Advertisement

பூக்கரமோ பூகம்பமோ – 3

வளைக்கரத்தில் வன்மையா ?

மைவிழியில் எரிமலையா ?

பெண்ணவள் சீற்றம்கொள்ள

ஆழ்கடலும் அடக்கம் கொள்ளும்

“டேய் பாண்டி, ஏண்டா அவரோட வம்பு வளக்குற” எனக் கேட்டபடி வந்தான் கதிரவன்.

“என்ன நடந்துச்சுனு தெரியாம அட்வைஸ அள்ளி விடாத. கொஞ்சமாச்சு மிச்ச வையேன் மாப்பு. நாளைக்குப் புள்ளகுட்டி பொறந்தா அதுகளுக்கு மிச்ச மீதி இருக்கணும்ல. எல்லாத்தயு என்டயே சொல்லி தீக்கலாம்னு முடிவோடு கிளம்பிருக்காங்கே” எனச் சத்தமாக ஆரம்பித்து மெல்லமாக வாய்க்குள் முணுமுணுக்க, கதிரவன் ஓரடி வேகமாகக் கையை ஓங்கியபடி, “புள்ளகுட்டியா ? யாருக்கு..” என வர, “ஆத்தாடி காதுல விழுந்துருச்சு போலவே” என மனதில் நினைத்தவன் அவசரமாக, “எனக்குதா எனக்குதான்..வேற யாருக்கு. எம்புள்ளைக்கு நீ தா அட்வைஸ் பண்ணனும்னு சொல்ல வந்தே மாப்பு” எனக் கூற, “மொதல்ல யார்டையும் நீ அட்வைஸ் வாங்காம இருக்கப்பாரு. அப்புற புள்ள குட்டி பத்திலா பேசலாம்” எனப் பதில்கொடுத்தபடி, பாண்டியின் தோள்களைச் சுற்றி கைபோட்டப்படி அவனை மெல்ல கள்ளுக்காலிலிருந்து அகற்றி சக்கரையின் பரோட்டா கடை பெஞ்ச் நோக்கி சென்றான்.

“பாண்டி உஷாரா இருக்கனும்டா. இந்தக் கதிருக்குத் தா கல்யாண காட்சின்னு யோசன இல்லாம இருக்கானு பாத்தா, இந்தப் பைய நம்மளையும் கடைசிவரை சிங்கள்-ஆவே வச்சுருக்கப் பிளான் பண்ணிட்டா போல.

நம்மா அலெர்ட்டா இருந்தா தான் காலகாலத்துல கல்யாண கட்டி மிங்கில் ஆக முடியு” என மனதிற்குள் அவசரமாகச் சில பல திட்டங்களைத் தீட்டிக்கொண்டே வந்து கதிரவனோடு அமர்ந்தான்.

“என்ன பாண்டி யோசன பலமா இருக்கு” எனப் பரோட்டாவுக்கு மாவு பிசைந்துகொண்டே சக்கரை சந்தில் சிந்து பாட, அவனை எட்டி பார்த்த பாண்டி ‘ஏண்டா கோர்த்துவிடற’ என்ற ரீதியில் முகத்தை வைத்தான்.

“என்ன மாப்பு? எதுவும் யோசிக்கிறியா” எனப் பாண்டியின் தோள்களைத் தட்டியபடியே கதிரவன் வினவ, பாண்டி தனக்குள், “சோமாஸ் பாண்டி…நீ அலர்ட் பாண்டி ஆகவேண்டிய நேர வந்திருச்சுடா. சமாளி சமாளி” எனத் தனக்குத் தானே மனதினுள் கூறிக்கொண்டு, “அது ஒண்ணுமில்ல மாப்பு…உனக்கு வயசு பதினெட்டா ? அறுவதா ?னு யோசிச்சுக்கிட்டு இருந்தே” எனக் கூறினான்.

“என்ன டா நக்கலா?” எனக் கதிரவன் கேட்க,

“இல்ல மாப்புள, நம்ம சக்கர மேல சத்தியமா சந்தேக இருக்கு. பின்ன என்னடா ? நீ எனக்குப் பிரண்டா இலை அந்தப் பெருசுக்கா ? அந்தப் பெருசு சொல்லுச்சுனு கள்ளுக்கால்ல உக்கார விடாம நைசா கூட்டிவண்டியே, கொஞ்ச நேரத்துல புள்ளைங்க இந்தப் பக்க கோவிலுக்குப் போகுங்க. அங்க உக்காந்து பாத்தா தான பந்தாவா இருக்கும்” எனக் கூற, கதிரவன் அவன் கேள்வியில் சிரித்தான்.

“என்ன இளிப்பு? நீ பாக்கலைனா நானு பாக்க கூடாதா” என முறுக்கிக்கொள்ள

“அடே! ஒன்னு பலகார இல்ல பொண்ணுங்களா … ஏன்டா இப்படி ” எனச் சிரிப்புனூடே கதிரவன் வினவ, “எப்பா சாமியாரே, இந்த வயசுல இத யோசிக்காம வேற என்னத்தடா யோசிக்கனு ?” என அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு இம்முறை சக்கரை கூற, பாண்டியோ, “அப்பாடி நமக்குச் செட் சேர்ந்திடுச்சு…” என வாய்விட்டு கூறி சிரித்தான்.

“சரி சரி என்னவோ பண்ணுங்க. ஆனா பிள்ளைங்களைக் கஷ்டப்படுத்துற போல எதுவும் பண்ணாதீங்க. அப்படி ஏதாச்சு வந்துச்சு தொலைச்சுப்புடுவே” எனக் கூற இவன் பேசுவதைக் காதில் வாங்காமல் சற்று தள்ளி சென்று கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தை ஆர்வமாக இருவரும் பார்க்க தொடங்கியிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் கனல்விழியும் இருந்தாள். நேற்று நடந்த சம்பவத்தை அடுத்து அந்த ஆசிரியை விழியை அழைத்துச் சென்று கண்காட்சிக்கு பொருப்பாளரான ஆசிரியரிடம் விட, அவருக்கு விழியன் அப்பாவையும் இவளின் வளர்ப்பு முறையும் தெரியுமாதலால் அந்த ஆசிரியரின் புகாருக்கு ஒப்புக்கு இரண்டொரு கேள்வி கேட்டுவிட்டு அனுப்பிவிட்டார்.

அதோடு அவரே தன் அறையிலிருந்து விழியன் அப்பா கந்தசாமிக்கு அழைத்துத் தெரிவிக்க, அவரும் அடுத்து ஓர் அரைமணி நேரத்தில் வந்திருந்தார். கனல்விழியோ எந்தவித பதற்றமோ பயமோ இல்லாமல் சிரித்த முகமாகவே தந்தையை எதிர்கொள்ள , பெண்ணைத் தான் சரியாக வளர்த்திருக்கின்றோம் என்ற பெருமை கந்தசாமி முகத்தில் தோன்றி நிலைத்தது.

“என்ன பாப்பா? பலமா அடிச்சிட்டியோ ?”

சின்னச் சிரிப்புடன், “இல்லப்பா நம்ம தேவி பராசக்தி அளவுக்கெல்லாம் இல்ல. இன்னு நா வளரனும்”

ஹா ஹா எனப் பெரிதாகச் சிரித்தவர், “கவலைப்படாத, அந்த அடிய அம்மா உனக்கு வூட்டுக்குப் போனதும் கொடுத்துருவா நினைக்கிறே” எனக் கூறியபடியே மகளை அழைத்துச் செல்ல, “ஐயோ அப்பா…வேணாம்பா ஏதாச்சும் பண்ணுங்களே”

“உங்க அம்மா அடினா அவ்ளோ பயமா கண்ணம்மா…”

“அடிச்சாகூடப் பரவா இல்ல. ஆனா நிறைய அட்வைஸ் பண்ணுவாங்கப்பா. அது தான் முடியல” என சொல்லிவிட்டு நாக்கை கடிக்க, அப்பா என்ன சொல்வாரோ எனத் திருத் திருவென்று முழித்துக்கொண்டிருந்தாள்.

கந்தசாமி எத்தனை சுதந்திரம் தன் பெண்ணிற்குத் தருகிறாரோ அதே போலப் பெரியவர்களை மதிக்கவேண்டும் என்றும் விடாது அறிவுறுத்துபவர்.

அப்பாவின் கண்டிப்பான பார்வையைப் பார்த்துவிட்டு, “அப்பா சாரி பா… நான் அம்மாவ செல்லமா தா சொன்னே விளையாட்டுக்கு. நா விளையாட கூடாதா ?” என முகத்தைத் தொங்கபோட்டுக்கொண்டு கேட்க, பதிலிற்கு அவரோ “ஏ கண்ணம்மா நீ மட்டும் தா விளையாடணுமா ? நா விளையாட கூடாதா ?” என்ற கேள்வியில் நிம்மதியுடன் சிரித்தாள்.

“சரிபா…அம்மாக்கு நான் ஒரு பையன அடிச்சேன்னு தெரிஞ்சிருக்குமா?”

“கண்டிப்பா… இன்நேர திரைக்கதை வசனத்தோட உங்க அம்மா காதுக்குப் போயிருக்கும்”

“ஐயோ, இப்ப என்ன பண்றது?”

“ஹ்ம்ம் ஒன்னு பன்னலா. உங்க முருகேசன் மாமா வீடு இங்கதான இருக்கு. நாளைக்குப் பள்ளிக்கூடமும் இல்ல. நா வந்து விட்டு போறே. நாளைக்குச் சாய்ந்திரமா உங்க அம்மாவை அவ பாசமலர் வீட்டுக்கு கூட்டியரே. மிச்சத்தை அந்தச் சிவாஜி கணேச பாத்துப்பாரு”எனக் கூற, “யாருப்பா சிவாஜி கணேஷ”

“உன்னோட மாமான தா சொல்லுறே. என்ன அங்க இறுகுறியா ?”

“ஐ… கொடி வீட்லையா? ஜாலி பா…நா இருந்துக்குறே. அதுக்குள்ள அம்மாவ என அடிக்கவேணான்னு சொல்லி கூப்டுவாங்கப்பா” எனச் சிரிப்புடன் கெஞ்ச, “நீ பொழச்சுக்கவா பாப்பா. இன்னைக்கு உங்க அம்மாவோட காளி அவதாரத்துல காலியாகப் போறதென்னவோ நா தா போல” எனக் கூறி முருகேசனிடம் மகளை விட்டுவிட்டுத் தேவியிடம் சமாதானத்தை வரவைப்பதும் பாசமலரின் பொறுப்பே எனக் கூறி செல்ல, முருகேசனும் சிரிப்புடன் சம்மதித்திருந்தார்.

கொடி எனப்பட்டவளின் முழுப் பெயர் முல்லைக்கொடி. அவளும் கனல்விழியின் வயதே. ஆனால் அவள் படிப்பது இந்தக் கிராம பள்ளியில். அந்தத் தெருவிலிருக்கும் தன் ஜோடி பிள்ளைகளுடன் விடுமுறை நாளில் ஊர் கடைவீதியில் நடுநயமாக அமைந்திருந்த கோவிலுக்குச் சென்று வருவது வழக்கம். அப்படியே இன்றும் கொடி கிளம்பியிருக்க ஒரே ஒரு வித்தியாசமாய் அவளுடன் விழியும் இணைந்துக்கொண்டாள்.

இப்படியெல்லாம் தனியாக விழி கோயிலிற்குச் சென்றதே இல்லை. அதுவும் தோழி பெண்களுடன். மிகவும் துணிச்சல்காரியானாலும் வீட்டிற்குச் சென்றுவிட்டாள் தேவி அவளை எங்கும் தனித்து அனுப்பவே மாட்டார். அனைத்திற்கும் வீட்டிலிருக்கும் எவரோ ஒருவர் உடன் வருவார். இப்படித் தோழிகளுடன் மட்டும் செல்வது புது அனுபவமாக இருக்க மிகவும் சந்தோஷமாகவே கிளம்பி சென்றாள்.

சற்றுத் தொலைவில் கதிரவன் அவன் கூட்டத்தோடு இருக்க, சாலையின் மறுபுறம் விழி அவளின் மாமன் மகள் கொடியுடன் சென்றுகொண்டிருந்தாள். வருகின்ற பெண்கள் கூட்டத்தைப் பார்த்துக்கொண்டே கொஞ்சம் தள்ளி ஓர் அடாவடி கும்பல் நின்றுக்கொண்டிருந்தது. அவர்களுள் சிலர் பள்ளி மாணவர்களும் சிலர் வெறுமனே ஊரை சுற்றி வலம் வந்து பெண்களிடம் வம்பை வளர்க்கும் வெட்டி வீரர்களாகவும் இருந்தனர். ஆனால் அந்த வெட்டி வேலையை எவருக்கும் தெரியாமல் அரசல் புரசலாகவே செய்துவந்தனர்.

குடும்பத்திற்கோ ஊர் பெரியவர்களுக்கோ தெரியாமல் போகும் வரும் இளம் பெண்களிடம் அவ்வ போது வம்பு வளர்த்து அவர்களைச் சீண்டி வந்தனர். படிக்கின்ற பெண்கள் எல்லோரும் விழி இல்லையே. எங்கே வீட்டிற்குத் தெரிந்தால் படிப்பை நிறுத்தி விடுவார்களோ? பெயர் கெட்டுவிடுமோ ? என்றெல்லாம் எண்ணி வெளியே சொல்லாமலிருக்க, அதுவே அந்த அடாவடி கூட்டத்திற்குத் துணிச்சலை தந்தது.

“டேய் அடக்கி வாசிங்க. சக்கர கடைல கதிரு இருக்கா… அவ இருக்கும்போது வம்பு வேணா” என அந்த அடாவடி கூட்டத்தில் ஒருவன் சொல்ல, இன்னொருவன் “ஏண்டா அவனுக்கு நம்ம வயசுதான இருக்கு… அவன பாத்து ஏ நம்ம பம்மனு?” என எதிர்கேள்வி கேட்டான்.

“இல்ல மச்சா, அவுங்க அப்பா லிங்கம்னா ஊரே ஒரடி தள்ளி நின்னு தா பேசும். அம்புட்டு மரியாத. ஆனா அவரையே இவ எதுத்துக்கிட்டு வெளில வந்து வாழுறானா எம்புட்டு தில்லு வேணு. அதோட இவ எல்லா விஷயத்துல கரெக்டா இருந்து நம்ம உசுர வாங்குவா.

வாய் அவ்ளோ பேசமாட்ட சனியபுடிச்சவ, சட்டுனு கை நீட்டிருவா. அதுனால அவ இருக்குறவற அடங்கு. இல்ல நம்மள அடக்கப்பண்ணிடுவா”

“அண்ணே! நீ ஓவராவே அவன புல்டப் பண்ற. விட்டா நீயே அவன ஹீரோவாக்கிடுவ போலவே” என வேறொருவன் லந்தடிக்க, அனைவரும் சிரித்தனர்.

“லந்தா அடிக்கிற? அவன்ட ஒருதட அடிவாங்கிப்பாரு . அப்புற லந்தென்ன பீடி கூட அடிக்கமாட்ட” எனப் பதில்கொடுக்க மீண்டும் அங்கே ஒரு சிரிப்பலை.

இப்படியாக அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, கதிரவன் சக்கரையின் கடைக்குள் சென்று காலை உணவு உட்கொள்ளச் சென்றான்.

அதற்குள் விழியும் கொடியும் அவர்களது தோழியும் கோவிலுக்குச் சென்றுவிட்டு வெளியே வந்துக்கொண்டிருந்தனர். அப்போது விழியைப் பார்த்துவிட்ட அடாவடி கும்பல்கார்களில் ஒருவன், “மச்சா, இவதாண்டா… என்னோட மாமா பையன அடிச்சது. நேத்து அத்தன பேரு முன்னாடி பெரிய இவளாட்ட கைய ஓங்குறா.

இவள இப்படியே விட்டா சரி வராது மச்சா. அதுவு நம்ம ஊரு புள்ளைங்க இவ கூடச் சேந்து கெட்டு போச்சுன்னா நேத்து அவனுக்கு நடந்த நிலம தா நமக்கும்.”

“சரி, இப்ப நம்ம என்ன பன்னலா?” என வேறொருவன் கேட்க, நேத்து விழியிடம் அடிவாங்கிய மகேஷ் அங்கே வந்துகொண்டிருந்தான்.

“டேய் மகேஷு வாடா, இதோ பாரு உன்ன அடிச்சவ. என்ன பன்னலா சொல்லு ? இது நம்ம ஊரு. ரோடுல நடமாட்டமும் கம்மியா இருக்கு” என மகேஷின் மாமா மகன் வினவ,

மகேஷ் தயங்கிக்கொண்டே, “சுத்தி நிறையப் புள்ளைங்க இருக்கே. ஏதாது பிரச்சனை ஆகிடுச்சுனா ?” என வினவ,

அந்தக் கூட்டமோ சிரித்துக்கொண்டே, “இதுவரைக்கு இவளுங்கள எம்புட்டு இம்ச பண்ணிருப்போம். ஒருத்திக்கும் வாய் துறக்க தைரிய கிடையாது. நீ சொல்லு என்ன பன்னலா” என அவர்கள் கூற, மகேஷின் கண்ணில் பழிவாங்கும் எண்ணம் துளிர் விட்டது.

“நேத்து அவ ஓவரா படக் காட்டுனா இல்ல? அடிச்ச அவ கை என் கைய ஒருதடவை அன்பா பிடிச்சிட்டு அவ என்னோட ஆளுன்னு சொல்லனு. இத பண்ண வைக்க முடியுமா ?” என வினவ, “இதெல்லா தூசு. இப்ப பாரு” என அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவன், கதிரவன் எங்கே என்று சுற்றி தேட கதிரவன் இல்லாததால், “அப்பாடா அந்த நல்லவே இங்க இல்ல. இனி ஆட்டத்த ஆரம்பிக்கலா” எனக் கூறி, வந்துகொண்டிருக்கும் பெண்கள்முன் சென்று ஒருவன் சட்டை காலரை மேல் தூக்கிவிட்டபடி பந்தாவாக நின்றான்.

“இத பாருங்க பிள்ளைங்களா. இங்க ஒரு ராங்கிக்காரி இருக்கலாமே. ஆம்பள பையன நேத்து கை ஓங்குனவ. அவ மட்டு இங்க இரு. மத்தவளுங்க கலஞ்சு போங்க” என விரல் நீட்டி மிரட்ட, அதில் கூடியிருந்த பெண்கள் அஞ்ச தொடங்கினர்.

கொடி சற்றே குரலை உயர்த்தி, “அண்னே இதெலா தப்பு. அது எங்கவீட்டு புள்ள. நா எங்க அப்பாட்ட சொல்லிடுவே. ஒழுங்கா வழிய விடுங்க” என குரல் நடுங்க முல்லை கொடி கூற, அவளை போலவே அவள் கூறியதை மீண்டும் போலியாக செய்து காட்ட, மற்ற நண்பர்கள் அதைப் பார்த்துக் கை கொட்டி சிரித்தனர்.

அவர்களின் மிரட்டல் பேச்சிலும் சிரிப்பிலும் நன்றாகத் தைரியம் வரப்பெற்ற மகேஷ் அருகே இருந்த வேப்பமரத்து குச்சியை உடைத்துக்கொண்டு மிகவும் தெனாவெட்டாக, “ஒய் முன்னாடி வா. உனகென்னடி அவ்ளோ திமிரு. ?நேத்து ஓவரா பேசுனல. இப்ப நா சொன்னதச் செஞ்சாதா நீ இங்க இருந்து போகவே முடியு. அவ சொன்ன மாதியே பண்ணு” எனக் கூற சுற்றி இருந்தவர்கள் தான் பயந்தார்களே தவிர விழி சற்று மிடுக்காகவே அவன் முன் வந்து நின்றாள்.

ஆனால் அதைத் தவறாக அவன் புரிந்துகொள்ள, “அந்தப் பயமிருக்கனு.

இவ்ளோ பயமிருக்குல… ஹ்ம்ம் சீக்கிரம் என் கைய பிடி பாப்போம். கைய பிடிச்சு மாமா ஐ லவ் யூ னு சொல்லிட்டு போயிட்டே இரு” எனக் குச்சியை அவள் முன் நீட்டி நீட்டி பேச அதை மகேஷ் எதிர்பார்க்கா நிமிடம் சட்டென்று பிடித்திருந்தாள் விழி.

“ஏ எதுக்கு டி குச்சியைப் பிடிச்ச?” என எகிற

“ஓ அது குச்சியா? நா உன்னோட கைன்னுல நினைச்சே” என எகத்தாளமாகக் கூறிக்கொண்டே, அதை அவன் கையிலிருந்து பிடிங்கி பட் பட்டென்று அவன் கைகளில் அடிக்கத் தொடங்க சற்று தள்ளி நின்ற ஆண்கள் மிரண்டு நின்றனர். அங்கிருந்தவர்கள் யாரும் பூக்கரத்தில் ஒரு பூகம்பத்தைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்களின் முகத்திலே தெரிந்தது.

அவர்கள் சுதாரிக்கும் முன்னர் நான்கு அடிகளாவது மகேஷின் மீது விழுந்திருக்கும். அதே சமயம், அதாவது மகேஷ் சென்று குச்சியுடன் அவள் முன் நின்ற பொழுதே கதிரவன் உள்ளிருந்து வெளியே வந்திருந்தான். வந்தவுடன் அவன் கண்ணில் பட்ட முதல் விஷயமும் அதுவே தான்.

பாண்டியும் சக்கரையும் அதைக் கவனிக்கவில்லை. என்ன ஏதென்று கதிரவன் அங்குச் செல்லும் போது மகேஷின் வார்த்தைகள் அவன் காதில் விழ, ‘எவ்ளோ தைரியம்’ இவனுக்கு என்ற எண்ணத்தில் செல்ல, அதற்கு முன்னதாக விழி குச்சியைப் பறித்து அடிக்கத் தொடங்கியிருந்தாள்.

அதைப் பார்த்த கதிரவன் மேற்கொண்டு நடக்காமல் அதே இடத்தில் நின்றான். அப்போது சரியாகப் பாண்டியும் சக்கரையும் கூட இதைப் பார்த்துவிட, கதிரவன் அதே இடத்தில் நின்றானென்றால் சக்கரை வேகமாகக் கடைக்குள் பதுங்கினான். பாண்டியோ, “ஆத்தாடி வாத்தியாரம்மா. என்னா அடிஅடிக்குது” எனக் கனல்விழியைப் பற்றி வாய்க்குள் முனங்கிகொண்டே சக்கரை கடை பெஞ்சில் ஓட்டமாய்ச் சென்று அமர்ந்துகொண்டான்.

இப்பவும் ‘எவ்ளோ தைரியம்’ என்ற எண்ணமே கதிரவனின் மனதில். ஆனால் சற்றே ஆச்சர்யத்துடன்! கனல்விழியை பற்றிய எண்ணம்.

இம்முறை விழியைப் பார்த்தாலும் அவளின் முகம் சுத்தமாகக் கதிரவனின் மனதில் பதியவில்லை. பதிவதற்கு அவகாசமுமில்லை. காரணம் ஸ்தம்பித்திருந்த மகேஷின் நண்பர்கள் வேகமாக விழியைச் சுற்றிவளைக்க முயல, அதற்குள் வேகமாக அங்கே சென்றவன் விழிக்கு முதுகை காட்டியபடி அந்தக் கும்பலை எதிர்த்து அவளுக்கு முன்னால் நின்றிருந்தான்.

பின்பக்கமாகத் திரும்பாமலே, “அந்தக் குச்சியைக் கொடுத்துட்டு வீட்டுக்கு போ” என அதட்ட, ஏனோ கதிரவன் தனக்கு முன் வந்து அரண் போலத் தோன்றவே, அவன் நீட்டிக்கொண்டிருந்த அவனுடைய கைகளில் வைத்தவள் திரும்பி பார்க்காமல் ஓட்டம் பிடித்தாள்.

கதிரவன் இதில் வருவான் என்று எதிர்பார்க்காத சிலரும் ஓட்டம்பிடித்து ஊருக்குள்ளிருந்த ஒரு சிலரிடம் தெரிவிக்க, எத்தனை வேகத்தில் செய்தி பரவியதோ நிமிடத்தில் நான்கைந்து பெரியவர்களும் சில வீட்டு பெண்களும் வர, குழுமியிருந்த இளைஞர் கூட்டத்தை சற்று தள்ளி சென்றுக்கொண்டிருந்த வழிப்போக்கர்களும் பிரிக்கத் தொடங்கினர்.

வந்தவர்களுள் மகேஷின் மாமாவும் அடக்கம். வந்தவர் சிவந்திருந்த அவன் கைகளைப் பார்க்க குச்சியுடன் நின்றிருந்த கதிரவனே அவரின் கண்களுக்கு வில்லனாகத் தெரிந்தான்.

Advertisement