Advertisement

“சொல்லுங்க அண்ணே”
சிறி தயக்கத்தோடு, “நம்ம விழியோட வீட்டுலயும் பேசுங்க. அன்னைக்கு நடந்ததுல எனக்குச் சுத்தமா சம்மதம் இல்ல. இந்தப்புள்ள முகத்தைப் பார்த்து கூடப் பேச பிடிக்கல. ஆனா இந்தப் புள்ள வந்த இத்தனை மாசத்துல எம்புட்டோ மாறிடுச்சு.
இப்ப கூடத் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போனதுக்குக் காரணம் எம்மருமவளும் தான். அப்படியிருக்க, அது மட்டும் பெத்தவங்ககூடப் பேசாம ஒத்தையா நிக்கிது.
ஏதாவது ஆகவைக்க முடியுதான்னு கேளுங்க” எனக் கூற, முருகேஷன்க்கு அப்படியொரு நிறைவு.
லிங்கமா இப்படிப் பேசியது… என்றதொரு பிரம்மிப்பு. கதிரவனின் மீதே கருத்தை வைக்காதவர் இப்போது அவனின் மனைவியை மருமகளாகவும் அவளின் துக்கத்தைத் துடைத்தெறிய துடிப்பதையும் பார்த்துப் பிரமித்துப் போனார்.
விழியின் தைரியமும் நம்பிக்கையும்தான் இதற்கெல்லாம் காரணம் என்பதைக் கண்கூடாய் கண்டவர், மானசீகமாய்க் கந்தசாமியிடம், “மாப்பிள்ளை, உன் பொண்ணு ஜெயிச்சிட்டா” எனச் சொல்லிக்கொண்டார்.
மகிழ்வுடனே சொல்லிக்கொண்டு புறப்பட, லிங்கம் சென்று அசதியில் படுத்திவிட, பாரிஜாதம் மச்சக்காளையைப் பிடித்துக்கொள்ள, பார்வதி மருமகளைப் பிடித்துக்கொண்டு அவரவர் அறையில் நடந்ததைக் கேட்க, விழியின் பார்வையிலும் மச்சக்காளையின் பார்வையிலும் காட்சிகள் விரிய தொடங்கின.
கதிரவனுக்கு அழைத்த விழி, அது பயனற்று போகவே அடுத்ததாக, முருகேஷனிற்கு அழைத்துத் தான் கேட்ட அனைத்தையும் தெரிந்த கொண்ட விஷயத்தையும் கூறி, ஏதாவது பண்ணும்படி கூற, அவரோ உடனடியாகக் காரியத்தில் இறங்குவதாய்க் கூறினார்.
தனக்கு நம்பிக்கையான இருவரை அழைத்துக்கொண்டு பாரிஜாதம் குறிப்பிட்ட பகுதியிற்குச் செல்ல, அது ஊருக்கு ஒதுக்குப்புறம் என்பதாலும் அங்கு ஒன்றோ இரண்டோ என்ற எண்ணிக்கையிலையே வீடு இருக்க, எளிதாகக் கண்டறித்துவிட்ட முருகேசனும் அவரது ஆட்களும் உள்ளே நுழைந்தனர்.
திடீரென்று இவர்கள் நுழையவும் அமர்ந்திருந்த இடத்திலிருந்து வெளிறிய முகத்துடன் ஒருவன் எழ, அவனை முருகேஷனிற்கு எங்கையோ பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட, புருவங்களைச் சுருக்கி அவனைக் கூர்ந்து பார்த்து ஓரிரு நொடி யோசிக்க, சட்டென்று அவருக்குப் பிடிப்பட்டது.
“ஏய்…நீ அந்தக் குவாரி பரிசோதிக்கிற ஆபீஸ்ல வேல பாக்குறவன் தான? உன் பேரென்ன ? ஆ…மாரிமுத்து. நீ என்னடா இங்க பண்ற ?” என அதட்டல் போட, அவனோ, “என்ன நீங்க ? நான் என்னோட வீட்டுல இருக்கேன். உள்ள வந்து என்னையே ஏன் இங்க இருக்கன்னு கேக்குறீங்க ? நான் கவர்மெண்ட் உத்தியோகக்காரன். என்ன இப்படி மிரட்டுனா என்ன ஆகும்னு தெரியும்ல ?” எனத் துணிச்சலாகவே பேச, முருகேஷனோ, “அத பொறவு பார்த்துக்கலாம். இது உன்னோட வீடு இல்லனு எனக்குத் தெரியும். இது லிங்கத்தோட வீடு. உன்னோட பொய்யையும் பொறட்டையும் வேற எங்கனாவது வச்சுக்கோ. இப்ப என்ன சங்கத்தினு சொல்லு” என மிரட்ட, “இதோ பாருங்க. ஊருல பெரிய மனுஷனா இருக்கீங்க. இது ஒதுக்குப்புறம்தே.
ஒத்துகிறேன். ஆனா இரெண்டு மூணு வீடாச்சு இருக்கே. நீங்க இங்கன என்னை அடைச்சு வச்சு அடிக்கிறீங்கன்னு சொல்லுவேன். கத்துவேன். பஞ்சாயத்தைக் கூட்டுவேன்” என அவனும் பயத்தை உள்ளே ஒளிந்துகொண்டு வெளியே தைரியமாய்ப் பேசுவதாகக் காட்ட, முருகேசனும் அவனுடன் வந்த ஆட்களும் ஓரிரு நொடி தயங்கினர்.
அவர்களுக்கோ, “முழுதாக என்ன பிரச்சனை என்று தெரியாத நிலை. வீட்டினுள் யார் இருக்கிறார்கள் ? எதுக்காக இருக்கிறார்கள் ? நாளை வரப்போகின்ற வழக்கிற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்று தெரியாமல் இவன் மீது கை வைப்பது சரியாகுமா ?” என்ற கேள்விகள் வர, அதைத் தனக்குச் சாதகமாக்கி கொண்டவன், “என்னங்க கேட்க பாக்க ஆளு இல்லனு நினைசீங்களா ? மொத வெளிய போங்க.
போங்கன்னு சொல்றேன்ல…யோவ் மொத வெளிய போய்யா…” எனச் சற்றும் முருகேசனின் தகுதியையோ வயதையோ மனதில் கொள்ளாமல் உரக்க பேச, சட்டென்று அவன் கன்னத்தில் பளார் சப்தத்துடன் இடியொன்று இறங்கியிருக்க ஒரே அடியில் சுருண்டு விழுந்தான்.
“யாருகிட்ட சௌண்டு விடுற? சத்தம் வந்துச்சு மொத்தமா உன்ன முடிச்சிடுவே” என்ற கர்ஜனையோடு நின்றவன் கதிரவனே.
“கதிரவா நீ எங்கப்பா இங்க?” என முருகேசன் வினவ,
“வெளியூர் போயிருந்தே சித்தப்பா. நாங்க வந்த பஸ் வழக்கம்போல ரிப்பேர். பாதில ஆளுங்கள இறங்கி தள்ள சொன்னாங்க. அதுக்கு இறங்கி நின்னப்ப தான் நீங்க இவுங்ககூட இந்தப்பக்கமா போனதப் பார்த்தோம்.
நீங்க என்ன கவனிக்கல. மொத சாதாரணமா விட்டுட்டேன். பொறவு நீங்க போற வேகத்தைப் பார்த்து சரியா படல. ஆள்நடமாட்டம் கம்மியா இருக்கப் பக்கட்டு இம்புட்டு அவசரமா போறீங்களே என்னவோ ஏதோனு தான் வந்தேன்.
பார்த்தா வாய் சௌடாலா பேசிட்டு இருக்கான் உங்களையே. பார்த்துகிட்டு இருக்கீங்க பேசுனா வாய ஒடச்சு அனுப்பியிருக்க வேணாமா ?” எனக் கதிரவன் கூறிய தொனியில் விழுந்திருந்தவன் மிரண்டு போனான்.
“என்னங்க ஆள கூட்டி வந்து ரௌடி தன பண்றீங்களா? வீடு பூந்து அடிக்கிறீங்களா ? வில்லத்தனமா பேசுனா நாங்க பயந்து இல்லாத ஒன்னு ஒத்துக்குவோமா ? ” எனக் கேட்டவன் குரலில் பயம் மட்டுமே இருந்தது.
இலேசாகச் சிரித்த கதிரவன், “ரௌடியா ? வில்லத்தனமா ? நான் ஹீரோனுல நினைச்சிருந்தேன் ? என்னங்கடா கெட்டப்ப மாத்த வைக்கிறீங்க ? சரி நீ பயப்படறனா, நான் வில்லனா இருக்குறதுல தப்பொன்னும் இல்லையே ” எனக் கேட்டபடி மீண்டும் அவனை ஒர் அடி அடிக்க, “ஐயோ வேணாம் ! அடிக்காதீங்க சார். நான் உண்மைய சொல்லிடறேன்” எனக் கதற, “டேய்! அப்போ நீ என்ட எதுக்கு அடிவாங்குறனு தெரியாமலே அடிவாங்குனியா ? நான் உன்ன அடிச்சது சித்தப்பாவை மரியாதை இல்லாம பேசினதுக்கு. மொத அவருகிட்ட மன்னிப்பு கேளு. பொறவு அவரு கேக்குறதுக்குப் பதில் சொல்லு” எனக் கூற முருகேசன் ஆச்சர்யமாகக் கதிரவனைப் பார்த்தார்.
“கதிரவா! அதுக்கா அடிச்ச ? இவன எதுக்கு விசாரிக்கிறோம்னு உனக்குத் தெரியாதா ?” என முருகேசன் வினவ,
“இல்ல சித்தப்பா! நீங்க பதட்டமா வந்தத பார்த்து பிரச்னையோனு வந்தேன். இவன்லாம்  ஆளுன்னு உங்கள பேசுறான். அதான் வாய் பேசுறதுக்கு முன்னாடி கை பேசிடுச்சு” எனக் கூற,
முருகேசன் மனதால் நிறைவாக உணர்ந்தார்.
“கேளுங்க சித்தப்பா! அவன்ட என்ன கேட்கணுமோ கேளுங்க. நான் வெளில இருக்கேன்” எனக் கூற, கைபேசியின் அழைப்பு ஓசை வர அனைவரின் பார்வையும் கைபேசியின் சொந்தக்காரனாய் அங்கே புதிதாக நின்றவனின் மேல் பதிய, முருகேசன் கதிரவனிடம், “யாருப்பா இது ?” என வினவ ,”பண்ணைக்குக் காமெரா பொறுத்த கூட்டியாந்தே சித்தப்பா” எனக் கூற, யோசனையாக முருகேசன், “இவரு வெளில யார்டையும் சொல்லிட மாட்டாருல்ல. ஏனா இப்போதைக்கு இது ரகசியமா இருக்கணும்” எனக் கேட்க, “அப்படி என்ன விஷயம் சித்தப்பா ? “
“அத இனிமேல் தான் இவனு சொல்லணும். எனக்குக் கிடைச்ச தகவல் படி, இவன் ஏதோ பொய் சொல்ல போறான். அந்தப் பொய்யால குத்தமில்லாத மனுஷனோட மறுவாத போகபோது. அதுவும் சும்மா இல்ல, வழக்கு விஷயம்னு தெரியவந்தது. அதா ஐயா”
“ஓ…அவ்ளோ பெரிய ஆளா இவன். சரி இப்ப கேளுங்க, அவன் பதில் சொல்லுவான். இல்ல நான் சொல்லவைக்கிறேன். ஹா..சித்தப்பா நீங்க எதோ கோர்ட் கேஸ்னு சொன்னீங்களே. அப்போ இவன்கிட்ட வாயால கேட்டா சரி வராது…” எனக் கூறியபடி தலைமுடியை கோதியபடி சிந்திக்க, அதற்குள் அடிவாங்கியவனோ, “ஐயோ சார்..வேணாம் நானே சொல்லிடறேன். வாயால கேட்டாலே சொல்லிடறேன். கையால வேணாம் சார்” எனப் பதற, சின்ன அளவான சிரிப்புடன், “வர வர ஹீரோவோட வில்லனுக்குத்தான் பயப்படறாங்க போலவே” எனக் கூறிவிட்டு, “சித்தப்பா! இவன்ட நீங்க என்ன கேட்கணுமோ கேளுங்க. இவரு ரிக்கார்ட் பண்ணிடுவாரு. ஒருவேளை இவன் மாத்தி பேசுனா, இந்த ஆதாரம் மட்டும் நம்ம கைல இருக்கும். இவன் அதுக்குப் பொறவு இருக்கணும்னு அவசியமில்லை” எனக் கூறியவன் குரல் உயரவில்லை. அடக்கப்பட்ட தொனியிலையே இருந்தது. ஆனாலும் அவன் சொல்லிய விதம் எதிரிலிருந்தவனின் முதுகுத்தண்டை சில்லிட வைத்தது.
“வேணாம் சார், நானே சொல்லிடறேன். நாளைக்கு ஒரு குவாரி கேஸ் வருது. அத சரிபார்த்து கோர்டுக்குள்ள குடுக்கற ஆளுங்கள்ள நானும் ஒருத்தன்
என்கிட்ட கொஞ்சும் காச கொடுத்து, குவாரி முதலாளிக்கு எதிரா பேப்பர் ரெடி பண்ண சொன்னாங்க.
அந்தக் குவாரில சட்டவிரோதமோ அளவுக்கு மீறி மலையை வெட்டிருக்காங்கனும் அது வெளிய தெரியாம இருக்க என்னை அவனுங்க ஆளுங்க மிரட்டுனாங்கனும் நான் பொய் சொல்லணும்.
ஆனா உண்மைல அப்படி எதுவும் நடக்கல. நடந்தமாதிரி நான் சொல்லணும்னு அவுங்களோட சொந்தக்காரரே பணம் கொடுத்து தங்க வச்சிருக்காரு. நான் சாட்சி சொல்லாம ஓடிட கூடாதுனு…” எனக் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே, கதிரவனின் அலைப்பேசி அடிக்க, அது வெளிநாட்டு எண்ணை காட்டியது.
சமிங்கையில் முருகேஷனிடம் கூறிவிட்டு வெளியே பேச செல்ல, முருகேசன் அவனைச் சொல்லு என்பதாய் மிரட்ட, “அந்த மச்சக்காளை பெரிய வீட்ல இருக்காரே அவரு என்னை இங்க தங்க வச்சிருக்காரு” எனக் கூறி முடிக்க, முருகேசன் அதிர்ந்தார். எதுவோ பெரிதாகத்தான் இருக்கிறது என்றாலும் மச்சக்காளையும் பாரிஜாதமும் உண்ட வீட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும் மஹா பாதகச் செய்யலை செய்வார்கள் என்று முருகேசன் எண்ணவே இல்லை.
முழுவதுமாக அங்கே நடப்பது முருகேஷனிற்குத் தெரியாவிட்டாலும், லிங்கத்தை அண்டி பிழைப்பை ஓட்ட ஏதேதோ தில்லு முல்லு செய்கிறார்கள் என்று எண்ணியிருக்க இப்படி லிங்கத்தை வழக்கில் மாட்டிவிட்டு அவரை ஒரேயடியாக விலக்க பார்ப்பார்கள் என்று எண்ணியிருக்காததால் வந்த அதிர்ச்சியே அவருக்கு.
“அப்போ இந்தக் குறி யாருக்கு?” என முருகேசன் பதற்றத்துடன் கேட்க, அவருக்கோ இதில் கதிரவனை எதுவும் தாக்கும் திட்டமோ என்ற எண்ணம் வேறு பயத்தைத் தந்தது. முன்பே அவனின் மீது இவருக்கு இனம் புரியாத பந்தம் இருந்த போதிலும் இப்பொது விழியையும் அவன் வாழ்வில் விதி இணைத்திருக்கப் பெண் வீட்டுக்காரராய் கொண்ட இயல்பான எதார்த்தமான பயம் அது.
“அது லிங்கம் அய்யாக்கு” என்று அவன் கூறிய போதினில் இன்னமும் அவரின் அதிர்ச்சி உச்சத்தைத் தொட்டது. அண்ணன் அண்ணன் என்று பேசிக்கொண்டே இப்படியொரு சதியா என்ற எண்ணமே.
“டேய்! ஒன்னு ஒன்னாதான் சொல்லுவியா ? தெருஞ்ச அத்தனையும் மொத்தமா சொல்லுடா” என முருகேசன் மிரட்ட,
“சொல்லுறேங்க. ஆனா எனக்கு ரொம்ப விவரமெல்லாம் தெரியல. அவருக்கு எதிரா நாளைக்குத் தீர்ப்பு வந்துச்சுனா, அந்த வீட்ல இருக்க எதோ பொண்ண இதே காரணம் காட்டி வெளில அனுப்பிடுவாங்கலாம். மறுபடியும் லிங்கம் அய்யாவை வெளில எடுக்குற சாக்குல இவுங்க கை ஓங்குமாம். இது மட்டும் தான் அவரு போன்ல பேசுனதுல இருந்து தெரிஞ்சிச்சு.
வேற விவரம் தெரியலைங்க. சொன்னாங்க. அதுபடி செய்ய ஒத்துக்கிட்டேன்” எனக் கூறிமுடிக்க விழி சரியாக முருகேஷனிற்கு அழைத்திருந்தாள்.
முருகேசன் தான் கேட்டவற்றை அப்படியே சொல்ல, அவருக்குப் புரியாததை அவள் புரியவைத்தாள்.
“மாமா! உங்களுக்குப் புரியலையா ? அவுங்க வெளில அனுப்ப நினைக்கிறது என்னைத் தான். மாமாக்குச் சகுனம் காலம் நேரத்துல ரொம்ப நம்பிக்கை. அத பயன்படுத்திதான் இவனுங்க இம்புட்டு ஆட்டம் போடுறானுங்க. மாமாவை இதுல மாட்டிவிடறது என்ன வெளில அனுப்புறத்துக்காக மட்டுமில்ல, இதுக்குப் பின்னாடி வேற என்னவோ இருக்கு. என்னனு சரியா தெரியல, ஆனா பெருசா எதோவொன்னு இருக்கு.
சரி அவன் எப்படி உண்மைய ஒத்துக்கிட்டான் ? நாளைக்கு மாமாக்கு எதிரா பேசிடமாட்டான்ல ?”
“நீ பயப்படாத பாப்பா, அவன் பேசணும்னு நினைச்சாலும் முடியாது. ஏன்னா கதிரவன் கொடுத்த அடி அப்படி”
“என்ன மாமா சொல்லுறீங்க? அவரு எங்க அங்க வந்தாரு ? அவருக்கு விஷயமெல்லாம் தெரிஞ்சிருச்சா ?”
“இல்லாம விஷயம் தெரியாது. எனக்கு உதவி பண்ணணு வந்தாரு. இவன் உண்மைய சொல்லுறப்ப கதிரவன் போன் பேச வெளில போய்ட்டாரு. அவருகூடப் படம் பிடிக்கிற தம்பி வந்துச்சு. அந்தத் தம்பி இவன் பேசுனதை படம் பிடிச்சிருக்கு” என முருகேசன் கூற,
“அப்படியா…” என ஓரிரு நொடிகள் யோசித்தவள், “சரி மாமா! வெளிய போனவரு உள்ள வந்து விவரம் கேட்டால் மறைக்க வேணாம். சொல்லிடுங்க. ஒருவேளை கேட்காட்டி விட்டுடுங்க. என்னதான் அவருக்கு அவுங்க அப்பாவை பிடிக்கலானாலும் எப்படியோ போட்டும்னு விடுற ஆளு இல்ல அவுங்க. நமக்குத்தான் நாளைக்கு வர பதட்டம். அவுங்களுக்காச்சு வேணாமே!
ஆனா நாளைக்கு அவுங்கள கண்டிப்பா கோர்ட்க்கு வர சொல்லிடுங்க. எப்பவும் எல்லாரும் பிரச்சனைக்குள்ள இருந்து யோசிக்கிறது சரியா வராது.
மூணாவது மனுஷனா யோசிச்சா நமக்குப் பிடிபடாததுகூட அவுங்களுக்குப் பிடிபடும். அதுனால அவுங்கள நாளைக்கு வர மட்டும் சொல்லுங்க. மிச்சத்தை நேர்ல பார்த்து தெருஞ்சுக்கட்டும்” எனக் கூற, முருகேஷனிற்கும் அதுவே சரி என்று பட, அப்படியே செய்தார்.
உள்ளே வந்த கதிரவன் எந்த விவரத்தையும் கேட்கவில்லை. முருகேசன் நாளை சிவகங்கை நீதி மன்றம் வரை வரும்படி மட்டும் கூற சரி என்று விட்டிருந்தான். கதிரவனைப் பொறுத்தவரை லிங்கம் முன்பும் எதையும் தெரியப்படுத்தவில்லை, இப்போதும் அப்படியே. அதனால் அவனிற்கு இதைப் பற்றித் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.
முருகேஷனிற்காக மட்டும் வருவதாக உத்திரவாதம் கொடுத்திருந்தான்.
“ஏன்யா கதிர்! பணத்துக்காகப் பொய் சொல்ல துணிஞ்சவன் நாளைக்கு மாத்தி பேசமாட்டானு என்ன நிச்சய ?” என யோசனையாகக் கேட்க, “நான் பார்த்துகிறேன்” எனக் கூறிச் சென்றான். அதன் பிறகு மாரிமுத்து அவர்களின் கட்டுப்பாட்டில்.
அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மச்சக்காளையால் அதை இனம் காண முடியவில்லை. காரணம் அவனை வைத்திருந்த வீட்டிலிருந்து அழைத்து வந்ததென்னவோ மச்சக்காளையின் ஆட்களே. ஆனாலும் நீதிமன்றம் உள்ளெலாம் சென்று விடவில்லை. லிங்கம் பார்த்துவிட்டால் விபரீதம் என்பதால், வாயிலோடு விட்டு சென்றனர். அவரும் பாரிஜாதமும் போட்டு வைத்திருந்த திட்டம் இல்லயென்றானால் வேறு யோசிக்கக் கூடும் என்றே விழி நினைத்து அவர்கள் போக்கிலே விடும்படியாக முருகேஷனிடம் கூறியிருந்தாள்.
மாரிமுத்துவிடம், “இதோ பாருடா… இங்க நடந்தது எதுவும் வெளில தெரிய கூடாது. அங்கன போய் மாத்தி எதுவும் சொன்னியாக்கும் அதோட உன் சோலி முடிச்சிடும். நீ பேசுனதையும் படம் பிடிச்சி வச்சிருக்கோம். உன்னோட அரசாங்க உத்தியோகத்துக்கும் வேட்டு வச்சிடுவோம். புருஞ்சு பொழச்சிக்கோ” என மிரட்டி செல்ல, அனைத்திற்கும் சரி சரி என்று மண்டையை உருட்டி வைத்திருந்தான்.
ஆனால் அவனின் பேராசை மூளை இரவில் வேறொரு திட்டம் தீட்டியிருந்தது.
அது என்னவென்றால், நீதிமன்றம் சென்ற பிறகு, தன்னை இவர்கள் உண்மையை மட்டும் கூறும்படியாகச் சொல்லியதை வைத்து மச்சக்காளையிடம் மிரட்டி அதிகப் பணம் பறிக்கலாம், தன்னுடைய உயிருக்கும் அவரிடமே உத்திரவாதம் கேட்கலாம், நிச்சயமாக முருகேசனை எதிர்க்கும் பலம் மச்சக்காளையிடம் இருக்கும் என்று என்னென்னெவோ திட்டம் தீட்டினான். அது மட்டுமில்லாமல், தான் பேசிய பதிவு வெளியே வந்தாலும், தன்னை அடித்ததால் தப்பிப்பதற்காக அவர்கள் சொல்ல சொல்லிதை சொன்னதாகக் கூறிவிடலாம் என்றும் யோசித்து வைத்தான்.
ஆனால் அவனுடைய திட்டங்கள் செயல்படும் முன்னமே செயல் இழந்து போகுமென அவன் எண்ணியிருக்கவில்லை. மச்சக்காளையிடம் செல்வதற்கு இடையே, அவரை நெருங்கும் முன்பே, “அப்பா….” என்ற அழைப்புடன் ஒரு சிறுவன் ஓடி வந்து மாரிமுத்துவின் கால்களைக் கட்டிக்கொள்ள, மாரிமுத்து ஓர் நொடி அதிர்ந்து பின்பு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “நீ எங்கட இங்க வந்த ? யாருகூட வந்த ?” எனப் பதற்றமாகக் கேட்க, அவனோ, “அம்மா, தங்கச்சி பாப்பா எல்லாரும் வந்துருக்கோம். நீ படத்துல வர ஹீரோவாட்டம் இங்க உண்மைய சொல்ல போறியாமே!
ஹீரோலம் எப்படிப் பயப்படாம உண்மை பேசுவாங்களோ அப்படிப் பேச போரியாமே” எனக் கூற, இவன் குழப்பத்துடன் முழிக்க, மாரிமுத்துவின் கைகளில் இருந்த சிறுவனைக் கதிரவன் தன் கைகளில் வாங்கிக்கொண்டான்.
அப்போதே மாரிமுத்துவிற்குப் புரிந்தது.
கதிரவன் அவனிடம் குரல் உயர்த்தவில்லை, மிரட்டவில்லை, ஆனால் மாரிமுத்துவை அச்சமும் கொள்ளவைத்தான் தன் செய்யலை நினைத்து வெட்கமும் படவைத்தான்.
“என்ன மாரிமுத்து? நான் வில்லன்னு நீ சொல்லிட்ட. சரி. ஆனா உன்ன உன் மகன் ஹீரோவா நினைக்கிறான் போலவே ?” எனக் கேட்க, அவனுடைய மகன் முந்திக்கொண்டு, “ஆமா மாமா! எங்க அப்பா ஹீரோ. பொய் சொல்லமாட்டாரு. எல்லாத்தையும் சரி பண்ணுவாரு. நிறைய மிட்டாய் வாங்கித் தருவாரு” என அடுக்கிக்கொண்டே போக, “அப்படியா…” எனச் சிறுவனுடன் சரிக்குச் சரியாகப் பேசியபடி, “குட்டி பையா! நீ அம்மாக்கிட்ட இருக்கியா ? நானும் அப்பாவும் பேசிட்டு வந்திடறோம்” எனக் கூற, அவன் சென்றுவிட்டான்.
“இதோ பாரு. உன்னோட குடும்பத்துக்கிட்ட நீ நல்லது பண்ண போற, அத பார்க்க வாங்கனு தான் சொல்லி கூட்டியாந்தே. உன் பையன் முன்னாடி இன்னைக்கு நீ ஹீரோவா வில்லனானு முடிவு பண்ணிக்க.
உனக்குப் பணம் தேவை, உன் குடும்பத்துக்காகத்தானே. உன்னோட புள்ளைங்க முன்னாடி உனக்கு இருக்க வேண்டியது மரியாதை. பணத்தை விட மரியாதைக்கு விலை அதிகம்” எனக் கூற,
“ஐயோ சார்…என்ன மன்னிச்சிடுங்க சார். நிசத்துக்குமே இப்பவரைக்கும் உங்களுக்குத் துரோகம் பண்ணத்தான் வந்தே. ஆனா சத்தியமா இனி பண்ணமாட்டேன்.
எம்மவனுக்கு முன்னாடி பணங்காசு ஒன்னு உசத்தியில்ல. நான் எம்புள்ள மேல சத்தியமா லிங்கம் அய்யாவோட உண்மையான தகவலை கொடுத்திடறேன். வேற எதுவும் சொல்லமாட்டேன். இப்படி என்ன பொய் சொல்ல சொன்னாங்க அப்படி இப்படினு எதுவும் சொல்லமாட்டேன். போய் எல்லாமே முறைப்படி நடக்குதுன்னு மட்டும் தான் சொல்லுவேன்.
என்ன மாத்தி பேச சொன்னவரை பத்தி கூண்டுல ஏறி என்னால எதுவும் சொல்லமுடியாது. வெளிலயும் அவர காட்டிக்கொடுக்க முடியாது. என்ன உசுரோட பொதச்சிருவாரு, அந்த ஆளுக்கு விஷயம் தெரிஞ்சால்” எனப் பயத்துடன் கூற, கதிரவனோ சட்டென்று சுதாரித்தான்.

Advertisement