Advertisement

திருமாங்கல்யம் – 20
மறுநாள் காலை பெரியவீட்டில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் பெரிய சப்தத்துடன் ஒலித்த திரைப்படப் பாடல்களில் தான் பொழுதே விடிந்தது. ஊரே வண்ண வண்ண துணி உடுத்தி அலங்கரித்துக்கொண்டு திடீரென்று அறிவிக்கப்பட்ட கல்யாணத்திற்குப் படை எடுக்க, மதுரையிலிருந்து வந்த பேருந்தும் கனல்விழி தன் தந்தையுடன் வந்த பேருந்தும் ஒரே சமயத்தில் எதிர் எதிர் திசையில் வந்து அந்த ஊரின் பேருந்து நிறுத்தத்தில் நிற்க, கல்யாண கனவுகளுடன் கனல் விழியும், ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் மாறனும் அவரவர் பேருந்திலிருந்து இறங்கி தம் தம் வழியே நடக்கலாயினர்.
ஆவேசம் வந்தவனாக மாறன் நேராக வீட்டிற்குச் செல்ல, வழியில் தென்பட்ட மச்சக்காளையின் ஆட்கள் அவனை நேரே மச்சக்காளையிடம் அழைத்துச் சென்றனர்.
முருகேசன் வீட்டிற்குக் கந்தசாமியும் கனல் விழியும் நடக்க, அவர்களுக்கு எதிரே முருகேசன் குடும்பம் வந்துகொண்டிருந்தது.
“அட மாமா வாங்க. என்ன இம்புட்டு காலையில. ஏதும் பிரச்சனையா? தங்கச்சி நல்லா இருக்குதுல. மாப்பிள நல்லா இருகாருல?” என முருகேசன் விசாரிக்க, கந்தசாமியோ சமாளித்தபடி, தாங்கள் நின்றிருப்பது வீதி என்பதை மனதில் குறித்துக்கொண்டு, “அதெல்லாம் ஒண்ணுமில்ல மச்சான். நம்ம விழி தான் முல்லைய பார்க்கணும்னு ஒரே அடம். அதான் கூட்டியாந்தே” எனக் கூற, “அட மருமகளே பேசாம நீ இங்னவே இருந்துடு ஆத்தா. எதுக்கு உங்க அப்பாரு கூடப் போற.? இங்க இரு, நானு உங்க மல்லி அத்த எல்லாரும் பாத்துப்போம்ல… சரி மாமா பெரியவீட்டு விஷேஷம் கோவில்ல. அதுக்குத் தான் போறோம். நேத்து இராத்திரிக்குதான் சொன்னாங்க.
மச்சக்காளை போனடிச்சு உங்களையும் அழைக்கச் சொன்னாரு. நான் தான் உங்களுக்கு எதுக்கு அலைச்சல்னு சொல்லல. இப்ப என்ன நீங்களே வந்துடீங்க. ஒரு எட்டு கோவிலுக்குப் போயிட்டு தலையைக் காமிச்சுப்புட்டு வந்திடுவோம்.
மச்சக்காளைக்காக இல்லாட்டியும் அந்தப் பையன் கதிரவனுக்காகவாச்சும் போகணும்ல” எனக் கூற, கந்தசாமிக்கு கதிரவனை நேரில் சந்தித்துப் பேசினால் தேவலை என்று தோன்றவே, என்ன விஷேஷம் ஏதென்று எதுவும் கேட்கவில்லை. முருகேசனும் சொல்லவில்லை.
கனல் விழிக்கு கதிரவன் என்ற சொல்லே கனவுகளைத் தர போதுமானதாக இருந்தது. அதனால் அவள் சுற்றத்தையும் கவனிக்கவில்லை, சுயநினைவிற்கும் வரவில்லை. ஆனால் அந்தச் சூழலில் சற்றும் சம்மந்தம் இல்லாமல் இருந்தது முல்லை கொடி. ஏனென்றால் முல்லைக்குத் தெரியுமே திருமணம் கதிரவனுக்குத்தான் என்று. ஆனாலும் அவளுக்கு இதை விழியிடம் சொல்லும் தைரியம் இல்லை.
நேற்று இரவு தகவல் தெரிந்ததிலிருந்து இந்த நிமிடம் வரை யோசித்துக்கொண்டே இருக்கின்றாள். ஆனால் சொல்லத்தான் முடியவில்லை. சொன்னால் மட்டும் என்னவாகிவிடும் ? அதுவும் ஒரே இரவில் திருமணம் எனும் போது, இது விழிக்கு தெரியவந்தால் அவளின் நிலை என்னவாகும் என்றே முதலில் முல்லை தயங்கியது. பிறகு முல்லைக்குப் புரிந்த ஒன்று விழி நிச்சயம் ஏதாவது செய்வாள் அத்தனை சுலபத்தில் விடமாட்டாளென்று. அப்படிச் செய்தால் நடப்பது என்னவாக இருக்குமென்று முல்லை சிந்தித்தாள். விழி என்ன செய்தாலும், இந்தத் திருமணம் நிற்க போவதில்லை. கதிரவன் முதலில் ஒப்புக்கொள்ளப் போவதுமில்லை, தங்களின் குடும்பத்திலும் அவர்களின் குடும்பத்திலும் ஒரே இரவில் இத்தனை பெரிய விஷயத்தை ஏற்க போவதுமில்லை. அப்படியிருக்க இப்போது சொல்வதானால் ஆகப்போவது தான் என்ன ? ஒன்றுமே இல்லையே அதோடு வீணாக விழிக்கு அவப்பெயர் மட்டுமே மிஞ்சும். அதுவும் கிராமங்களில் அந்த அவப்பெயருக்கு வேக வேகமாகக் கை கால்கள் முளைத்து ஏன் இறகுகள் கூட முளைக்கும் அபாயம் உண்டு.
அதனால் திருமணம் முடியும் வரை கூற வேண்டாம் என்று விழியன் நலனுக்காகவே யோசித்தாள். திருமணம் முடிந்து கூறினால், அவளுக்குத் துயரம் தான் என்றாலும் இன்னாரை காதலித்தவள் என்ற பெயராவது இல்லாமல் போகுமே. ஏனினில் இன்னும் ஆறே மாதங்களில் விழிக்கு வரன் தேட போவதாக வீட்டில் பேசியிருந்தார்களே.
முல்லைக்கொடியின் நிலையில் அவள் செய்தது சரியே. ஒரே இரவில் ஒருதலை காதல் சாத்தியம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.
“என்ன முல்ல டல்லா இருக்கவ? என்ன ஆச்சு ? அண்ணனை விட்டுபுட்டு நான் மட்டும் வந்துருக்கேன்னு கோபமா ?” என முல்லையின் தோள்களில் இடித்தபடி விழி கேட்க, அவளோ விழியன் புன்னகையைப் பார்த்துத் துயரம் கொண்டாள். “இன்னும் கொஞ்ச நேரம்தான் இப்படி நீ சிரிக்கப்போற விழி. ஆனா இஃது உன்னோட வாழ்க்கையோட முடிவில்ல. உன்ன கண்டிப்பா இதுல இருந்து மீட்டு எடுப்பேன்” என மனதோடு சொல்லிக்கொண்டாள்.
கோவிலிற்குள் நுழைந்ததுமே லிங்கம் முருகேசனையும் கந்தசாமியையும் விஷேஷ வீட்டின் மனிதராக வரவேற்றார். “கடைசி நேரத்துலதான் எல்லாருக்கும் சொன்னோம். மனசுல ஒன்னு வச்சுக்காதீங்க. நீங்க வந்ததுல ரொம்பச் சந்தோசம்” என்ற வார்த்தைகள் லிங்கத்தின் அருகில் நின்ற பார்வதியின் வாயிலாக வர, கந்தசாமிக்கு மனதில் ஒரு நிம்மதி.
“ஒருவேளை எம்பொண்ணு ஆசைப்படறது நடந்தா அவளோட புகுந்தவீட்ல இந்த அம்மா அவளோட மாமியாரா இல்லாம அம்மாவா இருப்பாங்கன்னு தோணுது. எல்லாத்தையும் நல்லபடியா நடத்திவை ஆண்டவா” என மனதோடு ஆண்டவரிடம் மானசீகமாகக் கோரிக்கை ஒன்றையும் வைத்தார்.
கல்யாண கூட்டத்தில் ஆளுக்கொரு புறமாகத் திரிய, முருகேசன் யாரோடோ பேசிக்கொண்டிருக்க, முல்லை விழியன் அருகில் இருந்தால் தன்னை மீறி அழுதுவிடுவோமோ என அஞ்சி கண்ணீரை துடைத்தபடி ஊர் தோழிகள் அழைத்தார்கள் என்று சென்றுவிட, மல்லியோ திருமணத்திற்கு வந்த பெண்களிடம் பேசுவதில் இலயித்தார்.
கந்தசாமியும் விழியும் மட்டும் வரிசையில் அமர்ந்திருக்க, புரோகிதர் மந்திரங்களை உச்சரித்தபடி தன்னுடைய வேலையைக் கண்ணும் கருத்துமாகச் செய்துகொண்டிருந்தார்.
“அப்பா…எதோ விசேஷம்னு சொன்னாங்க. ஆனா இங்க ஏதோ கல்யாணம் போல இருக்கு” என விழி கேட்க, கந்தசாமியோ, “ஆமா பாப்பா…என்னனு தெரியலையே. இரு யார்க்கிடையாவது கேட்போம்..” எனக் கூறிக்கொண்டிருந்தார்.
மறுபுறமோ கோயிலிற்குப் பின்னாலிருந்த ஓட்டுவீட்டில் மாறன் மச்சக்காளை பாரிஜாதம் என மூவரும் நின்றிருந்தனர்.
மாறன் ஆவேசமாகக் கத்த, “இதோ பாரு மாறா…இந்த அத்த உனக்குத் துரோகம் பண்ணுவேனா? எல்லாம் இந்தக் கதிரவன் வேலைதான். உங்க அப்பாருக்கு ஏதோ பண நெருக்கடி. அத காரணகாட்டி கதிரவக் கட்டுனா சாந்தினியாதான் கட்டுவேன்னு ஒத்த காலுல நின்னுட்டான். அப்படிக் கட்டிக்கொடுத்தாதான் நமக்கு வந்த பண நெருக்கடியை சமாளிக்க முடியும்னு உங்க அப்பாவும் ஒத்துக்கிட்டாரு. கதிரவன்கிட்ட இருக்கப் பண்ணையில கொள்ள இலாபம். இப்ப நமக்கு உதவுற தெம்பு அவன்கிட்டதா இருக்குது.
இப்ப கதிரவன் மட்டும் பணத்தந்து உதவாட்டி நாம எல்லாருமா நடுத்தெருவுலதான் நிக்கணும். சாந்தினிகிட்ட எங்க நிலைமையை எடுத்து சொன்னோம். அவ புருஞ்சுக்கிட்டா. நீயும் புருஞ்சுக்கோ. இல்லாட்டி உங்க அப்பா உன்ன கொண்ணு பொதைச்சாலும் பொதச்சிருவாரு. உனக்கே தெரியும் அவரோட கௌரவம் குறையுதுனா அதுக்குக் காரணமான யாரையும் உங்க அப்பாரு வச்சு பார்க்கவே மாட்டாரு. அது நீயா இருந்தாலும் சரி.
இப்ப ஊரு சனமே கூடியிருக்கு. இப்ப உன்னோட பேச்சு எடுபடாது. அப்படியே நீ பேசினாலும் சாந்தினி உனக்குத் துணையை நிக்கமாட்டா. கதிரவன் அவளோட மனசையும் மாத்திட்டான். எங்களுக்கும் கதிரவனைப் பிடிக்கலைதான். ஆனாலும் அண்ணனோட சொல்ல மீறி நடந்துட்டு அப்புறம் எப்படி வாழுறது?
உங்க அப்பாவ பத்தி உன்ன விட எங்க இரெண்டு பேருக்கும் ரொம்ப நல்லாவே தெரியும். அதுனால ஊரு முன்னாடி எந்த வம்பும் பண்ணாம வந்தமா அச்சத்தைய போட்டோமான்னு இரு. நாங்க சொல்றதுல உனக்கு நம்பிக்கை இல்லனா, நீயே சாந்தினிக்கு தெரியாம அவளை மறைஞ்சு நின்னு பாரு. அவ சந்தோஷமாவே கலையானதுக்குத் தயார் ஆகுறா…
மதுரைக்குப் போயிருக்க உன்கிட்ட தகவல் சொல்லக்கூடாதுனு சொன்னவளே அவதான். ஒருவேளை நீ வந்துட்டாலும் நீ அவளைப் போய் பார்த்திடாம பார்த்துக்கங்க அப்பான்னு சொன்னதும் அவ தான். இந்தக் கதிர் பையன் என்ன சொன்னான்னு தெரியல. இப்படி ஆளே மாறிப்போய்ட்டா” எனப் பாரிஜாதம் கூற, எதையும் ஆழ்ந்தோ கூர்ந்தோ யோசிக்காமல் எப்போதும் பாரிஜாதம் கூறுவதை மட்டுமே உண்மை என்று நம்புபவன் இப்போதும் அப்படியே நம்பினான்.
கேட்டவுடன் அவனுக்குக் கோபமே முதலில் துளிர்த்தது. அவனுடைய தன்மானமும் தலை தூக்கியது. தன்னை வேணாம் என்று ஒதுங்கியவள் தனக்குத் தூசுக்குச் சமம் என்று எண்ண தோன்றியது. ஆனால் அந்த மனநிலை அப்படியே இருக்குமா ? அல்லது சாத்தினியை பார்த்ததும் மாற்றம் கொள்ளுமா ? இன்னும் சிலமணி நேரத்தில் அஃது அவன் உட்பட அனைவர்க்கும் தெரிந்துவிடும். எதிர்காலம் யாருக்கு என்ன வைத்திருக்கிறதென்று முன்பே கணிக்கும் வித்தை அறியாதவர்களே இந்த மனிதர்கள்.
கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து வந்த ஜனங்களின் மத்தில் இடையிடையே கூட்ட நெரிசலில் தெரிந்த கதிரவனின் முகம் விழிக்குத் தப்பாமல் தெரிந்தது. பலூனை பார்த்த குழந்தை எத்தனை சந்தோசத்துடன் தன் தந்தையை அழைத்துக் காண்பிக்குமோ அதே மழலை சந்தோசத்துடன் விழியும் தன்னுடைய தந்தையை அழைத்து, “அப்பா இதோ அவுக வராங்க….” எனக் காட்ட, கந்தசாமியின் முகத்தில் அளவான புன்னகை.
மகளின் சந்தோசம் அவருக்கும் சந்தோஷத்தையே தந்தது.
அவன் அன்று விழி அனுப்பிய சட்டையை அணிந்து வந்துகொண்டிருந்தான். அவனுடைய வலிய கரங்களில் அவள் பரிசளித்த கடிகாரம். அதை இரண்டையும் இமைக்காமல் பார்த்தவள், தன் மனதினுள்,
அந்தப் பொருள்களாகக் கூட
பிறந்திருக்கக் கூடாதா ?
உன்னருகில் வாழ்ந்திருப்பேனே
என்ற வரிகளை நினைத்துக்கொண்டாள்.
“ஏங்க யாருக்குக் கல்யாணம்?” எனக் கந்தசாமி ஒருவழியாகக் கேட்க, அருகிலிருந்த பெரியவர், “அட அதுவே தெரியாமையா வந்தீங்க? நம்ம கதிரவனுக்கும் மச்சக்காளை பொண்ணுக்கும் தான்பா கல்யாணாம்” என்ற குண்டை அவசரமில்லாமல் இறக்க, அதைக் கேட்ட விழியன் நெஞ்சம் எரிமலையாய் வெடித்துச் சிதறியது. கந்தசாமியோ ஒன்றுமே புரியாமல் அப்படியே ஸ்தம்பித்தார்.
விழியன் கண்களிலிருந்து அவளறியாமல் கண்ணீர் பெருக, கந்தசாமி மனம் அவளின் கண்ணீர் பார்த்து உடைய தொடங்கியது. அதற்குள் புரோகிதர் மணமகனையும் மணமகளையும் மேடைக்கு அழைத்து ஏதேதோ சம்பிரதாயங்களைச் செய்து அவர்களிடம் மணக்கோலத்திற்கான ஆடையைக் கொடுத்து அடுத்து அரை மணிநேரத்தில் தயாராகி வரும்படி கூற, நடக்கின்ற விஷயங்களைப் பார்த்துக்கொண்டிருந்த மூன்று இதயங்கள் சத்தம் எழுப்பாமல் ஊமையாய் அழுதன. விழி சாந்தினி மாறன் மூவரும் ஒருவர் அறியாமல் ஒருவர் உள்ளுக்குள் கதற, கதிரவனோ இந்தத் திருமணம் நிற்காதா என்ற எண்ணத்துடன் அமர்ந்திருந்தான்.
ஏனோ சாந்தினியை தன் அருகில் மணப்பெண்ணாய் கூட அவனால் ஜீரணிக்க இயலவில்லை. தவறு செய்வது போல உள்ளுணர்வு தோன்றியது. ஆனால் தன்னுடைய தாயிடம் கொடுத்த வாக்கிற்காகத் தன் பக்கமிருந்து இந்தத் திருமணம் நிற்க கூடாது என்று அமைதிகாத்தான். ஆனால் அவன் மனதில் அமைதி என்பது சிறிதளவும் கிடையாது.
மறுபுறமோ மாறன் எந்தச் சாந்தினியை உதறவேண்டும் என்று தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டானோ அந்தச் சாந்தினியை அவளைப் பார்த்தபிறகு உதறி தள்ள முடியாமல் தவித்தான். “ஏன் சாந்தினி இப்படிப் பண்ணின ? என்ன ஆச்சு உனக்கு ? நீ இலேசா என்ன மறந்துட்டு அவன் கூடத் தாலிகட்டிக்கப் போற. ஆனா இப்ப கூட உன்ன முழுசா வெறுக்க முடியலையே” என மாறனின் மனம் புலம்பியது.
அதேபோல் சாந்தினியும் மனதிற்குள், “மாறன் மாமா என்ன ஏன் மாமா தரித்திரம்னு சொன்னீங்க ? அப்போ பணம் இல்லாட்டி நம்ம காதலும் இல்லையா மாமா ? கல்யாணம் முடியிற வரைக்கும் இங்க வரைகூட மாட்டேன்னு சொல்லிடீங்களாமே. ஏன் மா…?” எனத் தவித்துக்கொண்டிருந்தாள்.
இன்னொருபுறமோ விழி. நடப்பவைகளைக் காணமுடியாமல் கோவில் மணடபத்திற்குப் பின்புறமாகச் செல்ல, அவள் பின்னோடு கந்தசாமியும் வந்து சேர்ந்தார். தூணின் மறைவில் மடிந்து சரிந்து அமர்ந்தவள், முழங்காலில் முகத்தைப் புதைத்து கதற தொடங்கினாள்.
விழியின் கண்ணீர் பெருக பெருக அதைப் பொறுக்க முடியாத கந்தசாமி, “பாப்பா வா வீட்டுக்குப் போகலாம். உன்ன எதுக்குமே அழ கூடாதுனு சொல்லித்தானே வளர்த்தே. நேத்து வந்தவனுக்காக நீ இப்படி அழலாமா ? நீ அழறத பாக்குறதுக்கா நான் இங்கன இருக்கேன்.
இதோ பாரு… எந்தப் பிரச்சனைனாலும் துணிஞ்சு நில்லு, எதித்து நில்லு, போராடு, வெற்றியோ தோல்வியோ சமாளி. ஆனா அழமட்டும் செய்யாத. நீ அழுதனா உன்னோட அப்பாவோட வளர்ப்பு தோத்துப்போய்டும். சொல்லு அததான் நீ விரும்புரியா ?” எனக் கேட்க, அவளின் சிறு வயதிலிருந்தே தன்னுடய அப்பா எதற்காகவும் தோற்க கூடாது என்ற எண்ணம் கொண்ட விழி, எதற்காகவும் அழ கூடாது என்ற கொள்ளகை கொண்றிருந்த விழி தன் தந்தைக்காகக் கண்ணீரை கட்டுப்படுத்த முயன்றாள்.
நிமிர்ந்து தந்தையின் முகத்தை ஏறிட, அவரது விழியும் லேசாகச் சிவந்து கலங்கியிருக்க, “அப்பா நீங்க அழறீங்களா ?” என்ற கேள்வியை மனதோடு மட்டும் கேட்டுக்கொண்டாள். அதற்குமேல் ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை. வேக வேகமாகத் தன்னுடைய கண்ணீரை துடைத்தாள்.
“இல்லப்பா…நீங்க தோற்கமாட்டிங்க. தோற்கவும் விடமாட்டேன்” எனக் கூறியவள் மீண்டும் பழைய கனல்விழியாகத் துடிப்பானவளாகத் தைரியமானவளாக அவர் முன் நின்றாள். அப்போது சரியாக முருகேசன் கைபேசியில் அழைக்க, அதைக் காதுக்கு கொடுத்த கந்தசாமி பேசிவிட்டு வைத்தார்.
“முருகேசன் கூப்பிட்றான் பாப்பா… நான் எதுவும் சொல்லல. என்ன சொல்லணும்னு தெரியல. வரேன்னு வச்சுட்டேன். வரலன்னு சொன்னா ஆயிரம் கேள்வி வரும். நம்ம வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாம். வா புறப்படுவோம்” என அழைக்க,
“நீங்க வரேன்னு சொல்லிட்டு போகாம இருக்கலாமா பா? நீங்க போங்க. நான் இங்னவே இருக்கேன். கிளம்புறப்ப கூப்பிட்டுக்கோங்க. கண்டிப்பா அழ மாட்டேன். நான் பாத்துக்கிறேன் ப்பா. நான் உடைஞ்சு போய் அழுது உங்கள தோற்கவைக்கவும் மாட்டேன் தோத்துப்போகவும் மாட்டேன். என்ன நம்புங்க. ஆனா கொஞ்சம் தனியா இருக்கணும்பா… ப்ளீஸ்” என இறங்கிய குரலில் கூற, அவளுக்கு இந்த நொடி தனிமை அவசியம் என்று உணர்ந்தவர், தன் மகளின் மனதையிரியத்தை நன்கு அறிந்தவராக அங்கிருந்து சென்றார்.
கந்தசாமிக்கு லேசான அதிர்ச்சியே. எந்தவொரு விஷயத்திலும் தோல்வியை எளிதாக ஒப்புக்கொண்டு சோர்ந்து போகாதவள் இப்படிச் சட்டென்று மடிந்து அழுதது அதிர்ச்சியே. மகளைக் குறித்த கவலையோடு முருகேசனை நோக்கி சென்றார்.
இதற்கிடையில் பார்வதி தன் அன்னையின் கழுத்திலிருந்த திருமாங்கல்யத்தைப் பூஜை தட்டில் வைத்து, இன்று கதிரவன் கட்டவிருக்கும் தாலி இதுவாகவே இருக்கவேண்டும் என்று அவசர அவசரமாகப் பாரிஜாதத்தைத் தேடிக்கொண்டிருந்தார். மச்சக்காளை ஒரு தாலி செய்து எடுத்து வந்திருந்தார்தான். ஆனால் ஏனோ பார்வதிக்கு திடிரென்று தன் அன்னையின் மாங்கல்யத்தை மருமகள் அணியவேண்டும் என்று தோன்றியது.
அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்யும்படி கொடுத்திருந்தார்….
மாங்கல்யதானம் செய்யும் நேரமும் வந்தது. அதற்குள் அடித்துப் பிடித்து விஷயம் தெரிந்து சக்கரையும் பாண்டியும் ஓடி வந்தனர். கதிரவன் மணக்கோலத்தில் அமர்ந்திருக்க, அருகினில் முழு அலங்காரத்தில் சாந்தினி குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருக்க, கதிரவனுக்குச் சமிங்கை காண்பித்தபடி கூட்டத்தை விளக்கி கொண்டு சக்கரையும் பாண்டியும் முன்னேற, மாறனோ சாந்தினியை பார்த்துவிட்ட பிறகு அவள் நிறம்மாறிப் போயிருந்தாலும் அவள் மீது கொண்ட காதலை விட்டுக்கொடுக்க முடியாமல் தவித்த பார்வையோடு அவளையே தொடர, இந்தக் கல்யாணம் வேண்டாம் வேண்டாம் என்று ஜபம் போலச் சாந்தினியும் கதிரவனும் தம் தம் மனதில் ஓத, கெட்டி மேளம் கொட்ட, அய்யர் திருமாங்கல்யத்தை எடுத்து கதிரவனின் கைகளில் கொடுக்க, நிரம்பியிருந்த ஜனக்கூட்டம் அக்ஷதையைப் பெரும் மழையாக மணமக்கள் மீது தூவ, பார்வதியின் ஆசைப்படி அவருடைய அன்னையின் திருமாங்கல்யம் அவரின் மருமகள் கழுத்தில் ஏறி இருந்தது.
தவழ தவழ புது மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட தாலியை நெஞ்சில் சுமந்தபடி கதிரவனின் மனைவி…

Advertisement