Advertisement

 
கந்தசாமி சென்றுவிட, விழி தூணின் மீது சாய்ந்து இலக்கே இல்லாமல் தூரத்தை வெறித்துக்கொண்டிருந்தாள்.
அதே சமயம் பார்வதி பாரிஜாதத்திடம் தாலியை பற்றிக் கேட்க, மச்சக்காளை பாரிஜாதத்தைத் தேடி அந்த வழியே வந்துகொண்டிருந்தார். அப்போது சரியாகப் பாரிஜாதம் சற்று முன் மாறனை வைத்துப் பேசிக்கொண்டிருந்த இடமான ஓட்டுவீட்டிற்குள் நுழைய அதைப் பார்த்துவிட்ட பார்ஜிதாமோ,
“கோவில் பின்னாடி இருக்க இந்த வீட்டுக்கு எதுக்கு அண்ணி போறாங்க ? ஓ கல்யாண சாமான்லாம் பத்திரமா இருக்கணும்னு அங்க வச்சு போட்டிருக்கங்களோ. ஆமா அப்படிதான் இருக்கும். இதுவும் கோவிலுக்குச் சொந்தமான வீடுதான். மச்சக்காளை அண்ணே தான் கோயில்ல சொல்லி சாவி வாங்கியிருக்கும்” என மனதினில் நினைத்தவாறு விழியைக் கடது செல்ல, சட்டென்று அவர்களைப் பார்த்த விழி போகின்ற பார்வதியை விரக்தியுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
 
அவளது மனதில், “இவுங்கள பார்க்க தானே இங்க வந்தே…ஆனா…” என நினைத்து விரக்தியாகச் சிரித்துக்கொண்டாள்.
ஆனாலும் அவளுடைய பார்வை பார்வதியை விட்டு விலகவில்லை. அவளது மனதில், “அப்புறம் சக்கர அண்ணே ஏன் இப்படிச் சொன்னாங்க ? என்னோட காதல் தெரியும்னு சொன்னதா சொன்னாங்களே… ” எனத் தனக்குள் கேள்வியை எழுப்பியபடி பார்வதி செல்கின்ற பாதையை விழியன் விழிகள் தொடர்ந்தன.
 
மறுபுறமோ பாரிஜாதத்தைத் தொடர்ந்து சென்ற பார்வதி அந்த ஒட்டு வீட்டை நெருங்க அவர் காதில் மச்சக்காளையின் வார்த்தைகள் தப்பாது விழுந்தன.
 
“அந்த மாறன் பையன் நம்ம சொன்னதை நம்பிட்டான்ல? சாந்தினிக்கு கண்ணாலத்துல இஷ்டம் இல்லனு அவனுக்குத் தெரிஞ்சிடவே கூடாது” என அவர் கூறிய வார்த்தை பார்வதிக்கு குழப்பத்தையும் அதிர்ச்சியையும் தரவே வேகமாக ஜன்னல் கதவுகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்க தொடங்கினார்.
 
“நம்பிட்டானுங்க. நான் யாரு…பாரிஜாதம்னா சும்மாவா? இத்தனை வருசமா எங்க அண்ணனையே ஏமாத்துறவ எங்க அண்ணே பெத்த பையன் சுண்டக்காப் போல அவனை ஏமாத்துறது எம்மாத்திரம்? அதெல்லாம் அசால்ட்டு”
 
“சரி பாரிஜாத ரொம்ப மெத்தனமா இருக்காத. சாந்தினியும் மாறனும் தான் உண்மையிலே காதலிச்சாங்கனோ நாமதான் ஆட்டத்தைக் களைச்சு கதிரவனுக்குக் கட்டிவைக்கிறோமனோ தெரியவே கூடாது.
 
எப்படியாச்சும் இந்தக் கண்ணாலம் மட்டும் நடந்துட்டா போதும். மத்தத மெல்ல மெல்ல காய் நகர்த்தி ஆடிக்கலாம். எப்ப எந்தக் காய இறக்கணும் எந்தக் காய வெட்டணும் எப்ப ஜெயிக்கணும்னு எனக்குத் தெரியும்” எனக் கூற,
பார்வதிக்கு தலை சுற்றியது. நெஞ்சம் வேகமாகப் படபடவென்று அடித்துக் கொள்ள, அப்படியே ஜன்னல் கதவை ஆதரவுக்காகப் பற்ற முயன்று முடியாமல் சட்டென்று கீழே விழ, ஜன்னல் கதவு ஒரு முறை மூடி திறந்து சத்தத்தை எழுப்பியது.
 
சத்தம் கேட்ட பாரிஜாதமும் மச்சக்காளையும் எச்சரிக்கை அடைய, பார்வதி விழுந்ததைப் பார்த்த விழியோ எதைப் பற்றியும் யோசிக்காமல் வேகமாகச் செல்ல அதற்குள் அவர்கள் வெளியே வந்து பார்வதியை இழுக்காத குறையாக அழைத்துச் சென்றதை போல விழிக்கு தோன்றியது.
 
விழிக்கு தான் மச்சக்காளையை நன்றாகத் தெரியுமே. ஆதலால் சட்டென்று அவர்களுக்கு அருகே செல்ல இவளுக்குத் தயக்கம். ஆனாலும் அவள் அங்கே சென்றிருந்தபோது அவர்கள் மூவரும் வீட்டிற்குள் சென்றுவிட்டிருந்தனர்.
 
நிற்கலாமா செல்லலாமா என இவள் எண்ணும் போதே பாரிஜாதத்தின் குரல் ஒலித்தது. “அண்ணி இப்ப வாய மூடல நீங்களும் உங்க மகனும் நாண்டுக்கிட்டு நிக்கிறத போலப் பண்ணிடுவே” என்ற வார்த்தைகள் ஆங்காரமாகக் கேட்க, என்ன செய்யவென்று யோசித்து நின்றவள் மேற்கொண்டு அவர்கள் பேசுவதைக் குழப்பத்துடன் கேட்க தொடங்கினாள்.
 
“அட பாவிங்களா. என்னோட வாழ்க்கையை இத்தனை வருசமா நாசம் பண்ணினது பத்தாதுன்னு இப்போ என்னோட இரெண்டு புள்ளைங்க வாழ்க்கையையும் நாசம் பண்ண பாக்குறீங்களே. இதெல்லாம் உங்களுக்கே அடுக்குமா ? சின்னவ காதலிக்கிற பொண்ண பெரியவனுக்குக் கட்ட பாக்குறீங்களே. அதையும் என்ன வச்ச செய்ய வச்சுடீங்களே. இப்படி அவுங்க வாழ்க்கைல விளையாடறனால உங்களுக்கு என்ன லாபம்? கதிரவனைக் கண்டாலே ஆவதா நீங்க பொண்ண கட்டிக்கொடுக்கச் சம்மந்தம் சொன்னப்பவே நான் சுதாரிச்சிருக்கணும். தப்புப் பண்ணிட்டேன்” எனக் கூறியபடி தலையில் அடித்துக்கொண்டு அழ,
 
பாரிஜாதமோ, “இந்தா பாருங்க அண்ணி. தேவ இல்லாம எதுக்கு இப்ப ஒப்பாரி வைக்கிறீங்க. ஆமா ஏமாத்தி தான் கண்ணாலம் பண்ண திட்டம் போட்ருக்கோம். அதுக்கு இப்ப என்ன ? நீங்க எங்க அண்ணனை ஏமாத்துனத விடவா ? எவனோட புள்ளைக்கோ எங்க அண்ணன்னோட பேர மொத எழுத்தா வச்சுக்கிட்டிங்களே.
 
அது போலவா நாங்க செஞ்சோம். காதலிக்க மட்டும் தானே எம்மவ செஞ்சா?” என வார்த்தைகளைத் தணலாகக் கொட்ட, பார்வதி பாரிஜாதத்தின் வார்த்தைகளைக் கேட்க முடியாமல் காதை மூடிக்கொண்டு கதறினார்.
 
 
பார்வதியின் நிலைமை இதுவென்றால் விழியோ அப்படியே உறைந்து போய் நின்றாள்.
 
“போதும்….நிறுத்துங்க” எனக் கத்திய பார்வதி,
“இதோ பாருங்க. நான் ஒன்னு ஏமாத்தல. சொல்ல போன நான் தான் ஏமாந்து போய் நிக்குறே. நடந்த எல்லாமும் உங்களுக்குத் தெரியும்… எங்க அப்பா உங்ககிட்ட எல்லாத்தையுமே சொல்லிட்டாரு. சொல்லி தான் கல்யாணம் பண்ணி வச்சிருக்காரு. அதோட என்னோட வயித்துல புள்ள இருக்குனு தெருஞ்சுருந்தா நான் இரண்டாவது கண்ணாலத்துக்கு ஒத்திருந்திருக்கவே மாட்டேன்.
 
இந்தக் கல்யாணத்துக்குச் சம்மந்தம் சொன்னது மட்டும் தான் என்னோட தப்பு. அத தவிர வேற எந்தத் தப்பு நான் செய்யல, யாரையும் ஏமாத்தவும் இல்ல. ஏமாத்தி பொழைக்கிறதெல்லாம் நீங்கதான்” எனப் பேச,
மிகவும் திமிருடன் பாரிஜாதம், “ஆமா! அதுக்கு இப்ப என்னாங்குற? எல்லா விஷயமும் எங்ககிட்ட உங்க அப்பாரு சொன்னாருதான். நான்தான் அண்ணே கிட்ட மறச்சு கட்டி வச்சேன்.
 
உன்ன கட்டிக்காட்டி சொத்து கிடைக்காதே. அதான் சொல்லல. உங்க அப்பா இத சொன்னாரே, சொத்து விஷயத்தைச் சொன்னாரா ? அத மறச்சுட்டுல போய்ச் சேர்ந்துட்டாரு.
 
இதோ பாரு பார்வதி, சொத்துல முக்காவாசி கதிரவனுக்காம். அப்ப நாங்க என்ன விரலை வாயில வச்சிட்டு போறதா ? முடியாது. அதுக்கா வயித்துல புள்ளையோட வந்த உன்ன கட்டி வச்சோம்” எனச் சட்டென்று பாரிஜாதம் உளறிவிட, பார்வதி கேள்வியாகப் பாரிஜாதத்தைப் பார்த்தார்.
 
“இப்ப என்ன சொன்ன ? நான் கர்பமா இருந்தது தெரியுமா ? தெருஞ்சுதான் கட்டி வச்சீங்களா ? அப்போ இத்தனை வருசமா எங்க அப்பாதான் எல்லாத்தையும் மறச்சு கட்டி வச்சிட்டாருனு என்ன குத்தி குத்தி காமிசீங்களே அதெல்லாம் வேணும்னே பண்ணுனதா. அட பாவிங்களா இன்னும் என்ன என்னத்தடா மறச்சு வச்சுருக்கீங்க ?
 
போறே இந்த நிமிஷமே அவரு சட்டையைப் பிடிச்சு கேக்குறே. இத்தனை வருசமா என்ன வார்த்தையால் சுட்டு புசுக்குணத்துக்கு இன்னைக்கு நியாயத்தைக் கேட்காம விடமாட்டேன்” என அழுகையும் ஆவேசமும் கலந்து பார்வதி பேச, பாரிஜாதம் நக்கல் கலந்த திமிரான சிரிப்பை சிரித்தார்.
 
சிரித்தபடியே, “அட அறிவில்லாதவளே, இப்ப கூட உனக்குப் புத்தி இல்லையே. கட்டி வச்சோம்ன்னு தானே சொன்னே. கட்டிக்கிட்டான் அப்படினா சொன்னே ?” எனக் கேட்க,
 
“நீங்க என்ன சொல்லுறீங்க ?” எனப் பார்வதி ஏதும் புரியாமல் வினவ,
 
“சொல்லுறேன்… முழுசா சொல்லுறேன். எம்புட்டு நாலுதான் உனக்கே தெரியாம உன்ன முட்டாளாக்குறது? இனிமேல் உனக்குத் தெருஞ்சே நீ முட்டாளாவே இரு. முன்னதைவிடப் பின்னது தான் ரொம்பக் கொடும. அதுனால தெருஞ்சுக்க எல்லாத்தையும்…கொஞ்சம் பின்னாடி போவோமா ?” எனக் கூறி அந்த நாளுக்குப் பாரிஜாதம் செல்ல, காட்சி பாரிஜாதத்தின் பார்வையிலும் பார்வதியின் பார்வையிலும் விரிய தொடங்கியது.
 
அது பார்வதியின் இளமை பருவம். அவ்வளவாக உலகம் தெரியாமல் தாய் தந்தை மட்டுமேஉலகம் என்று பார்வதி இருந்த காலம்.
பார்வதியின் அப்பா ராஜன் அம்மா இலட்சிமி மிகவும் மகிழ்வுடன் வாழ்ந்த காலங்கள் அவை. அப்போது தான் இலட்சிமியின் அன்னைக்கு வயோதிகத்தின் காரணமாய் உடல் நோவு ஏற்பட, மூவருமாகக் கன்னியாகுமரிக்கு அருகிலிருக்கும் கிராமத்திற்குச் சென்றனர்.
 
இலட்சிமியின் தாய் தன்னுடைய விருப்பமாக இலட்சுமியின் தம்பி பிரபாகரனுக்கும் பார்வதிக்கும் திருமணம் செய்யவேண்டும் என்று படுக்கையில் இருந்தபடி கோரிக்கை வைக்க, இலட்சிமி உடனடியாகச் சம்மதிக்க, மனைவியின் சந்தோஷத்திற்காக ராஜனும் சம்மதித்தார்.
 
அவர்கள் சென்ற மறுநாள் காலையிலே அருகிலிருந்த கோவிலில் மிகவும் எளிமையாகப் பிராபகரனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றது. இலட்சுமியின் தாயார் சற்று தேறியவுடன் விருந்தழைப்பு வைத்து சொந்த பந்தங்களுக்கு அறிவித்துக் கொள்ளலாம் என்று விட்டிருந்தனர். இவர்கள் ஒரு கணக்கு போட விதி வேறொரு கணக்குப் போட்டிருந்தது.
 
திருமணம் ஆனவுடன் பார்வதிக்கும் பிரபாகரனை பிடித்திருந்தது. பிரபாகரனும் தன் அக்காவின் குணத்தையே பெற்றிருந்தான். திருமணமான மூன்று நாட்களிலே பார்வதியை நூறு ஆண்டுகள் சந்தோசமாக வாழ வைத்தால் எத்தனை சந்தோசமாக இருப்பாளோ அவ்வளவு சந்தோஷத்தையும் அள்ளி அள்ளி கொடுத்தான்.
 
திருமணத்தைத் தான் அவசரஅவசரமாகச் செய்தாயிற்று. விருந்தழைப்பையாவது எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று நேரம் காலம் பார்த்து வைப்பதற்காக ஜோசியர் வீட்டிற்குச் செல்ல ராஜனும் இலட்சிமியும் புறப்பட,
அவர்களைத் தடுத்த பிரபாகரன், “மாமா வேணாம் மாமா. நீங்க என்னத்துக்கு அலையிறீங்க ? உங்களுக்கு வீடும் தெரியாது. எங்க அக்காவும் ரொம்ப வருஷம் முன்னாடி போச்சு. அதுக்கும் வழி நினைவுல இருக்காது. நீங்க பார்வதிக்கு துணையா இருங்க. நான் அக்காவை கூப்பிட்டு போயிட்டு வரேன். உங்களுக்கு நான் மச்சானோ மருமகனோ மட்டுமில்ல. மகனும் நான் தான்” என உரிமையாகக் கூறி செல்ல ராஜனுக்கு மனது நிறைந்திருந்தது.
 
பார்வதிக்குப் பிரபாகரனை இன்னும் பிடித்திருந்தது. நிறைய நிறைய நாட்கள் அவனோடு சந்தோசமாக வாழவேண்டும் என்ற ஆசை கூடிக்கொண்டே போனது.
ஆனால் அவளின் ஆசை அன்று வரையிலும் கூட நிலைக்கப் போவதில்லை என்று அவள் அப்போது உணரவில்லை. அவர்கள் சென்ற ஒரு மணிநேரத்தில் செய்தி வந்தது. இருவருக்கும் விபத்து, சம்பவ இடத்திலே உயிர் பிரிந்ததென்று.
 
செய்தி கேட்ட அடுத்த நொடி இலட்சிமியின் அம்மா ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டார். அதுவே அவரது கடைசி மூச்சாகவும் மாறிப் போனது.
 
தொலைவு அதிகம் என்பதால் ராஜனின் சொந்தங்களுக்குச் சொல்லி அனுப்பவோ அவர்கள் வந்து சேரவோ அவகாசம் இல்லை. அதே ஊரில் இருந்த இலட்சுமியின் சொந்தங்கள் சூழ இறுதி காரியங்கள் நடந்தது. எடுத்துச் செய்ததெல்லாம் அவர்கள் தான். ராஜனும் பார்வதியும் இடிந்து போய் அமர்ந்திருந்தனர்.
 
ராஜனுக்கோ தன் ஊருக்கோ தன் சொந்தத்திற்கோ தகவல் சொல்ல வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. அனைத்தும் முடிந்து கிளம்பும் போது இலட்சுமியின் ஒன்று விட்ட தாய் மாமான் வந்து,
“ஏப்பா பார்வதிக்கும் பிராபகரனுக்கும் சின்னதா கண்ணாலம் பண்ணிவசீங்க தெரியும். அது எங்க சொந்தத்தில் நாலு பேருக்குத்தான் தெரியும். வாழ வேண்டிய புள்ள இது. கட்டிகிட்ட மூனா நாளே புருஷன பறிகொடுத்துடானு தெரிஞ்சா யாரு கட்டுவா ?
அதுனால இந்த விஷயம் காது காதும் வச்சது மாதிரியே இருக்கட்டும். நாங்க எப்பவும் யாருட்டையும் இத பேச மாட்டோம். பச்ச முகமா இருக்குது. உங்க ஊருக்கு கூப்பிட்டு போய் ஒரு நல்ல அனுசரணையான பையனா பார்த்து கட்டி வச்சிருப்பா” என உண்மையான அக்கரையில் கூற,
இதுவரை மனைவி போன துக்கமும் மகன் என்று சொல்லி போன பிரபாகரனும் அவனோடு சேர்ந்து போன மகளின் வாழ்வும் என இடிந்து போய் இருந்தவர், இவரின் பேச்சால் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்.
 
அதன் பின் ஊருக்கு வந்தவர் சில நாட்கள் நடந்ததை நினைத்தே கழித்தார். ஊரார்கள் வந்து துக்கம் விசாரித்துச் செல்ல செல்ல இவருக்கு மனம் குன்ற உடலிலும் ஆரோக்கியம் குன்ற தொடங்கியது. அவருக்கான அடுத்த அதிர்ச்சி அடுத்தச் சில நாட்களிலே ஏற்பட்டது.
 
தன்னைப் பற்றியே நினைவே இல்லாமல் பார்வதி இருக்க அக்கம் பக்கத்தவர்களோ பார்வதிக்கு தன் அன்னையைப் பற்றிய துக்கம் என்று எண்ண, அவளுக்கு அது மட்டும் பிரச்சனை அல்ல உடல் பிரச்சனையும் இருக்கிறதென்று ராஜன் அறிய நேர்ந்தது.
 
மகள் இரண்டு மாத கர்ப்பம் என்று அறிந்த நொடி மனதில் சந்தோசத்திற்குப் பதில் பயம் வந்து சூழ்ந்துகொண்டது. அந்த ஊரில் பெரிய மனிதர். எல்லாமும் இருந்தது ஆனால் நிம்மதி ? அது இலட்சிமி சென்ற நாளன்றே அதுவும் அவரைவிட்டு மறைந்திருந்தது.
அதில் இன்னொரு துயரம் என்னவென்றால் அப்போது வரை பார்வதிக்கு இந்த விஷயம் தெரியாது. அவள் மயங்கி விழவும் நாடி பிடித்துப் பார்த்த வயதான மருத்துவச்சி கூறித்தான் ராஜனுக்குத் தெரியும். அந்தப் பாட்டி வேறு யாரிடமும் கூற மாட்டேன் என்று உறுதி கூறியிருக்க, பார்வதி உட்பட யாருக்கும் தெரியாமல் போனது.
 
நீண்ட நெடிய யோசனைக்குப் பிறகு தன் பண்ணை மற்றும் தோப்பை மேற்பார்வை பார்க்கும் லிங்கத்தை அழைத்தார். மகளுக்குத் திருமணம் நடந்ததை மூன்று நாட்களில் கணவனை இழந்ததை என அனைத்தையும் கூறினார். ஆனால் தற்போது கர்ப்பமாக இருக்கின்றாள் என்று மட்டும் அவரால் நேரடியாகக் கூற முடியவில்லை. அதே சமயம் அவர் அதை மறைக்கவேண்டும் என்று கூறவில்லை.
இதை ஒரு பெண் பக்குவமாகக் கூறினால் நல்லது என்று எண்ணிவிட்டார். இல்லையென்றால் லிங்கம் சட்டென்று முகத்திற்கு நேராகத் தன் பெண்ணைப் பற்றி எதாவது கூறி நிராகரித்துவிட்டால் அவரால் தாங்க இயலாது. அதுவே அவர் நேரடியாகக் கூறாததற்குக் காரணம்.

Advertisement