Advertisement

பாரிஜாதத்தின் திட்டம் -25
“யாரு இப்படிக் கதவை தட்றது?” எனப் பார்வதி கேள்வியாகக் கேட்க, விழி, “தட்டல அத்த. உடைக்கிறாங்க. வேற யாரா இருக்கும் எல்லாம் என்னோட சின்னமாவா தான் இருக்கும்” என நக்கலாகக் கூறியபடி சென்று கதவை திறக்க, அங்கே பாரிஜாதமே. விஷம பார்வையுடன் நின்றிருந்தார்.
“நான் சொல்லல. இந்த அம்மாவத்தான் இருக்கும்னு” என வார்த்தையாக அல்லாமல் ஜாடையாக விழி பார்வதியிடம் கூற, பார்வதியோ அதற்கு முன்னதாகவே விழியின் கணிப்பை கண்டு வாயடைத்துப் போயிருந்தார்.
விழி ஜாடை காட்டுவதைக் கண்டுவிட்ட பாரிஜாதமோ கதவை நன்றாகத் திறந்தபடி தன் தலையை அறையின் உள்ளே விட்டு பார்த்தவர் பார்வதியை கண்டு ஒரு எகத்தாளமான சிரிப்பை உதிர்த்து வைத்தார்.
அவருடைய மனமோ, “அண்ணே கிளம்புறப்ப எதுத்தாப்புல வர கூடாதுனு இங்க ஒளிஞ்சிருக்கீங்களா  ? தப்பாச்சே. நீ ஒளியவும் ஒதுங்கவும் அடுப்படி மட்டும் தான் இருக்கணும். புதுசா இந்தச் சண்டைக்காரி வந்ததும் இவை ரூம்க்கு வந்துருக்கியா ? கொஞ்சம் இருடி, இன்னும் செத்த நேரத்துல உன்னோட புது மருமக பேர நாரடிக்கிறே. அவளையும் உன்ன போலவே விடியா மூஞ்சின்னு பட்டம் கட்டி மூலையில உக்கார வைக்கிறேன்.
இருந்தாலும் நீ இப்ப உன்னோட வீட்லையே ஒளிஞ்சி வாழுறது பார்க்க நல்லாத்தான் இருக்கு. எப்பவும் அப்படியே இரு” என மனதிற்குள் நினைக்க, வார்த்தைகள் புரியாமல் போனாலும் பாரிஜாதத்தின் வன்ம உணர்ச்சிகள் முகத்தில் பளிச்சென்று இரேகைகளாகப் படர்ந்து விழிக்குக் காட்டிக்கொடுத்தது.
“இந்த வில்லி புதுசா என்னவோ திட்டம் போடுது. அதுக்குதான் இங்க வந்து நிக்கிது. ஆனா என்னனு புரியலையே” என விழி நினைக்க, பாரிஜாதம் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்,
“என்ன அண்ணி மாமியாரும் மருமகளும் இப்படி ரூமுக்குள்ள உக்காந்திருக்கீங்க ? பொறவு வீட்டு வேலையெல்லாம் யாரு பார்ப்பா ? மொத அடுப்பங்கரைக்குப் போங்க அண்ணி. அண்ணே பார்த்தா என்னதான் வையும். இந்தம்மா மூத்த மருமகளே. கொஞ்சம் வெளில வா.
உங்க மாமனாரு உன்ன கூட்டியார சொன்னாரு” கூறி பார்வதியை முதலில் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, விழி செல்லும் போது பின்னோடு வந்தவர் சட்டென்று நின்று, “இந்தா புது மருமகளே! எனக்குக் கொல்லையில சோலியொன்னு கிடக்கு. நீ போய்ப் பார்த்துக்க. இத பாரு, மேஜை மேல தண்ணீ வச்சுருக்கே. அப்படியே அண்ணே கிட்ட கொடுத்துரு.
மறக்காம எடுத்துட்டு போ” என அழுத்தி சொல்லிவிட்டு செல்ல, சற்று முன் பார்வதி கூறியது விழிக்கு நினைவு வந்தது.
“இந்த பாரிஜாதம் எப்பவும் அவுங்க அண்ணனை தன்னோட கண் பார்வையிலையே வச்சிருக்கும். அத்தைய கூட மாமக்கிட்ட அதிகம் விடாது. அப்படியிருக்க நேத்து வந்த என்ன அனுப்புதே ? உண்மையிலயே மாமா கூப்டருந்தா, எதுக்குக் கூப்பிட்டாருனு தெருஞ்சுக்க ஒட்டு கேட்க பின்னாடியே வந்துருக்கணுமே. ஆனா என்ன மட்டும் தனியா அனுப்பவுல போராடுது.
கண்டிப்பா என்ன வச்சு எதோ திட்டம் போட்ருக்கு.
இத எப்படிக் கண்டுபிடிக்கிறது?” என யோசிக்கையில் அவளைக் கடந்து சாந்தினி சென்றாள். மெல்லமாகச் சாந்தினியை அழைத்தாலே அவளுக்குக் கேட்கும் தூரத்தில் தான் இருந்தாள். ஆனால் விழி அவளைச் சத்தமாக அழைத்தாள்.
அப்போது தான் பாரிஜாதம் காதில் விழுமென்று. அழைத்தவள், “சாந்தினி, அக்காக்கு ஒரு உதவி. இந்தத் தண்ணிய மாமாகிட்ட கொடுத்திரு. என்ன கூப்பிடங்களாம். ஆனா எனக்குப் போகச் சங்கடமா இருக்கு மா. அவுங்களுக்கு என்ன கண்டாலே ஆவதுல. எதுக்குப் பொறப்படுறப்ப போய் நின்னுக்கிட்டு…அதான். நீ போய் என்ன கூப்டீங்களானு மட்டுமே கேளேன்” எனக் கூற, சாந்தினியும் எதையும் யோசிக்காமல் “சரி அக்கா… இதுக்கெல்லாம் எதுக்கு உதவின்னு சொல்லுறீங்க. கொடுங்க” எனக் கைகைளில் வாங்கியது தான் தெரிந்தது, அடுத்த நொடி அவள் அங்கே இல்லை.
சாந்தினியின் பெயரை கேட்டதும் மறைந்திருந்த பாரிஜாதம் மெல்ல பதுங்கி வந்து அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்க முயலுவதர்க்குள் சாந்தினி லிங்கத்திடமே சென்றிருந்தாள் . அதைப் பார்த்த பாரிஜாதமோ, “ஐயோ இந்தக் கூறுகெட்ட கழுதைய வச்சுக்கிட்டு, நான் படுற பாடு அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா ? அவ சொன்னா உடனே கேட்குது.
நான் ஒரு திட்டம் போட்டா, அத அடிச்சு உடைக்க மொத ஆளா நான் பெத்து வச்சுருக்கதே வந்து தொலையுது.” எனப் புலம்பியபடி லிங்கத்திடம் போக, கொஞ்சம் இடைவேளை விட்டு விழி நின்றுக்கொண்டிருந்தாள். மறைந்தெல்லாம் நிற்கவில்லை, அதே சமயம் லிங்கத்திற்கு எதிர்த்த மாதிரியும் செல்லவில்லை.
லிங்கம் பேசுவது காதுகளில் விழுகும்படியாக நின்றுகொண்டாள்.
“என்ன மா சாந்தினி? உங்க அம்மாதானே வழக்கமா தருவா. பொண்ண கட்டி வச்சதும் என்னோட தங்கச்சி பொறுப்பை ஒப்படைச்சிருச்சா ?” எனக் கேட்க, அப்போதே விழிக்கு புரிந்து விட்டது. பாரிஜாதம் ஏதோ ஆட்டம் ஆடவே தன்னை இங்கே வலுக்கட்டாயமாக அனுப்பியுள்ளார் என்று.
“அது வந்து மாமா…” எனச் சாந்தினி தொடங்கும் போதே பாரிஜாதம் வந்து இடை புகுந்தார்.
“இல்லை அண்ணே! கொல்லையில இருந்தே. எம்மவ பொறுப்பா உனக்குத் தண்ணீ கொடுக்க வந்துருக்கா. உனக்கு வாய்ச்சவங்க தான் நீ வெளில கிளம்புறப்ப கண்டுக்காம இருக்காங்கன்னா வீட்டுக்கு மூத்ததா வாழவந்தவளும்ல அப்படியே இருக்கா.
இரெண்டாவதா வந்த மருமக உனக்குப் பார்த்து பார்த்துச் செய்து” எனப் பாரிஜாதம் கிடைத்த வாய்ப்பை விடாமல் விழிக்கு எதிராகத் தூபம் போட, லிங்கம் யோசிக்கும் முன்னரே சாந்தினி புகுந்து, “இல்லை மாமா! அக்கா தான் கொண்டு வந்துட்டு, உங்ககிட்ட கொடுக்கப் பயந்துகிட்டு என்ன கொடுக்கச் சொன்னாங்க. எனக்குக் கிளம்புறப்ப தண்ணீர் கொடுக்கணும்னு தோணவே இல்லை. அக்கா தான் சொன்னாங்க. ஆமா நீங்க அவுங்கள கூப்டீங்களா ?” என அனைத்தையும் கூறிவிட்டு, விழி கேட்க சொன்ன கேள்வியை வேறு கேட்டு வைக்கப் பாரிஜாதத்திற்கு அப்படியொரு கடுப்பு.
“சாந்தினி! பொறப்படுறப்ப அதிகமா பேசாத. தண்ணி கொடுத்தியா கிளம்புனியான்னு இருக்கணும். நேத்து வந்தவளுக்கு என்ன தெரியும் இந்தக் குடும்பத்தைப் பத்தி ? ஏதாவது உளறாத. போடி மொத” என மகளை விரட்டிவிட்டு, “அண்ணே நீ கிளம்பு அண்ணே. எதோ முக்கியமான சோலி இருக்குனு சொன்னியே. அது நல்லபடியா நடக்கட்டும். அத போய்ப் பாரு” எனக் கூறி வழி அனுப்பி வைப்பதற்குள், விழி அருகிலிருந்த அறைக்குள் ஒழிந்து நின்றுகொண்டாள்.
பாரிஜாதம் பதற்றமாக உள்ளே வந்தவர் வேகமாக வீட்டில் யாரவது தென்படுகிறார்களா என அவசர அவசரமாகத் தேடிவிட்டு விரைந்து தன் அறைக்குள் நுழையவே, பாரிஜாதத்தின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட விழி அவர் அறியாமல் அவரது அறைக்கு வெளியே நின்றுகொண்டாள்.
“இந்தம்மா பண்றது எல்லாமே திருட்டுத்தனம் தான் அப்படினாலும் இப்ப எதுக்கு எதையோ ஆட்டைய போட்டுப் போறது போலக் கம்முக்கமா போகுது. என்ன வேல பண்ணிக்கிட்டு இருக்கு ?” என யோசித்தபடியே அறைக்கு வெளியே நின்று கேட்க பாரிஜாதமோ தொலைபேசியை எடுத்து காதுக்குக் கொடுத்தார்.
“ஏங்க, நான் தான் பேசுறே. ரொம்ப முக்கியமான செய்தி. இன்னைக்கு அண்ணே போற காரியத்தை நம்ம ஆளுங்கள வச்சு தடுத்து புடாதீங்க” எனக் கூற, விழி மேலும் காதுகளை நன்றாகக் கூர்மையாக்கி கேட்க தொடங்கினாள்.
“அட ஆமாங்க. நம்ம திட்டப்படி விழிய தான் அண்ணேகிட்ட அனுப்பினே. ஆனா நாம ஒரு கூறுகெட்டவளா பொண்ணா பெத்து வச்சுருக்கோமே. அது போய் அண்ணே முன்னாடி நின்றுச்சு. இன்னைக்கு நம்ம ஆளுங்க அண்ணே செய்யப் போற காரியத்துல தடங்கல் பண்ணினா கெட்ட பேரு நம்ம பொண்ணுக்கு தான் வரும்.
அந்த விழிக்கு வராது.
அதுனால இன்னைக்கு அண்ணேனோட தொழில்ல எந்த இடைஞ்சலும் பண்ணிடாதீங்க. முடுஞ்சா அத எப்படியாச்சும் ஆக வச்சிடுங்க. அப்பத்தான் நம்ம பொண்ணு கை நமக்கு அப்புறமும் இந்த வீட்ல உசந்து நிக்கும்” எனக் கூறிவிட்டு இன்னும் மேற்கொண்டு எதை எதையோ பேச வெளி நின்று கேட்டிருந்தவளுக்குப் பக்கென்று இருந்தது.
“அட பாவிங்களா… பார்க்க டம்மியா இருந்துகிட்டுப் பண்றதெல்லாம் செம வில்லத்தனமாவுல இருக்குது. நேத்து வந்த எனக்கே இப்படிக் கட்டம் கட்டுறீங்களே ? இத்தனை வருசமா அத்தைய அவுங்க வீட்லயே வேலைக்காரியா வைக்க என்ன என்ன செஞ்சாங்களோ?
எதோ மனுஷன் சொத்தை சேர்த்து வச்சு பொண்ணையும் கட்டி வச்சா அந்தப் பெரிய மனுஷனோட சொத்தையும் அடிச்சிக்கிட்டு சொந்த மகளை வேலைக்காரியா வச்சுக்கிட்டு சொந்த பேரனை வீட்டை விட்டே விலக்கி வச்சு ஆட்டம் போடுறீங்களா? இனி அது நடக்காது.
நீ இத்தனை வருசமா எத எத வச்சு மாமாவை உங்க கைபிடில வச்சுருக்கீங்களோ அதே விஷயங்களை வச்சு அவரை விட்டே உங்கள ஓட ஓட தொரத்துறே” என மனதிற்குள் நினைத்துக்கொண்டவளாக அங்கிருந்து சென்றாள்.
அதே சமயம் வெளியே சென்ற கதிரவன், தன்னை அங்கங்கு ஓரமாக நின்று உற்று பார்க்கும் ஊர் விழிகளை அலட்சியப்படுத்தியவனாய் நடக்கத் தொடங்கினான்.
“எல்லாம் அவ பண்ணின வேல. ஆனா இதுக்கெல்லாம் அசருற ஆளு நான் இல்ல. எவன் பார்த்தா எனக்கென்ன? உங்களுக்காக நான் இல்ல. என்ன பத்தி எனக்குத் தெரியும். என்ன தெருஞ்சுக்க வேண்டியவங்க என்னோட அம்மாவும் என்னோட பிரண்ட்ஸ் மட்டும் தான். அதுனால என்னவோ பார்த்துக்கோ பேசிக்கோ” என்பதாக அசட்டையாகவும் அலட்சியமாகவும் தோள்களைக் குலுக்கியபடி வேட்டியை மடித்துக்கொண்டு முன்னைவிடக் கம்பீரமாகவே சென்றான்.
யாரை பற்றியும் எந்தக் கவலையும் இல்லை. அவன் கவலையெல்லாம் இரவிலும் விழியின் முகத்தில் முழிக்கவேண்டி இருந்தது காலையும் அப்படியே. அதற்கு ஏதாவது விடிவு பிறக்குமா என்றே யோசித்தபடி சென்றுகொண்டிருக்க, எப்போதும் பேசும் பெரியவர் கதிரவனின் வழியை மறித்தார்.
“இவரு என்ன சொல்ல போறாரு?” என்பதாய் கதிரவனின் பார்வையும் பாவனையும் இருக்க, அவரோ, “ரொம்ப நல்ல காரியம் பண்ணின கதிர். நேத்திய பொழுது தான் உண்மையாலுமே உனக்கு விடிவு காலம். உன்னோட சம்சாரம் என்னமா பேசுது? பட்டு பட்டுனு யாருக்கும் பயப்படாம அப்படியே உன்ன போலவே.
உனக்கும் மச்சக்காளை மவளுக்கும் திடீர் கண்ணாலம்னு சொன்னதும் எனக்கு நறுக்குன்னு பட்டுச்சு. மத்தவங்களுக்கு வேணும்னா எதுவும் தெரியாம இருக்கலாம். ஆனா பாரிஜாதத்துக்கு உன்ன கண்டாலே ஆவதுனு எனக்கு நல்லா தெரியும். அதுவே பொண்ண கட்டிக்கொடுக்கச் சம்மதிச்சது எனக்குச் சரியா படல.
சரி அத விடு. அதா அந்தப் புள்ள எல்லாத்தையும் சரி பண்ணிடுச்சே.
கட்டுனாலும் கட்டுன சரியான ஆளத்தான் கட்டியிருக்க. உன்னோட தாத்தா ராஜன் ஐயா வாழ்ந்த வீட்டை கட்டியால சரியான பிள்ளையைப் பிடிச்சிட்டு வந்துட்ட. இனியாவது பாரிஜாத கொட்டம் அடங்குனா சரிதான்” எனக் கூற, கதிரவனோ அப்படியே நின்றான்.
இப்படியொரு கோணத்தில் அவர் பேசுவார் என்று எதிர் பார்க்கவில்லை. பதில் சொல்லாமல் நிற்பவனைப் பார்த்து, “ஏன் ஐயா அமைதியா நிக்கிறவன். நீ ஒண்ணுத்தையும் யோசிக்காத. உன்னோட வாழ்க்கை இனிமேலு ஓஹோனு இருக்கப் போவது. உசக்க கொடி கட்டி பறக்கும் பாரு.
ஊருனு இருந்தா நாலு பேரு நாலையும் சொல்லத்தான் செய்வானுங்க. பொழுது போக்க எதையாவது பொரணி பேசணும்ல. அதலாம் கண்டுக்காத. நீ நல்லா இருக்கணும்னு நினைக்கிற ஆளுங்க மட்டும் தான் உன் முன்னாடி நின்னு பேசுவாங்க.பிடிக்காதவங்க பின்னாடி தான் பேசுவாங்க. உன்ன பிடிக்காதா ஆளுங்க என்ன பேசுனா என்ன ? விட்டு தள்ளு ராசா. அந்தப் பிள்ளைகூடச் சந்தோசமா இரு” என ஆசீர்வாதம் போலக் கூறிவிட்டு செல்ல, கதிரவன் யோசனையாக மேற்கொண்டு நடந்தான்.
அடுத்து எதிர்ப்பட்டவர், “எப்பா கதிர்! செத்த நில்லுப்பா. நல்ல வேல பண்ணின தம்பி. தம்பி காதலிக்கிற பொண்ணுன்னு தெருஞ்சு சூட்டிக்கியா முடிவெடுத்து உறவு முறையைச் சிதைக்காம பார்த்துக்கிட்டய்யா!
பெரியவங்க சொல்லுறாங்கனு தாலி கட்டியிருந்தா அண்ணன் தம்பி உறவுல அந்து போயிருக்கும். தைரியமான முடிவ தான் எடுத்திருக்க” எனக் கூறி செல்ல
மேலும் ஒரு வயதான பெண்மணி, “ராசா, புது மாப்புள்ள இப்படிக் கண்ணாலம் ஆனா அடுத்த நாளே வெளிய வரலாமா? காத்துக் கருப்பு அடிச்சிடும் ராசா. வெரசா வீட்டுக்கு போ” என அறிவுரை கூறி செல்ல,
சக்கரையின் கடையை நெருங்கும் போது ரோசா எதிர்பட , கதிரவனுக்கு எரிச்சல் தோன்றியது. அவன் மனதிலோ, “நேத்தே அவ்ளோ பேசிச்சு. இன்னைக்கு என்னத்த கத அளக்க போகுதோ ? எல்லாம் என் தலையெழுத்து” என நினைத்தபடி அவரைக் காணாதது போலக் கடந்து செல்ல முயல,
“இந்தாப்பா புது மாப்புள்ள. செத்த நில்லு. என்ன பாத்தும் பார்க்காத மாதிரி போறவ?” என வழி மறிக்க, அவரை எரித்து விடும் பார்வை பார்த்தான்.
“எம்மேல எதுக்குப்பா கோப படுற? நான் நிசத்த தானே சொன்னே. நீயும் அந்தப் புள்ளையும் ஒண்ணா சுத்துனீங்க தானே. பொட்ட பிள்ளை தனியா கிடந்தது அல்லாடுது. நீ வாய் தொறக்காம நின்னா என்ன அர்த்தம் ? அதே உனக்குப் பதிலா நான் பேசுனே.
நியாயமா பார்த்தா நீ இந்த அக்காவுக்கு நன்றிதே சொல்லணும்.
சரி சரி ஊர் சுத்துனத தெரியாம இருக்கணும்னு நினச்சு மறச்சிருப்பா. பரவ இல்ல. ஊரு உலகத்துல பண்ணாததையா பண்ணிப்புட்ட ?
காதலிச்சவளையே ஏமாத்தாம தாலி கட்டிட்டியே! அதுவே உன்ன உசத்தி காட்டிருச்சு. நல்லா இருங்க. ஆனா இந்த அக்காவை மறந்துடாதீங்க.
எங்க போயிட்டு இருக்க ? சக்கரை கடைக்குத் தானே. அக்காக்கு பத்துப் ரொட்டி கட்ட சொல்றது. வேணாம் நீ சொல்ல வேணாம். சால்னா அதிகமா வேணும். அதுனால நீ சொன்னன்னு நானே வாங்கிக்கிறே” எனக் கூறிவிட்டு, “சக்கரை..” என அழைத்தபடி கடைக்குள் நுழைய, கதிரவன், “இவுங்களாம் என்ன மாதிரி ஆளுங்க?” எனச் சலித்தபடியே கடைக்கு வெளியே போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.
வேகமாகக் கடைக்குள்ளிருந்து சக்கரை வெளியே வந்து, “டேய் என்னடா ? நேத்திக்குத்தான் கல்யாணம் முடுஞ்சது. இப்படி விடுஞ்சு விடியாம இங்க வந்து உக்காந்துருக்க ?” எனக் கேட்க, கதிரவன் சக்கரையை நக்கலாகப் பார்த்தபடி சூரியனை பார்க்க, அது உச்சியை இன்னும் சில மணித்துளிகளில் தொட்டுவிடும் போல நின்றது.
கதிரவனின் பார்வைக்கு அர்த்தத்தைப் புரிந்துகொண்ட, “சரி மணி பதினொன்னு ஆச்சு. ஆனா அதுக்குன்னு இப்படியா அடுத்தநாளே அந்தப் புள்ளைய தனியா விட்டு வருவ? அது உண்மைய சொல்லிச்சோ பொய் சொல்லுச்சோ. ஆனா எது பண்ணியிருந்தாலும் உம்மேல பிரியம் இல்லாமையைப் பண்ணிருக்கும் ? அப்படியிருக்க உங்க அத்த பாரிஜாதம் இருக்கவீட்ல இப்படி விட்டுட்டு வந்திருக்கியே! பாவம்டா.
இப்ப அந்தப் புள்ளைக்கு அவுங்க வீட்டு சொந்தமும் இல்ல. உனக்குப் பிடிக்காட்டியும் உன்னையே நம்பி வந்த புள்ளடா” எனச் சக்கரை விழியின் மீது இருந்த அக்கரையில் பேச, கதிரவன் மொத்த எரிச்சலையும் சக்கரையின் மீது கொட்ட தயாரானான்.
“ஆமா அவ பச்சை புள்ள பாரு. விட்டா எட்டு ஊற வித்துருவா. நேத்தே பார்த்தல. கூட்டத்துல யாரும் ஒருவார்த்தை அவ முன்னாடி பேச முடில. இதுல இவளை நாங்க தனியா விட்டு வந்தோமா.
ஏண்டா உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா ? இப்படி உன்னோட நண்பன் மேல பழைய போட்டவனு கோபமே வரலியா ? எதோ சந்தோசமா நடந்த கல்யாணம் மாதிரி கேள்விக்குற ?
நானே கொலை வெறில இருக்கேன். நீ மேற்கொண்டு பேசி என்ன கொலைகாரனாவே மாத்திடாத.
இல்ல நான் தெரியாம தான் கேக்குறே. நீ எனக்குப் பிரண்டா ? இல்ல அவளுக்கா ? எனக்கு மனசுன்னு ஒன்னு இருக்கு. அத பத்தி யாருமே யோசிக்க மாட்டிங்களாடா ?” எனக் கோபத்தில் தொடங்கி வலியில் முடிக்க,
சக்கரையோ எதுவும் பேசாமல் அவனையே பார்த்து இருந்தான்.
“என்ன பதிலே காணோம்?” எனக் கதிரவன் உறும,
“என்ன சொல்ல சொல்லுற மாப்பு? நடந்தது எனக்குத் தப்பா தெரியாதப்பா என்ன சொல்ல சொல்லுற? நான் உனக்குத்தான் பிரண்ட். நீ தான் எல்லாத்தவிடவும் முக்கியம்.
ஆனா நேத்து அந்தப் பொண்ணு வராட்டி உன்னோட தம்பியோட காதலிக்குல தாலி கட்டிருப்ப ? அப்படி நடந்துருந்தாதான் தப்பு. அது மட்டுமில்ல, சாந்தினி கழுத்துல தாலி கட்ட உனக்குச் சுத்தமா இஷ்டமே இல்ல. சாந்தினி கழுத்துல தாலி கட்ட பிடிக்காமத்தான் நீ இருந்தனு எனக்கு உன்னோட முகத்தைப் பார்த்ததும் தெருஞ்சது.
அந்தப் புள்ள கல்யாணத்த நிப்பாட்டுனதும் நீ கொஞ்சம் கூடப் பதட்டமே ஆகல. அப்பாடா அப்படினு தான் இருந்த.
நீ விழி கழுத்துல தாலி கட்டாம இருந்திருந்தா எதாவது ஒரு நாடகத்தைப் போட்டு சாந்தினி கழுத்துல கண்டிப்பா உங்க அத்த தாலி கட்ட வச்சிருப்பாங்க. உன்ட முகம் கொடுத்து கூடப் பேசாத உங்க அப்பாவையே உன்னோட கல்யாணத்துல மொத ஆளா நிக்க வச்ச ஆளுடா உங்க அத்த.
இதையும் பண்ணிருக்கும்.
உன்னோட பொண்ட்டாடி தான் சரியான நேரத்துல வந்து எல்லாத்தயும் சரி பண்ணிருக்கு. உங்க குடும்பத்துக்கு நல்லது பண்ண போய்ப் பாவம் இப்ப அதுக்கு அது குடும்பத்தோட ஒட்டு உறவு இல்லாம போச்சு.
அந்தப் புள்ள சொன்னது பொய்னாலும், உம்மேல இருக்க அன்பு நிசமாதான் இருக்கும்னு எனக்குத் தோணுது டா மாப்புள்ள” என விழி அவனுக்கு நன்கு பரிக்ஷயம் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் தெரியும் என்ற அளவில் அவன் மனதில் உள்ளதையெல்லாம் சொல்லிவிட்டு ஒரு எதிர்ப்பார்ப்புடன் கதிரவன் முகம் பார்க்க, அவனின் முகமோ எதையும் பிரதிபலிக்கவில்லை.
“என்ன கதிரவா? நான் எதாவது தப்பா சொல்லிட்டேனா ?”
“ஆச்சர்யமா இருக்கு. ஒரே நாள் தெரிஞ்சா பெண்ணுக்காக நீ அம்மா எல்லாம் ஏன் இவ்ளோ தூரத்துக்கு வக்காலத்து வாங்குறீங்க ? புரியல.
நீ சொல்றது எல்லாம் உண்மை தான். அவ மாறனுக்கும் சாந்தினிக்கும் நல்லது பண்ணியிருக்காதான். ஆனா எனக்கு இல்ல.
பொய் சொல்லி என்னோட வாழ்க்கைல வந்தவ. எம்மேல பழி போட்டு வந்தவ. அவளை மன்னிக்கவோ மறக்கவோ முடியாது” எனக் கூறிவிட,
“ஏண்டா? உன்னோட பேரு கெட்டு போச்சுன்னு பாக்குறியா ? நானோ அம்மாவோ இல்ல இந்த ஊரோ உன்ன தப்பா பாக்குதுனு நினைக்கிறியா ?”
“நீ அம்மா பாண்டி யாரும் என்ன தப்பா நினைக்கல. இந்த ஊரு பேசனும்னு நினச்சேன். எவன் பேசுனா எனக்கென்னன்னு தான் வந்தேன். ஆனா எல்லாருமே நான் எதோ சரியான முடிவு எடுத்துருக்கேன்னு என்ன பாராட்டுனாங்க. இன்னும் சில பேரு என்னோட முதுகுக்குப் பின்னாடி பேசினதையும் பார்த்தே. முகத்துக்கு நேர சொல்றவன்தான் எனக்குச் சொந்தகார. பின்னாடி பேசுறவன பத்தியெல்லாம் எனக்குக் கவலை இல்ல. அத எப்பயும் நான் மதிக்கமாட்டேன்.”
“அப்புறம் என்ன மாப்புள?”
“அத சொன்னேனே சக்கர. நான் எடுத்த முடிவுன்னு எல்லாரும்னு சொன்னாங்கனு. ஆனா உண்மை என்ன ? இது எம்மேல திணிக்கப்பட்ட முடிவு. என்ன சீண்டி பார்த்த ஒரு விஷயம்.
நடக்காத கட்டு கதையை வச்சு நாடகத்தைப் போட்டு என்னோட தன்மானத்தைச் சீண்டி பார்த்துட்டா.
பொய் எல்லாமே பொய்.
யாரு அவளை நல்லவன்னு சொன்னாலும், நான் அவளைச் சரியா முடிவு பண்ணிருக்கேன்னு சொன்னாலும் என்னோட முடிவு மாறாது. எங்க அம்மாக்குச் சத்தியம் பண்ணிருக்கேன். நானா அனுப்பமாட்டேனு. அவ்ளோதான். அதுனால அந்த வீட்ல அவ இருப்பா. மத்தபடி என்ன பொறுத்தவரை எனக்குப் பிடிக்காதவத்தான்” என முடிவாகக் கூறியவன், தலையைத் தடவிப்பாடி, “ஒரு டி சொல்லு சக்கர” எனக் கூறிவிட்டு நிமிர, தூரத்தில் இவர்களை நோக்கி பாண்டி ஓடி வந்துக்கொண்டிருந்தான்.
தலை தெறிக்க, எதிரில் யார் வருகிறார்கள் யார் போகின்றார்கள் என்று தெரியாத அளவிற்கான ஓட்டம். சக்கரையும் கதிரவனும் பதற்றமாக எழுந்து தங்களை நோக்கி ஓடி வந்தவனைக் கைத்தாங்கலாகப் பிடித்து, “டேய் என்ன ஆச்சுடா ? ஏன் ஓடியார ? யாரவது தொரத்துறங்கலா ?” எனக் கேட்க, ஆம் என்பதாய் தலை அசைத்து மூச்சு வாங்கினான்.
அதற்குள் சக்கரையும் கதிரவனும் அவனை அமரவைத்துவிட்டு நாலெட்டு சென்று யாரேனும் வருகிறார்களா என வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு போய்ப் பார்க்க யாரும் பின்தொடரவில்லை.
“டேய் என்ன டா ? யாரையும் காணோம் ? துரத்தி வந்தவங்க போய்ட்டாங்களா ?” எனக் கேட்க
மீண்டும் ஆம் என்பதாய் தலை அசைக்க உள்ளிருந்து கடை பையன் வந்து தண்ணீர் கொடுத்தான்.
சக்கரையோ, “இத விடக் கூடாது மாப்பு. என்ன தப்புப் பண்ணியிருந்தாலும் நம்மட்ட சொல்லியிருக்கணும். அத விட்டுப்புட்டு இப்படி அடிக்கத் தொரத்துனா இது சரி கிடையாது. யாருனு பார்த்து வீடு பூந்து நம்ம யாருனு காட்டணும் மாப்புள” எனச் சக்கரை எகிற,
“யாருனு சொல்லுடா..வா போலாம்” எனக் கதிரவன் அழைக்க,
பாண்டியோ, “என்ன பேசுறீங்க ? யாரை அடிக்கப் போறீங்க ?” எனத் தண்ணீரை குடித்து முடித்துவிட்டுச் சாவகாசமாகக் கேட்க, அவர்களோ குழம்பி போய், “நீ தானடா சொன்ன, யாரோ அடிக்க வரங்கனு”
“ஆமா சொன்னேன்! யாரோ இல்ல. ஆராரோ பாடின என்ன பெத்த ஆத்தா”
“அடே அம்மா அடிக்கிறதுக்கா இப்படி ஓடி வந்த ?” எனத் தன் கோபம் சோகம் என அனைத்தையும் மறந்தவனாய் கடுப்புடன் கதிரவன் வினவ, “ஆமா! வயசுக்கு வந்த பையன்னு கூடப் பார்க்காம விளக்கமாத்த எடுத்து தொறத்துனா ஓடாம ஆதி வாங்க சொல்லுறியா ? போங்கடா” எனப் பதில் கூறினான் .
கடை பையன், “ஏன் அண்ணே உங்கள உங்க அம்மா தொரத்துனாங்க ?” எனக் கேட்க’
“அய்யொ அவசரத்துல கம்பனி ரகசியத்தைப் போட்டு உடைச்சுட்டேனா. சரி சொல்லுறே. ஆனா வெளில யார்கிட்டையும் சொல்ல கூடாது.
அது ஒண்ணுமில்ல மாப்பிள்ளைங்களா, விளக்கேத்த ஒரு பொண்ணு கூட்டிவா ஆத்தான்னு சொன்னே. அது காதுல என்ன விழுந்துச்சோ..விளக்கமாத்த எடுத்துக்கிட்டு ஓடியாந்துருச்சு.
அதுகிட்ட இருந்து தப்புச்சே பொழச்சேனு ஓடி வரதுக்குள்ள உசுரு இங்குட்டா அங்குட்டானு இருந்துச்சு. என்னா கொலை வெறி?
எங்க ஆத்தாக்குள்ள ஒரு அந்நியன் இருக்கானடா மாப்புள்ள” எனத் தீவிரமாகக் கூற கூடியிருந்த மூவரும் தங்களை மறந்தவர்களாக வாய் விட்டுச் சிரித்தான்.
கதிரவன் கூட வாய் திறதே சிரித்துவிட்டிருந்தான்.
சக்கரை, “ஏண்டா உனக்குக் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம் ?” எனக் கேட்க,
“ஏண்டா நம்ம மூணு பேருல நான் தான் கல்யாணத்துக்கு ஆசைப்பட்டேன். இந்தக் கதிர் பிடிக்கல பிடிக்கல சொல்லுவான். இப்ப அவனுக்கு நடந்துருச்சு. எனக்கு நடக்காட்டி எப்படி டா ?” எனக் கேட்க, மீண்டும் கதிரவன் முகத்தைக் கடினமாக்கி கொண்டான்.
“மறுபடியும் அவளைப் பத்தி பேசாதீங்கடா” எனச் சுள்ளென்று கதிரவன் எரிந்து விழ, அதையெல்லாம் பாண்டி கண்டுகொள்ளவே இல்ல.
“மாப்ள ஒய் டென்ஷன்? எப்படியும் நீயா யாரையும் பண்ணிருக்க மாட்ட. வீட்ல பார்த்த பொண்ணு ஒத்து வந்திருக்காது. நீ கடைசிவரை கல்யாணமே பண்ணாம இருந்தா உங்க அம்மா வருத்தப்படுவாங்க. எப்படியும் ஏதோவொரு பொண்ண கட்டியிருப்ப. அது இந்தப் பொண்ணுன்னு நினைச்சிட்டு போ.
வேற பொண்ண கட்டியிருந்தா மட்டும் நீ என்ன கலகலன்னு அதுகூடைய சிரிச்சுப் பேசியிருக்கப் போற ? அப்பயும் கடுகடுனு எங்ககிட்ட தான் வந்து பேசியிருப்ப.
உனக்கு அழுகுற பொண்ணுங்கள பிடிக்காது. அழுகாம இருக்குற பொண்ணுங்க கிடைக்கிறது முடியாது. ஏதோ இப்ப கட்டியிருக்கப் பொன்னாச்சும் அழுகாம இருந்துருக்கே. அதுவே சந்தோசம்னு போவியா.. அதைவிட்டுபுட்டு” எனக் கூற, பாண்டியின் பேச்சு கதிரவனை யோசிக்க வைத்தது.
“சரி மச்சான்! மூஞ்சிய சோகமா வச்சிருக்க மாதிரியே பொழுத ஓட்டாம, பிடிச்ச கல்யாணமோ பிடிக்காத கல்யாணமோ எதோ ஒன்னு கல்யாணம் தானே. அதுக்கு எங்களுக்குப் பிரியாணி வாங்கிக் கொடு…” என அடுத்தப் பேச்சிற்குத் தாவ, கதிரவன் நண்பர்களின் பேச்சில் மற்றத்தை மறந்து அவர்களோடு ஒன்ற தொடங்கினான்.
மறுபுறமோ விழியின் கை பேசி சிணுங்கியது. திரையில் மிளிர்ந்த பெயரை பார்த்தவள் எதிர்பார்ப்புடன் வேகமாகக் கைகளில் கைபேசியை எடுத்தாள்.

Advertisement