Advertisement

விழியின் புகுந்த வீடு – 23
கதிரவனும் கனல்விழியும் அவனின் பூர்வீக வீட்டின் முன்னால் அதாவது தற்போது லிங்கம் இருக்கின்ற பெரிய வீட்டின் முன்னால் மனமக்களாக நின்றிருந்தனர். உடன் மாறனும் சாந்தினியும் மாலையும் கழுத்துமாக.
புகுந்த வீட்டிற்கு முதன் முதலாய் அடியெடுத்து வைக்கிறாள். முற்றிலும் அந்நியர்கள்; இஃது எல்லாப் பெண்களும் சந்திக்க வேண்டிய ஒன்றுதான் என்றாலும் அவர்களுக்கு இருக்கின்ற பிடிப்பொன்று விழிக்கு இல்லை. அஃது அவளைக் கொண்டவனின் நேசம், திருமணநாளன்று யாருமறியாத ஓர பார்வையும், ஒரு விரல் தீண்டலும் மனதால் நான் இருக்கிறேன் எனக் கணவன் தரும் நம்பிக்கையும் அவளுக்கு இல்லை. அதற்குக் கதிரவன் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டான்தான் என்றாலும் விழியின் இதயத்தில் ஏதோ ஒரு மூலையில் அதற்கான ஏக்கம் இருக்கவே செய்தது. அதை மறுப்பதற்கு இல்லை. அதை நினைக்கின்ற போது, அவளின் இயல்பையும் மீறி இலேசாகக் கண்ணைக் கரிப்பத்தைப் போல இருந்தது.
பெற்றவர்களின் ஆதரவும் இல்ல, கணவனின் அரவணைப்பும் இல்லை. இஃது எதுவுமே இல்லாமல் போனதற்குக் காரணம் விழி மட்டுமே. ஆனாலும் விழி சோர்ந்துவிடவில்லை. சற்று முன் கோவில் மணடபத்தில் கூறிய தன்னுடைய உயிராக நினைக்கும் தந்தையின் வார்த்தைகளை மீண்டும் மனதிற்குள் நினைவுபடுத்திக்கொண்டாள்.
கந்தசாமி கூறிய அந்த வார்த்தைகள்,
“இதோ பாரு… எந்தப் பிரச்சனைனாலும் துணிஞ்சு நில்லு, எதித்து நில்லு, போராடு, வெற்றியோ தோல்வியோ சமாளி. ஆனா அழமட்டும் செய்யாத. நீ அழுதனா உன்னோட அப்பாவோட வளர்ப்பு தோத்துப்போய்டும். சொல்லு அததான் நீ விரும்புரியா ?”
சோர்ந்திருந்த மனம் இனி ஒருபோதும் சோர்ந்துவிடவே கூடாது என்ற தெளிவு பிறந்தது அவளுள். “இல்ல அழமாட்டேன். முடுஞ்சத யோசிக்கவும் மாட்டேன். போராடி என்னோட காதல்லயும் ஜெயிப்பேன். வாழ்க்கையிலையும் ஜெயிப்பேன்” எனச் சொல்லிக்கொண்டாள்.
மறுபுறம் கதிரவனோ தன் கோபத்தையும் இயலாமையையும் வேறு யார் மீதும் காட்டமுடியாத காரணத்தினால் அந்த பூமாலை மீதி காட்டியிருக்க அது வரும் வழியிலையே தொடுக்கப்பட்ட மாலை உதிரி பூக்களாக மாறியிருந்தது. அவன் கழுத்தில் மாலை இல்லாத காரணத்தினால் கனல் விழியும் அதை கழட்டியிருந்தாள்.
இப்போது அவனுக்கு எதுவுமே பிடிக்காத நிலை. ஏன் தன்னையே. இத்தனை நடந்தும் ஏன் அமைதியாக இருக்கின்றாய் என தன் மனம் மீதே அவனுக்கு கோபம். ஆதலால் தன்னையே வெறுத்தவனாகவும், தன் முன்னாடி நிற்கும் நமது நாயகி அவனுடைய பொய் காரியை வெறுப்பவனாகவும் நின்றிருக்க, மெல்ல பாரிஜாதம் வீட்டிற்குள் சென்று ஒரு வன்ம முறுவலுடன் வெளியே வந்தார்.
அவராகவே, “அது ஒன்னுமில்ல அண்ணே, பிடிச்ச கண்ணாலமோ பிடிக்காத கருமாந்திரமோ ஏதாவொன்னு ஆலாத்தி எடுக்கணும்ல. அதா உள்ளாரா போய் ஏற்பாடு பண்ணிட்டு வந்தே” என கூற, சட்டென்று பார்வதியின் முகம் கலவரமானது.
அதே கலவரத்துடன், “அம்மா விழி, நல்லா கடவுளை வேண்டிக்கோமா. எப்பவுமே நான் இந்த வீட்டுல என்ன செஞ்சாலும் அபசகுனமாவே தான் நடக்கும். மொத மொத ஆரத்தி கரைச்சு எடுக்குறப்ப ஆரத்தி அணஞ்சிடுச்சு மா. அதுல இருந்து மெல்ல மெல்ல அரசல் புரசலா பேசுன பாரிஜாதம் கதிரவன் தாத்தா போனதுக்கு பொறவு முழுநேரமும் என்ன சாடுறத மட்டுமே வேலைய பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.
அஃது என்னவோ அந்தக் கடவுளுக்குக் கூடக் கண்ணு இல்லனு தான் சொல்லணும். நான் என்ன பண்ணாலும் எப்ப பண்ணாலும் எப்படிப் பண்ணாலும் அதுல ஒரு குத்தம் கண்டிப்பா நடந்துரும். அத வச்சுக்கிட்டு என்ன முடக்கி வைக்கிறதுலையே குறியா இருப்பா இந்தப் பாரிஜாதம். அவளைக் குத்த சொல்லிமட்டும் என்ன ஆவப்போவுது? எல்லா என்னோட கெட்ட நேராந்தே. வேற என்னத்த சொல்ல ?
உனக்காச்சும் நல்லது நடக்கணும். நீ நல்லா சாமிய கும்பிட்டுக்கிட்டு வலது கால எடுத்து வச்சு உள்ள போ மா. ஆண்டவா என்னோட நிலைமையை இந்தப் புள்ளைக்கு எந்தக் காலத்துலையும் கொடுத்திடாத” என விழியிடம் கூறிவிட்டு மனதார இறைவனிடம் பிராத்தனையை வைக்க, விழி பார்வதியின் பேச்சை பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
“அதெப்படி இருபது வருசத்துக்கு மேல எப்பவும் ஒருத்தவங்க செய்றது அபசகுனமாவேவா இருக்கும்? ஒருமுறை தப்பா செஞ்சாலே மறுக்கா அதே தப்பு வராம பாத்துப்பாங்களே. அப்படி இருந்தும் அத்த சொல்றது போல எப்படி நடத்துட்டே இருக்க முடியும் ? அதுவா நடக்க வாய்ப்பே இல்ல. யாராவது நடத்துனா மட்டும் தான் நடக்க வாய்ப்பு இருக்கு” என யோசனையை ஓடவிட்டுக்கொண்டிருக்கும் போதே பாரிஜாதம் சம்பிரதாயங்களைக் கூற தொடங்கினார்.
“பிடிச்சாலும் பிடிக்காட்டியும் எம்மவள மட்டும் ஆரத்தி எடுத்து கூப்பிட்டா என்ன இந்த ஊரு ஜனமே தூத்தும். அதுனால இரெண்டு பேருக்கும் எடுத்துடுறே.
இந்த மா… விழியோ முழியோ ஏதாவொன்னு. இந்தா இப்படிக்கா வந்து நில்லு. உனக்கு மொத சுத்திட்டுப் பொறவு எம்மவளுக்குச் சுத்துறே. திருட்டுக் கண்ணாலம் செஞ்சாலும் மூத்த மறுமவளா போயிட்ட அதுனால நீயே மொதல்ல உள்ள போ.
ஏப்புள்ள சாந்தினி அந்தப் புது மருமக போன பொறவு நீ போய்க்கலாம். ஒன்னு அவசரமில்லை” எனக் கூற, விழி பாரிஜாதத்தின் கரிசனத்தைக் கண்களை இடுக்கி பார்த்தாள்.
மனதிற்குள், “ஆட வெட்ட போறாங்களேன்னு கசாப்புக் கடை கத்தி கதறுதே. சரி இல்லையே! இம்புட்டுக் கரிசனமா சின்னமா ? நம்ப முடியலையே” என நினைத்துக்கொண்டாள்.
“இந்தா புது மறுகளே, முன்னாடி வா” எனப் பாரிஜாதம் வன்மத்துடன் அழைத்தபடி ஒரு விசித்திர சிரிப்புடன் ஆராத்தியில் தீபத்தை ஏற்ற, விழியோ மனதினில், “ஓ இதுதான் உங்க திட்டமா?” என எண்ணியபடியே, “சின்னமா இனி நீ வெத்துவேட்டமா” என எண்ணியபடி, பார்வதியிடம், “அத்த இந்த வீட்ல இருக்குற எல்லாரும் எவ்ளோ தங்க மனசா இருக்கீங்க? மூத்த மருமகளா இருந்தாலும் சாந்தினி இந்த வீட்டு பொண்ணு. அதுலயும் மாமாவுக்குச் சாந்தினினா கொள்ளப் பிரியம். இந்த வீட்டு செல்ல புள்ள. அதுனால இந்த மூத்த மருமக இளைய மருமகனெல்லாம் ஒன்னு வேணாம்.
மாமாவுக்குப் பிடிச்ச மருமகளுக்குத் தான் எப்பவும் முதலிடம். அதுனால எங்க இரெண்டு பேருக்கும் ஒன்னாவே ஆழம் சுத்தட்டும்” எனக் கூறியபடி சாந்தினியின் கைகளைப் பிடித்துத் தன்னுடன் இணைத்துக்கொள்ள மாறனும் வேறு வழி இல்லாமல் சாந்தினியுடன் இணைந்து நின்றான்.
பாரிஜாதம் முகத்தில் ஏமாற்றம்.
“ஏ சாந்தினி நீ பின்னாடி போ” எனப் பாரிஜாதம் கடிய, லிங்கமோ, “பாரிஜாதம், மொத நம்ம புள்ளைக்குச் சுத்து. எல்லாத்துலயும் நம்ம புள்ளைக்குத்தான் முதலிடம்” என அதட்ட, பாரிஜாதம் மனதில் குமைந்துகொண்டிருந்தார்.
“ஆரத்தி சுத்துறப்ப நாமளே ஊதி அணைச்சுப்புட்டோ இல்ல கை தவறி கீழ போட்டுட்டோ அபசகுனம்னு சொல்லலாம்னு பார்த்தா, இந்த வினய புடுச்சவ என்னோட மகளையுமில்ல கூட்டு சேர்த்துப்புட்டா… இருக்கட்டும் இருக்கட்டும். இதுல நீ தப்புச்சா என்ன ? வேலைக்கார கிழவிக்கிட சொல்லி நீ வீட்டுல கால எடுத்து வைக்கும் போது கரட்டு பொட்டிய அமத்த சொல்லிட்டேன்.
எம்மவ வலது கால வைக்கும் போது மறுபடியும் போட்டுவிடச் சொல்லிட்டேன். இதுல பொழச்சு போ . அடுத்த நிமிஷமே உன்ன ராசிகெட்டவளா மாத்தி காட்டுறேன் டி” எனத் தனக்குள் சூழுரைத்துக்கொண்டார்.
“வீட்டுக்குள்ளாற போங்க” எனச் சுற்றிமுடித்துவிட்டு கூற, இப்போது கதிரவன் பின்தங்கினான். விழி கேள்வியாகப் பார்க்க, அவன் பார்வதியிடம், “அதா அவரு எல்லாத்துலயும் அவரு பிள்ளைக்குத்தான் மொதலிடம்ன்னு சொல்லிட்டாருல்ல. பொறவு என்னத்துக்கு என்ன பாக்குறீங்க மா ? அவரோட தங்கச்சி மகளே உள்ள போகட்டும்” எனக் கூற, விழியும் கதிரவன் அருகில் நின்றுகொண்டாள். கதிரவனுக்கோ உள்ளே செல்லவும் விருப்பமில்லை, விழி தன் அருகில் நிற்பதையும் விரும்பவில்லை.
பார்வதி கதிரவனிடம் கண்களால் கெஞ்ச அவருடைய கண்களில் நீர்கோர்த்தது; அதைப் பார்த்து சற்றே அசைந்துகொடுத்தவனோ, “தம்பிய உள்ள போகச் சொல்லுங்க. வரேன்” என வேண்டா வெறுப்பாகக் கூற, இந்த முறை பாரிஜாதம் பதற்றம் கொள்ளவில்லை.
“யாரு முன்னாடி போனா என்ன? எப்படியும் அந்தக் கிழவி இந்த வம்புக்காரிய பார்த்துட்டு அவ காலடி வைக்கிறப்பனு அமத்திடுவா. பொறவென்ன? எம்மவ பூஜ அறைக்குப் போகவேண்டி தான். குத்து விளக்க ஏத்தி இந்த வீட்டுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வரவேண்டிதான்.
எம்மவ உரச போற தீக்குச்சில விளக்குமட்டும் ஜொலிக்கப் போறதில்ல. நான் கொளுத்தி போட்றதுல இந்தப் புது மருமகளோட ஆட்டமும் ஆட்டங்காண போவுது” என உள்ளூர கருவியபடி. கண்களை ஜாடையாக மச்சக்காளையிடம் காட்ட, அவரோ, “இதுவாச்சு ஒழுங்கா நடக்கட்டும்” என்பது போன்ற பாவனையைத் தந்தார்.
இந்தத் திட்டங்களைப் பற்றி முழுவதுமாக விழிக்கு எதுவும் புலப்படவில்லை என்றாலும் பாரிஜாதத்தின் அடுத்தத் திட்டம் என்னவாக இருக்கும் என்றும் யோசனை ஓடியது. கதிரவன் மனதில் இடம் பிடிப்பதற்கு முன்னர், தன்னைச் சுற்றி நடப்பவைகளை அவளே கண்காணித்துக் காத்து கொள்ளவேண்டிய அவசியத்தில் இருந்தாள்.
கொண்டவனின் துணையிருந்தால் கூரை ஏறலாம் என்ற பழமொழி ஒன்றுள்ளது. அது கணவனின் துணை எத்தனை துணிச்சலை தரும் என்று கூறும் பழமொழி. அது இல்லாத பெண்களுக்கு வாழ்க்கை இன்னும் அதிகப்படியான சவால்களைக் கொண்டிருக்கும். விழி அனைத்துக்கும் தயாராகவே வந்திருந்தாள்.
தீனமாக முடிவெடுத்து திடமான நெஞ்சுரத்தோடே வந்திருந்தாள்.
முதலில் சாந்தினியை உள்ளே செல்லும்படி சொல்ல, அவளும் மாறனும் வலது காலை எடுத்து வைக்கச் சட்டென்று அந்த வீட்டில் இருள் சூழ்ந்தது. மாறன் சாந்தினி இருவருமே பதைபதைத்த நெஞ்சோடு தங்களை அறியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, இருவரது கண்களிலும் ஒருவித பயம். அது எதிர்காலத்தைக் குறித்த பயம்.
தாலி கட்டிய பிறகு இருவரும் ஒருவருடைய முகத்தை மற்றொவர் பார்க்காமல் தவிர்த்தனர். அதற்குக் காரணம் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ளாததே. பாரிஜாதம் மச்சக்காளை கூறியதை பற்றிய சிந்தனை அவரகள் மனதின் மூலையில் எங்கோ ஓடிக்கொண்டிருந்ததே அதற்குக் காரணம். அது மனதில் இருந்தாலும், அதையும் மீறி ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்க முடியா காரணத்தினால் ஊர் சபையினர் முன் காதலிக்கிறோம் என்று சொல்லி திருமணம் செய்துகொண்டனர்.
ஆனால் நேரடியாக முகத்தைப் பார்க்க தயக்கம். தங்களின் மனதில் உள்ளதை கேட்கவும் தயக்கம். ஏனென்றால் ஒருவேளை அதைக் கேட்டு, “ஆம் அப்படிதான்” என்ற வார்த்தைகள் வந்துவிடுமோ என்று அச்சம் கொண்டே இருவரும் சற்றே விலகி இருந்தனர்.
ஆனால் திடிரென்று சூழ்ந்த இருள், இத்தனை நேரமாய் அவர்களது மனதில் தோன்றிய குழப்பத்தை மறக்கவைத்து ஒருவரை ஒருவர் பார்க்க வைத்தது. இருவரது கலக்கமும் அவர்களது கண்களில் தெரிய, வேகமாக இருவரும் ஒருவரை ஒருவர் தேற்றுவதற்காக, “அதெல்லாம் ஒண்ணுமில்ல” என்பதாய் கண்ணசைத்தனர்.
ஆனால் லிங்கத்திற்கு இப்படியானது பிடிக்கவில்லை. ஏதோ சரியில்லை என்று அவர் உணர்ந்தார். பாரிஜாதமும் மச்சக்காளையும் வேலைக்கார கிழவியை மனதினுள் கருவியபடி அடுத்து என்ன செய்ய என்பதைப் போலக் கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தனர்.
பார்வதியோ சற்றே கலக்கம் கொண்டார்.
அடுத்ததாகக் கதிரவனும் கனல்விழியும் பாதம் பாதிக்கச் சட்டென்று ஒளிவர இருள் இருந்த இடம் தெரியாமல் விரட்டியடிக்கப் படவே பாரிஜாதம் மச்சக்காளை தவிர அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
மாறன் சாந்தினிக்குப் பயம் இருந்த போதிலும் விழி காலடி வைத்ததும் ஒளி வந்தது அவர்களுக்கும் சந்தோஷமாகவே இருந்தது. இதைச் சற்றும் எதிர்பாராத பாரிஜாதம் விடுவிடுவென்று வேலைக்கார கிழவியைச் சென்று உருட்ட, அவரோ பரிதாபமாக, “அயோ அம்மா என்ன சொல்லுறீங்க ?அப்போ இரண்டாவது வந்தது உங்க மவ இல்லையா ? நான் உங்க பொன்னுனுல நினச்சேன். போன வாரம்தானே கண்ணு ஆபுரேசனு பண்ணினே. படுபாவி சரியா பண்ணாம விட்டுட்டாய்ங்க போலவே இனி இந்தக் கண்ண வச்சுக்கிட்டு எப்படி நாடகமெல்லா பார்ப்பேன்?” என அவர் புலம்ப, பாரிஜாதம் நறநறவென்று பற்களைக் கடிப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியாதவராக நிற்க, அங்கோ லிங்கம் பூஜை அறையில் விளக்கேற்ற அழைத்துக்கொண்டிருந்தார்.
வந்தது முதலே பார்வதியை லிங்கம் எதற்கும் அழைக்கவில்லை என்பதை விழி குறித்துக்கொண்டாள்.
பார்வதியும் சற்றே ஒதுங்கி நின்றார்.
வேகமாக வந்த பாரிஜாதம் மகளை அழைத்துச் சென்று விளக்கேற்ற, அடுத்து விழியின் முறை. விழியை அழைத்தவர், சட்டென்று மச்சக்காளைக்குக் கண் ஜாடை காட்ட அவர் அங்கிருந்து சென்றார். இதைக் கண்டுவிட்ட விழி, “என்னவா இருக்கும் ?” என யோசித்தபடியே விளக்கு அருகில் செல்ல, பாரிஜாதம் தான் இருந்த இடத்திலிருந்து விலகி நிற்க சட்டென்று இதமான காற்று விழியன் முகத்தில் பரவியது.
இத்தனை நேரம் இல்லாமல் எங்கிருந்து இந்தக் குளிர்ந்த காற்று என நினைத்தபடியே கைகளில் தீப்பெட்டியை எடுக்க, அவள் மூலையில் ஓர் எண்ணம் உதயமாகியது. வேகமாக அவளுடைய கண்கள் காற்று வருகின்ற திசையையும் பாரிஜாதம் இத்தனை நேரம் நின்ற இடத்தையும் இப்போது வேணுமென்றே இடத்தை மாற்றி நின்றதையும் மச்சக்காளைக்கு ஜாடை காட்டியதையும் ஒன்றோடொன்று பொருத்தி பார்த்தவளுக்கு அனைத்தும் புரிந்து போனது.
சாந்தினி விளக்கேற்றும் போது மூடியிருந்த ஜன்னல் கதவை திறக்கவே மச்சக்காளை அனுப்பப்பட்டிருக்கிறார். ஜன்னல் வழி இல்லாமல் வேறு எந்த வழியிலும் காற்று வந்து விளக்கு அணைந்திட கூடாது என்பதற்காகத் தன்னுடைய பருத்த உடம்பை வைத்துப் பாரிஜாதம் அணைவாக நின்றிருக்கிறார். இப்போதோ, ஏற்றப்படும் தீபம் அணையவேண்டும் என்பதற்காகவே ஜன்னலையும் திறந்துவிட்டு காற்று வருகின்ற திசைக்கு எதிர் திசையில் தன்னை விளக்கேற்றும் படி கூறுகிறார் என்பதைத் தெள்ள தெளிவாகப் புரிந்துகொண்டாள்.
“ஓ இது தான் விஷயமா ? இத வச்சு தான் சகுன சந்தர்ப்பம்லாம் வச்சு ஆட்டம் போடுறியா ? இப்ப நான் வந்துட்டேன்ல வசிக்கிறேன் உங்கள” என மனதிற்குள் நினைத்துக்கொண்டு, பாரிஜாதத்தைப் பார்த்து எள்ளல் கலந்த சிரிப்பை உதிர்க்க, ஆவலாகக் காத்திருந்த பாரிஜாதத்திற்கு அவளின் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை.
“என்ன செய்யப் போறா?” என மனதினுள் நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே, பார்வதியை கண்ஜாடையில் அழைத்த விழி அவரிடம் ஏதோ பணிவாகச் சொல்லிவிட்டு, காற்றுத் தீபத்தை அணைக்காதவாறு மறைத்து நின்று ஏற்ற, தீபம் சுடர் விட்டு எரிந்தது.
கூடவே பாரிஜாதத்தின் வயிறும்.
“இப்போ இங்கிருந்து நகருவேல, அப்போ காத்துல அணஞ்சிடும் டி” என உள்ளுக்குள் விடாது பாரிஜாதம் வன்மமாகக் கூற, விழி சற்று விலகியும் கூடத் தீபம் அணையவில்லை. இன்னும் ப்ரகாஷமானதே தவிர ஒளி குன்றாமல் போகக் குழப்பமாகப் பாரிஜாதம் ஜன்னலை பார்க்க அஃது அடைத்திருந்தது.
விழி கூறி ஜன்னலை அடைத்துவிட்டு வந்த பார்வதியோ இத்தனை வருடமாய் இப்படித் தான் இவர் செய்தாரா ? என்பதைப் போலத் தன்னுடைய முட்டாள் தனத்தை நினைத்து தானே வருத்தம் கொண்டார். கூடவே விழியை நினைத்து இனி எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் கொண்டார் .
அடுத்து ஆளும் பேருமாக ஒருவர் மாற்றி ஒருவர் ஊரிலிருந்து ஜனங்கள் வந்து செல்ல அந்த வீடே திருவிழா போலிருந்தது.
ஒருபுறம் ஆண்கள் மறுபுறம் பெண்கள் என நிறைந்திருக்கப் பார்வதி தான் ஓடி ஆடி வேலை பார்த்தார். இப்போது வேலை சொல்வதற்கு மட்டும் லிங்கத்தின் வாய் மூச்சிற்கு முன்னூறு முறை பார்வதியை அழைத்துக் கொண்டே இருந்தது. மேற்போக்கான விருந்தோம்பல் பணிக்கு தன் தங்கை பாரிஜாதத்தை அழைக்கவே, இதையெல்லாம் கண்டும் காணாததைப் போலக் கவனித்துக்கொண்டிருந்த விழிக்கு தன்னுடைய அனைத்து பிரச்சனைகளும் பின்னே சென்றது.

Advertisement