Advertisement

ஹீரோவோ வில்லனோ  – 29
லிங்கத்தை வழி அனுப்பிய பாரிஜாதம் வன்மம் கலந்த முறுவல் இருந்தபோதும் இரண்டு மனம் கொண்டு தவித்தபடி அப்படியே கொல்லைக்கு வர, அதுவோ கேட்பார் யாருமின்றித் தனித்துக் கிடந்தது. எப்போதும் கட்டிக்கிடக்கும் மாடும் கன்றும் கூட இல்லாமல் கிணத்துமேடும் சலவைக்கல்லுமென வெறிச்சோடி காணப்பட்டது.
யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மச்சக்காளைக்கு அழைத்தவர், மறுபுறம் அழைப்பை ஏற்றவுடன், “ஏங்க ? எல்லாம் சரிதான். ஆனா எங்க அண்ணே என்ன இன்னும் நம்புது. அத போய் வம்புல மாட்டிவிடலாமா ?” எனக் கேட்க, மறுபுறம் அவர் என்ன கூறினாரோ , மீண்டும், “நிசமாதான சொல்றீங்க ? அந்த ஆளு சாட்சி சொல்லி அண்ணனுக்குத் தூக்குத் தண்டனை கொடுத்துட்டா .?” எனக் கூற, மீண்டும் மச்சக்காளை ஏதோ கூற, பாரிஜாதமோ, “நான் சுத்தி பார்த்துட்டேன். அக்கம் பக்கம் யாரும் இல்ல. அதுனால பேசுங்க. இப்போ இப்படி ஆனாலும் கண்டிப்பா அண்ணனை வெளில கொண்டு வந்திடலாம்ல ?” என மீண்டும் ஊர்ஜித படுத்த கேட்கவும், மீண்டும் மச்சக்காளை என்ன சொன்னாரோ தெரியவில்லை. அதற்குப் பாரிஜாதம், “அப்போ சரிங்க! நீங்க ஆகவேண்டிய காரியத்தைப் பாருங்க! நான் நம்ம பெத்துவச்சிருக்க முந்திரிக்கொட்டையை உங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு வரேன். என்னமோ காலேஜ் போகாம பரீட்சைக்கு மட்டும் போய்ப் படிக்கிற படிப்பு இருக்குதாமே, அத காரணம் காட்டி விசாரிக்கச் சொல்லி அனுப்பி வைக்கிறேன். இல்லனா நாளைக்கு எங்க அண்ணே கிளம்புறப்ப, அது போய் முன்னாடி நின்னு காரியத்தைக் கெடுத்திடும்” எனக் கூறினார்.
மறுபுறம் மச்சக்காளை ஏதோ கூறிவிட்டு அழைப்பை துண்டிக்கப் போக, “ஏங்க இருங்க இருங்க வச்சிடாதீங்க, மேற்கு வயலு வீட்டுக்கு சோறும் ஆனமும் (குழம்பு) கொடுத்து விடணுமா ? அவனுக்குச் சாப்பாடு போடலைனு மாத்தி பேசிட போறான்” எனக் கூற ,மச்சக்காளை என்னவோ சொல்ல, “சரிங்க! பாத்து சூதானமா பண்ணுங்க”
எனக் கூறியபடி அழைப்பை துண்டிக்க, கிணற்று மேட்டிற்குப் பின்புறம் அமர்ந்திருந்த விழிக்குப் பேரதிர்ச்சி.
பாரிஜாதம் பேசுவதைக் கேட்கவோ இல்லை பேசுவார் என்று யூகித்ததோ அவள் வரவில்லை. அவளுக்கோ அவளின் கவலை. முன்பெல்லாம் கதிரவன் பேசுவதற்கு ஏதாவது வெறுப்பாகவாது பதில் கூறிக்கொண்டிருந்தான். இப்போதோ என்ன கூறினாலும் பெரிதாக எந்தப் பலனும் இல்லை. இன்னமும் தான் என்ன தான் செய்ய வேண்டும் என்ற சுய அசலில் ஈடுபட்டிருந்தாள். ஆனால் அவள் கவலை கொள்ளும் அளவிற்கு ஒண்ணுமில்லை. காரணம் அவள் பேசுவதைக் கதிரவன் ரசிக்கத் தொடங்கியிருந்தான். அது அவளுக்குத் தெரியாமல் இருக்க அவளோடு பேசுவதைக் கொஞ்சம் தவிர்த்தும்கொண்டிருந்தான். அதே சமயம் அவனே அவனிற்கு வேலியும் போட்டுக்கொண்டான். இவள் என் மீது பழி போட்டுத் திருமணம் செய்துகொண்டவள் என்ற அவனின் மனசாட்சியின் குரலும் மீண்டும் மீண்டும் அவனுள் ஒலிக்கத் தவறவில்லை..
இவள் கதிரவனைப் பற்றிய சிந்தனையில் கிணற்றுக்குப் பின்புறமாக அமர்ந்து யோசித்துக்கொண்டிருக்க, இதை அறியாமல் பாரிஜாதம் மச்சக்காளையுடன் பேசிக்கொண்டிருக்க, அனைத்தும் கேட்டுவிட்ட விழி முதன்முறையாகக் கலவரமானாள்.
“இவுங்க இந்த அளவுக்குப் போவாங்கனு நான் கனவுளையும் நினைச்சுக்கூடப் பாக்கல. ஏதோ தூக்கு கீக்குனு பேசுறாங்க. விஷயம் பெருசுனு புரியுது. ஆனா என்னனு புரியலையே” என யோசித்தபடி அடுக்களையில் இருந்த பார்வதியை தேடி போனாள்.
“அத்த நாளைக்கு மாமாக்கு எதாவது வித்தியாசமா சமைக்கலாமா?” என மெல்ல தூண்டில் போட, அவரோ, “இல்ல விழி! நாளைக்கு வேணாம். மாமா நாளைக்குச் சிவகங்கை வரைக்கும் போவாங்க. வரதுக்குப் பொழுது சாஞ்சிடும்” எனக் கூற,
“சிவகங்கைல என்ன இருக்கு அத்த ? அங்கையும் நமக்கு நிலம் புலம் இருக்கா ?”
“இல்ல விழி, நமக்குச் சொந்தமா குவாரி ஒன்னு இருக்குதுல. அதுல என்னவோ கல்லு வெட்டி எடுக்குறது சம்மந்தமா வழக்கு நடக்குது. அம்புட்டு தான் தெரியும்”
“என்ன? கேஸ் நடக்குதா ? என்ன அத்த சொல்றீங்க ? நம்ம மேல எதுவும் தப்பு இருக்கா ?” எனப் பதற்றத்துடன் கேட்க,
“இல்ல ஆத்தா! நீ பதறாத. உங்க மாமாக்கு வீட்டுக்குள்ள தான் தங்கச்சி பாசத்துல நியாயம் தெரியாது. ஆனா அரசாங்கத்தை ஏமாத்துற வேலையெல்லாம் செய்யமாட்டாரு. அதுனால தான் ஊர் தலைவரா இம்புட்டு வருஷம் நீடிக்க முடியுது” எனக் கூற, விழிக்கு முகம் தெளியவில்லை.
அவள் மனமோ, “அவரு பண்ணமாட்டாரு. ஆனா கூட ஒன்னு தங்கச்சின்னு இருக்குதே.  என்ன சதி திட்டம் போட்டிருக்கோ” என எண்ணியபடி, மெல்ல அங்கே இருந்து விலகியவள், பெரிய யோசனைக்குப் பின் கதிரவனிற்கு அழைக்க அவனோ அப்போது தான் வெளியூருக்கு சென்றுவிட்டு வந்துகொண்டிருந்தான்.
அழைப்பது விழி என்று தெரிந்ததும் அன்று போல இன்றும் எதுவோ என வேகமாக ஏற்றுக் காதிற்குக் கொடுத்து, “எங்க இருக்க?” என்று வினவ, “வீட்லங்க” என்று சொல்லிய மறுநிமிடம் கதிரவனின் மனது, “ஒண்ணுமில்ல! ஆனா எதுக்குக் கால் பனின்னாள் ?” என யோசனையோடு, அதற்குள் அவனுக்கு இன்னொரு அழைப்பும் வர, விழி என்ன சொல்ல வருகிறாள் என்பதைக் கேட்கும் பொறுமை அற்றவனாய், “இதோ பாரு! முக்கியமான வெளிநாட்டு ஆர்டர் கால். எதுனாலும் அப்புறம் பேசு ” என அவளின் பேச்சிற்குச் செவி கொடுக்காமல் சட்டென்று வைத்துவிட, விழிக்கோ முதன் முறையாக அவன் மீது கோபம் வந்தது.
*
மறுநாள் பொழுது எப்போதும் போல விடிந்தது. பாரிஜாதத்தின் திட்டத்தை அறியாமல் லிங்கம் வெள்ளை வேட்டி சட்டையில் எப்போது போலக் கம்பீரமாகவே கிளம்பிக்கொண்டிருந்தார். சாந்தினியையும் மாறனையும் நேற்றே படிப்பை காரணம் பிடித்து மச்சக்காளையின் அம்மாவீட்டிற்கு அனுப்பிவிட்டிருந்தார் பாரிஜாதம். கரெஸ்பாண்டென்சில் படிப்பை தொடருவது பற்றி விசாரிக்க அனுப்பிவைத்திருந்தார். திருமணத்திற்குப் பிறகு மாறனை விடுத்துக் கல்லூரில் தங்கி அவள் படிப்பை தொடர பிரியப்படாததால் அதே நேரம் படிக்கவும் வேண்டும் என்று எண்ணியதால், இந்த வழியை யோசனையாகக் கூறியிருக்க, அதை இந்நேரத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பாரிஜாதம் அனுப்பிவைத்தார்.
சரியாக அவர் கிளம்புவதைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, கிளம்புகிற நேரம் மெல்ல பார்வதியிடம் சென்றவர், “அண்ணி! நான் அண்ணனுக்காக வேண்டிக்கக் கோவில் வர போயிட்டு வரேன். வெளில போற நேரத்துல உங்க முகத்தைக் கொண்டி போய்க் காமிச்சுப்பிடாதீங்க. உங்க மருமகளை வழி அனுப்ப சொல்லுங்க. நான் வரேன்” எனக் கூறி பார்வதியின் பதிலுக்குக் காத்திராமல் பின் வாசல் வழியாகச் சென்றுவிட, அதைச் சற்று தள்ளி நின்று கவனித்துக்கொண்டிருந்த விழி, பார்வதியிடம் வந்து, “அத்த ! நான் என்ன சொன்னாலும் கேப்பீங்களா ?” எனத் திடீரென்று கேட்க, இன்று அனைத்தும் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று யோசித்தபடியே, “சொல்லு ஆத்தா” எனக் கூற, விழி சொன்னாள். பார்வதி அதிர்ந்தார்.
“ஆமா அத்த! இன்னைக்கு நீங்கதான் தண்ணீ கொடுக்கப் போறீங்க, வழி அனுப்பவும் போறீங்க” என முடிவாய் சொல்லிவிட, வேறு வழி இல்லாமல் பயத்தோடு லிங்கம் முன்னிலையில் செல்ல, லிங்கம் பார்வதியை பார்த்து ஒரு நிமிடம் அப்படியே நின்றார்.
அவர் அப்படியே நிற்கவும் பார்வதிக்குள் பயம் தொற்றிக்கொள்ள, அவரது கைகள் நடுங்க தொடங்கியது. அதைக் கவனித்துவிட்டார் என்ன நினைத்தாரோ பாரிஜாத்தை பற்றி எதுவும் விசாரிக்காமல் தண்ணீரை வாங்கிக் குடித்தபடி, வருகிறேன் என்பதாய் தலை அசைத்து செல்ல பார்வதிக்கு உலகமே தலை கீழாகச் சுற்ற தொடங்கிற்று.
ஆனால் அவர் அப்படிச் செய்தது பார்வதிக்குச் சந்தோசத்திற்குப் பதிலாகச் சங்கடத்தையே தந்திருந்தது. இன்று நீதிமன்ற தீர்ப்பு என்று கூறியிருக்க, இன்று போய் நாம் முன் நின்றுவிட்டோமே? என்னுடைய துரதிர்ஷ்டம் அவரையும் பாதிக்குமோ எனக் கலங்கியவராகப் பூஜை அறைக்குள் புகுந்துகொள்ள, விழி அனைத்தையும் மெளனமாக வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
                                                        
*
நேரங்கள் ஓடின. கோவிலிற்குச் சென்றுவிட்டு வந்த பாரிஜாதம் மச்சக்காளைக்கு மீண்டும் மீண்டும் அழைக்க, அஃது எடுக்கப் படாமலே போனது. இறுதியாகப் பாரிஜாதம் அழைத்த அழைப்பை ஏற்றவரிடம், “ஏங்க ! என்னங்க ஆச்சு” என எதிர்ப்பார்ப்புடன் கேட்க, அவரோ, “வந்துட்டு தான் இருக்கே. போன வை” எனக் கூற, வாசலை ஆவலாகப் பார்க்க, வாடகை காரொன்று வந்து நிற்க, பார்வதி பதட்டமாக வாசலிற்கு வர, காரிலிருந்து மச்சக்காளை இறங்க, அதைத் தொடர்ந்து கதிரவன் வர, அதைத் தொடர்ந்து முருகேசன் வர, பாரிஜாதமும் பார்வதியும் குழப்பத்தின் உச்சிக்கு சென்றனர்.
“இவனுங்க எதுக்கு இங்க வந்தாங்க ? ஒருவேளை இங்க இருக்கச் சண்டைகாரிய கூட்டிட்டுப் போகச் சொல்லி என்னோட வீட்டுக்காரு இந்த முருகேஷனை பிடிச்சு இழுத்துட்டு வந்துருப்பாரு போல. ஆமா அண்ணனை ஜெயிலுக்கு அனுப்பினதே அதுக்காகத் தான. அப்போதானே இவை ராசிதான் தீர்ப்பு இப்படி வந்திடுச்சினு சொல்லி விரட்டி விட முடியும். ஆனா இந்தக் கதிரவனும் கூட இருக்கானே. பரவா இல்ல. பார்வதியை நம்ம கட்டுப்பாட்டுல கொண்டு வந்து கதிரவனை வாயடைக்க வச்சிடலாம்” எனப் பலவாறாகத் திட்டங்களை அடுக்கிக்கொண்டிருக்க, பார்வதியோ, “ஐயோ, அவரு எங்க ? அவரை மட்டும் காணோமே” எனப் பரிதவித்தவராய் வீட்டிற்கு முதன் முறையாக வந்திருந்த முருகேசனை கூடக் கவனிக்கத் தவறியவராய் பதற்றம் கொள்ள, அதை முற்றிலும் துடைத்தெறிவதாய்க் காரிலிருந்து இறுதியாக இறங்கினார் லிங்கம்.
இத்தனை மணி நேரமாய் அவர் கொண்டிருந்த அலைப்புறுதல் மொத்தமும் ஒரு துளி கண்ணீராக மாறி வெளியே வர, பார்வதியின் முகத்தைக் கண்ட லிங்கமோ பார்வதியின் கண்ணீரில் தான் மனைவியின் பாசத்தைப் படித்தார்.
வாசலிற்கு வர, எதிர்பாராவிதமாக ஆலம் கரைத்து விழி எடுத்து வர, லிங்கத்திற்குச் சுற்றப்பட்டுத் திருஷ்டி கழிக்கப்பட்டது.
ஆலம் சுற்ற அதோடு சேர்ந்து பாரிஜாதத்தின் தலையும் சுற்றியது. கணவனின் முகத்தைப் பார்க்க, மச்சக்காளையின் முகமே எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவிற்குச் சூடாக இருந்தது. நடந்ததை அறிய மனது பரபரவென்று இருக்க, ஆனால் அதற்கு அவகாசம் இல்லாமல் லிங்கம் முருகேசனை அழைத்து வந்து வீட்டின் மனிதனாக உபசரிக்கத் தொடங்கினார்.
“பார்வதி! வெரசா போய்க் காபி தண்ணி கலக்கி கொண்டுவா. கூடவே அவருக்குச் சூட பலகாரமும் கொண்டு வா”
“அம்மா மருமகளே! என்ன நிக்கிறவ ? போ போய் மாமாக்கு தண்ணி மொந்துட்டு வா” என முதல் முறையாக இத்தனை மாதத்தில் நேரடியாக விழியிடம் பேச, விழிக்கும் பார்வதிக்கும் அத்தனை சந்தோசம். பாரிஜாதத்திற்கோ உலகமே இராட்டினமாய்ச் சுற்றியது போலத் தோன்றியது.
“கதிரவா!” என மகனை அழைத்தவர், அதற்குமேல் எதையும் சொல்லமுடியாமல் தடுமாறியபடி, ”மன்னிச்சிடுயா” எனக் கூற, அடுக்களையில் இருந்த பார்வதி அப்படியே மகிழ்ச்சியில் உறைந்து போனார்.அன்று மகேஷ் சுந்தர் குடும்பம் வந்தோ போதுகூட என் மகன் என்று குறிப்பிட்டிருந்தாரே தவிர, நேரடியாகப் பேசியதே இல்லை. அப்படிப் பேசி பலவருடங்கள் ஆகியிருந்தது. என்றாவது ஒருநாள் லிங்கம் கதிரவனிடம் பேசுவார் என்ற நம்பிக்கையே பார்வதிக்கு அத்து போய் இருக்க, அவர் குரல் நடுங்கி மன்னிப்பை வேண்டியது பார்வதியை உலுக்கியது.
ஒருபுறம் சந்தோசம் வந்தாலும் மறுபுறமோ அப்படியென்ன இன்று நேர்ந்தது என்ற கேள்வி இப்போது பார்வதியின் மனதிலும் எழ தொடங்கியது.
“விடுங்க! நீங்க பெரியவங்க. பேசிட்டு இருங்க” என லிங்கத்திடமும் முருகேஷனிடமும் பொதுவாய் கூறியவன் அங்கிருந்து வெளியேறினான்.
லிங்கம் இப்படிப் பேசியதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் பேசிய வார்த்தைகளை எண்ணியே விடலாம். தடாலடியாகப் பேசினால் பதிலுக்குப் பதில் கொடுக்கும் கதிரவன், அனலடிக்கப் பேசினால் அலட்சியமாய்க் கடந்துவிடும் கதிரவன், குரல் நெகிழ்ந்து பேசுகையில் தடுமாறிப் போனான். முதன் முறையாக! அவனுக்கு லிங்கத்துடனான இந்தச் சூழ்நிலை புதிது. அதைக் கையாள முடியாமல் தவித்தவன், அந்தச் சூழலை தவிர்த்தவனாய் அங்கிருந்து சென்றான்.
மெல்ல ஆரம்பித்தார் லிங்கம். “முருகேசன் நீங்க பண்ணுனது பெரிய ஒத்தாச. களவாணி பயலுங்க யாரு பண்ணுன வேலைனு தெரியல. இப்படிக் கூடவா மனுஷங்க இருப்பாங்க” எனப் பேசிக்கொண்டிருக்கப் பாரிஜாதமும் மச்சக்காளையும் இருப்புக் கொள்ளாமல் தவித்தனர்.
“இருக்குறாங்க அண்ணே! தான் நல்லா இருக்க என்ன வேணும்னாலு பண்ணுற ஆளுங்க மத்திலதான் நம்ம பொழப்ப ஓட்டவேண்டிக்கிடக்கு. யாரையும் சொல்லி குத்தமில்ல. நாமதான் சுத்தி முத்தி நடக்குறதுல கவனத்தை வச்சு சூதானமா இருக்கணும். இது யாரு என்னனு முழுசா தெரிஞ்சிக்கிட்டு உங்கட்ட சொல்லுறேன். அதுவரைக்கும் இதைப் பத்தி நீங்க பெருசா அலட்டிக்காம இருங்க. சிங்கமாதிரி பிள்ளை இருக்கறப்ப உங்களுக்கென்ன அண்ணே கவலை ? கதிர் பார்த்துப்பான். சரிங்கே அண்ணே. நீங்க ஓய்வு எடுங்க. எனக்கும் சோலிகிடக்கு. பொறவு வாரேன் ” எனக் கூறி எழ போக, ஒருமிஷம் என்று லிங்கம் தடுத்தார்.

Advertisement