Advertisement

தாயும் மகனும், தந்தையும் மகளும் – 18
பார்வதி போட்டதைப் போட்டபடி கிளம்ப, பாரிஜாதம் பார்வதியின் வழியை மறித்து நின்றிருந்தார்.
“அண்ணி, கதிரவண்ட பேச போறீங்களா?”
“ஆமா அண்ணி”
“சந்தோசம். ஆனா அவனை நான் பண்ணின கொடும கொஞ்சமா நஞ்சமா, இப்ப கூட அண்ணனுக்காத்தான் ஒத்துக்கிட்டேன். நான் பொய் சொல்ல விரும்பல. ஆனா சத்தியமா சொல்லுறே, கல்யாணம் கட்டிகிட்ட புறவு கதிரவன் என்னோட ஒரே மாப்பிள்ளை ஆகிடுவான்….” எனக் கூறியவர் ஓர் இடைவெளிவிட்டு, “இல்ல இல்ல மாப்பிளை ஆகிடுவாரு. மரியாதை குடுக்கணும்ல. இப்ப நான் நேர விஷயத்துக்கு வரேன்.
அண்ணனுக்காக ஒத்துக்கிட்டாலும், இப்ப என்னோட பொண்ணு மனசுலயும் உங்க மகன்தான் இருக்காரு. கதிரவனுக்குச் சாந்தினி மேல அபிப்ராயம் இல்ல. அத என்னோட பொன்னே சொல்லிட்டாள். எப்ப என்னோட பெருத்த கவலை என்னனா என்னோட மவ அப்டிங்கிறதையே காரணம் காட்டி சாந்தினியை மாப்பிள்ளை வேணாம்னு சொல்லிட்டா, அவ மனசு ஒடஞ்சு போயிருவா.
நான் உங்களுக்கு எம்புட்டோ கெட்டது பண்ணிருக்கேன். ஆனா அதெல்லாம் உங்களுக்குப் பண்ணனும்னு பண்ணல. எங்க எனக்கும் என்னோட அண்ணனுக்கும் உள்ள உறவுல நீங்க விரிசலை கொண்டுவந்துடுவீங்களோனு பயந்து அப்படி இப்படி நான் செஞ்ச காரியம் உங்களுக்குக் கஷ்டத்தைக் கொடுத்திருச்சு.
என்ன மன்னிச்சிடுங்க அண்ணி.
அதுக்காக என்னோட பொண்ணு வாழ்க்கையில எதுவும் பாதகமான முடிவு எடுத்துடாதீங்க” என லேசாக வராத கண்ணீரை துடைத்தபடி கேட்க, பாரிஜாதத்தின் வார்த்தைகளை உண்மையென்று அப்படியே நம்பிப்போனார் பார்வதி.
“இல்ல அண்ணீ, அப்படியெல்லாம் இல்ல. நீங்க இத்தனை வருசமா எனக்குப் பண்ணுனது சரி இல்ல தான்” எனப் பார்வதி கூற,
பாரிஜாதமோ மனதில், “இனிமேல் நான் உனக்குப் பண்ண போறதும் சரி இல்லத்தாண்டி. இந்தக் கல்யாணம் மட்டும் முடியட்டும் கவனிச்சுக்கிறேன்” என நினைக்க,
பார்வதியோ வெள்ளந்தியாக, “ஆனா அத மனசுல வச்சிட்டு நான் சாந்தினியை பார்க்க மாட்டேன். என்னோட மருமகளுக்காகவாச்சும் நீங்க பண்ணினது மறந்திடறேன் அண்ணி” எனக் கூற,
பாரிஜாதமோ மனதில், “நீ மறந்தா என்ன ? மறக்காட்டி எனக்கென்ன ? பேசு டி பேசு. எவ்ளோ பேசணுமோ பேசிக்கோ. எல்லாம் உன்னோட அப்பாரு பண்ணின வேல. நீ பேசுறதெல்லாம் கேட்கவேண்டிய தல எழுத்து” என மனதில் நினைத்துக்கொள்ள, பார்வதி தொடர்ந்தார்.
“உங்க பொண்ணுன்னு கதிரவன்கிட்ட சொல்லாம சம்மதம் வாங்குறேன். தாலி கட்டுறப்ப தெரிஞ்சா போதும். என்னோட மகன் என்னோட பேச்ச மீற மாட்டான்” என உறுதியாகக் கூற,
“அது போதும் அண்ணி. அப்புறம் இன்னொரு விஷயம். நாம கல்யாணத்துக்குத் தேதி குறிக்கனும். அவரு அந்தப் பணிகர்கிட்ட தேதி வாங்குனாரு. நாளைகழுச்சு நல்ல மூகூர்த்தமா. அன்னைக்கே கோவில்ல வச்சு கல்யாணத்த முடிச்சிடலாம். அவரு அண்ணன்கிட்டயும் பேசிட்டாரு. அண்ணனோட உசுரு சம்மந்தப்பட்ட விஷயம்ல. நாம தள்ளி போட வேணாம் அண்ணி.
ஒவ்வொரு நிமிஷமும் எனக்குப் பக்கு பக்குனு நெஞ்சு அடிச்சிக்கிது” எனப் பாரிஜாதம் படபடப்பாகக் கூற,
“அதுக்குள்ள எல்லா ஏற்பாடும் பண்ணிடலாமா?” எனச் சந்தேகமாகப் பார்வதி கேட்டார்.
“எல்லாம் பண்ணிடலாம் அண்ணி. என்னோட வீட்டுக்காரு தான் இருகாருல. நம்ம சொந்த பந்தம் எல்லாம் இந்த ஊரும் பக்கத்து ஊரும் தானே. இரவைக்குப் போன போட்ட கூட வந்துடுவாங்க”
“இல்ல நான் சொந்தக்காரங்களுக்காகச் சொல்லல. நம்ம மாறன் மதுரைக்குல போயிருக்கான். அவன் இல்லாம அவனோட அண்ணே கல்யாணம் எப்படி ?”
“அயோ காரியத்தைக் கெடுக்கப் பார்த்தீங்களே. மாறன் வந்தா குடிகெட்டுச்சு” எனச் சட்டென்று வாய் விட்டார் பாரிஜாதம்.
“என்ன சொல்றீங்க அண்ணி?” எனச் சந்தேகச் சாயலில் பார்வதி வினவ, சட்டென்று சுதாரித்துக்கொண்ட பாரிஜாதம் அழகாகப் பொய்களை அடுக்கத் தொடங்கினார்.
இலேசான தடுமாற்றத்துடன், “என்ன அண்ணி தெரியாத போலக் கேக்குறீங்க? மாறனுக்குக் கதிரவனைப் பிடிக்காது. கதிரவனுக்கு அண்ணனே கல்யாணம் பண்ணிவைக்கிறாங்கனு தெரிஞ்சா அவனுக்குக் கதிரவன் மேல இன்னும் வெறுப்பு கூடும்.
ஏற்கனவே நீங்க மூத்த பையன் மேல தான் பாசம் வச்சுருக்கீங்கனு தப்பா நினைக்கிறான். இப்ப அண்ணையும் சேர்த்திடுவான். அதோட நீங்க கல்யாணத்துல நிம்மதியா சந்தோசமா சுத்த கூட முடியாது. அது மாறான பாதிக்கும்.
அதோட அவன் இன்னும் உலகம் தெரியாத பையன். கதிரவனால தான் அண்ணனோட உசுருக்கு ஆபத்துனு ஜாதகம் இருக்குனு சொன்னா,  அவனோட மனசுல பதிஞ்சு போய்டும். நாளைக்குக் கல்யாணம் முடுஞ்சு இங்கவந்து கதிரவன் இருக்கறப்ப, அண்ணனுக்குத் தலைவலினா கூட மாறன் மனசுல கதிரவனோட ஜாதகம் தான் வந்து நிற்கும்.
அதுவும் பிளவு உண்டாக்கிப்புடும்.
அதோட மாறன் மதுரைக்கு ரொம்பப் பெரிய கம்பெனிக்கு போயிருக்கானாமே. அத ஏன் அண்ணி கெடுக்கணும். கல்யாணத்த முடிப்போம். மாறன் நான் தூக்கி வளர்த்த புள்ள. நான் என்னோட மாப்பிள்ளைக்கும் என்னோட பெறாத பிள்ளைக்கும் எந்த மனஸ்தாபமும் வராம பாத்துக்கிறேன்.
இப்போதைக்கு நீங்க எதுவும் மாறன்கிட்ட சொல்லிடாதீங்க. ஏற்கனவே இரெண்டு நாளுல கல்யாணத்துக்கு ஊருல இருக்கவங்ககிட்ட என்ன சாக்கு சொல்ல போறோம்னு தெரில. இதுல மாறன் வேற வந்தா சமாளிக்க முடியாது.
புருஞ்சுக்கோங்க அண்ணீ” என உருக்கமாகக் கூற, எதையும் பெரிதாகக் கூர்ந்து கவனிக்காத பார்வதி, வஞ்சகம் சூது அறியாத பார்வதி, பாரிஜாதத்தின் வார்த்தைகளை அப்படியே நம்பினார்.
“சரிங்க அண்ணீ” எனக் கூறியபடி பார்வதி நகரப்போக, மீண்டும் அவரைத் தடுத்த பாரிஜாதம், “அண்ணி, இன்னோரு முக்கியமான விஷயம். சம்மதத்தை இன்னைக்கு வாங்குங்க. கல்யாணம்னு உடனே சொல்ல வேண்டாம். அதுக்கு மாப்பிள்ளையும் ஒத்துக்க மாட்டாரு. அதுமட்டுமில்ல, சாந்தினியை நாங்க கட்டித்தரத்துக்கும் சாந்தினி சம்மதம் சொன்னதுக்குக் காரணம் அண்ணன் தான். மத்தபடி அவரு மேல எங்களுக்கு மரியாதை மதிப்பு இல்லனு யோசுச்சிடுவாரு.
மாப்பிள்ளை கற்பூரம் மாதிரி. அதுனால சம்மதத்தை வாங்கிட்டு வந்துடுங்க. நாளைக்கு இரவைக்கு மாப்பிளையை ஒத்துக்க வைக்க வழி செய்வோம். இப்போதைக்கு ஊருக்குள்ளேயும், கல்யாணம்னு லாம் சொல்லல. பெரிய வீடு விசேஷம்னு தான் சொல்லி வேலைய ஆரம்பிச்சிருக்காங்க.
ஊர்ல இருக்கவங்களுக்கெல்லாம் இந்த ஜாதகம் ஜோசியம்னு எதுவும் தெரிய வேணாம். நம்ம வீட்டு புள்ளைய எதாவது சொல்லிடுவாங்க. இந்தப் பாரிஜாதத்தோட மாப்பிள்ளையை ஒரு பைய ஒரு வார்த்த தப்பா சொல்லக்கூடாது. அதுனால நாளைக்குத்தான் ஆள விட்டு எல்லாருக்கும் சொல்ல போறோம்.
ஒருவகையில இதுவும் அவசர கல்யாணம் போலத்தானே.
இப்ப மாப்பிள்ளைக்கிட்ட சம்மதம்னு ஒரு வார்த்தையை வாங்கிட்டு வாங்க. நீங்க கை காட்டற பொண்ண பொண்டாட்டி ஆக்கிக்கிறேன் மாப்புள்ள சொன்னாமட்டும் தான் எனக்கு உசுரே வரும்” எனக் கூற, பார்வதிக்கு நிம்மதியாகக் கூட இருந்தது.
இத்தனை ஆண்டுகளாகக் கதிரவனைத் தூற்றியவரே இன்று தன் மாப்பிளையென்று உறவு கொண்டாடி, வேறு யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்று பாரிஜாதம் கூறியது பார்வதிக்கு இதமாக இருந்தது.
ஆனால் தான் காண்பது பசு இல்லை பசுத்தோல் போர்த்திய புலியென்று பார்வதி உணரவே இல்லை. பாரிஜாதமும் மச்சக்காளையும் ஊரில் திருமணம் என்று உடனே அறிவிக்காததற்குக் காரணம் இருக்கவே செய்தது. கல்யாணம் என்றால் கிராமத்தில் அப்படி இப்படியென்று விசாரித்து எப்படியும் இந்த ஜாதக விஷயத்தை நூல் பிடித்து விடுவர். அதோடு விடாமல் மேலும் தூண்டி துருவி, வேறு ஜோசியர் வேறு பரிகாரம் என்று எதை எதையாவது கிளறி காரியத்தை அடியோடு அழித்து விடுவார்கள். அதுனால் திருமணத்திற்கு முதல் நாள் அனைவர்க்கும் கூறினால் போதும் என்று முன்கூட்டியே தெளிவாகத் திட்டம் தீட்டியிருந்தனர். அதோடு மாறனின் நண்பர்களுக்குத் தெரிந்து, அவர்கள் மூலம் மாறனுக்குச் செய்தி போய்விட்டதென்றாலும் தங்களின் திட்டம் தவிடுபொடி என்று உணர்ந்தே செயல்பட்டனர்.
அதையே அச்சுப் பிசங்காமல் மச்சக்காளையும் பாரிஜாதமும் செய்தும் கொண்டிருந்தனர்.
சாந்தினியை உடனடியாக ஊருக்கு வரும்படியும் இப்போதைக்குத் தாத்தா பாட்டியிடம் எதுவும் கூறவேண்டாமென்றும், கூறி வரவழைத்தனர். மாப்பிள்ளையும் இங்கதா இருக்காரு என்ற பாரிஜாதத்தின் வார்த்தைகள் சாந்தினிக்கு மாறன் அங்கிருக்கிறான் என்ற எண்ணத்தைத் தந்தது. அவனைக் காண போகின்றோம் என்ற ஆவல் தோன்றவே, உற்சாகமாக வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் புறப்பட்டிருந்தாள்.
அவளிடம் கைபேசி இல்லை. விடுதியிலிருந்து எப்போதாவது அழைத்துப் பேசுவாள். அவ்வளவே. இன்று அதுவும் பேசவில்லை. நேரிலே காண போகின்றோம் என்ற எண்ணம் ஒரு புறமும் வீட்டில் சம்மதம் கிடைத்துவிட்டதால் மாறனை ஏதோ புதிதாகப் பார்க்க போகின்ற பரபரப்பு ஒருபுறமும் எனச் சந்தோஷமாகவே புறப்பட்டாள்.
*
சக்கரையின் கடையில் அவனைத் தேடிவிட்டு நேராகத் தோப்பு வீட்டிற்கு மகனை தேடி வந்திருந்த பார்வதி அங்கே பார்த்ததோ சக்கரையையும் பாண்டியையும் மட்டுமே.
“சக்கர, பாண்டி உங்கள கடையில தேடிட்டு வாறே. நீங்க இங்னதான் இருக்கீங்களா ? ரொம்ப முக்கியமான விஷயமா வந்தேன். ஆமா கதிரவ எங்க ?” எனக் கேட்டபடியே அவர்கள் அருகினில் அமர,
“எங்கள தேடுனீங்களா? எதுக்கு அம்மா ? கதிரவக் கடலுக்குப் போயிருக்கான். போய் ரொம்ப நேரமாச்சு. அதுனால எப்பவேணுனாலும் வந்திடுவா. சரி எதுக்குத் தேடுனீங்க சொல்லுங்க ?”
“ஏண்டா இரெண்டுபேருக்கும் கதிரவனை அந்தப் புள்ள விரும்புறது தெரியும்தானே? இவன கட்டிக்க ஆசை படறது தெருஞ்சும் ஏண்டா கமுக்கமா இருந்தீங்க ? கதிரவன்கிட்டத்தான் சொல்லல. என்கிட்டையாவது சொல்லிருக்கலாம்ல?” எனப் பார்வதி கூற, சக்கரையும் பாண்டியும் ஒருவுரை ஒருவர் சந்தேகமாகப் பார்த்தபடி, சற்று நிதானித்து,
“அம்மா நீங்க யாரை சொல்லுறீங்க?” என வினவ,
அவரோ, “ஒன்னும் தெரியாத போல நடிக்காதீங்கடா. அந்தப் புள்ள சட்ட கொடுத்தது உனக்குத் தெரியும்தானே ?” எனப் பெயரை சொல்லாமல் பார்வதி குறிப்பிட, சக்கரை அந்தப் பெண் கனல்விழி என எண்ணி நம்ப முடியாத சந்தோசத்தை முகத்தில் பிரதிபலித்தான்.
பார்வதியோ அவர்களிடம் பெயர் சொல்லாமல் பேசியதற்குக் காரணம், அனைத்தும் தெரிந்துகொண்டே சக்கரையும் பாண்டியும் தன்னிடம் மறைக்க முயல்கிறார்கள் என்று எண்ணியே அந்தச் சட்டை விஷயத்தை இப்போது எடுத்திருந்தார். அதற்குப் பொருள், தங்களுக்கு எதுவும் தெரியாது என்று சாதிக்காதீர்கள், உங்களுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும் என எடுத்துரைக்கவே அவர் அப்படிச் செய்திருந்தார். இதற்குப் பதிலாகச் சாந்தினி என்ற பெயரை அவர் உச்சரித்திருந்தால் பின்னால் நடக்கவிருக்கும் விபரீதங்களையும் விபத்துக்களையும் தடுத்திருக்கலாமோ என்னவோ.
“அது வந்து…உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனப் பாண்டி கேட்க,
“நான் உங்கள கேள்விகேட்டா நீங்க என்கிட்ட மறுபடியும் கேக்குறீங்களா? ஏண்டா கதிரவனுக்கு ஒரு நல்லது நடக்குதுனா, குறுக்கவா நிக்கபோறே? என்னால தரமுடியாத பாசத்த, அவனை விரும்பி வேணும்னு வர பொண்ணு நிச்சயமா தருவாடா.
இப்படி எம்மவன நேசிக்கிற ஒருத்தி கிடைக்க நான்தான் கொடுத்து வச்சிருக்கணும்” என மனமுருகி பேச,
சக்கரையோ, “ஆமா அம்மா! நீங்க ரொம்பச் சரியாதான் சொல்லுறீங்க. அந்தப் புள்ளைக்குக் கதிரவனா உசுரு. ஹாஸ்டல்ல இருந்து வீட்டுக்கு கூடப் போகாம ஏதோ ஒரு சாக்கு வச்சு இவன பார்க்க வந்திடும்.
ஆனா என்ன அம்புட்டு பிரியத்தயும் நெஞ்சுக்குள்ளையே வச்சுருக்கு. கதிரவன்கிட்ட இதுவரைக்கும் சொல்லவே இல்ல” எனக் கூற, பார்வதியோ, “அப்படியே சொல்லிட்டாலும் உன்னோட கூட்டாளி அப்படியே கல்யாணம் பண்ணிப்பான் பாரு. இத பெரியவங்கதான் பண்ணனும்.
கதிரவனை மொதல்ல கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்ல வைக்கணும். அவன் மட்டும் சம்மதம்னு ஒரு வார்த்தை சொல்லட்டும் அது போதும். என்ன தான் தெருஞ்ச பொண்ணுனாலும் இப்ப என்னோட மருமகளா பாக்குறதுக்கு ரொம்ப ஆசையா இருக்கு.
எப்ப இங்க வருவாளோ ?” எனச் சந்தோசமாகக் கூற, அந்த நேரம் சரியாகக் கதிரவன் உள் நுழைந்தான்.
“என்ன மா? இந்த நேரத்துல வந்துருக்கீங்க ? வந்து ரொம்ப நேரமாச்சா?” எனக் கேள்வியோடு அன்னையின் அருகில் வந்து அவரின் மடியில் தலை வைத்து படுத்தபடி கேட்க , சட்டென்று பார்வதிக்குச் சந்தோசம் மறைந்து கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
“இப்ப எதுக்கு மா கண்ணு கலங்குற?” எனச் சற்றே எரிச்சலுடன் கதிரவன் அவரின் மடியிலிருந்து எழுந்து எரிச்சலுடன் வினவ, “உன்கூட இருக்க வேண்டிய சமயத்துல இந்த அம்மா கோழையா இருந்துட்டேனேன்னுதான் கதிரூ. இப்ப நீ கடலுக்குப் போய்ட்டுவரது கூட, தனியா இருக்கறப்ப அத மறக்க போயிட்டு போயிட்டு வர ஆரம்பிச்சது தான? எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சியா ? இல்ல புரியாதுனு நினைச்சியா ? எல்லாத்துக்கும் நான் தான் காரனும். அம்மா இருந்தும் ஏதோ அம்மா இல்லாதவனைப் போலத்தானய்யா இத்தனை வருசமா இருக்க” எனக் கூறி மீண்டும் கண்கலங்க,
“ஐயோ அம்மா அழாதீங்க. எனக்குச் சுத்தமா பிடிக்கவே இல்ல. தயவு பண்ணி அழாதீங்க”
“இல்ல கதிரவ, என்னால முடியல. என்ன சமாதான சொன்னாலும் நான் பாவி தான்” என விசும்பல் கூட, அவரின் கலங்கிய கண்கள், இத்தனை வருடமாக அனுபவித்துக்கொண்டிருக்கும் துயரத்தை அப்பட்டமாகக் காட்ட, கதிரவனால் அவன் அன்னை அழுவதைக் காண சகிக்கவே முடியவில்லை.
“அம்மா எனக்கு ஒண்ணுமில்ல. நான் எதையும் இழக்கவுமில்லை, எதையும் எதிர்பார்க்கவும் இல்ல. அதுனால வீணா மனசைப்போட்டு கொழப்பிக்காதீங்க”
“நீ அப்படிச் சொல்றது உன்னோட பெருந்தன்மை கதிர். ஆனா உண்மையென்னனா மாறனுக்குப் பண்ணின நியாயத்தை உனக்குப் பண்ணலங்குறது தான் நிஜமான விஷயம்.  என்ன உசுரோட கொல்லுது.
உனக்குத் துணையா இருக்க வேண்டிய நேரத்துல, இதோ இப்போ என்னோட மடில தலைவச்சு படுத்தியே, அது போல நீ நினைச்ச நேரம் உன்ன தூங்க வைக்கவோ உனக்குச் சாப்பாடு கொடுக்கவோ நான் பக்கத்துல இல்லவே இல்லையே.
உனக்கே உனக்காகன்னு மட்டும் நான் இருக்கலியே” எனக் கூறியபடி மீண்டும் முந்தானையால் வாயை மூடியபடி அழுதார். அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் வலி நிறைந்து ஒலித்தது. ஏதேதோ பேசவேண்டும் என்று சந்தோசமாக வந்த மன நிலை தற்போது பார்வதிக்கு முற்றிலும் மாறியிருந்தது.
என்ன முயன்றும் அவருடைய செயலுக்கான காரணம் நியாயப்படுத்தப்படாது என்றே நம்பினார். என்ன காரணம் இருந்தாலும் குற்றம் குற்றமே என்று உள்ளம் குமுறினார். அதனால் அவரையே அறியாமல் கட்டுப்படுத்த முடியாமல் வெடித்து அழ தொடங்கினார்.
சக்கரைக்கும் பாண்டிக்கும் நடப்பதை பார்க்க பாரமாக இருந்தது.
கதிரவன் இறுக்கமாகவும் அதே நேரம் தன்னுடைய அன்னையின் கண்ணீரை துடைக்க உடனடியாக ஏதாவது செய்யத் துடிக்கும் மகனாகவும் துடிதுடித்தான்.
“அம்மா இங்க பாரு… என்ன பாரு….” என அழுகின்றவரை தேற்றியபடி அவரின் கண்களைத் துடைத்துவிட்டவன், “இப்ப என்னமா ஆச்சு? எதுக்கு இப்படி அழற ?”
“ஒண்ணுமில்ல கதிரவா. எல்லா என்னோட பாவம். எதுவும் எப்பயும் மாறாது. உன்ன தனியா விட்ட பாவம் நான் சாகுறவரைக்கும் என்ன கொல்லும்” என விரக்தியோடு சிறு சிரிப்புடன் அவர் கூற, கதிரவன் அந்த நொடி முழுதாக உடைந்தான்.
அவன் அந்த வீட்டைவிட்டு வெளியேறிய போதுகூட இத்தனை வேதனை படவில்லை. தினம் தன்னை உதாசீனப்படுத்தும் இடத்திலிருந்து வெளியேறி மரியாதையான சூழலை உருவாக்கி கொள்ளும் புத்துணர்வுடனே வந்தான். ஆனால் இன்று அவனின் அன்னையின் மனம் எத்தனை துன்பத்தை இத்தனை ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றது எனத் தெரிந்த போது, அவருடைய விரக்தியான வார்த்தையிலும், தனக்காகக் கண்ணீரை துடைத்துப் புன்னகை பூத்த முகத்தைப் பார்த்த கதிரவனால் அதற்குமேல் எதையுமே யோசிக்கவே முடியவில்லை.
அப்படியே ஸ்தம்பித்தான்.
அந்த விரக்தி புன்முறுவல், தன் தாயின் உதட்டில் தவழும் நிம்மதி முறுவலாக மாறவேண்டும் என்ற எண்ணம் கொண்டான். இல்லை மாற்றியே தீரவேண்டும் என்று முடுவுகட்டினான்.
“அம்மா போதும். நீ இப்படிப் பேசாதா. இனியொருமுறை நீ இப்படி அழவே கூடாது. நீ அழறத நான் பார்க்கவே கூடாது. அதுக்கு நான் என்ன செய்யணும் சொல்லு ? ஒருவேளை நான் அந்த வீட்டுக்கு வரணுமா ? அப்படினாலும் சொல்லு. உன்னோட கண்ணீருக்கு முன்னாடி, அங்க நான் படுற அவமானம் எனக்குப் பெருசு இல்ல.
என்ன பண்ணனும்னு சொல்லு. ” என உறுதியுடன் கேட்க, ஒரு சில நிமிடங்கள் பார்வதி சிந்தனையில் ஆழ்ந்தார். அவர் இதை நினைத்து கூறவில்லை. அவர் மனதில் இத்தனை ஆண்டுகளாக அழுத்திய விஷயத்தை அடக்கிவைக்க முடியாமால் அதீத அழுத்தத்தால் வெடித்துச் சிதறும்படியாகக் கண்ணீர்விட்டுவிட்டார்.
இஃது அவரே எதிர் பாராத ஒன்றுதான். ஆனால் இதைத் தன் மகனுக்கு நல்லதாக மாற்ற நொடியில் முடிவெடுத்திருந்தார்.
“அம்மா உன்னைத்தான் கேக்குறே? நான் என்ன செஞ்சா உன்னோட இந்தக் கஷ்டம் குறையும் ? என்ன பண்ணினா இப்படி நீங்க மறுபடியும் பொலம்பாம இருப்பீங்க ? சொல்லுங்க ?” என மீண்டும் கேட்க, மெல்ல பார்வதி சக்கரையைப் பார்த்தபடி, “நான் சொல்லிடுவே. ஆனா நீ செய்வியானு எனக்குத் தெரியல” என இழுத்தார்.
“எதுனாலும் சொல்லுங்க. செய்றே. ஆனா மறுபடியும் அழ மட்டும் செய்யாதீங்க” எனக் கதிரவன் உறுதி கூற, பார்வதி சொல்லியே விட்டிருந்தார்.
“கல்யாணம்! நீயொரு கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கப்புறம் எந்த வீட்டைவிட்டு போனியோ அஃது உன்னோட வீடு. அங்கையே வந்து நீ இருக்கணும்.”
“என்ன?” என அதிர்ச்சி விலகாமல் கதிரவன் கேட்க,
“பாத்தியா? உன்னால பண்ணமுடியாது கதிரவா. நான் உனக்குத் தப்பான முன்னுதாரணமா போயிட்டே. உனக்கு அதுனாலதான் பொண்ணுங்கனாலே பிடிக்காம போச்சு.
என்னாலதான், எல்லாமே என்னாலதான்” என மீண்டும் உடைந்த குரலில் கூற, அதைக் காண சகிக்காதவன், “பண்ணிக்கிறேன்” என்ற ஒற்றைச் சொல்லை அங்கிருந்த மூவரும் எதிர்பார்க்க நொடியில் சொல்லியிருந்தான்.
“ஐயா? நீ சொல்றது நிசந்தானா ?” எனக் கேட்க, சக்கரையும் பாண்டியும் கூட, “நிஜமா மாப்பு ?” என நம்பாமல் கேட்க, “அம்மா! இனிமேல் நீ அழாத. நான் கல்யாணம் பண்ணிக்கிறே. நீ காட்டுற பொண்ண, நீ சொல்றப்ப கட்டாயம் பண்ணிக்கிறே. அந்த வீட்டுக்கும் வரேன். இதுக்குமேல இத பத்தி பேசவேணாம்” எனக் கூறியவன் சட்டென்று வெளியேறி இருந்தான்.
அதே நேரம், அழகே திருவுருவான முருகனின் சன்னதியில் நிசப்தத்தின் பேரழகு முழுமையாகச் சூழ்ந்திருந்த அந்த நிமிஷத்தை மனதில் ரசிக்க முடியாமல் மனதில் அமைதியே இல்லாமல் குற்ற உணர்வில் அமர்ந்திருந்தாள் கனல் விழி. அவள் அருகில் விழியன் முகத்திலிருந்து அவளது மனதை அழுத்தும் விஷயத்தை அறியமுயன்றவராகக் கந்தசாமி.
“சொல்லு பாப்பா….” என மகளை மட்டும் கோயிலிற்கு அழைத்து வந்திருந்தவர் அவரே பேச்சை தொடங்க, “எ… என்னப்பா?” எனச் சற்றே தடுமாறித்தான் விழி ஆரம்பித்தாள்.
“எதோ உன்னோட மனச குழப்புற விஷயம் இருக்கு. நீ எப்பயும் எதையோ யோசிச்சுகிட்டே இருக்கியே பாப்பா. எப்ப இருந்து நீ தனியா யோசிக்க ஆரம்பிச்ச ?
ஆமா நான் தான் உனக்குச் சுயமா யோசிக்க முடிவெடுக்கக் கத்து கொடுத்தே. இல்லனு சொல்லல. ஆனா எல்லாத்தையும் என்கிட்ட சொல்லுவியே பாப்பா. இப்போ வீட்ல சொல்லாம மறச்சு நீ யோசிக்கிறனா, நாங்கல்லாம் நினைக்கிறதைவிட நீ பெரிய பொண்ணா மாறிட்டன்னு நினைக்கிறே
குட்டிம்மா! எல்லாப் பெத்தவங்களுக்கும் பிள்ளைங்களுக்கு எத்தனை வயசானாலும் குழந்தையாவே தெரிஞ்சிடுறாங்க. ஆனா இப்படிப் பிள்ளைங்க எதாவது பண்ணி அவுங்களுக்கு நாங்க வளந்துட்டோம்னு புரிய வச்சுடறாங்க.
இப்படித் தனியா யோசிச்ச, தனியா கவலைப்பட்டு, தனியா விஷயத்தை மறைக்கப் பாடுபட்டு, இப்படி இன்னும் என்னென்னவோ செஞ்சு. இப்போ என்னோட பாப்பா செய்றத போல. என்ன நான் சொல்றது  சரியா?” என ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி நிதானித்துக் கந்தசாமி கூற, விழியிடம் கூற பதிலே இல்லை.
தடுமாற்றமும் தயக்கமும் மட்டுமே இருந்தது.
“அது வந்து அப்பா… எனக்கு எப்படிச் சொல்றதுன்னு…” எனச் சொல்லாமல் இழுக்க, “எதுனாலும் யோசிக்காம சொல்லு. உன்னோட அம்மாவை கூட விட்டுட்டு உன்ன மட்டும் கோவில் கூட்டுவந்ததுக்குக் காரணமே இதுதான்.
நீ என்கிட்டே சொல்றதுக்காகத் தான் காலேஜ்குகூடப் போகாம எந்தத் தேவையும் இல்லாம லீவு போட்டு இருக்குற பாப்பா. அதுனால சொல்லு. என்னதான் பிரச்சனை ? எது உன்ன இவ்ளோ குழப்புது ?”
“அப்பா நீங்க சொல்றது சரிதான். ஆனா ஒன்னு இல்ல. இரண்டு பிரச்சனை. ஒன்னு எப்படிச் சொல்லுறது ? இன்னொன்னு எப்படியாச்சும் சொல்லிடனும்” என விழி நிறுத்தி நிறுத்தி தயங்கி தயங்கி கூற, கந்தசாமியிடம் சிறு மௌனம்.
அந்த மௌனத்தைத் தொடர்ந்து கந்தசாமி கூறிய வார்த்தைகள் கனல்விழிக்கு நிம்மதியையும் தந்தது குழப்பத்தையும் தந்தது. அச்சத்தையும் தந்தது ஆச்சர்யத்தையும் தந்தது.
அந்த வார்த்தைகள், “யாருமா அந்தப் பையன் ?”
“அப்பா…உங்களுக்கு…” என அவளுடைய வாக்கியத்தை முடிக்கும் வழி தெரியாமல் விழித்தவளோ அப்படியே மீதி கேள்வியைக் காற்றோடு கரையவிட, எந்தவொரு பதற்றமும் இல்லாமல் நிதானமாகவே கந்தசாமி தொடர்ந்தார்.
“மத்த பொண்ணுங்கள பத்தி எனக்கு எதுவும் தெரியாது. ஆனா என்னோட பொண்ண பத்தி எனக்கு மட்டும் தான் தெரியும் பாப்பா. நீ எப்படிச் சொல்றதுன்னு தடுமாறுறது உன்னோட மனசுல இருக்க அந்தப் பையன்கிட்ட. எப்படியாச்சும் சொல்லிடணும்னு தவிக்கிறது இந்த அப்பா கிட்ட . சரிதானே பாப்பா ?”
“ஹ்ம்ம்ம்” என்பதாய் தலையை மட்டும் அசைத்தாள். அவளுக்குள் எப்போதும் இருக்கின்ற குற்ற உணர்வு இப்போதும் இருந்தது. ஆனால் அது தேவை இல்லை என்பதாக அடுத்து கந்தசாமி கூறிய வார்த்தைகள் அமைந்தன.
“எதுக்குப் பாப்பா தல குனிச்சு உக்காந்துருக்க? நீ எந்தத் தப்பும் செய்யல. உன்னால செய்யவும் முடியாது. உன்ன நான் அப்படி வளர்கல. என்னோட மக எப்பவும் துணிச்சலா இருப்பா, துணிஞ்சு முடிவெடுப்பா..அப்படிதான் நான் உன்ன நம்பிக்கிட்டு இருக்கேன்.
நீ செஞ்சது தப்பா சரியா அந்தக் கேள்வியே தப்பு என்ன பொறுத்தவரை. நான் உன்ன சரியா வளத்துருக்கேன். ஏன்னா அந்தப் பையன்கிட்ட உன்னோட விருப்பத்தைச் சொல்றதுக்கு முன்னாடி நீ என்கிட்டே சொல்லணும்னு தானே இந்த ஒரு வாரமா காலேஜ் போகாம வீட்ல இருக்க. சரி தான ?”
“அப்பா… ” என லேசாகக் கண்கள் கலங்கியபடி உடைந்த குரலில், “நீங்க சொன்ன எல்லாமே நிசந்தாப்பா. நான் அவருகிட்ட இப்பவர பேச முயற்சி பண்ணிருக்கேன். அவருக்கு ஒரு நல்லதுன்னா அவருக்காக ஆசை ஆசையா பொருள்கூட வாங்கி அனுப்பிருக்கே என்னோட அடையாளத்தைக் காட்டிக்காம. ஆனா என்னோட காதல்….” எனத் தொடங்கியவன் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு, தந்தையைப் பார்த்துத் தவறு செய்த குழந்தையாய் நாக்கை கடித்துக்கொண்டு, காதல் என்ற வார்த்தையைத் தந்தை முன் உபயோகிக்கத் தயங்கியவளாய், அதைத் திருத்தி “என்னோட அன்ப சொல்லணும்னு முயற்சி செஞ்சதே இல்ல. அவரை எப்பவாவது தான் பாத்துருக்கே. அப்போல்லாம் சந்தோசம் வந்தாலும் அடுத்த நிமிஷமே உங்ககிட்ட இருந்து மறைக்கிறேன்னு தோணி வந்த சந்தோசம் நிமிஷத்துல காணாமலு போயிடுது.
இதுவரைக்கு நான் பேசுறதுக்கு யோசுச்சதே இல்ல. இப்ப வார்த்தைக்கு வார்த்த யோசிக்கிறே. எனக்கு என்ன செய்யனு தெரியல அப்பா.
ஆனா அவரை எனக்குப் பிடிச்சுருக்கு. உங்கள போல என்ன பாத்துபாருனு எனக்கு நம்பிக்கையும் இருக்கு. அந்த நம்பிக்கை அவரு கொடுத்தது இல்ல. அவருக்கே தெரியாம அவரோட செயல் கொடுத்தது.
இன்னும் சொல்ல போன இப்போ இந்த நிமிஷம் அவருக்கு என்ன கண்டாலே ஆவாது. ஆனாலும் அவருதான் உங்கள போலவே என்ன பாத்துக்க முடியும் அப்படினு எனக்குத் தோணுது” என ஒருவழியாகப் பேசிமுடித்தவள், ஏதோ ஒரு பெரிய சுமையை இறக்கி வைத்தவள் போல ஆசுவாசமாக மூச்சுவிட்டாள்.
மீண்டும் தந்தையின் முகத்தை ஏறிட்டு, “நான் செய்றது தப்பா ? எனக்கு என்ன எப்ப வேணும்னு எல்லாமே நீங்களே செஞ்சீங்க. நான் இல்லனு சொல்லல. இதையும் நீங்களே செய்வீங்க. நானா இப்படித் தேர்வு செஞ்சது தப்புனு எனக்குத் தெரியுது. ஆனாலும் இத என்னால தவிர்க்க முடியலப்பா. என்னோட மனசுல வந்திடுச்சே. என்னையும் மீறி அவரு மேல விருப்பம் வந்திடுச்சு. என்னால இன்னைக்கு ஒன்னு நாளைக்கு ஒன்னு மனச மாத்தமுடியாதுப்பா. அப்படி நினைச்சதும் மாத்திகிட்டா நான் உங்க பொண்ணு இல்லப்பா.
இப்ப உங்ககிட்ட சொல்லிட்டேன். தப்போ சரியோ இனிமேல் நான் என்ன செய்யணும்னு நீங்களே சொல்லுங்க.” என முடித்துக்கொண்டாள்.
“சரி நீ என்ன பண்ணனும்னு சொல்லுறே. அந்தப் பையன் பேரு என்ன ? அவனப்பத்தின விவரத்தை சொல்லு”
“கதிரவன்” என்ற அவனின் பெயர் மட்டுமே அவனுடைய விவரங்களை அறிய போதுமானதாய் இருந்தது கந்தசாமிக்கு.
“அவரு….” என மேற்கொண்டு இவள் கூற முயல, கந்தசாமியோ அவளைத் தடுத்து, “உங்க மாமா ஊர்கார பையன்தானே?”
“ஹ்ம்ம்…”
“ஒரு நல்ல பையனைத்தான் நீ மனசுல நினைச்சிருக்க. சரி பாப்பா, உன்னோட விருப்பத்துக்கு அப்பா சம்மதிக்கிறேன். ஆனா அந்தப் பையன சம்மதிக்க வைக்கிறது என்னோட பொறுப்புக் கிடையாது.
சின்ன வயசுல இருந்தே, உனக்கு எது சரி எது வேணும்னு நீ தேர்வு செய்றதுல நான் உன்ன சரியா வளத்துருக்கே. இப்போ கல்யாணத்துலையும் நீ சரியானவனதான் முடிவு பண்ணிருக்க.
அந்தப் பையன்கிட்ட கூட உன்னோட மனசுல இருக்குறத சொல்லாம அப்பாகிட்ட நீ மொத சொன்னது எனக்குப் பெருமையா இருக்கு. ஆனா அதுக்காக, என்னோட பொண்ண கட்டிக்கோபானு உன்னோட என்னால போய் நிற்கமுடியாது. அதையும் நீ புரிஞ்சுக்கணும். அகபாவம் இல்ல பாப்பா. எம்பொண்ணு மதிப்பு எனக்குதான் தெரியும்.
நீ போய்க் கதிரவன்கிட்ட கெஞ்சியோ உன்ன புரியவைக்கப் படாதபாடுபட்டோ உன்னோட அன்ப சொன்னாலும் அந்த அன்புக்கு மரியாதை இருக்காது. உனக்கும் மரியாதை இருக்காது.
உன்னோட மதிப்புத் தெரிஞ்சாதான் உன்னோட அனுபுக்கு மரியாதையும் இருக்கும் அங்கீகாரமும் இருக்கும். காதல் தப்பு இல்ல. ஆனா சுயத்தை இழந்து கெஞ்சி வரவைக்கிற காதல் தப்பு. அஃது உணர்ந்து ஒருத்தர் மேல ஒருத்தருக்கு வரணும்.
நீ முடிவு பண்ணினவ தங்கமா இருந்தாலும் அவன் உன்ன ஓவியமா நினைச்சாதான் உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கும். அதுக்கு என்ன செய்யணும்னு எனக்கு இப்ப எதுவும் பிடிபடல. இரெண்டு மனசும் ஒத்து போய் எங்களுக்குக் கல்யாணம் பண்ணிவைங்கப்பான்னு சொல்றது வேற, ஒருதலையா அன்புவைக்கிறது வேற. அதுனால இதுல எந்த அளவுக்கு சரியா வரும்னு தெரியல. பொண்ணு காதலிக்கிறானு தெருஞ்சதும் பிரிக்கணும்னு நினைக்கிற சராசரி அப்பா நான் இல்ல பாப்பா. அது உனக்கும் தெரியும்.
உங்க அம்மாக்கு காதல்ங்கிற வார்த்தையே ஆகாது. முருகேசன் நான் சொன்னா புருஞ்சுப்பான். வீட்ல பக்குவமா பேச எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேணும் பாப்பா. கதிரவன் பக்கட்டு லிங்கம் ஒன்னும் அவளோ நல்லவரா தெரியல. அந்தப் பையன் மேல அக்கறை உள்ளவராவும் தெரியல.
அவுங்க அம்மா தான் பாசமா இருக்காங்க. அவுங்கக்கிட்ட நான் பேசுறது சரியா வருமான்னு தெரியல. ஒருவேளை உங்க அம்மா பேசுனா சரியா வரலாம். ஆனா அவ பேசுறதுக்கு வாய்ப்பில்லை. என்ன செய்றது ?” என நீளமாகப் பேசியபடி மெல்ல யோசனையில் ஆழ, கனல் விழியன் கைபேசி சிணுங்கியது.
அதை எடுத்து காதுக்குக் கொடுக்க, அழைத்திருந்தது சக்கரை. அவன் கூறியவை இதுதான். கனல்விழியின் அன்புக்கு சக்தி இருக்கின்றது. பார்வதிக்கு எப்படியோ விஷயம் தெரிந்து இன்று வந்து விசாரித்தார். தன்னுடைய மருமகளைக் காண ஆசையாகவும் ஆவலாகவும் இருப்பதாகவும், தன் மகனை உயிராய் நேசிக்கும் பெண்ணையே திருமணம் செய்துவைப்பதற்காகவே கதிரவனிடம் தான் காண்பிக்கப் போகும் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டவேண்டும் என்று சத்தியம் பெற்றுள்ளதாகவும் கூற, விழிக்கு அளவு கடந்த ஆனந்தத்தில் பேச்சே எழவில்லை. ஏன் ஒரு சில வினாடிகள் மூச்சு கூட எழவில்லை.
அருகினில் கந்தசாமியும், மறுபுறம் சக்கரையும் அவளை அழைத்து நடப்புக்கு இழுத்த பிறகே சுயத்திற்குத் திரும்பினாள்.
கந்தசாமி யாரென்றும் என்னவென்றும் கேட்க, சக்கரையிடம், ” அண்ணா ! ஒரு நிமிஷம். நான் இப்பதான் எங்க அப்பாகிட்ட எல்லாத்தையும் சொன்னேன். அவரு யோசிச்சிட்டு இருக்காரு. ஒரு நிமிஷம் லைன்ல இருங்க அண்ணா” எனக் கூறிவிட்டு, தன் அப்பாவிடம், “அப்பா, அவரோட அம்மாவுக்கு என்ன பத்தி தெரிஞ்சிடுச்சாம். என்னதான் அவுங்க மருமகள்-னே முடிவே பண்ணிட்டாங்கலாம்.
அவுங்க காட்டுற பொண்ணு கழுத்துல தாலி கட்டணும்னு அவருகிட்ட சம்மதமும் வாங்கிட்டாங்களாம். இப்போ என்ன பாக்கணும்னு ஆசைப்படறாங்களாம்” என ஒருவாறு கூறி முடிக்க, இதையெல்லாம் மறுபுறமிருந்து கேட்டுக்கொண்டிருந்த சக்கரைக்குக் கூட விழியை நினைத்து வியப்பாகவே இருந்தது.
“என்ன பொண்ணு விழி. எவ்ளோ நம்பிக்கை இருந்தா அவுங்க அப்பாகிட்ட எல்லாத்தையும் சொல்லு. ரொம்ப உண்மையான தைரியமான பொண்ணு. நம்ம கதிரவனுக்கு விழிதான் பொருத்தம்.
காதல காதலிக்கிறவன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி அப்பாகிட்ட சொல்லுதுன்னா இதுல விழியோட அப்பா எம்புட்டு பெரியமனுஷனா விழியை வளத்துருக்காரு” என எண்ணிக்கொண்டான்.
அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த பாண்டியோ தன் மனதில், “விழி அப்பாட்ட சொன்னா உக்காந்து கேட்குறாரு. நான்லாம் எங்க அப்பாட்ட சொன்னா தொடப்பக்கட்டையெடுத்துட்டு எங்க அம்மா தொரத்த, உருட்டு கட்டைய எடுத்துட்டு எங்க அப்பா விரட்ட ஒரே ரத்த களரியாவுல ஆகியிருக்கு” எனப் பீதியுடன் நினைத்துக்கொண்டான்.
கந்தசாமியோ அழைப்பை விழியிடம் இருந்து வாங்கி ஒலிபெருக்கியில் போட்டவர் சக்கரையிடம் ஒரு சில கேள்விகளைக் கேட்க, சக்கரைக்கோ மகிழ்ச்சியாகவும் இருந்தது அதிர்ச்சியாகவும் இருந்தது. விழிக்கும் கதிரவனுக்கும் நல்லதொரு வாழ்வு கிடைக்கப் போகும் மகிழ்ச்சியும், கந்தசாமி இப்படி நேரடியாகத் தன்னிடமே கேள்விக்கணைகளைத் தொடுத்ததால் வந்த அதிர்ச்சியும் ஒரே நேரத்தில் அவனை அலைக்கழிக்க, அவனுக்கு அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த பாண்டியோ, “நல்லவேளை நான் பேசல. ஸ்கூலுக்குப் போனா வாத்தியாரு கேள்வி கேட்பாருன்னுதானே கட் அடிச்சே. இப்ப என்னடானா நம்ம தத்து தங்கச்சியோட அப்பாவும் வாத்தியாரா இருக்காரே. பேசாம விழிக்கு நம்ம அண்ணே இல்லனு எழுதி கையெழுத்து போட்டு கொடுத்திடுவோமா ?” எனத் தீவிரமாக மனதில் யோசித்துக்கொண்டிருந்தான்.
ஒருவழியாகப் பரஸ்பர அறிமுகமும் அதை அடுத்து கந்தசாமி கதிரவன் பற்றி வினவிய சில பல கேள்விகளுக்குப் பதில் கூறியபின், சக்கரையிடம் கந்தசாமி, “சரி சக்கரை. நீ என்னோட பொண்ண உன்னோட கூடப் பொறந்த புறப்பு போலன்னு சொல்லுற. நீ பார்வதி அம்மா சொன்னதா சொன்ன அத்தனையும் நம்புறேன். நானே பாப்பாவை கூப்பிட்டு வரேன். பார்வதி அம்மாவை பாப்பா பார்க்கட்டும். மேற்கொண்டு என்ன எப்படிச் செய்யணும்னு நான் யோசிச்சு சொல்லுறேன்.
அதுக்குமுன்னாடி நான் முருகேஷன்கிட்டயும் பேசிக்கிறேன். அவுங்க தன்னோட மகனுக்காக இவ்ளோ செய்றப்ப, நான் என்னோட மகளுக்காகச் செய்யமாட்டேனா ? ஆனா அவுங்க பாக்குறது கோவிலா மட்டும் தான் இருக்கணும். கதிரவனைப் பார்க்க நான் அனுப்பல. அவுங்க அம்மாவை மட்டும்தான். இதுவே என்னோட பொண்ணு முகத்துக்காகவும், அந்த அம்மா அவுங்க மகன் மேல வச்சிருக்கப் பாசத்துக்காகவும் தான். என்னோட பொண்டாட்டிக்கு தெரியாம நான் அனுப்புறது அவ்ளோ சரி இல்ல. அதுனாலதான். சரி தம்பி நாங்க நாளைக்குப் பொறப்படுறோம். என்னைக்கு அவுங்கள விழி பார்க்கணும் ?” என வினவ,
சக்கரையோ அவசரமாக, “அப்பா தப்பா எடுத்துக்காதீங்க. நாளைக்குச் செவ்வா. நாளைக்கு விட்டு புதன் வாங்களே. என்ன இருபது நிமிஷ தொலைவு தானே. நானும் பாண்டியும் இன்னு செத்த நேரத்துல மதுரைக்குக் கிளம்புறோம். புதன் விடியகாலையிலதான் வருவோம்.
நீங்களும் அப்பவே வந்துட்டா, அம்மாவையும் தங்கச்சியையும் பார்க்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீங்க என்ன சொல்றீங்க அப்பா ?” எனச் சக்கரை கேட்க, கந்தசாமியும் சரி என்றுவிட, இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த விழிக்குக் கண்களில் ஒரு துளி ஆனந்த கண்ணீர் பெருகியது.
“அப்பா…” என்ற சந்தோச கேவலுடன், கண்களில் நீர் அரும்பியிருக்க, இதழ்கள் சந்தோசத்தில் மலர்த்திருக்க, சலுகையாக அவருடைய தோள்களில் லேசாக முகத்தைச் சாய்த்தபடி, “தேங்க்ஸ் பா” எனக் கூற, அவரோ ஆதரவாக அவளின் தலையை வருடிவிட்டபடி, யோசனையை ஓடவிட்டார்.
மகளிற்காகச் சம்மதத்தைத் தந்துவிட்டார். ஆனால் இதை நடைமுறை படுத்துவதில் ஆயிரம் சிக்கல் இருக்குமென்றும் அதையெல்லாம் மீறி இவளின் திருமணத்தை நடத்துவது என்பது அத்தனை எளிதல்ல என்றும் அவர் நன்றாகவே உணர்ந்திருந்தார். கதிரவன் நல்லவன் தான். அதில் அவருக்கு ஐயமில்லை. ஆனால் தன் பெண்ணை விரும்பாதவன். அதுவே முதல் பிரச்சனையாக அவருக்குப் பட்டது. இரண்டாவதாகக் காதல் என்றால் ஒப்புக்கொள்ளாத தேவி, கதிரவனை அடியோடு வெறுக்கும் அவன் வீட்டு மனிதர்கள், குடும்பம் இருந்தும் குடும்பமற்றவனைப் போலத் தனித்து வாழும் கதிரவன் என்று அனைத்துமே அவருக்குப் பெரிய சிக்கலாகத் தோன்றியது.
ஆனால் அனைத்தையும் மீறி தன் மகள் முகத்தில் தோன்றிய ஒரு துளி கண்ணீரும், சிறு கடை இதழ் புன்னகையும் பெரிதாக தெரிந்தது. காதலிப்பதை கூட முதலில் தன்னிடம் கூறுகின்ற மகள் அவருக்கு மிகவும் பெரிதாகத் தெரிந்தாள். அதனால் இதில் முயன்று முடித்தே தீரவேண்டும் என முடிவெடுத்துக்கொண்டார்.
தாயின் கண்ணீருக்காகக் கல்யாணத்திற்குச் சம்மதம் சொன்னவனுக்கு இத்தனை சீக்கிரம் திருமணம் நடக்கவிருக்கிறதென்று தெரியாது. கல்யாண கனவுகளுடன் காதல் ஓடத்தில் பயணிப்பவளுக்கும் கதிரவனுக்கான மணமகள் தான் இல்லையென்று தெரியாது.
இப்படிக் கதிரவனும் கனல்விழியும் தங்களுக்காக விதி விரித்து வைத்திருந்த மாய சுழலில் மெல்ல மெல்ல இறங்கத்தொடங்கியிருந்தனர். இனி சுழற்சியின் பிடியிலோ சூழிச்சியின் மடியிலோ இவரகளது வாழ்க்கை……

Advertisement