Advertisement

“நீ யாருனு சொன்ன ?”
“லிங்கம் அய்யா. குவாரி வச்சிருக்காருல. “
“உன்ன இப்படிப் பண்ண சொன்னது யாரு ?”
“அதோ நிக்கிறாரே! அவருதான்” என மச்சக்காளையைக் கை காட்ட, அங்கோ மச்சக்காளை லிங்கத்துடன் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.
“டேய் பொய்ச் சொல்லாதடா!” எனக் கதிரவன் கூற,
“இல்ல சார்! சாமி சாத்தியமா நிசந்தே சொல்றேன். அவரு தான் சொந்த மச்சானுக்கு எதிரா வேல பாக்குறாரு. ஏதோ அந்தப் பெரிய மனுஷனுக்கு இரெண்டு பிள்ளைங்களாம். அதுல மூத்தவரு ஒண்ணா இல்ல போல. இரண்டாவது ஆளுக்கு அம்புட்டு விவரம் இல்ல போல. அதுனால இவரு இந்த் வேல பாக்குறாரு. இவரோட ஆளுங்க இவருக்குப் பின்னாடி பேசிக்கிறப்ப கேட்டிருக்கேன்.
நான் வெளியூரிருந்து மாத்தி வந்தேன். அதுனால இம்புட்டு சங்கதி தான் எனக்குத் தெரியும்ங்க. மத்த விவரம் தெரியல. ஆனா இந்த ஆளுதான் பன்றாரு” எனக் கூற, கதிரவன் லிங்கத்தின் முன் நட்பாய் நடிக்கும் மச்சக்காளையை அடித்துத் தூக்கும் ஆவேசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
ஓரடி முன்நகரப் போக, கதிரவனின் கைகளை இழுத்துப் பற்றியிருந்தார் முருகேசன்.
அதற்குள் உள்ளே வழக்கு ஆரம்பிக்க, வெளியே நடந்தவைகளை முருகேசன் கூற, கதிரவன் அடக்கப்பட்ட கோபத்துடன் நின்றிருந்தான்.
“சித்தப்பா! எதிரிய விட்டுவைக்கலாம். ஆனா துரோகிய ஒரு செகண்ட் கூட விடக்கூடாது. தட்டி…. தட்டி தூக்கிட்டு தான் மறுவேலை பார்க்கணும்” என ஆவேசமாகக் கூற, முருகேஷனோ அவனைத் தடுத்து, “வேணாம் கதிர். நீ இப்படிக் கோபப்பட்டா, விழி உனக்குப் புரியவைக்கச் சொல்லிருக்குது.
இப்ப நீ போய்ச் சொன்னாலும் லிங்கம் அண்ணே நம்பமாட்டாரு. எத்தனை வருசமா ஏமாத்திருக்காங்க. எத்தனை வருசமா நம்பவச்சிருக்காங்க. நீயும் ரொம்ப வருஷம் கழிச்சு இப்பதான் உன்னோட வீட்டுக்குப் போயிருக்க. அதோட அண்ணி முகத்துல இப்போதான் சிரிப்பு இருக்கறதா பாப்பா சொன்னா.
அதெல்லாம் உன் கோபத்துல கெடுத்திடாத. நேத்துப் படம் பிடிச்சோம்ல. அது இன்னைக்கு வந்திடும்ல. அத வச்சு இவனுங்களோட களவாணி தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டலாம்.
நம்ம வாயால சொன்னா உங்க அப்பா நம்பமாட்டாரு. இப்போதைக்குக் கேஸ்-அ மட்டும் பாப்போம்” எனக் கூற, அதில் இருந்த நிதர்சனத்தை உணர்ந்தவன் அமைதி காத்தான்.
வெளியே வழக்கு முடிந்து வர, லிங்கத்திற்கு அத்தனை மகிழ்ச்சி. மச்சக்காளைக்கோ அதிர்ச்சி. மாரிமுத்தும் சற்று இடைவெளிவிட்டு அவர்கள் பின்னோடு வர, மச்சக்காளை தற்சமயம் எதுவும் கேட்க முடியாமல் எரிச்சலை உள்ளடக்கியபடி மாரிமுத்துவை முறைத்தபடியே வர, மாரிமுத்து மச்சக்காளையிடமிருந்து தப்பிக்க, வேகமாக அவர்களைத் தாண்டி சென்றவன் கதிரவனின் கைகளைப் பிடித்து, “தப்பு பண்ண இருந்தேன். நன்றி சார்…” எனக் கூற, அருகில் வந்துவிட்டிருந்த லிங்கமும் மச்சக்காளையும் புரியாமல் பார்க்க, அவனோ சட்டென்று லிங்கத்திடம் திரும்பி, “அய்யா…என்ன இன்னைக்கு உங்களுக்கு எதிரா ஒருத்தவங்க சாட்சி சொல்ல சொன்னாங்க. சொல்லி உங்களுக்குத் தண்டனை வாங்கித் தர சொல்லி பணம் கொடுத்தாங்க.
இவுங்க இரெண்டு பேரும் தான் என்னோட புத்தில உரைக்கிறது போலச் சொல்லி உண்மைய சொல்ல வச்சாங்க. என்ன மன்னிச்சிடுங்க” எனக் கூறி லிங்கத்தின் காலில் விழுந்தவன், கதிரவனிடம் திரும்பி, மச்சக்காளையைப் பார்த்தபடி, “சார் என்னைப் பொய் சாட்சி சொல்ல சொன்னவங்களுக்கு எதிரா நான் பேசிட்டேன். ஒருவேளை எனக்கு எதாவது ஆச்சுன்னா…” என இழுக்க, கதிரவனோ மச்சக்காளையை முறைத்தபடி, “ஒன்னு ஆகாது. உன்ன எதுவும் பண்றதுக்கு அவனுக்கு உயிரை தவிர வேற எதுவும் இருக்காது. சரிதானா சித்தப்பா ?” என முருகேசனை பார்த்து கேட்க, மச்சக்காளைக்கோ வேஷம் களைந்து விட்டதோ என்ற திகில் பரவத் தொடங்கியது.
தன்னுடைய திட்டம் நிறைவேறாத ஆத்திரம் ஒருபுறமும் கதிரவன் இதில் உள் நுழைந்த அதிர்ச்சி ஒருபுறமும் அவரை நிலைகுலைய செய்தது. அடுத்தது என்ன என்று கூட அவரால் யோசிக்கவே முடியவில்லை.
கதிரவனும் முருகேஷனுமே நடக்கவிருந்த பெரும் ஆபத்தை நிறுத்தியுள்ளார்கள் என்று தெரிந்த லிங்கம் கதிரவன் முன் கூனிக்குறுகி போனார். ஒருவேளை அவன் கூறியபடி நடந்திருந்தால் என்ற எண்ணமே அவர் இத்தனை நாட்களாகக் கொண்டிருந்த கர்வத்தை அடியோடு வேரறுத்தது.
முருகேஷனையும் கதிரவனையும் நெகிழ்ந்த பார்வையொன்று பார்த்தார்.’
*
எனத் தனக்குத் தெரிந்ததை விழி பார்வதியிடம் விளக்கிய அதே நேரத்தில், மச்சக்காளையிடம் பாரிஜாதம் ஏகத்திற்கும் குதித்துக்கொண்டிருந்தார்.
“ஐயோ ஐயோ…” எனக் கூறி வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டவர், கணவரிடம், “எம்புட்டு அழகா திட்டம் போட்டோம். எங்கே அண்ணே ஜெயிலுக்குப் போச்சுன்னா பிரச்சனைய காரணகாட்டி கேஸ்-அ நாங்க பார்த்துகிறோம்னு குவாரியை நம்ம பேருல மாத்திரனும். அந்த விழியோட ராசிதான் அண்ணே ஜெயிலுக்குப் போகக் காரணம்னு பார்வதி மனச களைச்சு அவளை வீட்டை விட்டு தொரத்திடனும்.
அண்ணனை எப்படியும் கதிரவன் வெளிய எடுக்க உதவ மாட்டான். மாறனுக்கு விவரம் பத்தாது. நம்ம பூந்து வேல பண்ணி பேரு வாங்கலாம். அத வச்சு நாலு காசு பார்க்கலாம். வீட்டை விட்டு தொறத்துணைவள கதிரவன் மறக்க பார்வதி வச்சே காய் நகர்த்தலாம். அப்படியே கதிரவனை ஒத்தையா நிக்க வச்சு அவனோட ஆஸ்தியை ஆசைதீர ஆளலாம்னு நினைச்சேனே.
பாவிமவன், இப்படி மண்ணை அள்ளி போட்டுட்டான். இந்தக் கதிரவ விளங்குவானா உறுபடுவானா…அவன் நல்லாவே இருக்கமாட்டான்” என அவர் பாட்டிற்குப் பேசிக்கொண்டிருக்க, மச்சக்காளை ஓங்கி சட்டென்று ஓர் அடி கொடுக்க, பாரிஜாதம் கப் ஜிப் என்றானார்.
“நானே அந்தக் கதிர் பயலுக்கு விஷயம் தெரிஞ்சிருக்குமோனு இருக்கேன். நீ என்னடானா லூசு மாதிரி கத்துக்கிட்டு இருக்கவ ? அமைதியா இரு. என்னை கொஞ்சம் யோசிக்க விடு” எனக் குறுக்கும் நெடுக்குமாய் நடக்கத் தொடங்கினார்.
பார்வதிக்கு விழி கூறியதை கேட்ட பிறகே அத்தனை நிம்மதி. வேகமாகச் சென்று பூஜை அறையில் விளக்கேற்ற என்ன நினைத்தாரோ லிங்கமும் வந்து கண் மூடி நின்றார்.
இத்தனை வருடலாகக் கட்டி காப்பாற்றிய கௌரமும் ஒரே நாளில் சரிந்து அதுவும் அரசை ஏமாற்றிய மோசடி வழக்கில் சிறை சென்றிருந்தால், அதை லிங்கத்தால் ஒரு போதும் ஏற்றிருக்கவும் முடியாது அதிலிருந்து மீண்டிருக்கவும் முடியாது. இத்தனை நாட்கள் தன் மனதை அலங்கோலமாய் வைத்திருந்த அகங்காரத்தை அழித்தவராய் நின்றிருந்தார்.
இருவரும் கண் திறக்க, தீபத்தட்டுடன் விழி நிற்க, லிங்கமும் பார்வதியும் ஒரே சமயத்தில் தொட்டு வணங்க இருவருக்கும் நிறைவாய் இருந்தது.
“அம்மா மருமகளே! உங்க மாமா சொன்னாரு, நீ தான் யாரோ போன்ல பேசுறத கேட்டுட்டு அவருகிட்டையும் கதிரவன்டையும் சொன்னியா ஆத்தா ?
அன்னைக்குக் கண்ணாலத்து நீ எல்லாரு முன்னாடி துணிச்சலா பேசுனது எனக்குச் சுத்தமா பிடிக்கல. ஆனா நீ இன்னைக்குத் துணிச்சலா இறங்கி விசாரிக்கச் சொன்னதுனாலதான் நான் அதே கௌரவத்தோட நிக்கிறேன்.
உனக்கு என்ன வேணும்னு கேளு ஆத்தா..” என உணர்ந்து சொல்ல,
விழி எதுவும் கேட்காமல் அமைதியாக நின்றாள்.
லிங்கம் பார்வதியை கேள்வியாகப் பார்க்க, அவரோ அவசரமாய், “அது ஒன்னும்மில்லங்க, உங்ககிட்ட நேரடியா பேசுனதில்லைல. அதாங்க புள்ள தயங்குறா…” எனக் கூற, பெருங்குரலெடுத்து சிரித்தவர், புன்னகையுடன்,
“யாரு…உம்ம மறுமவளுக்குத் தயக்கம்? அந்தப் பிள்ளை நேரடியாதான் பேசுனதில்ல. ஆனா நேரா என் காதுக்கு வரது போலத்தான் பேசும். என்கிட்டே வந்த மாற்றம் ஒரே நாளுல வந்ததில்லை பார்வதி. உம்மருமவ வந்த நாளுமொதலா கொஞ்ச கொஞ்சமா வர வச்சது.
நீ சொல்லு ஆத்தா… உனக்கு என்ன வேணும். எதாவது கேளு ” என மீண்டும் வலியுறுத்த, அவரின் சிரிப்பொலியில் மச்சக்காளையும் பாரிஜாதமும் உள்ளிருந்து வெளியே வந்திருந்தனர்.
காதில் புகைச்சலோடும் நெஞ்சில் எரிச்சலோடும் பார்த்துக்கொண்டிருக்க, விழி வாய் திறந்தாள்.
“நான் கேக்குறத தருவீக தானே ?”
“கண்டிப்பா ஆத்தா..என்னனு சொல்லு”
“இன்னைக்கு ஒரு பெரிய ஆபத்தில் இருந்து தப்பிச்சிருக்கீங்க. ரொம்பப் பெரிய கெட்டது நல்லதா முடிச்சிடுச்சு. இன்னைக்குக் காலையில உங்களுக்குத் தண்ணி கொடுத்து வழி அனுப்புனது அத்த தான்” எனக் கூற,
பாரிஜாதமோ, “அப்போ இவ கொண்டு போய்க் கொடுக்கலியா ?” என யோசனையாகப் பார்க்க, லிங்கமோ, “மேல சொல்லு மா” எனக் கூற,
விழி தொடர்ந்தாள். “அத்த கொடுத்ததுனால தான் இன்னைக்கு எல்லாமே நல்லதா நடந்திச்சுன்னு நினைக்கவேணாம் மாமா. அதுக்கும் அத்தைக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல” எனக் கூற, லிங்கத்திற்கு அதிர்ச்சி. அத்தை அத்தை என்று அவரின் பின்னே சுற்றுபவள் ஏன் இப்படிப் பேசுகிறாள் என்று.
பாரிஜாதத்திற்கும் மச்சக்காளைக்கும் கூடக் குழப்பம். “என்ன சொல்ல வரா இவ?”
மேற்கொண்டு அவர்களை யோசிக்க விடாமல் அவளே தொடர்ந்தாள்.
“ஆமா மாமா! நடந்த நல்லதுக்கும் அத்தை தண்ணீ கொடுத்ததுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல. இன்னைக்கு நீங்க அப்படி நம்புனா, நாளைக்கே சின்னதா தப்பு நடந்தாலும் அதுவும் அத்த முன்னாடி வந்தது தான் காரணம்னு நினைக்கத் தோனு.
நடக்குற நல்லதுக்குக் கெட்டதுக்கும் யாரு முகத்துலையும் முழிச்சிட்டுப் போறது காரணம் இல்ல மாமா. சில மனுஷங்க பண்ற சதியும், அத உடைக்கிற வித்த தெருஞ்ச மதியும், இத தாண்டின விதியும் தான்.
இதுக்கு எந்த வகைளையும் அத்த காரணமாகமாட்டாங்க மாமா. ஆனா எனக்குத் தெருஞ்சு இந்த நிமிஷம் கூட உங்க நல்லத பத்தியே யோசிச்சுகிட்டு இருக்கிறது அத்த மட்டும் தான். இத்தனை வருசமா அவுங்க எவ்ளோ மனசு நொந்து போயிருந்தால், அவுங்க தண்ணீ கொடுத்து எதுவும் ஆகிட கூடாதுனு ஒரு நாள் முழுக்கப் பட்டினியா பூஜை அறையிலையே இருந்திருப்பாங்க.
இந்த நிமிஷம் வர அத்த நாக்குல பச்சை தண்ணீ படல மாமா” எனக் கூறியவள், ஓர் இடைவேளை விட்டு, “எனக்காக யோசிங்க மாமா. அது போதும்” எனக் கூற, அவரோ, “அத்தைய சாப்பிட வை மா” எனக் கூறியபடி யோசனை படிந்த முகத்துடன் வெளியேறினார்.
“இதுவும் போச்சா…” என்ற மனநிலைதான் பாரிஜாதத்திற்கு. அனைத்திற்கும் காரணமான விழியை என்ன செய்யலாம் என்ற வெறியுடன் முறைத்தபடி அங்கிருந்து சென்றார்.
அதே சமயம், வெளியே சென்ற கதிரவனின் மனதிலும் முழுவதுமாக விழியின் சிந்தனைகளே நிறைந்திருந்தன.
“நான் எப்படி நடந்துப்பேனு கூட இவளுக்குத் தெரியுமா ? முருகேசன் சித்தப்பாகிட்ட நான் கோபப்பட்டா என்ன சொல்லணும்னு சொல்றவரைக்கும் டியூஷன் எடுத்துருக்கா ? ஆமா ஆமா சின்ன வயசுலயே ஆ….வூனா குச்சிய எடுத்திட்டு அடிக்கக் கிளம்பிடுவா!
பெரியவளாய் திருந்தியிருப்பானு பார்த்தா, அடுத்தவங்களைத் திருத்துறதுக்குனே அவதாரம் எடுத்து வந்தவளை போலச் சுத்துறா.
எல்லாம் சரி. என்னை இவ்ளோ புருஞ்சு வச்சிருக்கா. உயிரையும் வச்சிருக்கா…பாக்குற கேக்குற எல்லாருகிட்டையும் என்மேல உள்ள காதல ஸ்பீக்கர் இல்லாம கத்துறா. ஆனா என்கிட்ட ஏன் இன்னும் சொல்லவே இல்ல ?
தேடி தேடி சட்ட வாங்கிருக்கா, ஓடி ஓடி வாட்ச் வாங்கிருக்கா… இதெல்லாம் சக்கரைக்கும் பாண்டிக்கும் தெரியுமா தெரியாத ? தெரிஞ்சிருக்கணும். இரண்டையும் அவனுங்க தானே என்ட கொடுத்தானுங்க.
சக்கர….பாண்டி…. இந்தா வரேண்டா” எனக் கூறியபடி அவர்களை நோக்கி நடைபோட்டான்.

Advertisement