Advertisement

இருமனமும் திருமணமும் – 22
 
“ஒரு நிமிஷம்” எனக் கனத்த அமைதியில் ஊடுருவிய குரல் பார்வதியுடையது. கந்தசாமி என்ன என்பதாய் நின்றிருக்க, அவரது தோரணையே எதையும் கேட்கவோ பேசவோ விருப்பம் இல்லாததைக் காட்டவே,
அதைப் புரிந்துகொண்ட பார்வதி, “அண்ணே! உங்கள நிப்பாட்டுனது விளக்கம் சொல்லவோ விளக்கம் கேட்கவோ இல்ல” என ஆரம்பிக்க,
பாரிஜாதம் இடை புகுந்து, “அண்ணே ! என்ன இது நீ இங்கன குத்துக்கல்லாட்டம் இருக்கிறப்ப அண்ணி இப்படிப் போய்த் தன்னிச்சையா பேச போறாங்க. அப்புற உனக்கென மறுவாத இருக்கு” எனக் கூற, சட்டென்று அவர்கள் புறம் திரும்பிய பார்வதி,
“அண்ணி, அவசர படாதீங்க. நான் இப்ப பேச வந்தது அவரோட மரியாதைக்கும் கதிரவனோட மரியாதைக்கும் பொண்ண பெத்தவங்களோட மரியாதைக்கும் சேர்த்துதான்” எனக் கூற,
சட்டென்று பாரிஜாதம், “ஒருவேளை அந்த அடங்காபிடாரிய கூட்டிட்டு போங்கனு சொல்ல போறாளோ…இருக்கும் இருக்கும். என்ன மீறி இவ ஏதாவது பண்ணிட முடியுமா என்ன ? இவ குடுமி என்னோட கைல” என நினைத்துக்கொண்டு பேசட்டும் என்று விட்டார்.
 
“அண்ணே! நீங்க இங்க இருந்து போகத்தான் போறீங்க. ஆனா அத ஒரு பத்து நிமிஷம் தள்ளி போங்க. உங்க பொண்ணுக்கும் கதிரவனுக்குக் காலத்துக்கும் கெட்ட பேரு நிலைச்சிட கூடாது. அதுங்களுக்கு நமக்கும் நடுவுல ஆயிரம் இருக்கலாம். ஆனா ஆளாளுக்குப் பேசுறபடி அவுங்கள நிப்பாட்டிற கூடாது.
 
நான் உங்க கூடப் பொறந்த பொறப்பா கெஞ்சி கேக்குறே. பத்தே பத்து நிமிஷ பொறுத்துக்கோங்க” எனக் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே பார்த்திபனும் தேவியும் அடித்துப் பிடித்து ஓடிவந்திருந்தனர்.
 
அவர்கள் உடையைக் கூட மாற்றாமல் வந்ததிலிருந்து அவர்களின் பதற்றம் பார்வதியின் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தது.
 
“அடியே பாவிமவளே. என்ன காரியம் டி பண்ணி வச்சிருக்க ? பொட்ட புள்ளைக்கு இம்புட்டு தையறியத்த கொடுக்காதீங்க சொன்னேனே கேட்டிங்களா… இப்ப அவ இஷ்டத்துக்குக் கட்டிக்கிட்டு வந்து நம்ம குடும்ப மானத்த சந்தி சிரிக்க வச்சுப்புட்டாளே. இந்தக் கொடுமையெல்லாம் பாக்கவா நான் இன்னு உசுரோட இருக்கேன்” எனக் கத்தி கதற,
விழி மனமேடையை விட்டு, “அம்மா…” என்ற கேவலுடன் அழுகையை அடக்கியபடி வர, சட்டென்று குரல் உயர்த்தினார் கந்தசாமி.
 
“வாய மூடு” என்ற குரல் தேவிக்கானதாக இருந்தாலும் அது மறைமுகமாக விழிக்கானது என்பதை உணர்ந்தவள் சட்டென்று முன்னேறாமல் அப்படியே நிற்க,
“இதோ பாரு தேவி. உனக்கு ஒரு புள்ளத்தான். அது இங்கன நிக்குறானே இவன் தான். முன்னபின்ன தெரியாதவங்கள திட்ட கூட நமக்கு உரிமை இல்ல. நான் உனக்கு முக்கியம்னா வாய மூடு. இனி ஒரு வார்த்தை பேசாத” எனக் கூற, வாயில் சேலையின் நுனியை வைத்து அழுத்தி அழ தொடங்கினார்.
 
பார்த்திபன் ஏதோ பேசபோக, “பார்த்திபா..உனக்குத்தான்” எனக் கூறிட அதற்குமேல் பார்த்திபன் தலை குனிந்துகொண்டான்.
 
இதற்கிடையில் பாரிஜாதம், “அண்ணி எதுக்கு அவுங்கள பிடிச்சு வச்சீங்க. அவுங்க பொண்ணு நடத்துன நாடகம் பத்தாதுன்னு இவுங்க குடும்பமே காட்டுற படத்த பார்க்கவா ?” எனக் கூற,
மல்லியோ, “இந்தாபாரிஜாதம், வார்த்தையை அளந்து பேசுங்க. வெளியூருக்காரங்கனு வார்த்தையை விட வேண்டாம். நாங்க இதே ஊர்தான். எங்களுக்கு எல்லாத்துக்கும் பதில் சொல்ல தெரியும், எல்லா விதத்துலையும் பதில் சொல்ல தெரியும்” எனப் பெண்கள் சண்டையாக மாற,
ஊர் காரர் ஒருவர், “ஏமா ஆளாளுக்குப் பேசாம சட்டுபுட்டுனு என்ன செய்யப் போறன்னு சொல்லு ஆத்தா” எனப் பார்வதியிடம் கேட்க, அவர் வேகமாக லிங்கத்திடம் சென்று,
“என்னங்க… எனக்கு நீங்க எல்லாரும் முக்கியம். சாந்தினி நம்ம வீட்டுக்கு மருமகளா வரதும், உங்க உசுரும், நம்ம கூட இருக்குறதும், மாறன் அவன் ஆசைப்பட்ட பொண்ண கட்டிக்கிறதும், கதிரவனுக்குக் கண்ணாலமும் எல்லாமே எனக்கு முக்கியம். அத விட முக்கியம் இந்தப் பெரிய வீட்டை யாரும் எப்பவும் எதுவும் சொல்லிடக்கூடாது. எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு முடிவு பண்ணிருக்கேங்க. தயவு பண்ணி நான் பண்றது தப்புனா என்ன மன்னிச்சிடுங்க. மாறனோட வாழ்க்கையை என்னால பறிக்க முடியாதுங்க” எனக் கூறிவிட்டு,
அவரது பதிலை எதிர்பார்க்காமல், கதிரவனிடம், “அய்யா கதிர், அம்மாக்குச் சத்தியம் பண்ணிருக்கத்தானே… நான் சொல்லுற பொண்ண கட்டிக்கிறேன்னு. அம்மா இந்த நிமிஷம் உனக்கு முடிவு பண்ணியிருக்கப் பொண்ணு விழி. அவ கழுத்துல இருக்கத் தாலிய பத்தியோ இல்ல வேற எத பத்தியோ நான் உன்ட கேட்க போறது இல்ல. நீயும் எதுவும் சொல்ல வேணாம். நீ விழி கழுத்துல இப்ப தாலி கட்டு.
 
ஒரே முஹுர்த்தத்துல என்னோட இரெண்டு மகன்களுக்கும் கண்ணாலம். எம்மவ மாறன் ஆசைப்பட்ட சாந்தினிக்கும் அவனுக்கும் இப்ப கதிரவன் விழி கண்ணாலத்தோடவே சேர்த்து நடக்கும்.
 
கண்டிப்பா மாறனுக்குச் சாந்தினியை கட்டி வைக்கிறதுல அண்ணிக்குச் சந்தோசம் தான் இருக்கும். ஏனா மாறன் அவுக தூக்கி வளர்த்த புள்ளல. இன்னைக்கே கண்ணாலம் கதிரவனுக்கு நடக்குறதுனால இருக்குற ஜாதகத் தோஷமும் சரியாகிடும். சாந்தினியும் எங்களுக்கு மருமகளா வரதும் நாங்க ஆசைப்பட்ட ஒன்னு தான். என்ன மூத்தவனுக்கு இல்லாம இளையவனுக்கு. அதுனால என்ன இரெண்டு என்னோட பிள்ளைங்கதானே” எனக் கூறியபடி அனைவரையும் பார்க்க, கதிரவன் முகம் கருத்திருந்தது.
 
அவன் உடல் இருகியிருந்தது. நடக்கின்ற எதுவுமே அவனுக்குப் பிடித்தமில்லை என்பதும், அதையுவிட, எதுவுமே அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லையென்றும் புரிந்துகொண்டதனால் அதோடு தன் அன்னையும் இப்படிப் பேசியது அவனை எதுவும் செய்யமுடியாத இயலாமையில் தள்ளியது.
 
மாறனும் சாந்தினியும் கைவிட்டு போன பொருளொன்று மீண்டும் கிடைத்ததைப் போல உணர்ந்தனர். விழியோ கதிரவனின் நிலைக்குக் கொஞ்சம் குறைவில்லாமல் இறுக்கமாகவே இருந்தாள்.
கந்தசாமி தேவியின் இடிந்த தோற்றம் விழியை நிலை குலைய செய்தது. பெரிதாக எதற்குமே அழாதவள் கண்களில் நீர் திரையிட்டிருந்தது. ஆனாலும் பெரும் முயற்சியெடுத்து ஒரு துளிகூடச் சிந்தாமல் கண்களிலே வைத்திருந்தாள். உடல் மட்டும் உடைந்தும் கேவலுடனும் இருந்ததே தவிர, கண்களில் நீர் வெளியேறவில்லை. வெளியேறவிடவில்லை.
 
“அழமாட்டேன்…. ” என மீண்டும் மீண்டும் தன் மனதிற்குள் ஜபித்துக்கொண்டிருந்தாள்.
 
“ஏங்க…” எனப் பார்வதி லிங்கத்தை அழைக்க, இத்தனை நேரம் பார்வதியின் பேச்சை கேட்டிருந்தவர் சிந்தனைக்கு ஆளானார்.
“எம்புட்டுத் தெளிவா பேசுறா… மாறனுக்குப் பிடிச்ச வாழ்க்கை வேணும்னு எம்புட்டு பிடிவாதமா இருக்கா.
 
அவளுக்கு மூத்தவனும் இளையவனும் ஒண்ணுதான்னு நிரூபிச்சுட்டா. நான் தான் தப்பு செஞ்சிட்டேனோ” என முதன் முறையாக லிங்கம் சுயமாகச் சிந்திக்கத் தொடங்கினார்.
 
பலவருடங்களாக மற்றவர்களின் சிந்தனைகளையே சிந்தித்தவர், மீண்டும் புதிதாகச் சிந்திக்கத் தொடங்கினர்.
 
“ஏங்க…” என அவரை மீண்டும் பார்வதி உலுக்க,
பாரிஜாதமும் மச்சக்காளையும் பார்வதியை தடுக்க, அந்தச் சத்தத்தில் லிங்கம் வாய்த் திறந்தார்.
 
“இரெண்டு கல்யாணமும் நடக்கட்டும். பார்வதி ஆகவேண்டிய சோலிய பாரு. பாரிஜாதம் நீ செத்த சும்மா இருமா… ” எனக் கூற, 
பாரிஜாதத்தின் பேச்சு கடந்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதே முதல் முறையாக லிங்கத்திடம் பலிக்காமல் போனது. லிங்கத்தின் வார்த்தைகளைப் பாரிஜாதத்தின் அகங்காரம் பிடித்த மதி நம்ப மறுத்தது. இருந்தாலும் கண் முன் நடக்கும் ஏற்பாடுகளை உணரவும் செய்தது. கைகளை மட்டும் பிசைந்தபடி அனைவரின் மீதும் குறிப்பாகப் பார்வதி மற்றும் விழியன் மீது க்ரோத பார்வை பாய்ந்தது.
 
செலுத்தியபடி ஏதும் செய்ய இயலாதவராய் நின்றிருக்க, பாரிஜாதத்தின் கோவத்திற்குக் கொஞ்சமும் குறைவில்லாத கோபத்துடனும் ஆத்திரத்துடனும் மச்சக்காளை.
 
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, தாடை இறுகி மீண்டும் மணமேடையில் அமர்ந்திருந்த கதிரவன் அருகினில் சக்கரையும் பாண்டியும் தயங்கி தயங்கி வர, கதிரவன் முகத்தில் எந்தப் பிரதிபலிப்பும் இல்லை.
 
சாந்தினியும் மாறனும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.அக்கம் பக்கமாய் மணமக்களாய் இருந்தனர். கனல் விழியோ தன் குடும்பம் தன்னைப் பார்க்கிறதா என நொடிக்கு நூறுமுறை அவர்களின் முகங்களை எதிர்நோக்க, அனைவருமே குனிந்த தலை நிமிரவே இல்லை. பெற்றோர்களைப் பொறுத்தவரை அவள் செய்தது தலை நிமிர முடியாத செயல்தானே.
 
அதிலும் உச்சமாய்க் கந்தசாமியின் நிலை. யாருக்கோ என்னவோ என்பது போன்ற தோற்றம். உடலிலும் முகத்திலும் எந்த உணர்ச்சியும் இல்லை. விழியின் மனதில் கேள்வி எழுந்தது, உயிராக நேசித்த தன் தந்தை இனி எப்போதாவது ஒருமுறையாவது தன்னைப் பாசமாக மகளென்று பார்ப்பாரா என்று
 
எது எப்படியோ அனைவரின் நினைவுகள் ஒருபுறம் ஓட, நேரமும் ஓடியது. பார்வதி விழியன் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிற்றைக் கட்டிவிட்டு, அவரது பரம்பரை தாலியை தட்டில் வைத்தார். இந்தத் தாலி முறைப்படி ஏறிய பிறகு கழுத்திலிருக்கும் மஞ்சள் கயிற்றைக் கோவில் உண்டியலில் போடும்படியாக ஏற்பாடு. மச்சக்காளை வாங்கி வைத்திருந்த மாங்கல்யம் சாந்தினிக்கும் மாறனுக்கும்.
 
ஐயர் மாங்கல்யம் எடுத்து கொடுக்க, கதிரவன் கைகள் அதை வாங்க மறுத்து விரல்கள் மூடி கொள்ள, ஐயர் மாங்கல்யத்தை நீட்டியது நீட்டியபடி இருக்க, அந்த நொடி சரியாகக் கந்தசாமி விழியை நேருக்கு நேராகச் சந்தித்தார்.
 
“பாருமா… நீ சொன்ன பொய்யோட பலன். உன்னோட பொய் என்ன தலைகுனிய வைக்கல, உன்னோட வாழ்க்கையவே தலைகுப்புற கவுத்திடுச்சு. தாலிய வாங்கவே யோசிக்கறவன்கிட்ட இருந்து உனக்கு மரியாதையோ அன்போ கிடைக்குமா ? இந்த வாழ்க்கையை வாழவா என்ன பேசாதனு தடுத்த ? எதுக்குமே அழ கூடாதுனு சொன்னேன். ஆனா இனி உன்னோட வாழ்க்கையே கண்ணீரா மட்டும்தான் இருக்கப் போகுதா ?” என்பதாய் இருக்க,
 
“இப்ப இப்படி இருக்கலாம் பா. நான் செஞ்சது சரி இல்ல. தப்புதான். ஆனா தப்பவே போய்டாது. நீங்க எனக்குத் தைரியமா வாழ கத்து கொடுத்துருக்கீங்க. இப்ப இருக்குற நிலைமையை மாத்தி இவரோட காதலுக்கும் மரியாதைக்கும் சொந்தக்காரியா நிச்சயம் ஒருநாள் இருப்பேன். தோத்து போகவும் மாட்டேன். அழவும் மாட்டேன். எப்பயும் எதுக்காகவும் என்ன நடந்தாலும்” எனத் தன் தந்தையின் பார்வைக்குப் பதில் பார்வை பார்த்தபடி மனதில் நினைக்க,
 
அதே சமயம் பார்வதி மகனிடம் தாலியை வாங்கிக் கட்டும்படி சமிங்கை செய்ய, கதிரவன் ஒருமுறை கண்களை இறுக மூடி திறந்து ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு ஒரு முடிவோடு மாங்கல்யத்தைக் கைகளில் வாங்கினான்.
 
அவள் கழுத்தில் முதல் முடிச்சு போட்டவன், “எதுக்கு இந்த நாடகம் ஆடுனனு கண்டுபிடிக்காம விடமாட்டேன். உன்ன சுத்தமா பிடிக்கல” என எண்ண,
அதே சமயம் விழி, “என்ன சுத்தமா பிடிக்காம நீங்க போடற முதல் முடிச்சுதான் என்னை உங்களுக்குப் பிடிக்கப் போறதுக்கான ஆரம்பம்” என விழி மனதில் நினைக்க
 
“நீ பண்ணின பித்தலாட்டத்தை நிரூபிக்கிறேன். அதுவும் ஊரறிய” என இவன் இரண்டாம் முடிச்சுக்குச் சங்கல்பம் எடுக்க,
விழியோ அதே சமயம், “ஊரறிய உங்க கூடச் சந்தோசமா வாழனும்” என நினைக்க
 
இறுதி முடிச்சு போடும் பொழுது, “உனக்கான தண்டனையை நிச்சயமா தருவேன். அத நீ மறக்கவே மாட்டஏழேழு ஜென்மத்துக்கும்” எனச் சூளுரைக்க,
“ஏழு ஏழு ஜென்மத்துக்கும் உங்கள மறக்காம நான் உங்ககூடவே வாழனும்” எனக் காதலுடன் விழி நினைக்க
 
ஒரே ஒரு நொடி மூன்றாவது முடிச்சை போட்ட பிறகு இருவரது பார்வையும் நேருக்கு நேராகச் சந்தித்துக்கொண்டது.
 
அவளுடைய விழிகள், “உன்னோடு வாழத்தான் இந்த வாழ்வே” என்பதாய்
அவனுடைய விழிகளோ, “என்னோட நீ எப்படி வாழறனு நானும் பாக்குறேன்” என்பதாய்
 
நேர்கோட்டில் இருவரின் பார்வைகளும்
முரணான எண்ணங்களுடன்
இருமனமும் திருமணத்தில்
இருதுருவமாய் இணைந்திருந்தன
 
மாறானும் சாந்தினியின் கழுத்தில் மாங்கல்யத்தைப் பூட்டியிருக்க, அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் முடியும் முன்னர், கந்தசாமி அங்கிருந்து புறப்பட, வேகமாக அவரை அழைத்த பார்வதி ஏதோ கூற வந்தவரை தடுத்து,
“பத்து நிமிஷம் முடுஞ்சிடுச்சு” எனக் கூறி சட்டென்று துண்டை உதறிவிட்டு விடு விடுவெனச் சென்றுவிட, மகளைப் பார்த்து அழுதபடி தேவியும் பின்னோடு செல்ல, அவர்களைத் தொடர்ந்து விழியன் மொத்த குடும்பமும் நிற்காமல் சென்றிருந்தது.
 
விழிக்குக் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. ஆனால் அவள் அழவில்லை. அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் பார்வை மட்டும் அவர்கள் செல்கின்ற திசையை வெறித்துப் பார்த்திருந்து. கொஞ்சமும் அசையவில்லை. கதறவில்லை ஏன் விசும்பல் கூட இல்லை. அப்படியே இரும்பை போல அமர்ந்திருந்தாள்.
கதிரவன் இது எதையும் கவனிக்கும் நிலையில் இல்லவே இல்லை.ஒருவேளை கவனித்திருந்தாள் அன்றைய பஞ்சாயத்தில் தான் காப்பாற்றிய பெண் இவள் தானோ எனச் சிந்தித்திருப்பான்.
அவனுக்கு முருகேசனின் உறவு என்று மட்டும் புரிந்தது. கந்தசாம்மயிடம் அன்று பேசியிருந்தாலும் அவர்கள் யாரும் பெரிதாக அவன் மனதில் பதியவில்லை. பதிந்திருந்தாலும் இன்றைய நிலையில் அதையெல்லாம் பொருத்தி பார்த்திருப்பானா என்பது சந்தேகமே.
 
அவர்களைத் தடுக்க முடியாமல் பார்வதி பாவமாய் விழியன் அருகில் வந்து அவளுடைய தோள்களைத் தொட, பார்வதியை ஏறெடுத்து பார்த்தவள் கலங்கியிருந்த தன் அத்தையின் கண்களைச் சந்தித்து, “ஒன்றுமில்லை நான் இருக்கிறேன்” என இவள் கண்களை மூடி திறந்தாள்.
 
அந்த நொடி சக்கரையும் பாண்டியும் பிரமித்துப் போய் நின்றனர். ஆறுதல் சொல்லவந்த பார்வதிக்கு விழி ஆறுதலையும் தேறுதலையும் கண் அசைவில் கூறியது அவர்களுக்குப் பிரம்மிப்பை தந்தது.
 
இந்த நால்வரும் சற்று முன்பு நடந்த நிகழ்வை தங்கள் மனதினிலே தம் தம் பார்வையில் ஓட்டி பார்க்க முனைந்தனர்.
 
காட்சிகள் பார்வதி விழி சக்கரை பாண்டியின் பார்வையில் விரிந்தது…….

Advertisement