Advertisement

குரோதம்- 33
அதிர்ச்சியுடன் விழி பார்த்துக்கொண்டிருக்க, “நல்லா கணக்கு போட்ட மருமக பொண்ணே. ஆனா உன்னோட கணக்கு என்னோட பொண்டாட்டிகிட்டவேணும்னா சரியா இருக்கலாம். என்கிட்ட தப்புக் கணக்கா போய்டுச்சே. பாவம்தான்… இனி உங்க இரெண்டுபேரோட குடுமியும் என்னோட கைல. இப்பவே அந்த லிங்கத்துட்ட போறேன்.
அட எதுக்குன்னு பாக்குறீங்களா ? இப்பவே சொல்லிட்டா சப்புன்னு போய்டும். அங்க வந்து என்னோட நாடகத்தைப் பாருங்க” எனக் கூறி கிளம்ப, விழி யோசனையானாள்.
அந்த அறைக்கு இரெண்டு வாசல். ஒன்று பின்கட்டில் இருந்து நுழைய ஏதுவாய் பின்வாசல். அது வழியே விழியும் மச்சக்காளையும் வந்திருந்தனர். பாரிஜாதமோ முன்கட்டிலிருந்து நுழையும் முன் வாசல் வழியாக வந்திருந்தார்.
இப்போது வீட்டிற்குள் நுழைவதற்காய், மச்சக்காளை முன் வாசலை திறக்க , அப்படியே மச்சங்களை உறைந்து போனார். முகமெல்லாம் வேர்வை துளிகள் அரும்பத் தொடங்கின. இவரின் பதற்றத்திற்கான காரணம் அறியாமல் விழியும் பார்வதியும் பாரிஜாதமும் வெளியே என்னவென்று பார்க்க, அங்கே நின்றுகொண்டிருந்தவர் லிங்கமே. பாரிஜாதத்திற்கு மயக்கமே வந்துவிட, மச்சக்காளை சமாளிக்க முயல, லிங்கம் அதைக் கை அசைவில் தடுத்தார்.
“போதும் இந்த இருவத்தஞ்சு வருசமா நீங்க இரெண்டு பேரு சொன்னதைக் கேட்டு என்னை நம்பி பொண்ண கொடுத்த ராஜன் அய்யாக்கும் நான் உண்மையா இல்ல, என்னோட பொண்டாட்டிக்கிடையும் பாசமா இல்ல.
அந்தப் பெரிய மனுஷன் என்ன நம்பிவிட்டு போன கதிரவனுக்கும் நான் அப்பனா இல்ல. எல்லாத்தையும் விட மாறனோட ஆசையையும் நானே குழி தோண்டி புதைக்கப் பார்த்தேன். என்ன இப்படியெல்லாம் பண்ணவச்ச உங்கள என்ன செஞ்சாலும் தகும். ஆனா சுயபுத்தியில்லாம சொல்புத்தில ஆடுன எனக்கு என்ன தண்டனை கொடுக்க முடியும் ?
சொத்துக்காகத் தான இத்தனையும் செஞ்சீங்க? அதுனால உங்களுக்கு இனி இந்த ஆஸ்தியை அனுபவிக்கிற உரிமை இல்ல. அதுதா உங்களுக்கு சரியான தண்டனை. கடைசில என்னையே ஜெயிலுக்கு அனுப்பவும் கட்டம்கட்டிடீங்க… இனிமேலும் நீங்க இங்கன இருந்தா என்னோட குடும்பத்தை ஒண்ணுமில்லாம பண்ணிடுவீங்கங்க.
மரியாதையா வெளிய போங்க” எனக் கூறியவர், அடுத்துப் பாரிஜாதம் ஏதோ கூற வர, “வெளிய போன்னு சொல்றேன்ல, உன்னோட புருஷன கூட்டிட்டு வெளில போடி” என அந்த வீடே அதிரும்படி கத்தியதில், முற்றத்தில் நின்றிருந்த சாந்தினியும், மாறனும் அவசர அவசரமாய் அவர்கள் நிற்கும் இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சாந்தினியையும் மாறனையும் பார்த்ததும், வேகமாக அவர்களிடம் சென்ற பாரிஜாதம், “மாறா, சாந்தினி இங்க பாரு மா. உங்க அம்மா பண்ணாத தப்ப இங்க நிக்கிற இவளுங்க என்மேல போட்டு எங்க அண்ணனை வச்சே என்ன வெளிய தொரத்துறாளுங்க” என முதலை கண்ணீர் விட , விழியோ, “ஐயோ, இந்த அம்மா அழுது நடுச்சுக் குடும்பத்தைப் பிரிச்சிடுமா?” என யோசிக்க, பார்வதியும் மனதோடு, “மாறா நம்பிடாதா டா…” எனப் பேசிக்கொள்ள, பாரிஜாதம் மேற்கொண்டு ஏதோ கட்டுக்கதை சொல்ல, சாந்தினியும் மாறனும் அப்படியே நின்றிருந்தார்கள்.
“என்னடி அப்படி நிக்கிற ?” எனப் பாரிஜாதம் மகளை உலுக்க, “அம்மா, இங்கன எல்லாரும் என்ன பேசுனீங்கன்னு எனக்குத் தெரியாது… ஆனா நீயும் அப்பாவும் தப்பு பண்ணுனீங்கன்னு மட்டும் தெரிஞ்சிடுச்சு. மாமாவை எப்படிம்மா ஜெயிலுக்கு அனுப்ப உனக்கு மனசு வந்துச்சு ?” எனக் கேட்க, பாரிஜாதமும் மச்சக்காளையும் திடிக்கிடலுடன் சாந்தினியை பார்த்தனர்.
சாந்தினியின் பார்வையில் காட்சிகள் விரிய தொடங்கின.
ஏதாவது படம் பார்க்கலாமென்று சாந்தினியும் மாறனும் ஒவ்வொரு சீடியாகப் போட்டு பார்க்க , அப்போது தான் லிங்கம் உள்நுழைந்தார். அவர் உள் நுழைய, மாறனோ, “ஏதாவது ஒரு படைத்த போடு. சும்மா மாத்திக்கிட்டே இருக்காதா” எனக் கடிய, இப்போது போட்டதே ஓடட்டும் என்று எண்ணியவளாய் இருக்க, அதில் மாரிமுத்துவின் வாக்கு மூலம் ஓட, அதை முதலில் புரியாமல் பார்த்தவர்கள் முருகேசன் குரலில் கவனத்தைப் பதித்து ஊன்றி பார்க்க, அதில் மச்சக்காளை பெயரும் லிங்கத்தின் பெயரும் அடிபட, அப்படியே ஸ்தம்பித்துப் போயினர். அவர்களோடு சேர்ந்து லிங்கத்தாலும் ஓடிக்கொண்டிருக்கின்ற காட்சியைப் பார்த்தவர் நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் குழப்பத்தின் உச்சிக்கு சென்றார்.
அவரைப் பார்த்ததும் எழுந்து நின்ற, மாறனும் சாந்தினியும் அவரின் பின்னோடு வர, அவர்களைத் தடுத்தவர், “யாரும் கூட வர வேணாம். நான் பாத்துக்கிறேன்” எனக் கூறி வந்தவர்தான் பாரிஜாதம் பார்வதியின் உரையாடல்களையும் அதைத் தொடர்ந்து விழி மச்சக்காளை பேசியதையும் கேட்டுவிட்டிருந்தார்.
மாறனும் சாந்தினியும் உடன் வராததால் கதிரவனைப் பற்றிய ரகசியத்தை அவர்கள் அறியவில்லை. அவர்கள் கண்டதை மட்டும் கூற, தப்ப முடியாத சூழலில் சிக்கிக்கொண்டதை மச்சக்காளையும் பாரிஜாதமும் உணர்ந்துகொள்ள, லிங்கம் பேச தொடங்கினார்.
“சின்னவங்க மூணு பேரும் உள்ள போங்க” என அதட்டல் போட, விழி சாந்தினி மாறன் என மூவரும் களைந்தனர்.
“பாரிஜாதம்…நீயும் உன்னோட புருஷனும் இங்க இருந்து அடிச்ச சொத்தை வச்சு தனியா உங்க பேருல சொத்து வாங்கிருக்கீங்கனு சமீபத்துல என்னோட காதுக்கு வந்துச்சு. நான் தங்கச்சிதானேனு விட்டுட்டேன். கண்டுக்கல.
இப்ப உடனே இந்த வீட்டைவிட்டு வெளியேறுறீங்க. கதிரவனைப் பத்தியும் பார்வதியோட கடந்த காலத்தைப் பத்தியும் வெளிய போய்ப் பேசுனீங்கன்னு தெரிஞ்சா, நீக்க ஆச ஆசையா சேர்த்துவச்ச சொத்தும் இருக்காது, அத அனுபவிக்க நீங்களும் இருக்க மாட்டீங்க. என்ன ஏமாத்தி மோசடி பண்ணிடீங்கனு உள்ள தள்ளிடுவேன்.
தங்கச்சினும் பார்க்கமாட்டேன், பொண்னு கொடுத்த சம்மந்தினும் பார்க்க மாட்டேன்.
அதுக்குமீறியும் வெளிய சொல்லி அவுங்கள அசிங்கப்படுத்த நினச்சா, கதிரவன் என்னோட புள்ளன்னு சொல்ல நான் இருக்கேன். ஆனா அதுக்குபொறவு உனக்குப் புருஷன் இருக்கமாட்டான்…
என்ன புருஞ்சுதா ?” என மிரட்ட, அவரின் மொழியிலும் சொன்ன தொனியிலும் மச்சக்காளையே ஆட்டம் கண்டு போனார் என்பதே உண்மை. தலை கவிழ்ந்தபடி இருவரும் வெளியேற முயல, “பாரிஜாதம்…போறதுக்கு முன்னாடி இதையும் கேட்டு போ” எனத் தடுத்த லிங்கம், பார்வதியிடம் திரும்பி, “பார்வதி… நான் உனக்கும் கதிருக்கு பண்ணதுக்கு மன்னிப்பு கிடையாது.அந்த பாவம் நான் செத்தா கூடப் போவாது. உங்க அப்பா ஆன்மாவும் என்ன மன்னிக்காது. ஆனா நான் செத்தா கதிரவன் தான் எனக்குக் கொல்லி போடணும். இதுல எந்த மாற்றமும் இல்ல” எனக் கூறி கதிரவனைத் தன் மூத்த மகனாக லிங்கம் எண்ணத்தொடங்கிவிட்டதைச் சொல்லாமல் சொல்லி உறுதிப்படுத்தினார்.
லிங்கத்தின் இந்த அதிரடி முடிவு பாரிஜாதத்திற்கும் மச்சக்காளைக்கும் பேரிடியே; இருந்தும் எதுவும் செய்ய முடியாத நிலையில், அறையை விட்டு வெளியேற தாழவாரத்தில் மகள் மருமகன் முன்னால் தலை கவிழ்ந்து செல்ல, அதற்குக் காரணமான விழியின் மீது அவர்களுக்கு க்ரோதம் கூடியது.
நடந்த விஷயங்களில் அளவு கடந்த அதிர்ச்சியைச் சந்தித்திருந்த லிங்கத்தின் மனவலிமை ஆட்டம் காண, அவர் பார்வதிக்கும் கதிரவனுக்குச் செய்த கொடுமைகள் கண் முன்னே ஊர்வலம் போக, நிற்க முடியாமல் தடுமாற, பார்வதி பதற்றத்துடன் வந்து அவரைத் தாங்கி கொள்ள, லிங்கம் பார்வதியின் அன்புக்கு முன்னால் கூனிக்குறுகி போனார்.
அவரது பார்வை பார்வதியை நேருக்கு நேராகச் சந்திக்க முடியாமல் தடுமாறியது. இதைவிட ஒரு பெரிய தண்டனையை லிங்கத்திற்கு வேறு யாரும் கொடுத்திட முடியாது என்பதே உண்மை. செய்த பாவங்கள் தன்னையே சுடுவதை விட வலி வேறெதிலும் இருக்காது.
மன்னித்துவிடு என்று கேட்க கூட அவரிடம் திராணி இல்லை. அவர் செய்தது மன்னிக்கக் கூடிய குற்றமும் இல்லை. அளவு கடந்த நம்பிக்கையைத் தங்கையின் மீது வைத்தவர், மனைவியின் வார்த்தையில் வைக்கவில்லை. சகுன சந்தர்ப்பங்களைப் பெரிதாக நினைத்தவர் மனைவியின் பாசத்தை மதிக்கவில்லை. பார்வதி அக்கணம் காட்டுகின்ற அக்கறை அனைத்தும் அவருக்குக் குற்றஉணர்ச்சியில் நெருஞ்சியாய் மாறின. காலம் கடந்த ஞணோதயம். கண் கெட்ட பின் சூர்யா நமஸ்க்காரம். வயது போனபின்பு மனைவியின் மீது பிடித்தம். என இவ்வாறாக நினைத்து மனதை அவர் அலட்டிக்கொள்ள, பார்வதி வேறு சொன்னார்.
“பாவம் பண்ணிட்டேன் பார்வதி….பாவம் பண்ணிட்டேன். திருத்திக்கவோ திரும்பி போய்ச் சரிபண்ணவோ முடியாத பாவம் பண்ணிட்டேன்” எனக் குரல் தழுதழுக்க இத்தனை நாளாய் இருந்த கம்பீரத்தில் கொஞ்சமும் இல்லாதவராய் தளர்ந்து தரையோடு அமர்ந்து நெஞ்சை பிடித்துக்கொண்டு லிங்கம் கூற, பார்வதி உள்ளுக்குள் நொறுங்கி போனார்.
இருந்தும் லிங்கத்தைத் தேற்றுவதே தன் முதல் கடமை என்று எண்ணியவராய்,
“நீங்க இவ்ளோ சோர்வா இருந்து நான் பார்த்ததே இல்லைங்க. இனிமேலும் அப்படிப் பார்க்க கூடாது. நடந்த எல்லாத்தையும் மறந்திடுங்க. இதுவரைக்கும் உங்களுக்கு உண்மை தெரியாம போனதுல எனக்கு வருத்தம் தான். ஆனா இப்ப தெருஞ்சதுல இரட்டிப்புச் சந்தோசம்.
கை கால் நல்லா இருந்து ஓடி ஆடி இருக்கறப்ப புருஷனுக்குப் பொண்டாட்டியும் பொண்டாட்டிக்கு புருஷனும் தேவை இல்லாம வீராப்பா இருந்திடலாம்.
ஆனா ஆடி திரிஞ்சு அசந்து படுக்குற காலத்துலதாங்க உண்மையான அன்பு கூட இருக்கணும். எங்க கடைசிவரைக்கும் உங்களுக்குத் தெரியாமலே இந்த உடம்பு கட்டைல போய்டுமேனோ பயந்துகிட்டே கிடந்தே.
இப்ப சந்தோசமா இருக்கேன்ங்க. என்ன நினச்சு நீங்க கவலைப்படாதீங்க. இது திரும்பி போய்ச் சரிபண்ண முடியாத விஷயம் தான். ஆனா திருத்திக்க முடியாத விஷயமில்லைங்க” என நம்பிக்கையாய் கூற, பார்வதியின் தலையை ஆதரவாக வருடியபடி, “கதிரவன் என்னைய மன்னிப்பானா ?” என எதிர்பார்ப்போடு வினவ, பார்வதிக்கும் உள்ளூர கலக்கம் இருந்த போதிலும் நம்பிக்கையாக, “மன்னிக்க நீங்க என்ன தப்பு செஞ்சீங்கன்னு கேட்பான் பாருங்க…” எனக் கூற, லிங்கம் சற்றே தெளிந்தார்.
வீடே நிம்மதி காற்றைச் சுவாசித்ததைப் போல இதமாக இருந்தது.
ஆனால் அதற்கு முற்றிலும் மாறாய் எரிமலையாய் மச்சக்காளை விழியின் வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
அவர் செல்வதற்குக் காரணம் சற்று முன் விழியும் பார்வதியும் பாரிஜாதத்தின் முன்னிலையில் தங்களையும் அறியாது அவர்களுக்குக் கொடுத்துவிட்டிருந்த தகவலே. அவர்களின் பேச்சிலிருந்து கதிரவனிற்கே விழியை இன்னும் பிடிக்கவில்லையோ மனஸ்தாபமோ ஏதோவொன்று. அவளின் திருமண வாழ்வே சரியில்லை. பெற்றவர்களிடம் இதைச் சேர்ப்பித்தால், பிடிக்காத திருமணம் செய்துகொண்ட மகளாயினும் அவள் வாழ்வு சரியில்லை எனும் போது, அவர்கள் இங்கு வந்து சண்டை போட வாய்ப்புண்டு.
கதிரவனிடம் அதட்டி பேசினாலும் அடிதடியில் பேசினாலும் அவன் எதிர்புறமாக மாறிவிடுவான். விழியின் வீட்டை கதிரவனுக்கு எதிராகத் திருப்பி, ஒரு கலவரத்தை உண்டாக்கி, கதிரவனே விழியை வீட்டைவிட்டு துரத்த வேண்டும் என்று மனதில் சூளுரைத்துக்கொண்டார் மச்சக்காளை.
“பாரிஜாதம், நம்மள அந்த வீட்டைவிட்டு அனுப்பினவ, அந்த வீட்ல இனி ஒரு பொழுது கூட இருக்கக் கூடாது… ” எனப் பேசியபடி பாரிஜாதத்தையும் அழைத்துச் செல்ல, விழியின் வீட்டிலோ கந்தசாமி மட்டுமே தனித்திருந்தார்.
தேவியும் பார்த்திபனும் கோவில் சென்றிருக்க, விழியில்லாது வெளிச்சமற்று கிடந்த வீட்டிற்குள் நெருப்பைப் பற்றவைக்க நுழைந்தனர் மச்சக்காளையும் பாரிஜாதமும்.
கந்தசாமி இவர்களின் வருகையை எதிர்பார்க்காவிடிலும் விரும்பாத போதும், வந்தவர்களை வெளியே அனுப்ப முடியாமல் முன்னறையில் வாங்க என்று சம்பிரதாயமாகக் கூறி அமரவைத்தார்.
“கந்தசாமி….நான் சுத்தி வளச்சு பேச விரும்பல. நேர விஷயத்தைச் சொல்லிடறேன். உங்க பொண்னு அப்படிக் கண்ணாலம் பண்ணிட்டு வந்து நின்னது எங்களுக்கு அதிர்ச்சிதான். இன்னும் சொல்ல போன பிடிக்கலைனு கூடச் சொல்லலாம். ஆனா அதையெல்லாம் மனசுலவச்சிட்டு நாங்க இத சொல்லுறோம்னு நினைக்காதீங்க.
அங்கன உங்க மவ வாழற வாழ்க்கை வெத்து வாழ்க்கை. புகுந்து வீட்டில யாரு தயவு இல்லாட்டியும் புருஷன் தயவு வேணும். ஆனா அங்க உங்க பொண்ணுக்கு புருஷன் தயவும் இல்ல மரியாதையும் இல்லை.
இன்னும் சொல்லப்போனா, ஒரு மானங்கெட்ட வாழ்க்கையைத் தான் வாழ்ந்துகிட்டு இருக்கு.
இதுக்குமேலையும் உங்க பொண்னு எக்கேடு கெட்டாலும் பரவா இல்ல, உங்க மகளைப் போலவே, உங்க குடும்பத்துக்கும் ரோஷமும் மானமும் இல்லனு இருந்தீங்கனா, இப்படியே இருங்க. சொல்றத சொல்லிப்பிட்டோம்…நானு ஒரு பொண்ண பெத்தவன்தான்.. அதா பிடிக்காட்டி கூட மனசு கேட்காம சொல்லிட்டேன். இனி உங்க சௌகரியம்” எனக் கூறி எழ, பாரிஜாதம் இன்னும் நாலு வார்த்தைகள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல ஏற்ற, கந்தசாமியின் முகம் இறுக தொடங்கியது.
அவர்கள் பேசிய எதற்கும் எந்தவொரு பதிலும் கூறவில்லை. ஆனால் மனது குமைந்துகொண்டு இருந்தது.
“ஏங்க நாங்க சொன்னது காதுல விழுந்துச்சா ?” என மச்சக்காளை கேட்க, “நாளைக்கு உங்க வீட்டுக்கு வரேன். விழிய கையோட என்கூடவே புறப்பட வைக்கிறேன். இப்ப நீங்க போகலாம்” எனக் கை எடுத்து கும்பிட்டுவிட்டு விரட்டென்று உள் நுழைய, அந்த வேகத்தில் அவரின் கோபத்தின் அளவை மச்சக்காளையும் பாரிஜாதம் புரிந்துகொண்ட க்ரோதம் கலந்த சந்தோசத்தை அடைந்தனர்.
சொன்ன சொல்லை போலவே, மறுநாள் காலை விழியின் வீட்டு வாசலில் நிற்க, தேவி பதற்றத்துடன் அவர் பின்னால் இருக்க, பார்த்திபனோ விஷயத்தைச் சொல்ல முருகேஷனிற்குக் கைபேசியில் அழைக்க, “விழி….” என்ற கந்தசாமியின் குரலில் தந்தையின் குரலை கேட்ட விழி அப்படியே நம்பமுடியாத சூழலில் தள்ளப்பட்டாள்.
“அப்பா…” என்று ஆசையாக ஓடிவர, பின்னோடு பார்வதியும் லிங்கமும் வர, சாந்தினி மாறனும் கூட என்னவோ ஏதோவென்று பதற்றத்துடன் வந்தனர். விஷயம் தெரிந்து முருகேசனும் அடித்துபிடித்து ஓடிவர, மல்லியும் அவரோடு வர, மச்சக்காளையும் பாரிஜாதமும் வன்மம் நிறைந்த கண்களுடன் ஆர்வாமாக அரங்கேறவிருக்கும் கூத்தை பார்க்க நின்றனர்.
“இவுங்க எங்க இங்க ?” என்ற பார்வையுடன் லிங்கம் பார்க்க, தட தட என்று புல்லெட் எழுப்பிய பெரிய சப்தத்துடன் கதிரவனும் வந்து சேர்ந்தான்.
சென்னை சென்றிருந்தவன், முல்லை கூறியதை மனதினில் வைத்து அவனின் கனலிக்கு பிடிக்குமென்று முன்பதிவு செய்து புல்லெட் வாங்கி இருக்க, அஃது இன்று காலையில் தான் அவன் கைக்கு வந்திருந்தது. அதனால் தான் நேற்றே வேலை முடிந்தும்கூடச் சிறிது தாமதித்துப் புல்லெட்டுடன் வந்திருந்தான் கனலியின் கதிரவன்.
வருகின்ற வழியெல்லாம் முல்லையின் வார்த்தைகளே அவன் காதில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டன.
“சும்மாவே உங்கள கெத்து கெத்துனு சொல்லுவா”….என்ற வார்த்தைகள் அவன் மனதில் தோன்றி சின்ன அளவான புன்னகையை வரவழைத்தன. நல்லவேளையாக அந்தச் சின்னப் புன்னகையை அடர்ந்த அவன் மீசை மறைத்துவிட, ஊர் மக்களின்முன்னால் தனியாகச் சிரித்துக்கொண்டு செல்கிறான் என்ற பிம்பத்திலிருந்து தப்பித்தான்.
“பொய்க்காரி….வாயாடி….சண்டைக்காரி….என்னோட செல்ல பொண்டாட்டியே…. என்னைய தனியா சிரிக்க வச்சுட்டியே….” என மெல்ல அவனின் அதரங்கள் முணுமுணுக்கத் தொடங்கின.
கதிரவனைப் பொறுத்தவரை அவனின் கம்பீரம் கனலியின் வார்த்தைகளால் இன்னும் மெருகேறின…. தன் மனைவி தன்னை ரசிக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு மேலும் வசீகரத்தை அளித்தது. அவள் இந்த வண்டியுடன் தன்னைப் பார்த்தால் அவளின் விழிகள் ஆச்சர்யத்தில் விரியுமா ? சந்தோசத்தில் புன்னகைத்து சுருங்குமா ? காதலில் நாணம் கொண்டு இமை தாழுமா ? இல்லை மீண்டும் மயக்கம் கொண்டு கிரங்குமா ? எனப் பலவாறாக யோசித்து அவனின் கனலியின் பாவனைகளைக் காண ஆவலாக வர, அவனை வரவேற்றது விழியின் கலங்கிய விழிகள். ஆனாலும் கண்ணீரை வெளியேற்றாமல் தடுத்து நிறுத்த அவளின் இமைகள் இரண்டும் போர் காவலாளிகளாக நின்றிருந்தன.
“அப்பா….” என்ற அழைப்பு மட்டுமே விழியிடம்.
கலங்கிய அவளது விழிகளைப் பார்த்தவன், வண்டியை அவசரமாய் நிறுத்தியவன் “கனலி…” என்று முன்னே செல்ல, மச்சக்காளை இடைபுகுந்து, “அட மாப்பிள்ளை செத்த பொறுங்க. அப்பாவும் பொண்ணும் பேசுறாங்கல…” என வழியை மறைத்தபடி நிற்க, கதிரவனுள் அப்படியொரு கோபம்.
அவனின் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அத்தனை சிரமப்பட்டான் என்பதைப் பார்ப்பனர்களால் யூகிக்க முடிந்தது. அவன் மச்சக்காளையிடம் பேச விருப்படவில்லை. அஃது அவசியமற்றது என்று கூட நினைத்தான். உன்னிடமெல்லாம் எனக்கென்ன பேச்சு என்பதைப் போன்றதொரு பாவனை. அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கினான். புருவத்தை இலேசாக உயர்த்தி மச்சக்காளையைப் பார்த்த பார்வை, அந்தப் பார்வையை மச்சக்காளையே எதிர்ப்பார்க்க வில்லை.
அவரையே அறியாமல், ஓரடி பின்நகர, அவருடைய தோள்களில் கைவைத்து தன் பாதையிலிருந்து அவரை அகற்றி முன்னேற, கந்தசாமி பேச தொடங்கினார்.
“பாப்பா…போதும். புறப்படு. போ….” எனக் கூற, கதிரவன் ஏதோ கேட்க வர, அவனைத் தடுத்த பார்வதி, “அண்ணே! என்னாச்சு ? மொத முறையா வந்துட்டு எதுக்குக் கோப படுறீங்க. எதுனாலும் பேசிக்கலாம் அண்ணே. உள்ள வாங்க… எல்லாரும் உள்ள வாங்க” என அனைவரை பார்த்தும் பார்வதி அழைத்தபடி லிங்கத்தை ஏறெடுத்து பார்க்க, மனைவியின் பார்வையில் என்ன உணர்ந்தாரோ சட்டென்று படி இறங்கிவந்து, “இதோ பாருங்க கந்தசாமி…இந்த கண்ணாலத்துல எனக்கும் இஷ்டமில்லைதான். ஆனா நடந்தது நடந்து போச்சு… எல்லாரும் அத ஏத்துக்கிட்டாங்க. விழியும் எங்கள்ல ஒருத்தரா மாறிடுச்சு.
அப்படியிருக்க எதுக்குப் பழசை பிடிச்சிக்கிட்டு பேசணும். எல்லாத்தையும் மறந்திடலாம். உள்ள வாங்க…” என அழைக்க, கந்தசாமியோ விடாப்பிடியாக, “எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினச்சு பேசுறீங்க… என்னோட மகள் என்ன வாழ்க்கை வாழறனு உங்க குடும்பத்தைச் சேர்ந்த இந்த மச்சக்காளையும் உங்க தங்கச்சியும் என் வீட்டு படிவாசல் ஏறி வந்து சொல்லிட்டாங்க.
கதிரவனுக்கு எம் பொண்ணுகிட்ட பாசமோ மரியாதையோ இல்லவே இல்லனும் என்னோட புத்தியில உரைக்கிறது போலச் சொல்லிட்டாங்க…இதுகுமேலயும் என்னை எப்படி நடந்துக்கணும்னு சொல்லுறீங்க ?” எனக் கேட்க, கதிரவன் பதில் சொல்வதற்கு முன் முந்திக்கொண்ட லிங்கம் சட்டென்று, “இல்ல கந்தசாமி…உங்களுக்கு வந்தது தப்பான தகவல். என்னோட சொந்த தங்கச்சியும் தங்கச்சி புருஷன்தான் ஆனாலும் அவுங்க நாக்கு சுத்தமில்ல. அதுனால அத நம்பாதீங்க. ஏன் இந்த வீட்ல இருக்க யாரையும் நம்ப வேணாம்.
ஆனா கதிரவனை நம்புங்க. அவன் ஒரு விஷயத்தை எடுத்துட்டா அத நிச்சயம் விடமாட்டான். பிடிக்காத உறவுகளை விட்டே விலகி போக நினைக்காதவன். பிடிச்சு கட்டிகிட்ட உங்க பொண்ணையா விட்டுட போறான் ?
பொம்பள பிள்ளைங்களை மதிக்கிறது எப்படினு என்னோட மகன்கிட்ட இருந்து தான் நான் கத்துக்கிட்டேன். அதுவும் ரொம்பத் தாமதமா….
அதுனால உறுதியா சொல்லுறேன். என்னோட புள்ளயால எம்மருமவளுக்கு ஒருபோது தலைகுனிவு வராது. வரவும் விடமாட்டான்” என அடித்துப் பேச பேச, கதிரவன் அப்படியே ஸ்தம்பித்தான்.
அனைவருக்குமே இந்த மாற்றம் ஆச்சர்யமே! எல்லாரும் அதில் இலயித்திருக்க கந்தசாமி மட்டும், “வந்ததுல இருந்து நீங்க எல்லாரும் பேசுறீங்களே. இதோ என் கண்ணுமுன்னாடி என்னோட பொண்ணு கண் கலங்கி நிக்கிறா… அவ ஒருவார்த்தை கூட, இல்லப்பா நான் சந்தோசமா இருக்கேனு சொல்லவே இல்லையே” எனக் கூற, விழியோ இது என்ன புதுக் குழப்பம் என்று நின்றிருந்தாள்.
அவள் வாயடைத்து நின்றதின் காரணம், அவளின் உயிரான மொத்த குடும்பத்தின் வரவும். வந்ததும் வராததுமாக வெளியேவே தொடங்கிவிட்ட காரசாரமான பேச்சு. கோவிலில் கூடத் தன்னைக் கேள்வி கேட்டிராத தன் தந்தை, இப்போது கோபம் படும் காரணம். இவையெல்லாம் தான் அவளின் சிந்தனையில் ஓடி கொண்டிருந்தன.
மாதக்கணக்கில் தன் குடும்பத்தைப் பார்த்திராத விழி தந்தையைக் கண்டவுடன் உணர்வுகளின் பிடிகளில் சிக்கிக்கொண்டாள். அவரைப் பார்த்த சந்தோசமா ? அல்லது அவர் சொல்லை மீறி நடந்த குற்ற உணர்ச்சியா ? இல்லை மீண்டும் தந்தையின் அன்பை அனுபவிக்கும் வரம் கிடைக்கும் என்ற ஏக்கமா ? எதுவென்றே புரியாத நிலை. அதனாலே எப்போதும் அழுத்திடாதவள் அழுத்திடவே கூடாது என்று எண்ணம் கொள்ளும் பிடிவாதக்காரியின் கண்ணிலும் கண்ணீர் நிறைந்திருந்தது.
கந்தசாமி கூறியும் பட்டென்று பேசிவிடுபவள் ஒரு நொடி பேசாமல் நிற்க, ஒரே ஒரு நொடி அமைதி கதிரவனை அந்த வார்த்தைகளை உச்சரிக்க வைத்தன.
“விழி போதும்…உன்னோட துணிய எடுத்து வை… புறப்படு” எனக் கூற, அங்கிருந்த அனைவரும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தனர்.

Advertisement