Advertisement

சங்கமும் சந்தோஷமும்-35
சிரிப்புடனே வீட்டிற்குள் நுழைந்த கதிரவனையும் விழியையும் பார்த்த வீட்டினர் அனைவரும் நிறைவான உணர்வை பெற்றிருந்தனர்.
தேவிக்கு மகளைக் குறித்த அவரின் கண்ணீர் நாட்கள் போன ஜென்மத்து நியாபகங்கள் போலத் தோன்றின. பார்த்திபன் மல்லி என அனைவரும் சந்தோசமாக உணர, பாண்டியும் சக்கரையும் உண்மையான சந்தோசத்துடன், “மாப்பிக் கலக்கீட்டடா…” எனக் கூற, பார்வதி முகத்தில் அத்தனை சந்தோசம். லிங்கம் மட்டும் ஏதோ சங்கடப்பட்டவராகவும் அதைச் சமாளிக்க முயன்றவராகவும் இருக்க, அவரின் எண்ண அலைகளை அவரின் தர்மபத்தினியாய் பார்வதி உணர்ந்து கொண்டாலும் கதிரவன் லிங்கம் உறவில் அதை எப்படிச் சரி செய்வதென்று அவருக்குப் பிடிபடவில்லை. அதனால் அதைக் காலத்தின் கைகளில் விட்டுவிட்டார்.
லிங்கத்தின் மாற்றத்தை கதிரவனும் உணரவே செய்தான்….ஆனால் சட்டென்று இதில் என்ன செய்யவேண்டும் என்று அவனுக்கு நிஜமாகவே தோன்றாத நிலைதான்.
மகிழ்ச்சியான வேளையில் அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்குவதாகக் கந்தசாமி, பார்த்திபன் முல்லை திருமணத்தை அங்கே சொல்ல, உடனடியாக வருகின்ற முதல் மூகூர்தத்திலே திருமணம் என அங்கேயே அனைவரும் முடிவெடுத்திருக்க, அதோ இதோவென்று திருமண நாளும் வந்தாகிற்று….
“கனலி… ஐயோ கொல்லறாளே…. சும்மாவே இவ ஆள அசத்துவா. இப்ப பட்டுசேலை மல்லிகை பூ னு மனுஷன பாடா படுத்துறா. அந்தக் கண் மையாச்சும் வைக்காதான்னு சொன்னா கேக்குறாளா…ராங்கிக்காரி..வேணும்னே என்ன சுத்தவிடப் பண்றா” என அப்புறமும் இப்புறமும் ஓடியாடி வேலை செய்யும் விழியைப் பார்த்து முணுமுணுத்தபடி கதிரவன் கைகளைக் குறுக்கே கட்டியபடி திருமண மண்டப தூணில் சாய்ந்து நிற்க, அவனின் மனக்குரல் அவனுக்கே கேட்பது போலக் காதருகே, “மனசு வேணும் வேணும்னு கேட்குதுல…. கைக்கு எட்டுற தூரம்னு ஏக்கமா இருக்குதுல..? அதுவும் இன்னைக்கும் கலர் கலரா பள பளனு இருக்குதுல மாப்பி” என ஒவ்வொன்றாகக் கேட்டுக்கொண்டே வர, “ஹ்ம்ம்…” என்று விழியின் மீது பார்வையைப் பதித்தபடி கதிரவன் கூறிக்கொண்டிருக்க, இறுதி வாக்கியமான மாப்பியில் சட்டென்று சுயத்திற்குத் திரும்பி கதிரவன் அருகினில் யாரென்று பார்க்க, பாண்டி நின்றுக்கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்து திடுக்கிட்ட கதிரவன், “டேய் என்ன ? என்ன சொன்ன டா ? யாரை பத்தி டா ?” எனப் பாண்டியிடம் கேட்க, அவனோ நாக்கை ஆசையாகச் சப்புகொட்டியபடி, “வேற என்ன மாப்பி, சீர் வரிசைல பரப்பியிருக்கப் பழங்களும் பலகாரமும் தான்…அங்க பாரு தட்டு நிறையா ஜீனி முட்டாய், அதிரசம் , லட்டு, ஆப்பிள் , சீதா பழம், அண்ணாச்சி , கை முறுக்கு, அச்சு முறுக்கு, ஐயோ முட்டை முட்டையா கருப்பட்டி வேற வச்சுருக்கானுங்க” என அவன்பாட்டிற்குப் பேசிக்கொண்டே போக, அருகில் வந்த சக்கரையோ, “டேய் சோமாசு நீ திருந்தவே மாட்டியா ?” என அவனின் தோளில் சகஜமாகக் கைபோட்டபடி கேட்க, “என்னடா கள்ளக்கடத்தல் பண்றவன்ட கேட்க வேண்டியதை கடலைமிட்டாய் சாப்பிடறவன்ட கேட்குறீங்க ? ” எனப் பாவமாகக் கேட்க, கதிரவனோ சிரித்துவிட்டிருந்தான்.
சக்கரையும் சிரித்தபடி, “எந்நேரமும் சோறு சோறுன்னு சொல்லாம வேற எதாவது சொல்லு டா ?”
“ஓ அப்போ குழம்புன்னு சொல்லவா மாப்பி ?” எனப் பாண்டி கேட்டு வைக்க, சக்கரை அவனை ஓங்கி மண்டையில் ஒரு கொட்டுவைக்க, அவர்களின் கலாட்டாவில் அவர்களின் அருகினில் வந்து நின்றாள் விழி.
“என்ன பாசமலருங்களா ? ஒரு அண்ணனுக்குக் கல்யாணம். நீங்க எப்ப பண்றத உத்தேசம் ? சட்டு புட்டுன்னு பண்ணுங்க” எனப் புன்னகையுடன் கூற,
சக்கரையோ, “பாண்டிக்கு மொத பொண்டாட்டி, சாப்பாடுதான் தங்கச்சி…அந்த வகையில அவனுக்குக் கண்ணாலம் முடுஞ்சிடுச்சு… ” என எள்ளல் பேச, விழி, “அப்போ சாப்பாடு போதுமா ? பொண்டாட்டி வேணாமா ? முக்கியமில்லையா ?” எனக் கேட்க
“கரெண்ட் கொடுக்க வேணும் வயறு,
ஆடு மேயும் பயிறு
சாப்பிடாட்டி போய்டும் உயிரு…
இப்ப சொல்லுங்க சாப்பாடு எவ்ளோ முக்கியம்னு…. அதுனால சாப்பாடு கல்யாணத்த விடவும் பொண்டாடியவிடவும் ரொம்ப முக்கியம். புருஞ்சுதா ? ” எனத் தத்துவம் பேச, மூவரும் வாயடைத்து நின்றனர்…அதுவும் புன்னகையுடனே..
நால்வரும் கூடி அரட்டையடிக்க, பார்வதி வந்து சத்தம் போட்டு அவர்களுக்கு வேலைகளைப் பிரித்துக்கொடுக்க, அடுத்தடுத்து கல்யாண வேலைகள் விரைவாக நடக்க, நல்ல நேரத்தில் பார்த்திபன் முல்லையின் கழுத்தில் தாலி கட்ட, சுற்றமும் நட்பும் ஆசி வழங்க, இனிதே திருமணம் நிறைவுற்றது.
மாறனோ, “எங்க அண்ணனுக்குக் கல்யாணம் முடிஞ்சிடுச்சு, அண்ணியோட அண்ணாவுக்கும் முடிஞ்சிடுச்சு, ஏன் எனக்குக் கூட ஆச்சு…ஆனா சக்கரை அண்ணே , சோமாஸ் அண்ணே உங்களுக்குத் தான் இன்னும் ஆகல…சீக்கிரம் பொண்ணு பாருங்க. அடுத்தக் கல்யாணத்துக்கு ரெடி ஆகுவோம்…” எனக் கிண்டலாகக் கூற, சக்கரையின் அம்மாவோ, “சக்கரைக்குத் தொண்டில பொண்ணு பாத்துருக்கே. இந்தப் பயன்கிட்ட சொன்னே, கதிர் வீட்டுக் கண்ணாலம் முடியட்டும்னு சொல்லிட்டான். நீங்கெல்லாம் வாங்க, சட்டுனு பேசி முடுச்சு பட்டுனு பூவச்சு உறுதி படுத்திடலாம்” எனக் கூற, சுற்றியிருந்தோர் சந்தோசமாகத் தலையாட்ட, கூட்டத்திலிருந்த ரோசா அக்காவோ, “ஏல சோமாஸ் பாண்டி, அப்ப உனக்கு மட்டும் தான் பாக்கியா ? ” எனக் கேட்டுவைக்க, மனதிற்குள், “என்னய்யா சோமாஸ்னு சொல்லுற ? மாஸ் பாண்டினு பேர மாத்துனாலும் விடமாட்டுறாங்க… இந்த ரேடியோவ மொத வேற சேனல்க்கு மாத்தணும்” என எண்ணியபடி, “அக்கோவ் என்ன சொன்ன ? கண்ணாலமா ? எனக்கு ஆளு இருக்கு..நீ மொத உன்னோட வூட்டுக்காரரு எங்கன்னு பாரு…ஆட்டக்கார ஸ்வீட்டி வந்திருக்கானு கேள்வி பட்டேன்” என வழக்கம் போலச் சொல்ல, அவரோ கூட்டத்தில் இருந்து முன்னே வந்து, “அடே அப்ப அந்தக் கட்டுக்கதையைப் பரப்புனது நீ தானா ? ” என மீசையை முறுக்கியபடி முன்வர, பாண்டி பதுங்கியபடி, “ஹா ஹா இல்ல அண்ணே..சும்மா தமாஸுக்கு” எனச் சிரிக்க, “வேணாம்டா சோமாசு….” என அவர் மிரட்ட அந்த இடமே கலகலப்பானது.
சற்றே தாமதம் ஆனா போதினிலும் சேனாதிபதி திருமணத்திற்கு வர, மாறனோ  காரியத்தில் கண்ணாய் “பாண்டி அண்ணே உங்க ஆளு யாரு ?” எனக் கேட்க, அவனின் முகவாயை திருப்பி , “அங்க பாரு” எனக் காட்ட, அங்கே ஒயிலாக நடந்தபடி பாப்பி வந்துகொண்டிருந்தாள்.
“சோமாஸ் பாண்டியோடா ஆளா…. இது ? ” எனக் கத்தியபடி வாய் திறந்து ஒருவன் பார்க்க, அவனின் சத்தத்தில் அனைவரும் பாப்பியை பார்த்து வாய் திறந்து நிற்க, அவளோ பாண்டியின் அருகில் வந்து பாந்தமாகப் பொருந்தி நின்றுகொண்டாள்.
சக்கரையும் விழியும் பாண்டியின் காதில் , “இதெல்லாம் எப்படி ?” என நம்பமுடியாமல் கேட்க, அவனோ, “எனக்குத் தெரில…எதோ சென்ட்ல விழுந்துட்டாளாம்….” எனக் கூற, சக்கரை, “செண்டா?” எனப் புரியாமல் வினவ, பாண்டி பந்தாவாகா, “ஆமா மாப்பி… அன்னைக்கு மொட்டைமாடில அண்டாவுல இருக்கத் தண்ணிய கவுக்குறதுக்குப் பதிலா தொட்டிய கவுத்துட்டேன்ல…அப்போ என்கிட்ட எதோ செண்டா பார்த்தாளாம். நானும் யோசுச்சு யோசுச்சுப் பார்த்தேன். நம்ம எந்தச் செண்ட்டும் போடலேன்னு…அவ என்ன சொன்னான்னு ஒன்னும் புரியல.
ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சது. இந்தக் கருப்பட்டிக்கு அந்த வெல்லக்கட்டி தான் ஜோடின்னு. லபக்குனு கேட்ச் பண்ணி ஜம்முனு ஓடிக்கிட்டு இருக்கு” எனக் கூற, விழிக்கு சட்டென்று பிடிபட்டது.
“அண்ணே…அது இன்னசெண்டா ?” எனக் கேட்க, “ஆமா ஆமா அந்தச் சென்ட் தான்” எனக் கூற, வாய் விட்டு சிரித்தவள், “அது சென்ட் பேரு இல்ல அண்ணே. உங்கள வெகுளினு சொல்லிருக்கா பாப்பி” எனக் கூற, அசடு வழிந்தான் பாண்டி.
மணமக்களுக்கு வாழ்த்து சொல்ல, விழியோ, பாண்டி இதையும் வெகுளித்தனமாக புரிந்துகொள்ளக் கூடாதே, அதனால் பாப்பியின் வாய்மொழியாக ஊர்ஜிதப்படுத்தலாம் என்று எண்ணியவளாய் “அண்ணே சொல்றது நிஜமா ?” எனப் பாப்பியை கேட்க, அவளோ வெட்கத்துடன் ஆம் என்று கூற ,சக்கரை தன்னைத் தானே கிள்ளிகொண்டான்.
“ஏம்மா பாப்பி…இவன உன்னால சமாளிக்க முடியுமா ?” எனக் கேட்க, ஆங்கிலத்தில் அவளோ நிச்சயமாக எனக் கூற, எல்லாரும் கேள்வியாக எப்படி என்று கேட்க, அசராமல் தன் கைப்பையிலிருந்து வெளியே எடுத்து காட்டினாள்.
அவள் கைகளில், ‘ஒரே நாளில் சோமாஸ் எப்படிச் செய்வது ?’ என்ற புத்தகமிருக்க, சிரிப்பின் அலை விண்ணைத் தொட்டது.
பாண்டியோ கொஞ்சம் வெக்கம் கலந்து, “என்னோட பேரு…” என இழுக்க, அவளோ ஆங்கிலத்தில், “எனக்கு மாஸ் பாண்டியவிடச் சோமாஸ் பாண்டியதான் பிடிச்சிருக்கு” எனக் கூற, அனைவரது முகத்திலும் அப்படியொரு சந்தோசம்.
மண்டபம் முழுக்க விசில் சப்தமும் கைதட்டலும் எழுந்து காதை பிளந்தன. மாறனும் சக்கரையுமே விசில் ஒலிக்குக் காரணம்.
*
சில நாட்களுக்குப் பிறகு…
“அம்மா..” என்ற அழைப்போடு உள்ளே வந்த கதிரவன், “அம்மா…உப்பு இல்லாத நெத்திலி கருவாடு. நம்ம பண்ணைல செஞ்சது. அன்னைக்கு எல்லாருக்கும் கருவாடு வைக்கும் போது அவரு ஆசைப்பட்டுக் கேட்டாருல…கனலிதான் உப்பு இருக்கு சக்கரை இருக்குனு கொடுக்கக் கூடாதுனு சொல்லிடுச்சு…அதா தனியா அவருக்காகப் பதப்படுத்த சொன்னே. இத தல கட்டு தலைவருக்குச் செஞ்சி கொடு…” எனச் சொல்லி செல்ல, உள் அறையில் இருந்த லிங்கத்திற்கு மனசு இலேசானது…
“அடேய்…அப்பான்னு சொல்லாம இதென்ன டா இன்னமும் அப்படி ?” எனக் கேட்க, அதற்கு அவனோ, “முன்ன அவரை எனக்குப் பிடிக்காம அப்படிச் சொன்னே…இப்போ ரொம்பப் பிடிச்சதுல அப்படிச் சொல்லுறேன்..உனக்கு இதெல்லாம் புரியாது. போ இரவைக்கு (இரவு) வறுத்து கொடு. நான் கனலியோட தோப்பு வீட்டுக்கு போயிட்டு வரேன்” எனக் கூறி செல்ல, லிங்கம் பார்வதி இருவரும் கதிரவனின் மாற்றத்தை குறித்து இதமாக உணர்ந்தனர்.
தோப்பு வீட்டில்….
கடலுக்கு அலைகள் துணையென
தென்னங்கீற்றுக்குக் காற்று துணையென
இரவுக்கு நிலவு துணையென
எனக்கு நீ என் தோள்வளைவில்….என்ற சிந்தனையுடன் அவனின் கனலியை தன் நெஞ்சின் மீது சாய்த்துக்கொண்டு படுத்திருந்தான்.
அந்த வீடும் அவனும் மட்டும் இருந்த காலங்கள் அழிந்து அவனிற்காக அவனின் கனலி இனி எப்போதும் என்ற நினைவே சுகந்தமாய் இருக்க, நிறைவாக உணரந்தபடியே, “இப்போ சந்தோசமா இருக்கியா கனலி ?” எனக் கேட்க, “ஹ்ம்ம் ரொம்ப…சந்தோசமா மட்டுமில்ல. நிறைவா” எனக் கூற, கதிரவனுக்கு எதையோ சாதித்த நிம்மதி.
ஆனாலும் அவன் மனதில் அவளிடம் கேட்க ஒன்று இருந்தது…
அதை இப்போது கேட்டுவிடுவது என்று முடிவு செய்தவன், “கனலி, நீ எதுக்காக அத்தையும் மாமாவையும் வெளில அனுப்பணும்னு முடிவு செஞ்ச ? அதுவும் நான் ஊர்ல இருந்து வரதுக்குள்ள ?” எனக் கேட்க, அவளோ நிதானமாக எழுந்து அமர்ந்து, “ஏனா…நீங்க சொன்ன பதில்” எனப் புதிர்போட்டாள்.
“புரியல ?” எனக் கதிரவன் கேட்க,
“அன்னைக்கு நான் இதே இடத்துல உங்ககிட்ட சந்தோசமா இருக்கீங்களானு கேட்டதுக்கு…இருக்கேன் ‘ஆனா’ ஒரு தயக்கத்தோட எதையோ சொல்லவந்துட்டு சொல்லாம விட்டீங்க. அந்த ‘ஆனா’ங்கிற தயக்கம் அத்தையோட நிம்மதியை சார்ந்ததுனு புரிஞ்சது. அத்தைக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லாட்டி நீங்க முழுமையான சந்தோஷத்தோட இருப்பீங்கனு தோணுச்சு…அதுனாலதான்…” எனக் கூற, அவளை மீண்டும் தன் மீது காதலுடன் சாய்த்துக்கொண்டான்.
அவனின் அணைப்பில் இருந்தபடியே, “நீங்க எதுக்கு ஊர்ல இருந்து வரும்போதே அப்பாவை சமாதானம் செஞ்சு கூப்பிட்டு வந்தீங்க ?” என இப்போது இவள் கேட்க, கதிரவனோ அவள் நெற்றில் இதழ் பதித்தபடி, “எதுக்குன்னா..என்னோட பொண்டாட்டி சந்தோசமா இருக்கேன்…ஆனா அப்படினு தயக்கத்தோடு சொல்லாம விட்டுட்டா. அந்த ஆனா உன்கிட்ட இருக்கக் கூடாதுனு நினச்சேன். தயக்கம் இல்லாத முழுச் சந்தோசம் தான் என்னோட கனலிகிட்ட எப்பவும் இருக்கணும்” எனக் கூற, கணவனை இறுக அணைத்துக்கொண்டாள்.
“இன்னுமொன்னு கேட்கவா ? ” என மீண்டும் கதிரவன் ஆரம்பிக்க, இப்போதோ விழிக்கு இலேசான பயம் தொற்றிக்கொண்டது. அவனோடு சங்கமித்த நாட்களில் இருந்து அவ்வப்போது இந்தப் பயம் அவளுள் இருந்துகொண்டே தான் இருக்கிறது…மனமொத்த தம்பதிகளாக மாறிய பின்னர், அவன் கேட்டு தான் பொய் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிடுவோமோ என்ற அச்சம் அது.
ஆம்! திருமணத்தன்று நடந்தது என்ன ? இந்தக் கேள்விதான் கதிரவனிடமிருந்து வந்துவிடவே கூடாதென்று அவள் ஒவ்வொருநாளும் அச்சம் கொண்டிருந்த விஷயம். ஒருவேளை சொல்ல நேர்ந்தால் எதைச் சொல்வது எதை விடுவது என்ற குழப்பம்…
அன்று நடந்ததை முழுமையும் சொல்லவேண்டுமென்றால் கதிரவனின் ரகசியமும் அல்லவா சேர்ந்து வெளிப்படும்…பார்வதியை தவிர அன்று நடந்த முழு நிகழ்வும் வேறு யாருக்கும் தெரியாது. சக்கரை பாண்டியும் தாமதமாக வந்ததால் கதிரவனின் ரகசியம் தெரியாது.
விழியும் இதை யாரிடமும் சொல்லவில்லை. இப்போது கதிரவன் கேட்டாலும் சொல்ல முடியாது…மீண்டும் அவன் மனம் உடைந்து போக அவள் அனுமதிக்கவே மாட்டாள். ஆனால் அவனிடம் எப்படிப் பொய் சொல்வது ? சொல்லியபின் அவன் முகம் பார்த்து எப்படி வாழ்வது ? என்ற சிந்தனைகள் அலைக்கழிக்க, மெல்ல தடுமாற்றத்துடன் “கேளுங்க…” என்றாள்.
அவளின் கலவையான முகபாவனைகளைக் கவனித்தவன் சின்னச் சிரிப்புடன், “மறுபடியும் கடலுக்குப் போலாமா ? அங்க போனா என்னோட பொண்டாட்டி என்கூட இன்னும் நெருக்கமாகிடுவா…” எனக் காதலாக அவளின் காதில் கிசுகிசுக்க, “அப்பாடி…”என்ற உணர்வுடன், “அட இவ்ளோதானா…போங்க” என அவன் மார்பில் குத்த, அவளின் கைகளைத் தடுத்தபடி, அவளை அணைத்துக்கொண்டான்….
அவள் நிம்மதியுடன் தோள் சாய்ந்திருக்க, கதிரவனோ, “உன்ன பொய் சொல்ல வைக்கமாட்டேன் கனலி…நான் எத கேட்க கூடாதுனு நினைக்கிறியோ…அத நான் சாகுறவரைக்கும் கேட்கவே மாட்டேன்.
எந்த உண்மை எனக்குத் தெரியாதுன்னு நீயும் அம்மாவும் நினைக்கிறீங்களோ அது பல வருஷம் முன்னாடியே எனக்குத் தெருஞ்ச விஷயம். நீயும் அம்மாவும் உங்க அண்ணே கல்யாணம் முடுஞ்சு நாலுநாள்ல வீட்ல யாரும் இல்லனு நினச்சு எனக்குக் கடைசிவரை தெரியக்கூடாதுனு பேசிக்கிட்டு இருந்த விஷயமும் நம்ம கல்யாண நடந்தப்ப என்ன நடந்துச்சுனும் நான் தெரிஞ்சுகிட்டேன்.
இந்த ரகசியத்தை நான் தெருஞ்சுகிட்டா நான் உடைஞ்சிடுவேன்னு நீ நினைக்கிற. ஆனா எனக்குத் தெரிஞ்சிருச்சுனு உனக்குத் தெரிஞ்சால் நீ தான் கனலி உடைஞ்சு போய்டுவ.
அப்படி நடக்கவிடமாட்டேன்….
எனக்கான உன்னோட காதல் இருக்குறவரைக்கும் நானும் உடைஞ்சு போகமாட்டேன்…உன்னையும் உடைஞ்சு போகவிடமாட்டேன்… ” என மனதோடு பேசிக்கொள்ள, கணவனைக் கனலி உலுக்கினாள்.
“என்னங்க ? கடலுக்குப் போவோம்னு சொல்லிட்டு கம்முனு இருக்கீங்க ?” எனக் கேட்க, அவனோ சரசமாய், “கடலுக்குப் போயிட்டு வந்தா அப்புறம் நீ கம்முனு இருன்னு சொன்னாகூட அப்படி இருக்க மாட்டேன்” எனக் கூறி புன்னகைத்து கண்ணடிக்க, அவர்களின் முதல் கூடல் நினைவிற்கு வந்து இருவரையும் இன்ப நினைவுகளில் ஆழ்த்தியது.
“சரி இப்போ வேற எதுவுமே குறையா இல்லைல? இல்ல வேற எதுவும் மனசுல குறைய இருக்குதா கனலி ?” என வினவ, “இருக்குங்க! ஒரு சின்னக் குறை இருக்கு” எனச் சட்டென்று கூற, “என்ன சொல்ற கனலி ? என்ன அது ?” எனக் கதிரவன் இலேசான கவலையுடன் வினவ, இவளோ இலகுவாகச் சிரித்தபடி, “இவ்ளோ பதட்டம் வேணாம். எனக்கு என்ன கவலைனா பட்டம் தான் ?அதாவது கடைசி வருஷம் பரிச்சை நான் எழுதவே இல்லைங்க. கல்யாணம் பண்றது போலவே நான் வரல. ஏதோ எப்படியோ நடந்திடுச்சு… நம்ம கல்யாணம் முடுஞ்ச அடுத்த இரண்டுவாரத்துலதான் எல்லாப் பரிட்சையும் வந்தது. அப்போ போகுற சூழல்ல இல்ல.
இப்போ எல்லாமே அரியரா இருக்கு. அத இந்த வருஷம் படிச்சுப் பாஸ் பண்ணிட்டால் இருக்கக் கவலையெல்லாம் ஓடிடும்” எனக் கூற, இந்த விழி கதிரவனுக்குப் புதிதாகத் தெரிந்தாள். அவளின் குரலில் அவளுக்கே உரிய பிடிவாதமும் நம்பிக்கையையும் வெளிப்பட, கதிரவன் அவளை இளங்கலை மட்டுமல்ல, முதுகலை பட்டயபடிப்பும் படிக்கவைக்க வேண்டும் என்று தனக்குள் உறுதி எடுத்துக்கொண்டான்.
அவனின் மனதில் உள்ளதை பற்றி ஏதும் அறியாதவளாய், “அதவிடுங்க! அதெல்லாம் நான் அடிச்சு தூள் கிளம்பிடுவேன். இப்ப வாங்க… கடலுக்குப் போலாம்ங்க… ” எனக் கணவனிடம் குழந்தையாய் அடம்பிடிக்க, இப்போது பிடிவாதக்கார குழந்தையாய் தெரியும் மனைவியைப் பட்டதாரியாக்கும் கனவுடன் அவளுடன் ஆவலுடன் நடந்தான்.
தூரத்தில் கடலின் பேரிரைச்சல் அவர்களின் ஓட பயணத்திற்காகக் காத்திருந்தது…. அந்த ஓட பயணத்தில் அவர்கள் செல்லவிருப்பது ஆழ்கடல் சங்கமத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கையின் சங்கமத்திற்கும்.
சுகமாக நினைத்துக்கொண்டான்… ‘நின்மேல் காதலாகி நின்றேன்’ கனலியே!!! எனக் கதிரவன்.
சுபம்

Advertisement