Advertisement

அவளது மனமோ, “இந்த வீட்டோட எஜமானி. ஆனா அவுங்க இங்க வேல பாக்குறதுக்குனே பொறப்பெடுத்தத போல இப்படி மாங்கு மாங்குனு வேல பாக்குறாங்களே. எத்தனை வருசமா இவுங்க இப்படி இருக்காங்க ? இத மொதல்ல மாத்தணும். ” என எண்ணி வருந்தியது.
மேலும் பெண்களைப் பற்றித் தன் தந்தை கூறியதை நினைத்துக்கொண்டாள்.
“பெண்கள் எப்பவும் அவுங்களோட தைரியத்தையும் உரிமையையும் விட்டுட கூடாது. அஃது எந்தச் சூழ்நிலைனாலும்” எனக் கந்தசாமியின் குரலில் அவளின் காதில் ரீங்காரமிட, முதலில் பார்வதிக்கு உரிய மதிப்பை மீட்டி தருவதென்று முடிவெடுத்தாள்.
கூட்டம் சிறுது சிறிதாகக் குறைந்தது மொத்த கூட்டமும் களைந்து செல்ல மாலையாகிவிடப் பார்வதி தன் இரெண்டு மருமகள்களும் ஒரே அறையில் இருக்க வைத்தார்.
இருவருக்கும் அஃதாவது இரண்டு மகன் இரண்டு மருமகளுக்கான அறைகளை ஒழித்துக் கொடுப்பதற்காகத் தற்சமயம் அவர்களை ஒரே அறையில் விட்டிருக்க, கதிரவன் கொட்டத்தில் அமர்ந்திருந்தான். மாறனோ முற்றத்தில் அமர்ந்திருந்தான். இருவரது நெஞ்சமும் நிம்மதி இல்லாமலே இருந்தது.
இதற்கிடையில் வேலை செய்பவர்கள் விழியை மரியாதையுடன் அழைக்க, அறைக்கு வெளியே வந்தவளிடம் பார்வதி கொடுக்கச் சொன்னதாகக் கூறி கோர்த்த மல்லி சரத்தை கொடுத்து செல்ல, உள்ளே சாந்தினி இருப்பது தெரியாமல் மாறன் தன் அண்ணியிடம் பேசலாம் என்று முடிவெடுத்தான்.
“அண்ணி இந்த ரூம்ல இருக்காங்க போல. அவுங்ககிட்ட கண்டிப்பா நான் ஒரு தேங்கசாவது சொல்லணும்” என நினைத்தபடி மீண்டும் கதவை தட்ட, அப்போது சரியாகச் சாந்தினி, “நீங்க பாக்குறீங்களா ? நான் முகம் கழுவிட்டு வரேன்” என முதல் முறையாக விழியிடம் வாய் திறந்து பேசினாள்.
அரைமணி நேரத்திற்கு மேலாக அதே அறையில் இருந்தாலும் சாந்தினி பேசவில்லை. விழியும் பேசும் நிலையில் இல்லாமல் இன்று காலையிலிருந்து நடந்ததை நினைத்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் குளியல் அறைக்குள் புக, மாறன் சரியாகக் கதவை தட்டியபடி விழியின் அறைக்குள் நுழைந்தான்.
“அண்ணி…” என்று தயக்கத்துடன் ஒலித்த மாறனின் குரல், குளியல் அறைக்குள் இருந்த சாந்தினியின் காதுகளில் தெளிவாக விழுக, சட்டென்று அவனுடைய குரலிற்காக அவளுடைய காதுகள் கூர்மை பெற்றன.
சடசடவெனக் கொட்டுகின்ற நீரை, குழாயை அடைத்து நிறுத்தியவள், அவன் எதற்காக வந்திருக்கிறான் ? ஒருவேளை தன்னைத் தேடித்தானோ என்ற ஆவலில் உள்ளிருந்தே கேட்க தயாரானாள். ஆனால் அவன் பேச வந்ததோ கனல்விழியிடம்.
“அண்ணி..உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா ?” என அவன் வாசலில் நின்றபடியே கேட்க, விழியோ தன் நினைவுகளைத் தூக்கி ஓரங்கட்டியவள், “உள்ள வாங்க தம்பி” என்றாள்.
“இல்ல நீங்க தனியா இருக்கீங்க. அதான் வாசல்ல நின்னே பேசுறேன்”
“அட அண்ணினா இன்னொரு அம்மா முறை. சும்மா வாங்க தம்பி. என்ன விஷயம் சொல்லுங்க ?”
“அப்போ இவரு என்ன பார்க்க வரலியா ?” என ஏமாற்றமாக உணர்ந்தது சாந்தினியின் மனம்.
“நான் உங்களுக்கு நன்றி சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன். ” என ஒருவழியாக அவன் கூறிவிட,
இவளோ, “எதுக்கு ? ” எனச் சாதாரணமாக வினவினாள்.
“என்ன அண்ணி இவ்ளோ சாதாரணமா பேசுறீங்க ? நீங்க எனக்கு என்னோட வாழ்கையவே திருப்பிக் கொடுத்துருக்கீங்க. சாந்தினி இல்லாத வாழ்க்கைய என்னால யோசன கூடப் பண்ண முடியாது. நேத்து இராத்திரி வர அவளுக்கும் அவருக்கும் கண்ணாலாம்னே தெரியாது.
தெருஞ்சு அடிச்சு பிடிச்சு ஓடிவந்தா, இங்க அவருக்குச் சாந்தினியை பிடிச்சிருக்கு சொல்லுறாங்க. சாந்தினியும் சம்மதம் சொல்லிட்டான்னு சொல்லுறாங்க.
இன்னும் ஏதேதோ சொல்லுறாங்க. பணப் பிரச்சனை ஜாதகம் அது இதுனு. எனக்கு ஒண்ணுமே புரியல.
என்னால ஏத்துக்கவும் முடியல விட்டு விலகவும் முடியல. அப்படியே செத்துரலாம் போல இருந்துச்சு. கடைசி நிமிஷத்துல வந்து என்னோட உசுர காப்பாத்திடீங்க.” எனத் தலை குனிந்தபடி இலேசாக நீர்த்திரையிட்ட கண்களுடன் உணர்வு பூர்வமாகக் கூற, விழி அதை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டாள்.
அப்படி அவள் உள்வாங்கிக் கொண்டதில் புரிந்துகொண்டதென்றால் கதிரவனை மாறன் அண்ணன் என்று உறவாகச் சொல்லாமல் அந்நியனை போலத் தள்ளி வைத்துப் பேசுகிறான் என்றே. விழிக்கு சற்றே மலைப்பாக இருந்தது. இன்னும் எத்தனை உறவு விரிசல்களை இந்தப் பாரிஜாதம் செய்து வைத்துள்ளார் என்று.
அதே சமயம் இன்னமும் மாறன் சாந்தினி திருமணத்திற்குச் சம்மதம் சொல்லிவிட்டாள் என்ற வருத்தத்தில் இருப்பதையும் புரிந்துகொண்டாள். சில நிமிடங்கள் விழி பேசவில்லை. அவளுடைய உள்மனது சாந்தினி சம்மதம் கூறியிருப்பாள் என்று நம்பவில்லை. இதிலும் கட்டாயமாகப் பாரிஜாதத்தின் திருவிளையாடல் இருக்குமென்று நம்பினாள்.
அதனால் மாறனை பேசவைக்கவேண்டும் என்று முடிவெடுத்தாள்.
“தம்பி இதுல எனக்கு நன்றி சொல்ல ஒண்ணுமே இல்ல. சாந்தினி உங்க மேல வச்சிருக்கக் காதலும் நீங்க அவ மேல வச்சிருக்கக் காதலும், உங்க அண்ணே உங்க மேல வச்சிருக்கப் பாசமும் தான் காரணம், நான் இல்ல” எனக் கூற,
“அண்ணி என்ன சொல்லுறீங்க ? அப்போ சாந்தினி கல்யாணத்துக்குச் சம்மதிக்கலியா ? என்ன வேணாம்னும் என்னோட முகத்துலையே முழிக்காம பாத்துக்கோங்கன்னு மாமாகிட்ட அவ சொல்லலியா ?” என ஆவலும் ஆசையாகக் கேட்க, பட்டென்று கதவை திறந்துகொண்டு வந்து நின்றாள் சாந்தினி.
“மாமா! என்ன உளறிட்டு இருக்கீங்க ? உங்கள எப்படி வேணாம்னு சொல்லுவேன். நீங்க தானே என்னோட ராசி சரி இல்லனு தரித்திரம்னு சொல்லி கதிரவன் மாமாகூடக் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு மதுரைக்குப் போய்ட்டிங்க” என இவள் நேருக்கு நேராகக் கேட்டுவிட, திடுதிப்பென்று வந்து தன் முன் கேள்வி கேட்டவளை பார்த்து முதலில் அதிர்ச்சி பிறகு அவள் கேட்ட கேள்வியில் குழப்பம் என்று நின்றிருந்தான்.
“சாந்தினி என்ன சொல்லுற ? நீ சொல்ற போல நான் எதுவும் சொல்லல. நான் மதுரைக்குப் போனது ப்ராஜெக்ட்க்கு. ராசி அது இதுனு என்னனெனவோ சொல்லுற ? ” என இவன் பதில் கேள்வி கேட்க, இப்போதோ இவள் குழம்பி நின்றாள்.
இருவரும் ஒரே சமயத்தில், “அப்போ அப்படிச் சொல்லல தானே ?” என ஏக்கமும் எதிர்பார்ப்புமாக ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ள, அதற்கு விடையாய் விழி பேசினாள்.
“நீங்க இரெண்டு பேரும் மனசாரக் காதலிக்கிறீங்க. ஒருத்தர் மேல ஒருத்தர் உசுரே வச்சிருக்கீங்க. இத மூணாவது மனுஷியா நின்னு பாக்குற எனக்குத் தெரியுது. உங்களுக்குப் புரியலையா ?
மொதல்ல உங்கள நம்புங்க. இந்தக் கல்யாணத்துல எங்க யாரு பொய் சொன்னான்னு ஆராய்ச்சி பண்றதைவிட்டு, உங்ககிட்ட மத்தவங்க எது சொன்னாலும் நேரடியா கேட்டுக்காம ஒரு முடிவுக்கு வராதீங்க. சொல்ற மூணாவது மனுஷன் நானாவே இருந்தாலும் சரி.
ஏற்பாடு பண்ணுன கல்யாணத்துல உங்க தப்பு எதுவும் இல்ல. அதுனால அத மறந்துட்டு இனிமேல் வேற யாரும் உங்களுக்குள்ள வராம பார்த்துக்கோங்க” எனக் கூற,
“ரொம்பத் தேங்க்ஸ் அண்ணி” “தேங்க்ஸ் அக்கா” என இருவரும் அவளுக்குக் கூற, அவளோ, “தம்பி தேங்க்ஸ் உங்க அண்ணனுக்குச் சொல்லுங்க. அவரு தான் நீங்க கல்யாணம் பண்ணிக்கக் காரணம்” என முடித்துவிட, மாறனுக்குக் கதிரவன் மீது முதல் முறையாகப் பிடிப்பு கலந்த மரியாதையை ஏற்பட்டது.
அதே நேரம் கதிரவன் கைகளைப் பின்னே கட்டியபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தன. என்ன முயன்றும் என்ன சமாதானம் கூறியும் இன்று நடந்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதையும் மீறிய செயலாக அவன் பொறுமை காப்பதற்கு இரெண்டே காரணங்கள். ஒன்று அவனின் தாய். மற்றொன்று மாறனின் காதல்.
கனல் விழியால் மட்டுமே நடக்கவிருந்த தவறு தடுத்து நிறுத்தப்பட்டது என ஒருபுறம் நினைத்தாலும் மறுபுறமோ அவன் வாழ்வில் அல்லவோ தற்போது விழி நிரந்தரத் தவறாகி போனாள் என்ற சிந்தனையும் ஓடியது.
எப்பேர்ப்பட்ட பொய். காதலாம், மறக்க முடியாத நேசமாம், அவளைப் பிரிய முடியாமல் தாலி கட்டினேனாம் என்ன ஒரு நாடகம் ?
என்றெல்லாம் மனதினில் நினைத்தவன், நடந்தவற்றை மறக்க முடியாமல் உள்ளுக்குள் தணலாய் தகித்தான் .
இத்தனை காலமாகப் பெண்களென்றால் ஒதுங்கி செல்பவன் கதிரவன் என்ற பெயர் மாறி, ஒரு பெண்ணைத் திருட்டுத் தனமாகத் திருமணம் முடித்தவன் என்ற பெயரை நிரந்தரமாகத் தந்துவிட்டவளின் மீது கோபம் மலையென உயர்ந்தது. மற்றவர்களைக் கூட அவன் உதாசீனப்படுத்திவிடலாம். ஆனால் அவனுக்கு உண்மையான உறவென்று இருப்பவர் ஒருவர் தான். தந்தை என்பவர் பெயருக்கு மட்டுமே; பெயரளவில் மட்டுமே; இன்று அவரே காதலி என்று வந்து நின்றவளின் கழுத்தில் தாலி கட்டும்படியாகக் கூறியதென்னவோ கதிரவனை மேலும் மேலும் அழுத்தியது.
“அம்மா என்ன நினச்சுருப்பாங்க ? அம்மாக்குக் கொடுத்த சத்தியம் பொய்னு தானே ? நானே ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அம்மாவை நம்பவைச்சு ஏமாத்திட்டேன்னு தானே நினச்சு தாலி கட்ட சொல்லிருப்பாங்க ? ஊரு உறவுன்னு எவன் பேசுறதும் எனக்குக் கணக்கில்ல. ஆனா என்னோட அம்மா அப்படி என்ன நினைக்கக் கூடாது” என மனதிற்குள் நினைத்துக்கொண்டிருந்த அதே நேரம் இங்கு அறையில் விழி மாறன் சாந்தினி என மூவரும் தீவிர முகப் பாவத்துடன் இருந்தனர்.
“அப்படினா அத்தையும் மாமாவும் என்கிட்ட சொன்னது பொய் ?” என மாறன் கூற, “ஆமா மாமா! என்கிட்டையும் பொய் தான் சொல்லியிருக்காங்க” எனச் சாந்தினி கூற, “இத இப்போவே நாம கேட்கணும்” என இருவரும் கூற, அவர்களைத் தடுத்தாள் விழி.
“தம்பி நான் ஒன்னு சொன்னா கேட்பீங்களா? சாந்தினி நீயும்தான்” எனப் பீடிகையுடன் தொடங்க,
“சொல்லுங்க அண்ணி” , “சொல்லுங்க அக்கா”
என இருவரும் கூறினர்.
“இதெல்லாம் விட்டிருங்க. உங்களுக்கு இதெல்லாம் தெருஞ்ச போலக் காமிக்கிறதுனாலையோ கேட்குறதுனாலையோ குடும்பத்துல சண்டைதான் வரும். யாரு என்ன செஞ்சிருந்தாலும் நடந்தது நல்லதாவே நடந்திருக்கு. அதுனால இனி நீங்க பண்ணவேண்டியது இரெண்டே விஷயம் தான்.
இனி எந்தச் சூழ்நிலையிலையும் உங்க இரெண்டுபேருக்கிடையில மூணாமனுஷ நுழையாம பாத்துக்கோங்க. இன்னொன்னு உங்க காதல் கல்யாண வாழ்க்கைய நீங்க ஆசைப்பட்ட மாதிரி சிறப்பா வாழுங்க.
இப்ப நீங்க எதோ ஒன்னு கேட்க போய் அது எதுலையோ முடிஞ்சிடலாம். தேவை இல்லாத புதுப் பிரச்சனைகளும் வரலாம். ஏற்கனவே நான் உங்க அண்ணனை கட்டிக்கிட்டு இங்க வந்தத பார்வதி அத்தைய தவிர யாரும் விரும்பல. அப்படி இருக்க இப்போ இன்னொரு பிரச்சனையானு எனக்கே மலைப்பா இருக்கு. எனக்காக இதுக்குமேல இத பெருசு பண்ணாம விட்டுறீங்களா? ப்ளீஸ்” எனக் கேட்க, அவர்கள் இருவரும் ஒரே சமயத்தில், “நீங்க போய் இப்படிக் கேட்கலாமா ?” எனக் கூறிவிட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து புன்னகைக்க, விழியும் புன்னகைத்தாள்.
மாறன் தொடர்ந்து, “அண்ணி இனிமேல் இப்படிச் செய்னு சொல்லுங்க. நாங்க செய்ரோம். அத விட்டுட்டு இப்படிச் சொல்லாதீங்க. பொறவு அம்மாக்கு மட்டுமில்ல எங்களுக்கும் ஏன் அண்ணனுக்கும் கூட நீங்க வந்தது ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்களுக்கு நாங்க இருக்கோம்” எனக் கூற, விழியோ, “அண்ணனா ? ” என மனதிற்குள் பேசுவதாக நினைத்து வெளியே கூறிவிட, சாந்தினியோ, “என்ன அக்கா ? கதிர் மாமா இல்லாமலா ? அவருதானே உங்கள காதலிச்சுக் கல்யாணம் பண்ணி கூப்பிட்டு வந்திருக்காரு. அவருக்கு உங்கள பிடிக்காமையா ? ” எனக் கேட்டு சிரிக்க, விழியோ மனதினில், “சிரி சிரி..ஆனா உண்மை என்னென்னா என்னோட வாழ்க்கை தான் சிரிப்பை சிரிக்கிது” என எண்ணிக்கொண்டாள்.
பிறகு மெல்ல சமாளித்தபடி, “நீங்க பேசுங்க, நான் வெளில இருக்கேன்” என அவர்களுக்குத் தனிமை கொடுத்து விலகி நடந்தவள் அப்படியே முன்கட்டை தாண்டி கூட்டத்திற்கு வந்திருந்தாள்.
அங்கே கதிரவன்.
கதிரவனுக்கு அருகே பார்வதி. தலை குனிந்தபடி நின்றிருந்தார்.
“அம்மா…” எனக் கதிரவன் அழைக்க, அவரோ அவனின் மனநிலையை அறிய போராடிக்கொண்டிருந்தார். எப்படி ஆரம்பிப்பது என்ன சொல்வது என்று இவர் தயங்க கதிரவனோ வேறு விதமாக நினைத்தான்.
“நீயும் என்ன நம்பலியா மா? நான் இப்படியெல்லாம் உனக்குத் தெரியாம பண்ணிருப்பேனு நீ நினைக்கிறியா ?” என உடைந்து போன குரலில் கூற, சட்டென்று பார்வதி, “அய்யா என்ன பேசுறவ ? உன்ன நம்பாட்டி நான் வேற யார நம்புவே ? உன்ன பத்தி நீ சொல்லி தெரிய வேண்டியது இல்ல. இன்னைக்கு நடந்த எதுக்கும் நீ பொறுப்பாக மாட்ட ராசா” என அவர் கூறிவிட, “அப்புறம் ஏன் மா அவ கழுத்துல என்ன தாலி கட்ட சொன்ன?” என்று நேரடியாகக் கேட்டுவிட அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தடுமாறிப் போனார் பார்வதி.
“அது..அது..” என இழுக்க,
“சொல்லுமா…எனக்கும் அவளுக்கும் சம்மந்தம் இல்லனு தெருஞ்சும் ஏன் கட்டி வச்ச ? “
“இதுக்கான பதில் என்ட இப்ப இல்ல அய்யா. ஆனா விழி உன்ன உசுரா காதலிக்கிறா. அது மட்டுமே நிசம். நான் உம்மேல வச்சுருக்கப் பிரியத்தைவிட ஒருபடி மேல வச்சிருக்கா.
அப்படியொருத்திய உனக்குக் கட்டிவைக்காம போன அது பெரிய பாவம். ஏற்கனவே செஞ்ச பாவத்தைக் கழுவ விதியில்லாம இருக்கேன்.
நீ என்ன நம்புனா, நான் உனக்கு நல்லதுதான் நினைப்பேனு நம்பிக்கை இருந்தா இந்தச் சென்மத்துக்கு விழி தான் உனக்குப் பொண்டாட்டி கதிரவா. உன்னோட கல்யாண விஷயம் தான் உன்கிட்ட நான் முதலும் கடைசியுமா கேட்ட கேக்குற விஷயம்.
எனக்காக நீ ஏதாவது பண்ணனும்னு நினச்சா இத மட்டு பண்ணு. நீயும் விழியும் என்னோட ஆயுசுக்கும் இந்த வீட்ல தான் இருக்கணும். நான் சிரிச்சு நீ இதுவரைக்கும் பாத்துருக்கவே மாட்ட. இனிமேல் நான் சிரிக்காட்டியும் உசுரோடவாவது இருக்கணும்னு நினைப்பு இருந்துச்சுன்னா அந்தப் புள்ளைய புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. பண்ணுவியா பா? ” எனக் கூறியபடி மகனின் முன் கெஞ்சுதலாக நிற்க, கதிரவனிடம் பதில் இல்லை.
அப்படியே நின்றான். பிடிக்காதவளோடு பிடிப்பான வாழ்க்கையை எப்படி ஏற்படுத்த முடியும் என்ற பெரிய கேள்வியுடன் நின்றான்.
பார்வதியின் கண்ணீர் அசைக்கவே, “உண்மைய சொல்லனும்னா நீங்க சொன்னது போலவே இதுக்கான பதில் என்ட இப்ப இல்லமா. ஆனா நான் இந்த வீட்டைவிட்டு போகல. அவளையும் போகச் சொல்லமாட்டேன்.
ஆனா அவளா போன எனக்குத் தெரியாது. மத்தபடி எதையும் என்னால உறுதி கூற முடியாது. ஏன்னா என்னோட வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியல. இதுல நான் சொல்லி என்ன ஆகா போகுது..” எனக் கூற, அவனின் வார்த்தைகளில் அத்தனை கசப்பு. அப்படியே நிற்காமல் சென்றுவிட, இதை அனைத்தையும் முழுதாகக் கேட்டிருந்தாள் விழி.
செல்கின்றவனை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தவளை பின்னிருந்து யாரோ தோள்களைத் தொட சட்டென்று திரும்பினாள்.

Advertisement