Advertisement

“அவரு இங்கையா? இருக்கவே இருக்காது. ஒரு நிமிஷம் இங்க இருக்காரோன்னு யோசுச்சிட்டேன்…” என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
அப்பொழுது சட்டென்று படகு வெட்டி இழுத்தது போலப் பிரம்மை அவளுள். மூழ்கியிருந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள், சிலுவையிடம், “தாத்தா…என்ன ஆச்சு ?” எனக் கேட்க,
“தெரியல தாயீ. மக்கர் பண்ணுது. செத்த பொறுமா. என்னனு பாக்குறே. ஒத்தாசைக்குக் கூட எந்தப் படகையும் காணலியே” எனப் பதில் கூறியபடியே பொலம்பியவராய் ஆராய, மீண்டும் அவளுக்குக் கதிரவன் அருகில் இருப்பது போல உணர்வு ஏற்பட்டது.
“ஏ மனசே! இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல. கடக்கண்ணி, கோவில், தெருன்னு ஒன்னுவிடாம அவரை நினச்ச சரி. இப்ப ஆளே இல்லாத இடத்துலயும் அவரு இருக்காரு சொல்லுறியா? கடலுக்குள்ள இருந்து எந்திரிச்சுவர சுட்டு எரிகிற கதிரவனால மட்டும் தான் முடியும். உன்னோட கதிரவனால முடியாது. புருஞ்சுதா ? கண்டத யோசிக்காம இந்தத் தாத்தா போட்ட (படகு )சரி பண்ணிட்டாரான்னு கவனி” என அவளின் மனதை அவள் அதட்ட, அவள் மனதோ தன்னுடைய இருதயத் துடிப்பை வேகப்படுத்தி, அவளின் வார்த்தைகளை அலட்சியப்படுத்தியது.
“என்னாச்சு எனக்கு?” என்ற கேள்வியுடன் சுற்றும் முற்றும் பார்க்க, கதிரவனின் முகம் மெல்ல மெல்ல கடலுக்குள் இருந்து உதித்துவரும் கதிரவனைப் போலத் தெரிய தொடங்கியது.
“நான் பாக்குறது நிசந்தானா? இது அவரு தானா ? இல்ல கனவா ?” என வாய்விட்டே முனங்கிவிட, சிலுவையோ, “என்ன பேத்தி, என்ன சொல்லுற ?” எனப் புரியாமல் வினவ, அவளையும் மீறிய செயலாய் அவளுடைய கைகள் கதிரவன் வந்துகொண்டிருந்த திசையைக் காட்ட, அந்தத் திசையில் பார்த்த சிலுவை நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
வேகமாகத் தன்னிடம் இருந்த விசிலொன்றை எடுத்து ஊத, கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த கதிரவனின் செவிகளிலும் இது தப்பாமல் விழுந்தது.
“என்ன சத்தம் ? அந்தப் போட் இருந்துதான் வருது. ஏதோ பிரச்சனை போல” என நினைத்தபடி திசையைச் சற்றே திருப்பி அவர்களை நோக்கி வர வர, விழியின் விழி இமைகள் கடல் சிப்பியாக மலர்ந்தது. மலர்ந்த அவளுடைய விழிகளுக்குள் விலைப்மதிப்பில்லாத காதல் முத்து ஜனித்திருந்தது. அதற்குள் அவர்களின் அருகே அவன் சமீபித்திருந்தான்.
இவளை சட்டென்று அடையாளம் கண்டு கொண்டவன் ஒரு நொடி வெறுப்பைக் காட்டிவிட்டு, பிறகு அப்படியொருத்தி அந்தப் படகில் இல்லாததைப் போன்ற பாவத்தில், “அட சிலுவை தாத்தா. நீங்களா ? என்னாச்சு ? போட் மக்கர் பண்ணுதா ?” எனக் கேட்க, “ஆமா கதிரவா. நான் வேற பொட்டப்புள்ளைய ஆசைப்பட்டுச்சுனு சுத்தி காட்ட கூட்டி வந்துட்டே. இந்த நேர பார்த்து இப்படிப் பண்ணுது. வெரசா ஐயா கரைக்குத் திரும்பனும்னு சொன்னாரு. வேற படகு ஒன்னு காணல. இதுவும் கிளம்புற மாதிரி தெரியல. எனக்கு ஒரு உதவி பண்ணு ராசா இந்தப் புள்ளைய கரைக்குக் கொண்டு போய்ச் சேத்துரு. உனக்குப் புண்ணியமா போகும். நான் இந்தப் பக்கம் வர போட்ல இருக்க ஆளுங்கட்ட சொல்லி சரிபண்ணி வந்திடுவே. எனக்கு இதொன்னு புதுசு இல்ல. இல்ல கரைல நம்ம முனுசாமிட்ட சொன்னா கூட அவன் ஆள கூட்டியாந்துருவான். கொஞ்சம் பண்ணு ராசா” என அவர் கேட்க, கேட்ட விதமும் குரலும் அவரின் முகமும் கதிரவனால் மறுக்கவோ ஒதுங்கவோ முடியாமல் போனது.
இவளையா ? என்ற கவலை அவனைத் தொற்றிக் கொண்டது. ஆனாலும் வேறு வழி இல்லை.
“சரிங்க தாத்தா. ஆனா நீங்க  மட்டும் எப்படி இருப்பீங்க ? நீங்களும் வந்துடுங்க” என்ற கேள்வியைக் கேட்கும்போதே அது அவனுக்கு அர்த்தமற்றதாகத் தோன்றியது. படகை விட்டுவிட்டு எப்படி அவர் வருவார். அதுவும் அவர்கள் தற்போது உபயோகப்படுத்தும் மீன்பிடி படகு ஒவ்வொன்று சுமார் ஆறு இலட்சம் பெரும். அனைவரின் மொத்த வாழ்வாதாரமும் அது தான். பல வருட சேமிப்பும், மேலும் வங்கியில் இன்னும் கட்டி முடிக்கப்படாத பல வருட கடனும் சேர்ந்து அந்தப் படகாக உருமாறியிருக்க, அப்படி அவர் விட்டுவிட்டு வரமாட்டார்.
கேட்டவன், சட்டென்று அவனே திருத்தி, “படகு விட்டு வரமுடியாதுல. சரி நான் முடுஞ்ச அளவு விரட்டி போய் முனுசாமியா அனுப்பிவைக்கிறேன்” எனக் கூறியவன், “வரச்சொல்லுங்க” என்ற ஒற்றைச் சொல்லை அவளைப் பார்த்து வேண்டா வெறுப்பாக உதிர்த்தான்.
ஆனால் இது எதுவும் விழியின் கவனத்திலோ கருத்திலோ பதியவே இல்லை. அவளுக்குக் கதிரவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே. கடலுக்குள் செல்ல வேண்டும் என்பது நீண்ட வருட விருப்பம். இந்தக் கணம் அந்தக் கடலில் அவளின் கதிரவனோடு பயணம் என்பது அவளால் நம்பவே முடியாத ஆனந்தத்தை அள்ளி அள்ளி அளித்தது.
இந்தப் படகிலிருந்து அந்தப் படகிற்கு மாற, இரண்டு படகுகளும் கடலில் தத்தளித்துக் கொண்டு இருக்க, இவளால் சில நிமிடங்கள் முயன்றும் கூட மாறமுடியவில்லை. கதிரவன் கை கொடுப்பானா என்ற ஏக்கத்தோடும், அதற்காக அவனிடம் போய் நிற்கவோ கெஞ்சுவோ முடியாது என்ற வீம்போடும், அந்தப் புறமும் இந்தப் புறமும் ஆடிக்கொண்டே இருந்தாளே ஒழிய, கதிரவன் இருந்த படகிற்கு மாறவே முடியவில்லை.
இதைக் கவனித்துக்கொண்டிருந்தவன், வேறு வழி இல்லாமல், “தாத்தா, இது போலப் பழக்கம் இல்லாதவங்கள ஏன் கூப்பிட்டு வரீங்க” எனக் கடிந்தபடியே, அங்குட்டு உங்க கைய பிடிச்சுக்கச் சொல்லுங்க. இங்கிட்டு நான் பிடிச்சுக்கிறேன்” என அவரிடம் கூற, முதலில் அவன் கூறியது அவளுக்குக் கோபத்தைக் கிளறினாலும், பிறகு அவனுடைய கரம் தன்னுடைய கரத்தை முதன் முதலாக ஸ்பரிசிக்கப் போகும் தருணத்தை ரசிக்கத் தொடங்கினாள்.
அவளுடைய இடது கரத்தை சிலுவை பிடித்திருக்க, மெல்ல வலக்கரத்தை அவளின் தலைவனின் வலகரத்தோடு பொருத்தினாள்.
இருவரின் கைகளும் இணைந்த நொடி கனல் விழியின் மனதில், “இப்ப இவரு பிடிச்ச என்னோட கைய எப்பயுமே விடக் கூடாது” என நினைக்க, அவளின் எண்ணத்திற்கு ஆசி கூறுவதைப் போலச் சட்டென்று கடல் நீர் திமிறிய அலை தூறலை அவர்கள் முகத்தில் பூ குவியலாகத் தூவியது.
அவள் மனபெட்டகத்தின் பொக்கிஷமாக அந்தப் பயணம் அமைந்தது. ஆனால் அதற்கு முற்றும் மாறாய், கதிரவனின் முகம் கடுகடுத்திருந்தது.
“ச்ச இருக்க இம்ச போதாதுன்னு இந்த இம்ச வேற” என அவன் மனதில் நினைக்க, அவன் முகப் பாவனையைப் பார்த்து விழி அவன் உணர்வுகளை மெல்ல படிக்கவும் செய்தாள் பதிலளிக்கவும் செய்தாள்.
“ஒருவேளை இவரு நம்மள இம்சனு நினைக்கிறாரோ? நினச்சா நினைச்சுக்கட்டும்” என சந்தோஷமாகவே அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“எல்லாம் என் நேர. இவகூடலாம் போகவேண்டி இருக்கு. இன்னும் எவ்ளோ நேரம் ஆகுமோ ?” என வெறுப்பாக இவன் நினைக்க
“இந்த நேரம் இன்னும் கொஞ்ச நேரம் நீள கூடாதா?” என விருப்பாக இவள் நினைக்க, உப்பு காற்று அவர்கள் இருவரின் முகத்தை லேசாக தழுவி சென்றது.
“என்ன இவ? வச்ச கண்ணு வாங்காம பாக்குறா?”
“ஐயோ விழி, இப்படிப் பார்காதடி. அவரு ஏதாவது நினைச்சுக்கப் போறாரு…கண்ணுமுழிய திருப்பு. வேணா பார்க்கதாடி. ஆனா முடியலையே! எப்படிப் பார்க்காம இருக்குறது” என அவளுக்குள் அவளே போராட்டம் செய்ய, அவளின் விழிகள் மட்டும் உண்மையுள்ள தொழிலாளியை போல இடைவிடாது இமைக்கவும் விடாது அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தன.
“என்னோட முகத்த வச்சுக்கூட எனக்கு இவளை பிடிக்கவே இல்லனு புருஞ்சு முகத்தைத் திருப்புவான்னு பார்த்தா, எதுக்கு இப்படி என்னையவே பார்த்துட்டு இருக்கா?”
“உங்களுக்கு இப்ப என்னைக் கூடத்தான் பிடிக்கல. அதுக்காக உங்கள காதலிக்காம இருக்க முடியுமா? இந்த ஜென்மத்துல நான்தான் உங்க பொண்டாட்டி. அதுனால உங்கள பார்க்காம இருக்க முடியாது மாமோவ்” என நினைத்துக்கொண்டாள்.
“அப்பாடா சாமி. தப்பிச்சேன். கரை தெரியுது…” என நிம்மதியாகக் கதிரவன் நினைக்க
“ஐயோ, என்னை இது கரை வந்திகிருச்சு போல. ஐயோ இவ்ளோ நேரம் இவர்கூட இருந்தும், ஒரு வாழ்த்துக்கூடச் சொல்லலியே. சரி இப்ப சொல்லிடலாம்” என இவள் மனம் கணக்கு போட,
“இவ என்னென்னமோ மனசுக்குள்ள நம்மள பத்தி பேசுறாளோ… எதுக்காக இப்படி இவ்ளோ ரியாக்க்ஷன் இவ முகத்துல” எனக் கேள்வியாகக் கதிரவன் எண்ணம் கொள்ள, தொண்டையை லேசாகச் செறுமியபடி அவனிடம் பேச வார்த்தைகளைத் தேடினாள்.
மனதிற்குள் இத்தனை நேரம் அவனுடன் துடுக்காகப் பேசியவள், இப்போது தடுமாறியபடியே, “உங்ககிட்ட….” என ஆரம்பிக்க, அவன் சட்டென்று கைகளை உயர்த்தி, “இன்னும் இரெண்டு நிமிஷம்தான். கரை வந்திடும். அதுவரைக்கும் வாய் தொறக்காம வந்தா உனக்கு நல்லது. எனக்கும் நல்லது. என்னைக் கோவப்படுத்திப் பார்க்காத” எனச் சட்டென்று முகத்தில் அரைந்ததைப் போலக் கூறிவிட, இத்தனை நேரம் இருந்த துள்ளல் விழியிடம் அப்படியே வடிய தொடங்கியது.
“இவரு எதுக்காக என்ட இவ்ளோ வெறுப்பா இருக்காரு… நான் பேசுறத கேட்க கூட இவருக்குப் பிடிக்கலியே. நான் காதலை சொன்னா ? என்னை ஆகும்” எனக் கவலை கொள்ளத் தொடங்கினாள். மனம் பாரமாக அழுந்தியது.
கரையும் வந்துவிட்டிருந்தது.
கடல் அலைகளில் படகு ஆட்டம் காண, மெல்ல மெல்ல இறங்க தடுமாறிக்கொண்டிருந்தவள், “ஐயோ இப்ப இறங்கணுமே. கொஞ்சம் முன்னாடிதான் அவரு என்னோட கைய பிடிச்சாரு. அது என்னோட வாழ்க்கையைக் கரை சேர்க்கும்னு நினச்சேன். ஆனா இந்தக் கடற்கரை சேருற தூரம் கூட நிலைக்கலியே” என வருத்தத்துடன் நினைத்த நொடி, படகிலிருந்து குதித்திருந்த கதிரவன் தடுமாறிக்கொண்டிருந்த கனல் விழியன் கைகளைச் சட்டென்று பற்றியிருந்தான்.
இருவரின் கைகளும் இணைந்தது. முதல் முறை இணைந்த போது அவளுக்கு ஆனந்தத்தை அளித்த அவன் ஸ்பரிசம், இப்போதோ நம்பிக்கையைத் தந்தது. படகிலிருந்து இறங்கும் பொழுது அவள் நீரில் மூழ்கிவிடாமலும், அதே நேரம் ஒரு சில ஆண்களைப் போலத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாமலும், மேலும் நீ விழுந்திடமாட்டாய் என்பதாய் அவனுடைய கரம் நம்பிக்கையை அளித்திருந்தது.
அந்த நொடி, இரண்டாவது முறை அவன் கரம் தொட்ட நொடி முதல், விழியினுள் அதீத நம்பிக்கை வேர்விடலானது.
“கொஞ்ச நேரம் முன்னாடி என் மேல அம்புட்டு வெறுப்பைக் காட்டின நீங்கதான் இப்போ நான் விழாம இருக்கப் பிடிச்சிருக்கீங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. இப்போ என் மேல இருக்க எண்ணம் மாறும். நான் கண்டிப்பா மாத்துவேன். அன்பாவோ அதிரடியாவோ. ஆனா நிச்சயம் நான் தான் உங்க பொண்டாட்டி” எனப் பழைய துடுக்குடன் தனக்குள் பேசிக்கொண்டவள், இலாவகமாக இறங்கி, அலைகளில் நடந்து கடற்கரை மணலில் கால் பதித்தாள்.
“இந்தக் கடற்கரைய தாண்டுறதுக்குள்ள, அவர்கிட்ட என்னப்பத்தின அபிப்ராயத்தை மாத்தணும்” என ஒரு முடிவோடு இருக்க, அதற்கு இடையூறாக வந்து சேர்ந்தார் சற்று முன்பு அவளையும் முல்லையையும் சேர்த்து சந்தித்த ரோசா.
கதிரவன் படகை நிறுத்திவிட்டு வருவதற்காகக் காத்திருந்தவள் முன்னால், ஒரு வன்மம் கலந்த இலக்கார சிரிப்புடன், “என்னமா ? இது தான் அந்தப் புரஜெட்ட (ப்ராஜெக்ட்) ? நீங்க படிக்கப் போறது இத கத்துக்கத் தானா ?” என வாயில் கை வைத்து அங்கலாயித்தவர்,
மேலும் அவரே தொடர்ந்து, “இப்படி ஊர் சுத்த போறேன்னு சொல்ல வேண்டிதானா ? அதுக்கு எதுக்கு மா படிப்பு கிடிப்புனு பொய் நாடக போடுறீங்க? ஆண்ட புளுகு ஆகாச புளுகாவுல இருக்குது. பொட்ட புள்ளைய நல்லா வளத்துருக்காங்க” எனக் கூற, அவர் கூறிய அனைத்தையும் சரியாகக் கேட்டபடி விழியின் பின் வந்து நின்றான் கதிரவன்.
கதிரவனைப் பார்த்ததும் வாயை மூடிய ரோசா, அவனையும் சேர்த்து ஒரு ஏளன பார்வையைப் பார்த்தபடி, அங்கிருந்து அகல, விழியோ இப்போது கதிரவனைப் பார்க்க, வெறுப்பை அப்பட்டமாகச் சிந்திய கதிரவனின் விழிகள் அவளை எரித்து விடுவதைப் போலப் பார்த்தன.
விழியினால் ரோசாவிடமும் பேச முடியவில்லை. அவர்கள் முதலில் சொல்லி சென்றது பொய் தானே. முல்லை விளையாட்டாகச் சொல்லியது இப்படி வினையாக முடியும் என்று கண்டாளா அவள் ? அதோடு ரோசா கதிரவனை நேரடியாக எடுத்து பேசாததால், அவனோடு தன்னை இணைத்து பேசுகிறார் என்றே விழிக்கு புரியவில்லை. அதனால் பதில் சொல்லாமல் நிற்க, கதிரவன் ரோசா கூறிய வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, “இவ எந்த இடத்துலயும் உண்மையே பேசமாட்டாளா ? என்ன பொண்ணு இவ ?” என நினைத்தபடி வெறுப்பைச் சிந்தினான்.
“இல்ல…அது வந்து…” எனக் கனல் விழி தொடங்கும் முன்னமே, “இதோ பாரு. சிலுவை தாத்தாவுக்காக இறக்கிவிட்டுடேன். அவ்ளோதான்…உன்ட பேச பிடிக்கலைனு சொன்னேன்ல. ஒருதடவ சொன்னா புரியாதா உனக்கு?” எனக் கேள்வி கேட்டவன் நிற்காமல் விறுவிறுவென்று நடக்க, விழி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள்.
“இவருகிட்ட பேச போறப்பெல்லாம் ஏன் இப்படி நடக்குது? நான் இவர்கிட்ட பேச கூடாதுனு என்ன சுத்தி தீவிரமா விதி திட்டம் போடுது. ஒன்னும் பிரச்னை இல்லை. அத நான் கண்டிப்பா மாத்தியே தீருவேன். அந்த விதிய மாத்துற சக்தி மதிக்கு இருக்கானு தெரியாது. ஆனா என்னோட காதலுக்குக் கட்டாயம் இருக்கு” என நம்பிக்கையுடன் நினைத்தவள், போகின்றவனைப் பார்வையால் மட்டும் பின்தொடர்ந்தாள்.
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா” என மெல்ல தனக்குள் வாய் அசைத்து சொல்லி கொண்டாள். செல்கின்றவன் சட்டென்று நின்று, திரும்பி இவளை ஒருமுறை பார்த்துவிட்டுச் சென்றான். ஏன் அப்படிச் செய்தான் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் விழி மனதோடு பேசிய வார்த்தையின் வலிமை அவனை அப்படித் திரும்பி பார்க்க வைத்தது என்று என்றாவது உணர்ந்துகொள்வானா? காலத்தின் கையில் அவர்களின் காதல்.
இல்லை கனல்விழியின் கையில்தான் அவர்களின் காதல்.

Advertisement