Advertisement

ஓடமும் உப்பு காற்றும் – 15
“அட ரெண்டு பேரு ஜோடி போட்டு எங்க போயிட்டு இருக்கீங்க?” என அவர்களின் வழியை அடைத்தபடி வந்து நின்றவர் ரோசா.
“அது ஒன்னு இல்ல ரோசா அக்கா. இன்னு ஆறு மாசதான இருக்குப் படிப்பு முடிக்க. கடைசி வருஷம் ப்ராஜெக்ட் பண்ணுற விஷயமா விசாரிக்க அவசரமா போறோம். வந்து பேசுறோம்”
“ஏண்டி கண்ணுக்கெட்டுன்னு தூர வரைக்குக் கடலுதான் இருக்கு. அங்கன என்னடி படிக்கப் போறவ?” என நம்பாமல் ரோசா கேட்க,
“அட! கடலு சம்மந்தமாதான் ப்ராஜெக்டே. உனக்குச் சொன்னா புரியாது கா. நீ வேணும்னா உன்னோட அக்கா மக ஒருத்தி படிக்குதே. அதுகிட்ட கேட்டு பாரு. அப்போதான் புரியும். சரி நாங்க கிளம்புறோ” எனக் கூறியபடி நிற்காமல் விழியின் கைகளைப் பற்றியபடி விடு விடுவெனக் கடல் மணலில் கால்கள் புதைய புதைய இருவரும் நடந்து சென்றனர்.
“ஏண்டி முல்ல பொய் சொன்ன? நாம சும்மா போறோம்னு சொல்ல வேண்டிதானே? இந்தச் சின்ன விஷயத்துக்கெல்லாம் யாராவது பொய் பேசுவாங்களா?”
“ஓ அப்ப பெரிய விஷயத்துக்குப் பொய் சொல்லலாமா?” என முல்லை இடக்காகக் கேள்வி கேட்க, அவளை முறைத்தபடி, “இதோ பாரு அண்ணியா வர போறவனு கூடப் பார்க்கமாட்டேன். நங்குன்னு மண்டையில கொட்டிப்புடுவே.
பொய் எப்பவும் எனக்குப் பிடிக்காது. ஆனா சில நேரத்துல ஒரு பொய் ஒரு உயிரையோ வாழ்க்கையையோ மாணத்தையோ காப்பாத்தும்னா அப்ப பொய் சொல்றது தப்பே இல்ல” என நீளமாகக் கனளவிழி பேச,
“அடிப்பாவி, விட்டா எப்ப மட்டும் பொய் சொல்லலாம்னு லிஸ்ட் போட்டுடிவ போலியே”என முல்லை கேட்க,
பெரிதாகச் சிரித்தவள், “இதெல்லாம் நான் சொல்லலைடி , திருவள்ளூர் சொல்லிருக்காரு. ஒரு பொய்யால நல்லது நடக்கும்னா அத சொல்றதுல தப்பு இல்லனு” என விழி கூற,
“எம்மா என்னோட மாமனாரு வாத்தியாருனால ஏகப்பட்ட விஷயத்தைச் சொல்லிக்கொடுத்துருக்காரு போலவே. நீ மட்டும் தான் இப்படியா? இல்ல உங்க அண்ணனும் இப்படித்தானா ? ஏதாச்சும் தப்பு பண்ணிட்டு வந்து என்கிட்ட அடி  வாங்க கூடாதுனு பொய் சொல்லி திருக்குறள் சொல்லுவாரோ ?” எனக் கற்பனையில் மிதந்தபடி முல்லை கூற,
“எங்க அண்ணனை அடிப்பியா?” என முறைத்தபடி விழி கேட்க,
“அட சும்மா சொன்னேன் டி. உங்க அண்ணனுக்கு நான் போன் கூட அடிக்கிறது இல்ல. அவரையா அடிக்கப் போறே. சும்மா லொள்ளலாய்க்கு. நீ கண்டுக்காத” என முல்லை சமாளித்தாள்.
அப்போது சரியாகப் பார்த்திபனே விழியின் கைபேசிக்கு அழைத்தான்.
முல்லையிடம் தனியாகக் கைபேசி இல்லாததால், அதுவும் அவர்கள் தனித்துப் பேசிக்கொள்ளும் சூழல் இல்லாததால், அவர்கள் இருவரும் மட்டும் கடலுக்குச் சென்றிருப்பதை அறிந்தே தனியாக வந்து தங்கைக்கு அழைத்தான்.
”ப்ளீஸ் விழி. எப்படியாச்சும் முல்லைக்கிட்ட ஒரு அரைமணி நேர பேச உதவி பண்ணே. வீட்ல அவ இருந்தா பேச முடியாது. பேசவும் விடமாட்டாங்க. அப்பாகிட்ட கடைக்குச் சரக்கு எடுக்கப் போறேன்னு சொல்லிட்டு முச்சந்தில நின்னு கால் கடுக்கப் பேசிட்டு இருக்கே. கொஞ்சம் புருஞ்சுக்கோ, நீங்க இன்னொரு நாள் கடலுக்குப் போய்க்கோங்க. உள்ள போய்ட்டா போன் பேசமுடியாது. அதோட உங்கள கூப்பிட்டுப் போறது சிலுவை தாத்தாவமே. அவரு வீட்ல சொல்லிடுவாரு. ப்ளீஸ்” எனக் கெஞ்சி கொண்டிருக்க, விழியோ சற்று யோசித்து, “சரி சரி ரொம்பப் பம்மாத. நீங்க பேசுங்க, நான் குறுக்க வரல. ஆனா அதுக்காக நான் கடலுக்குப் போகாம இருக்க முடியாது. இவ இங்க இருக்கட்டும், என்கூட வரவேணாம். நான் மட்டும் தாத்தா கூடப் போயிட்டு வரேன்”
“என்னது தனியாவா?” அதிர்ந்தான் பார்த்திபன்.
“ஹே என்ன ஷாக்? அதெல்லாம் ஒண்ணுமில்ல. கூப்பிட்டுப் போறது நம்மள தூக்கி வளர்த்த சிலுவை தாத்தா. ஞாபகம் இருக்குல்ல ? அதுனாலதான் முருகேசன் மாமாவே எங்களை மட்டும் அனுப்பியிருக்காரு. அதுனால தைரியமா போகலாம்”
“அப்படினா? முல்ல தனியா இருக்குமே” என இதற்கும் அவன் யோசிக்க,
”அப்படிச் சொல்லு. அப்ப முன்னாடி கொடுத்த சாக் எனக்காக இல்லையா ? முல்லைக்காகவா ?”
“ஐயோ பாப்பா படுத்தாதா. நீங்க இரெண்டு பேரும் முக்கியம். சரி நான் பேசவே இல்ல. சேர்ந்தே போங்க, யாரும் தனியா போகவேணாம்” எனக் கூறியபடி அழைப்பை துண்டிக்கப் போக,
“அண்ணா ஒரு நிமிஷம் இரு. நான் சும்மா விளையாண்டே. நீ கவலைப்படாத, நீங்க பேசலாம். நான் இவளுக்குத் தல சுத்துதுன்னு சிலுவை தாத்தா பொண்ணு வீட்ல விட்டு போறேன். நான் பத்திரமா வந்துருவே. அதுவரைக்கும் நீங்க பேசிட்டு இருங்க. கடல ஒட்டிதான அவுங்க குடுசை இருக்கு. இங்க நான் பாத்துக்கிறே. சரியா ?”
“நிஜமாவா பாப்பா? தேங்க்ஸ். ஆனா நீ ஜாக்கிரதை”
“என்னடா? எதோ நாய்கள் ஜாக்கிரதை போலச் சொல்லுற. சரி சரி நான் கடல பார்க்க போறேன். நீ கடல போட போ” எனச் சிரித்தபடியே முல்லையிடம் கைபேசியை நீட்ட, முல்லையோ அதைப் பிடுங்காத குறையாக வாங்கினாள்.
தன் அண்ணனையும் தோழியையும் நினைத்து அவர்களின் செயல்களால் மெலிதாகப் புன்னகைத்தவள், “முல்ல, தாத்தாவோட பொண்ணு வீட்ல உனக்கு மயக்கம் வருதுன்னு சொல்லி விட்டுட்டு போகப்போறே. கொஞ்ச பார்த்து சூதானமா இருந்துக்கப் புள்ள. நம்ம நாடகத்தை நீயே ஒளிபரப்பிடாத” எனச் சிரிப்புனுடே சொல்லி சென்றவள், படகில் ஏறி அமர்ந்தாள். அது ஒரு சிறிய மீன் பிடி படகு. துடுப்பு போடவேண்டிய அவசியம் இல்லாத நவீன காலத்து படகு. அதிகபட்சம் நால்வரோ ஐவரோ அமர்ந்து செல்ல கூடியது அவ்வளவே.
எதிர்த்துவரும் அலைகள் தங்களை உய்யாரமாய் வெண்ணுரைகள் கொண்டு அலங்கரித்தபடி உயர்ந்தோங்கி எழும்பி எழும்பி வந்து கொண்டிருக்க, நீ எத்தனை ஆணவமாய் வந்தாலும் உன்னுள் ஊடுருவி செல்வேன் என்பதாய் கனல்விழி சென்ற படகு அலைகளைக் கிழித்துக்கொண்டு முன்னேறியது.
அலையின் ஆட்டத்தோடு படகு சிறு குலுங்கலுடல் செல்ல, அதில் மிதந்து செல்வது விழிக்கு புதியதொரு அனுபவமாய் இருந்தது. ஆழ்கடலில் இன்னும் எத்தனை அதிசயங்கள் இருக்கின்றன என்ற எண்ணத்தோடு பயணித்தவளின் நெஞ்சில், முன்னெப்போதோ சட்டமாக அமர்ந்துவிட்டிருந்த கதிரவன் மேலோங்கலானான்.
அந்தக் கடலும் இவளின் கதிரவனும் விழிக்கு அதிசயமாகவும் தெரிந்தனர் விசித்திரமாகவும் தெரிந்தனர். சட்டென்று பொங்கி எழும் அலைகளோடு அவனது கோபத்தை ஒப்பிட்டாள். கரையில் இருப்பவற்றை வாரி அனைத்துச் செல்லும் போது அவனின் அரவணைப்பை பொருத்தி பார்த்தாள். ஆழமான சமுத்திரத்தை கண்டவள், அவனின் ஆழ் மனதை பற்றி யோசித்தாள்.
இப்படியே எல்லா நிமிடங்களிலும் எல்லா நொடிகளிலும் அவனையே நிரப்பிக்கொண்டிருந்தாள். அவளின் தலைவனோ, அந்த நிமிடம் இரெண்டு நாட்களாக நடந்த அனைத்தையும் மீண்டும் ஒருமுறை தனக்குள் நினைத்து பார்க்க தொடங்கினான்.
புதுக்கோட்டைக்கு அனுப்பப்பட்ட இறால் சில மணி நேரங்களிலே நிறம் மாறி திடத்தன்மை குறைந்து ஏதோ ஒருவாரத்திற்கு முன் பிடிக்கப்பட்டவை போலத் தோன்ற செய்திருந்தது. அதைப் பரிசோதித்தவர்கள், வெளி நாட்டிற்கு ஏற்றுமதி பண்ணுவதற்கு உகந்ததல்ல என்று சான்றிதழ் வழங்கியதோடு, மேற்கொண்டு இந்தக் குழுமம் அனுப்ப தகுதி இருக்கின்றதா என மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கூறவே, புதுக்கோட்டை ஏற்றுமதி இறக்குமதி சங்க தலைவர் சேனாதிபதி அவர்களுக்கு அளித்திருந்த வியாபாரத்தையும் இரத்துச் செய்துவிட்டதாகச் சங்கத்திலிருந்து செய்தி வந்திருந்தது.
இரண்டு நாட்களாக அழைந்துவிட்டான். சேனாதிபதியை நேரில் சந்திக்க முடியவில்லை. முதல் முதலாகக் கிடைத்த வெளிநாட்டு வியாபாரமும் கைவிட்டுப் போயிருந்தது. எப்படி அவன் அனுப்பிய இறால்கள் தரமற்றவையாக மாறின என்று அவனுக்குத் தெரியவில்லை. வழியில்தான் எங்கையோ ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று தெரிகிறது. ஆனால் அது எப்படி என்பது புலனாகவில்லை. பெட்டிகளை அப்படியே மாற்றிவிட்டிருந்தார்களா என்ற கோணத்தில் சல்லடடை போட்டுத் துருவி விட்டிருந்தான். ஆனால் பலன் இல்லை.
மச்சக்காளை தான் அப்படி எதுவும் செய்யவில்லையே. இரசாயன திரவியத்தை அல்லவா தெளிக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார்.
இன்று அவனது பிறந்தநாள். எப்போதும் அப்படியொன்றும் விமரிஷியாக இருக்காது என்றாலும் கூடக் குறைந்தபட்சம் தன் அன்னையிடம் ஆசீர்வாதமாவது பெற்றுக்கொள்வான். ஆனால் இன்றோ அந்த நினைப்பே இல்லாமல் தனிமையைத் தேடி வந்துவிட்டிருந்தான்.
அந்தத் தனிமை அவனுக்குத் தோப்புவீட்டில் கூடக் கிடைக்காது என்ற எண்ணத்தினாலோ என்னவோ, கண்ணுக்கெட்டும் தூரம் வரைக்கும் ஆள்நடமாட்டம் தெரியவேண்டாம் என்று நினைப்பவனைப் போலப் படகொன்றை எடுத்துக்கொண்டு தானே இயக்கியபடி கடலுக்குள் வந்திருந்தான். குறிப்பிட்ட தூரத்தில் படகை நிறுத்தியவன், எங்கும் செல்ல விரும்பாதவனாய் நீண்டுகொண்டே போகும் முடிவில்லாத கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.
அப்படியே அமர்ந்திருந்தவன் நெஞ்சில் சட்டென்று ஒரு யோசனை, “வெளியையோ வழியிலையோ எதுக்குத் தப்பு நடந்துருக்கணும்? ஒருவேளை நம்ம பண்ணையில நடந்திருக்குமோ ?” எனத் தோன்றவே, படகை இயக்கி கரைக்குத் திரும்ப முனைந்தான்.
இன்னும் சிறிது இடைவேளை தான். கதிரவன் இருக்கின்ற படகை அவள் அணுகுவதற்கு. யாரை ஒருமுறையாவது காண வேண்டும் என்று எண்ணினாளோ அவன் அவளுக்கு அருகில்தான். என்னவொன்று இன்னும் அவளின் பார்வையில் விழவில்லை.ஆனால் அவளின் பார்வை உணராது விட்ட கதிரவனை விழியின் நெஞ்சம் உணர்ந்துவிட்டிருந்தது. திடீரென்று படக் படக் என்று வேக வேகமாக அவளுடைய இதயம் துடிக்க, இந்தத் துடிப்பு, இந்த வேகம், இந்தப் பதட்டம், இந்தப் படபடப்பு என அனைத்தும் அவன் அருகாமையில் இருந்தால் மட்டுமே அவள் உணருவாள்.
அதை உணர்ந்தநொடி அவளுள் ஒரு சிறு சலனம். அந்தச் சலனம் எப்படியிருந்ததென்றால், அலைகளற்ற கடலின் நீர்ப்பரப்பில் மேலே, திடிரென்று புகுந்து செல்லும் படகினால் ஏற்பட்ட சின்னச் சிறிய அசைவை போல அவள் நெஞ்சத்தில் சிறிய சலனம் தோன்றி மறைந்தது.

Advertisement