Advertisement

ஏன் நீ பொய்யே பேசமாட்டியானு நான் ஓட்டுனேன்.
அதுக்கு அவ சொன்னா, ‘பொய் எப்பவும் எனக்குப் பிடிக்காது. ஆனா சில நேரத்துல ஒரு பொய்  உயிரையோ வாழ்க்கையையோ மாணத்தையோ காப்பாத்தும்னா அப்ப பொய் சொல்றது தப்பே இல்ல’ அப்படினு டீச்சர் போலப் பாடம் எடுத்து என்ன கொன்னுட்டா.
அயோ நான் பாட்டுக்கப் பேசிக்கிட்டே இருக்கேன். உங்களுக்குச் சோலி இருக்கும்ல. என்னையும் அம்மா தேடும். நான் பொறப்படுறேன்” எனக் கூற,
கதிரவனோ அவசரமாக, “முல்ல, உனக்கு மாமா யாரு ? எனக்குத் தெரியாதே?” எனக் வினவ, “உங்ககிட்ட விழி சொல்லலியா ? அவளைக் கவனிச்சுக்கிறேன். அவளோட அண்ணனுக்கும் எனக்கும் தான் பேசிமுடிச்சிருக்காங்க” எனக் கூற, “ஓ…நல்லது மா. சரி பார்த்து போ. இல்ல நான் கொண்டு வந்து விடவா ?”
“இல்ல அண்ணா… பக்கம் தானே. போய்டுவே” எனக் கூற, அவளை அனுப்பிவிட்டவனுக்கு இப்போது விழி கூறிய புதுத் தகவல் சிந்தனையை ஆக்கிரமித்திருந்தது.
“இவளுக்கும் பொய் சொல்ல பிடிக்காது…ஆனா கல்யாணத்தன்னைக்கு ஏன் அப்படிச் சொன்னா? அப்படி என்ன சூழ்நிலை வந்தது ?” என யோசித்தவனாகவும், “காதலுக்காக இவ்ளோவையும் ஒரு பொண்ணால பண்ண முடியுமா ? இதுக்கு எவ்ளோ துணிச்சலும் நம்பிக்கையும் வேணும் ? விழி சாதாரணப் பொண்ணு இல்ல” எனப் பிரம்மிப்புடன் அவள் வந்தநாளிருந்து நடந்துகொண்ட விதத்தையும் நடத்திய வித்தைகளையும் மனதினுள் ஓட்டி பார்க்க தொடங்கினான்.
“அம்மா முகத்துல சிரிப்ப கொண்டு வந்தா, தலை கட்டு தலைவரையே பேச வச்சுட்டா. அத்தைய ட்ரில் வாங்குறா. மாறனையும் சாந்தினியையும் பிரண்ட்ஸ் ஆக்கிட்டா. எப்பவும் வாய் ஓயாம பேசிக்கிட்டே, சிரிச்சுகிட்டே எல்லாத்தையும் சாதாரணமா கடந்து போய்டுறா.
இப்படி ஒரு பொண்ண பார்க்க முடியும்னு நான் நினைக்கவே இல்ல. ஆனா அப்படியொரு பொண்ணு என்னோட வாழ்க்கையிலையே வந்திருக்கா.
ரொம்ப முக்கியமா நான் எவ்ளோ காயப்படுத்துறது போலப் பேசுனாலும் ஒரு சொட்டுக் கண்ணீர் கூடச் சிந்தல. அனுதாபத்தைத் தேடலை. ஆனா செம்ம அடாவடி. ஒருவேளை அது தான் அவகிட்ட எனக்குப் பிடிச்சிருக்கா… ” என மனம் நினைக்க, வேகமாக எப்போதும் போல அவன் அறிவு முந்திரி பழத்தில் உள்ள கொட்டையாய் முந்தி வந்து, “அப்போ உனக்கு அவளைப் பிடிச்சிருக்கா ? காதலிக்க ஆரம்பிச்சிட்டியா ? அவ உன் மேல பொய்யான பழி போட்டவ” என எடுத்துக்கொடுக்க, “இருக்கலாம்… பழி போட்டவளாவே இருக்கலாம். ஆனா அவ அப்படிச் செஞ்சதுக்குப் பின்னாடி எதோ இருக்கனும். அது எதுனாலும் அவ அப்படி அன்னைக்கி பண்ணினத்துக்குக் காரணம் அவளோட காதல்தான்.
எல்லாத்தையும் எதித்து எல்லாத்தையுக் பகச்சிக்கிட்டு ஒத்த ஆளா எனக்காக வந்து நின்னா. அவளை எனக்குப் பிடிக்கும்னு சொல்றதுல தப்பில்ல. ஆனா காதல்….. ? தெரியல. அவளை நான் காதலிக்கிறேனா ? அவ எனக்கு வேணும்னு நான் நினைக்கிறேனா ? அவளுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்னு நினைக்கிறேனா ?
சத்தியமா தெரியல! ஆனா அவளோட துணிச்சல் பிடிச்சிருக்கு. அதிரடி பிடிச்சிருக்கு. புத்திசாலித்தனம் பிடிச்சிருக்கு” என அறிவிற்கு மனது பதில் கொடுக்க,
“இப்போ நீ என்ன சொல்லவர?”
“எனக்கு ஒரே விஷயம் தெரியணும்”
“என்ன அது ?”
“என்ன இவ்ளோ காதலிச்சும் ஏன் என்கிட்டே மட்டும் அவளோட காதல சொல்லவே இல்ல. அது தான் தெரியணும்”
“என்ன பண்ண போற ?”
“தெருஞ்சுக்கப் போறேன். என்கூடப் பிரண்ட்னு சுத்திட்டு அவகிட்ட பாசமலரா வாழ்ந்துகிட்டு இருக்க இரெண்டு சிவாஜி கணேஷனையும் பிடிச்சா தெரிய வரலாம்” என நினைக்க, அதற்குமேல் யோசிக்க விடாமல் பாப்பி வந்ததைத் தெரியப்படுத்த சக்கரை அழைக்க, நெய்தல் பண்ணைக்குக் கதிரவன் வந்து சேர்ந்தான்.
ஆயிரம் அழுத்தங்கள் மனதோடு இருந்த போதும் வேலை அழைத்திட, அனைத்தையும் ஓரம்கட்டியவன் நேராக உள்ளே போக, அங்கே பாண்டியோ பரோட்டா பார்ஸலை பார்த்து உளறிக்கொண்டிருந்தான்.
“பரோட்டா பரோட்டா
நான் உன்ன விட்டு போகட்டா
நேரம் வந்திடுச்சு நான் உனக்குச் சொல்லடா டாட்டா” என உளறியபடி இருக்க அங்கே வந்த கதிரவனோ, “மாப்பி வேல தலைக்கு மேல கிடக்கு. இன்ஸ்பெக்ஷன் வந்துருக்கப்ப என்ன உளறிட்டு இருக்க ? வா ” என இழுத்து செல்ல, பாண்டியோ, “என்னோட உணர்வு உளறலா” எனக் கத்தினாலும் அவனோடு சென்று அப்படியே வேளையில் மூழ்கி போனான்.
ஒருவழியாக அனைத்தும் முடிந்து பாப்பிக் கிளம்ப இருட்டிவிட, கதிரவனோ அவளை உபசரிப்பாய் வீட்டிற்கு உணவு உன்ன அழைக்க, பெரிதாக மறுப்பெதுவும் சொல்லாமல் உடனே ஒத்துக்கொண்டாள். இருக்கின்ற அலுப்பில் அவளால் புதுக்கோட்டை வரை தாக்குப்பிடிக்க முடியுமா எனத் தெரியாததே காரணம். சாப்பாடு என்றதும் மீண்டும் பாண்டி மனதோடு, “மாப்பி விட்றாதடா என்ன” எனப் பேசிக்கொள்ள, கதிரவனோ “டேய் பொறப்படுங்கடா…” எனக் கூற, அத்தனை சந்தோசமாகப் பாண்டி அவனின் பாப்பியுடனும் மாப்பியுடனும் கிளம்பி செல்ல, கதிரவனின் வீட்டில் அனைவரும் இருக்க, வந்தவர்களை அன்போடு உபசரித்துத் தடபுடலாக உணவு பரிமாற, கவனமாகப் பாப்பியின் அருகில் பாண்டி அமர்ந்துகொள்ள, சக்கரையும் விழியும் அதைக் கவனித்து ஒருவரை ஒருவர் பார்த்து கிண்டலாகச் சிரித்துக்கொள்ள, பாண்டி அதைக் கண்டும் காணாமல் இருந்துகொண்டான்.
“ஆத்தி…இதுங்களுக்குத் தெரிஞ்சா ஓட்டியே கொன்றுங்களே….அப்படியே தெரியாதமாதியே மைண்டைன் பண்ணு டா பாண்டி. இதுங்க கண்டுபிடிக்கிறதுக்குள்ள இந்த வெளிநாட்டு சாக்குலேட்ட சாச்சுப்புடனும்” என மனதோடு பேசிக்கொண்டிருக்க, பேசிக்கொண்டே, கையில் ஆவலாக ஒரு நல்லியை எடுக்க, அருகிலிருந்தவளோ, குழம்பில் இருந்த நல்லியை காண்பித்து, “வாட் இஸ் டிஸ் ?” எனப் பாண்டியிடம் கேட்க, கடுப்பான பாண்டி, “நீ வேற வாத்து கோழின்னுக்கிட்டு. இது ஆடு…புரியிதா ?” எனக் கேட்க, பாப்பியோ அவனை முறைக்க, “ஆத்தாடி கோபப்பட்டுட்டாளோ…. ” என முணுமுணுத்தபடியே, சாப்பிடுவதைவிட்டு அவளுக்குப் பொறுமையாக விளக்கினான்.
அவன் கையோடு வைத்திருந்த பரோட்டா பார்சல் இன்னமும் அவனின் கையிலே இருக்க அதைப் பார்த்து விட்ட லிங்கம், “அட பாண்டி! என்ன அது ? சாப்பிடறப்ப கூடக் கெட்டியா பிடிச்சிருக்க ? அப்படி ஓரமா வச்சிட்டு சாப்பிடுயா ” எனக் கூற, சக்கரையோ, “இல்ல சாப்பிட ரொட்டி கொண்டு வந்தோம். கதிர் இங்க கூப்டு வந்துட்டான்” எனக் கூற, பார்வதியோ, “கொடுப்பா… சூடு பண்ணி முட்ட போட்டு கொத்தி கொண்டு வரேன்” என வாங்கிச் சென்று, அங்கு மேல்வேலை செய்யும் பாட்டியிடம் கொடுக்க, மங்கலாகத் தெரிந்த பார்வையில் பாட்டி ரொட்டியை பிய்த்து வானலியில் போட்டுகொண்டு இருந்தது.
“என்னடா இது? ஒரு ரொட்டி மட்டும் எப்படித் தட்டுனானுங்க. கொஞ்சம் அசையவே மாட்டிங்கிது. கண்ணாடி போல இருக்கு” எனப் புலம்பியபடி அதைக் கைகளில் வைத்துப் பார்த்துக்கொண்டிருக்க, எதார்த்தமாக அங்கு வந்த சாந்தினி, “அட பாட்டி. கண்ணு போச்சா முழுசா…இது ரொட்டி இல்ல. சீடி. படம் தெரியும் ” எனக் கூற, அவரோ வேகமாக, “எம்.ஜிஆர் படம் வருமா ?” எனக் கேட்டுவைக்க, சிரித்தபடியே சாந்தினி, “இது எப்படி இங்க வந்துச்சு ?” எனத் தனக்குள் கேட்டுக்கொண்டு மற்ற சீடிக்கள் இருக்கும் இடத்தில் இதையும் சேர்த்து வைத்தாள்.
இத்தனை களோபரத்திலும் விருந்து தயாராக இருந்ததற்குக் காரணம் விழியே. சாந்தினியும் சிறிது நேரத்தில் வந்துவிட, லிங்கம் கதிரவனிடம் பேசிய மகிழ்ச்சியில் பார்வதி பம்பரமாய்ச் சுழன்று ஏற்பாடு செய்திருந்தார். இன்றைய நகர நாகரீக வாழ்க்கையில் , மேற்கொண்டு ஒருவருக்குக் கூட உணவு வீட்டில் அதிகமாக இருப்பது அரிதே. ஆனால் இன்றளவும் கிராமங்களில் இருவருக்கேனும் தேவையான உணவை சேர்த்து வைப்பதே அவர்களின் வழமை. அதனால் திடீர் விருந்தாளிகளை அவர்கள் எப்போதுமே இன்முகத்துடன் வெகு சுலபமாய் உபசரித்துவிடுவர்.
பேச்சும் சிரிப்புமாக விருந்து முடிய திடீரெண்டு மழை காற்று வீச தொடங்கியது. பாப்பியை அன்று அங்கையே தங்கும்படியாகப் பார்வதி கூற, அவளும் வேறு வழியில்லாமல் சரியென்றுவிட்டாள். காற்று சற்று பலமே. வெகு சமீபத்தில் கடல் இருப்பதால் அதனின் தாக்கமும் உடனே தெரிந்தது. மின்சார இணைப்பு ஒரு வரிசை துண்டிக்கப் பட, கதிரவனின் வீட்டில் ஒரு வரிசையில் ஒரு சில விளக்குகள் எரிந்து வெளிச்சமும் மீதம் உள்ளவைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கும்மிருட்டுச் சூழ்ந்திருந்தது.
கதிரவன் விழியின் அறையில் விளக்கு எரியவில்லை. ஏனோ கதிரவனின் கண்கள் முழுக்க முழுக்க விழியையே வட்டமிட்டன. இதுதான் காதலா ? என்ற கேள்வியுடனும் ஏன் காதல் சொல்லவில்லை ? என்ற யோசனையுடனும் அறையில் போய் அமர்ந்துகொள்ள, அதற்கு எதித்தார் போல் இருந்த அறையொன்றை பாப்பிக்கு வழங்கியிருக்க, விழி அவளுடன் பேசிக்கொண்டிருந்தாள். உடன் சக்கரையும் பாண்டியும் இருந்தனர்.
கதிரவனை அவர்கள் கவனிக்கவில்லை. இருட்டில் இருந்ததனால் இவனின் பார்வை மட்டும் விழியிடம் இருந்தது. பாப்பி அவர்களின் திருமணத்தைப் பற்றிக் கேட்க, பாண்டியோ முந்திக்கொண்டு, “லவோ லவ்…லவ் மேரேஜ்” எனக் கூற சுவாரஸ்யமானவள் யார் முதலில் காதலித்தது என்று கேட்க, பாண்டி விழியைக் கைகாட்ட, அடுத்ததாகப் பாப்பி ஆங்கிலத்தில், “அப்படினா…நீங்க தான் காதல் சொன்னீங்களா ? எப்போ சொன்னீங்க ?” எனக் கேட்க, விழியின் பதிலை கேட்க பாப்பி மட்டுமில்லை, கதிரவனும் ஆர்வம் ஆனான்.
பார்வையைக் கொஞ்சம் அசைக்காமல் அவளையே பார்த்திருக்க, விழி மெல்ல உணர்ந்து அதைச் சொன்னாள்.
“காதல் சொல்ற விஷயமில்லை. உணருற விஷயம்”….
அதைக் கேட்ட கதிரவனுக்குப் புரிந்து போனது. இத்தனை நாட்களாய் ஏன் விழி சொல்லவில்லையென்று. அவளின் பதிலில் மிதமான இதம் பரவியது.
“அப்போ நீங்க சொல்லவே இல்லையா ?” என்ற கேள்விக்கு ,
“ஏன் சொல்லணும்? நான் ஒவ்வொரு நிமிஷம் ஒவ்வொரு செயலையும் உணரவைக்கிறேன்” எனக் கூற, பாப்பி அடுத்து எதோ கேட்க வருவதற்குள் அங்கு வந்த பார்வதி, “ஏமா மாறான பார்த்தியா ? அரிக்கேன் விளக்கு எடுக்கணும் தாழ்வாரத்துக்குப் போய். அந்தப் பையன காணோம்” எனக் கூற,
“அத்த, நான் போய் எடுத்துட்டு வரேன்” எனக் கூறியபடி இருளில் மூழ்கி மறைந்துவிட, தாழ்வாரப்பகுதி இருள் சூழ்ந்திருக்கும் என்பதால் கதிரவனின் கால்கள் தன்னையே அறியாமல் அறையை விட்டு வெளியேறின. கதிரை பார்த்த பார்வதி, “அய்யா கதிர்…கோச்சுக்காத. புள்ள இருட்டுக்குள்ள தனியா போயிருக்க. மழை தண்ணி காலம். பூச்சி பொட்ட ஊற போவுது. செத்த பின்னாடி துணையா போயிட்டு வாயா” எனக் கூற, அவனும் பின் சென்றான்.
பிறகு சட்டென்று நியாபகம் வந்தவராகப் பார்வதி, “ஏய்யா பாண்டி! எனக்குச் சின்ன ஒத்தாசை பண்ணுயா. மச்சுல (மொட்டை மாடி) தண்ணி ரெம்பிருக்கும். அத கொஞ்சம் சாச்சுவிட்ருயா…பயமா இருந்தா துணைக்குச் சக்கரையைக் கூப்பிட்டு போறியா ?” எனக் கேட்க, சட்டென்று ரோசப்பட்ட பாண்டி, “வேல சொல்லிடீங்களா. அதோட பேசக்கூடாது அம்மா. யாரை பார்த்து என்ன சொல்லுறீங்க ? எனக்குப் பயமா ?” என வீராப்பாக முறுக்கியபடி செல்ல, பார்வதியோ, “ஏ அய்யா..முழுசா கேட்டுட்டு போ ராசா” எனக் கூற, “ஹக்கும்..எதுக்கு, அவ முன்னாடி முழுசா என்ன அசிங்கப்படுத்தவா ?” என மனதோடு பேசியபடி, “நான் பாத்துக்கிறேன்” எனக் கூறி தட்டு தடுமாறி மாடி படி ஏறினான்.
வீதி விளக்குகள் அனைத்தும் அனைந்திருக்க, தட்டு தடுமாறி ஏறியவன் புலம்பியபடியே செல்ல , கால் இடறி எதன் மீதோ மோதி இலேசாகத் தடுமாறிச் சமாளித்துக்கொண்டு, “ச்சா…பிகரா லவ் பண்ணினா எம்புட்டு கஷ்டமா இருக்கு. பேசமா கடைசிவரை பிரியாணிய மட்டும் லவ் பண்ணிருக்கலாமோ…” என்ற அதிமுக்கிய சிந்தனையோடு, “இங்க தண்ணி எங்க இருக்கு? இருட்டுல ஒரு மண்ணும் தெரியல. இந்த டேங்க் தண்ணியா தான் இருக்கணும்” எனக் கூறியபடி ஓரளவு கணிசமான அளவில் இருந்த நெகிழி தண்ணீர் தொட்டியை குட்டிக்கரணம் போட்டு உருண்டு புரண்டு தரையில் சாய்த்துவிட, “ஆ…” என்ற சத்தம்.
இப்போது வாசகர்களுக்கும் புரிந்திருக்கும். பாண்டி எதை இடித்துத் தடுமாறினான் என்று. அவன் கால் இடித்ததில் கல் மூடி நகன்று தள்ளி விழுந்திட, சல்லடை கம்பி மட்டும் அந்தப் பொந்தை அடைத்தபடி இருக்க, சரியாக விழி அதற்கு நேராக நின்று விளக்கை இருட்டில் தேடிக்கொண்டிருக்க, மேலே பாண்டியோ முழுத் தொட்டியின் தண்ணீரை சாய்த்திருக்க, அது சட சட வென்று பொந்தின் வழி விழுந்து விழியை நனைத்தது.
எதிர்பாரா விதமாக வீட்டிற்குள் தண்ணீர் கொட்ட விழி இருட்டில் அலறியபடி தடுமாறி விழ போக, விழியின் மன்னவன் இரெண்டே எட்டில் அவளை இடையோடு தாங்கி பிடித்தான்.
மாடி முழுக்கத் தண்ணீர் நிரம்பியிருக்கச் சில நிமிடங்களுக்குள் அந்தப் பொந்தின் வழி நீர் முழுவதுமாகச் சிதறி ஓர் செயற்கை மழையை வீட்டிற்குள் கொண்டு வந்திருந்தது. கொட்டுகின்ற நீரைவிட்டு அவன் கரத்தை அவளுடைய இடையைவிட்டுப் பிரிக்காமல் சற்றே விழியியை நகர்த்திப் பிடித்தான்.
மிக மங்கலான வெளிச்சத்தில் விழியின் முகத்தை அத்தனை நெருக்கத்தில் கண்ட கதிரவன் உறைந்துபோனான். கதிரவன் விழியை வளைத்து பிடித்திருந்ததில் மிச்சமுள்ள நீர் கதிரவனின் முதுகில் விழுந்து சிதறி தெறிக்க, அவர்கள் இருவரை சுற்றியும் ஓர் நீர் உலகம் உருவாகி இருந்தது.
விழி எதுவும் பேசவில்லை. ஆனால் கதிரவன் மெல்ல மெல்ல விழியை உணரத்தொடங்கினான்.
விழி பேசவில்லை. ஆனால் விழியின் விழிகள் அவனுடன் பேசின.
அந்த விழிகள் அவளுடைய காதலை சொல்லியது, அவனின் முதல் ஸ்பரிசத்தால் வந்த நாணத்தைச் சொல்லியது. என்னைப் புரிந்துகொள்ளமாட்டாயா என்ற எதிர்ப்பார்ப்பை சொல்லியது. இந்த நொடி நீளாதா என்ற ஏக்கத்தைச் சொல்லியது. அனைத்தையும் தாண்டி கணவனின் அணைப்பில் கரைகின்ற பெண்மையைக் குறித்த அச்சத்தையும் சொல்லியது.
ஆயிரம் உணர்வுகளைச் சுமந்திருந்த அவள் விழிகள், கதிரவனுள் இருப்பது காதல் உணர்வே என்று ஊர்ஜிதப்படுத்தின. தன்னை மறந்தவனாய்….ஆம் இது காதல்தான்!!! என்ற எண்ணம் கொண்டான்.
ஒரு சொல் கூட அவள் இதழ் உதிர்க்கவில்லை. அவள் வாய்திறந்து காதல் சொல்லவே இல்லை. ஆனால் உணரவைத்திருந்தாள்….உணர்தியும்கொண்டிருந்தாள்….
“அப்பா!!!!…என்னா கண்ணுடா சாமி. கொல்றாளே” எனத் தனக்குள் சொல்லிக்கொண்டான். இல்லை விழியின் விழி அவனைச் சொல்லவைத்திருந்தது.
உன் பார்வை பட்டவுடன்
புதுச் சாரலடிக்கிறதே
உன் தேகம் தொட்டவுடன்
என் ஆண்மை உணருகிறேன்
அட அச்சம் மடம் நாணமெல்லாம்
உன் விழிகள் பேசிடவே
மிச்சமே இல்லாமல் என் நெஞ்சம் சாய்கிறதே….
காதல் கனலை சிந்தும் விழி கொண்டவளே
நான் உன்மேல் பித்தாக
நின்மேல் காதலாகி நின்றேன் !!!
கனல்விழியே
என் கனலியே!!!
என அவன் மனம் எழுதிய வரிகளுக்குக் காற்றும் சிந்தும் நீரும் சுருதியையும் இலயத்தையும் சேர்த்து அவன் செவிமட்டும் கேட்கும் பாடல் இசைத்தது.

Advertisement