Advertisement

“கதிர், உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனு கொஞ்சம் நேரம் முன்னாடி பார்த்த தாமஸ் சொன்னாரு. என்னால நம்பவே முடில. நீங்க சொல்லவே இல்லையே” எனக் கேட்க, சிறிது தயங்கினாலும் பின் தெளிவான குரலில், “ஆமா சார். சொல்ல கூடிய சூழல்ல நடக்கல. ஒருவிதக் கட்டாயத்துல நடந்தது. அத பத்தி மேற்கொண்டு பேச வேணாம்னு நானா யார்கிட்டையும் சொல்றதில்லை சார். தப்பா எடுத்துக்காதீங்க”
“அட பரவாயில்ல கதிர். விடுங்க. எல்லாத்தையும் காலம் மாத்திடும். ஆமா கேட்கணும்னு நினச்சேன். அன்னைக்கு உங்க பண்ணையில ஒரு பொண்ணு இருந்துச்சே அது யாரு கதிர். அந்தப் பிள்ளை முகம் பழகுனா முகமா படுது.
அன்னைக்கே கேட்கணும்னு நினைச்சே. ஆனா உங்க கூட்டாளிங்க பண்ணின கலாட்டால கலகலன்னு மனசுவிட்டு சிரிச்சு கேட்க வந்தத விட்டுட்டேன்.
“எனக் கூறி மீண்டும் சிரித்தபடி, “பார்த்தீங்களா ? இப்பவும் கேட்க வந்தத விட்டுட்டேன் கதிரவன். அந்தப் பொண்ணு யாரு ? அந்தப் பொண்ண நான் வேற எங்கையோ பார்த்திருக்கேன்…” எனக் கூறியபடியே யோசிக்க, அதே நேரம் கதிரவனும் அன்று தன்னை அறியாமல் மஹேஷிடம் விழியை மனைவி என்று குறிப்பிட்டிருந்ததை ஒருமுறை ஓட்டி பார்த்து, பதில் கூற அதே வேளையில் சேனாதிபதியும் பதில் கூறினார்.
ஒரே சமயத்தில் இருவரும் பேசினர்.
“அந்தப் பொண்ணு தான் என் பேத்தியை காப்பாத்துச்சு. நினைவு வந்திடுச்சு”
“அவுங்க என்னோட மனைவி”
என இருவரும் கூறியிருக்க, ஒரே சமயத்தில் இருவரும், “என்ன சொன்னீங்க ? மறுபடியும் சொல்லுங்க” எனக் கூற, அடுத்து சேனாதிபதி கூற, அதன் பின் கதிரவன் கூற, இருவருக்குமே ஆச்சர்யம்.
“அட கதிரவன் ஆச்சர்யமா இருக்கே! இது தான் ஆண்டவ கட்டளையோ. யார பத்தி நான் பேசுறேனே தெரியாம கண்ணுக்கு தெரியாத ஒருத்தவங்களுக்காக அவ்ளோ பேசின அந்தப் பொண்ணு. ஆனா அது உங்களுக்காகத் தான் பேசியிருக்குது… நீங்க கூட அந்தப் பொண்ணுக்கு நன்றி சொல்லணும்னு சொன்னீங்களே! இப்ப உங்க சம்சாரத்துக்கிட்ட சொல்லுங்க.
நானும் என்னோட சம்சாரமும் ஒரு நாள் வந்து எங்க வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கிறோம்” என ஆத்மார்த்தமாகக் கூற,
கதிரவனும், “சரிங்க சார்” என முடித்துக்கொண்டான். வேறு என்ன சொல்வதென்றும் அவனுக்கு அப்போது புரியாத நிலையே! இவளா ? யாருனே தெரியாத மனுஷனுக்கு உதவுற குணம் இருக்கப் பொண்ணா விழி ? என்ற சிந்தனையே.
அழைப்பை துண்டிக்கப் போக, “கதிரவன்! உங்கட்ட ஒன்னு கேட்கலாமா ? சின்னதா தோணுச்சு” எனக் கூற,
“அயோ என்ன சார் ? இப்படிக் கேட்குறீங்க. எதுனாலும் கேளுங்க சார்!”
“உங்களுக்குக் கண்ணாலத்துக்கு முன்னாடியே உங்க சம்சாரத்தைத் தெரியுமா ? ஒன்னும்மில்ல கதிரவன், உங்க மனைவிக்கு நான் யாரை பத்தி பேசுறேன்னு வேணும்னா அந்தச் சமயம் தெரியாம இருந்திருக்கலாம். ஆனா உங்கள கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்னு தோணுது.
ஏனா அன்னைக்கு அவுங்க கைல இருந்த கடிகார பையும், உங்களுக்குப் பார்சல்ல வந்த கடிகார பையும் ஒண்ணா இருந்துச்சு.
நான் சொல்றது சரியாவும் இருக்கலாம். இல்லாட்டினா என்னோட கற்பனையாவும் இருக்கலாம்”
“அப்படியா சார் சொல்றீங்க?” எனத் தன்னையும் மீறி ஆச்சர்யமாகக் கதிரவன் கேட்க, “எனக்கும் சரியா தெரியல கதிரவன். ஆனா இரண்டும் யதேச்சையா தெருஞ்சலும் எனக்கென்னவோ சம்மந்தம் இருக்கோனு சட்டுனு தோணிச்சு. சொன்னேன்.
உங்களுக்கு இது தெரியலைனா இது நானா தப்பா சொல்லிட்டேன் நினைக்கிறன். இல்லாட்டி இத அவுங்களே உங்கட்ட சொல்லிருப்பாங்களே!
சரி விடுங்க கதிரவன். கை எழுத்து வாங்க இன்னைக்கு ஆறு மணிக்கு வராங்க. சரியான நேரத்துக்கு வந்துருங்க” எனக் கூறி வைக்க, கதிரவனுள் அப்படியொரு எதிர்ப்பார்ப்பும் அறியவேண்டிய ஆவலும் தோன்றியது.
“இந்த வாட்ச் அவ கொடுத்திருப்பாளோ ? சக்கரையும் பாண்டியும் இல்லையா ?” என்ற கேள்வியோடே தன்னை அறியாமல் அந்தக் கடிகாரத்தைக் கைகளில் ஏந்தியபடி ஏதோ யோசனையோடு அவனின் அன்னையைத் தேடி செல்ல, அங்கோ பார்வதி விழியுடன் பேசிக்கொண்டிருந்த வார்த்தைகளில் அப்படியே நின்றான்.
“நீ கதிரவனுக்கு எடுத்த சட்ட ரொம்ப அருமையா இருக்கு விழி. எப்படிப் போய் எடுத்த ? வீட்ல ஒன்னும் சொல்லலியா ?” எனப் பார்வதி கேட்க,
“அத ஏன் கேக்குறீங்க! அது பெரிய கூத்து. வீட்ல திட்டியிருந்தா கூடப் பரவா இல்ல. எனக்குப் பிடிக்கவே பிடிக்காத கொரில்லா கொண்டை வார்டன் கிட்ட அன்னைக்குச் சிகிட்டேன்.” எனச் சொல்ல, “தெளிவா சொல்லு” எனப் பார்வதி வினவ,
இவளோ நடந்த அத்தனையும் விவரிக்க விவரிக்கக் கதிரவன் அப்படியே நின்றுவிட்டிருந்தான்.
“எனக்கு அந்தம்மா ரோட்ல திட்டுனது கூடப் பெருசா படல. ஆனா உங்க மகன் என்ன முறைச்சு பார்த்தாரு பார்க்கணுமே… அய்யோன்னு ஆகிடுச்சு” எனச் சொல்ல,
“ரொம்ப வருத்தப்பட்டியா ஆத்தா?” எனக் கேட்க,
“மொத அப்படித்தான் இருந்துச்சு. அப்புறம் அவரு பார்க்காமலே இருக்கிறதுக்கு மொறச்சாச்சு பார்த்தரேனு சந்தோசப்பட்டுக்கிட்டேன்..ஹி ஹி” எனக் கெத்தாகத் தோள்களைக் குலுக்கியபடி அவள் செய்த பாவனையில் முதல் முறையாக அந்தப் பாவனையை ரசித்தபடி கதிரவன் விழியெடுக்காமல் விழியைப் பார்த்தான்.
“எப்படி விழி உனக்குச் சட்ட வாங்கணும்னு தோணுச்சு ? எப்படியோ ஆத்தா நல்லவேளையா நீ வாங்கிக்கொடுத்துட்ட. இல்லலடினா அன்னைக்கு எம்மவன் ஏமாந்துருப்பான்” என வருத்தத்தோடு நிகழ்ந்ததைச் சொல்லி, பின்பே இவள் வாங்கித் தந்தது என்று தெரியும் என்பதைச் சொல்ல கதிரவனுக்கோ இன்னமும் விழி தனக்காக யோசித்து யோசித்துப் பண்ணியதை நம்பமுடியவில்லை.
“விடுங்க அத்த ! வருத்தப்படாதீங்க! நீங்க தந்தா என்ன நான் தந்தா என்ன ? அவரு சந்தோசப்பட்டா அதே போதும்.”
“நீ கடிகாரமும் வாங்கித் தந்தியாம்ல விழி ?”
“ஆமா அத்த! அத வாங்கிட்டு அனுப்பிவிட்டு அவரு பொறந்தநாளைக்கு நானு அவர் கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேன். நடக்காதுனு தெருஞ்சும் எதோ ஒரு நப்பாசைல வந்துட்டே. ஆனா பாருங்களே உங்க பையன் கூடக் கடல்ல தனியா வந்தேனே!
அப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா ? சும்மா ஜில்லுனு” என ரசனையாகக் கூற, பார்வதியோ நக்கலாக, “சுத்தி தண்ணி இருந்தா அப்படித் தான் ஆத்தா இருக்கும்” என நமட்டு சிரிப்புடன் கூற,
அதை புரிந்துகொண்டவளோ சிரித்துவிட்டு, “நீங்க சூப்பர் அத்த. என்னையவே ஓட்டுறீங்களா? ஆனா அம்புட்டு தண்ணி இருந்து என்ன புண்ணியம் ? உங்க பையன் தான் கொதிச்சு போய் இருந்தாரே. பார்வையிலையே என்ன எரிச்சிட்டாரு” எனச் சிரிப்புடன் கூற,
“இதுக்கும் சிரிப்பு தானா ? கவலை படலையை ஆத்தா ?” எனக் கேட்க
“இல்ல அத்த”
“ஏன் மா?”
“பிடிச்சவங்க என்ன பண்ணினாலும் பிடிக்கும். உங்க மகன எனக்கு அவ்ளோ பிடிக்கும்” எனக் கூற, கதிரவனோ அவளுடைய எல்லையில்லாத காதலில் ஸ்தம்பித்துப் போனான்.
தன்னை இப்படி ஒருத்தி உருகி உருகி ரசித்து ரசித்து நேசித்தாளா ? நேசிக்கின்றாளா ? என்ற எண்ணம் இப்போது ஏனோ அவனுக்கு இனிமையாக இருந்தது.
“நீ எப்பவும் இப்படியே சந்தோசமா இருக்கணும் ஆத்தா” என மனதார பார்வதி சொல்ல,
“ஹா ஹா உங்க மகன காதலிச்சுக்கிட்டே இருக்க வரைக்கும் நான் சந்தோசமாதான் இருப்பேன்” என இவள் கூற, மீண்டும் கதிரவனின் மனம்,
“இவ என்ன ?என்னைக் காதலிக்கிறத என்ட சொல்லாம எங்க அம்மாகிட்ட போய்ச் சொல்லிட்டு இருக்கா ?” என மீண்டும் யோசிக்க, மறுபடியும் அவனுடைய புத்தி சம்மன் இல்லாமல் ஆஜராகி , “அப்போ அவள் வந்து உன்கிட்ட காதல் சொல்லனுமா ?” எனக் கேட்க, “இல்ல” எனச் சட்டென்று தன் எண்ணப்போக்கை தன்னிடமே மறைத்தபடி அவன் திரும்பி செல்ல முயலுகையில் அவனைப் பார்த்துவிட்ட பார்வதி, “அய்யா எப்ப வந்த ?” எனக் கேட்க, “இப்போதான் மா. அவகிட்ட பேசிட்டு இருக்கவும் போனேன்” எனக் கூறவும், விழியோ மனதிற்குள் நினைப்பதாக வெளியே, “கேட்டிருப்பாரோ ? ஹக்கிம் கேட்டுட்டாலும். அம்புட்டு கூரு இல்ல மாமாக்கு” எனச் சொல்லிவிட, கதிரவனோ அவளைப் பார்த்து முறைத்தபடி, “என்ன இல்லனு சொன்ன ?” எனக் கேட்க, இலேசான தடுமாற்றத்துடன், “அது…அது…ஆஹ்…. இந்த அயன் பாக்ஸ்ல சூடு இல்லனு சொன்னேன்” எனச் சமாளிக்க, “அப்படியா ? கை வச்சு பாரு. தெரியும்” எனக் கூறியபடி பார்வதியிடம் இருந்து சட்டையை வாங்கிக்கொண்டு செல்ல, பார்வதி விழியிடம் , “என்னமா அயன் பாக்ஸை தொட்டு பாக்குறிய ?” எனக் கிண்டலுடன் வினவ, “அதுக்கு எதுக்கு அத்த இத தொடணும் ? உங்க பையன தொட்டா பத்தாது ?” என மோவாயை இடித்தபடி செல்ல, சென்றுகொண்டிருந்த கதிரவனின் காதுகளிலும் அவளின் வார்த்தைகள் விழுந்து சின்னப் புன்னகையைக் கொடுத்தது.
இப்படியாகக் கதிரவன் விழியின் உறவு அவனுடைய பார்வையில் முன்னேற்றத்தை கொண்டிருந்தது. ஆனால் அதை அவன் எக்காரணம் கொண்டும் விழியிடம் காட்ட பிரியப்படவில்லை. அதற்கான காரணத்தையும் அவன் சிந்திக்கத் தயாராக இல்லை.
விழியின் அருகாமையை அவன் மனது இப்போதெல்லாம் உணர தொடங்கியிருந்தாலும், அவனைப் பொய் சொல்லி திருமணம் செய்துகொண்டதை மட்டும் அவனால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. அவளின் பேச்சை ரசித்தான். அவளின் துடுக்குத்தனத்தை ரசித்தான். ஏன் அவளையே அவ்வப்போது ஓரப்பார்வை பார்த்தான் தான். ஆனாலும் அவனால் அவளை முழுமையாக ஏற்க முடியவில்லை. இது காதலென்று அவன் உணரவும் இல்லை. அவள் மேல் தனக்கு உள்ளது என்னவென்றே ஆராய்ச்சில் அவன் ஈடுபடவும் விரும்பவில்லை. ஆனால் வீட்டிலிருக்கும் சமயங்களில் அவள் அங்கும் இங்கும் நடமாடுவதைப் பார்த்தபடியே இருப்பான்..
விழியைப் பொறுத்தவரை எப்போதும் போலே அவனுடன் வாயடிக்க, கதிரவனுக்கோ முன்பிருந்த எரிச்சல் இல்லாமல் அவன் பேசுவதைக் கேட்க எதிர்ப்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு எத்தனை உண்மையோ அதே அளவு உண்மை அதை விழி அறியாமல் அவன் பார்த்துக்கொண்டதும்.
அதே நேரம் மச்சக்காளை முன்னைவிட அதிதீவிரமாகக் காரியங்களைச் செய்துகொண்டிருந்தார். அப்படிதான் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த வேலைகள் அரங்கேறும் நாளாக அடுத்தநாள் இருக்க, இது தெரியாத லிங்கமோ கம்பீரமாக எப்போதும் போலப் பாரிஜாதத்தின் கைகளால் தண்ணீரை வாங்கிக் குடித்தபடி வெளியே கிளம்பி செல்ல, பாரிஜாதமோ ஒரு வன்ம சிரிப்புடன் வழி அனுப்பினார்.

Advertisement