Advertisement

பவள மல்லி – 31
ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் பாண்டி. “டேய் இப்ப என்னத்துக்கு இவ்ளோ சீன் போடற ?” என்றபடி வந்தமர்ந்தார் சக்கரை. “டேய் எம்புட்டு பெரிய விஷயம் நடந்து போச்சு…கவலைப்படாம எப்படி டா இருக்கச் சொல்லுற ?” எனக் கேட்க, “அப்படி என்ன நடந்துச்சு…?” எனச் சக்கரை யோசிக்க, பற்களைக் கடித்தபடி பாண்டி, “பாப்பி முன்னாடி பப்பிச் சேம் ஆகிடுச்சுடா!… பார்வதி அம்மா கூடக் கொஞ்சம் மெதுவா சொன்னாங்க. அந்தப் பாரிஜாதம் இலபோ திபோனு கத்தி ஊற கூட்டிட்டுடுச்சு” எனச் சோகமாகச் சொல்ல சக்கரை நடந்ததை நினைத்து பார்த்து மீண்டும் சிரிக்கத் தொடங்கினான்.
ஒருவாரம் முன்பாக, அன்றைய மழை நாளில் பார்வதி பாண்டியை மொட்டை மாடிக்கு அனுப்பியதின் காரணம், மேலே சில டபேராக்களில் தண்ணீர் இருந்ததே. உஷ்னத்தைக் குறைக்க, தினந்தோறும் மொட்டை மாடியில் தண்ணீர் தெளித்து விட, கீழே இருக்கும் அறைகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்றே தப்பிக்கும். அதற்காக மாலையே தண்ணீர் நிரப்பப்பட்டிருக்க, இப்போதோ வானம் இருண்டு கிடைக்க, அந்த நீரை சாய்த்துவிட்டால் காலியான அண்டாக்களில் மழை நீர் நிரம்புமே என்ற எண்ணத்தில் தான் அவர் கூறியது.
அதை முழுவதுமாகக் காதில் வாங்காமல், தண்ணீர் தொட்டிக்குப் பின் புறம் இருந்த டபேராவை பார்க்காமல் முழுத் தொட்டியையும் சாய்த்ததோடு இல்லாமல் தாழ்வாரத்தில் நீர் விழும்படியும் செய்து வைக்க, சட சடவென்ற தண்ணீரின் சப்தத்திலும், மேலும் தொட்டியை உருட்டியதால் எழுந்த சத்ததிலும் கீழிருந்து அனைவரும் அடித்துப் பிடித்து மேல் வர, பாண்டியின் மானம் பாப்பியின் முன்னால் இரெயில் பிடித்துப் போய்க்கொண்டிருந்தது.
இந்த களோபரத்தில் கதிரவனையும் அவனுடைய கனலியையும் யாரும் அந்த நெருக்கமான நிலையில் காணவில்லை. பாரிஜாதம் போட்ட கூச்சலில் சுயத்திற்கு வந்தவர்கள், சட்டென்று ஒருவரை ஒருவர் விலகி நிற்க, பார்வதியின் “விழி…” என்ற அழைப்பில் வேகமாகக் கணவனை விட்டு விலகி பார்வதியின் குரலுக்கு ஓடினாள். ஓடியவளின் முகத்தில் நாணம் ஒட்டிக்கொள்ள, அவளின் நாணத்தில் கதிரவனின் ஆண்மையும் விழித்தெழுந்து.
ஒருபுறம் சக்கரையும் பாண்டியும் இதை நினைத்து பார்த்து சிரிக்க, மறுபுறமோ கணவனின் நெருக்கத்தையும் அவனின் ஸ்பரிசத்தையும் தனக்குள் மீண்டும் மீண்டும் ஓட்டிப்பார்த்துக்கொண்டிருந்தாள் விழி.
“என்னவோ வித்தியாசம்… மாமாவோட பார்வையில கண்டிப்பா ஏதோவொன்னு இருக்கு” என அடிக்கடி இப்போதெல்லாம் விழி புலம்பும் நிலையில் கதிரவன் வைத்திருந்தான். மற்றவர்களுக்குத் தான் அவள் விழி அல்லது கனல் விழி. ஆனால் கதிரவனுக்கோ அவனின் கனலி.
அவளுடைய கேள்வியிகள் சுமந்த பார்வையைச் சந்திக்கும் போதெல்லாம் தடுமாறி போவான்.
“என்ன கண்ணுடா…இத்தன நாளா இவை கண்ணு இவ்ளோ அழகாயில்லையா? இல்ல நான்தான் ஆழமா பார்கலியா ?” எனக் கதிரவன் எண்ணுவதுண்டு. ஆம்! அவன் தான் பார்க்கவில்லை. அவளை அவன் பார்த்த கண்ணோட்டமே வெறுப்பை மட்டும் சுமந்திருக்க இதில் அவளின் முக அழகும் அக அழகும் அவனால் கவனிக்கப்படாமலே இருந்தது.
கனலியின் கருவிழி கதிரவனை உன்மத்தம் கொள்ளச் செய்தது. உயிரோடு பிடிங்கி எரிந்தது. அவனைக் மயங்கவும் வைத்தது, புத்துணர்ச்சி கொள்ளவும் வைத்தது.
அவள் பார்க்காத போது பார்ப்பதெல்லாம் இல்லை. பார்த்தால் அவள் கண்ணோடு கண் நேருக்கு நேராகப் பார்த்து, அவளைக் கிரங்கவைத்து இவனும் கிரங்கி போவான். ஆனால் அடுத்த நிமிடமே ஏதோவொரு காரணத்தைப் பிடித்து அவளைத் திட்டிவிட்டும் செல்வான்.
குழப்பம் நிறைந்து நிற்கின்ற அவனின் கனலி இன்னமும் பேரழகுடன் அவனுக்குத் தெரிவாள். அதையும் ரசித்துச் செல்வான்.
“அடியே பொண்டாட்டி! காதல் சொல்றதில்ல, உணருறதுனு சொன்னவளே நீ தானே! இப்போ என்னை நீ உணரவில்லையா ?” என்ற கேள்வியோடு, “இந்த ஆட்டம் எனக்குப் பிடிச்சிருக்கு…இன்னும் கொஞ்ச நாள், நீ என்னோட காதல உணருறவரைக்கும் இப்படியே இருக்கட்டும். ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சு என்கிட்டே மட்டும் காதல் சொல்லாம என்னைச் சுத்தல்ல விட்டல…கொஞ்ச நாள் நீயும் என்னைப் போலவே சுத்து” என அவனுக்குள் பேசிக்கொள்ள, அவனின் நிலைப்பாட்டைக் குறித்து அவ்வப்போது அவனுக்கே ஆச்சர்யம் உண்டாகும்.
அவனுடைய மனசாட்சியே, “டேய் பொண்ணுங்கள பிடிக்காதுன்னு சொன்ன மானஸ்தன் ஒருத்தன் இங்க இருந்தாண்டா….அவனைப் பார்த்தீங்களா ?” எனக் கேட்க, இவனோ, “ஆமா! இப்பவும் மத்த பொண்ணுங்கள பிடிக்காதுதான். ஆனா என்னோட பொண்டாட்டிய பிடிக்குமே” எனச் சளைக்காமல் பதில் கொடுப்பான்.
அவனின் கனலி வந்த பிறகு வாழ்வே அவனுக்குப் பிடித்துப் போனது உண்மை. அதிலும் அவளைத் தனக்குப் பிடித்திருக்கிறது என்று தெரிந்த பின்போ, கருவேலங்காட்டுகள் தனியாக நின்றவனை வேரோடு பிடிங்கி வந்து ரோஜாக்கூட்டத்திற்குள் நட்டுவைத்ததைப் போன்று உணர்ந்தான்.
வேண்டுமென்றே அவளைச் சீண்டிவிட்டு, அவளைக் கடந்தபின் ஒரு கள்ளச்சிரிப்புடன் செல்ல, முன்பிருந்ததைவிட கதிரவனின் முகத்தில் ஆண்மையும் வசீகரமும் கூடியிருந்தது.
****
“மாப்பி! உடனே வா. கதிர்வர லேட் ஆகும். அதுக்குள்ள ஒரு விஷயம் பேசணும்” எனப் பாண்டி சக்கரையை அழைக்க, அவனும் யோசனையோடு கடையைவிட்டு அடுத்தப் பத்து நிமிஷத்தில் வந்து நின்றான்.
“எதுக்கு டா அவசரமா கூப்பிட்ட?”
“எல்லாம் கதிர் விழி பத்தி பேசத்தான். தங்கச்சி என்னவோ காதல்னா உணருறதுனு சொல்லுது. அவன் என்னடானா கம்புக்கு தாலி கட்டுன மாதிரி எனக்கென்னனு சுத்திகிட்டு இருக்கான். இப்படியே போச்சுன்னா ஒன்னு நடக்காது. அதுனால என்னோட சைடிஸ்ட் மூளையை வச்சு ஒரு திட்டம் போட்ருக்கேன்” எனக் கூற,
“டேய் பாண்டி. வாழ்க்கையிலையே இப்பதான் உருப்படியான விஷயம் சொல்லிருக்கடா…எனக்கு சங்கடம்மாவே இருந்தது. நீயாச்சும் யோசுச்சியே…சொல்லு என்ன பிளான் ?”
“விழி எழுதுனது போல ஒரு கடுதாசிய (கடிதம்) மாப்பிகிட்டையும், அவன் எழுதுனது போல இன்னொரு கடுதாசிய தங்கச்சிகிட்டையும் கொடுத்தா…அப்படியே லவ் பிக் அப் ஆகிட்டு போகுது” எனச் சாதாரணமாகக் கூற,
“இது வேலைக்கு ஆவுமாடா?”
“டேய் நான் எழுதியிருக்க விஷயம் அப்படிடா….அத படிச்சதும் உள்ள இருந்து கிளம்பும்பாரு… அதுக்கு அப்புறம் நம்மள யாருனு கேட்குற அளவு லவ்ல மூழ்கிடுவாங்க” என நம்பிக்கையாகக் கூற, “சிறப்புடா மாப்பி…காட்டு காட்டு..என்ன எழுதிருக்க. மாப்பி நீ நிஜமாவே மாஸ் பாண்டிதாண்டா” எனப் பாராட்டியபடி கடிதத்தைக் கேட்க, அவனும் இரெண்டு கடிதங்களையும் கொடுத்தான்.
அதைப் படித்த சக்கரையின் முகம் கொதி நிலைக்குச் சென்றுகொண்டிருந்தது….
கனல் விழி கனல் விழி வாராய்
நம் வாழ்வு மணக்கும் ஜோராய் – வாழப்போகிறோம்
பீசும் பிரியாணியுமாய்ப் பாராய்
— இப்படிக்கு கதிரவன்
கதிரவனே!
என் காஜுகட்லியே
நீ சக்கரையாய்
நான் வெண்பாலாய்
ஆவோமா பால்கோவாவாய்
— இப்படிக்கு கனல் விழி
இதைப் பார்த்த சக்கரை, பாண்டியை கொலைவெறியுடன் துரத்த பரிதாபமாக மூச்சிரைக்க நின்றவன், “டேய்! எதுக்கு டா தொரத்துற ? நீங்க தானாடா சொல்லுவீங்க. உணர்ந்து பிடிச்சமாதிரி காதல சொல்லணும்னு. அத நானும் பிரியாணி பால்கோவானு உணர்ந்து சொன்னேன். அதோடு டேஸ்ட் தெரியுமாடா உனக்கு ?”
“வேணாம் என்ன பேசவைக்காத” எனச் சக்கரை கடுப்புடன் கூற, “என்னங்கடா இது? அவனுங்களும் சொல்ல மாட்டாங்க. நான் சொன்னாலும் இப்படியில்ல நொப்பிடியில்லன்னு குத்த சொல்லுவானுங்க ? இதுக்குமேல எப்படி டா உணரவைக்கிறது ? படத்துல வரது போல ஹீரோ ஹீரோயின் பார்த்ததும் பல்பு எரிஞ்சு, பாட்டு கேட்டு, பூவெல்லாம் கொட்டி காத்தெல்லாம் அடிச்சதான் ஒத்துப்பாங்கன்னா , இவனுங்க படத்துலதான் நடிக்கணும்.
இவனுங்களும் சொல்ல மாட்டானுங்க. சொல்ல ஐடியா தரவனையும் அடிப்பானுங்க” எனப் புலம்பியபடி நடக்க, சக்கரை சந்தோசமாக, “டேய் மாப்பி! ஐடியா கிடைச்சிடுச்சுடா…நீ கொடுத்த ஐடியா தான். சூப்பர் ஐடியா” என ஓடிவந்து பாண்டியை தூக்கி சுத்த, “அடே எதுனாலும் இறக்கிவிட்டு சொல்லுடா…அப்பாவாகப் போறீங்கன்னு சொன்ன பொண்டாட்டிய சுத்துறது மாத்தி சுத்துறான். இதுக்குத் தான் காலகாலத்துல கண்ணாலம் பண்ணுங்கடானு சொல்றது” எனப் புலம்பச் சக்கரை இறக்கிவிட்டவன், “மாப்பிச் சூப்பர் ஐடியா. இப்ப நீ சொன்ன அத்தனையும், கதிரவனும் விழியும் பாக்குறப்ப நடக்கும். அப்போ அவுங்களே புருஞ்சிப்பாங்க” எனக் கூறி சிரிக்க, பாண்டியோ சந்தேகமாக, “அது எப்படி டா நடக்கும் ?” எனக் கேட்க,
“அதுவா நடக்காது! நாமதான் நடத்தணும்” எனக் கூறி திட்டத்தை விவரிக்க, பாண்டியும் சந்தோசத்தில் கூத்தாடினான்.
பாடத்தைக் கூட இத்தனை கவனமாய்க் கவனித்திராத பாண்டி, சக்கரை கூறியதை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
“பாண்டி, நல்லா கேட்டுக்கோ…இந்த பவள மல்லி மரத்தடிலதான் நாம நாடகத்தைப் போட போறோம். இன்னைக்குப் பக்கத்துக்குத் தெரு மீனாட்சி அத்த வீட்டுக் கண்ணாலம் விருந்து. இரா சாப்பாட்டுக்கு சொல்லிவிட்ருக்காங்க. அதுனால ஊரு மொத்தமும் அங்கணதான் இருக்கும். நம்ம வீட்டு டிக்கட்டுகளும் அங்க போய்டுவாங்க. நான் பார்வதி அம்மாகிட்ட சொல்லி விழியை வீட்டில விட்டுப் போகச் சொல்லிட்டேன். கதிரவனை சரியா அந்த நேரத்துக்கு வரவைக்கிறது என்னோட பொறுப்பு.
இப்ப செய்யவேண்டிய வேலைய சொல்லுறேன்.
  1. இந்தப் பவளமல்லி மரத்துல இருக்கப் பூவெல்லாம் பறிச்சு மரக்கிளையில் அடுக்கி வச்சிடனும். கதிரவனும் விழியும் இங்க வரப்ப, இந்த மர கிளையில் கயிறை கட்டி நான் அங்க இருக்கு பாரு வேப்ப மரம். அதுக்குப் பின்னாடி மறைஞ்சு நின்னு கிளையை உலுக்குவேன். அதுல கிளையில் வச்சிருக்கப் பூவெல்லாம் அவுங்க மேல தூவும்.
2 சரியா ஏழுல இருந்து அடுத்த அரைமணி நேரவரைக்கும் கண்ணால வீட்ல தரமான காதல் பாட்டா போட சொல்லி காசு கொடுத்துக் கரெக்ட் பண்ணிட்டேன். அதுனால பாட்டு விஷயமும் ஒகே.
3 பக்கத்துல இருக்க மருதாணி மரத்துல கொஞ்சம் சீரியல் பல்ப் சுத்திவிட்ருக்கேன். அத அவுங்க இரெண்டு பேரு பாத்துக்கிறப்ப சரியான நேரத்துல போட வேண்டியது உன்னோட பொறுப்பு.
  1. மணி அடிக்கணும். எதார்த்தமா அடிச்சு நல்ல சகுனம் மாதிரி இருக்கணும். அதுக்கு மட்டும் என்ன பண்ணணு யோசிச்சுகிட்டு இருக்கேன். ரொம்பச் சத்தமாவோ இல்ல புதுசா மணி சத்தம் கேட்டாலோ ஊரே என்னவோ ஏதோனு கூடிடும். அதுனால வழக்கமான மணி சத்தமா இருக்கணும், ஆனாலும் கதிர்க்கும் விழிக்கும் அது காதல் மணி சத்தமா இருக்கணும். அதுக்கு மட்டும் என்ன பண்ணணு புடிபடல….” எனக் கூறியபடி சக்கரை யோசிக்க, பாண்டி வேகமாக, “அதுக்கு என்கிட்டே ஐடியா இருக்கு…” எனக் கூற,
“சொல்லு…என்ன ஐடியா?”
“மாப்பி…கண்ணால வீட்ல ஐஸ் காரன் இருப்பான். அவனைக் கூட்டியாந்து ஐஸ் விக்கிற போல மணியடிக்க விடலாமா ?”
“டேய்! இது நீ அவுங்கள சேதுவைக்கத் திட்டம் சொல்றியா ? இல்ல நீ திங்கிறதுக்குத் திட்டம் சொல்றியா ? “
“டேய் மாப்பி நம்புடா! நான் போய் அப்படிப் பண்ணுவேனா ?”
“பண்ணுவடா! அதுமட்டும் இல்ல, ஐஸ் வண்டி வந்துச்சுனா எல்லா நண்டு சிண்டும் வந்திடும். பொறவு எப்படிக் காதல் காட்சி ஓடும் ? கார்ட்டூன் காட்சி தான் ஓடும். அதுனால அது வேணாம்”
“சரி! அப்போ மாட்டு கொட்டகைல மணி இருக்கும்ல, நம்ம இலட்சிமி (பசு) மண்டைய ஆட்டும்போதெல்லாம் சத்தம் வருமே. அத வச்சுக்கலாமா ?” எனப் பாண்டி கேட்க,
“சூப்பர்டா….பட்டய கிளப்புற போ. ஆனா நம்ம தோதுக்கு இலட்சிமி மண்டைய ஆட்டுமா?” எனச் சக்கரை சந்தேகமாகக் கேட்க, “அத நான் பாத்துக்கிறேன். கவலைய விடு” எனப் பாண்டி உறுதி கொடுக்க, அழகாக ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர்.
“டேய்..வேற எதுவும் சந்தேகம் இல்ல தானே ?” எனச் சக்கரை கேட்க,
“ஒண்ணே ஒன்னு இருக்குடா” எனப் பாண்டி பாவமாகக் கூற,
“என்ன மாப்பி…?”
“எல்லாம் சொன்ன. ஆனா மீனாட்சி அத்த வீட்டு பந்திக்கு நாம எப்ப போறோம்னு சொல்லவே இல்லையேடா?” எனக் கேட்க, இருக்கும் வேலையை விட்டுவிட்டு சக்கரை பாண்டியை அடிக்கத் துரத்தினான்.

Advertisement