Advertisement

உடனடியாக மறுநிமிடமே, “இப்போ மட்டும் என்ன  அதே தைரியம் இப்பவும் இருக்கே. என்ன கல்யாணம் பண்ணிகிட்டத்தலையும் சரி. இப்ப இவனுங்கள மறுபடியும் அடி பிண்ணியத்திலையும் சரி” என அவனது மனம் மெச்சுதலாக எண்ண, அவனது மதியோ, “ஓ அதுனாலதான் பொண்டாட்டின்னு உரிமையா சொன்னியா ?” என இடையில் புகுந்து கேள்வி எழுப்ப. அதற்கு அவனிடம் பதில் இல்லை.
அந்தக் கேள்விக்கான பதிலை அவன் யோசிக்கவும் விரும்பவில்லை. இலேசாக அவள் மீது நல்லெண்ணம் கொள்ளத் தொடங்கிய மனமோ மீண்டும் அடுத்தக் கேள்வியை முன்வைத்தது.
“அப்போ கோவில்ல விழி பந்தயம் கட்டிட்டு வரல. அதுலயும் இவனுங்கதான் வேலைய காட்டிருக்கானுங்க. அப்போ அவ எதுக்கு என்கிட்ட வந்து கண்ண கசக்கினா ?” என யோசிக்கத் தொடங்கியது.
அதற்குள் இன்ஸ்பெக்டர் வந்திருக்க, இவன் மற்றவைகளை மறந்து அவரிடம் பேச தொடங்கினான். முருகேசன் இருந்தும், நேரடி சாட்சியான விழி இருந்தும் அனைத்தையும் கதிரவனே விவரித்துப் பேசி முடிப்பதற்குள் சக்கரை பணத்துடன் காவல் நிலையம் வந்திருந்தான்.
“சார்… விழி கோர்ட்லாம் சாட்சி சொல்ல வரமுடியாது. நீங்க சாட்சி ஏற்பாடு பண்ணிக்கோங்க. மேற்கொண்டு இதுல இவுங்கள உள்ள இழுக்க வேணாம். நான் என்ன பண்ணணுமோ பார்த்து பண்ணிட்றேன். வேற எதாவது வேணும்னாலும் சொல்லுங்க” என ஜாடையாகக் கூற, அவரும் வாயெல்லாம் பல்லாகச் சரி சரி என்று கூறினார்.
முருகேஷனிற்குக் கூடக் கதிரவனின் எண்ணமே! விழி இது குற்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தால் அழைத்து வந்துவிட்டார். ஆனால் வழக்கு என்று போடும் பொழுது விழி சாட்சி என்று அடிக்கடி வருவதா ? நீதிமன்றத்திற்குச் செல்வதா ? என்ற கேள்வியெல்லாம் வர, இன்ஸ்பெக்டரிடம் பேசவேண்டும் என்று நினைத்திருக்க, அதற்குள் கதிரவன் பேசி முடித்திருந்தான். அவன் பெரிதாக எதுவும் மெனக்கிடவில்லை. கெஞ்சலாகவும் கூறவில்லை. சாதாரணமாகப் பேச்சோடு பேச்சாகவே பேசியிருந்தான். அதோடு அவனுடைய பணத்தையும் கொஞ்சம் பேச வைத்திருந்தான். அவ்வளவே! எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் குரல் உயர்த்தாமல் எதுவும் செய்யாமல் தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொண்டு வெளியே வர, மகேஷும் சுந்தரும் ஓரமாக நின்றிருந்தனர்.
விழி இத்தனை நேரம் ஒரு அமைதியுடனே அனைத்தையும் பார்த்துஒண்டிருந்தாள். வெளியே கிளம்பும் போது, மகேஷையும் சுந்தரையும் பார்த்தவள் முன்னே சென்ற முருகேஷனிடம், “மாமா..ஒரு நிமிஷம் முன்னாடி போங்க எல்லாரும். இதோ வந்துடறேன்” எனக் கூறி அவர்களிடம் செல்ல, அவளுக்குப் பின்னால் வந்த கதிரவன், மற்றவர்களைப் போகும்படியாகச் சமிங்கை காட்டிவிட, முருகேசனும் மற்றவர்களும் அகன்றனர்.
கணவன் பின் நிற்பதை கவனிக்காமல், அனைவரும் சென்றுவிட்டதாய் எண்ணி, அவர்களிடம் சென்றவள், “டேய் நிஜமாவே அவரு உங்கனாலா தான் என்ன அடிச்சாரா ?” எனத் தன்னுடைய ஒரு புருவத்தை மட்டும் ஏற்றி யோசனையாகவும் கேள்வியாகவும் அதட்டலுடன் அவர்களிடம் கேட்க, முன்பு ஜம்பமாகக் கூறிய அதைச் செய்தியை இப்போது சற்றே தணிந்த குரலில் தடுமாற்றத்துடன், பின் நிற்கின்ற கதிரவனுக்குப் பயப்படுவதா இல்லை அவனுக்கு முன் நிற்கின்ற விழிக்கு பயப்படுவதா என யோசித்தபடியே “ஆம்” எனத் தலை அசைக்க, விழி உற்சாகம் நிறைந்த குரலில், “வாவ்… நிஜமாவா… ச்சா இது தெரியாம உங்கள அடிச்சுட்டேனே! நீங்க என்ன கோபப்படுத்திடீங்கடா. அதுனாலதான் கை நீட்டிட்டே. சரி விடுங்க! உங்கனால தான் மாமா என்ன அடிச்சாரு… அதுக்கு மொத உங்களுக்குத் தேங்க்ஸ்” எனப் புன்னகையுடன் கூற, அந்த இரெண்டு நபர்களுடன் கதிரவனும் இவள் பேச்சில் புரியாமல் நின்றனர்.
மகேஷ் சுந்தரின் முகத்தைப் பார்த்தே புரிந்துகொண்டவள், “எதுக்குத் தேங்க்ஸ்னு புரியலையா ? அது ஒண்ணுமில்ல. அன்னைக்கு மாமாகிட்ட நான் ஒரு தேங்க்ஸ் புறவு ஒரு சாரி அத தான் சொல்ல வந்தேன். வரப்ப கண்ல விபூதி பட்டிருச்சு. அதுனால கண் கலங்கிடுச்சு. போன உடனே நீங்க பண்ணின வேலையில என்ன ஏதுன்னு கூடப் பார்க்காம மாமா பளார் ஒரு அரை விட்டாரு பார்க்கணும்.
செம்மையா இருந்துச்சு. ” என ரசித்துச் சொல்ல, மற்றவர்கள் இவளை ஒரு மார்கமாகப் பார்த்தனர்.
“அதுலயும் அரை வாங்குனதும் தொட்டால் பூ மலரும்னு பாட்டெல்லாம் வேற போட்டானுங்கடா. அப்போதான் மாமா மேல எனக்கு மொத மொத காதல் வந்துச்சு.
நீங்க மட்டும் அன்னைக்கு அப்படிப் பண்ணாம இருந்திருந்தா நான் சொல்ல வந்தத சொல்லிட்டுப் போயிருப்பேன். இப்படி ஒரு கெத்தான புருஷன் கிடைச்சிருப்பாரா ? அதுனால உங்களுக்குத் தான் தேங்க்ஸ் சொல்லணும்.” எனக் கூற அவர்கள் இருவரும் இதற்கு என்ன சொல்லணும் இப்படியும் ஒரு பொண்ணா எனப் பார்த்திருக்க, கதிரவனோ “அடிச்சா கோபம் தானே வரணும் ? இவளுக்கென்ன காதல் வந்ததுன்னு சொல்லுறா ?” என யோசிக்கும் போதே,
இவ்ளோ அவர்களிடம் சீரியஸாக, “அதுமட்டும் இல்லை அன்னைக்கு அவர்கிட்ட என்ன அடிவாங்க வசீங்க. இன்னைக்கு எனக்காக உங்கள அவரையே அடிக்க வச்சுடீங்கடா… இது தான் சூப்பர். அதுனால உங்ககிட்ட ஒரு டீலிங். இனிமேல் உங்கள அடுத்தத் தடவ பார்குறப்ப அடிக்க மாட்டான். சரியா… வரேன்” எனக் கூற, இதைக் கேட்ட கதிரவனுக்கு அவனையும் மீறி இலேசாகப் புன்னகை அரும்பியது.
அவள் வரேன் என்று கூறும்பொழுது சுதாரித்துச் சட்டென்று வாசலை நோக்கி நடக்க, அப்போது தான் திரும்பியவள் போகின்றவனைப் பார்த்து, “கேட்டிருப்பாரோ ?..ச்சா இருக்காது. மாமாக்கு அம்புட்டு கூரு எங்க ?” எனக் காதலுடன் கிண்டலாகச் சொல்லியபடி அவளும் வெளியேறினாள்.
முருகேசனும் அவரின் ஆட்களும் கதிரவனிடமும் விழியிடமும் சொல்லி செல்ல, கிளம்பும் தருவாயில் கான்ஸ்டபிள் மீண்டும் இவனிடம் வந்து ஏதோ பேச, எதிரிலிருந்த கடையைப் பார்த்த விழி சக்கரையை அந்தக் கடைக்கு அனுப்பி எதையோ வாங்கிவரும் படியாகக் கூற, அவனும் சென்று வாங்கிவந்தான்.
கான்ஸ்டபிளிடம் பேசிக்கொண்டிருந்தாலும் முதல் முறையாகக் கதிரவனின் பார்வை முழுவதும் விழியினிடமே இருந்தது. காதல் வந்ததென்றால் அவனே ஒப்புக்கொள்ளமாட்டான். ஆனால் விழி அவனின் சிந்தனைகளை முதன் முறையாக நல்ல விதமாக ஆக்ரமித்திருந்தாள்.
அவள் நின்றிருந்த தோரணை, கதிரவனுக்குச் சற்று முன் மஹேஷிடமும் சுந்தரிடமும் பேசியதை நினைவூட்ட, மெல்ல அதை நினைத்து பார்த்துச் சரித்துக்கொண்டான்.
காவலர் பேசுவதில் கவனமில்லாமல், “காதலிக்கிறத கட்டினவன்கிட்ட சொல்லாம கண்டவன்கிட்ட போய்ச் சொல்லிட்டு இருக்கா ?” என நினைத்து சிரிக்க, அவனுடைய புத்தியோ, “அப்போ அவ காதல் சொல்லணும்னு ஆசைப்படறியா ?” எனச் சட்டென்று கேட்டுவிட, “இல்லை கண்டிப்பா கிடையவே கிடையாது. தைரியமானவத்தான். எதுக்கும் அழுகாம இருக்குற துணிச்சலான பொண்ணுதான். ஆனா என்மேல இல்லாத பழிய சுமத்தி கல்யாணம் செஞ்சுக்கிட்டவ” என அறிவுக்கு அவனுடைய மனது பதில் கொடுக்க, மேற்கொண்டு அவள் ஏன் தன்னிடம் காதல் சொல்லவில்லை என்று யோசிப்பதை விட்டொழித்தான்.
ஆனாலும் அவன் மனதில், “அடிச்சா காதல் வருமா ? புதுசா இருக்கே” எனச் சிந்திக்கவும் தவறவில்லை.
கதிரவன் விழிக்குத் தொலைபேசியில் அழைப்பது அரிதிலும் அரிது. ஆனால் இன்று , விழி கிளம்பிய சற்று நேரத்தில் பார்வதி விழி வருகின்ற விஷயத்தைக் கூற, கதிரவனுக்கோ அதில் உடன்பாடில்லை. அவளை வரவேண்டாம் என்று சொல்வதற்கும் அவளைத் திட்டுவதற்குமே அழைத்திருந்தான். முதல் முறை விழி அவன் எண்ணிற்கு அழைத்த போது கதிரவன் பார்வதியிடம் தான் பேசிக்கொண்டிருந்தான். அடுத்து இவன் அழைக்கும் போதே அதைத் தெரியாமல் விழி அழைப்பை ஏற்றுவிட, நடந்த காரியங்கள் அனைத்தும் கதிரவன் அறிய நேர்ந்தது.
முதலில் ஒன்றும் புரியாமல் போனாலும் இவள் ஏதோ கோபமாக ஆண்களிடம் பேசுவதும் மகேஷ் சுந்தர் என்ற பெயர் அடிப்படவும் இவன் சுதாரித்தான். என்னவோ ஏதோவென்று அவளிற்காகப் பதறியது உண்மையே. காதிலிருந்து கைபேசியை அகற்றாமலே ஓட்டமும் நடையுமாக எத்தனை வேகத்தில் வரமுடியுமா குறுக்கு பாதை பிடித்து வந்துக்கொண்டிருந்தான். ஆரம்பித்தில் கேட்ட தண்ணீர் சப்தத்தைக் கொண்டு, வருகின்ற வழியில் இருக்கின்ற ஏதோ ஒரு பம்ப் செட்டின் அருகே தான் அவள் இருக்க வேண்டும் என்ற யூகத்தில் வந்தான். அழைப்பை துண்டிக்கவும் அவனிற்கு மனமில்லை. அது தானே அவள் இருக்கும் இடமும் நிலையும் அறிந்துகொள்ள ஒரே ஆதாரம். ஆதலால் அனைத்தையும் கேட்டபடி வர வர, விழியின் அசாத்திய தைரியம் நிறைய ஆச்சர்யங்களை அளித்தன அவனுக்கு.
இப்படியே அவளைப் பற்றியே யோசித்து யோசித்து மூவரும் நெய்தல் பண்ணைக்கு வந்து சேர்ந்திருந்தனர். எப்போது கான்ஸ்டபிளிடம் பேசி முடித்தான் எப்போது இங்கு வந்தான் என்பதெல்லாம் கருத்தில் பதியவில்லை. புதிதாக விழி இன்று அவன் கருத்தில் புதியவளாகத் தெரிந்தாள்.
“ஹே மாப்பிள தங்கச்சி ஒரே நாளுல இந்த ஊரோட ஹீரோ ஹீரோயின் ஆகிட்டிங்க… தங்கச்சிக்காக அந்தப் பயலுங்கள அடிச்சியாமே கதிர்?” எனப் பாண்டி கேட்க, விழியும் ஓர் எதிர்ப்பார்ப்புடன் அவன் முகத்தை ஏறிட்டாள்.
ஆனால் கதிரவன் அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், “ஏண்டா இங்கன இருந்துகிட்டு எப்படிடா அதுக்குள்ள எல்லாத்தையும் தெருஞ்சு வச்சிருக்க ?” எனக் கேட்டபடி உள்ளே சென்று அவனுடைய நாற்காலியில் அமர, விழிக்கு சிறிது ஏமாற்றமே! ஆனால் அதை மறுகணமே துடைத்தெறிந்துவிட்டு முகத்தைச் சாதாரணம் போல வைத்துக்கொண்டாள்.
இதையும் கதிரவன் கவனிக்கத் தவறவில்லை; பேச்சு யாரிடம் இருந்தாலும் கவனம் விழியின் மீது இருக்க ஆரம்பித்திருந்தது. அவன் பார்த்தனோ இல்லை அவளின் தைரியம் அவனைப் பார்க்க வைத்ததோ தெரியவில்லை.
அவனின் பின்னோடு வந்த பாண்டியோ, “டேய் மாப்பி! என்ன இப்படி கேட்டுபுட்ட ? ஊருசனத்துக்கே தெருஞ்சது எனக்கு தெரியாமையா போகும் ?”
“எப்படிடா ? அதுக்குள்ள பரவுச்சு ?” என சக்கரை கேட்க,
“விஷயம் தெரியாத உனக்கு ? நம்ம ரோசாக்கா இருக்குதுல..” என பாண்டி இழுக்க,
“ஆமா! ஆனா அதுதான் பக்கத்துக்கு ஊருக்கு போயிருக்கே” என சக்கரை கூற,
“டேய் முழுசா சொல்ல விடுடா. நம்ம ரோசா அக்கா சலவைக்கு போட்ட அது சீலய (சேலையை ) சலவை பண்ணி எடுத்துட்டு போனாராம் நம்ம மாரிமுத்து அண்ணே. அது போலீஸ் ஸ்டேஷன் வழியாதா கொண்டு போயிருக்காரு..இது போதாதாடா விஷயம் தீயா பரவ ” என அங்கலாய்க்க
“டேய் என்னடா சொல்லுற ? சீல எப்படி டா போய் செய்தி சொல்லும் ?” என சக்கரை புரியாமல் கேட்க,
பாண்டியோ, “காத்துவாக்குல செய்தி சேரும் போது சேலையில போய் சேரக்கூடாதா ? என்னங்கடா உங்க சட்டம் ? தம்முக்கானு இருக்க புறாக்கூட செய்தி சொல்லுமாம் ராசா காலத்துல. இம்மா பெரிய சீல சொல்லாதாடா ?” என சீரியஸாக பேச,
“டேய் முடியுமாடா ?” என சந்தேகத்துடன் சக்கரை கேட்க
“ஒன்பது கிரங்களுக்கும் உச்சத்தில் இருக்கும் ஒருத்தி….. ஒருத்தி….அதவாது ரோசா அக்கா நினைத்தால் அவங்களோட சீல மட்டுமில்ல, மண்டை, மண்டை மேல இருக்க கொண்டைனு எல்லாமே பொரணி பேசுமடோய்…
ரோசா அக்காவ கொக்கா ” என கூற, அவன் சினிமா பாணியில் பேசுன தினுசில் மற்ற மூவரும் சிரிக்க தொடங்க, சிரிப்பினூடே அவர்களுக்கு சாப்பாட்டை பரிமாறினாள்.
அனைத்தயும் எடுத்து வைத்தவள், “பாண்டி அண்ணே” என கூறியபடி கடைசியாக உள்ளிருந்து ஒரு பொட்டலத்தை எடுக்க, பாண்டி அதை ஆவலுடன் பிரிக்க, அதற்குள் இருந்ததோ சோமாஸ்.
“தங்கச்சி… நீ தான் என்கட்சி. எப்படிடா இப்படி அன்ப பொழியிற இந்த அண்ணே மேல. இந்த ரணகளத்திலையும் சோமாஸ் வாங்கிட்டு வந்து என்ன குதூகலிக்க வச்சிட்ட. இன்னலிருந்து இந்த சோமாஸ் பாண்டி நீ என்ன சொன்னாலும் கேப்பான்” என தீவிரமாக கண்கலங்கி சோமாசின் மீதி சத்தியம் பண்ண மீண்டும் அங்கே சிரிப்பலை.
புதுக்கோட்டை ஏற்றுமதி இறக்குமதி சங்கத்தலைவர் சேனாதிபதி உள்நுழைய அவரின் பின்னோடு இன்னும் இரண்டு வெளிநாட்டவர்கள் வர, அனைவரும் சாப்பாட்டிலிருந்து எழுந்தபடி வரவேற்க, “கதிரவன் என்ன நீங்க ? சாப்பிடுங்க” எனக் கூற, “இருக்கட்டும் சார். சாப்பிட்டாச்சு..நீங்க வாங்க உக்காருங்க” எனக் கதிரவன் கூற, பாண்டியோ மனதில், “நான் எங்கடா சாப்புட்டு முடிச்சேன் ? இப்பதானே சோமாச வாயில வைக்க ஆ னு வாயத் திறந்தேன். பொண்டாட்டி வாங்கிக்கொடுக்குறா புருஷன் அத தின்னவிடாம பண்ணுறான். ஒருவேளை பாமிலியா நம்மள கடுப்பேத்துறாங்களோ” என எண்ணிக்கொண்டான்.
“கதிரவன், இவுங்க இரெண்டு பேரும் நாம ஏற்றுமதி பண்ற பொருளோடு தரத்தை பரிசோதிக்க வந்திருக்காங்க. நம்ம அனுப்புற வெளிநாட்டு கம்பெனியில இது ஒரு வழக்கம். வருஷத்துக்கு ஒருக்கா வந்து பரிசோதனை பண்ணி அவுங்க கம்பெனிக்கு அறிக்கை தாக்கல் செய்வாங்க.
அதைப் பொறுத்துதான் நம்மகிட்ட மேற்கொண்டு சரக்கு எடுக்குறதப்பத்தி முடிவெடுப்பாங்க.
இவரு ஆண்ட்ரு, இந்தப் பொண்ணு பாப்பி” எனக் கூற,
சட்டென்று பாண்டியோ, “என்னது பாப்பின்சா ? அது மிட்டாய் பேருல” எனக் கூறிவிட அந்த வெள்ளைக்கார பெண்ணிற்குச் சரியாகப் புரியாமல் போனாலும் பாண்டியை திரும்பி பார்க்க, அவன் வாயில் வைத்திருந்த சோமாஸை நழுவவிட்டிருந்தான்.
ஆ வென வாய் பிளந்து அந்தப் பெண் பாப்பியை பார்க்க, அந்தப் பெண்ணோ ஆங்கிலத்தில், “ஹூ இஸ் ஹீ ?” எனக் கேட்க, விழியோ சட்டென்று, “சோமாஸ் பாண்டி” எனக் கூறிவிட்டு பின்பு நாக்கை கடிக்க, அவனோ, “நீ என்கட்சியில்ல எதிர்க்கட்சி!” என அவளின் காதை கடித்தபடி முணுமுணுக்க, “சாரி அண்ணா! தெரியாம உண்மைய உளறிட்டேன்” என இவள் விழிக்க இதை மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்த கதிரவனும் சக்கரையும் சிரிப்பை மிகவும் சிரமப்பட்டு அடக்கினர்.
“வாட் ? சோமாஸ் பாண்டி ?” என மீண்டும் அப்பெண் ஊர்ஜித படுத்துவதற்காகக் கேட்க, நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டுத் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், “நோ நோ லேடி! மீ மாஸ் பாண்டி” எனத் தன்னைத் தானே அறிமுகம் செய்துகொண்டான்.
பாப்பிப் பாண்டியை சந்தேகமாகப் பார்க்க, “யூ நம்பலை மீ ? யூ டெஸ்ட் ; கால் மாஸ் பாண்டி. ஐ டெல் எஸ் மிஸ் சாரி எஸ் பாப்பி” எனத் தட்டுத் தடுமாறிக் கூறினான். அதாவது நீ என்னை நம்பவில்லையா ? நீ வேணுமென்றால் என்னைச் சோதித்துப் பார். நீ மாஸ் பாண்டி என்று அழைத்தால் நான் உள்ளேன் என்று கூறுவேன். என்பதையே அவன் இப்படிக் கூறிவைக்க, பாப்பியோ, “ஓகே ஓகே தென் வாட் அபௌட் சோ ? மாஸ் பாண்டி” எனக் கேட்டுவிட, விழியை எரித்துவிடும் பார்வை பார்த்தவன், “அது மை டாடி நேம் பர்ஸ்ட் லெட்டர். சோ ” எனச் சமாளித்தான்.
வேகமாகச் சக்கரை, “டேய் உன் இனிஷியல் ‘எஸ்’ தானே டா ?” எனக் கேட்க, “அடே! எங்க அப்பா பேரு சொக்கையன் டா…அப்போ சோ னு சொல்லலாம்ல” என மெல்ல கூற, விழியோ முந்திக்கிட்டு , “அண்ணா அப்படினாலும் சொ தானே வரணும் ? எப்படிச் சோ வரும் ?” எனக் கேட்க, ‘இதோ பாரு நல்ல வெளிநாட்டு பிகரு முன்னாடி மானத்த வாங்குன அப்புறம் நான் அழுதுருவேன்.
இதோ பாருங்கட இரெண்டு பேருக்கும் சொல்றே. நல்லா கேட்டுங்க. எஸ் அப்படினும் சொல்லாம் சோ அப்படினும் சொல்லலாம் நீங்க சொல்றமாதிரியும் சொல்லலாம். ஆள விடுங்க” எனச் சலிப்புடன் கூற,
சக்கரையோ, “தங்கச்சி இது செந்தில் கௌண்டமணி காமடி போல இல்லை ? பூ பொய்ப்பம் நீங்க சொல்றமாதிரியும் சொல்லலாம்” எனக் கூற, இம்முறை கதிரவன் சேனாதிபதி கூடச் சிரித்துவிட்டிருந்தனர்.
ஆண்ட்ருவும் பாப்பியும் புரியாமல் விழிக்க, கதிரவன் தான் அவர்களிடம் வேறு எதையோ பேசி பண்ணைக்குள் அழைத்துச் சென்று அனைத்தையும் காட்டிவிட்டு வர, ஒருவழியாக அனைவரும் கிளம்பும் தருணத்தில், ஆண்ட்ருவோ இன்னும் இரெண்டு முறை பரிசோதனை இருப்பதாகவும் மீண்டும் வருவதாகவும் சொல்லி செல்ல, பாப்பி அனைவரிடம் தலை அசைப்புடன் கிளம்ப, பாண்டியை மட்டும் பார்த்து, “பை மாஸ் பாண்டி” என அவளின் கிள்ளை மொழியில் கொஞ்சி செல்ல பாண்டி வாயிற்குள் ஈ நுழைவது கூடத் தெரியாமல் நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனின் நிலையைப் பார்த்த மற்ற மூவரும் சிரித்துச் சிரித்து வயிறு வழிக்கு ஆளாயினர்.
நீண்ட நாளுக்குப் பிறகு நிறைவான மனதோடு விழி வீட்டிற்கு வர, உடன் கதிரும் வர, அங்கே ஒரு பெரிய கூட்டமே அவர்களுக்காகக் காத்திருந்தது. லிங்கம் உட்பட.

Advertisement