Advertisement

யாரிவளோ-2

கண்ணீராலே பூக்கின்றவள் தான்

பெண்ணென்ற எண்ணத்தை

கையோடு கொய்து செல்கிறாள்

பெண்ணவளின் தைரியத்தாலே – கனல்விழியை முதன் முதலில் பார்த்த கதிரவன்.

அனைத்து பள்ளிகளிலிருந்து மாணவர்களும் மாணவிகளும் தம் தம் பள்ளியின் சார்பாகவும் வகுப்பின் சார்பாகவும் கூடியிருக்க, பெண்கள் கூட்டத்தை அரும்பு மீசை கொண்ட காளை கூட்டங்கள் அந்தந்த வயதிற்கே உரிய ஆர்வ பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

வரிசை வரிசையாக மரப்பலகை மீது தங்கள் திட்டத்தின் சிறு மாதிரியை வைத்து விளக்கிக்கொண்டிருந்தனர். வாயெல்லாம் பல்லாகச் சக்கரை உள்நுழைய, எங்கே பஜ்ஜி போண்டா கடை போடப்பட்டிருக்கிறதென்ற சிந்தனையில் சோமாஸ் பாண்டி உள்நுழைந்தான்.

“டேய் சக்கர, கடைய பாத்தது சோமசுக்கு ஆடர் பண்ணிடனும். அங்க போய்க் காசில்லை கப்பியில்லன்னு கத சொன்ன… மாப்புல உனக்குச் சங்குதா” என எச்சரித்தபடி கூட்டி சென்றான். அவர்கள் பின்னோடு கதிரவனும் கடனே என்று வந்துகொண்டிருந்தான்.

அவனுக்கு இதில்லெலாம் ஆர்வமில்லை. தொழில், தொழில் செய்வதில் தான் நாட்டம் அதிகம். அதற்கு ஒரு பட்டப்படிப்பு வேணும். அவ்வளவே அவனுடைய எண்ணம்.

அவர்களுக்கு விவசாயத்துடன் இறால் மற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இவனுக்கு அதில் ஆர்வம் அதிகம், ஆனால் அவன் பேச்சு அவ்வளவாக அங்கே எடுபடாது. காரணம் சிவலிங்கத்தின் தங்கையின் கணவர் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். சொத்து இவர்களுடையது தான் என்றாலும் பொறுப்பு அவர் கையிலிருந்தது. அதற்கான இடத்தையும் அளித்தது லிங்கமே. லிங்கத்தைப் பொறுத்தவரை தங்கை பாரிஜாதமும் அவரது கணவன் மச்சக்காளையும் சொல்வதனைத்தும் உண்மை. பாரிஜாதமென்றால் பாசமலர் சாவித்திரி என்ற எண்ணம் நம் நாயகனின் தலைக்கட்டு தலைவருக்கு….

“அட! அட! எம்புட்டு அழகான புள்ளைங்க… நம்ம ஊருலயு இருக்குதுங்களே” என புலம்பியபடி சக்கரை வர, பாண்டிகூட சோமாஸ் நினைவிலிருந்து மெல்ல வெளிவந்தவனாக, “அட நல்லா புதுசா சுட்ட பலகாரமாறி பிரெஷா இருக்குதுங்களே” என ரசித்தபடி சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தான்.

அதிலொருத்தியை சக்கரையின் கண்கள் ஆர்வமாகப் பார்க்க, பாண்டியை அழைத்து, “மாப்பு இவ தா உன்னோட தங்கச்சியா இருப்பான்னு நினைக்கிறே” என ஜாடையாகக் கூற, “என்னது ? எனக்குத் தங்கச்சியா ? ஆத்தா என்ட எதுவும் சொல்லலியே” எனத் தலையைச் சொரிந்தபடி வேகமாக அந்தப் பெண்ணிடம் போய், “ஏமா ? நீ எனக்கு எப்படித் தங்கச்சியான ?” எனத் திடுதிப்பென்று கேட்க, அருகிலிருந்த பெண்கள் இவனைக் கேலி செய்யத் தொடங்க சக்கரை அவனை அங்கிருந்து இழுத்து வருவதற்குள் மூச்சிறையாகி போனான்.

“அட ராமா இந்தப் பன்னாடையோட என்ன ஏ கூட்டு சேத்த?” எனச் சினிமா பாணியில் தலையில் கைவைத்து கூறியவன், கதிரவனிடம் முறையிட பார்க்க, அவன் இவர்களைவிட்டுக் கொஞ்சம் முன்னே நடக்கத் தொடங்கியிருந்தான்.

சரி மீண்டும் அந்தப் பெண் தென் படுகிறாளா எனப் பார்க்க அந்த இடமே காலியாக இருக்கச் சக்கரை பாவக்காய் போலப் பாண்டியிடம் முறைத்து நின்றான்.

“இன்னைக்கு இங்கிருந்து போறதுக்குள்ள அந்தப் பொண்ண மறுபடியு நா பாக்கல உனக்கு வாழ்க்கைல சோமாஸே கிடைக்காதுடா. இது என் சாப, அப்படியே பழிக்கு” எனக் கையில் எச்சியைத் துப்பி மறுகையால் சத்தியம் செய்யப் பாண்டி அவனின் சாபத்தைக் கேட்டு சுக்கு நூறாய் உடைய தொடங்கினான்.

“மாப்பு வச்சுடாதடா ஆப்பு. நா எப்டியாச்சு தேடி தறேடா. அதுக்காக இம்புட்டு பெரிய வார்த்தையா ? வேணாம்டா வாபஸ் வாங்குடா” என அவன் பின்னாடியே சுற்றிவந்துக்கொண்டிருந்தான்.

இப்படியாக ஒருவரை ஒருவர் துரத்தி பிடித்துக்கொண்டு கதிரவனிடம் வர, “மிஸ், எனக்கெதுவும் தெரியாது” எனப் பெண் குரலொன்று கேட்க, அங்கே மூவரும் தற்செயலாகத் திரும்ப ஒரு பெண் அழுது கொண்டு நின்றிருந்தாள்.

கண்ணீர் கொட்டிக்கொண்டிருக்க, “கார்ப்பரேஷன் குழா கூட டைத்துக்குத் தாண்ட தண்ணீ விடறாங்க. ஆனா இந்தப் புள்ளைங்க எப்படிடா நினச்சா நேரமெல்லா தண்ணீ விடுதுங்க” என அங்கே நடக்கும் பஞ்சாயத்தை வேடிக்கைபார்த்தபடி சக்கரை கூற, “மாப்பு என்னடா ? கருகிபோன அதிரசமாதிரி அந்தப் புள்ள கண்ணு கருப்பா இருக்குது. கண்ணீர் தண்ணீகூடக் கழுவாத கவர்மெண்ட் டேங்க் தண்ணீ போலக் கன்னகறேன்னு இருக்குது” எனப் பாண்டி சீரியஸ்ஸாகச் சிந்தித்துக்கொண்டிருந்தான்.

“டேய் அது கண் மைடா” எனச் சக்கரக் கூற, “பரவாயில்ல மாப்பு. நிறைய விஷய தெருஞ்சு வச்சுருக்கியே” எனப் பாண்டி அவனின் தோள்களைத் தட்ட சக்கரை பெருமையாகக் காலரை தூக்கிவிட்டுக்கொண்டான்.

கதிரவன் மட்டும் அந்தக் கூட்டத்தைப் பார்க்க பிடிக்காமல் செல்ல போக, “பளார்…..” என்ற சப்த்தம் அங்கிருந்த அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

பச்சையும் வெள்ளையும் கலந்த பள்ளி சீருடை அணிந்து பச்சை கலர் ரிப்பணால் பின்னலிட்டு மடித்துக் கட்டியபடி ஒரு சிறு பெண் நின்றிருந்தாள். அவள் தான் அறைந்திருக்க வேண்டுமென்று இவர்களால் யூகிக்க முடிந்தது. முகம் அத்தனை தெளிவாக இவர்களுக்குத் தெரியவில்லை பாதியாகத் திரும்பி நின்றிருந்தாள். கொஞ்சம் அவளின் பக்கவாட்டு முகம் மட்டும் தெரிவது போல. ஆனால் அந்த ஆசிரியை பேசுவது கேட்டது.

“ஏ… உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா நா நிக்கும்போதே ஒரு பையன கை நீட்டி அடிப்ப. அதுவு இந்த வயசுல உனக்கு லவ் லெட்டர் வேற… தப்பு செஞ்சது நீ” என ஏகத்துக்கும் குதிக்க. அந்தப் பெண் கொஞ்சமும் அசையாமல் நின்றாள்.

அது கனல்விழியே!

அவளின் ஸ்திரமான பாவனைச் சுற்றி இருந்தவர்களுக்கு அவளைத் திமிறானவளாகக் காட்டியது.

“கொஞ்சமாச்சு பயமிருக்கா? கைய நீட்டு” எனக் கூறியபடியே அருகிலிருந்த ஸ்கேலய் எடுத்து அடிக்கப் போக, கனல் விழி வாய் திறந்தாள். ஆனால் அதில் பயமுமில்லை பதற்றமும் இல்லை.

“மிஸ். நீங்க என்ன அடிங்க. அதுக்கு முன்னாடி ஒரு நிமிச” எனக் கூறி மீண்டும் தனக்கு முன் நின்ற பையனை ஓங்கி மற்றொரு அரை இம்முறை சற்று பலமாகவே கொடுத்தவள், “இப்ப மரியாதையா உண்மைய சொல்லல. உன்ன தொலைச்சுடுவே. யார்கிட்ட இத கொடுக்க வந்த ? நானா உண்ட கேட்டே ? எனக்கு ஒன்னு இல்ல. எங்க அப்பாவை இப்பவே கூட்டியாரே. ஆனா சும்மா இல்ல, உன்னை இப்பவே உன் வீட்டுக்கு முன்னாடிவிட்டு அடிப்பே.

உங்க அப்பா அம்மாட்ட நீ பண்ணின வேலைய சொல்லுவே” என ஒரு விரல் நீட்டி மிரட்ட, அந்த மிரட்டல் சிறுபிள்ளை தனமாக இருந்தாலும், அந்த வயதில் அத்தனை துணிச்சல் அசாத்தியமான ஒன்றே.

அதுவும் காதல் என்ற வார்த்தை பள்ளி பருவங்களில் வந்தால் பிள்ளைகளின் வார்த்தைகளைக் கேட்காமலே தண்டனை தரும் பெற்றோர்கள் இந்தக் காலத்திலேயே இருக்கும்போது பன்னிரண்டு வருடங்களுக்கு முன் அதுவும் தென் தமிழகத்தில் இருக்கும் வெள்ளந்தி மனிதர்களான கிராமத்துப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் தண்டனை அவர்களின் வாழ்க்கையையையே புரட்டிபோட்டுவிடும் அளவிற்கு இருக்கும்.

ஆதலால் தன் வீட்டிற்குத் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் அவன் முகம் வெளிற, கனல் விழியன் துணிச்சலில் அந்த ஆசிரியை கூடக் கனல்விழிக்கு இதில் சம்மந்தம் இருக்காதோ என எண்ண தொடங்கினார்.

நடந்தவை இவை தான். அடிவாங்கிய பையன் கனல்விழியின் அருகே நிற்கும் பெண்ணின் பின்னாடி சில காலமாகச் சுத்தி வருபவன். யாரும் பார்க்காத நேரத்தில் ஐ லவ் யு என்று சிறு துண்டு சீட்டில் எழுதி அப்பெண்ணிடம் கூட்டத்தில் கொடுத்துவிடலாம் என்று எண்ணி வந்திருக்க, அவன் கொடுக்கவிருந்த கடைசி நிமிஷத்தில் அந்த ஆசிரியையிடம் கையும் களவுமாகப் பிடிப்பட்டுவிட்டான்.

அவன் தன்னை நோக்கி தான் வந்தான் என்பதைப் புரிந்துகொண்ட அந்தப் பெண்ணும் பயத்தில் வெளிறிய முகத்துடன் அழ தொடங்க, அவனோ அவளையும் காப்பாற்றித் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள, “மிஸ், இது என்னனு எனக்குத் தெரியாது. இந்தப் பொண்ணு தா எண்ட இப்பதா கொடுத்துச்சு” எனக் கனல்விழியைக் கை காட்டிவிட, என்ன நடக்கிறதென்று பார்த்துக்கொண்டிருந்த கனல்விழியை அந்த ஆசிரியை பிடித்துக்கொண்டு கத்த தொடங்கவே, அவனின் வாயிலிருந்து உண்மையை வரவைக்கவே கனல்விழி அவனை அறைந்திருந்தாள்.

அந்தச் சப்தத்தில் கதிரவனின் கவனம் அங்கே நடப்பத்தில் பதிந்தது.

“இப்ப சொல்ல போறியா? இல்ல உங்க வீட்டுக்கு போலாமா ?” என மீண்டும் குரலை உயர்த்த, “இல்ல, அது வந்து…இந்த பொண்ணு கொடுக்கல மிஸ். அது……..அது நாதா பக்கத்துல இருக்கப் பொண்ணுக்கு கொடுக்க வந்தே. ப்ளீஸ் மிஸ் எங்கவீட்லலாம் சொல்லிடாதீங்க” எனப் பயத்துடன் கூற, அந்த ஆசிரியை, “நீதானா? அப்புற ஏண்டா பொய் சொன்ன. உங்க டீச்சர் பேர சொல்லு. இத பாரு பொண்ணு, நீ தப்பு பண்ணாட்டியு அந்தப் பையன அடிச்சு அதிகப்ரசங்கித்தன பண்ணியிருக்க. நீயும் என்கூட வா. உங்க அப்பாவ நா பாக்கணும்” எனக் கூற, “கண்டிப்பா அவர கூட்டியாரே மிஸ்” என அப்போதும் துணிச்சலாகவே சொன்னாள்.

“இப்படி ஒரு பொண்ணா? இப்படியும் இருப்பாங்களா ?” என்ற எண்ணம் தான் கதிரவனின் மனதில். அதற்குமேல் வேறெதுவுமில்லை.

“என்ன மாப்பு, பையனுகூடப் பாக்காம இப்படி அடிச்சிடுச்சு. தம்முத்தூண்டு துண்டு சீட்டு போல இருந்துட்டு என்னா காட்டு காட்டுது. ஏண்டா சக்கர, இந்தப் பொண்ண வேணுனா நா என்னோட தங்கச்சியா ஆக்கிக்கவா ? நீ பாத்த பொண்ணுதா காணாமப்போச்சே” எனச் சீரியஸாக முகத்தைவைத்துக்கொண்டு வினவ, “அடே! நீ எனக்குக் காதலிக்கப் பொண்ணு பாக்கறியா கருமாரி செய்யவா ? ஆத்தாடி இவள கட்டிக்கிறது கரட்டு கம்பத்துல கால வைக்கிறது ஒன்னு தான். நீ ஒழுங்கா அங்க பாத்த பொண்ண தேடி கொடு” என இழுக்க, இவர்களின் சண்டையைப் பார்த்தபடி கதிரவனும் அவர்களுடன் சென்றான்.

கதிரவனின் மனதில் பெண்ணென்றால் அழுது கொண்டு மட்டும் நிற்பவள் இல்லை என்ற பிம்பத்தை முதன்முதலாகத் தோற்றுவித்த கனல்விழி இது ஏதும் தெரியாதவளாய் சென்றுக்கொண்டிருந்தாள்.

சக்கரை இழுத்த இழுப்பிற்குப் போன பாண்டியும் அவனோடு சென்ற கதிரும் அதற்குமேல் கனல்விழியைப் பற்றிச் சிந்திக்கவில்லை.

“இங்க பாரு ஸ்கூலே மூடப்போறாங்க. இன்னு நீ கண்டுபிடிச்சு தரல” எனச் சக்கரை முறைக்க,

“கண்டுப்பிச்சுட்டேன்…” எனக் குதித்தான் பாண்டி.

“எங்கடா? உன் தங்கச்சி ?” என வேகமாகச் சக்கரை ஆவலுடன் சுற்றி சுற்றி தேட,

“அடே தங்கச்சியுமில்லை தொங்கச்சியுமில்ல. நா சொன்னது பஜ்ஜியை. கடைசில ஒரே ஒரு கடதா இருக்கு. வா இதையும் விட்டுட்டு என்னாலலாம் பசியோட சுத்தமுடியாது.

இப்பவே கிறுகிறுன்னு வருது” என வேகமாகக் கடை பெஞ்சில் அமர்ந்தவன், ஆவலாக ஒரு பஜ்ஜியை கையிலெடுத்து அதோடு பேச ஆரம்பித்தான்.

“இதோ வந்துட்டேன் வந்துட்டேன்…உன்ன விட்டுட்டு எங்கடா செல்லம் போகப்போறேன்…” எனக் கூறிக்கொண்டே ஆசை ஆசையா விழுங்கினான்.

“டேய் பாண்டி… எங்களுக்கு கொஞ்ச மிச்சம் வையிடா” எனச் சக்கரை கதற, கதிரவனோ அவர்களுக்கெதிரே உக்காந்து வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினான்.

கதிரவன் கனல்விழியின் தைரியத்தைப் பார்த்துச் சிந்தித்தது ஓரிரு நிமிடமே. அதன் பிறகு அவளையும் அந்தச் சம்பவத்தையும் மறந்தே போனான். இன்னும் சொல்லப்போனால் அவளை நினைவில் வைத்துக்கொள்ளக் கனல்விழியின் தைரியத்தைத் தவிர அவனுக்கு வேறெதுவும் தெரியாது. தெரிந்துகொள்ளவும் ஆர்வமில்லை. அவன் பாடே திண்டாட்டமாக இருக்கிறது. இதில் இதற்கெல்லாம் ஏது சிந்தனை?

நண்பர்களுடன் கேலி கிண்டலில் இறங்கியவன் வழக்கமான ஊர் சுற்றல்களுடன் அன்றைய தினத்தை முடித்துவிட்டுத் தோப்பு வீடு நோக்கி வந்தான். மீண்டும் தனிமை அவனைச் சூழ்ந்துகொண்டது. தன் அன்னையைக் காணவேண்டுமென்ற எண்ணம் தலை தூக்க வேண்டாம் என்று வலுக்கட்டாயமாகக் கயிற்றுக் கட்டிலில் தலையைச் சாய்த்து தூங்க முற்பட்டான்.

திடிரென்று கயிற்றுக் கட்டில் மிகவும் பாசமாகத் தன்னை உள்வாங்கிக் கொண்டதை போல உணர்ந்தவன் ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகே உணர்ந்தான் தன் தாய் மடியின் ஸ்பரிசத்தை. ஆம்! உறக்கத்திலிருந்து தன் மகனின் தலையை எடுத்து தன் மடி மீது வைத்திருந்தார் பார்வதி. அவரை அந்நேரத்தில் அங்கே எதிர்பார்க்காதவன், “அம்மா..” என்ற அழைப்புடன் வேகமாக எழுந்து உக்காந்து, அவரின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.

“மணி பாத்தியா? இந்த நேரத்துல ஏமா தனியா வந்த ? ஆளவிட்டு சொல்லிருந்தா நானே வந்துருப்பேன்ல.

இப்படிக் கண்ட நேரத்துலலாம் தோப்புக்கு வராதமா. பூச்சிக்கொட்ட கடிச்சிடப்போது” என அக்கறையாக மகன் பேச பேச அந்தத் தாயுள்ளம் பரிதவித்தது.

“ஏயா கதிரு. அம்மா தானயா எல்லாப் புள்ளைக்குச் சொல்லுவாங்க. ஆனா இங்க நீ எனக்குச் சொல்லுறியே? உனக்கு எம்மேல கோவமே இல்லையா ? ”

“எனக்குன்னு இருக்குறது நீ மட்டுதா மா. உண்டையு கோச்சுட்டு நா என்னத்த செய்யப் போறே. இத பாரு அழாத. ஆமா எப்படி வந்த ?”

“உங்க அப்பாதான்….” என வாயெடுத்தவர் சட்டென்று நிறுத்தி வாயை இறுக மூடிக்கொள்ள, இவனுக்குச் சுறுசுறுவென்று கோவம் வந்தாலும், அதைச் சட்டென்று தாயின் வெளிறிய முகத்தைக் கண்டு அடக்கி கொண்டவன் ஒரு நிமிடம் இன்று காலையில் நடந்த சம்பவத்தோடு பொருத்தி பார்த்தான்.

“ஏமா உனக்குக் கொஞ்ச கூட எதுத்து பேச தைரியம் வரமாட்டீங்கிது? ஸ்கூல் கூட முடிக்காத சின்னப் புள்ள அது அந்தப் போடு போடுது. ஆனா நீ, பெத்த புள்ளட்ட பேசும்போதே பயப்பிடுறியே. அந்த வீட்ல அவுங்க இதவச்சுதாமா ஏய்க்கிறாங்க” என மனதில் நினைத்துக்கொண்டான்.

வெளியே கூறினால், அதற்கும் கூனி குறுகி அழுவாரே தவிர வேறெதுவும் பேசமாட்டார். ஆதலால் மேற்கொண்டு அவரை நோகடிக்க வேண்டாமென்றெண்ணி விட்டுவிட்டான்.

“சரி சொல்லுமா. இந்நேர வந்துருக்க ?”

“நேத்து அவரு ஏதோ பேசிப்புட்டாரு. அதுக்காக நா சாப்படையு கொடுத்து விடாம இருக்க முடியாது அய்யா. மனசுல எதயு வச்சிக்காத கதிரு.

அம்மாக்காகச் சாப்பிடு ராசா. நீ வூட்டுக்கு வரது இல்ல. சாப்புடாமலு போய்ட்டா நா எதுக்குத்தா இந்த உசுர வச்சுருக்கனு?” என அழுதபடியே சாப்பாடு கொண்டு வந்த பாத்திரத்தை எடுத்துவைக்க, “நீ சாப்டியா மா ?” என வினவினான். ஆம் என்று அவர் தலை அசைக்க, அவர் சாப்பிட்டேன் என்று கூறிய பொய்யை கண்டுகொண்டவன் ஒரு கவளத்தை எடுத்து அவரின் வாயில் வைத்தான்.

“சாப்பிடு மா… இந்தச் சாப்பாட எனக்குக் கொண்டு வந்து கொடுக்க நேத்துல இருந்து பட்டினி கிடந்த தான?” எனக் கேட்க, பார்வதியின் கண்ணீர் அவனுக்கு விடை கூறியது.

தாயும் மகனும் பேசியபடியே மாற்றி மாற்றி உணவை ஊட்டிக்கொள்ள, சிறுது நேரத்தில் கிளம்பியவரை, “ஏ தலகட்டு தலைவரு நின்னு கூப்டு போகமாட்டாரோ. ஜாமத்துலயு உம்ம வீட்டுக்காரருக்கு பச்சாயத்து இருக்கும் போல” எனச் சலித்துக்கொண்டே, “தனியா போகாத” எனக் கூறிவிட்டு அவர்களின் வீட்டை நோக்கி தாயுடன் நடந்தான்.

மறுநாள் காலை கதிரவன் தன் நண்பர்கள் தேடி போக, சக்கரையின் கடைக்கு அருகே இருக்கும் கள்ளுக்காலில் அமர்ந்திருந்தான் பாண்டி.

“ஞாயித்துக் கிழம வந்தாலு வருது இந்தப் பள்ளிக்கூடப் பசங்க கள்ளுக்காலே கிடையா கிடக்குறாங்கே” எனப் போகிற போக்கில் ஒரு பெரியவர் சாடிவிட்டு போக, பாண்டி தன் சட்டையில் தூசி தட்டுவதைப் போலப் பாவலா காட்ட, அதற்கும் அந்தப் பெரியவர், “பெருசு சிருசுனு மட்டுமறியாத இருக்கா பாரு…” எனக் கூறிவிட்டு சென்றார்.

எதிர்ப்பட்ட கதிரிடம், “ஏப்பா கதிரு, இந்தப் பாண்டி பையனுக்கு லந்து கூடிப்போச்சு. சேல ஒடுக்கி இருக்கச் சொல்லுயா” எனக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்ட போனார். ஆம்! கதிரவன் அவனின் வீட்டிற்கு எப்படியோ. ஆனால் ஊருக்கு அவன் பொறுப்பானவன், நேர்மையானவன், திடமானாவான், மிகவும் தைரியமானவன்.

பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பவனாகினும் அவனுடைய கம்பீரமான உடற்கட்டு இளங்காளையையே நினைவூட்டும். அவன் வயதினருக்கு கதிரவனின் தோற்றம் பொறாமையையும் இளையவர்களுக்கு அவன் மீது ரசனை கலந்த பிரமிப்பையும் கண்டிப்பாகக் கொடுக்கும்.

‘‘கதிரன்னை போலக் கதிரன்னை மாதி’’ என்ன சிண்டு வான்டெல்லாம் சொல்லும் அளவிற்கு அந்தக் கிராமத்திற்கும் சுற்றியிருக்கும் கிராமத்திற்கும் நாயகன். அவனின் தந்தைக்கு ஏன் இவனைப் பிடிக்காது எதற்காகத் தோப்புவீட்டில் இருக்கின்றான் என்ற கேள்வியெல்லாம் இவனின் பக்குவப்பட்ட அணுகுமுறையில், கம்பீரத்திலும் பின் சென்றுவிடும்.

இவன் வயதுள்ளவர்கள் பெண்களிடம் வம்புவளர்க்க இவன் மட்டும் இரெண்டு எட்டு தள்ளியே நிற்பான். ஆதலால் இவன் மீது மரியாதை என்பது தானாகவே வந்தது, அதே சமயம் எந்த வம்பிற்கும் வழக்கிற்கும் இதுவரை போனதில்லை. சாட்சியாகவும் குற்றவாளியாகவும் தலைவனாகவும் எப்படியும் அங்கே இதுவரை போனதில்லை. இனி வரும் காலங்களில் போவதற்கும் எண்ணமில்லை. காரணம் அவனின் தலைக்கட்டு தலைவரே கூடுகின்ற பஞ்சாயத்தில் முக்கிய அந்தஸ்த்தில் இருப்பவர்.

இப்படிச் சென்றுக்கொண்டிருப்பவனின் வாழ்க்கையை மாற்றவே கனல்விழி வந்து சேர்ந்தாள் போல. இல்லை விதி அவளையும் இதில் கொண்டு சேர்த்திருந்தது. அவளின் ரூபத்தில் கதிரவனைப் பஞ்சாயத்தில் நிற்கவைக்கும் என்பதை அறிந்திருந்தால் இன்று அந்தக் கள்ளுக்காலுக்குக் கதிரவன் வந்திருக்கவே மாட்டான். விதி அவளையும் விட்டுவைக்கவில்லை போலும். கனல் விழியும் கண்காட்சி முடிந்தவுடன் ஊருக்கு சென்றிருப்பாள். தன் வயதை ஒத்த உறவின பெண்ணின் வீட்டில் அந்தக் கிராமத்தில் அன்று தங்கியிருக்க மாட்டாள்.

Advertisement