Advertisement

*****
“டேய் எல்லாம் ரெடி பண்ணியாச்சு…மரத்துல இருக்கச் சீரியல் செட்டுக்கு சுவிட்ச் தரையோடு தரையாதான் இருக்கு. சுவிட்ச் பொட்டி வச்சு கனெக்க்ஷன் கொடுத்திருக்கே. பார்த்து மணி சத்தமும் உன் பொறுப்பு, சுவிட்ச் போடறதும் உன் பொறுப்பு” எனக் கூற பாண்டியும் சரி சரியென்று மண்டையை ஆட்டினான்.
நேரம் முன்னிரவு மணி ஏழு…
கதிரவன், “சக்கர எதுக்கு அவசரமா வர சொன்னான்…” என்ற யோசனையோடு பவளமல்லி மரத்தை நெருங்கிக்கொண்டிருந்தான்.
மறுபுறம் விழியோ, “சக்கர அண்ணே அஞ்சு நிமிஷத்துல மாமா என்ன பார்க்க தோட்டத்துக்கு வர சொன்னதா சொன்னாரே… சொல்றதுன்னா அவரே சொல்லிருக்கலாமே…ஏன் அண்ணே மூலமா சொன்னாரு” என்ற சிந்தனையோடு தயாராக காத்திருக்க, இருளில் பதுங்கியபடி சக்கரை வேப்ப மரத்தின் பின்னால் ஒதுங்கியிருந்தான். பாண்டியோ இலட்சிமியின் கழுத்திலிருக்கும் மணியைக் கழட்ட அதனிடம் கெஞ்சி கூத்தாடி கொண்டிருந்தான்.
“என்ன இது கிட்டவே விடமாட்டிக்கிது? ஒருவேளை ராமராஜ் போலப் பாடுனா கிட்டக்க விடுமோ ?” எனப் பாடி பார்த்தான். ஆனால் முன்னைவிட இப்போது கொம்பை ஆட்டி முட்டுவது போல நிற்க, “ஒருவேளை சாங்கோட சேர்த்து காஸ்ட்யூமும் செட் பண்ணனுமோ…இருக்கும் இருக்கும்” என வேகமாக எங்க ஊர் பாட்டுக்காரன் ராமராஜை போல உடை அணிந்தபடி, “பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி…” என்று பாடி செல்ல, இப்போது இலட்சிமி கொஞ்சம் அமைதியாக இருந்தது.
“அட! பாண்டி நீ பெரிய ஆளுடா… ஜல்லிக்கட்டு போனா இந்தப் பாண்டிக்குதே பரிசு ” எனப் பெருமை பேசிய அதே நேரம் கதிரவன் அந்த மரத்தின் கீழ் வந்து நின்று சக்கரையைத் தேட, சக்கரை மரத்தின் பின்னால் இருந்த படி விழி அவனருகில் வர காத்திருக்க, விழியோ அப்போது தான் வீட்டு வாயிலை தாண்ட, பாண்டி இலட்சிமியின் கழுத்திலிருக்கும் மணியை ஆட்ட கை வைத்தான்.
சில நிமிடங்கள் அமைதியாக இருந்த இலட்சிமி அவன் நெருங்கிவரவும் பாண்டியை பார்த்த பார்வையில் இலட்சிமியின் மனவோட்டம் பாண்டிக்குப் புரிந்தது.
“கிட்ட வந்து சிக்கிட்டியா? வா டி வா.. கட்ட குரல்ல பாடியா டார்ச்சர் பண்ற ? இதுல உனக்கு ராமராஜ் காஸ்ட்யூம் வேற… ஏன்டா டவுசர் போட்டவனெல்லாம் ராமராஜ் ஆகிடுவானா ?” என இலட்சிமி கூறுவதாய் நினைத்து பார்த்தவன், “இப்படித்தான் இலட்சிமி நினைக்குமோ…” என்று எண்ணி முடிக்கவில்லை, அதற்குள் இலட்சமி கிறுகிறுவென்று சுத்த, கீழ்விழாமல் இருக்கப் பசுவின் கயிற்றையே பாண்டி இறுக பிடித்துக் கொண்டே, “சுத்தாத சுத்தாத….கிறுகிறுன்னு வருது…” என இலட்சிமியிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தான். அது அப்புறமும் இப்புறமும் சிலுப்பிக் கட்டியிருந்த கயிறை அத்துக்கொண்டு பிடித்திருந்த பாண்டியை உதறி தள்ள முயல, இப்போதோ, “விட்றாத…விட்றாதா…விழுந்துருவேன்” என கதறிக்கொண்டிருந்தான். ஒருகட்டத்தில்  சமாளிக்க முடியாமல் பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணியோடு குட்டிக்கரணம் அடித்துக் குப்புற விழுந்தான்.
விழி கதிரவனிற்கு அருகில் நெருங்க ஒரு சில நொடிகள் முன்னால் பாண்டி அரும்பாடுபட்டு கீழே விழ, அவள் கிட்ட வந்த நொடி சட்டென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின்சாரம் இல்லாமல் அந்த இடமே இருளில் மூழ்கிவிட, மரத்தில் மின் விளக்கு எரியவில்லை, ஒலித்துக்கொண்டிருந்த பாடலும் நின்றுவிட, சக்கரையோ அவர்கள் எங்கு நிற்கிறார்கள் என இருளில் தேட, பாண்டியோ, “அப்பாடா…எந்த சேதாரமும் இல்லாம சேர்ந்துட்டேன். தப்பிச்சேன்டா சாமி” என நிம்மதி பெரு மூச்சு விட்டு மணியை அடிக்க மறந்து போனான்.
மொத்தத்தில் இருவரும் நேருக்கு நேராகச் சந்தித்த பொழுது சக்கரையின் திட்டப்படி எதுவுமே நிகழாமல் போக, விதி அங்கு வேறு விளையாட காத்திருந்தது.
இருட்டுக்குக் கண்கள் பழகிவிட, கதிரவனைப் பார்த்தது பார்த்தபடி கனல் விழி நிற்க, கதிரவனும் அப்படியே….அந்த இருட்டிலும் அவளுடைய மையிட்ட கருவிழிகளில் கருமையில் கரைந்துகொண்டிருந்தான்.
“சும்மாவே இவ கண்ணாலே கொள்ளுவா. இப்போ கண் மையெல்லாம் போட்டு கத்தி மாதி கண்ணவச்சே என்னைக் குத்தி கிழிக்கிறாளே….” என அவளைக் காண்கின்ற ஒவ்வரும் நொடியும் தடுமாறினான்.
தன்னுடைய தடுமாற்றத்தை விழி கண்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சற்றே தன்னைச் சமாளித்துக்கொண்டு, “ஏ..இருட்டுல நின்னு என்ன பராக் பாக்குற ? ஒருவேளை எனக்குத் தெரியாமலே என்னைத்தான் பாக்குறியோ ” என எடுத்த எடுப்பிலே அவளைச் சீண்ட, “ஹ்க்கும் …அப்படியே பார்த்துட்டா மட்டும். எனக்கு வேற வேலை இல்லையாகும்…” எனப் பதில் பேச, “அப்ப ஏன் இங்கயே நின்னு என்னையே பார்த்திட்டு இருக்க?” என நேரடி தாக்குதலாய் கேட்க, “நாந் ஒன்னு உங்கள பார்க்கல. ஆனா இங்க நிக்கக் கூடாதுனு சொல்ல உங்களுக்கு அதிகாரமில்லை. நான் எங்கன வேணும்னாலும் நிப்பேன்” எனக் கூறியபடி திரும்பி நிற்க, அவளின் இந்தச் செய்கையில் தோன்றிய சின்னச் சிரிப்புடன், வலது புறமாக எதேர்ச்சியாகப் பார்க்க, அங்கே இலட்சிமி வருவது போலத் தெரிந்தது. அதன் கழுத்தில் மணியும் இல்லாததால் சப்தமும் பெரிதாக எழவில்லை.
அது நேராக விழியை நோக்கி வருவது போல் தோன்ற, பதற்றமான கதிர், “ஏ..விழி தள்ளி போ…இந்தப்பக்கட்டு வா” என அதட்ட, அவளோ சூழல் புரியாமல், “முடியாது! நான் இங்கன தான் நிப்பேன். உங்களுக்கென்ன… ” என வீம்பாகப் பேச, இலட்சிமி வருவது aகதிரவனுக்கு உறுதிப்பட்டது.
“கனலி தள்ளி போ சொல்றேன்ல” எனத் தன்னையும் மீறியவனாய் கத்த, அவளோ அவனின் பதட்டத்தை உணராமல், “மாமா…என்ன சொன்னீங்க ?” என ஆவலாய் அவனிடம் கேட்டவள் ஓரடி கூட நகரவில்லை.
அதற்குமேல் கதிரவனிடம் எதையும் சொல்ல நேரமில்லை. சட்டென்று அவள் கைகளைப் பிடித்துத் தன் புறமாக இழுக்க, அதே நேரம் சரியாக அவள் நின்ற இடத்தைச் சரட்டென்று இலட்சமி கடந்து ஓடியது. ஒரே ஒரு நொடி தாமதம் ஆகியிருந்தாலும் கனல் விழியை முட்டி தள்ளியே சென்றிருக்கும்.
அதைக் கண்கூடாகப் பார்த்த கதிரவனுள் அத்தனை பதற்றம். எதற்குமே பதட்டம் கொள்ளாமல் நிதானமாகச் செயல்படுவனின் இருதயம் அந்த ஒரு நொடியில் அடித்துக்கொண்ட வேகமோ மிக அதிகம்.
ஆனால் அதெல்லாம் விழியின் கருத்தில் பதியவே இல்லையே. “கைய விடுங்க மொதல்ல, ஏ இப்படி இழுத்தீங்க…” என முன்பு அவன் சீண்டியதால் பழிக்குப் பழிவாங்குவதாக நினைத்து விளையாட்டாகப் பேச, அவள் உள்ளத்திலோ அவன் கனலி என்று அழைத்திருந்ததே மீண்டும் மீண்டும் ரீங்காரமிட, அந்தக் குதூகலத்தில் அவனைச் சீண்டி பார்க்க, பதட்டம் அடங்காத கதிரவனோ, “பளார்” என்ற சப்த்தம் எட்டு திசையின் எதிரொலிக்கும் வகையில் ஓங்கி அறைந்திருந்தான்.
அவன் அறைந்த அடுத்த நொடி, அந்தச் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு போன பாண்டியின் கைகளோ பதட்டத்தில் ஆட, மணி ஒலிக்க, அதே சமயம் மின்சாரம் உயிர்பெற, மருதாணி மரமும் ஜொலித்தது, பாடலும் ஒலித்தது.
“தொட்டால் பூ மலரும்….” என்று ஒலிக்க, சக்கரை மட்டும் நடந்த களோபரத்தில், விழி அறைவாங்கிய அதிர்ச்சியில் கிளையை உலுக்கி பூக்களை உதிரவைக்கத் தவறியவனாய் நின்றான்.
இலட்சமி ஓடி வந்திருந்த வேகத்தில் தரையோடு தரையாக இருந்த மின்சாரப் பெட்டியை மிதித்து வந்திருக்க, அது விளக்கை எரியும் நிலையில் வந்துவிட்டிருந்தது. அதனால் தான் மின்சாரம் வந்ததும் மருதாணி மரத்தை சுற்றி அழகாக மின் விளக்குகள் நட்சித்திரமாய் ஜொலிக்கத் தொடங்கியிருந்தன.
மணியோசையும், மின்விளக்குகளை, அதைத் தொடர்ந்து ஒலித்த சினிமா பாடலும் விழியியையும் கதிரவனையும் ஒரு நிமிடம் உலுக்கின. ஆனால் அதையும் மீறியவனாய் கதிரவன், “அறிவிருக்கா…தள்ளி நின்னு சொல்றேன்ல. இலட்சிமி வந்துகிட்டு இருக்கு. நீ பாட்டுக்க எனெக்கெனனு நிக்கிற ? இவன் என்ன சொல்றது நாம என்ன கேக்குறதுனு நினைப்பு ? திமிரு திமிரு உடம்பெல்லாம் திமிரு. இலட்சிமி முட்டி உனக்கு ஏதாவது ஒன்னுனா என்ன பத்தி யோசிச்சு பார்த்தியாடி ? அறிவுகெட்டவளே” எனத் திட்டியவன் நிற்காமல் வேகமாகச் சென்றுவிட, விழியோ அப்படியே நின்றாள்.
ஓரடிகூட அசையவே இல்ல. அவளின் நிலையைப் பார்த்த பாண்டியும் சக்கரையும் கூடத் தங்கள் திட்டம் இப்படிச் சொதப்பிக் கதிரவனிடம் திட்டுவாங்க வைத்துவிட்டோமே என்று குற்ற உணர்வுடன் அங்கே நின்றுவிட, விழிக்குச் சரியாக முல்லையிடமிருந்து அழைப்பு வந்தது.
அதை எடுத்த எடுப்பிலே….”முல்ல…” என்று கத்த, சிறிது தூரம் சென்ற கதிரவன் கூட அவளின் குரலில் அப்படியே நின்றவனாய் மெல்ல திரும்பி அவளைப் பார்க்க, முல்லையோ பதற்றமாக, “என்னாச்சு டி…” எனக் கேட்க, விழியோ சந்தோசத்தில் குதித்தபடி, “என்னோட மாமா என்ன லவ் பன்றாரு டி….இப்பதான் என்ன அடிச்சிட்டு போனாரு டோய்” என மேலும் குதித்துக்கொண்டு சொல்ல, முல்லையின் நிலைமையோ பரிதாபமாக இருந்தது.
“என்ன டி சொல்லுற ? அடிச்சாரா ? லவ் சொன்னாரா ?”
“ஓங்கி அறை விட்டாரு பாரு……செம்ம செம்ம. என்னோட மாமாக்கு லவ் வந்துருச்சு டோய்” எனக் குதிக்க, பாண்டியோ, “அடி வாங்குனதுல தங்கச்சி லூசாகிடுச்சா ?” எனப் பார்த்து நிக்க,
முல்லையோ, “அடியே நான் லோ பீபீ பேஷண்ட்டு டி. என்ன மயக்கம் போட வைக்காத.
மொதவாட்டி அடிச்சதுல உனக்கு லவ் வந்துச்சுனு சொன்னதையே நான் இன்னும் ஜீரணிக்க முடியாம சுத்துறேண்டி.
இப்ப இரண்டாவதுவாட்டியும் அடிவாங்கிட்டு அவருக்கும் லவ் வந்துருச்சுனு சொல்றியே டி” எனப் புலம்ப, விழியின் காதில் அவளின் புலம்பல் விழவே இல்லை.
“உனக்கு அதெல்லாம் புரியாது டி” என விழி கூற,
பாண்டியோ, “முல்லைக்கு மட்டுமா…எங்களுக்குதே” எனப் புலம்ப, “டேய் சும்மா இருடா” எனச் சக்கரை அவனை அடக்கிவிட்டு விழி பேசுவதில் கவனமானான்.
“முல்ல முழுசா சொல்லுறேன். கேளு…மாடு என்ன முட்ட வந்துச்சு டி. அப்போ அவரு கண்ணுல பதட்டம். நான் ஒதுங்காம வியாக்கியானம் பேசிகிட்டு இருந்தேன். அதுனால கோவப்பட்டு அடிச்சாரு… எனக்கு என்னமும் ஆகிட கூடாதுங்கிற பரிதவிப்புடி. அவரு மொதமுறை அடிச்சதும் எனக்கு அவர்மேல இருந்த காதல உணர்ந்தேன் டி. இரண்டாவது முறை அடிச்சப்ப, அவருக்கு என் மேல இருக்கக் காதல புரிஞ்சுக்கிட்டேன் டி” என உணர்ந்து கூற,
“அப்போ மூணாவது தடவ அடிச்சா ?” எனச் சக்கரையின் கையைச் சுரண்டி பாண்டி சந்தேகம் கேட்க, முல்லையோ மறுமுனையில், “அடி வாங்கி காதல கன்பார்ம் பண்றவ நீ மட்டும்தான் டி. மூணாவது தடவ அடிச்சாரு முழுகாம இருக்கேனு மட்டும் சொல்லிடாதாடி ” எனக் கதறினாள்.
“ஏ…நான் நிஜமாத்தான் சொல்லுறேன் முல்ல. அவரு அவருக்கே தெரியாம என்ன கனலினு சொன்னாரு டி ” எனக் கூற சக்கரைக்கு இப்போது தெளிவாகப் புரிந்தது.
“எனக்குச் சந்தோசத்துல என்ன பண்றதுனே தெரியல. நான் பொறவு காலடிக்கிறே” எனக் கூறி வைக்கப் பாண்டியோ, “இதையும் அடிக்கத் தான் செய்வியா தங்கச்சி ? ஏன் போன் பன்றேன்னு சொல்லப்பிடாதா ? ஒன்னு அடிவாங்குற இல்ல அடிக்கிற ” எனக் கூற, அங்கே அதே சமயம் மழையில் நனைகின்ற சிறுமியாய் குதூகலமாய் விழி குதிக்க, சக்கரை புன்னகை முகமாகவே கையில் பிடித்திருந்த கயிற்றை ஆட்டி கிளையை உலுக்கினான்.
திடீரென்று பவள மல்லி கதிரவனின் கனலியின் மேல் பூமழையாய் சிந்த ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் தன் வயதை மொத்தமாக மறந்தவளாய் சிந்துகின்ற பூக்களைப் பிடித்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.
பாண்டியும் சக்கரையும் அவளருகில் சிரித்த முகமாகவே அவளருகில் வந்து அழைக்க, “அண்ணே அவரு என்ன அடிச்சிட்டாரு அண்ணே” எனக் கூறி சிரித்தபடி சந்தோசத்தில் பாண்டியின் தோளில் ஓர் அடி போட, “ஏமா, அடிக்கணும்னா அவனைப் போய் அடிமா. ஏற்கனவே இலட்சமி பஞ்சர் பண்ணின பிஞ்சு உடம்ப நீ பிச்சு போட்டுறாத தெய்வமே” எனக் கதற, சக்கரை அவளிடம் நடந்ததைக் கூற, விழியும் அவள் உணர்ந்ததைக் கூற, மூவரும் சந்தோசத்தில் சிரித்துக்கொண்டிருக்க, சற்று தூரத்திலிருந்து மனைவியையும் நண்பர்களையும் பார்த்துக்கொண்டிருந்த கதிரவனின் உதட்டிலும் அவனை அறியாத புன்னகை மலர்ந்திருந்தது.
கதிரவனின் மனமோ நிறைந்திருந்தது…. இந்த நேரத்தில் அவன் வாழ்வில் தனிமையாக வாழ்ந்த வருடங்கள் கொஞ்சமும் நினைவிற்கு வரவில்லை. ஏனோ அவன் எப்போதும் மனதோடு பூஜிக்கும் தன் தாத்தாவின் உருவப்படத்திற்குத் தீபம் ஏற்றவேண்டும் என்று நினைத்தான்.
அதுவும் தோப்பு வீட்டில் இருக்கும் அந்தப் படமும், அந்த வீடும் அவனுடைய மனதிற்கு அத்தனை நெருக்கம். அங்கே போகவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே விஷேஷ வீட்டிலிருந்து அனைவரும் வந்துவிட, விழி, பாண்டி, சக்கரை மூவரும் முகம் கொள்ளா புன்னகையுடன் அவர்களுடனே சேர்ந்து வீட்டிற்குள் நுழைய, விழிக்கு கதிரவனை ஏறெடுத்து பார்க்க ஏனோ அத்தனை தயக்கம்.
“அம்மா..வந்துடீங்களா…” என்ற கேள்வி பார்வதியிடமும் பார்வை அவனின் கனலியிடமும் இருக்க , பார்வதி மகனின் பார்வையையும் மருமகளின் நாணத்தைக் கண்டுக்கொண்டார்.
“ஆமா அய்யா. எதாவது சொல்லனுமா ?” எனக் கேட்க,
“ஹ்ம்ம் தோப்பு வீட்டுக்கு போகணும் போல இருக்கு. சும்மா போறதுனா போயிட்டு வந்துருவேன். இன்னைக்கு இராவுக்கு அங்கனையே இருந்து காலம்பொர (காலையில் போல்) வரேன். சும்மா தோணுது போறேன். நீங்க உடனே மனச போட்டு அலட்டிக்காதீங்க மா” எனக் கூற, சட்டென்று மலர்ந்திருந்த விழியின் முகம் கூம்ப, மருமகளின் மனதை படித்து விட்ட பார்வதி, “தாராளமா போயா…வேணாம்னா சொல்ல போறே. ஆனா எங்க போறதுனாலும் உன்னோட சம்சாரத்தயும் கூட்டிட்டு போ. எனக்கொண்ணுமில்ல” எனக் கூற, விழி அவனின் முகத்தை ஏக்கமாகப் பார்க்க, சரி கிளம்பச் சொல்லுங்க என்றவுடன் விழிக்கு அத்தனை சந்தோசம்.
“சரி வாங்க புறப்படுவோம்…” எனப் பாண்டி கூற, சக்கரையோ,”இவன வச்சுக்கிட்டு நாம என்ன பண்றது?” என மனதில் நினைத்தவன், “மாப்பி அவுங்க மட்டும் போகட்டும்” எனக் காதை கடிக்க, இவனோ, “அதெப்படி டா? நாம தான எப்பவுமே அவுங்க கூட இருக்கோம் ? எப்படி இரெண்டு பேரு மட்டும் தனியா இருப்பாங்க ? போர் அடிக்காது ?” எனக் கேட்டுவைக்க, “இன்னு எதாவது பேசுனா நான் உன்ன அடிப்பேன்” எனச் சக்கரை மிரட்ட, “டேய் மாப்பி. நீ வேணும்னா அவுங்கட்ட கேட்டு பாரு, நம்மளையும் கூப்பிடுவாங்க” எனப் பாண்டி அப்பாவியாகக் கூற, சக்கரை யோசித்தான்.
“சரி அவுங்ககூடவே போலாம் மாப்பி. அவுங்க சாப்பிடாம கிளம்புறாங்களாம். நாம மீனாட்சி அத்த விசேஷ வீட்டுக்குப் போய்ச் சாப்பிடலாம்னு உன்ன கூப்பிட்டேன். வேணம்னா விடு” எனக் கூற,
“என்னது சாப்பிடாம இருக்கப் போறாங்களா ? ஆத்தாடி. வேணாம்டா மாப்பி. வா நாம போவோம்” என முதல் ஆளாகக் கிளம்ப, சக்கரை கதிரவனை நோக்கி ஒரு புன்னகையைச் சிந்தியபடி பாண்டியை இழுத்துக்கொண்டு சென்றான்.
அவர்களின் பின்னோடு விழியும் கதிரவனும் கிளம்ப, வேகமாக வந்த பார்வதி ஒரு டிபன் கேரியரில் இரவு உணவை கொடுக்க, அதையும் வாங்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினர். அவனுக்கு அவளும் , அவளுக்கு அவனும் துணையாய்… இருவருக்கும் மௌனம் துணையாய் இருக்க,  அக்கம் பக்கமாய் இருவருமிருந்தும் நூலிழை இடைவேளையில் நடக்கத் தொடங்கினர்…

Advertisement