Advertisement

காதல் சங்கமம் – 32
வீட்டை திறந்தவுடன், சரிவர ஆட்கள் போய் வந்து இல்லாததால் தூசியாக இருக்க, விழி கொஞ்சமும் யோசிக்காமல் சுத்தம் செய்து ராஜனின் படத்திற்கு விளக்கை ஏற்றினாள். மனைவியின் ஒவ்வொரு செய்கையையும் கண்ணெடுக்காமல் கதிரவன் பார்த்துக்கொண்டிருக்க, விழிக்கு பார்வையை ஏறெடுத்து பார்க்க முடியாத அளவிற்கு நாணம் ஒட்டிக்கொண்டது.
இருவரும் ராஜனிடம் மனதார ஆசி வேண்டிய பிறகு, சற்று இடைவேளை விட்டுத் தனித் தனியாய் அமர்ந்திருந்தனர். கதிரவன் அவளை விழுங்குவதைப் போலப் பார்த்து வைக்க, விழிக்கு அவனின் பார்வை ரசிக்கவும் வைத்தது திணறடிக்கவும் வைத்தது.
மெல்ல பேச்சை எப்போதும் போல விழியே ஆரம்பித்தாள்….
“நம்ம வீட்ல இருந்து கடல் ரொம்பக் கிட்டக்கவா ? கடல் சத்தம் கேட்குது…” என ஏதோ பேசவேண்டும் என்பதற்காக ஆரம்பித்தாள். உண்மையில் கடலை பற்றியெல்லாம் அவளின் எண்ணம் இல்லவே இல்லே. கதிரவனின் காதல் பார்வை அவளைத் தடுமாறச் செய்தது. நாணம் தாளாமல் எங்காவது சென்று ஒளிந்துகொள்ளலாம் என்றால் இருப்பதோ ஒரே அறை. இதில் எங்கு ஒளிவதற்கு இடம் தேட ? என்றது அவளின் மனம்.
“ஹ்ம்ம் ஆமாம்..உனக்கு கடல்னா ரொம்பப் பிடிக்கும்ல”
“ஆமா மாமா..ரொம்பா….ஆனா ஒரே ஒருமுறை தான் போனே”
இப்போது இருவருக்குள்ளும் ஓரளவு சகஜமான பேச்சுவார்த்தை தொடங்கியிருந்தது.
“சரி வா இப்ப போகலாம்…” என எழுந்தவன், அவள் எழுவதற்குத் தன் கையை நீட்ட, ஓர் நொடி தயக்கம், அதைத் தொடர்ந்து சிறு வெட்கம் என ஆயிரம் உணர்வுகளுடன் மெல்ல அவனின் கரத்திற்குள் அவளுடைய மெல்லிய கரங்கள் பதிய, வாகாக அவளை இழுத்தவன் வேணுமென்றே தன் மீது சாய்த்துக்கொண்டான்.
இந்தத் திடீர் ஸ்பரிசம் அவளைத் திக்குமுக்காட வைத்தது. மெல்ல விலக முயன்றவளின் இடையைப் பற்றியவன், “நான் எதிர்பார்க்காமலே என்னோட வாழ்க்கையில் வந்துட்ட. இனி நானே நினைச்சாலும் என்னைவிட்டு நீ விலகமுடியாது” எனப் பிடியை இறுக்கியவன், அவள் காதோரம் இருந்த முடிக்கற்றையை ஒதுங்கியபடி, “நான் உணர்ந்துட்டேன்…நீ எப்போ ?” எனக் கேட்க, விழிக்கு தடக் தடக்கென்று இதயம் அடித்துக்கொள்ளத் தொடங்கியது.
மேற்கொண்டு அவளை தடுமாற செய்யாமல், “சரி வா போலாம்….” எனக் கை பற்றி அழைத்துப் போக, ஏதோ காதல் சாவி கொடுக்கப்பட்ட கைபொம்மையாய் அவனுடன் நடக்கத் தொடங்கினாள்.
அன்று மூன்றாம் பிறை, களங்கமில்லாமல் அழகாக வானில் தேவதையென நிலாமகள் ஜொலிக்க, சுற்றிலும் கருநீல கடல் சூழ, கதிரவன் இயக்கி வந்த படகு கடல் நீரை கிழித்தபடி முன்னேறிக்கொண்டிருந்தது.
இரவு நேர குளுமையும், கடலின் பேரிரைச்சலும், நீருக்கு நடுவில் மனதிற்குப் பிடித்தவர்களுடனான தனிமையும் இருவருக்குமே பிடித்திருந்தது. விழிக்கு பழைய நினைவுகள் தலை தூக்கின. அன்று அவன் அனல் தெறிக்கும் கதிரவனாய் தகித்தான். இன்றோ குளுமை தரும் கடலரசனாய் அணைத்தான். ஆம் பார்வையில் கதிரவன் அவனின் கனலியை அணைத்துக்கொண்டு தான் இருந்தான்.
“பிடிச்சிருக்கா…” என்று கதிரவன் கேட்க,
“ஹா..என்ன ? யார ?” எனத் தடுமாறினாள் விழி.
“இந்தக் கடல் பயணம் பிடிச்சிருக்கா…?” எனக் கதிரவன் வினவ,
“உன்னோட வர வாழ்க்கை பயணமே பிடிச்சிருக்கு மாமா… உன்கூட இருக்க இந்தக் கடல் பயணம் பிடிக்காம போகுமா ?” என்பதை மனதோடு மட்டும் சொல்லிக்கொண்டாள். ஏனோ நிறையப் பேசுபவளுக்கு அன்று தழிழில் உள்ள அத்தனை வார்த்தைகளும் மறந்து போனதை போன்றதொரு பிம்பம்.
“நிறையப் பேசுவியே கனலி…ஆனா இன்னைக்கு உனக்குப் பேச தெரியுமான்னு எனக்கே சந்தேகமா இருக்கு” எனக் கூறி மெல்ல சின்ன அளவான சிரிப்பை கதிரவன் அவளைப் பார்த்தபடி உதிர்க்க, அவனுடைய தீர்க்க பார்வையில் தடுமாறியவள், முகத்தை வேறுபுறமாகத் திருப்பியபடி, “அதென்ன ? கனலி ?” எனக் கேட்க, “பிடிச்சிருக்கு… ஏன் சொல்ல கூடாதா ?” எனக் கேட்க, இதற்கு என்ன பதில் கூறுவாள்…
“பார்க்காமலே இத்தன நாளா கொண்டான். இப்ப பார்த்து பார்த்துக் கொல்லுறான்” என மனதோடு நினைத்துக்கொண்டாள் விழி.
வேறு எதாவது பேசலாம் என்று நினைத்தவள், “இராத்திரில இவ்ளோ தூரம் வந்தா ஒண்ணுமில்லையா ?” எனக் கேட்க, “நான் உன்கூட இருக்கேன்ல. ஒண்ணுமில்ல…ஏன் பயமா இருக்க ?”
“இல்ல… ஆனாலும்….” என இழுக்க, அவனுடைய ஒரு கரத்தை மீண்டும் அவளை நோக்கி நீட்ட, இம்முறை அவன் எதுவுமே சொல்லாமல் அவளுடைய கரத்தை அவனுடையதோடு பொருத்திக்கொள்ள, விழியினுள் அப்படியொரு உணர்வு. அது சந்தோஷத்தையும் தாண்டிய நிறைவு.
அவனுடைய அழுத்தமான கரம் அவளுக்கு அளவுகடந்த ஆசுவாசத்தை அளித்தது.
எத்தனை போராட்டம் ? எத்தனை கசப்பான சம்பவங்கள் ? எத்தனை உறவுகளையும் உயிரின் மேலானவர்களையும் இவனுக்காக எதிர்த்தாள் ? முற்றிலும் அந்நியமான சூழலில் யாருக்காக எதற்காக வந்தாளோ அது இன்று அவளுக்குக் கிட்டிவிட்டது.
இலக்கில்லாமல் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ஓட்டம் நிறைவு பெற்று ஆசுவாசம் அடைந்ததைப் போன்றதொரு நிம்மதி அவளுள்.
கனலியின் வளைக்கர ஸ்பரிசம் கதிரவனுக்கு , “தனக்காக ஒருத்தி இருக்கின்றாள்” என்ற உணர்வை அளிக்க, கதிரவனின் வலு கரமோ கனலியிக்கு நம்பிக்கையை அளித்திருந்தது. மெல்ல அவனே படகை கரைக்குத் திரும்பியவன் அவளைப் பார்த்தபடியே வந்து சேர்ந்தான்.
அலைகளின் சீற்றம் சற்றே அதிகமாக இருந்ததனால் இருவருமே ஓரளவு நனைந்துவிட்டிருக்க, இரவு நேர கடல் காற்று மேனியில் ஊடுருவி சில்லிட வைத்தது. படகிலிருந்து இறங்க கதிரவன் கை கொடுக்க, அவன் மீதே சரிந்தாள்.
கடல் நீரோடு உறவாடும் துடுப்பாய் அவளும் அவனும்… அந்த நெருக்கம் அவளைத் தடுமாறச் செய்ததது அவனைக் கிரங்க செய்தது.
இப்போதே வேண்டுமென்ற வேகம் இருவருள்ளும்….
“கடலையும் கடல் காற்றையும் உணர்ந்துட்டோம்…இனி ஆழ்கடலுக்குப் போனா தான் முத்தெடுக்க முடியும்? மூழ்கி முத்தெடுக்கலாமா ?” என அவளிடம் ஏக்கம் நிறைந்த குரலில் வினவ, அவன் தோள் வளைவினிலையே முகத்தைப் புதைத்துக்கொண்டு ஆழ்கடல் பயணத்திற்குச் சம்மதம் சொன்னாள்.
எப்போது தோப்புவீட்டிற்கு வந்தார்கள், எப்படி வந்தார்கள் எதுவும் நினைவில் இல்லை. ஆனால் வந்துவிட்டார்கள்…
இருவர் மனதிலும் உள்ள நேசத்தை இருவரும் உணர்ந்துவிட, இப்போது ஒருவரை ஒருவர் உடலிலும் உணர தொடங்கினர். வேண்டும் வேண்டும் என்ற தவிப்பு. போதும் என்று எண்ணமுடியாத தேடல்…..
பாய்ந்தோடி வரும் நதியின் பிரவாகம் கடலோடு சங்கமிக்கும் வேகம்… சங்கமித்தபின் ஏற்படும் நிதானம்….ஒன்றோடொன்று பிரிக்க இயலாமல் கலந்துவிட்ட நிறைவு என அனைத்தும் அங்கே அரங்கேறின.
இரவு மெல்ல மெல்ல விடியலைநோக்கி நகர, இருவரது வாழ்க்கையும் விடியலை நோக்கி நகர்ந்தது.
கலைந்திருந்த ஆடைகளை மனைவியின் தூக்கம் களையாமல் சரிசெய்தவன், அவளது தலையைத் தன் நெஞ்சில் போட்டுக்கொள்ள, கதிரவனுக்கோ அவனுடைய இத்தனை வருட தனிமையோ எங்கோ தொலைவில் தொலைக்கின்ற சிறுபுள்ளியாய்ப் போய்க்கொண்டிருந்தது ……
சில மணி நேர நிம்மதியான உறக்கத்திற்குப் பின் விழிக்கு விழிப்பு தட்ட, கணவனின் நெருக்கத்தில், இரவும் பகலும் கூடி கழித்து, சங்கமித்ததின் அடையாளமாய் விடியும் பொழுதில் நாணம் கொண்டு சிவப்பை பூசி கொள்ளும் அதிகாலை வானமாய் வண்ணமாய்ச் சிவந்திருந்தது விழியின் முகம்.
மெல்ல அவனின் முகத்தை ஏறெடுத்து பார்க்க, அவனோ அவளை விழியெடுக்காமல் பார்த்துவைத்து இன்னும் சிவக்க வைத்தான்.
“எப்போ எழுந்தீங்க ?”
“நான் எப்போ தூங்குனே கனலி ?”
“அப்போ நீங்க தூங்கவே இல்லையா ?”
“உன்ன பார்த்துட்டே இருக்கணும்னு தோணிச்சு டி…”
“நான் ரொம்ப நாளாவே உங்ககூடத் தான் இருக்கேன். இன்னைக்கென்ன புதுசா…”
“நானும் உன்ன ரொம்பநாளாவே பார்த்துக்கிட்டேதான் இருக்கேன். பார்க்க பார்க்க இன்னும் இன்னும் பார்க்கணும்னு மட்டும் தான் தோணுது.”
“நிஜமாவா மாமா ? எனக்குத் தோணிட்டே இருந்துச்சு. ஆனா நான் சந்தேகப்பட்டுப் பார்க்கும்போதெல்லாம் திட்டிவிட்டிங்களே”
“ஹ்ம்ம்…நீ மட்டும் தான் என்னோட கூட்டாளிங்க கூடவும் என்னோட அம்மாகூடவும் சேர்ந்துக்கிட்டு எனக்குத் தெரியாமலே என்ன பத்தி தெரிஞ்சிக்கிட்டு எனக்கு வேணும்கறதுல்லாம் செய்வியா ? நான் பாக்காதப்ப பார்பியா ? நாங்க பண்ணமாட்டோமா ?”
இதைக் கூறியவுடன் விழிக்கு சட்டென்று அதிர்ச்சி….அவள் மனமோ, “அத்த என்கூட இருக்குறது தெரியும்னா, அப்போ அந்த ரகசியம்…” என இலேசாகப் பதற்றமானாள். எந்தக் காரணம் கொண்டும் அதைக் கதிரவன் அறியவே கூடாது என்ற தவிப்பு அவளுள்.
“எ…என்ன..என்ன தெரியும் ?” என்ற வார்த்தைகள் முதல் முறையாகத் தடுமாற்றத்துடன் வர, சட்டென்று எழுந்தமர்ந்தவன், அவளது முகத்தைத் தன் இருகைகளால் தாங்கியபடி, “வந்தநாளுல இருந்து நான் உன்கிட்ட பாக்காத ஒரே விஷயம். தடுமாற்றம். அது ஏன் இப்ப உனக்கு ?” எனச் சரியாகப் பிடித்துவிட, “இல்ல..எல்லாமேனா..? அதா… ” எனக் கூற, “ஹ்ம்ம் ஆமா” எனக் கூறியவன் தனக்குத் தெரிந்த அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கூற விழிக்கு அப்படியொரு ஆசுவாசம்.
“அப்போ அவருக்கு அது தெரியல..” எனத் தனக்குள் சொல்லிக்கொள்ள, “நீ என்ன நினைச்ச?” எனக் கேட்க, அவளோ சட்டென்று பேச்சை மாற்றி, “அது அந்தச் சட்டை வாட்ச் எல்லாம்… அதான் நீங்க ஆசையா அத்த வாங்கித் தந்ததுனு நினைச்சிருப்பீங்கல..இப்போ அது உங்களுக்கு வருத்தமா இருக்குமோனு..”என இழுக்க, “அடியே என் லூசு பொண்டாட்டி…அது எனக்கு வருத்தமில்லை. சந்தோசம்தான்… அம்மா வாங்குனத நான் போடாட்டி என்ன? மாறன் போட்ருக்கான்ல. போதும். அதோட நீ வாங்கிக் கொடுத்தனு தெருஞ்சு அம்மாக்கும் சந்தோசம் தானே… மொத நீ வாங்கிக்கொடுத்த சட்ட எனக்கு நெருக்கமா இருந்துச்சு…இப்ப நீயே…” எனக் கூறியபடி மேலும் அவளைத் தனக்கு நெருக்கமாகக் கொண்டுவந்தபடி காதல் ஏறிய குரலில் கூற, விழி அவன் தோளில் முகம் புதைத்துக்கொண்டாள்.
“பொண்டாட்டி…ஊரெல்லாம் உன்னோட காதல சொன்னியே..உன்னோட புருஷன்கிட்ட சொன்னியா?”
“காதல் சொல்றவிஷயமில்லங்க…உணருற விஷயம்”
“அப்போ மறுபடியும் உணரலாமா ?….” எனக் கள்ளச்சிரிப்புடன் கேட்க, “அதெல்லாம் ஒண்ணுவேனாம்…வாங்க கிளம்புவோம். அத்த தேடுவாங்க….” என மறுக்க, அவளின் மறுப்புகள் புறக்கணிக்கப்பட்டது.
அவனின் தேடலும் இவளின் தேடலும் கூடலில் நிறைவுற்றது….
“சந்தோசமா இருக்கியா கனலி…” என உணர்ந்து வினவ, “ஹ்ம்ம் ரொம்ப….ஆனா…” எனத் தன் பிறந்தவீட்டை நினைத்து தொடங்கி, பிறகு அதை அப்படியே முழுங்கியவளாக…”சந்தோசமா இருக்கேங்க” எனக் கூறினாள்.
“காதல் உணருற விஷயம்னு நான் சொன்னேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும் ?” எனத் திடீரென்று நினைவு வந்தவளாகக் கேட்க, ”என்னைத்தவிரப் போறவரவன்டலாம் என்ன பிடிக்கும்னு சொன்னதே கண்டுபிடிச்சிட்டேன், இது முடியாதா….”
“அப்போ ? என்னையே சுத்தீருக்கீங்கனு சொல்லுங்க ?” எனச் சிரிப்புடன் கூற,
“ஆமா அதுல என்ன இருக்கு ? என்னோட பொண்டாட்டிய நான் சுத்துறே. எவன் கேட்பான் ?”
“நான் கேட்பேன்..”
“என்னனு ?”
“இப்ப சந்தோசமா இருக்கீங்க தானே மாமா… எப்பவும் நான் உங்ககூடவே இருப்பேன். தனியா இருக்குறத நீங்க இந்த நிமிஷம் நினைக்களீல ?”
“ஹ்ம்ம் கனலி. சந்தோசமா இருக்கேன்… நீ வந்ததுக்கு அப்புறம் நான் தனியா இருக்கறதா உணரவே இல்ல. ஏன் உன்ன பிடிக்காம உன்கூடச் சண்டைபோட்ட நாட்கள்ல கூட நான் தனியா உணரல. நீ வந்த பொறவு தான் எனக்குச் சந்தோஷமும் அம்மாக்கு நிம்மதியும் வந்தது. ஆனா…” என மச்சக்காளை பாரிஜாதத்தைக் கொண்டு இழுத்தவன், பிறகு அப்படியே சொல்ல வந்ததை நிறுத்தியவனாக, “சந்தோசமா இருக்கேன் கனலி” எனக் கூறியபடி அவளின் உச்சந்தலையில் தன் கன்னத்தைப் பதித்துக்கொண்டான்.
அவன் மனமோ, “எங்க அம்மாக்கு இப்ப இருக்குற நிம்மதி நிரந்தரம் ஆகணும்னா, மச்சக்காளையும் பாரிஜாதமும் இந்த வீட்டைவிட்டு போகணும்” என எண்ணியது.
இருவருக்குள்ளும் இருவேறு ‘ஆனா…’ இருந்தது. ஆனால் வெளியே சொல்லவில்லை.
ஒரு நிறைவான உணர்வோடு, அங்கயே தயாராக, பார்வதி இருவருக்கும் உடையைப் பண்ணையாளிடம் கொடுத்து அனுப்பிவிட, “என்னோட மாமியாரை பார்த்தீங்களா ?…” எனக் கள்ள சிரிப்புடன் கூற, மனைவி அழகு காட்டியதில் மீண்டுமொருமுறை மயங்கி நின்றான்.
தோப்பில் இருவரும் தோள்கள் உரச நடந்தபடியே, கதிரவன், “கனலி..நாம இறால் தரத்தை பார்த்துட்டு சென்னைல இருக்கப் பெரிய கம்பெனி ஒன்னு உடன் படிக்கப் போட கூப்ட்ருக்காங்க. போனா அங்க வேல நாலஞ்சு நாள் பிடிச்சிடும். இன்னும் செத்த நேரத்துல கிளம்பனும்.
நீ இருந்துப்பத்தானே ?” எனக் கேட்க, அவளுக்கும் இந்தத் திடீர் செய்தி இனிக்கவில்லை என்றாலும் வேலையென்று சொல்லும்போது என்ன செய்வாள். “கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா நான் உங்கமேல வச்சிருக்கப் பாசம் உங்கள உசத்தனுமே தவிரக் கட்டிப்போட கூடாது. நீங்க போயிட்டு வாங்க. எனக்கும் இங்க கொஞ்சம் வேல இருக்கு…” எனச் சிரித்தமுகமாகவே சம்மதம் கொடுத்தாள்.
அவன் சென்று நாட்கள் மூன்றாகியிருந்தன.
அரக்கப்பரக்க பார்வதியிடம் ஓடிவந்தவள், “அத்த, எல்லாம் ரெடிதானே..சொன்னபடி சரியா பேசிடனும்” என நூறாவது முறையாகப் பார்வதியிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அவரும், “பயமா இருக்கு விழி…” எனப் பதற்றத்துடன் காணப்பட்டார்.
விழியின் பரபரப்புக்கும் பார்வதியின் பதற்றத்திற்கும் காரணம் இதுதான். மச்சக்காளை பாரிஜாதத்தின் உண்மை முகத்தைக் காட்ட, அந்தச் சி.டி-யை பற்றி விழி கதிரவனிடம் கேட்க, அவனோ, “பாண்டி வாங்கி எங்கையோ வச்சிட்டு இப்ப கேட்டா முழிக்கிறான். அத பதிவு பண்ணினவனும் காபி இல்லனு சொல்லுறான். எப்படியும் அதுனால ப்ரஜனம் இருக்காது. காரணம் இத பார்த்துட்டு ஒருவேளை தலைக்கட்டு தலைவரு நேர்ல கூப்டு விசாரிச்சாக்கூட உண்மைய சொல்லமாட்டான். மாத்தி பேசிடுவான். அதுனால வேற எதாவது தான் பண்ணனும். நான் சென்னை போயிட்டு வந்திடுறேன்” எனக் கூறிச் சென்றிருந்தான்.
அவன் சென்னை சென்றதும் கூட இவளுக்கு ஒரு வகையில் நல்லதாகவே பட்டது. ஏனென்றால் இவளின் திட்டம் அப்படி. அந்தத் திட்டத்தை யோசித்து அவன் சென்ற நாள் முதலாகச் செயல் படுத்தவும் தொடங்கிவிட்டிருந்தாள்.
பார்வதியிடம் பாரிஜாதத்தை எதிர்த்து பேச வைத்திருந்தாள். பாரிஜாதத்தின் அரட்டல் உருட்டலுக்கெல்லாம் பயம் கொள்ளாது, பார்வதியை பதில் சொல்ல கத்துக்கொடுத்திருந்தாள். மூன்றே நாளில் எப்படிப் பார்வதி தைரியத்தை உச்சியைத் தொட இயலும் ? அது முடியாது என்பதை அவளும் அறிவாள். அதனால் தான் காட்சிகளை அமைத்துப் பாரிஜாதத்தை எதிர்த்துப் பேசும்படியாகச் செய்துகொண்டிருந்தாள்.
உள்ளுக்குள் உதறல் இருந்த போதிலும், “உங்க மகனோட சந்தோஷத்துக்காக அத்த…” என்ற வார்த்தை அவரிடம் சற்றே வேலை வாங்க, பார்வதியும் தட்டு தடுமாறி பாரிஜாதத்தின் முன் தன்னைத் தைரியமாகக் காட்டிக்கொண்டிருக்க, நடந்துகொண்டிருப்பது நாடகம் என்பதை அறியாத பாரிஜாதத்திற்கோ பார்வதியின் பேச்சும் செயலும் எரிச்சலின் உச்சத்தைத் தொட்டது.
நாடகத்திற்கான ஒத்திகையைப் பார்த்துவிட்டு, பாரிஜாதத்திற்காகவும் பாண்டிக்காகவும் காத்திருந்தாள் விழி.
பாண்டியை அவள் தேடுவதற்கு முருகேசன் நல்ல தெளிவாகப் படம்பிடிக்கக் கூடிய கைபேசியொன்றை கொடுத்தனுப்பியதே. இவள் தான் முருகேஷனிடம் அவசரமாகவும் அவசியமாகவும் வேண்டும் என்று கேட்கவே ஐவரும் ஆட்கள் மூலம் சொல்லி மதுரையிலிருந்து வரவைத்திருந்தார்.
2013 -ஆம் ஆண்டில் என்னதான் நல்ல வசதிகளுடன் கூடிய தொழில் நுட்பத்தில் சிறந்த கைபேசிகள் சந்தைக்கு வந்திருந்த போதும், கிராமத்தில் ஆங்காங்கே அதுபோன்ற கைபேசிகள் இருந்தன. பெரும்பாலானோர்களிடம் அத்தகைய கைபேசி இல்லை. பொத்தான் வைத்ததையே உபயோகிக்க விரும்பினர். அதிலும் தெளிவாகப் படம் பிடிக்கக் கூடிய கைபேசிகள் சொற்பமே. அனைவர்க்கும் அப்போது தொடு உணர்வு கைபேசி அத்தனை அவசியமாகத் தென்படவில்லை. இப்போதே வாட்ஸ் ஆப், டிஃடோக், பப் ஜி போன்ற விஷயங்களின் ஆதிக்கத்தால் குட்கிராமங்களில் கூட நவீன தொழில்நுட்பம் வாய்ந்த கைபேசியின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டன.
அப்போது இன்டர்நெட் இருந்தாலும் அதனின் தீவிரம் இப்போது இருப்பதைப் போல ஐந்து ஆண்டுகளுக்கு முன் இல்லை என்றே சொல்லவேண்டும். ஆதலால் விழியிடமும் ஏன் கதிரவனிடமும் கூட இல்லாதது ஆச்சர்யமொன்றுமில்லை.
அதைப் பாண்டி பிரமிப்பாகப் பார்த்ததிலும் ஆச்சர்யமில்லை.
“தங்கச்சி..என்ன வாசல்ல வந்து நிக்கிற ?” என்றபடி பாண்டி வந்தான். கதிரவனுடன் சக்கரை சென்றிருக்க, இங்கே பண்ணையைப் பாண்டி பார்த்துக்கொண்டான்.
“உங்களுக்காகத் தான். ஏன் இம்புட்டு லேட் ? கோவிலுக்குப் போயிருக்கச் சின்னமா வந்திட போகுது” எனப் பரபரக்க, இவனோ அலட்சியமாய், “அதெல்லாம் ஒன்னு வராது. வரவழில பார்த்தேன். ரோசா அக்காவோட நின்னு வம்பளந்துக்கிட்டு இருந்துச்சு. ஊரு புறணி உலகப் புறணி பேசிட்டு வர லேட் ஆகும்” எனக் கூறியபடி, பையில் இருந்த போனை எடுத்தவன், “தங்கச்சி..இந்த போன பாரேன்…என்னாமா வழுவழுன்னு இருக்கு லாலா கடை அல்வா போல. எம்புட்டு மெலுசா பேப்பர் ரோசஸ்ட கணக்கா இருக்குத் தங்கச்சி” என அவனுக்குத் தெரிந்த மொழியில் பாண்டி வர்ணிக்க, தன்னை மறந்து சிரித்தவள், “எல்லாமே சாப்பாடுதானா அண்ணே ?” எனக் கேட்க, “பின்ன இல்லையா ? போனு இல்லாம வாழலாம். சாப்பாடு இல்லாம முடியுமா ? ” எனக் கேட்க, “தப்புத்தான்” என்றபடி கண்ணத்தில் போட்டுகொண்டாள்.
“தங்கச்சி, பொறவு பேசிக்கலாம், உங்க சின்னமா வருதுன்னு நினைக்கிறன்” எனப் பின்னால் திரும்பி பார்க்காமலே கூற, பாரிஜாதம் வருவதைப் பார்த்தவள், கைபேசியை மறைத்தபடி, “அட எப்படி அண்ணே கண்ணு பிடிச்சீங்க ?” என ஆர்வமாகக் கேட்க, “அதுவொரு கெட்டவாட மா பாசமலரே. பழைய சோர பத்துநாள் கழுச்சுத் திறந்தா குப்புனு வருமே அப்படி..எல்லாம் அத வச்சுதான்” எனச் சிரிக்காமல் கூற, விழி தான் வாய்விட்டு சிரித்துவிட்டுப் பாரிஜாதத்திடம் முறைப்பை பெற்றுக்கொண்டு நின்றாள்.
பாரிஜாதம் அவளைக் கடந்து போக, விழியோ அவர் அறியாமல் பின்வாசல் வழியாக வீட்டின் பின் கட்டில் சென்று பதுங்கிக்கொண்டாள்.
பாரிஜாதம் வந்ததும் பேசவேண்டிய விஷயங்களை விழி முன்பே கூறியிருக்க, பார்வதி உள்ளூர நடுக்கத்துடனே பாரிஜாதத்தின் வரவை கவனித்தும் கவனிக்காதவரை போல அமர்ந்திருக்க, அதை ஓரக்கண்ணில் கண்டுவிட்ட பாரிஜாதத்திற்கோ பொறுமை பறந்துகொண்டிருந்தது.
“என்னங்க அண்ணி? இப்பெல்லாம் உங்க பேச்சு செய்கைனு எதுவும் சரியில்லையே ?” எனத் தானாகவே பாரிஜாதம் வந்து சிக்க, இதற்காகவே காத்துக்கொண்டிருந்த பார்வதியோ, “என்னத்த சரியில்லாம கண்டுபுட்ட ? இல்ல தெரியாமத்தான் கேக்குறேன். உன்ட கேட்டுத்தான் அத்தனையும் பண்ணணுமோ ? மொத நான் பண்றது சரி தப்புனு சொல்ல நீ யாரு மா?” எனப் பார்வதி உள்ளூர இருக்கும் உதறலை வெளிக்காட்டாமல் பேச, பேச விழி எதிர்ப்பார்த்தது போலவே, பாரிஜாதத்தின் கோபத்தை நன்றாகச் சீண்டி விட்டது.
“அண்ணி..வேணாம். என்ன யாருனு நீங்க கேட்டா, உங்க மகனுக்கு எங்க அண்ணே யாருனு தெருஞ்சுக்க வேண்டி வரும். அது மட்டுமில்லாம, பித்தலாட்டம் செஞ்சு பண்ணிக்கிட்டீங்களே ஒரு கண்ணாலம், அதான் அண்ணி எங்க அண்ணனை நீங்களும் உங்க அப்பாரும் சேர்ந்து ஏமாத்துனீங்களே, அதையும் எங்க அண்ணனுக்கு நியாபக படுத்த முடியும்…” என மிரட்டும் தொனியில் கூற,
பார்வதியோ ஆடித்தான் போனார். இருந்தாலும் சற்றே இது தான் பேசவேண்டிய நேரம் என்பதையும் தன் தந்தை மேல் இத்தனை வருடமாக வீண் பழி சுமத்தியதையும் ஏற்றுக்கொள்ள முடியாமால் தவித்த பார்வதி, தன் மனதின் ரணத்தை மொத்தமாகக் கொட்ட தொடங்கினார்.
“பண்ணு பாரிஜாதம் பண்ணு. இன்னும் என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ. இப்படியே உங்கட்ட செத்து செத்து பொழைக்கிறதுக்கு இந்தப் பொழப்பே வேணாம்னு போய்டலாம்னு தோணுது. எங்க அப்பாவா ஏமாத்துனாரு.? நீயும் உன்னோட புருஷனும் எங்க அப்பா சொன்னதை மறச்சு அவருக்கு என்ன கட்டி வச்சு, எங்க அப்பாவையும் நம்பவைச்சு ஏமாத்திட்டு, என்னையும் சித்ரவதை பண்றீங்க. நான் புள்ளைய சுமக்கிறேன்னு தெரிஞ்சிருந்தா இன்னொரு கண்ணாலத்துக்குச் சம்மதிச்சிருக்கவே மாட்டேன்.
எனக்கே தெரியாத ஒரு விஷயத்தை நான்தான் பண்ணினேன்னு இரா பகலா என்ன பேசி பேசியே கொண்டுடிங்க. இப்ப என்னோட இரெண்டு மகனுகளுக்கும் இருக்க வாழ்க்கையையும் கெடுக்கப் பாத்தீங்க.
மாறனுக்குச் சொத்து கொறவா இருக்குனு அவன் விரும்புற பொண்ண , மூத்தவனுக்குக் கட்டிவச்சு என்னோட இரண்டாவது மகனை மொத்தமா விரட்டிவிடப் பாத்தீங்க. அதுக்கு எம்புருஷனுக்கே ஜாதகத்துல தோஷம்னு பொய் சொல்ல வச்சீங்க.
எல்லாத்தையும் தெருஞ்சும் உங்க மிரட்டலுக்குப் பயந்து நான் வாய் தொறக்காம இருந்துட்டேன். நல்லவேளை நான் கும்புடற சாமியாட்டம் எம்மருமவ வந்து மாறனோட ஆசையா காப்பாத்திட்டா.
இப்படி உங்க சுயநலத்துக்காக இத்தனை பேரு வாழ்க்கையைப் பணய வைக்கிற நீங்களே நல்லா இருக்கும் போது, நான் ஒன்னு கெட்டுப் போய்டுவேமாட்டேன். ஏன் பாரிஜாதம் இம்புட்டு வினையைப் புடுச்சவளா இருக்கியே…யாருக்குத்தான் நல்லது பண்ணுவ. அண்ணே அண்ணே னு சொல்லுறியே, அந்த அண்ணனுக்குக் கூட நீ உண்மையா இல்லையே…நீ எல்லாம் என்ன ஜென்மமோ” எனப் பேச, ஆங்காரமாய்ப் பாரிஜாதம், “ஆமா நான் அப்படிதான். எனக்கு அண்ணனு முக்கியமில்லை, மாறனும் இல்ல. இந்தச் சொத்துதான் முக்கியம். என்னோட வீட்டுக்காரனு கௌரமா ஆஸ்தி அந்தஸ்தோட வாழனும். எங்களுக்குப் பொறவு எம் பொண்ணு ராணியாட்டம் இந்த வீட்டை ஆளனும். அதுக்காக நான் எவன் குடிய வேணுனாலும் கெடுப்பேன். ஏன் எங்க அண்ணனையே என்ன வேணும்னாலும் செய்வேன்” என எகத்தாளமாகப் பேச, பார்வதியோ நிதானமாக, “இதெல்லாம் நான் அவருகிட்ட சொல்லிட்டா ?” எனக் கேட்க, பாரிஜாதமோ அதை விட எகத்தாளமாக, “மாறனும் உனக்குப் பொறகலனு நான் அண்ணே கிட்ட சொல்லிட்டா ? எங்க அண்ணே நான் என்ன சொன்னாலும் நம்பும்” எனக் கூற, இந்த வார்த்தையைக் கேட்ட பார்வதி புயலாய் மாறினார்.
விழி கூறியதற்காக மட்டுமே பேசத்தொடங்கியவர், இப்போது மெய்யாகவே தைரியத்தின் மொத்த உருவம் பெற்றவராய் கணமும் தாமதிக்காமல் ஓங்கி ஓர் அறைவிட, விழிக்கே பார்வதியின் இந்த அவதாரத்தில் அப்படியொரு ஆச்சர்யம்.
“அத்த…நீங்களா இது?” எனத் தான் ஒளிந்துகொண்டிருப்பதையும் மறந்தவளாய் பேசிவிட, பாரிஜாதமும் பார்வதியும் அவள் புறமாகத் திரும்ப, இதுவரை பதிவு செய்திருந்ததைப் பத்திரப்படுத்தியவளாக, “அத்த…ஏன் ஒன்னோட நிப்பாட்டீடீங்க? இன்னும் நாலு சேர்த்து கொடுங்க” எனக் கூற, பார்வதி மெல்ல தன்னைச் சமன்செய்துகொண்டு, “பாத்தியா விழி…இவ என்ன சொன்னான்னு பாத்தியா ?” எனக் கோபத்துடனும் ஆற்றாமையுடனும் குரல் நடுங்க கூற, “அத்த, இந்தச் சின்னமா இப்படிப் பேசாட்டிதான் ஆச்சர்யம். பேசுவதும் நல்லதுதான். அதுனாலதான் எங்க அத்தகுள்ள இருந்த வீரலட்சுமி வெளிய வந்தாங்க. இத நீங்க பல வருஷம் முன்னாடியே செஞ்சுருக்கணும் அத்த” என உணர்ந்து சொல்ல, அவளின் கூற்றில் இருக்கும் உண்மை புரிந்தவளாக, “ஆமா விழி, நீ சரியாத சொல்லற … துணிஞ்சவளுக்குத் துக்கமில்லன்னு சும்மாவா சொன்னாங்க. நானு கோழையா இருந்து என்னோட பசங்களையும் தவிக்கவிட்டுட்டேன்.
ஆனா இனி சும்மா இருக்கமாட்டேன் விழி. என்னோட பிரச்சனை தீர்ந்தாலும் இல்லாட்டியும் , உனக்காச்சும் நான் நல்லது பண்ணனும்.
கதிரவன் மனசுல உனக்குன்னு நிரந்தர இடத்தை உருவாக்கி, எம்மகனோட நீ சந்தோசமா வாழுறத பார்க்கணும். பொறவு உங்க அப்பாகிட்ட போய் எம்மருமக சாதிச்சிட்டானு சொல்லணும். அவளோட பாசத்துலையும் வாழ்க்கையையும். எனக்காகப் பார்த்து பார்த்து செஞ்சவளோட பெத்தவங்க மனச நான் குளிர வைக்கணும்.
இனி என்ன பத்தி யோசிச்சு நான் முடங்கிக் கிடக்க மாட்டேன் ஆத்தா…” எனப் பார்வதி ஒரு புது அவதாரம் எடுக்க, அவரின் பேச்சில் விழியும் சற்றே நெகிழ்ந்து போனாள். இருவருமே பாரிஜாதம் என்ற மனுஷி அங்கே நிற்பதை கவனிக்காமல் பேசிக்கொள்ள, அடிவாங்கிய அவமானத்தில் வெகுண்ட பாரிஜாதம், “அடியே! எண்ணங்கடி மாமியாரும் மறுமவளும் நாடக நடத்துறீங்க ?” எனக் குரல் உயர்த்தி ஏதேதோ பேச, விழி கை அமர்த்தித் தடுத்தவள், “சின்னமா…இனி உன்னோட ஆட்டம் முடுஞ்சது. நீ கொஞ்சம் முன்னாடி தம்பட்டம் அடிச்சத நான் இதுல படம் புடுச்சிட்டேன். அதுனால கொஞ்சம் அமைதியா இருங்களேன்” எனச் சொல்லி மிரட்டிக்கொண்டிருக்கும் போதே விழியின் கைகளில் இருந்த கைபேசி பறிக்கப்பட்டது.
என்ன நடந்தது என்று விழி திரும்பி பார்க்கும் முன்னர் கை பேசி தூர சென்று பின்கட்டிலிருந்து கிணற்றுக்குள் விழுந்தது. அதை விழியும் பார்வதியும் திகைப்புடன் காண, சிரிப்புடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் மச்சக்காளை.

Advertisement