Advertisement

சோமாஸ் (எ) மாஸ் பாண்டி  -27
“இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு மச்சான் அத்தனை மயிலும் காலி” என ஒருவன் கூற, மற்றொருவனோ, “ஒன்னும் பிரச்சன்னை வந்திடாதுல” என யோசனையாகக் கேட்க, “இல்லவே இல்லை, சுளுவா முடிச்சிடலாம். வந்துட்டு இருக்கானே ஏழுமலை, அவன் கொண்டு வர மருந்து வீரியம் ஜாஸ்தி. கொஞ்சம் இந்தத் தானியத்தோட கலந்து வச்சிட்டா போதும். அம்புட்டும் தின்னுட்டு செத்து போய்டும்.
புறவு உங்க வயலை இருக்க நெல்லு நாசமாகாது உங்களுக்கும் நட்டமாகாது” எனக் கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டுத்தான் விழி திடுக்கிட்டு போனாள்.
“அட பாவிங்களா” என அவர்களின் மீது கோபம் வந்து ஓர் அடி எடுத்து வைக்கத் தூரத்தில் மயிலொன்று உய்யாரமாய் அகவ, அப்படியே நின்றாள். கண்ணெட்டும் தூரம் வரை அவர்களையும் மயில்களையும் தவிர யாருமில்லை. அதோடு விஷம் கொண்டு வருபவனும் அவர்களை நெருங்கிவிட்டிருக்க, இவர்கள் முன்பு இருந்த இடம்விட்டு வந்துகொண்டிருந்தவனை நோக்கி நடக்க, அவர்கள் இவளை விட்டு சற்று தள்ளி சென்றனர். அவர்களுக்கோ மோட்டார் அறைக்குப் பின்னால் இவள் வந்துகொண்டிருந்ததோ, இவர்கள் பேசியதை சற்றே தன்னை ஒதுக்கிக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்ததோ தெரியாத காரணத்தினால் அவர்கள் வந்துகொண்டிருந்த ஏழுமலையிடம் சென்று அவன் கையிலிருந்த தானிய பையையும் விஷ மருந்தையும் வாங்கினர்.
வேகமாக யோசித்த விழி, சிறு யோசனையோடு கதிரவனின் எண்ணிற்கு அழைக்க, அதுவோ வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருப்பதாகக் காட்ட, சற்றும் தாமதிக்காமல் முருகேஷனிற்கு அழைத்துவிட்டாள்.
“மாமா…” எனத் தொடங்கிச் செய்தியை சுருக்கமாகச் சொல்லி, உடனடியாகக் காவல் நிலையத்தில் இதைத் தெரிவிக்கும் படியும், கிழக்கு வயலில் உள்ள மோட்டர் அறைக்குப் பக்கத்திலிருக்கும் பகுதிக்கு விரைந்து வரும்படியும் கூறி வைத்தாள்.
அவர்கள் அதற்குள் உணவோடு விஷத்தை கலந்து தயார் செய்திட, விழி நடந்துகொண்டிருக்கும் விபரீதத்தை அறிந்து இனி அவர்களைத் தடுக்கத் தான் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாள். ஏனெனில் காவலரும் அவளின் மாமாவும் வருவதற்குள் அந்த மயில்கள் இவைகளை உண்டுவிடும் அபாயம் இருப்பதால், சட்டென்று தான் இருந்த இடத்திலிருந்து வெளியே வந்தாள்.
அவர்கள் முன் அவளை வெளிப்படுத்திக்கொள்ளும் முன் அவளுக்கு அந்தச் சிரமத்தை தராமல் அவளின் கைபேசி சிணுங்கிவிட அதைச் சட்டென்று நிறுத்த, அவர்களோ யாரோ வருவதை அறிந்து கொஞ்சம் பதற்றம் கொண்டனர்.
அதைக் கவனித்துவிட்ட விழி அவர்களை நோக்கி முன்னேற, அவர்களும் “யார்டா இவ ?” என இவளை நோக்கி வர அருகில் வந்ததும் இருவருக்கும் “நீயா ?” என்ற பாவனையே.
ஆம் எதிரில் நின்றவர்கள் மகேஷும் சுந்தரும்.
“அட மச்சான் யாருனு தெரியுதா? டீச்சர் அம்மாடா! தப்பு செஞ்சன்னு உன்ன குச்சியை வச்சு அடிச்சாங்களே” என ஒருவன் கூற, மற்றொருவனோ, “ச்ச சா… அப்படிச் சொல்லாதாட, இப்ப இவ கதிரவனோட பொண்டாட்டி அப்படினு சொல்லிட்டு தான் அன்னைக்குக் கோவில்ல வந்து நின்னா” என நக்கலாகப் பேச, “ஆமா! அப்படிதான் சொன்னேன். அதுக்கு இப்ப என்னங்கடா ?” என அவர்களைக் கொஞ்சமும் மதிக்காமல் அலட்சியமாகக் கைகளைக் குறுக்கே கட்டியபடி இவள் திமிராகப் பேச, “அடியே! உன்ன அன்னைக்கே சும்மா விட்ருக்கக் கூடாதுடி” என மகேஷ் அவளை அடி அடியென்று பேச பேச விழிக்கு அப்படியொரு கோபம்.
அடுத்த நிமிஷம் ‘பளார்’ என்ற ஒலி எங்கும் எதிரொலித்தது. அதே நேரம் தண்ணீர் வந்துகொண்டிருந்ததும் நின்று போக எந்தவொரு சப்தமும் இல்லாமல் நிசப்தமாக இருந்த இடத்தில் விழி கொடுத்த அடியின் ஒலி உச்சத்தைத் தொட்டியிருந்தது.
மகேஷ் கன்னத்தின் விழுந்த அடியின் எரிச்சலால் கன்னத்தைத் தாங்க அவனுடைய கை அவனே அறியாமல் மேல் எழுந்திருக்கச் சுந்தர் கூட ஓர் நொடி ஒரே நொடி பின்னாடி நகர்ந்திருந்தான். ஏழுமலையோ நாலு அடி பின்னால் சென்றிருந்தான்.
எல்லாம் ஓரிரு நிமிடங்கள் தான். ஒரே நிமிடமானாலும் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள். அச்சத்தைக் கொடுத்திருந்தாள் விழி. நிமிர்வுடன் ஒருவித தைரியம் தந்த திமிருடன் அசராமல் நின்றவளை பார்த்து மகேஷ் சுந்தர் இருவரும் திணறியது உண்மையே. ஆனாலும் விரைவில் சுதாரித்துக்கொண்டு சட்டென்று சுயத்திற்கு வந்தவர்கள், “ஏ….” என ஆக்ரோஷமாகக் கத்த, மகேஷோ, “எதுக்கு டி இப்ப என்ன அடிச்ச ?” எனக் கேட்க, “நீ தானே அடி அடி னு சொன்ன. அதான் அடிச்சேன்” எனச் சாதாரணமாகக் கூற, அவனோ எப்போது அடிக்கச் சொன்னதாக யோசித்துப் பின்பே உணர்ந்தான் தான் அவளை அடி என்று அழைத்திருந்ததை.
மீண்டும் கோபத்தின் உச்சியில் அவளை அடி என்று அழைக்க வாயெடுத்தவன், இன்னமும் அவள் கொடுத்த அரைக் கன்னத்தில் எரிச்சலை தந்து நினைவூட்ட, சொல்ல வந்ததை அப்படியே தொண்டைக்குழியில் முழுங்கியவனாக, “திமிரு தான் உனக்கு…” என ஆத்திரம் அடங்காதவனாகப் பற்களை நறுநெறுவென்று கடித்தபடி ஓரடி முன் வர, அப்போதும் விழி பின்னகரவில்லை.
“ஹ்ம்ம் தைரியம்தான் உனக்கு… இங்க யாருமில்ல. நாங்க மூணு பேரு; நீ ஒருத்தி. அப்படி இருந்தும் உனக்குத் தைரியம் ஜாஸ்திதான். நீ கூப்பாடு போட்டாலும் ஒருத்தனும் வரமாட்டான். எங்க இருந்து இவ்ளோ திமிரு வந்துச்சு ?” என ஒருமாதிரி சிரிப்புடன் அவளை அச்சுறுவதற்காக நக்கலாகக் கேட்டான்.
அவனுக்கு நிச்சயம் கனல்விழியைப் பயம் கொள்ளச் செய்யவேண்டும். தன்னை ஒரு நிமிடமானாலும் அச்சம் கொள்ளச் செய்தவளின் கண்களில் பயத்தைப் பார்த்தே ஆக வேண்டும். தங்களைப் பஞ்சாயத்தில் மன்னிப்பு கேட்க வைத்தவளை தங்கள் முன்னிலையிலாவது மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். அதைப் பொருட்டே அவன் இப்படிப் பேச, ஆனால் விழி கொஞ்சமும் அவன் எதிர்பார்ப்பின்படி நடந்துகொள்ளவில்லை.
கட்டின கணவனிடம் காதலுக்காகவே தலை குனியாதவள் இவர்களிடமா மண்டியிட போகிறாள் ?
அலட்சியமான முறுவலுடன், “எங்க இருந்து தைரியம் வந்ததா? நீ என்ன லூசா ? நான் கதிரவன் பொண்டாட்டிடா. இது கூட இல்லாட்டி எப்படி ? அவருக்கு மட்டும் தெருஞ்சது உன்ன உறுச்சு உப்புக்கண்டம் போற்றுவாரு.
ஆனா உன்ன மாதிரி சின்னப் பையன பார்த்துக்க அவறெதுக்கு ? நான் பத்தாதா ?” எனக் கூற, “அயோ பயமா இருக்கே… உப்புக்கண்டம் நிஜமாவே போற்றுவாரா ? டேய் சுந்தரு உனக்கும் பயமா தானே இருக்கு ?” எனப் பொய்யாக அழற, சுந்தரும் அதற்கு ஏற்ப, “ஆமா மகேசு, கை கால் எல்லாம் உதறுது. ஏற்கனவே நம்மள உறுச்சு உப்புக்கண்டம் போட்டவராச்சே” எனக் கூற,
மகேஷ், “ஹ்ம்ம் பஞ்சாயத்துல உனக்காகப் பாஞ்சு பாஞ்சு பேசுனனே உன்னோட புருஷன். எங்களை மன்னிப்பு கேட்க வச்சானே. அதே போல இப்பவும் பண்ணுவான்னு சொல்ல வரியா ?”
“டேய் இல்ல மகேஷ்! அப்படிக் கேக்குறவனா இருந்தா அன்னைக்கு ஆவுடையார் கோவில்ல இவளை தப்பா பேசி அவன் கையாளவே இவளை அடிக்க வச்சோமே அப்பவே பண்ணிருப்பான்.
கல்யாணமாகி மாசகனுக்குல ஆச்சு. இப்பவரைக்கும் பண்ணலன்னா என்ன அர்த்தம் ?” எனச் சுந்தர் கூற,
“என்னடா அர்த்தம்?” என மஹேஷ் வினவ,
“அந்தச் சண்டியரு இவகிட்ட அத பத்தி கேட்கல. இல்லனா இந்தச் சண்டிராணி அத பத்தி சொல்லல. எப்படியோ அத பத்தி பேசிக்கல போல. இல்லனா அவரு தான் வந்துருப்பாருல”
“டேய்..அவரு இந்த அம்மாவை அடிச்சதுக்கான காரணம் அந்த அம்மாக்கே தெரிஞ்சிருக்காதுடா. இல்லாட்டினா இந்நேரத்துக்கு அவரு வந்துருப்பாரே” என மற்றவன் கூற,
இவளை எரிச்சலூட்ட அவர்கள் மாற்றி மாற்றிப் பேசுவதுபோலப் பேச, விழியோ எரிச்சலிற்குப் பதிலாய் யோசனைக்குத் தாவினாள். “இந்த இரெண்டு லூசுங்களும் என்ன உளறுதுங்க ?” என அதையே அவள் நிதானமாக அவர்களிடம் கேட்க, அதுவே அவர்களுக்குப் போதுமானதாய் இருந்தது.
எப்படியோ தங்களின் சாதனையை அவளிடம் தம்பட்டம் அடிக்கலாமென்று…இவர்கள் செய்ததை இறுமாப்புடன் கூறிவிட்டு, “பார்த்தியா ? அப்போ சின்னதா உன் புருஷன்கிட்ட கொளுத்தி போட்டத, கொஞ்சம் பெருசா பத்தவைக்க முடியாதுனு நினைக்கிறியா ? அது மட்டுமில்ல இங்க மூணு ஆம்பளைங்க மத்தில இம்புட்டு நேரம் உனக்கென்ன பேச்சுனு ஒரே ஒரு வதந்தியா ஊருக்குள்ள பொருத்திப்போட்டா உன்னோட புருஷன் எப்படி நிமிர்ந்து நடப்பான்…என்னமா சண்டிராணி பண்ணிடலாமா ? உன்னோட மானம் என்ன ஆகும் தெரியுமா ?” என ஒருவித வக்ரத்துடன் வினவ, இப்போதாவது அவள் அஞ்சுவாள் என எதிர்ப்பார்க்க, அவ்ளோ நக்கலாகச் சிரிக்க,
“எதுக்குதான் இவ அசருவா?” என்ற ரீதியில் அவர்கள் குழப்பமாகப் பார்க்க, இவளோ நிதானமாக, “என்னோட மானம் நீ சொல்லுற வார்த்தையிலே இல்லடா. நான் வாழுற வாழ்க்கையில இருக்கு… அத நான் பாத்துக்கிறேன். இப்ப நீ வேற ஒரு விஷயத்தைப் பாரு. குழப்பமா இருக்கா? இருக்கட்டும். அத தெளிய வைக்க உங்க பிரண்ட்ஸ் வராங்க..” எனக் கூற, பின்னால் திரும்பி பார்த்த மூவரும் ஓர் நொடி அதிர்ந்தனர்.
அதன் பிறகு கண் மூடி திறக்கும் நொடியில் முருகேசன் மற்றும் அவருடைய ஆட்கள் நால்வருடன் வந்திருந்த இரண்டு கான்ஸ்டபில் அவர்கள் மூவரையும் சுத்தி வளைத்திருக்க, பேய் அறைந்ததைப் போலக் கிலியுடன் நின்றிருந்தனர்.
“பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினம் பட்டியல்கள்ல இருக்க மயில்கள விஷம் வச்சுக் கொள்ளப் பார்த்த குத்ததுக்காகக் கைதாகுறீங்க. ருசுவோட பிடிப்பற்றுக்கீங்க” எனக் கூறி விஷம் கலந்த தானியத்தையும் கைபற்றினர்.
விழியிடம், “அம்மா, நேர்ல வந்து ஒரு கம்பளைண்ட் கொடுத்து போமா” எனக் கூற சரி என்பதாய் அங்கிருந்து நகரப் போனவர்களை, “ஒரு நிமிஷ சார்” என்ற கதிரவனின் குரல் தடுத்தது.
மஹேஷும் சுந்தரும் இனி இவன் வேறா என்ற ரீதியில் அவனை பார்க்க, விழியோ இவரெங்க இங்க ? என்ற கேள்வியில் பார்க்க, அதையெல்லாம் கதிரவன் சட்டைசெய்யவில்லை.
கான்ஸ்டபிளிடம் வந்தவன் அவர்களுக்கு நடுவில் நின்ற சுந்தரையும் மகேஸையும் கொஞ்சமும் யாரும் எதிர்பார்க்காத கணத்தில் அறைந்திருக்க, பளார் என்ற சப்தம் மட்டும் அடுத்தடுத்துக் கேட்டிருக்க இருவரும் கன்னம் வீங்கி நின்றிருந்தனர்.
கான்ஸ்டபிள், “என்ன தம்பி நீங்க இப்படிக் கை வைக்கிறீங்க ? ஊருல மதிப்பு மருவாதையுமா இருக்க ஆளு சட்டுனு கோப படலாமா ? இன்ஸ்பெக்டர் தெரிஞ்சா அவரு வேற குதிப்பாரு பா” என வயதான காவலர் ஒருவர் கூற, “நீங்க விடுங்க சார். அவர்கிட்ட நான் பேசுகிறேன். இப்ப இவனுங்க கிட்ட கொஞ்சம் பேசவேண்டியிருக்கு” எனக் கூறியவன், அவர்களின் அருகே சென்று, “அவ சொல்லாமலோ நான் கேட்காமலோ இல்ல. உங்களுக்குக் கெட்ட காலம் வராம கொஞ்சகாலத்துக்கு இருக்கணும்னுதான் நான் வரல.
நீ சொன்ன பொய்க்கு தேடி வந்து அடிக்க வேணாம்னு நினைச்சே, ஆனா வழியவந்தவன அடிக்கமா விடலாமா ?” எனக் கேட்டபடி பேசிக்கொண்டிருக்கும்போதே முகத்தில் ஓங்கி குத்தியவன், “இது நீ என் பொண்டாடிய மரியாதை குறைவா பேசுனத்துக்கு” எனக் கூற, சட்டென்று விழி கதிரவனின் கண்ணோடு கண் பார்த்தாள்.
அதே நேரம் கதிரவனும் எதேர்ச்சியாகப் பார்க்க, கதிரவனின் பார்வையும் முதன் முறையாக விழியின் பார்வையைக் கவ்வி நின்றது. ஓரிரு வினாடிகள் தான் என்றாலும் இருவரின் பார்வையும் ஒருவரை விட்டு ஒருவர் விலகாமல் இருக்க, ஏனோ அதைக் கண்ட முருகேசனுக்கு இதமாக இருந்தது.
அவளது பார்வை, “உங்களுக்கு எப்படித் தெரியும் ?” என்பதாய் இருக்கச் சட்டென்று அவள் கண்களில் மின்னல் பளிச்சிட்டது. வேகமாகத் தன்னுடைய கைபேசியை எடுத்து பார்க்க, அது இன்னமும் கதிரவன் கைபேசியுடன் தொடர்பில் ஓடிக்கொண்டிருந்தது. கடந்த இருபது நிமிடங்களாக அது தொடர்பில் தான் இருந்துகொண்டிருப்பதை ஓடிக்கொண்டிருந்த நிமிடங்கள் காட்ட, அப்போதே புரிந்தது அவளுக்கு.
மோட்டார் அறையிலிருந்து வெளியே வரும்போது வந்த அழைப்பை யாரென்று பார்க்காமல் துண்டிப்பதாய் நினைத்து ஏற்றிருந்தாள். நடந்த அத்தனையும் கதிரவனுக்கு இப்படித் தான் தெரிந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள்.
அதேநேரம் கதிரவனுக்கு நிறைய விஷயங்கள் கேள்வியாகவே இருந்தது.
ஆனாலும் அவனால் அதற்கு மேலாகச் சிந்திக்க முடியாமல் காவல் நிலையம் சென்றிருந்தனர்.
அங்கிருந்த அனைவருமே முருகேஷனிற்குப் பெரிய மனிதர் என்று எத்தனை மரியாதை தந்தனரோ அதே அளவு மரியாதை வயதில் சிரியவனான கதிரவனுக்கும் அளித்தனர். காரணம் தொழிலில் அவன் அத்தனை தூரம் தன்னை முன்னேற்றிக்கொண்டு தன் செல்வாக்கையும் உயர்த்தி இருந்தான்.
இன்ஸ்பெக்டர் வர சிறிது நேரம் ஆகும் என்ற நிலையில் மீண்டும் கதிரவனுள் கேள்விகள் பூதாகரமாக எழுந்தன.
‘பஞ்சாயத்தில நான் இவளுக்காகவா பேசினேன்? அத தான் அந்த ரோசா அக்காவும் அன்னைக்குச் சொல்லுச்சா ? இவ முருகேசன் சித்தப்பாவோட சொந்தம்னு தெரியும். அட ஆமா, அன்னைக்கு நான் யாருக்காகப் பஞ்சாயத்துல பேசுனேனோ அவளும் இவரோட சொந்தகார பொண்ணுதானே? அப்போ அவ தான் இவளா ?’ என்ற கேள்வியின் விடையாய் “கதிரவா! இத பேச சரியான இடம் இது இல்லாட்டியும் பேச சரியான நேரம் இதுதான் தோணுது ஐயா. கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி விழிக்காகப் பஞ்சாயத்துல அவனுங்கள மன்னிப்பு கேட்க வச்ச. இன்னைக்கு விழிக்கிட்ட மரியாதை குறைவா பேசிட்டாங்கனு கை நீட்டிட்டியேப்பா…
அன்னைக்கும் இன்னைக்கும் ஒரே கதிரவனை நான் பார்க்கிறேன். விழி சொன்னது நிசமோ பொய்யோ ஆனா உங்க இரெண்டுபேருக்குத்தான் வாழ்க்கைனு ஆண்டவ கணக்கு போட்ருக்கான்.
நடந்தது எனக்குக் கொஞ்சம் தாமதமா தான் தெரியும். விழியை நினச்சு ரொம்பக் கவலைப்பட்டேன். உன்கிட்டையும் எப்படிப் பேசுறது என்ன சொல்றதுன்னு தெரியல. அதான் இத்தனை நாளா பேசல. ஆனா உன்னோட வாயில இருந்து பாப்பாவை பொண்டாட்டின்னு சொல்லி சொல்லி அவுங்கள அடிச்ச பாத்தியா ? எனக்கு இது போதும் கதிரவா. நிம்மதியா இருக்கு. உனக்கு ஒரு குறையும் வராது” எனக் கூற, கதிரவனுக்கு இப்போது சிறுவயதில் அவன் பார்த்த அவன் வியந்த அவன் பாராட்டிய தைரியமான பெண் இதே விழி தான் எனத் தெரிந்தவுடன், “இவள் தானா ?” என்றதொரு வியப்பு.

Advertisement