Advertisement

அன்பும் ஆஸ்தியும் – 16
ஒருவித இருக்கத்துடனும், இதற்குப் பின்னால் இருக்கும் சதியை தேடும் முடிவோடும் கதிரவன் நெய்தல் இறால் பண்ணையை அடைந்திருக்க, வாசலில் சக்கரையும் பாண்டியும் கையில் ஒரு பொட்டலத்துடன் (பார்ஸல்) நின்றிருந்தனர்.
“வா மச்சான்…. பிறந்தநாள் வாழ்த்துக்கள்” எனச் சிரிப்புடன் இருவரும் கூற, “என்னடா? புதுசா ? ஏதோ பார்ஸலாம் ? கிப்ட் கொடுத்துதான் நீங்கெல்லாம் சொல்லனுமா ? அதோட நான் புறந்தநாள் கொண்டாடுற மனநிலையில் இல்ல” எனக் கூற , அவர்களோ மனதில், “ஓ இந்தப் பார்ஸ்ல நம்ம தரோம்னு நினைச்சுட்டான் போல. இது விழி அனுப்புனது. சரி, இப்போதைக்குக் கொடுப்போம். அப்புறம் மெல்ல நேரம் பார்த்து சொல்லுவோம்” எனத் தங்ககுளுள் நினைத்தபடி பார்வையால் அர்த்தம் பொதிந்த வார்த்தையற்ற பேச்சை முடித்துக்கொண்டு, கதிரவனிடம் நீட்டினர்.
பெரிதாக ஆர்வம் இல்லாவிட்டாலும் தன் நண்பர்களுக்காக அதைப் பிரித்தபடியே, ” சக்கர, நம்ம பண்ணையில நமக்குத் தெரியாம ஏதோ ஒன்னு நமக்கு வேண்டாதவன் யாரோ ஒருத்தன் இருக்கணும் நினைக்கிறே. அது என்னனு பார்க்கணும்” எனக் கூறியவனிடம், சக்கரையும் பாண்டியும், “ஏண்டா ? நம்ம ஆளுங்கள்ள யாரோ நமக்கு எதிரா சதி பண்ணுறாங்கனு நினைக்கிறியா ?” எனக் கேட்க, ஆம் என்பதாய் தலையை மட்டும் அசைத்தான்.
“அப்படினா அத எப்படிக் கண்டுபிடிக்கிறது?” எனப் பாண்டி கேட்க,
“நாம இத தோப்பு வீட்ல பேசுவோம். சரி என்ன வாங்கிருக்கீங்க எனக்காக ?” என அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தபடி, பொருளை பற்றி வினவ, சட்டென்று பாண்டியோ, “யாருக்கு தெரியும் ?” என உளறிவிட்டிருந்தான்.
“என்ன யாருக்கு தெரியுமா? அப்போ நீங்க வாங்கலியா ?” எனக் கதிரவன் கேட்க,
“டேய் மாப்பு, அவன் யாருக்கு தெரியும்னு சொல்லல. யாருக்கும் தெரியாம சர்ப்ரைஸ்னு சொல்ல வந்தான். அத தான் இந்த லூசு இப்படி உளறுது. நீயே பிரிச்சு பாரேன்” எனச் சக்கரை கூற,
சின்னச் சிரிப்புடன் கதிரவன் அதைப் பிரித்துக் கைகளில் எடுக்க, அழகான வேலைப்பாடு அமைந்த ஆண்கள் கட்டும் கைக்கடிகாரம்.
“அட! வாட்ச்… ரொம்ப நல்லா இருக்குடா…” எனக் கதிரவன் சொல்ல, “கடிகாரம் மட்டும் இல்ல, இனிமேல் உங்க நேரமும் நல்லாத்தான் இருக்கப் போகுது கதிரவன்” என நான்காவதாக ஒரு நபரின் குரல் ஒலிக்க, குரல் வந்த திசையில் மூவரும் திரும்பி பார்த்தனர்.
நின்றிருந்தவர் சேனாதிபதி.
“என்ன கதிரவன்? உள்ள வாங்கனு கூப்பிடமாட்டீங்களா ?”
“ஐயோ அப்படியில்ல சார். உங்கள பார்க்க இரெண்டு நாளா அலைஞ்சிட்டு இருக்கே. நீங்களே வரவும் சட்டுனு ஒன்னும் தோணல”
“என்ன பார்க்க வந்தீங்களா? நான் சென்னைக்கு போய்ட்டேன். அதுனாலதான். பொதுவா நான் போறவர இடமெல்லாம் எல்லாருக்கும் தெரியாது. நான் தெரியப்படுத்த மாட்டேன். எல்லாம் தொழில் போட்டிதான் காரணம். அதா உங்களுக்கு நான் ஊருல இல்லாத விஷயம் தெரியல போல. சரி அதவிடுங்க, உங்களுக்கு இப்ப ஒரு நல்ல விஷயம் சொல்ல வந்துருக்கே” என கூற,
பாண்டியும் சக்கரையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, கதிரவன் மட்டும் அவர் கூற போகும் செய்தியில் கவனத்தைப் பதித்தான்.
“உங்களோட காண்ட்ராக்ட் கான்சல் ஆகல. அந்த வெளிநாட்டு கம்பெனிக்கு நீங்கதான் சப்பளை பண்ண போறீங்க. என்ன சந்தோசம் தானே ?” என ஆச்சர்ய ஆனந்தத்தை அளித்தார்.
“நிஜமாவா?” எனச் சக்கரை பாண்டி என இருவரும் ஒருமித்த குரலில் கேட்க, கதிரவனோ, “இது எப்படிச் சார் சாத்தியமாச்சு? என்ன நடந்துச்சு ?” என விஷயத்தில் ஆர்வமானான்.
காரணம் முழுதுமாகத் தெரியாமல் அவனால் நிம்மதியோ சந்தோஷமோ கொள்ள முடியவில்லை.
“ஹ்ம்ம் நீங்க கில்லாடி கதிரவா. நான் சொன்ன செய்தி நிஜமா நிரந்தரமானு தெருஞ்சுகிறது முக்கியம்னு குறியா இருக்கீங்களே. இது நல்ல விஷயம்தான். ஆனா இவ்ளோ தெளிவா இருந்தும் உங்களோட சரக்குலையே எவனோ வேலைய காட்டிருக்கான்.”
“நானும் இதைத்தான் யூகிச்சேன். இத நான் பாத்துக்கிறே. அது யாரா இருந்தாலும் இனியொருதடவ என்ட வாலாட்டவே முடியாது. நீங்க எப்படி இத கண்டுபிடிச்சீங்க ? ஆனா மொத ஆர்டர கான்சல் பண்ணிடீங்களே. தப்பா எடுத்துக்காதீங்க, உங்க இடத்துல இருந்து நீங்க பண்ணினதுதான் சரி. என்னோட சந்தேகம் என்னென்னா எனக்கு எதிரா யாரோ பண்ற வேலைனு எப்படித் தெருஞ்சுகிட்டீங்க ?”
“சரியான கேள்விதான். கண்டிப்பா சொல்லுறே! நீங்க அனுப்பின சாம்பில பரிசோதனைக்கு அனுப்புனே. இறால் சீக்கிரம் கெட்டுபோகணும்னு ஏதோ ரசாயனம் கலந்துருக்காங்க. இந்த வயசுல எவ்ளோ பாத்துருப்பே. இந்த இடத்துக்கு வரதுக்கு, எவ்ளோ போட்டி பொறாமை நயவஞ்சகம்…
அதுனால இத நான் யூகிச்சுட்டேன். ஆனா கூட நானும் தப்புப் பண்ணிட்டேன்தான். மொதலையே இத யோசிக்காம, உங்க ஆர்டெர் கான்செல்ன்னு அனுப்பிட்டே.
ஆனா அதிர்ஷ்ட தேவதை உங்க பக்கம் இருக்கறப்ப எப்படித் தப்பா போகும் ? அதா சரியான நேரத்துல சரியான முடிவை என்ன எடுக்க வச்சிருக்கு.” எனக் கூற, அவர் கூறியதை நிதானமாகக் கேட்டுக்கொண்டிருந்த கதிரவன், அவர் இறுதியாகக் கேட்ட கேள்வியில் ‘அதிர்ஷ்ட தேவதை’ என்ற சொல் அவன் பண்ணையை ஆரம்பித்த அன்று அவன் கைகளில் வந்து சேர்ந்த சட்டையைப் பற்றிக் கூறும் போதும் இதே சொல்லை அவன் கேட்க நேரிட்டத்தை ஒரு நிமிடம் எண்ணி பார்த்தான்.
அதற்குமேலெல்லாம் அதைப் பத்தி அவன் அந்த நிமிடம் யோசிக்கவில்லை. ஆனால் அதே சமயம் அந்தச் சட்டையையும் அவன் கைகளிலிருந்த கடிகாரத்தையும் ஒருநொடி ஒன்றோடொன்று இணைத்து பார்க்க அவன் மனம் தூண்டியது. மேற்கொண்டு அவனைச் சிந்திக்க விடாமல், சேனாதிபதியின் பேச்சு குறுக்கிட்டது.
“மறுபடியும் நாளைக்கு ஒரு லோட் அனுப்புங்க கதிரவன். இந்த முறை நீங்களே டெலிவர் பண்ணுங்க. மத்தத சங்கத்துல நான் பேசுகிறேன்” எனக் கூற, “ரொம்ப நன்றி சார். பத்தோட பதினொன்னா நினச்சு அப்படியே விடாம, கெட்டுப்போன சரக்க பரிசோதனைக்குக் கொடுத்து, இப்ப நீங்களே மறுபடியும் ஆர்டர் தரது ரொம்பப் பெரிய விஷயம் சார். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல” என இவன் கூற,
“நன்றி எனக்குச் சொல்லாதீங்க. அந்தப் பெண்ணுக்குத்தான் சொல்லணும்” எனப் புதியதான தகவலொன்றை சேனாதிபதி கூறினார்.
“எந்தப் பொண்ணு சார்?”
“அந்தப் பொண்ண பத்தின விஷயம் எனக்கும் தெரியாது. ஏதோ காலேஜ் பொண்ணு நினைக்கிறே. உங்க ஆர்டர் கான்செல் பண்ணின அன்னைக்கு என் பேரன் அடம்பிடிச்சானு சந்தைக்குக் கூப்பிட்டு போனே. கூட என்னோட மனைவியும். அவுங்க இரெண்டு பேரும் வேணுங்குற பொருள் வாங்குறதுக்காக போனப்பத்தான், உங்க சரக்கு கெட்டு போனதபத்தி எனக்குத் தகவல் சொன்னாங்க. நான் எம் மனைவிகூடத் தானே இருக்கானு போன் பேசிட்டு இருந்தேன். அப்ப எங்க இருந்தோ வந்த கார்ல என்னோட ஒரே பேர மாட்டிக்க இருந்தான். அப்போ அந்தப் பொண்ணுதான் வந்து காப்பாத்துச்சு.
நல்லவேளை ஒரு நொடி விட்டிருந்தாலும் என்ன நடந்துருக்கும்னு சொல்ல முடியாது. நானும் என்னோட பொண்டாட்டியும் துடிச்சு போய்ட்டோம். அந்தப் பொண்ணுக்கு நன்றி சொல்லிட்டு உனக்கு எதாவது பண்ணனும்னு சொன்னே.
அப்ப சரியா சங்கத்துல இருந்து உங்களுக்கு என்ன தகவல் சொல்லணும்னு என்ட கேட்டாங்க. அந்தப் பொண்ணும் அங்கதான் நின்னுச்சு.
உங்க ஆர்டர ரத்து பண்ண சொல்லிட்டேன். தேவைப்பட்டா உங்க பண்ணையையும் சங்கத்துல இருந்து விளக்கலாம். மத்தவங்ககிட்ட நான் வந்து ஆலோசனை பண்ணிக்கிறேன்னு சொன்னே.
இத அந்தப் பொண்ணு கேட்டுச்சு போல. அப்போ தயங்கி தயங்கி அந்தப் பொண்ணு நான் போன் வச்சதும் என்ட ஒன்னு சொன்னா” என நிறுத்தியவர், அந்தப் பெண் கூறிய வார்த்தைகளை அப்படியே கதிரவனிடம் கூற தொடங்கினார்.
காட்சிகள் அவரது பார்வையில் விரிய தொடங்கின.
“சார்! எனக்கு எதாவது பண்ணனும்னு நீங்க நினைக்கிறதா சொன்னீங்கல? நான் கேட்கலாமா ?”
“கட்டாயக் கேளுமா”
“இப்ப நீங்க எது சம்மந்தமா யாரு சம்மந்தமா பேசுனீங்கன்னு எதுவும் எனக்குத் தெரியாது. ஆனா யாரோ அனுப்பின சரக்கு கெட்டு போய்டுச்சு, அதுனால அவுங்களோட தொழில் தொடர்ப ரத்து பண்ண போறீங்கன்னு மட்டும் புரியுது.
தொழிலும் ஒரு குழந்தை போலத் தான் சார். நம்ம வீட்டு புள்ளைக்கு ஒன்னுனா எப்படித் துடிக்கிறோமோ, அதே போல நாம ஆரம்பிச்சு வளக்குற, இல்ல வளர்த்த தொழில் முடங்குனாலும் அதே கஷ்டம் இருக்கும்.
அந்தக் கஷ்டம் தொழிலுக்குச் சொந்த காரங்களுக்கு மட்டுமில்லாம அத சார்ந்து இருக்குற தொழிலாளிக்கும் இருக்கும். அதுனால இத எனக்காகக் கொஞ்ச தீவிரமா தீர விசாரிச்சு முடிவு பண்ணுங்க சார். அப்பவும் அது தப்புனு உறுதி ஆச்சுன்னா இதே முடிவை அப்ப எடுங்க. வெறும் போன்ல சொல்றத கேட்டு பலபேரோட வாழ்வாதாரத்துல முடிவு எடுக்குறது சரியா வராது.
தப்பா ஏதாவது சொல்லிருந்தா மன்னிக்கணும் சார்” என அப்பெண் கூறியிருக்க, அவள் கூறிய விஷயமும் விதமும் அவர் மூலையில் ஆணி அரைந்ததைப் போலப் பதிந்தது.
“சின்னப் பொண்ணுனாலும் பெரிய விஷயத்தைச் சாதாரணமா சொல்லிட்ட. நான் கண்டிப்பா பண்றேன்மா” எனக் கூறிய சேனாதிபதி அடுத்தே இந்த விஷயத்தை ஆராயத் தொடங்கினார்.
அதில் ஆராய்ந்து அவர் கண்டுகொண்ட உண்மை, தரம் குறைந்த இறால்களைக் கதிரவன் அனுப்பவில்லை, அவன் அனுப்பிய இறாலின் தரத்தை குறைக்கச் சூழ்ச்சி நடந்திருக்கிறது என்று.
“யாரு சார் அந்தப் பொண்ணு” எனக் கதிரவன் முதல் முறையாக ஒரு பெண்ணைப் பற்றிய அறிமுகத்தை ஆராய முயன்றான்.
“எனக்கும் தெரியாது கதிரவன். அன்னைக்கு நான் அத கேட்கவே இல்ல. ஒருவேளை கேட்டுருந்தா உங்களுக்கு மறுபடியும் ஆர்டர் கொடுத்துட்டேன்னு சொல்லிருப்பே” எனச் சிரிப்புடன் இவர் கூற, கதிரவன் “ஹ்ம்ம் ஆமாம் சார். நானும் ஒரு நன்றி சொல்லியிருப்பேன்” எனக் கூறினான்.
“அந்தப் பொண்ணு ஏதோ வாட்ச் கடை பை தான் கைல வச்சிருந்தா. பாருங்க உங்களுக்கும் இன்னைக்கு ஒரு வாட்ச் வந்திருக்கு. நடந்த சம்பவம் ஏதோ உங்களுக்காகவே நடந்தது போல இருக்கு கதிரவன். சரி ஆனது ஆகட்டு. இதுக்குக் காரணம் யாருனு சீக்கிரம் கண்டுபிடிங்க. நான் புறப்படறேன்” எனக் கூற, கதிரவன் அவரை வாசல்வரை சென்று வழி அனுப்பினான்.
அவர்களின் பின்னோடு செல்லாத சக்கரைக்கு மட்டும் இருப்பே கொள்ளவில்லை.
உடனடியாக விழிக்கு அழைக்க, அப்போது தான் அவளுடைய கைபேசி அவளின் கைக்கு வந்து சேர்ந்திருந்தது. இத்தனை நேரம் முல்லை பார்த்திபனுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு வீடு வரவும் கொடுத்திருந்தாள்.
“சொல்லுங்க அண்ணே. வாட்ச் வந்திருச்சா ? அவர்கிட்ட கொடுத்துடீங்களா ?” என ஆர்வமாகக் கேட்க, “அதெல்லாம் கொடுத்தாச்சு. அவனுக்கும் ரொம்பப் பிடிச்சது. அதெல்லாம் விடு, நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு.
நீ வாட்ச் வாங்க இரெண்டு நாளுக்கு முன்னாடிதான் போனியா ?”
“ஆமா”
“அப்போ ஏதாவது குழந்தை கார்ல அடிபட இருந்துச்சா?”
“ஆமா! நான் தான் காப்பதுனே” எனக் கூறியவள் நடந்தவற்றைக் கூற, “தங்கச்சி அப்ப சேனாதிபதி சார் சொன்னது உன்னதானா ? “
“ஓ அவர் பேரு சேனாதிபதியா?”
“ஆமா! அங்க நீ ஒரு தொழிலுக்காகப் பேசிட்டுவந்தல, அது யாரோடது தெரியுமா ?”
“யாரோடது அண்ணா?”
“நம்ம கதிரவனோட நெய்தல் பண்ணைக்குத் தான். இரெண்டு நாளா என்ன பண்றதுனு தெரியாம இருந்தோம். ஆனா நீ உனக்கே தெரியாம பண்ணின விஷயத்துல ரொம்பப் பெரிய நல்லத அவனுக்குப் பண்ணிருக்க. ரொம்ப நன்றி மா. நிஜமாவே அவனோட வாழ்க்கைல நீ இருக்குறது கடவுள் போட்ட முடிச்சு” என உணர்ந்து சொல்ல, விழிக்கு மனது நிறைந்திருந்தது.
அடுத்தடுத்து வந்த நாட்கள் அழகாகத்தான் நகர்ந்தது.
முல்லை பார்த்திபனுக்கும், சாந்தினி மாறனுக்கும் காதல் காலமாக அழகாக நகர்ந்துகொண்டிருந்தது. முல்லை பார்த்திபனுக்கு, திருமணம் விழிக்கு முடித்த பிறகு என உறுதி செய்யப்பட்டிருந்தது. விழி படிப்பை முடித்தவுடன், வரன் பார்க்க வேண்டுமென்று பெரியோர்கள் நிச்சயம் செய்திருந்தனர்.
இது விழிக்கும் தெரியும். ஆனாலும் அவள் பதட்டப்படவில்லை. இன்னும் ஆறுமாத காலம் தன்னுடைய கைகளில் இருப்பதாய் நினைத்துக்கொண்டாள். தன் காதலை அடைவதற்கு. அதனால் நிதானமாகவே நடந்துகொண்டாள். அவளின் நிதானம் முல்லைக்கு லேசான பயத்தை அளித்தது. ஆனால் விழிக்கு பயமும் இல்லை பதற்றமும் இல்லை.
“எப்படி டி? கதிரவ அண்ணனுக்கு உன்னோட காதலும் தெரியாது மனசும் புரியாது. இப்ப வரைக்கும் உன்னோட முகத்தைப் பார்த்துகூடப் பேச மாட்டீங்கிறாரு. எந்த நம்பிக்கையில இந்த ஆறு மாசத்துல எல்லாம் மாறும்னு நம்புற ?” என முல்லை கேட்க,
“எங்க அப்பா என்ன வளர்த்த விதத்துல இருக்க நம்பிக்கை. எங்க அப்பா சொல்லுவாரு உன்னோட மனசுக்கு சரின்னு பட்டத எப்பயும் எதுக்காகவும் விட்றாத. தோல்விய எப்பயுமே ஏத்துக்காத. நீயா பயப்படறவரைக்கும், ஒதுங்குற வரைக்கும், விலகனும்னு நினைக்கிறவரைக்கும் எந்த விஷயத்துக்கும் தோல்வினு ஒன்னு இல்லவே இல்லனு சொல்லுவாரு.
நான் என்னோட அப்பாவோட பொண்ணு. அவ்ளோ சீக்கிரம் என்னோட காதல விட்டுடமாட்டேன். எனக்குக் கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது என்னோட மனசுல இருக்கக் கதிரவன் கூட மட்டும்தான்” என உறுதியான குரலில் கூறியவளை முல்லை பிரமிப்பாகப் பார்த்தாள்.
மறுபுறமோ, கதிரவன் தன்னுடைய இறால் பண்ணையிலிருந்து மச்சக்காளையின் கையாள் ஒருவனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டிருந்தான். கதிரவன் முன் கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் அவன் நிற்க, இவர்கள் இருவரை சுற்றி பண்ணையில் வேலை பார்த்த அத்தனை நபர்களும் நின்றிருந்தனர்.
“என்ன வேலு? எப்படி உன்ன கையும் களவுமா பிடிச்சேன்னு யோசிக்கிறியா ?” எனக் கதிரவன் அருகிலிருந்த மேஜைமீது லேசாகா சாய்ந்தபடி கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு கேட்க , வேலு என்று சொல்லப்படுபவனுக்கு அக்கம் பக்கமாய்ச் சக்கரையும் பாண்டியும் நின்றிருந்தனர்.
“சரி நானே சொல்லுறே. தெருஞ்சுக்கோ….
நம்ம பண்ணையில இருந்து புதுக்கோட்டை போன சரக்குல மருந்த தெளிச்சவன் கண்டிப்பா இங்க இருக்கவனா தான் இருக்கும்னு சந்தேகம் வந்துச்சு. அத கண்டுபிடிக்க, இன்னைக்கு அனுப்ப வேண்டிய சரக்க ரெடி பண்ணி, எல்லாருக்கும் தெரியிற போலப் பின்னாடி ஸ்டார் ரூம்ல வைக்கச் சொன்னேன்.
யாராரு உள்ள போறா வரான்னு அங்க கண்காணிக்க ஆளும் போட்டேன். எவன் இங்க இருந்துட்டு உன்ட வீட்டுக்கு இரண்டகம் பன்றானு கண்டுபிடிக்கத்தான் உன்ன உன்னோட வேலைய பண்ணவிட்டு இப்ப என் வேலைய காட்டுறேன்.
உன்ன ஆடவிட்டது உன்ன அனுப்புனவனுக்கு ஆட்டம் காட்டத்தான். சரி சொல்லு, உன்ன அனுப்புவது யாருனு ?” எனக் கதிரவன் கேட்க, வேலு சொல்வேனா என்பதைப் போல நின்றிருந்தான். அதைப் பார்த்த கதிரவன் சக்கரைக்குச் சமிங்கை காட்ட, அதைப் புரிந்துகொண்டவன், “மாப்பு நாம கேட்டா துறை வாயத் தொறக்கமாட்டாரு. போலீஸ்க்கு போன போடு” எனக் கூற, பாண்டியோ, “டேய் மாப்பிளைஸ், நான் இதுவரைக்கும் போலீஸ்க்கு போனே பண்ணினது இல்லடா. நான் பண்ணி கூப்பிடுறேன் டா. ஒரு தடவையாச்சும் இப்படிப் போன் பண்ணி யாரையாச்சும் புடுச்சு கொடுக்கணும்னு சினிமா படம் பார்குறப்பெல்லாம் நினைப்பேன். ஹெலோ போலீஸ் ஸ்டேஷன் அப்படினு சொல்லணும்னு. இதுவரைக்கும் எவனுமே சிக்கல.
இப்பதான் இருந்திருந்து ஒருத்தன் சிக்கிருக்கான். நான் போன் பண்ரெண்டா” எனக் கெஞ்சிக்கொண்டிருக்க, அவனின் வித்தியாசமான ஆசையைக் கேட்ட கதிரவன் புன்னகையுடன், “சரி பண்ணு” எனக் கூற, வேலு சட்டென்று பதட்டமானான்.
“அண்ணே! வேணா பண்ணாதீங்க. இந்தச் சின்ன விஷயத்துக்கு ஏன் போலீஸ் போறீங்க ? வேணுனா பஞ்சாயத்தைக் கூட்டுங்க” எனக் குரல் பிசிறியபடி கூற,
“என்னது சின்ன விஷயமா? ஏண்டா சாப்பிடற பொருள்ல விஷத்தை கலக்குவ. அது உனக்குச் சின்ன விஷயமா ? யாரவது சாப்பிட்டு எதாவது ஆகியிருந்தா? உசுரோட மதிப்பு என்னனு தெரியுமா ? பாண்டி நீ என்ன வாய் பார்த்துட்டு நிக்கிற. போன போடு” எனக் கதிரவன் சட்டென்று கடுமையாக முகத்தை வைத்தபடி கூற,
வேலு பயத்தின் உச்சிக்கு சென்றுவிட்டான். ஆனால் உண்மையில் விஷம் கலக்கப்படவில்லை. வேலுவை பயமுறுத்தும் நோக்குடனே அப்படிக் கதிரவன் கூறியிருந்தான்.
“அண்ணே அண்ணே தெரியாம பண்ணிட்டே. சரக்கு கெட்டு போகுற மருந்துனுதான் சொல்லி கொடுத்தாங்க. அப்பவும் நான் பிரச்சனை வந்திடும்னு பயந்தே. ஆனா பிரச்சனை வராது. வந்தாலும் உங்களுக்குத் தான் வரும். அதுக்கு மீறி எதுனா பஞ்சாயத்துக்குத் தான் தகவல் வரும். அப்போ நான் பார்த்துகிறேன்னு அவரு சொன்னதுனாலதான் செஞ்சேன். மருந்த கலைக்கான இறாலை சாப்பிட்ட உசுருக்கு ஆபத்துனு எனக்குச் சாத்தியமா தெரியாதுன்னே.
என்ன இந்த ஒருதடவை மன்னிச்சு விட்ருங்கனே” என இத்தனை நேரம் நின்றுகொண்டிருந்தவன் சட்டென்று கதிரவன் கால்களில் மண்டியிட்டபடி, பிணைக்கப்பட்ட கைகளால் கெஞ்சி மன்றாடத் தொடங்கினான்.
“விட்டுறேன்! நீ இங்க இருந்து போகலாம். அதுக்குமுன்னாடி, என்கிட்ட சம்பளம் வாங்குனது எனக்குத் தெரியும். ஆனா வேலைய யாருக்காகப் பார்த்தனு சொல்லிட்டனா இப்பவே கிளம்பலாம் நீ” எனக் கதிரவன் கேட்ட தொனியில், ஒருவேளை நீ பொய் சொன்னால் இங்கிருந்து செல்ல முடியாது என்ற மிரட்டல் இருந்ததை வேலு தெளிவாக உணர்ந்துக்கொண்டதனால், சிறு தடுமாற்றத்துடன், “அது வந்து, உங்க மாமா மச்சக்காளை ஐயாதான் ” எனத் திக்கி திணறி ஒருவழியாகக் கூறிவிட, கூடி இருந்தவர்கள் சலசலக்க தொடங்கினர்.
அனைவரும் பஞ்சாயத்தில் சொல்ல வேண்டுமென்றும், போலீசில் சொல்லவேண்டுமென்றும் சலசலக்க, பாண்டியும் சக்கரையும் கூட அதையே ஆமோதித்தனர் .
ஆனால் ஒரு சில நிமிடங்கள் யோசித்த கதிரவன் வேலுவை நோக்கி, “சரி நீ கிளம்பு. மறுபடியும் இந்தப் பண்ணை பக்கம் தல வச்சு படுக்காத. அது உன்னோட கனவுல கூட நடக்கக் கூடாது” என மிரட்டி அனுப்ப, அனைவரும் வேலுவை ஏன் விட்டுவிட்டான் என்ற ரீதியில் பார்த்தனர்.
“எல்லாரும் வேலைக்குப் போங்க. சக்கரை, நம்ம இப்ப டெலிவர் பண்ணவேண்டிய இறால் எல்லாம் எங்க இருக்கு?”
“அப்பவே வேன்ல வச்சுட்டே மாப்பு”
“நல்ல காரியம். சரி நீ நேர்ல போய்ட்டு வா சரக்க கொடுக்க. பாண்டி நீ பண்ணையப் பார்த்துக்க. உன்னோட கடைல ஆள் இருக்குறாங்கல்ல சக்கர. போறது ஒன்னும் பிரச்சனை இல்லையே ?”
“இல்ல மாப்பு. நான் போய்ட்டு வாறே” எனச் சக்கரை கூற,
பாண்டியோ, “அப்ப மாப்பு நீ எங்க கிளம்புற ?” எனக் கேட்க,
“மச்சக்காளைக்கு இலாட அடிக்க. இன்னைக்கு நான் அடிக்கப் போற அடில இனி என் பக்கட்டு தல வச்சுப் படுக்கக் கூடாது” எனக் கோபத்தோடு கிளம்பியவனைப் பார்த்து சக்கரையும் பாண்டியும் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றுவிட்டிருந்தனர்.
அத்தனை கோபம் கதிரவனிடம்.
*****
குறுக்கும் நெடுக்குமாக மச்சக்காளை வீட்டில் அவர்களின் அறையில் நடந்துகொண்டிருக்க, பாரிஜாதம் நம்பமுடியாத தன்மையுடன் நின்றிருந்தார்.
“ஏங்க நிசந்தானா?” என மீண்டும் நம்ப முடியாமல் வினவ,
“அடியே என்ன பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது? பொய்யும் புரட்டும் பேசுறவன் தான் நான். ஆனா அது உன்கிட்ட இல்ல. எப்பவும் இந்த மச்சக்காளை உன்ட பொய் சொல்லமாட்டான். அந்தச் சின்னப் பையன், நான் வீட்டைவிட்டு வெளியேத்துன பொடியன் என்னையே தேடி வந்து மிரட்டிட்டுப்போறான்.
எம்புட்டு துணிச்சல் இருக்கும்.
இனிமே அவன் விஷயத்துல நான் உள்ளவந்தா, இந்த வீட்டை விட்டு நிரந்தரமா நான் வெளில போகவேண்டி இருக்கும்னு மிரட்டிட்டு போயிருக்கான் டி.
அவனோட தொழிலை மொத்தமா முடக்க நான் செஞ்ச அத்தனை தடுகினத்ததுமு வெட்டியா வீணா போனது தான் மிச்ச.
இது இப்படியே போச்சுன்னா நாம சீக்கிர செல்லா காசா போயிடுவோம் டி. அப்புற நீ ஆசைப்பட்ட சொத்து சொகம்னு எதுவும் இல்லாம அடுத்தவன்ட்ட கையேந்துற நிலைமைக்கு வந்துடுவோம்.
அவனை என்னவோன்னு நினைச்சிட்டே. இந்தக் கதிரவன் அவனோட தாத்தாவை போல ரொம்பச் சுதாரிப்பா இருக்கான். இத்தனை வருசமா கட்டி காப்பாத்துனது நம்ம கைய விட்டு போய்டும் போலப் பாரிஜாதம். அது நடக்கக் கூடாது.
ஆண்டு அனுபவச்சிட்டிருக்க இந்த ஆஸ்த்திய இழக்க நான் தயாரா இல்ல. ” எனக் கோபம், இயலாமை, வெறுப்பு, சொத்தை அடைய வேண்டும் என்ற வெறி என எல்லாமும் கலந்து வார்த்தைகளைக் கொட்டிகொண்டிருந்தார்.
“ஏங்க நிதானமா யோசிங்க. நீங்க இம்புட்டு பதட்டப்பட்டு நான் பார்த்ததே இல்ல. கொஞ்சம் யோசிங்க. கண்டிப்பா ஏதாவது வழியிருக்கும். அந்தத் திமிருப்பிடிச்சவன் என்ன செஞ்சாலும் ஒன்னு நடக்காதபடி, நம்ம கைல இந்தக் குடும்பத்தோட குடுமி வச்சுக்குறது போல ஏதாவது வழி இருக்கும்ங்க.
நிதானமா யோசுச்சா கட்டாய நம்ம ராஜ்யதான். இதுவரைக்கும் இருந்தது போல எப்பவும். சொந்தக்காரங்களா சொத்தை அனுபவிக்கிறதைவிட, அந்தச் சொத்துகே சொந்தக்காரங்களா ஆயிட்டா ? அதுக்கென்ன வழினு பாருங்க” எனப் பாரிஜாதம் கூற,
சில நிமிடங்கள் யோசித்தவர், மேஜையிலிருந்த தண்ணீரை எடுத்து வேகமாகப் பருகி சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
பிறகு இப்படியும் அப்படியுமாக நடந்தவர் முகத்தில் தீவிர சிந்தனை, அதைத் தொடர்ந்து லேசான தெளிவு இறுதியில் பழைய பிரகாசம் என மீண்டும் அதே தெம்புடன் வன்ம சிரிப்புடன் பாரிஜாதத்தின் முன் நின்றிருந்தார் மச்சக்காளை.
“என்னங்க? உங்க முகப் பழையபடி மாறிடுச்சு. எதுவு யோசன சிக்கிடுச்சோ ? சொத்த எப்படிச் சொந்த கொண்டாடுறதுனு வழி கிடைச்சிடுச்சா ?”
“ஆமா பாரிஜாத. இத்தன நாளா இத நாம யோசிக்காம விட்டுட்டோம். ஆனாலும் நட்டமில்லை. எதுக்கு அந்த முழுச் சொத்தும் நம்மட்ட வரணும்னு ஆசைப்படறோம்? உனக்கு எனக்குக் குறையாத சொத்து பத்து வேணும்னு, நமக்கப்பறம் நம்ம பொண்ணு அனுபவிக்கணும்னு தானே இந்தப் பாடு படறோம்?”
“ஆமாங்க! புறவு வேற எதுக்கா? நீட்டி முழங்காம சட்டுனு விஷயத்தைப் போட்டு உடைங்க”
“சொத்த சொந்தமாக்குறதைவிட, சொத்தோட சொந்தக்காரனையே சொந்தமாக்கிட்டா ?”
“விளங்குறாப்புல சொல்லுங்க. சும்மா நொய் நொயினு இழுக்காதீங்க”
“சொல்றேன் டி சொல்லுறே. எனக்குத் தெருஞ்சு கதிரவனுக்குப் பெருசா இந்தச் சொத்துல பங்கு போகாது. முக்காவாசி லிங்கத்தோட கட்டுப்பாட்டுலதான் இருக்கு. லிங்கத்துக்கும் கதிரவனுக்கு ஆகாது. நம்ம ஆகவும் விடமாட்டோம். அதுனால லிங்கத்தோட சொத்து எல்லாம் மாறனுக்குத்தான். பேசாம மாறான நம்ம மாப்பிள்ளை ஆக்கிட்டா, இந்தக் கதிரவன்லாம் வந்து பேச முடியாதுல.
அதுனால சாந்தினிக்கும் மாறனுக்கும் கல்யாணத்த எப்டியாச்சு நடத்த்தனும்” எனக் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே மச்சக்காளையின் கைபேசி ஒலிக்க, கைபேசி திரையில் பார்த்தவர், “அட நம்ம குடும்ப வக்கீலுமா. அந்தக் கதிரவனோட தாத்தா அம்புட்டு விவரத்தையும் இந்த ஆளுகிட்ட தான் ஒப்படைச்சிருக்காரு. எது எது யாரு யாருக்குனு…
நானு இத்தன வருசமா இத பெருசா கருதல. ஆனா என்னைக்குப் பஞ்சாயத்துல அவன் என்ட இருக்குறதுல உரிமை கொண்டாட வருவேன்னு சொன்னானோ அன்னைக்கே இவரைப் பார்க்க போனே.
ஆனா இந்த மனுச அமெரிக்கால இருக்கப் பொண்ணு வீட்ல போய் உக்காந்துட்டு ஏழு எட்டு மாசம் கழுச்சு இப்பதான் வந்துருக்காரு போல. இரு விவர கேட்டுட்டு வரேன்” எனக் கூறியவர் கைபேசியை எடுக்கப் போக, அதை எடுப்பதற்குள் நின்றிருந்தது.
“அட நின்னுடுச்சு”
“ஆமா போன எடுக்காம என்ட உக்காந்து படம் ஓட்டிக்கிட்டு இருந்த நிக்காம ஓடுமா க்கும்? மொத போன போட்டு விவரத்த கேளுங்க” எனக் கூற, மச்சக்காளையும் சரி என்பதாய் கைபேசியில் அவருக்கு அழைத்தபடி சிறுது இடைவேளை விட்டு பேச போக, அதற்குள் பாரிஜாதம் மனதிற்குள் ஆயிரம் கோட்டைகளைக் கட்டி அதற்குத் தன்னைத் தானே ராணியாகப் பட்டாபிஷேகம் செய்து கொள்ளத் தொடங்கியிருந்தார்.
பாரிஜாதம் கனவு கோட்டை கட்டி முடிக்க, அதை இடித்துத் தள்ளும் ஆயுதத்தைக் கொண்டு வந்தார் மச்சக்காளை.
“என்னங்க? அந்தப் பையலுக்கு என்ன சொத்து இருக்குதாம் ? அவன் இப்ப தங்கியிருக்கத் தோப்பு மட்டும் தான ? வேற எதுவும் இல்லையே? அப்புறம் நம்ம மருமகனுக்கு வரதுல கொறஞ்சிட போவுது” என ஆவலாகக் கேட்க, “நமக்கு நேர சரி இல்லனு நினைக்கிறே பாரிஜாதம்”
“என்னங்க சொல்லுறீங்க?”
“உண்மைதான் சொல்லுறே. நம்ம நிலைமை இலவ காத்த கிளி ஆகிடுச்சு. உண்மையிலயே ஒண்ணுமில்லாத பைய மாறன் தான்”
“என்னங்க குண்ட தூக்கி போடுறீங்க? “
“அது குண்டு இல்லடி. இடி. அந்த வக்கீலு என் தலையில இறக்குன இடி. லிங்கத்தோட பேருல இறால் பண்ணையும் சிவகங்கையைத் தாண்டி இருக்குற குவாரியும் மட்டும் தான் இருக்கு. மத்த எல்லாச் சொத்துக்குச் சொந்த காரன், பார்வதியோட மூத்த வாரிசுக்குனு உயில் எழுதி வச்சிட்டு பெருசு போய்ச் சேந்திருக்கு.
இப்படி ஒரு வில்லங்கம் இருக்கும்னு நமக்கு என்ன தெரியுமா ? அந்தப் பயலுக்கு வந்த வாழ்க்கைய பாரே”
“என்னங்க சொல்றீங்க? எனக்குத் தலையெல்லாம் சுத்துதே”
“எனக்கும் அப்படிதான் இருக்கு. எவனை நம்ம மாப்பிளைக்கு ஆஸ்த்தி அந்தஸ்த்தை நிரந்தரமாகணும்னு நினச்சமோ அவன்கிட்ட 20 சதவீத சொத்து தான் இருக்கு. மிச்சமெல்லாம் அந்தப் பையனுக்கு.
இன்னும் சொல்ல போனா, நாம இப்ப நின்னு பேசுற வீடு கூட மாறனுக்கோ லிங்கத்துக்கோ சொந்தமில்லை. இப்படி என்னோட திட்டத்துல மண்ணு விழும்னு நான் நினைக்கவே இல்லையே” என மச்சக்காளை விரக்தியில் ஏதேதோ பேச, பாரிஜாதம் மட்டும் முதலில் அதிர்ந்தாலும், பிறகு மெல்ல யோசனைக்கு உள்ளானார்.
மெளனமாக நின்றிருந்தனர், சட்டென்று, “மண்ணு விழுகலங்க. இப்பவும் நமக்குப் பொண்ணு பொருளை கிடைக்க வாய்ப்பிருக்கு”
“என்ன சொல்லுறவ? உனக்கு எதுவும் மூல கீள குழம்பிடுச்சா ?”
“இல்லங்க! ரொமப் தெளிவாத்தான் சொல்லுறே. எதுக்குப் பதட்டப்படுறீங்க ? நீங்க முன்னாடி சொன்ன அதே திட்டம் தான். சொத்து இருக்குறவன மாப்பிளையாக்கிடுவோம். மாறனுக்குப் பதிலா கதிரவன்.
மாறன் ஒரு ஏமாளி, கதிரவனோட கலியாணத்தை முடிச்சுட்டா, மாறன் பங்கையும் நம்ம கைக்குள அவனை ஏமாத்தி வச்சுக்கலாம். ஏற்கனவே பண்ணை உங்க கைலதானே இருக்குது. அந்தக் குவாரியோ ஒண்ணுக்கு ஆகாது. புதுசா புதுசா சட்டம் போட்டு மலையை வெட்டி எடுக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. அதுனால அதுல பெருசா தொழில்னு ஒன்னு கிடையாது. அத வேணுனா அந்த மாறன் பைய வச்சுக்கட்டும். இப்ப நம்ம கவனம் பூரா கதிரவன் மேலதான்.”
“அடியே நீ சுய புத்தில தான் பேசுறியா? அந்தக் கதிரவனுக்கு நம்மள கண்டாலே ஆவது. அவனெப்படி ஒத்துக்குவான்?”
“நம்மலத்தான பிடிக்காது. அவனோட அம்மாவை பிடிக்கும்ல. இத எப்படிப் பேசணும்னு எனக்குத் தெரியும். கதிரவனுக்குச் சாந்தினிக்கும் கல்யாண தேதி குறிக்கிறது என்னோட பொறுப்பு” எனச் சவால் விடுவது போலப் பாரிஜாதம் நம்பிக்கையாகக் கூற, மச்சக்காளையும் சிறிது நம்பிக்கை கொண்டார்.

Advertisement