக்கு நீ வேற என்னவோ சொல்லுற ?”

“கதிரவச் சொன்னா போதுமா? அடிவாங்குனவன்ல சொல்லணும்” எனப் பாண்டி கூற, “அடே நிறுத்துங்கடா. கூடக் கூடப் பேசாம பஞ்சாயத்துல ஒழுக்கமா நிக்கிறதுனா நில்லு. இல்ல கிளம்பு” என லிங்கம் ஒரு அதட்டல் போட, “ஆரம்பிச்சுட்டாருடா….” என முனங்கியபடி வாயை மூடிக்கொண்டனர்.

“என்ன மகேஷு… உன்ன யாரு அடிச்சது? யாரு மேல நீ குத்த சொல்லுற?” எனக் கண்டிப்புடன் வினவ, பாண்டியின் பேச்சே மகேஷை சுற்றி உழன்று கொண்டிருந்தது.

மகேஷ் வாய் திறப்பதற்கு முன்னதாகவே அவர்கள் ஏற்பாடு பண்ணியிருந்த மூன்று நபர்களும் அவர்களின் மனைவி மார்களும் அடித்துப் பிடித்துக் கூட்டத்திற்குள் புகுந்து வர, அங்கே சலசலப்பு கிளம்பியது.

வந்தவர்களின் சட்டை கசங்கியும் அங்கங்கே கிழிந்து தொங்க பாண்டி என்ன நடந்திருக்கும் என நமட்டு சிரிப்புடன் எண்ணி பார்த்துச் சிரித்துக்கொண்டான்.

உள்ளே வந்தவர்கள், “பஞ்சாயத்து ஆளுங்க கொஞ்ச மன்னிக்கனு. ஒரு அவசர வேல அதா லேட்டா ஆகிடுச்சு” எனக் கூறிக்கொண்டு உள் நுழைய பார்க்க, கூட்டத்திற்குப் பின்னால் சென்ற பாண்டி வாயில் துணியை வைத்துக்கொண்டு குரலை கரகரவென மாற்றியபடி, “ரோசாக்கா… உன்னோட வீட்டுக்காரு பஞ்சாயத்துக்கு வரது இருக்கட்டு. உங்களுக்குள்ள என்ன பஞ்சாயத்து ? சட்ட பாக்கட் கிழிஞ்சு தொங்குது… தச்சுக் கொடுக்கக் கூடாதா ?” எனக் குரல் கொடுக்க, “அட சட்ட கிழுஞ்சா கூடப் பரவா இல்ல, அண்ணனோட டவுசரு, அக்காவோட சீலையும்ல அங்கங்க கிழிஞ்சு தொங்குது” எனப் பாண்டியின் பின் வந்த சக்கரை குரல் மாத்தி பேச, அவரின் கோலத்தை முன்பு பார்க்காத ஓரிருவர் கூட இப்போது உற்று உற்று பார்த்து அவர்களிடம் ஜாடை மாடையாய் பேச்சை வளர்க்க, வந்த சுவடு தெரியாமல் மூவரும் அவர்களின் பின்னால் அவர்களுடைய மனைவி மார்களும் கழண்டு கொண்டனர்.

பஞ்சாயத்துக் கல்லில் அமர்ந்திருந்த மற்றவர்களும் மகேஷை கிடுக்கி புடி போட, வேறு வழியே இல்லாமல் ,”கதிர்” எனக் கூறிவிட்டிருந்தான்.

அவனின் பதில் அவனுடைய குடும்பத்திற்கும் அதிர்ச்சியே. ஆனாலும் என்ன செய்ய முடியும். பேசாதவர்களையும் யோசிக்காதவர்களையும் பேசவும் யோசிக்கவும் வைத்துவிட்டது பாண்டி சக்கரையின் பேச்சு. சிறு பெண்ணின் கையால் அடிவாங்கியவன் என்ற பெயரை விடக் கதிரவன் தான் அடித்தான் என்பது சற்று மேலாகத் தெரிய, மகேஷ் கூற்றை அவர்களும் எதிர்க்கவில்லை. ஆனால் தங்களை இந்த நிலையில் தள்ளிய கதிரவனை நிச்சயம் பழிவாங்க வேண்டுமென்று மட்டும் முடிவுகட்டினர்.

“என்ன தலைவரே! உங்க மகன் அடிச்சானது உங்க ஆளுங்கள வச்சு உளப்ப பாக்குறீரா? என்ன வேணுனா தப்பு செய்யட்டுமேயா.. உங்க மவன் யாரு  ? எங்க வீட்டு புள்ள மேல கை வைக்க. அதோட எவ்ளோ தென்னெவெட்டா பேசுறான்… இதுக்குச் சரியான தீர்ப்பு வராட்டி எங்களுக்கு ஆளும் இருக்கு, சண்டைக்கு வர ஊரும் இருக்கு.

இந்தப் பயலுக்கு இந்தப் பஞ்சாயத்து கொடுக்குற தண்டனைல இனி எவனும் அவனவன்போக்குக்கு ஆடனு நினைக்கக் கூடாது.

இல்ல உம்ம வீட்டு புள்ளன்னு தீர்ப்பு சரியா கொடுக்கல, இதோட உங்க பதவியையும் விட்டுபுட்டுக் கடைசித் தீர்ப்பா சொல்லிட்டு போய்டுங்க” என ஏகத்துக்கும் பேச, லிங்கத்தின் ஆட்கள் ஒரு புறம் சத்தம் போட, மகேஷின் குடும்பம் ஒரு புறம் கூச்சல் போட, முருகேசனும் அவனின் ஆட்களும் எகிற என அங்கே ஒரே அதகளம் ஆனது.

அவர்களின் சீண்டல் பேச்சு லிங்கத்திற்குச் சுறுசுறுவென்று ஏறியது.

“நிப்பாட்டும்!” என உறுமியவர், “பஞ்சாயத்துக்கு வந்துட்டா எம்மவ உம்மவனு எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லாத்துக்குத் தீர்ப்பு ஒன்னுதே” எனக் கூறியவர், அவரே மேற்கொண்டு தொடர்ந்து,

“குத்த சொல்லப்படுற இந்தக் கதிரவ, பன்னாடாவது பரீட்சை முடுச்சது ஊறவிட்டு மூணுவருசத்துக்குத் தள்ளி இருக்கன்னு. ஊறுபக்க வர கூடாது. நல்லது கெட்டதுனு எதுக்கு எட்டி பாக்க கூடாது. அப்படியில்லனா அடிவாங்குன பையன் கிட்டையும் அவனோட மொத்த குடும்பதுக்கிட்டையும் ஊரு மத்தில மன்னிப்பு கேட்கணும். இரெண்டுல எதுன்னு இப்பவே கதிரவ இந்தப் பஞ்சாயத்துல சொல்லணும். ” எனத் தீர்ப்பு கூற மகேஷின் குடும்பத்தில் வெற்றி களிப்பு.

அந்த மகிழ்ச்சி பிறரின் தாழ்ச்சியில் வருகின்ற மகிழ்ச்சி. இரண்டில் எது நடந்தாலும் சம்மதம் என்று அவர்கள் திமிராக நிற்க, அதற்குள் விஷயம் அறிந்து கதிரவனின் அம்மா என்னவோ ஏதோவென்று ஓட்டமும் நடையுமாகப் பஞ்சாயத்திற்கு வந்து சேர்ந்திருந்தார். அவருக்கு முழுதாக எதுவும் தெரியவுமில்லை யாரும் தெரியப்படுத்தவுமில்லை.

அவர் என்ன ஏதென்று பார்த்துக்கொண்டிருக்கும் போதே, பஞ்சாயத்துக் கல்லில் உக்காந்திருந்த ஒரு பெரியவர் “ஏப்பா கதிரவா, ஊரு முன்னாடி மன்னிப்பு கேக்குறியா ? இல்ல ஊறவிட்டு மூணு வருசத்துக்குத் தள்ளி இருக்கப் போறியா ?” என வினவ பார்வதிக்கு உள்ளம் பதறியது.

“ஆத்தா! என்னநடத்துட்டு இருக்கு…எனக்கு ஒண்ணுமே விளங்கலியே. எம்மவன எதுக்குக் கேள்வி கேக்குறாங்க” என உள்ளம் பதை பதைக்க வேண்டிக்கொண்டிருக்க, கதிரவன் வாய்த் திறந்தான்.

“யார்கிட்டயும் என்னால மன்னிப்பு கேட்க முடியாது. தப்புனு பட்டுச்சு அடிச்சேன். அவ்ளோதான்…மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” எனத் திமிராக நின்றவனை ஊர் மொத்தமும் வாய் பிளந்து பார்த்தது. ஊரோடு சேர்த்து கனல்விழியும் விழி விரித்துப் பார்த்தாள். அவள் மனம் தான் மிகவும் குற்ற உணர்வுடன் தகித்தது. எதுக்காக இவுங்க எனக்காகத் தண்டனை ஏத்துக்கிறாங்க என்பதைப் போல மீண்டும் மீண்டும் எண்ண தொடங்கியது.

“உண்மைய சொல்லிடலாமா?” என விழி ஓரடி முன்வைக்க, மிகவும் அழுத்தமாகத் தேவியின் கரம் அவளின் கையைப் பற்றியிருந்தது. கந்தசாமியை அழைக்கலாம் என்றால் அவளின் குரல் அவரை எட்டுமா என்பதே சந்தேகம் தான். மிகவும் குற்ற உணர்ச்சியுடன் அந்தக் கூட்டத்தில் நின்றிருந்தாள்.

“அப்ப நீ ஊறவிட்டு மூணுவருசத்துக்குத் தள்ளி இருக்கணும். இது தான் இந்தப் பஞ்சாயத்துத் தீர்ப்பு” என உரக்க அறிவிக்க, ”அயோ கதிரூ” எனக் கதறியபடி மகனிடம் ஓடி வந்தார் பார்வதி. அவரைப் பார்க்கவும் இத்தனை நேரம் வீராப்பாகப் பேசியதெல்லாம் காற்றோடு கரைவது போலக் கதிரவனின் மனம் ஆட்டம் காண தொடங்கியது.

Advertisement