Advertisement

விதியின் மாய சூழல் – 19
“அம்மா…என்னமா சொல்லுறீங்க? மாப்பிள்ளை மாறன் இல்லையா ? கதிரவ மாமாவா ? நீங்க போன்ல கதிர் மாமாதா மாப்பிளைனு சொல்லவே இல்லையேமா. அவரதா காதலிக்கிரியானும் கேட்கவே இல்லையே…” என அதிர்ச்சியுடன் ஏறக்குறைய கோபத்தின் உச்சியிலும் அச்சத்தின் விளிம்பிலும் நின்றிருந்தபடி ஏமாற்றம் அடைந்ததனாலோ ஏமாற்றப்பட்டதாலோ அதிகமான உணர்ச்சிவசத்தில் கண்ணீர் சிந்த தன் தாய் முன் கேட்டுக்கொண்டிருந்தாள் சாந்தினி.
“சாந்தினி மொல்ல பேசு. எதுக்கு இப்ப இப்படிக் கூச்சல் போடுறவ ? வெளிலதா உங்க மாமா இருக்காரு. நீ இப்படிப் பேசுறது அவருக்குக் கேட்டுச்சு இங்கன கொலை விழுகு. அது வேறுயாருமில்லை; உன்னோட மாறன் மாமாவைத்தான். என்ன சம்மதமா ? எதுனாலு மொல்ல பேசு.”
“அம்ம்மா…. என்ன மிரட்ட பாக்குறீங்களா?”
“நாங்க எதுக்குடி மிரட்டணும். நிசத்ததா சொல்லுறோம். நாங்களே இக்கட்டான சூழ்நிலையிலதான் இருக்கோம். எங்களுக்கும் இந்தக் கல்யாணத்துல சுத்தமா சம்மதமே இல்ல. அதுலயும் அந்தக் கதிரவனைச் சுத்தமா பிடிக்கவே பிடிக்காது.
இருந்து எதுக்குச் சம்மதம் சொன்னோம் ? எல்லா என்னோட உசுருக்கு மேல நினைக்கிற மாறனுக்காகவும் எங்க அண்ணனுக்காகவும்தான்”
“அம்மா ப்ளீஸ் என்ன புருஞ்சுக்கோங்க. புதுசா எதாவது சொல்லி என்ன ஏமாத்தவேணாம். நான் காதலிக்கிறது கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறது மாறன் மாமாவைதான். அவுங்கள தவிர வேற யாரையும் என்னால யோசனை கூடப் பண்ண முடியாது” எனப் பிடிவாதமாக நிற்க, மச்சக்காளையோ மெல்ல மகளின் அருகில் வந்து, “சாந்தினி இந்த அப்பா அம்மா உனக்கு நல்லத மட்டும் தான் நினைப்போம்டா. நீ நல்லா இருக்கணும் அத மட்டும்தான் யோசிப்போம். நீ கஷ்டப்படக் கூடாதுனு தான் உன்கிட்ட உண்மைய மறச்சுச் சம்மதம் கேக்குறோம். நீ அதிகமா பேசி எங்களையும் பேச வச்சிடாத.
நாங்க பேசிடுவோம், ஆனா அத கேக்குற ஷக்தி உன்கிட்ட இருக்காது” எனப் பீடிகை போட, “அப்பா என்ன சொல்லுறீங்க ? அம்மா ஒன்னு சொல்லுறாங்க நீங்க ஒன்னு சொல்லுறீங்க. என்னதான் சொல்லுறீங்க ? எனக்கு ஒண்ணுமே புரியல. என்ன சுத்தி என்னதான் நடக்குது?” எனக் குழம்பிய மனநிலையில் அழுது அழுது வீங்கிய கண்ணோடு சாந்தினி கேட்க, மச்சக்காளை பாரிஜாதத்திற்குக் கண் காட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, பாரிஜாதம் மகளிடம் புதிய திரைக்கதை வசனத்தை ஒளிபரப்ப தொடங்கினார்.
“இதோ பாரு சாந்தினி, நான் இப்ப சொல்ல போற விஷயம் எனக்கு உங்க அப்பாக்கு எங்க அண்ணனுக்கும் மாறனுக்கும் மட்டுதே தெரியும். அத தவிர வேற யாருக்குத் தெரியாது, இனிமேலேயும் தெரிய கூடாது. மீறி தெரிஞ்சா நானு உங்க அப்பாரும் உசுரோடவே இருக்க மாட்டோம். ஏனா எங்க அண்ணே எம்மேல அம்புட்டு நம்பிக்கை வச்சுச் சொல்லிருக்கு.
எனக்கு எங்க அண்ணே எம்மேல வச்ச நம்பிக்கைதே முக்கியம். பொறவுதான் எல்லாமே.
மாறன் நான் வளர்த்த பிள்ளதா ஆனாலும் அவனுக்கு உன்னைவிட அவுங்க அப்பருதான் முக்கியம். அண்ணனோட உசுருக்குக் கண்டம் இருக்கு. அந்தக் கண்டத்துக்குக் காரணம் கதிரவனோட மாறனோட ஜாதகம்.
அவுங்க இரண்டு பேருக்குமே கட்டம் சரியில்லையாம். ஆனா உன்னோட கட்டத்தை இரண்டு பேருக்கு வச்சு பார்த்தப்ப, உனக்கு மாறனுக்கும் ஒரு பொருத்த கூடக் கூடல. அதுமட்டு பத்தாதுனு எல்லாமே நட்டத்துலயும் அழிவிளையும் கொண்டு விடும்னு இருந்துச்சு.
செல்வாக்கு வீடு வாசல்னு எல்லாம் போய், அண்ணனோட உசுரும் போய் ரோட்டுல நிக்கவேண்டி வரும்னு. அதுவே உன்னோட ஜாதகத்தைக் கதிரவனோட வச்சு பார்த்தப்ப, அப்படியே நேருக்கு மார். அண்ணனுக்கு ஆய்சு கெட்டி, இப்ப இருக்குறதைவிடச் செல்வ இரட்டிப்பாகும்ன்னு இருக்குது.
மாறனுக்கு இந்த விஷயம் தெருஞ்சதும் கொஞ்சகூட யோசிக்கல. சட்டுனு சாந்தினியை அண்ணனுக்குப் பேசி முடிங்கப்பான்னு சொல்லிட்டான். எனக்கு உங்க அப்பாருக்கும் தான் சங்கடமா போச்சு. ஏனா உங்க விஷயம் உறுதியா தெரியாட்டியும் ஏதோ ஒருமாதி தெரியும்.
இப்படி மாறன் சொல்லுவானு நினைக்கவே இல்ல கண்ணு நாங்க.
அப்பாவுக்கும் எனக்கும் ஒப்பாம, அண்ணே முன்னாடியே மாறா எம்பொண்ணுக்கு உன்னைத்தானே பிடிக்கும்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்ன சொல்லு இன்னமும் சுரீர்னு வலிக்கிது டி எனக்கு” எனக் கண்களில் வராத கண்ணீரை துடைத்தபடி லேசான விசும்பலுடன் கூற, “அம்மா மாறன்  மாமா என்ன சொன்னாங்க ? மறைக்காம சொல்லுமா ” எனக் கேட்க,
“பாரிஜாதம் மெல்ல தன் கற்பனை வார்த்தைகளை மாறனின் வார்த்தைகளாகப் புனைய தொடங்கினார்.’அத்த, சாந்தினி பிடிக்கும்ங்கிறதுக்காகத் தற்தரத்த என்னோட தலையில கட்ட பாப்பீங்களா ? அப்பா உசுரு இந்த வீடு சொத்துச் சுகம் ஆஸ்தி அந்தஸ்துனு எல்லாத்தையும் விட்டுட்டு என்னை என்னபண்ண சொல்லுறீங்க ?
இந்தப் பொண்ணு இல்லாட்டி வேற பொண்ணு. சாந்தினிக்கு நான் இல்லாட்டி கதிரவன். ஆனா நாம இப்ப வாழுற வாழ்கை போச்சுன்னா திரும்ப வருமா? யார் கொடுப்பா ?’ அப்படினு சொல்லிட்டான் டி. இதுக்குமேல அவன்கிட்ட நானும் உங்க அப்பாரும் கெஞ்சணும்னு சொல்லுறியா ?” எனக் கேட்க,
“அம்மா… நிஜமா மாமா என்ன தற்தரம்னு சொன்னாங்களா?” என நம்பமாட்டாமல் கேட்க,
“சத்தியமா கண்ணு. உன்கிட்ட பொய்ச் சொல்லி நான் என்ன பண்ண போறே. அதுலயும் எனக்குக் கதிரவனைப் பிடிக்கவே பிடிக்காது. ஆனாலும் ஏன் சம்மதிச்சோம் தெரியுமா? கதிரவப் பொம்பளைப்பிள்ளைய மதிக்கத் தெருஞ்சவே. எப்பயும் யாரையும் கஷ்டப்படுத்தணும்னு நினைக்காதவ. எங்களுக்கு அவனைப் பிடிக்காட்டியும், கதிரவ உன்ன நல்லா பார்த்துப்பான். அவன் நியவாதி.
மாறன் நான் வளர்த்த புள்ளதா. இருந்தாலும் அவன் உன்ன இப்பவே இப்படிச் சொல்லுறானா நாளைக்குத் தொட்டதுக்கெல்லாம் குத்தச் சொல்லுவான். அப்புற இந்த வீட்ல பார்வதி அண்ணி நிலமதா உனக்கும்.
உன்ன தூக்கி எரிஞ்சிட்டான். உன்னைக் கட்டிக்கிட்டா காசு பணம் போயிடும்னு பயத்துல உன்ன தூக்கி வீசிட்டான். இப்படிப் பட்ட ஒருதனுக்காகவா உன்னோட அம்மாகிட்ட நீ வழக்காடுற?” என அப்படியும் இப்படியுமாகப் பேசி பேசி அவளைக் கரைத்தார். அதுமட்டுமின்றி மாறனுக்கு எதிரான மனநிலைக்கு அவளை மெல்ல மெல்ல இழுக்க முயன்றார்.
ஆனாலும் காதல் கொண்ட மனமல்லவா…. அஃது ஒருபுறம் ஏங்கவும் செய்தது.
“அம்மா…மாமாகிட்ட ஒருமுறை பேசிப்பார்க்கவா?” எனக் கெஞ்சலாகக் கேட்க, பாரிஜாதம் பொறுமை இழந்தவராகக் கோவத்தின் உச்சிக்கு சென்றார்.
“உனக்கு அறிவில்ல ? உன்ன ஒருத்தன் வேணாம்னு தூக்கி எறிஞ்சிட்டு போயிருக்கான். அவன்ட போய்ப் பேசவானு கேக்குற ? உனக்குத் தெரியுமா இப்ப மாறன் எங்கன்னு ? அவன் உனக்கும் கதிரவனுக்குக் கல்யாணம் பண்ணி வைங்க, நான் இங்க இருந்தா உங்க பொண்ணு அனாவசியமா வந்து என்ன தொல்லை பண்ணுவா. நான் மதுரைக்குக் கிளம்புறே. கல்யாணம் முடுஞ்ச பிறகு வாறே.
அதுவரைக்கும் எக்காரணம் கொண்டு என்கிட்ட அவ பேசவேணாம்னு சொல்லிடுங்க அத்த’ அப்படினு சொல்லிட்டுப் போனான் டி. அவன்ட போய்ப் பேசணும்னு சொல்லுற ? ஏன் பேசணும்னு மட்டும் சொல்லுற, போய்க் காலுல விழுந்து கெஞ்சி பிச்சை கேளு.
ஆனா அப்ப கூட அவன் ஒத்துக்க மாட்டான். ஏனா அவனுக்கு அவனோட அப்பாவும் இந்த ஆஸ்தியும் தான் முக்கியம். நீ இல்ல. முட்டாள் மாதிரி இருக்காத
இதுகுமேலையும் பேசுவேன், அவமானமெல்லா எனக்கு வெகுமாமனும்னு உளறுறதா இருந்தால், நானும் உங்க அப்பாரும் விஷத்தை குடிச்சிட்டுப் போய்ச் சேந்துடுறோம். அப்புறம் போய் அவன் காலுல விழுந்தாலும் சரி இல்ல அவனைக் காதலிச்ச பாவத்துக்குக் குளம் குட்டையில் விழுந்தாலும் சரி.
நீ அசிங்கப்பட்டு நிக்கிறத பாக்குற தெம்பு எனக்கும் இல்ல, உங்க அப்பாவுக்கும் இல்ல.
நீ பண்ணப்போற வேளைக்கு உன்னோட தாத்தா பாட்டிகூட நாண்டுக்கிட்டுதான் தொங்கணும். அவுங்களுக்குப் போன போட்டு நீங்க வளர்த்த வளர்ப்பை பாருங்க. நம்ம கண்ணுமுன்னாடி அவ வாழ்க்கை சீரழியிறத பார்க்க வேணா. எலிமருந்தோ மூட்ட பூச்சி மருந்தோ எங்க கூடச் சேர்ந்தே நீங்களும் குடிச்சிடுங்கனு சொல்லுறேன்” என உணர்ச்சி பொங்க பேச பேச, குழம்பி இருந்த சாந்தினி அப்படியே பாரிஜாதத்தின் சூழ்ச்சியின் வளையில் முழுவதுமாகச் சிக்கி கொண்டாள்.
சாந்தினியின் மன நிலையைக் குழப்பி, குழம்பிய மனதை ரணப்படுத்தி, பயமூட்டி, உணர்ச்சியின் விளிம்பில் நிற்க வைத்து, தற்கொலை மிரட்டல் விடுத்து சாந்தியின் சம்மதத்தைப் பெற்றிருந்தார்.
“சொல்லுடி…சம்மதிக்கிறிய? இல்ல நாங்க நாலுபேரு சமாதியாகட்டுமா? “
“வேணாம் மா. ப்ளீஸ். அப்படிச் சொல்லாத. நான் சம்மதிக்கிறேன்” எனக் கெஞ்சி கதறி கதறி அழ தொடங்கினாள்.
“வேணாம் சாந்தினி அழாதமா. உன்னோட நல்லதுக்குதான் பண்ணுறேன்னு நீ புருஞ்சுப்ப ஒருநாள். தப்பான ஒருத்தன காதலிச்சுட்டியேம்மா. சரி போனது போவட்டும். எதுவும் பார்வதி அத்தைக்கும் கதிரவனுக்குத் தெரியாது.
அப்படியே நடக்கட்டும்.
நீ வேற கிறுக்கு தனமா யோசிச்சு அந்த மாறன் பையன்கிட்ட பேச நினைக்காத. ஏனா லிங்க அண்ணே, மாறன் பேசுனா மாறான கொள்ளக் கூடத் தயங்க மாட்டேன்னு சொல்லிருக்காரு. அதுனால அவனு கட்டாயம் பேச மாட்டான்.கவனமா இரு. விடுஞ்சா கல்யாணம்” எனக் கூறி செல்ல, நிற்கதியாய் விட்டதைப் போலத் தனித்து உணர்ந்தாள்.
அவளால் எதையும் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அன்னை சொல்வது ஒன்றொன்று தொடர்பு இல்லாததைப் போலவும் அவளுக்குத் தோன்றியது ஒன்றொன்று பின்னி பிணைந்து தொடர்புடன் இருப்பது போலவும் தோன்றியது.
எது எப்படியோ மாறன் தன்னைத் தரித்திரம் என்று கூறியது அவளை ஆழமாகக் காயப்படுத்தியிருந்தது.
அதைவிடத் தன் சொந்தங்கள் நால்வரும் உயிரை மாய்த்துக்கொள்ளுவார்கள் என அன்னை கூறியதும் அவளை உயிரோடு கொன்றது. மனதை மெல்ல மெல்ல திடப்படுத்த முயன்றாள். ஆனால் அஃது அவளால் முடியவில்லை. நடப்பதை தவிர்க்கவோ ஏற்கவோ முடியாமல் ஒரு நடைப்பிணமாக மாறிப்போனாள் அந்த மணப்பெண். இறைவனின் சித்தம் என்ற ஏகாந்தத்தை ஏற்றது போல அவள் நிலை இருந்தது.
பெற்ற மகளையே ஏமாற்றிவிட்டுக் களிப்பில் வெளிவர, மச்சக்காளை லிங்கத்திடம் ஏதோ கூறிக்கொண்டிருக்க, “என்னங்க ? அண்ணாகிட்ட என்னத்த பேசுறீங்க ?” எனக் கேட்டபடி அவர்களின் அருகில் வந்து நின்றார்.
“எல்லாம் கல்யாணத்த பத்திதான். தங்கச்சி மாப்பிள்ளைக்கிட்ட சம்மதம் வாங்கிருச்சு. ஆனா நாளைக்கே கல்யாணம்ங்குறத எப்படி மாப்பிள்ளைக்கிட்ட சொல்லி ஒத்துக்க வைக்கணு யோசனையா இருக்கு… அவரு ஒத்துக்கிட்ட பொறவுதான் ஊருக்குள்ள சொல்லணும். இப்ப வர பெரிய குடும்பத்து பூஜ விஷேஷம் கோவில்ல நாளைக்கு நடக்கப் போகுதுனு தான் சொல்லிருக்கோம்.
அதா என்ன சொல்லலாம்னு…..” என ஏதும் அறியாதவர் போல அப்போது தான் சிந்திப்பது போல மச்சக்காளை பேச, பாரிஜாதமோ நடிப்பில் அவரின் துணைவியார் அவரைவிடச் சிறந்தவர் என்பதை நிரூபிக்கும் விதமாய், “இதெல்லாம் ஒரு விஷயமா… டக்குனு சோலிய முடிக்கிறேன் பாருங்க” எனக் கூறிவிவிட்டு, பார்வதியை அழைத்தார்.
அழைத்தவர், “அண்ணி எம்புட்டோ பண்ணிடீங்க. மாப்பிள்ளை நாளைக்குத்தான் கல்யாணம்னு ஏத்துக்கணும். அதுக்குக் கடைசியா ஒன்னு பண்ணுங்களே. எல்லாம் அண்ணனோட நல்லதுக்காகத்தான்”
“என்ன பண்ணணும் பாரிஜாதம்” என யோசனையோடு பார்வதி கேட்க,
லேசாகத் தயங்கிவிட்டு, இல்லை தயங்குவதைப் போலப் பாவனைச் செய்துவிட்டு, “தப்பா எடுத்துக்காதீங்க அண்ணி. உங்களுக்குத் திடிர்னு உடம்பு சுகமில்லை. நெஞ்சு வலிக்கிது அப்படி இப்படினு சொல்லி நாளைக்குக் கல்யாணத்துக்குச் சம்மதம் வாங்கணும். அம்புட்டுதே” எனக் கூற,
பார்வதியோ, “இல்ல மாட்டேன் அண்ணி. நான் பொய்ச் சொல்ல மாட்டேன்” என உறுதியாகக் கூறிவிட, லிங்கம் மச்சக்காளை, பாரிஜாதம் என அனைவரும் ஒரு திகத்தைப் பார்வை பார்த்தனர்.
பாரிஜாதம் மட்டும், “அப்புறம் எப்படி ?” எனக் கேட்கவர, அவரைத் தடுத்த பார்வதி, “என்னோட புள்ள எனக்கு வாக்கு கொடுத்துருக்கான். நான் சொல்லுற பொண்ண நான் சொல்லுற தேதில கட்டிக்கிட்டு இந்த வீட்டுலையே வாழுறேன்னு. அதுனால வேற எதுவும் வேணாம்.
எம்புள்ள எங்க அப்பாவ போல. சொன்ன சொல்ல மாறமாட்டான்” எனக் கூறிக்கொண்டிருக்கும் போதே கதிரவன், “சரியா சொன்னீங்க மா…” எனக் கூறியபடி வாயிலில் வந்து நின்றான்.
“வாங்க மாப்பிள்ளை….” என மச்சக்காளையும் பாரிஜாதாமும் அளவுக்கு அதிகமான மரியாதையைக் காட்ட, கதிரவனுக்குத் தான் விளங்கவில்லை. இருந்தும் ஒரு தலை அசைப்புடன், லேசாகத் தலையை வெளியே நீட்டி மழை எதுவும் வருகின்றதா என நோட்டம் விட, அவனது கேலி பாரிஜாதத்திற்குப் புரிந்து அசடு வழிந்தார்.
“அம்மா என்ன மா? எதுக்கு வர சொன்னீங்க ? கூப்டீங்கனு முத்து வந்து சொல்லிட்டுப் போனான். பாண்டியும் சக்கரையும் வேற மதுரைக்கு அனுப்பிருக்கே. ஓண்டியா நான் மட்டும் தான் பண்ணை வேலையெல்லாம் பாத்துட்டு இருக்கேன். நிறைய வேல கிடக்குமா.
எதுவும் அவசர சோலியா?” என அவன் பாட்டிற்குப் பார்வதியிடம் கேட்க, பார்வதியோ அவன் கேட்ட கேள்விகளைத் தவிர்த்தபடி, “நீ வாக்கு கொடுத்தா மாறமாட்டானு நான் இவுங்ககிட்ட சொன்னது சரிதனையா ?” எனக் கேட்க, “இதென்னமா கேள்வி. ? நான் உள்ள நுழையபோது அத தானே சொல்லிட்டு இருந்தீங்க. அதுக்குத்தானே சரியா சொன்னீங்கன்னு சொன்னேன்” எனக் கூற, பார்வதி ஒரு சில நொடிகள் மௌனமானார்.
பிறகு தீர்க்கமான பார்வையுடன் தீனமான குரலில், “அம்மா உனக்கு நல்லது தான் செய்வேன்னு நம்புறல?” எனக் கேட்க,
“உன்ன தவிர வேற யாரும் எனக்கு நல்லது செஞ்சிட முடியாது மா. இப்ப எதுக்கு இந்தக் கேள்வி ? இத கேட்க தான் வர சொன்னீயே ?”
“இலை இதுக்காக வர சொல்லல. உனக்கு நாளைக்குக் கல்யாணம்னு சொல்லுறதுக்காக வர சொன்னேன். பொண்ணு நம்ம சாந்தினி. கோவில்ல காலைல பத்தரைல இருந்து பதினொன்றை வர உள்ள முஹூர்த்தம்.
கல்யாணம் முடுஞ்ச கையோட நீ உன்னோட வீட்டுக்கு நிரந்தரமா வந்திடற. இதுதான் என்னோட முடிவு உன்னோட கல்யாணத்துல” என உறுதியான குரலில் கொஞ்சமும் பிசிறில்லாமல் சொன்ன தோரணை லிங்கத்திற்கு ஆச்சர்யமாக இருந்தது.
பார்வதினால இப்படியெல்லாம் கூடப் பேச முடியுமா என ? அதே எண்ணம் தான் அங்கிருந்த அனைவரது மனதிலும்.
கதிரவன் கண்களை இடுக்கி தாயை ஒருமுறை கூர்ந்து கவனித்தான். பிறகு என்ன நினைத்தான் என்பதை யாராலும் அனுமானிக்க முடியவில்லை. அவன், “சரிங்கமா. நான் தான் வாக்கு கொடுத்துட்டேனே. இனி நீ எப்போவும் இதே நிமிர்வோட இருந்தா எனக்கு வேப்பங்காய் கூடத் தித்திக்கும்” எனக் கூறிவிட்டு செல்ல, பார்வதி உட்பட அனைவர்க்கும் அவனின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
பிடிக்காத கல்யாணத்திற்குச் சம்மதம் என்கிறானா ? அல்லது எதிர்பாரா கல்யாணத்திற்குச் சம்மதம் என்கிறானா ? வாழ்வதற்காகச் சம்மதம் சொன்னானா ? அல்லது வாக்குக்காகச் சம்மதம் சொன்னானா ? இனம் காண முடியவில்லை. எப்படியோ சம்மதம் தந்துவிட்டான். அதுவே போதும் என்ற நிலைமைதான்.
அடுத்து வேலைகள் புயலின் வேகத்தில் நடைபெற்றன.
ஊர் முழுவதும் செய்தி காட்டுத் தீயாகப் பரவியது. ஏதோ கிரகப் பலன்கள் காரணம். நாளைவிட்டால் பெரியவீட்டில் இன்னும் பல வருடங்களுக்குச் சுப நிகழ்ச்சி நடைபெறாது. அதனால் நாளையே பெரியவீட்டின் முதல் கல்யாணத்தை நடத்தவிருப்பதாக ஆட்களின் மூலமும் கைபேசியின் வாயிலாகவும் அழைப்பு விடுவிக்கப்பட்டது.
மணமகன் கதிரவன் மணமகள் சாந்தினி….
சக்கரைக்கும் பாண்டிக்கும் இந்த விஷயம் தெரியப்படுத்த படவில்லை. சொல்லவேண்டியவன் கதிரவன் தான். ஆனால் அவன் சொல்ல கூடிய நிலையில் இல்லவே இல்லை. அம்மாவிடம் சம்மதம் சொல்லிவிட்டான் ஒழிய சாந்தினியை மனைவியாக அவனால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை.
ஏனோ மனது அவனுக்குப் பாரமாக இருந்தது. எந்த ஒரு காரணமும் இல்லாமல் இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று அவன் மனது அடித்துக்கொண்டது. சாந்தினி உனக்கானவள் இல்லையென்றும், அவளுக்கானவன் தான் இல்லையென்றும் மீண்டும் மீண்டும் அவனுள் எண்ணம் தோன்றியது. அதனால் எப்படியும் அவர்கள் வந்துவிடுவார்கள். வந்து தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டிருந்தான்.
கந்தசாமியோ முருகேசனிடம் இதைப்பற்றி மறுநாள் காலை நேரில் சென்று பேசிக்கொள்ளலாம், கைபேசியில் பேசும் விஷயம் அல்ல என முடிவெடுத்திருந்தார்.
மணமகள் சாந்தினி என அறிந்ததும் மாறனின் நண்பன் ஒருவன் வேகமாக மாறனுக்கு அழைக்க, மாறனின் கைபேசி தொடர்ந்து சிணுங்கி சிணுங்கி நின்றதே ஒழிய மாறன் எடுத்தபாடில்லை. அவனின் துரதிர்ஷ்டம் அவன் இரவு காட்சிக்குச் சென்றிருக்கக் கைபேசியின் சத்தத்தைப் பூஜ்யம் செய்திருந்தான். அதுனால் வந்த அழைப்புகள் கேட்பாரின்றி அடித்து ஓய்ந்திருந்தன.
ஒருவழியாக இரவு மணி ஒன்றுக்கு மேலாக அவன் படமுடிந்து வர, மீண்டும் அவனுடைய நண்பன் அழைக்க இம்முறை தற்செயலாக அழைப்பை பார்த்துவிட்ட மாறன் எடுத்து காதுக்குக் கொடுக்க, அவனின் நண்பன் சொன்ன செய்தியில் மாறன் ஸ்தம்பித்தான்.

Advertisement