Advertisement

மாப்பிள்ளையின் தங்கையான பாரிஜாதத்தையும் வேலை என்று உருப்படியாக எதுவும் இல்லாத மச்சக்காளையையும் அழைத்துவிட்டிருந்தார். பாரிஜாதத்திடம் பக்குவமாக விஷயத்தை எடுத்து கூறி, லிங்கத்திற்குச் சம்மதமா என்று கேட்க, பாரிஜாதம் மறுநாளே வந்து, “அண்ணனுக்குப் பரி பூரணச் சம்மதம். அண்ணி வயித்துல இருக்குற குழந்த எங்க குடும்பத்தோட மூத்த வாரிசு” எனச் சத்தியம் செய்து கூற, ராஜன் மீண்டும் ஒருமுறை அவர்களிடம், “லிங்கத்துக்குக் கண்டிப்பா விஷயம் தெரியும்ல ?” எனக் கேட்க, மச்சக்காளையோ, “அட நிஜமாலுமே சொல்லிட்டோம். அதோட மச்சான் என்ன சொன்னாருன்னா இனிமேல் நம்ம கூட இத பத்தி பேசவேணாமாம். நம்மளையும் மறக்க சொல்லிட்டாரு. அது அவரோட புள்ளையாம். அதுனால மறுபடியும் இந்தப் பேச்ச எங்கையும் எடுக்காதீங்க அய்யா” எனக் குனிந்து வளைந்து கும்புடு போட்டு கூறவே, ராஜன் அப்படியே நம்பிப்போனார்.
திருமணமும் நடந்தது….
பார்வதி பிரபாகரனின் நினைவில் பிடிவாதமாக மறுத்தும் ராஜனின் வற்புறுத்தலுக்காக ஒப்புக்கொண்டார். இரண்டு வாரங்கள் நன்றாகவே சென்றன. ராஜனும் மெல்ல மெல்ல பழயதிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த சமயம் தற்செயலாகப் பாரிஜாதமும் மச்சக்காளையும் பேசியதை கேட்க நேர்ந்தது. அவர்களின் பேச்சிலிருந்து தன் மகளின் வயிற்றில் இருக்கும் குழந்தையை இவர்கள் நல்ல முறையில் வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லாமல் போகவே வக்கீலை வரவழைத்து உயிலொன்றை யாருக்கும் தெரியாமல் தயார் செய்திருந்தார்.
திருமணத்திற்குச் சீதனமாக லிங்கத்திற்குக் கொடுத்து ஓரிரு சொத்துக்களைத் தவிர அனைத்தும் மகளின் முதல் வாரிசுக்கு என்று கூறியதோடு, பிராபகரின் ஓரிரு சொத்தை குத்தைகைக்கு விட்டும் மீதி சொத்துக்களை விற்றும் வங்கியில் பணத்தைப் போட்டு மகளிடம், “பத்திரம், உன்னோட புள்ளைக்குத் தேவைப்படும். வேற யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். உன்னோட புருஷன்கிட்டயும்” எனக் கூறிக் கொடுத்திருந்தார்.
“தப்பானவங்க கைல பார்வதிய பிடிச்சு கொடுத்துட்டோமா?” என்ற சிந்தனையோடு மனம் நிறைந்த வலியோடு இரவு படுத்தவர் மறு நாள் எழவில்லை.
அதன் பிறகு பார்வதிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஆறுதலும் அத்து போய், முழு நரகத்தை அனுபவிக்கத் தொடங்கினார். மெல்ல அவர் கர்ப்பமுற்றிருப்பதை உணர்ந்த போது பார்வதி லிங்கம் என்று இருவருக்கும் பேரதிர்ச்சி.
லிங்கமோ, “ஏண்டி உனக்குக் கண்ணாலம் ஆகிடுச்சுனு சொன்ன உங்க அப்பா, நீ கர்பமா இருக்குறத சொல்லாம என்ட மறச்சு கட்டி வச்சுட்டாருல்ல ? இந்த உண்மைய சொல்லி இருந்தாலும் நான் உன்ன கட்டியிருப்பேன். சந்தோசமா உன்கூட வாழ்ந்துருப்பேன். அந்தப் புள்ளையையும் என்னோட புள்ளையாவே நினச்சுருப்பே. ஏனா எனக்கு உன்ன பிடிக்கும் டி. ஆனா என்ன நம்ப வச்சு கழுத்தறுத்துடீங்கல…உங்க அப்பா பண்ணின துரோகத்துக்கு இனி வாழ்நாள் முழுக்க அனுபவிப்ப. இனி உன்னோட புள்ளைய பாக்குற ஒவ்வொருநாளு என்ன உங்க அப்பா திட்டம் போட்டு முட்டாளுக்கானது தான் டி நினைப்புக்கு வரும். ” என்று கூறியவர் தான், அதன் பின் பார்வதியிடம் அன்பிருந்தாலும் விலகியே இருந்தார்.
அதை மீறி அவரது மனம் பார்வதியின் புறம் சாய்கின்ற பொழுதினில் எல்லாம் பாரிஜாதம் மீண்டும் மீண்டும் பழையதை பேசி பேசி அண்ணனை பார்வதியை விட்டு ஓரடி எட்டிநிற்க வைத்திருந்தார்.
கதிரவன் பிறந்த பிறகு, அவனைக் காண்பித்துக் காண்பித்து ‘இவன் உன்மகனில்லை’ என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி லிங்கத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி வைத்திருந்தார்’
மெல்ல பழைய கதைகளிலிருந்து வெளிவந்தவர்கள்,
“என்ன பார்வதி? இப்ப புரியுதா ? உங்க அப்பாரு சொன்னாருதான். ஆனா நாங்க அத அண்ணேகிட்ட சொல்லல. இப்ப நீ போய் இத சொன்னாலும் அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு ? அண்ணே நாங்க சொல்றத தான் கேட்கும்.
நீயும் மாசமா இருக்குறத மறச்சுதான் எங்க அண்ணனை கட்டிகிட்டன்னு அது நினைக்கிது. அது நினைக்கல ஆரம்புத்துல. நான் அப்படி நினக்கவச்சுட்டேன். அதுனால உன்னோட பேச்சு செல்லுபடியாகாது.
இப்ப பழசெல்லாம் விடு. அத பத்தி பேசி உன்னால ஒன்னும் கிழிக்க முடியாது. இப்ப கதிரவனுக்குத்தான் எல்லாச் சொத்து பத்தும் இருக்குது. அந்தச் சொத்துக்காகத் தான் வயித்துல புள்ளையோட வந்த உன்ன கட்டி வச்சோம். அதுனால, கதிரவனுக்குச் சாந்தினிக்கும் தான் கண்ணாலம் நடக்கணும்.
அதைவிட்டுபுட்டு என்னோட மகனுக்குத் துரோக பண்ணமாட்டே. மாறனுக்குத் தான் சாந்தினியை கொடுக்கணும் அது இதுனு ஏதாவது பேசுனனு வை, உன்னோட கதிரவனுக்குத் தகப்பன் என்னோட அண்ணே இல்லனு ஊரு ஜன முன்னாடி சொல்லி நாறடிச்சிருவே.
ஒருவேளை நீ இதுக்கு அசராம போகலாம். ஆனா உன்னோட புள்ள கதிரவனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா தாங்குவானா என்ன ? உனக்குக் கண்ணாலம் நடந்து தான் இவன் பொறந்தானு எங்களுக்குத்தானே தெரியும். மத்தவங்களுக்குத் தான் உனக்கு மொத காணலாம் ஆனதே தெரியாதே.
அதுனால உன்னோட புள்ளைக்கு இந்த ஊருல வேற பேருகூட வைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு.
அப்படி எதுவுமே நடக்ககாம இருக்கணும்னா, வாய்ய மூடிக்கிட்டு வந்து பையனோட அம்மாவை இலட்சணமா நில்லு. ஒரு வார்த்த கூடப் பேச கூடாது. புருஞ்சுதா ?” எனக் கூறிவிட்டுப் பாரிஜாதம் செல்ல, மச்சக்காளையும் ஒரு நக்கல் சிரிப்புடன் வெளியேற, பார்வதி அப்படியே சரிந்து அழ தொடங்கினார்.
அழுகின்றவரை பார்த்து நின்ற விழியோ அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. பாரிஜாதத்தின் மீதும் மச்சக்காளையின் மீதும் அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது.
ஆனால் அதற்குள் அந்த அறையின் மூலையில் இருந்த சாக்கு முட்டையையும் கோணி ஊசியையும் பார்த்த பார்வதி வேகமாகச் சென்று கோணி ஊசியைக் கைகளில் எடுக்க, சட்டென்று பதற்றமான விழி வேக மாக அந்த அறைக்குள் நுழைந்து அவரைத் தடுக்க, கல்யாண தகவலை அறிந்து குழப்பத்துடன் வந்துகொண்டிருந்த சக்கரையும் பாண்டியும் விழி உள்ளே ஓடுவதைத் தூரத்திலிருந்து பார்த்தவர்கள் வேகமாக அவளை நோக்கி முன்னேற, உள்ளே இருந்த பார்வதியோ அந்த ஊசியைத் தன் கழுத்தில் பாய்ச்ச இருந்த நொடி சட்டென்று வந்து விழி தட்டிவிட்டிருந்தாள்.
“என்ன பண்றீங்க மா ?என்ன செயிரீங்கனு தெருஞ்சுதான் பண்ணுறீங்களா ?” என அவரை உலுக்க, அவரோ பித்துப் பிடித்தவரை போல, “இத்தனை வருசமா தெரியாமத்தான் வாழ்ந்துருக்கே. இப்ப தெருஞ்சும் வெளியே ஒண்ணுமே சொல்ல முடில. இந்தக் கண்ணாலத்தை நடக்க விடக் கூடாது. நான் நிப்பாட்டுனா எம்மவனோட மானமும் இத்தனை வயசுக்கு அப்புறம் என்னோட மானமும் போய்டும்.
நான் எதுவுமே சொல்லாட்டி என்னோட இரெண்டு புள்ளைங்க வாழ்க்கையும் போயிடும்.
இந்தக் கண்ணாலத்தை நிப்பாட்ட ஒரே வழி என்னோட சாவுதான்” எனக் கூறியபடி, “நான் சாகனும் நான் சாகனும்” என மீண்டும் மீண்டும் பிதற்ற, “நீங்க சாகக் கூடாது. உங்களுக்கென்ன இந்தக் கல்யாணத்த நிப்பாட்டனும் ? அவ்ளோதானே! நான் நிப்பாட்டுறேன்” எனக் கூற, அவரோ நம்பாமல் விழியைப் பார்த்தபடி, “நீ எப்படிம்மா ? இல்ல உனக்கு இங்க நடக்குற விஷயம் எதுவும் தெரியாது.” எனக் கூற, விழியோ நிதானமாக, “தெரியும் மா. நானும் எல்லாத்தையும் கேட்டேன். ஆனா நீங்க பயப்படாதீங்க. என்னோட உசுரே போனாலும் எப்பவும் என் வாய்ல இருந்து ஒரு வார்த்த வராது”என உறுதி அளிக்க, பார்வதி சிறு தயக்கத்துடன், “நீ எதுக்குமா கஷ்டப்படற? உனக்கும் இதுக்கும் சம்மதமே இல்லையே” எனக் கூற, அப்போதுதான் உள்ளே நுழைந்த சக்கரை, “அம்மா என்னமா ஆச்சு ? விழி தானே கதிரவனை உசுருகுசுரா காதலிக்கிது? உங்களுக்கும் தெரியும் தானே? தெரியும்னு அன்னைக்குச் சொன்னீங்களே. இப்போ சாந்தினிகூடக் கல்யாணம்னு சொல்லுறாங்க. என்னமா இதெல்லாம்” என அவன் கூற, பார்வதி விழியை அப்படியா என்பதைப் போலப் பார்க்க, அவள் ஆம் என்பதாய் தலை அசைக்க, “ஐயோ அய்யா சக்கர. நான் சாந்தினிதான் அந்தப் பொண்ணுன்னு பாரிஜாதம் சொன்னதை நம்பி ஏமாந்துட்டேன் அய்யா. இப்பதான் சாந்தினியும் மாறனும்தான் நேசிக்கிறாங்கனு தெருஞ்சது.
இப்ப எப்படி நான் கண்ணாலத்தை நிறுத்துவேன் ? நான் நிப்பாட்ட கூடிய நிலமைல இல்லையே” என மீண்டும் அழ, “நாங்க நிப்பாட்டுறோம் அம்மா” எனச் சக்கரை கூற, “நீ நிப்பாட்டுனாலும் ப்ரஜெனம் இல்ல. எப்படியும் அந்தப் பாரிஜாத சாந்தினிக்கு கதிரவனைக் கட்டிவைக்கப் போராடுவா.அவ சொல்றத தான் மாறனோட அப்பாவும் கேப்பாரு. என் பேச்சோ உன் பேச்சோ எடுபடாது. அவளும் மச்சக்காளையும் தாங்க நினைச்சதை நடக்க என்ன வேணுனாலும் செய்யக்கூடியவங்க. இதுல இருந்து தப்பிக்கணும்னா கதிரவனுக்கு வேற பொண்ணோட கண்ணாலம் ஆகணும். இல்ல கதிரவன் மனசுல வேற பொண்ணு இருக்கணும். ஆனா இரண்டுக்கும் வழி இல்லையே” ” என இவர் கூற,
“கதிரவனை விழி காதலிக்கிறத சொல்லுவோம்” எனப் பாண்டி கூற,
“நீங்க சொல்லலாம். ஆனா நான் மட்டும் தான் காதலிக்கிறேன். அவரு என்ன காதலிக்கலியே. அதுனால அதெல்லாம் ஏத்துக்கிட்டு கல்யாணத்த நிப்பாட்டமாட்டாங்க. அது மட்டுமில்ல, மாறன்கிட்டையும் சாந்தினிகிட்டையும் என்ன சொல்லி வச்சுருக்காங்கனு வேற தெரியல. இதுல அவருக்குச் சம்மந்தப்பட்ட யாரும் இறங்கி நிப்பாட்ட முடியாது. அப்படிச் செஞ்சா அத்தை தான் இதுக்குக் காரணம்னு அவனுங்க கோபம் அத்த மேல திரும்பும்.
இத நான் பாத்துக்கிறேன்”எனக் கூறி விழி தன் திட்டத்தைக் கூற, சக்கரையும் பாண்டியும் தாங்களும் இதற்குச் சாட்சி சொல்வதாய் நிற்க அவர்களை விழி தடுத்தாள். “வேணாம் அண்ணா. நாம பொய் சொல்ல போறோம். என்னோட பொய்க்கு நீங்க சாட்சி சொன்னா அவரு உங்கள வெறுத்துருவாரு. அப்புறம் அவருக்கு ஆறுதலா இருக்க மனசு விட்டு பேச வேற யாருமே இல்லாம போய்டும்.
அத்தையும் நீங்களும் இதுல சம்மந்தப்படாமலே இருங்க. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். அத்த இந்தக் கல்யாணத்த நிப்பாட்ட தற்கொலை தான் வழின்னு நினைக்காதீங்க. கடைசி நிமிஷம் கூட நான் வந்துருவேன்” எனக் கூற, அவரோ, “ஏமா இவ்ளோ பெரியவிஷயம் பண்ண போற. உங்க அப்பா வெளியே தானே இருக்காரு..அவருகிட்ட சொன்னா புருஞ்சுபாருல” எனக் கூற, “இல்ல அத்த. எங்க அப்ப இரெண்டு பேரும் ஆசைப்பட்ட சேர்த்து வைப்பாரு. அதுல சந்தேகம் இல்ல. இங்க நான் மட்டும் பொய் சொல்லி போய் நிற்க போறே. இதுக்கு நிச்சயம் எங்க அப்ப சம்மதிக்க மாட்டாரு. அதுனால அவர்கிட்ட அப்புறம் பேசிக்கலாம்” எனக் கூறியவள், அவர்கள் திட்டமிட்டபடி பார்வதியின் பரம்பரை தாலியை தனக்குத் தானே கழுத்தில் கட்டிக்கொண்டு கொண்டாள்.
“விழி, இவ்ளோ பெரிய விஷயத்துல உன்ன மாட்டிவிடறேனேமா. எனக்காகவும் கதிரவனுக்காகவும் இம்புட்டு துணுஞ்சு இரங்குறியே, இதுல உன்னோட வாழ்க்கை என்ன ஆகும் ? இந்தப் பொய்யான தாலியோட எப்படி உன்னோட வாழ்க்கை ஓடும் ?” எனக் கேட்க, விழியோ கொஞ்சமும் யோசிக்காமல், “அவரு என்ன காதலிச்சாலும் இல்லாட்டியும், கட்டிக்கிட்டாலும் இல்லாட்டியும் எனக்குக் கடைசிவரை அவரு மட்டும் தான். பாப்போம். என்னோட வாழ்க்கைல அவரோட காதல் மட்டும் தான் வேற எதுக்கும் வாய்ப்பில்லை. அதுனால இந்தப் பொய் தாலி அவரோட நினைப்பாவே இருக்கட்டும். அவரை மனசுல நினைச்சுட்டு தான் கட்ட போறேன். ஆனா நீங்க அமைதியாவே இருங்க” எனக் கூற, ஆனால் பார்வதியோ அந்த நிமிஷமே மனதில் வேறு கணக்குப் போட்டிருந்தார்.
“எனக்காகவும் எம்மவனுக்காகவும் இவ்ளோ துணியிற உன்ன அப்படியே விடமாட்டேன். இந்தப் பொய் தாலிய உண்மையான தாலியா மாத்துறேன். ஈஸ்வரா நீ தான் என்கூட இருக்கனும். என்னோட மகனுக்குச் சந்தோஷம்னு இதுவரை எதுவும் இல்ல. இந்தப் புள்ள எம்மவனுக்காக அதோட வாழ்க்கையே பணயம் வைக்கிது. இவுங்க இரெண்டு போரையும் உன்னோட சன்னதில சேர்த்து வைக்கப் போறேன். நீ தான் பார்த்துக்கணும் ஆண்டவா” என மனதார வேண்டிக்கொண்டார்.
மெல்ல நால்வரும் நடப்புக்கு வந்தவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, பார்வதி யாருக்கும் தெரியாமல் கண்களாலே தன் மூத்த மருமகளுக்கு சமிங்கை செய்ய, விழியோ இலேசாக இமைகளை மூடி திறந்து தன் மார்பில் புரண்ட மாங்கல்யத்தைக் கைகளில் ஏந்தியபடி அவருக்கு மனதார நன்றி சொன்னாள்.
ரணமான கணத்திலும் கதிரவனின் மனைவியாய் இருப்பது கொஞ்சமேனும் அவளை ஆறுதல் படுத்தியது.
ஏற்கனவே கடும் கோபத்தில் நின்றிருந்த பாரிஜாதமோ விழியின் சிரிப்பை கண்டுவிட அவருக்கு இரத்தம் கொதிக்கத் தொடங்கியது. அடங்காத ஆத்திரத்துடன், “என்னோட ஆட்டத்த களைச்சு எங்க வீட்டுக்குள்ளையே வரியா ? உன்ன எப்படி ஓட ஓட விரட்டுறேன் பாரு. அந்தப் பார்வதிய எப்படி அதிர்ஷ்டம் கெட்டவளா ஆக்கி அதே வீட்டுல முடக்கி வச்சிருக்கேனோ அதே போல உன்னையும் ராசி இல்லாதவனு பட்டம் கட்டி உன்ன விரட்டுறேன் பாரு டி. என்ன மீறி எப்படி வாழ்ந்துறனு நானும் பாக்குறேன். இந்தப் பார்வதி கடைசி நேரத்துல சதி பண்ணிட்டா. விழியாம் விழி பேரப்பாரு. விடியாமூஞ்சின்னு வச்சிருக்கணும். ஒருவேளை பார்வதியும் இதுல கூட்டோ ? இல்ல இருக்காது. இந்தப் பார்வதிக்கு அத்தனை துணிச்சல் இருக்காது. அதோட இவளை போய்ப் பார்வதிக்கு எப்படித் தெரியும் ? இவ அசலூராச்சே… இந்த விடியாமூஞ்சி தாலி கட்டிக்கிட்டு வந்து நிக்கவும் இதான் சாக்குன்னு தன்னோட இரண்டாவது மகனுக்குக் கட்டி வச்சுட்டா. சரி விடு போகட்டும். எப்படியோ அந்த வீட்ல இப்ப இன்னும் நமக்குப் பிடிப்பு கூடிருச்சு. வந்திருக்க மூதேவியே வெளில தொறத்திட்டு அடுத்த ஆவுறத பார்க்கணும்” ” என மனதில் சூழுரைத்துக்கொண்டு விழி லிங்கத்தின் வீட்டில் பாதம் பதிக்கும் நிமிஷம் முதல் அவளுக்குத் தொந்தரவு தரும் திட்டங்களை யோசிக்கலானார்.

Advertisement