Advertisement

காதலின் கண்ணாமூச்சி -28
காதல் கண்ணாமூச்சியோ ?
கொண்டவனிடம் மட்டும் சொல்லாமல்
கொண்டாடுகிறாள் ஊர் உலகோடு
அவனோடு உண்டான காதலை
லிங்கத்திடம் முறையிட மகேஷ் மற்றும் சுந்தரின் பெற்றோரும் உறவினரும் வந்திருந்தனர்.ஆனால் அடாவடியாக இல்லை, அமைதியாகவே; அவர்களின் விண்ணப்பம் இந்தப் பிரச்சனையைக் காவல் நிலையால் நீதி மன்றம் என்று எடுத்துச் செல்லாமல் ஊர் பஞ்சாயத்தில் வைத்து முடித்துக்கொள்வோம் என்பதே.
ஒருவேளை விழி இப்படித் தடாலடியாகக் காவல் நிலையத்தை அணுகியிருக்காவிட்டால் இவர்களில் வாய் மொழியும் உடல் மொழியும் வேறாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் இப்போதோ நிலைமை தலை கீழ். இன்ஸ்பெக்டரிடம் எப்.ஐ. ஆர் தற்போதைக்குப் போடவேண்டும் என்று அவகாசம் கேட்டு வந்திருந்தனர். புகார் விழி கொடுத்ததாக இல்லாமல் கதிரவன் கொடுத்தது போலவே இருந்தது. ஆதலால் கதிரவனிடம் பேசும்படியாக லிங்கத்திடம் முறையிட்டு கொண்டிருந்தனர். அவனின் தந்தை என்ற முறையிலும் ஊர் தலைவர் என்ற முறையிலும்.
மகேஷின் குடும்பம் முடிந்தால் இதில் ஊர் பஞ்சாயத்தை மீறி காவல் நிலையத்தைக் கதிரவன் அணுகியுள்ளார் என்று தந்தைக்கும் தனையனுக்கும் இடையே பிரிவை ஏற்படுத்திக் காரியம் சாதிக்க முடியுமா என்ற கோணத்திலும் காய் நகர்த்த, அப்போது தான் விழியும் கதிரவனும் வந்து சேர்ந்தனர். விஷயம் இன்னதென்று வந்திருந்தவர்களில் பொதுவான ஒரு மனிதர் கூற, கதிரவன் யோசனையாக விழியைப் பார்க்க, விழியோ இவரு எதுக்கு இப்ப நம்மள பாக்குறாரு என்ற ரீதியில் பார்த்திருந்தாள்.
இதில் பதட்டமாக உணர்ந்தது பார்வதி மட்டுமே. எங்கே இவர் கூறி அவன் மறுத்துவிட்டாள் இப்போது இருக்கும் ஓரளவு சுமூகமான சூழல் அறுந்துவிடுமோ என அஞ்சியவராக வெளி திண்ணையின் தூணின் பின்புறமாக நிற்க, விழி மேற்கொண்டு அங்கே நிற்காமல் அமைதியாக உள் நுழைய முயன்றாள்.
கூட்டத்தில் ஒருவர், “பெரியவீட்டு மருமகளே கொஞ்சு நில்லு ஆத்தா. நீ தான் உம்ம மாமான விட்டு போலீஸ கூட்டியாந்தியாமே! இப்படி யாருக்கு என்னவோன்னு போனா எப்படி ? நிக்கிறவங்களுக்கு ஒரு பதில சொல்லு” எனக் கூற, ஒரு நிமிடம் யோசித்தவள் பிறகு பளிச்சென்றும் பட்டென்றும் அனைவரிடமும் “இதுல நான் சொல்ல என்னங்க இருக்கு ? அந்தச் சமயத்துல மயில்களைக் காப்பாத்த அப்படி முடிவு செஞ்சேன். அதுக்குப் பொறவு நடந்ததெல்லாம் இவரு கைல எடுத்துட்டாரு. அதுனால இவரோட முடிவு தான் என்னோட முடிவு. இவரு மாமா சொல்றதையும் எங்க அத்த சொல்றதையும் தான் கேப்பாரு. அதுனால மாமா அத்த என்ன சொல்றங்களோ அத தான் அவரும் நானும் கேட்போங்க” என வெகு பவ்யமாகக் கூற, ஒரு நிமிடம் கதிரவன் “நான் எப்ப தலைக்கட்டு தலைவர் பேச்ச கேப்பேனு சொன்னே ?” என அவள் காதோரம் முணுமுணுக்க, “அது யாரு மாமா தலைக்கட்டு தலைவரு ?” என இவள் எதிர்கேள்வி கேட்டாள்.
“உன்னோட மாமனாரு தான்” எனக் கடுப்புடன் கூற, இவளோ, “பேரெல்லாம் ஜோரா தான் இருக்கு. ஆனா கூரு இல்லையே மாமா” என அவனை நக்கலடிக்க
“என்ன சொன்ன ?”
“ஒன்னும் இல்ல உண்மைய சொன்னே”
“என்ன உண்மை ?”
“நீங்க யாரு பேச்ச கேட்பீங்க ? உங்க அம்மா பேச்ச !
உங்க அம்மா யாரு பேச்ச கேட்பாங்க ? உங்க அப்பா பேச்ச !
இதுல இருந்து உங்களுக்கு என்ன தெரியுது ?”
“அதையும் நீயே சொல்லி தொள”
“உங்க அப்பா சொல்றதுதான் நீங்க கேப்பீங்கனு” எனக் கூற, கதிரவன் முறைக்க, “சரி…. அப்பா இல்ல. தலைக்கட்டு தலைவரு! இப்ப அதுவா முக்கியம். எப்படியும் அது தான நடக்கப் போகுது ? இப்படி ஊர்க்காரங்க கிட்ட சுத்தி வளச்சு சொல்ல முடியுமா ? அது தான் சார்ட்டா சொன்னேன். இது ஒரு குத்தமா ? “
“அம்மா தாயே! நீ சொன்னது குத்தமில்லாம. நான் கேட்டேன் பாரு. அதான் என் குத்தம்” எனக் கதிரவன் எரிச்சலுடன் கூற, “அப்படி வாங்க வழிக்கு” எனக் கூறியபடி அவள் உள்ளே சென்று தன் அத்தையுடன் நிற்க, தன் அம்மாவை கதிரவன் பார்க்க, அவரோ கண்களால் மகனிடம் அவர் சொல்வது போலச் செய் என்பதாய் கேட்க, அவனோ விழியை மனதிற்குள் திட்டியபடி, “அவரு சொல்றத போலவே பண்ணிக்கலாம்” என ஒரே வரியில் முடிக்க லிங்கத்திற்கு ஆச்சர்யமே.
அப்படியொரு ஆச்சர்யம்! இப்படி ஓர் வார்த்தை கதிரவனின் வாயிலிருந்து வருமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் திரண்டு வந்து இப்படியொரு திடீர் கோரிக்கை வைக்கவும் அவருக்கு உள்ளூர குழப்பமே. அவர் எதிர்பார்த்தது நிச்சயமாகக் கதிரவனின் மறுப்பையே. அவ்வாறு மறுக்கும் போதும் ஊர் முன்னிலையில் இதுவரை தன் வார்த்தைக்கு இருந்த மரியாதை இல்லாமல் போய்விடுமோ என்ற கவலை அவருள் இருந்தது உண்மையே.
மகனே தன் வார்த்தையை இத்தனை பேர் முன்னிலையில் மதிக்கவில்லை என்றால் இனி ஊரில் மற்றவர் தன் பேச்சை எப்படி மதிப்பார்கள் என்றே யோசனையில் இருந்தார். அதிலும் காவல் நிலையத்திற்கு நேராகச் சென்ற விழியின் மீதும் கோபம் வந்ததென்னவோ உண்மை. ஆனால் இப்போது நடந்தது அவரை ஆச்சரியப்படுத்தியது மட்டுமின்றிப் பெரும் நிம்மதியையும் அளித்திருந்தது.
சாமர்த்தியமாகப் பதில் சொல்லிய மருமகளையும் தன்னுடைய பேச்சிற்குச் சட்டென்று ஒப்புக்கொண்ட கதிரவனையும் தனக்குள் மெச்சிக்கொள்ளவும் செய்தார்.
அதன் பின் கதிரவன் விழி பார்வதி என அனைவரும் ஒதுங்கி நிற்க, லிங்கம் ஒருமுறை கதிரவனையும் விழியையும் கூர்ந்து பார்த்தார். பிறகு கம்பீரமாக, “ஊர் பெரிய மனுஷ மக்களெல்லா ஒண்ணா வந்து கேட்டுக்குறதுக்கு மறுவாத கொடுத்து நான் என்னோட மகன புகாரை திரும்ப வாங்கிற சொல்லுறேன்” எனக் கூறி ஒருமுறை கதிரவனைப் பார்க்க, கதிரவனோ முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையைக் காட்டாவிட்டாலும் அவன் கண்களில் தன்னை மீறிய ஓர்  ஒளி உண்டாகியிருந்த தை தடுக்க முடியவில்லை. அதை லிங்கமும் கண்டுகொண்டார்.
அவருள் இத்தனை பெரிய மாற்றத்திற்குக் காரணம், இரெண்டு. முதலாவது கௌரம் தான் முக்கியம் என்ற இடத்தில் அஃது அடிவாங்கிவிடுமோ என்று பயத்தின் உச்சியில் இருக்கும் பொழுது அப்படி எதுவுமே இல்லை இன்னும் உன் கௌரம் உயர போகின்றது என்ற நிலை வரும் பொழுதில் ஏற்படுகின்ற ஆசுவாசம். அதோடு, மகேஷின் தந்தை தன் கை பேசியில் இன்ஸ்பெக்டருக்கு அழைத்துக் கொடுத்திருக்க அவரோ கதிரவனை சார் என்று குறிப்பிட்டிருக்க நாம் எவனைத் தூசாக நினைத்தோமோ அவன் அப்படியில்லை என்று தெரியவந்ததும் மற்றொரு காரணம்.
மேற்கொண்டு அவரே தொடர்ந்து, “ஆனா ஒரு நிபந்தனை. கதிரவனும் அவன் சம்சாரமும் இத்தனை பாடுபட்டது அந்த வாயில்லா ஜீவனுங்களுக்காக. நம்மள போலவே அதுங்களுக்கும் இந்தப் பூமில வாழ சரி உரிமை இருக்கு. நம்ம சுயநலத்துக்காகத் திங்கிற சாப்பிட்டுள்ள விஷ கலந்து மகா பாதக வேல. அத மன்னிக்க முடியாது. அதுனால பக்கத்துல இருக்கக் கோடியங்கரை பறவ விலங்கு இருக்க இடமிருக்குதுல, அங்கன உங்க இரெண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சில விலங்குகளையும் பறவைகளையும் தத்தெடுத்துக்கணும்.
அஃதாவது அதுங்கள பராமரிக்க ஆவுற செலவ உங்க புள்ளைங்க ஆயுஷு உள்ள வரைக்கும் எடுத்துகோங்க. அப்படி அதுங்கள போகவர பார்க்கிறப்ப தான் அதுவும் ஓர் உயிர்னு உங்க மனசுல பதியும். இரெண்டு குடும்பமும் செல்வாக்கான குடும்பம் தான ? போலீஸ்க்கும் கோர்ட்டுக்கும் செலவு பண்ற காச இதுக்குப் பண்ணுங்க.
சம்மதமில்லாட்டி நீங்க மேற்கொண்டு வழக்கு நடத்தி பார்த்துக்கோங்க” என ஒரே முடிவாகச் சொல்ல அத்தனை நபர்களும் லிங்கத்தின் தீர்ப்பை அட என்ற பாவனையுடன் பார்த்திருந்தனர்.
மஹேஷும் சுந்தரின் குடும்பமும் செலவு அதிகம்தான் பிடிக்குமென்றாலும் அதற்கு இது தேவலை என்பதாக ஒப்புக்கொள்ள அடுத்துப் புகார் திரும்பப்பெற்றது அடுத்து வந்த நாட்களில் லிங்கம் ஒன்றும் கதிரவனிடம் இணக்கம் காட்டவில்லை. ஆனால் அதே சமயம் ஒதுக்கமும் காட்டவில்லை.
கதிரவனின் பார்வையும் இப்போதெல்லாம் விழியைக் கவனிக்கத் தொடங்கியிருந்தது. அன்று அப்படிதான் விழி செய்த காரியம் கதிரவனுக்கு அவள் மீதான ஈர்ப்பையோ பிடித்ததையோ அதிகமாக்கியது. பார்வதிக்கு மூட்டுவலி இருக்க, அன்றோ மாறன் பெரிய விரால் மீன்களை வாங்கிவந்துவிட, பாரிஜாதமோ சப்புகொட்டியபடி மசாலாவை அம்மியில் தான் அரைக்க வேண்டும் என்று பார்வதியிடம் கெடுபிடி செய்துக்கொண்டிருக்க, விழிக்கு சுள்ளென்று கோபம் வந்தது. இவளுக்கோ அம்மியில் அரைத்தெலாம் பழக்கம் இல்லை. இருந்திருந்தால் நிச்சயமாகச் செய்திருப்பாள். ஆனாலும் அவளுடைய துடுக்கான புத்தி பாரிஜாதத்தைப் பழி வாங்க யோசிக்கத் தொடங்கியது.
காலையில் அவரவர் வேலையை நடு கூடத்தில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்க, பாரிஜாதம் வழக்கம் போலப் பார்வதியை ஏதோ ஒரு சம்மந்தம் இல்லாத செயலிற்காக ஜாடை பேசிக்கொண்டிருக்க, முதன் முறையாக லிங்கத்திற்குப் பாரிஜாதத்தின் பேச்சு ரசிக்கவில்லை. அதை அவரது முகத்திலிருந்து படித்துவிட்டு விழி, சத்தமாக, “ஆமா சின்னமா! நீங்க சரியா தான் சொல்றீங்க. அத்தைக்கு வயசாகுதுல. அதுனால முன்னைப்போல அவுங்கனால எதையும் செய்ய முடில. சாப்பாட்டுல உப்புக் காரம் கூட அவ்ளோ சரியா இல்ல” எனக் கூற பாரிஜாதம் குதூகலமாக, “ஆமா ஆமா” எனச் சேர்ந்துகொண்டு பேச, “ஆனா சின்னமா நீங்க சூப்பர், உங்க கை பக்குவம் அத விட. அன்னைக்கு எதோ தக்காளில பண்ணினீங்களே. சப்புக்கொட்டி சாப்பிட்டேன். நீங்க எனக்குக் கொடுக்கல. இருந்தாலும் நானே எடுத்துக்கிட்டேன்” என இல்லாத ஒன்றை கூற, பாரிஜாதமோ மனதில், “நமக்கு அப்படியெல்லாம் சமைக்கத் தெரியாதே! இவ என்ன புதுசா சொல்லுறா ?” என யோசிக்க, சாந்தினி இடையில் புகுந்து “அப்படியா மா ? உனக்குச் சமைக்கத் தெரியுமா ?” எனக் கேட்டுவைக்க, அவளை எரித்துவிடும் பார்வை பார்த்தவர், “அடியே! நான் சமைச்சா எட்டு ஊருக்கு மணக்கும். நான் சமைச்சு நீ சாப்பிட்டதில்ல. அதான் இப்படிப் பேசுற” என மகளிடம் கூற, சட்டென்று விழி நமட்டு சிரிப்புடன், “ஆமா சின்னமா! அத தான் நானும் சொல்ல வந்தேன். இன்னைக்கு மூணுகிலோ மீனையும் ஒத்தையா உரசி குழம்பு வச்சு வறுத்து எடுக்குறீங்க. நீங்க யாருனு எல்லாருக்கும் காட்டுறீங்க. அத்த நீங்க போங்க. உங்களுக்கு இன்னைக்கு லீவு. சின்னமா பார்த்துப்பாங்க” எனக் கூற, பாரிஜாதத்தின் முகத்தில் திகில் படர தொடங்கியது.
லிங்கமும் ஏற்கனவே பாரிஜாதத்தின் பேச்சில் கடுப்பாகி இருந்தவர், “பாரிஜாதம் இன்னைக்கு நீ பண்ணுமா. நானும் நீ சமைச்சு சாப்பிட்டதே இல்ல” எனச் சொல்லி செல்ல, பாரிஜாதம் முழித்த முழியை எதையும் கண்டும் காணாததைப் போல அமர்ந்திருந்த கதிரவன் பார்த்துவிட்டு தனக்குள் சிரித்துக்கொண்டான்.
அதன் பின்னும் விழி பாரிஜாதத்தை விடவில்லை. மசாலாவை அம்மியில் அரைக்க வைத்து, மண் சட்டியில் பதமாக வைக்க வைத்து, தேங்காய் பாலை கூட ஆட்டுரலில் அரைக்க வைத்து எனப் பாரிஜாதத்தை ஒரு வழி செய்ய, அவரோ சமைத்து முடிப்பதற்குள் கிழிந்த நாராகப் போனார்.
ஆனாலும் சமையல் அப்படியொன்றும் பிரமாதம் இல்லாமல் போக, வெளியே சென்றுவிட்டு வந்த லிங்கம் மதிய உணவை சாப்பிட்டு விட்டு, “இந்தா பாரிஜாதம்! இனிமேல் உங்க அண்ணி சமையலை குறை சொல்லாத. இப்படிச் செய் அப்படிச் செய்னு பக்குவமும் சொல்லாத. கொஞ்சம் அவளுக்குக் கூட மாட ஒத்தாசையா இருந்து சமையலை கத்துக்க. ஆனா இது சமையல் கத்துக்குற வயசா என்ன ?” என கண்டிப்புடன் கூறியவர் இறுதியில் ஒரு சலிப்பான கேள்வியுடன் முடிக்க, பாரிஜாதம் எவரது முகத்தையும் பார்க்க துணிவின்றி மிகுந்த கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார்.
அதோடு நில்லாமல் பார்வதியை பார்த்து, “நீ செஞ்சது பழைய குழம்பு எதாவது இருந்தா எடுத்துட்டு வா” எனக் கூற, பார்வதி முகத்தில் அப்படியொரு சந்தோசம். அதைப் பார்த்த கதிரவனின் மனது நிறைய, கண்கள் தானாக விழியைத் தேடியது.
உண்டுவிட்டு வந்தவன் புதுக்கோட்டைக்குக் கிளம்புவதற்காக எதையோ எடுத்துவைத்துக்கொண்டிருந்தான். இன்று புது ஒப்பந்தத்தில் கையெழுத்திடவென்று கிளம்பவே, அவன் மிகவும் நெருக்கமாக உணர்ந்த சட்டை அஃதாவது விழி பரிசளித்த சட்டையைத் தேட அது இஸ்திரி போடப்படாமல் இருக்க, தன் அம்மாவிடம் கொடுத்து இஸ்திரி போட சொல்லலாம் என்று எண்ணி அவரிடம் கொடுத்தான். கொடுத்துவிட்டு வர, அவனுடைய கைபேசி அடிக்கச் சரியாக இருந்தது.
அழைத்திருந்தது சேனாதிபதியே!

Advertisement