Advertisement

விழியின் பார்வையில் காதல்  – 26
“மாமா” என ஓசைவராமல் உதடைசித்து மெல்ல முணுமுணுத்துக்கொண்டவள், வேகமாகக் கைபேசியின் அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்து, “மாமா… மாமா என்ன மன்னிச்சிடுங்க மாமா. அப்பா எப்படி இருக்காங்க மாமா ? ஹெலோ மாமா இருக்கீங்களா ?” என எதிர்முனையில் முருகேசன் பேசும் முன்பாகப் படபடவென்று பேச, “பாப்பா ஏன்மா இப்படிப் பண்ணிட்ட ?” எனக் கரகரத்த குரலில் முருகேசன் பேச, விழி அமைதியானாள்.
“என்ன பாப்பா? நேத்து பொய் பேசும்போது அவ்ளோ சத்தமா பேசுன ? இப்ப மாமாகிட்ட மட்டும் இவ்ளோ அமைதியா இருக்க ?” எனக் கேட்க, விழி திடுக்கிட்டாள்.
“மாமா… நான் பொய்…” என வார்த்தை தடுமாறும் போதே, முருகேசன் பேச தொடங்கினார்.
“எதுக்குப் பாப்பா இம்புட்டுக் கஷ்டத்தை இழுத்து வச்சிருக்க? உம்பக்கத்துல யாராவது இருக்காங்களா ?” என முருகேசன் கேட்ட பின்பே நடுக்கூடத்தில் நின்று பேசுகிறோம் என்பதே புரிந்தது அவளுக்கு, சட்டென்று நாலாபுறமும் கண்களை ஓட்டியவள் பிறர் கேட்காதவாறு மறைவான இடத்திற்குச் சென்று பேச தொடங்கினாள்.
“மாமா நீங்க என்ன சொல்லுறீங்க?” என ஆரம்பிக்க, “நீ தான் பாப்பா சொல்லணும். எதுக்காக நடக்காத விஷயத்தை உன்னால கனவுல கூடப் பண்ண முடியாத காரியத்தைப் பண்ணினதா சொன்ன?” எனச் சரியாகக் கேட்டுவிட, “எப்படி மாமா உங்களுக்குத் தெரியும் ?” எனத் தயங்கினாலும் விழி கேட்டேவிட, “மாப்பிள்ளையும் முல்லையும் பேசுனதத் தற்செயலா கேட்டேன் பாப்பா. முல்லை தான் உங்க அப்பாருகிட்ட உனக்காக வக்காலத்து வாங்கிகிட்டு இருந்துச்சு. நீ ஒருதலையா கதிரவனை நேசிச்சதையும் கதிரவனுக்கு உன்ன சுத்தமா பிடிக்காததையும், இன்னும் சொல்ல போனா நீங்க இரெண்டு பேரும் இரெண்டு நிமிஷம் கூடப் பேசிக்கிட்டது கிடையாதுனும் ,திடீர்னு ஏன் இப்படிப் பேசினன்னு புரியலைனும், உங்க அப்பாகிட்ட சொல்லி அழுதுகிட்டு இருந்துச்சு.
எல்லாத்தையும் கேட்டு ஆடிபோய்ட்டேன். ஆனா உங்க அப்பா ஒருவார்த்தை கூடப் பேசல. பேசலனு சொல்றதைவிடப் பேசுற நிலைமையில அவரு இல்லவே இல்ல.
அதையும் மீறி அவர்கிட்ட பேசினப்ப என்ன தெரியுமா சொன்னாரு பாப்பா…” எனக் கூறி ஒரு இடைவேளை விட்டார்.
அதான் பின் முருகேசன் வார்த்தைகளாகக் காட்சிகள் விரிய தொடங்கின.
“மாப்பிள்ளை, எதாவது பேசுங்க. இந்த முல்லை வேற என்னென்னெவோ சொல்லுது. விழி மேல தப்பு இருக்காது உங்ககிட்ட வக்காலத்து வாங்கிட்டு இருக்குது. நீங்க அப்படியே உக்காந்துருக்கீங்களே. ஏதா இருந்தாலும் மனச விட்டு பேசிடுங்க.
இப்படி உங்களுக்குள்ளையே வச்சுக்கிட்டு மருகாதீங்க” எனக் கூற, மெல்ல நிதானத்திற்கு வந்தவராகக் கந்தசாமி, “முல்லை, நீ உள்ள போ ஆத்தா” என அனுப்பிவிட்டு, “என்னத்த சொல்ல சொல்லுறீங்க மச்சா ?” எனக் கூறி அனைத்தையும் கந்தசாமி ஒரே மூச்சாகச் சொல்லிவிட, இப்போது முருகேஷனோ மெல்ல யோசனையில் ஆழ்ந்தார்.
“அப்போ விழி சொன்னதெல்லாம் நிசமில்லையா மாப்பிள? நமக்குத் தெரியாம காதலிச்சு அந்தப் பையன்கூடப் பழகி கண்ணாலம் பண்ணிகிச்சுனு நான் கூடக் கோப போட்டுட்டேன். வீட்ல மல்லி தேவி எல்லாரும் அப்படி நினைச்சுதான் இடிஞ்சு போய் உக்காந்துருக்காங்க.
நான் அந்தப் பையன் கதிரவனைக் கூடத் தப்பா நினச்சுப்புட்டேன் மாப்பிள. இப்படி எதுவுமே நடக்காம நடந்ததா எதுக்கு விழி சொல்லுச்சு ? சரி அத பொறவு பாப்போம். மொத தேவிகிட்ட போய் உம்மவ நமக்குத் தெரியாம கண்ணாலம் பண்ணிக்கலைனு சொல்லுவோம்” எனக் கூறிவிட்டு எழ, முருகேசனின் கைபிடித்துத் தடுத்தார் கந்தசாமி.
ஏன் என்பதாக முருகேசன் பார்க்க, “வேணாம் மச்சான். இப்ப சொல்லி என்ன ஆகப்போவுது ? காதலிச்சவனே கைபிடிச்சத்தாவே இருக்கட்டும்” எனத் தடுக்க, முருகேசன் காரணம் கேட்டார்.
“இப்ப சொல்லாம பண்ணிட்டாளேன்னு மகளை நினச்சுக் கோபம் தான். ஆனா விருப்பமில்லாதவன கட்டிக்கிட்டு வாழ்க்கையைப் பாழடிச்சிருக்கானு தெரிஞ்சா தேவி தாங்கமாட்டா.
நாங்க வருத்தப்பட்டாலும் அவ சந்தோசமா இருக்குறானு நினைப்புல இருக்குறா உம்ம தங்கச்சி. அத கெடுக்க வேணாம்.” எனக் கூற முருகேசன் இந்தக் கோணத்தில் யூகிக்காததால் அவருமே இப்போது கலங்கித்தான் போனார்.
“மாப்பிள அப்படினா உங்களுக்கு விழி மேல கோபம் இல்லையா ?” என முருகேசன் கேட்க,
“நான் யாரு மாப்பிள்ளை கோப பட? அவ வாழ்க்கைக்காக அவ பேசுறேன்னு சொல்லிடுச்சே என் பாப்பா. ரொம்பப் பெரிய பொண்ணு ஆகிடுச்சு போல. சுயமா யோசிக்கக் கத்து கொடுத்தே; துணிச்சலா நிக்கக் கத்துக்கொடுத்தே; ஆனா அப்பாவை எதுத்து பேச நான் கத்து கொடுக்கலியே, என்னோட பாப்பாவே எதுத்து பேசிருச்சு. அப்போ விழி பெரிய பொண்ணா ஆகிட்டா தானே?
வேணாம் மச்சான். எதுவுமே பேசவேணாம். வாழ்க்கை முழுக்க அன்ப கொட்டி வளர்க்கணும்னு நினச்சதுக்கு இப்ப அவ மேல கொஞ்சம் கூட அன்பு இல்லாத இடத்துல போய் உக்காந்துருக்கா ? அங்க அவளுக்கான பாசமும் மரியாதையும் கிடைக்குமா ? என்னால இதுக்குமேல எதுவும் யோசிக்க முடில” என இடிந்து போய்ப் பேச, முருகேசன் கந்தசாமியின் பாசத்தில் நெகிழ்ந்து போனார். கந்தசாமி அதன் பின் தாமதிக்கவில்லை. மகனையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு உடனடியாக ஊருக்குப் புறப்பட்டார்.
அதன் பிறகே முருகேசன் விழிக்கு அழைத்திருந்தார்.
“விழி… உங்க அப்பா இப்ப கூடக் கூட்டத்துல பட்ட அவமானத்தைப் பெருசா நினைக்கல. உன்னோட சந்தோசத்தைப் பெருசா நினைக்கிறாரு. காதலிக்கிறனு கதிர்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே உங்க அப்பாகிட்ட சொன்னியே? கல்யாணத்த ஏன் மா இப்படி பண்ணிட்ட ?”
“மாமா… உங்ககிட்ட, என்ன மன்னிச்சிடுங்கனு சொல்றத தவிர என்கிட்ட வேற வார்த்த இல்ல. ஆனா அப்பாகிட்ட சொல்லுங்க. நான் அழமாட்டேன். எதுத்து நிப்பேன். என்னோட கல்யாண வாழ்க்கைல ஜெய்கிறவரைக்கும் தோல்விய ஒத்துக்கவும் மாட்டேன் ஒதுங்கி போகவும் மாட்டேன்.”
“விழி, வீட்ல எல்லாரும் எம்புட்டு உடைஞ்சு போய் இருக்காங்க தெரியுமா ஆத்தா?”
“அம்மா அத்த அண்ணே முல்லை எல்லாருகிட்டையும் என்னை முடிஞ்சா மன்னிக்கச் சொல்லுங்க. ஆனா அப்பா சொன்ன விஷயம் வேற யாருக்கும் தெரிய வேணாம் மாமா.
நான் யாருக்காக வீட்டை எதுத்துக்கிட்டு வந்தேனோ அவருக்கே என்னைப் பிடிக்காதுங்கிற விஷயம் அவுங்களுக்கு எப்பவும் தெரிய கூடாது”
“மாப்பிள சொல்றத போல நீ பெரிய மனுஷி ஆகிட்டியா பாப்பா?”
“தெரியல மாமா! எல்லாத்தையும் சரி பண்ற அளவுக்குப் பெரிய மனுஷி ஆகிட்டேனான்னு தெரியாது. ஆனா நான் எடுத்த முடிவ கண்டிப்பா என்னால சரி பண்ண முடியும் மாமா”
“நாங்கல்லாம் உனக்கு எதுக்குமே வேணாமா? முல்லையையும் உன்னையும் ஒன்னாத்தானே பாப்பா பார்த்தேன்”
“ஏன் மாமா இப்படியெல்லாம் பேசுறீங்க? எனக்குக் கேட்க உங்களவிட்டா யாரு இருக்கா ? எனக்கும் அவருக்கும் எல்லாத்துலயும் கூட இருக்கப் போறது நீங்கதான் மாமா. அத பத்தி நேரம் வரும் போது சொல்லுறேன்” என மேலும் சில வார்த்தைகள் பேசி அழைப்பை துண்டிக்க, முருகேசனுக்கு விழியைக் குறித்த நிம்மதியும் ஆச்சர்யமும்.
என்னதான் அவள் தவறே செய்திருந்தாலும் முருகேஷனால் விழியை ஒதுக்க முடியவில்லை என்பதே உண்மை. அதிலும் அவள் யாரும் அறியாமல் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது கூடுதல் நிம்மதி. பிறகு எதற்காக இப்படிக் கூறினாள் என்பது இன்னமும் கேள்வியே! அதை முருகேசன் கேட்டும் அவள் கவனமாக அந்தக் கேள்வியைத் தவிர்த்தத்திலிருந்து அதற்கான பதில் அவளுக்குச் சொல்ல விருப்பமில்லை என்று அறிந்து கொண்டார்.
விழிக்குத் தற்போது குடும்பமும் உடன் இல்லை கொண்டவனும் உடன் இல்லை. ஆனால் அவள் தைரியமும் நம்பிக்கையும் மட்டும் அவளை விட்டு விலகவே இல்லை என்பதை நன்றாகவே புரிந்துகொண்டார். சட்டென்று அவருக்குப் பதினாலு வயதில் தன்னிடம் வம்பு செய்தவனை அவன் கைகளிலிருக்கும் குச்சியை வாங்கி அவனையே அடித்தது நினைவிற்கு வந்தது.
அத்தனை ஆண்மகன்கள் சூழ இருந்தும் அஞ்சாமல் நின்றதை போலவே இன்றும் அனைத்து சூழல்களும் எதிராக இருந்தும் துணிந்து நிற்கின்றாள் என்ற ஆச்சர்யம்.
பேசி முடிக்கும் வரையிலும் முருகேசனின் குரல் கூடக் கமறியது. ஆனால் விழியன் குரல் உடையவோ நடுங்கவோ இல்லவே இல்ல. இலேசான பதற்றம் பரிதவிப்பு மட்டுமே. நிச்சயமாக அழுத்திருக்கமாட்டாள் என்று அவருக்குத் தோன்றியது. அது முருகேசனுக்கு நிம்மதியை தந்தது.
பேசியதை கந்தசாமியிடம் கூறலாம் என்று நினைத்துப் பின் அவரே அதைக் கைவிட்டார். கந்தசாமி கூறிய அதே நிலையில் தான் விழி இருக்கிறாள். அப்படியிருக்கும் போது அதையே பேசி அவரை மேலும் சங்கடம் கொள்ளச் செய்ய முருகேசன் விரும்பவில்லை.
இப்படியாக விழியின் திருமண வாழ்க்கை மூன்று மாதங்களைக் கடந்திருந்தது.
கதிரவனைப் பொறுத்தவரையிலும் இன்னமும் விழி பொய்க்காரி தான். என்ன முயன்றும் ஆவுடையார் கோவிலில் அவள் பந்தயம் கட்டி பொய் வேசத்துடன் தன் முன் வந்து கண் கசக்கியதும், புதுக்கோட்டையில் அவள் படிக்கும் கல்லூரி விடுதி காப்பாளர்களிடம் பொய் சொல்லிவிட்டு ஊர் சுற்ற வந்ததும், அன்றொருநாள் அலைக்கடலில் வந்த பொழுது படிக்கப் போவதாகப் பொய்யுரைத்துவிட்டு கடலுக்கு வந்ததும் என்று அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொய்யான பிம்பம் கொண்டவளாகவே விழி தெரிந்தாள்.
மேலும் ஆசிப்பின் திருமணத்தில் பார்வதியை திட்டமிட்டே அவளிடம் பேச வைத்ததாகவும் அவர்களின் பேச்சில் அரைகுறையாகப் புரிந்துகொண்டதை வைத்து, அவள் மீது இன்னமும் வெறுப்பை வளர்த்துக்கொண்டான்.
அனைத்திற்கும் சிகரம் வைத்ததைப் போலத் திருமணத்தன்று அவள் கூறிய மிகப் பெரிய பொய் அப்படியே பதிந்து போனது. அவனின் தாத்தா வீட்டில் தான் இருக்கிறான். பார்வதி கூறியதால் மட்டும். விழி என்ற பெண்ணின் நிலையும் கூட அவனைப் பொறுத்தவரை அது மட்டுமே. பார்வதி கூறியிருக்கிறார். அவ்வளவே.
பாண்டியும் சக்கரையும் எத்தனையோ எடுத்து கூறியும் அதற்கான பலன் இல்லை. கதிரவனின் மனதில் காதலியாகக் கனல்விழியால் அமரவே முடியவில்லை இந்த மூன்று மாதங்களாக.
ஆனால் மனைவி என்ற உறவை வலுக்கட்டாயமாக மனதில் பதிய வைக்க முயன்றான். பெயரளவில் மட்டும்.
பார்ப்போர் கேட்போர் வீட்டிலிருப்போர்கள் சக்கரை பாண்டி என அனைவரும் கனல் விழி கதிரவனின் பொண்டாட்டி என மீண்டும் மீண்டும் சொல்ல சொல்ல கதிரவனின் மனதில் மனைவி என்ற உறவு பதிய தொடங்கியிருந்தது. அதிலும் உறக்கம் தழுவும் முன் பார்க்கின்ற கடைசி நொடியிலும் விடிந்ததும் பார்க்கின்ற முதல் நொடியிலும் விழியின் முகமே இருக்க, கதிரவன் விழியின் ‘இருத்தல்’யை ஏற்க தொடங்கியிருந்தான்.
இது அவன் உணர்ந்த ஒன்று. ஆனால் அவன் உணராத ஒன்றும் இருந்தது. அது கதிரவனின் தனிமை. சக்கரை பாண்டி என அனைவரும் நெருங்கி இருந்த போதிலும் தோப்புவீட்டில் அவன் உணர்ந்த தனிமை விழி அவன் அறையில் வந்ததிலிருந்து அவன் அறியவே இல்லை. ஏதோ ஒன்று அவனிடம் பேசிக்கொண்டே இருப்பாள்.
பதிலிற்கு அவன் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டாள். அவளது குறிக்கோள் கதிரவன் தேவை இல்லாததை யோசித்துத் தன்னைத் தனிமை படுத்திட கூடாது என்பதே.
அவன் அமைதியாக இருந்தால், திடிரென்று கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு, “அந்தப் பயம் இருக்கணும்..” எனக் கூற, கதிரவனோ கேள்வியாகப் பார்ப்பான்.
“இல்ல என்ட பேச பயந்துக்கிட்டு அமைதியா இருக்கீங்கள. அதான்சொன்னேன்”
எனக் கூறி, “ஏய் உன்ட பேச எனக்கென்ன பயம் ?” எனக் கதிரவனைப் பேச வைப்பாள்.
கதிரவன் எப்போதும் குரல் உயர்த்தமாட்டான். ஆனால் அவன் பேசும் தோரணை எதிரிலிருப்போனை நிச்சயமாக அச்சம் கொள்ள வைக்கும். குரல் உயர்த்தாமலே அடுத்தவரை பயம் கொள்ள வைக்கும் வித்தை அறிந்தவன்.
விழியின் சேட்டைகளும் சீண்டல்களும் எல்லை மீறி போகின்ற போது, கதிரவன் நிதானம் பறந்தபடி உறுமும் வேளையில், “அட மாமா நீங்க கோப படும் போது செம்ம கெத்தா இருக்கீங்க ? இப்படியே இருங்க மாமா ரொம்பச் சூப்பரா இருக்கு” என ரசித்துச் சொல்ல, எரிச்சலுடன் கோபத்தை விட்டொழித்து அவளிடம், “என்ன ? என்னோட கோபத்துல இருந்து தப்பிக்க நடிக்கிறியா ?” எனக் கதிரவன் சரியாகப் பிடித்துவிட, “வாவ்… செம்ம மாமா நீங்க. என்னோட மனசுல இருக்குறத புரிஞ்சிக்கிற அளவுக்கு நீங்க முன்னேறிட்டிங்களே ? பட்டய கிளப்புறீங்க” என அதற்கும் பதில் பேச, “இவ லூசா இல்ல என்ன லூசா ஆக்குறாளா ?” எனப் பார்த்தபடி அமைதியாகி விடுவான்.
எது எப்படியோ விழியின் பேச்சை கேட்காத நாளென்று ஒன்று இல்லாமலே போயிருந்தது. சில நேரங்களில் அவனே அறியாமல் அவளது பேச்சில் மூழ்கிய தருணங்களும் கதிரவனுக்கு உண்டு. ஆனால் அதை அவனே ஒப்புக்கொள்ள மாட்டான்.
இப்படியாக விழி ஒவ்வொவொரு நாளும் ஒவ்வொவரு விதமாய்க் கதிரவனுக்குத் தெரிந்தாளோ தெரியப்படுத்தினாளோ. ஆனால் காதலியாக அவனுக்கு அவள் தெரியவும் இல்லை இவள் தெரியப்படுத்தவும் இல்லை.
ஆம்! அவனோடு தோழியாகப் பேசினாள், குழந்தையாக அடம்பிடித்தாள், சண்டைகாரியாய் சண்டை போட்டாள், தாயாய் கூடக் கருணை கொண்டாள் ஆனால் காதலியாக அல்ல.
தன் காதலை கூட இத்தனை நாட்களில் அவள் அவனிடம் நேரடியாகச் சொல்லவில்லை. அன்று கோவிலில் இருவரும் காதலித்ததாகக் கூறினாலே ஒழிய அதன் பின் அதைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லை. கனல் விழியைப் பொறுத்தவரை காதலை கூட யாசகமாகப் பெற விரும்பமாட்டாள் என்பதே.
‘நான் உன்னை நேசிக்கிறேன்தான்; என் உயிரினும் மேலாகத்தான்; ஆனால் அதற்காக அதை நான் உன்னிடம் கூறி, என் அன்பை புரிந்துகொள்ளும்படி கெஞ்சி மன்றாடி பெற விரும்பவில்லை’ என்ற பாவனைத்தான்.
மாமா என்று அவனை அழைக்கப் பழகியிருந்தாள் தான். அது பார்வதி ஒரு நாள் கதிரவனின் முன்னிலையிலையே, “வாங்க போங்கன்னு மொட்டையா கூப்பிடாத ஆத்தா. சாந்தினிய போல மாமான்னு கூப்பிடு” எனக் கூறியிருக்க அதையே பின்பற்றினாள். ஆனால் அவர் கூறியதற்காக மட்டுமல்ல, அவளுக்கே அப்படிக் கூப்பிட மிகவும் பிடித்திருந்தது.
இதுவரை ஒருமுறைகூடத் தலை தாழ்ந்து விழி கதிரவனிடம் பேசியது இல்லை. பொய்யும் களவும் பாசாங்கும் காட்டியதே இல்லை. திருமண நாளை தவிர்த்து அவனிடம் எதற்காகவும் பொய் சொன்னதில்லை. ஒரு நிமிர்வுடனே இருந்தாள். அது அவனை யோசிக்க வைத்தது உண்மையே. பாண்டி சக்கரை பார்வதி என அனைவரும் விழி உன்னை உயிராக நேசிக்கிறாள் என்று கூறியும் கதிரவனிடம் அவள் இதுவரையிலும் காதல் சொல்லாதது ஏன் என்று எப்போதாவது இவன் யோசிப்பதுண்டு. ஆனால் மறுகணமே, “ச்ச..அவளை பத்தி நான் ஏன் யோசிக்கணும் ? அவன் சொன்னா என்ன சொல்லாட்டி என்ன ?” என்பதாக அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கியபடி மேற்கொண்டு யோசிக்காமல் சென்றுவிடுவான்.
வீட்டில் அவனின் நேரங்களை விழியும் அவனின் அன்னையும் ஆக்ரமித்திருக்க வெளியிலும் பண்ணையிலும் சக்கரையும் பாண்டியும் ஆக்ரமித்திருந்தனர். எந்த யோசனை வந்தாலும் அவன் முகம் ஓர் நொடி இறுக தொடங்கினாலும் அதை உடனே துடைத்தெறியும் பணியைச் செவ்வனே பாண்டியும் சக்கரையும் செய்திருந்தனர்.
இதுமட்டும் இல்லாமல் மாறனும் சாந்தினியும் திருமணம் முடிந்த மறுநாளே வந்து கண்கலங்க கைகூப்பி நன்றி சொல்லியிருக்க, கதிரவனுக்கோ என்னவோ போலானது. அதன் பின் மாறன் கதிரவனிடம் நெருக்கம் காட்டினாலும், கதிரவனுக்கோ, “இது அவ பண்ணின வேல. ஆனா நான் சொல்லித்தான் பண்ணின மாதிரி இவன்கிட்ட சொல்லி வச்சிருக்கா. நான் பண்ணாத விஷயத்துக்குப் பலனை எப்படி ஏற்குறது?” என்ற கேள்வியுடன் மாறனிடம் சகஜமாகப் பழகவும் முடியாமல் தள்ளி நிற்கவும் முடியாமல் தவித்தான்.
தான் செய்யாத வேளைக்கு வருகின்ற புகழை எப்படி ஒருவர் ஏற்பது கடினமோ அப்படியே கதிரவனின் மனநிலையும். இப்படியாகக் கதிரவனின் எண்ணங்கள் ஓட, முன்பிருந்த தனிமையும் வெறுமையும் மட்டும் இல்லாமல் போயிருந்தது.
மறுபுறமோ, பார்வதிக்கான ஆட்டத்தையும் கனல்விழி விட்டுவிடவில்லை. மாறனுடனும் சாந்தினியுடனும் ஒரு நிரந்தர மகா கூட்டணி அமைத்துக்கொண்டாள். அது என்னவென்றால் பார்வதி செய்கின்ற விஷயங்களில் உள்ள நல்லவைகளைத் தேடி தேடி அனைவர் முன்பும் எதார்த்தமாகக் கூறுவது போலத் தெரியப்படுத்துவது. அதிலும் லிங்கம் இருக்கும் நேரங்களில் பார்த்து பார்த்துச் செய்யத் தொடங்கினாள்.
மாமனாரிடம் நேரடியாக விழி பேசவில்லை. ஆனால் அவள் சொல்லவேண்டிய விஷயத்தை அவரிடம் சேர்ப்பித்துக்கொண்டிருந்தாள்.
“அட சாந்தினி உனக்குத் தெரியாதா? மாமாக்காக வேண்டிக்கிட்டு அத்தை இன்னைக்கு விரதம்”
“ஆமா மாறா! அத்த இன்னைக்கு ஸ்பெசலா மாமாக்கு பிடிச்ச சாப்பாடு வச்சிருக்காங்க”
“அட சின்னமா! இன்னைக்குக் கோவில்ல சிறப்புப் பூஜை. நீங்க மாமா பேருல அர்ச்சனை பண்ண போகலையா ? அத்தை போய் ஒரு மணிநேரம் ஆச்சு. அயோ நீங்க பல்லு கூட விளக்காம அத்தைகிட்ட காபி போட சொல்லி வந்துருக்கீங்க. இந்த அத்த பாருங்க இன்னும் கோவில்ல இருந்து வரல ? ஏதோ பிராத்தனை பண்றங்கனு நினைக்றேன். நான் வேணும்னா காபி கலக்கட்டுமா? ஆனா நான் காபி கலந்தா எங்க அம்மாவே குடிக்கமாட்டாங்க. இருந்தாலும் பரவாயில்ல, உங்களுக்கு நான் கலக்குறேன். அப்புறம் எப்படிக் கலக்குத்துன்னு பாருங்க..அயோ நான் உங்க வயிர சொல்லல ? காபி கலக்கலா இருக்கும்னு சொல்ல வந்தேன்.” எனப் பாரிஜாதத்தையும் விட்டு வைக்காமல் லிங்கம் முன்னிலையில் பேசி வைக்க, பாரிஜாதம் துண்டை காணோம் துணியைக் காணோம் என ஓட்டம் பிடிக்கத் தொடங்குவார்.
பின்னே அண்ணனின் நலன் தனக்கு மட்டுமே முக்கியம் என்ற நாடகம் எல்லாம் இப்போது அரங்கேறாமல் போய்க்கொண்டியிருக்கின்றதே. பார்வதி இப்போது செய்வதாகச் சொல்லப்படுகிற அத்தனையும் பல வருடங்களாக அவர் செய்துகொண்டு இருப்பது தான். ஆனால் லிங்கத்திற்குத் தான் அது தெரியாது.
பார்வதி அதை அவரின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லையோ பாரிஜாதம் கொண்டுசெல்லாமல் பார்த்துக்கொண்டாரோ ஏதோவொன்று ஆனால் லிங்கத்திற்கு இத்தனை தூரம் தெரிந்திருக்காமல் தான் இருந்தது.
விழி மாறனிடமும் சாந்தினியிடமும் பேசுவதைப் போலச் சொல்கின்ற செய்திகொண்டு லிங்கம் இப்போதெல்லாம் பார்வதியை கவனிக்கத் தொடங்கியிருந்தார். அது பார்வதிக்கு இலேசான நிம்மதியை அளித்திருந்ததென்னவோ உண்மையே.
ஆனால் அதற்கு அப்படியே நேர்மாறாகப் பாரிஜாதம். அதே போலக் கதிரவன் வீட்டிற்குள் வந்ததால் முன்னை போல லிங்கத்திடம் மச்சக்காளையால் கதை அளக்கவும் முடியாமல் போக, அவரும் வெறுப்பில் உழன்றுக்கொண்டிருந்தார்.
பாரிஜாதமும் மச்சக்காளையும் சரியான நேரத்தை பார்த்து கார்த்திருந்தனர். இடையிடையே பாரிஜாதம் இன்னும் சில திட்டங்களைப் போட்டிருக்க, அவை அத்தனையும் சாந்தினியை முன்னிலை படுத்தியே உடைத்திருந்தாள் விழி. ஆக எதையுமே செய்ய முடியாமல் பழி தீர்க்கும் நொடிக்காகப் பாரிஜாதம் கழுகாய்க் காத்திருக்க, அப்படியொரு சந்தர்ப்பம் நெருங்கி வந்துகொண்டிருந்தது.
இந்த முறை குறியாக விழி இல்லை. குறி லிங்கம் பழி கனல்விழி; இன்னும் இரெண்டு வார காலத்தில் பாரிஜாதம் எதிர்ப்பார்த்த பெண்ணான சந்தர்ப்பம் இருக்க, அதற்கான வேளையில் மச்சக்காளை தீவிரமாக இறங்கினார்.
பாரிஜாதமோ, “பார்வதியோட பாசத்துல தானே இந்த ஆட்டம் போடுற மருமகளே; எங்க அண்ணனுக்கு நடக்கப் போற விபரீதத்துல பலி ஆகப்போறது எங்க அண்ணே ஆனா பழி விழ போறது உன்மேல. புறவு எப்படிப் பார்வதி உன்ன கொஞ்சுறானு பாக்குறேண்டி” என வன்மமாக நினைத்துக்கொள்ள, இதை அறியாத பார்வதியும் விழியும் சிரிப்பும் பேச்சுமாக மதியத்திற்கான சமையலை செய்துகொண்டிருந்தனர்.
“அத்த என்ன காய் நறுக்கட்டும்?” என விழி பலதரப்பட்ட காய்களை வைத்துக்கொண்டு கேட்க, “தோட்டத்துல வந்த பிஞ்சி நாட்டு பீர்கங்கா இருக்கு. பாசி பருப்பும் சின்ன வெங்காயமும் போட்டு கூட்டு வச்சிடு மா” எனக் கூற, “ஹ்ம்ம் பூண்டு குழம்பு, பீர்க்கங்காய் கூட்டுமாம். இது கூட அப்பளமும் இருந்தால் சூப்பர் போங்க” என விழி ரசித்துக் கூற, “ஹ்ம்ம் புருஷனும் பொண்டாட்டியும் இதுலயாச்சும் ஒத்துப் போறீங்களே. அதுவரைக்கும் சந்தோசம்” எனக் கூற,
“அவருக்கும் இது பிடிக்குமா அத்த ?”
“ஹ்ம்ம் இப்ப வரைக்கும் இந்தச் சாப்பாட பிடிக்கும். இனிமேல் இந்தச் சாப்பாட அவனுக்காகக் கொண்டு போகப் போற பொண்டாட்டியையும் பிடிக்கணும்” எனக் கூற
“ஹ்ம்ம் என்ன அத்த ? என்ன வச்சு எதுவும் காமடி கீமடி பண்ணலியே ?” என விழி அப்போதும் அவர் சொல்வதைக் கேளாமல் நக்கலடிக்க,
“விழி, எல்லாருக்கும் நல்லத பண்ணற, உனக்குன்னு எதாவது ஒன்னு பண்ணு மா. இன்னைக்கு நீ தான் அவனுக்குச் சாப்பாடு எடுத்திட்டு போற. இத நீயே அவனுக்காகச் செஞ்சன்னும் சொல்லணும்” எனக் கண்டிப்புடன் கூறி, அவள் தயங்கியதை பார்த்து, அவள் காதோரத்தில், “எம்மவன கெஞ்சி சாப்பிட வைக்கவேணாம். உனக்குக் கெஞ்சிறதும் பிடிக்காதுன்னு தெரியும். ஆனா மிரட்டலாமே ?” என ரகசியமாகப் புன்னகையுடன் சொல்ல,
விழியின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன. அவளுடைய எண்ணமும் அதுவே.
“அத்த நீங்க வேற லெவல். இப்படியே போச்சுன்னா மாமியாருக்கு உண்டான டிக்ஷனரிய மாத்தணும் போலவே ? ” என வாயில் கை வைத்து கூற,
பார்வதியோ அப்பாவியாக, “அது என்னமா டீ டிகாஷன் ?” எனக் கேட்டு வைக்க, விழி சிரிப்புடன் அவரைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தாள். இது அவர்களுக்குள் வழக்கமான ஒன்றுதான்.
முன்பு தேவியிடம் இப்படிச் செல்லம் கொஞ்சுவாள். இப்போது தேவியின் உருவத்தைப் பார்வதியிடம் காண்பதால் பார்வதியிடம் உரிமை கொண்டாடுகிறாள்.
“இன்னும் எத்தனை நாளைக்குத் தான் எனக்கு மட்டுமே முத்த கொடுக்கப் போற மருமகளே…” எனக் கிண்டலாகச் சொன்னாலும் உள்ளூர அவருக்கும் மகிழ்ச்சிதான். ஒரு காலத்தில் சிரிப்பு என்பதே என்னவென்று மறந்து போன நேரங்கள் இன்று மெல்ல மெல்ல மறைய தொடங்கியிருந்தன.
ஒருவழியாக, விழியிடம் சாப்பாடு கூடையைத் திணிக்க, அதை ஆராய்ந்து மேற்கொண்டு இன்னும் நான்கு அப்பளத்தை எடுத்து வைத்துக்கொண்டவள், பார்வதியிடம் “நம்ம பாண்டி அண்ணனுக்கு அத்த” எனச் சொல்லி செல்ல, பார்வதி நிறைவாக உணர்ந்தார். கூடவே அவசரமாக இப்படி அனைவரையும் புரிந்து செயல்படுபவளை மகனும் அவளைப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற வேண்டுதலும் வைத்தார்.
நடக்கவிருக்கும் விபரீதத்தை அறியாமல் விழி காடு கழனி தாண்டி நெய்தல் பண்ணை போவதற்காக முன்னேற, பச்சை வயல்களுக்குப் பம்ப்புசெட்டின் வழி தண்ணீர் பாய்ச்சப்பட, பற்பல கிளை வாயிற்கால் வழியாக அது வரப்புகளுக்கும் நெர்நாற்றுகளுக்கும் செல்ல, ரசித்தபடியே சென்றுகொண்டிருந்தாள்.
இன்னொரு புறம் நெற்கதிர்கள் முற்றி தலை சாய்த்து சிரிக்க, அந்த மஞ்சள் கலந்த இளம்பச்சை நிறத்தின் நடுவே கருஊதாவும் கத்திரிக்காய் ஊதாவும் கரும்பச்சையும் கலந்த நீண்ட தோகையுடைய மயில்கள் கண்களே பார்க்கின்ற காட்சியின் மேல் காதல் கொள்ளும்வகையில் கருத்தைக் கவர்ந்தன.
இருபதுக்கும் மேற்பட்ட மயில்கள் முற்றியிருந்த நெற் மணிகளைக் கொற்றி திண்ண, இந்த உலகம் மனிதற்கானது மட்டுமல்ல என்பதாக அந்த மயில்கள் ஆவலுடன் கொறிக்கத் தொடங்கின. அவைகள் இருந்த காடுமேடுகளை மனிதன் ஆக்ரமித்திட, பூச்சிக்கொல்லி மருந்தென்று வயல்களில் தெளித்து மயில்களின் விருப்ப உணவான புழு பூச்சியையும் அழித்துவிட, அவைகளுக்கும் நமது உணவே உணவாகி போயின.
அவைகளை ஒரு வலியுடன் ரசித்தபடி விழி வந்துக்கொண்டிருக்க, ரசிக்கும்படியாக இல்லாமல் சட்டென்று உரக்க ஒரு சிரிப்பொலி கேட்க, அதைத் தொடர்ந்து யாரோ ஒருவனின் பேச்சு குரலும் கேட்டது. யாரென்று விழி பார்வையைச் சுழற்ற கண்ணிற்கு எட்டும் தூரம் வரை ஆளரவமில்லை. புரியாமல் மோட்டார் அறைக்குப் பின்னால் சென்று ஒழிந்து பார்க்க, அங்கே இருவர் நின்றுகொண்டிருக்க, அவர்களை நோக்கி மூன்றாம் ஒருநபர் வந்துகொண்டிருந்தான்.
அவர்களின் முகத்தைக் கூர்ந்து கவனித்தவள், அவர்கள் யாரென்று யூகிக்கும் முன்னே இருவருக்கும் நடந்த உரையாடல் விழியைத் திடுக்கிட செய்தது.

Advertisement