Advertisement

காணுமிடமெல்லாம் நீ – 14
தனக்கு அண்ணியாய் வர போவது யாரென்று நச்சரித்துக் கொண்டே வந்தவளை ஆனந்தத்தில் திக்குமுக்காட வைத்தன தேவியின் வார்த்தைகள். முல்லை கொடி என்ற பெயர் விழியன் செவிகளில் இன்பமான இசையை மீட்டியது. அன்னையிடம் கிடைக்கவேண்டிய செய்தி கிடைத்தாயிற்று, இனி தமையனை சீண்ட போக, அவனோ முதன் முதலாக வெக்கப்பட்டான்.
“அட அண்ணா, உனக்கு இதெல்லாம் தெரியுமா? பார்த்து பார்த்து முல்லைய பார்த்தது வெட்கப்படக் கொஞ்சம் மிச்சம் வை. ஆமா, நீ பாட்டுக்க இம்புட்டு சந்தோச படுறியே… நாம பொண்ணு கேட்கத்தானே போறோம். ஒருவேளை முல்ல உன்ன வேணான்னு சொல்லிட்டா” என அவனைச் சீண்ட, அவனோ அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கியபடி பெரிதாகச் சிரித்தவன், “நடக்கவே நடக்காது….முல்ல அப்படிச் சொல்லவே சொல்லாது” என உறுதியான குரலில் கூறினான்.
“எப்படிண்ணா?  முல்ல மேல அவ்ளோ நம்பிக்கையா ?”
“ஹ்ம்ம்…”
“அதெப்படி…உறவுனாலு நீங்க ஒன்னும் அவ்ளோ பழக்கமில்லையே. நான் தான் அவளோட பெஸ்ட் பிரண்ட். எனக்குத் தான் அவளைத் தெரியும். நீ எப்படி இவ்ளோ நிச்சயமா சொல்லுற ?”
“அது அப்படிதான்… “
“அண்ணா சும்மா மழுப்பாம உண்மைய சொல்லு. நீ சொல்ற தினுச பார்த்தா இதுக்குப் பின்னாடி ஏதோவொன்னு இருக்கும் போலியே? லவ் எதுவும் பண்றியா ? தங்கச்சிட்ட மறைக்காம சொல்லு”
“லவ் தான். ஆனா மொதல்ல அது முல்லையோட லவ். இப்ப எங்களோட லவ்”
“அடே! அண்ணா என்னடா சொல்லுற ?”
“விழி ஷாக்க குற, ஷாக்க குற, நீ அதிர்ச்சியாகுறேன்னு, அய்யாவை சைடுல மரியாதை குறைவா பேசுற”
“ஹக்கும்… இப்ப மரியாதையா முக்கியம்? உங்க காதலுக்கு மரியாதை கதை என்னனு சொல்லுடா அண்ணா”
“விளங்கிடும். இப்படியொரு மரியாதையான தங்கச்சி ஊர் உலகத்துல வேற யாருக்கும் கிடைக்காது. அட்லீஷ்ட் முல்ல முன்னாடியாவது தொல்லை பண்ணாம இரு” எனக் கடிய,
“கண்டிப்பா இருக்கேன். ஆனா உங்க லவ் ஸ்டோரி சொல்லு”
“நம்ம அம்மாக்கு முடியலன்னு உன்கூட முருகேசன் மாமா, மல்லி அத்த அப்புற முல்ல எல்லாரும் வந்துருந்தாங்கல்ல, அப்பதான். முல்லைக்கு என்னை பிடிச்சது போல. மாமாவும் அத்தையும் கிளம்பிட்டாங்க. முல்ல ஒரு வாரம் அம்மாக்கு ஒத்தாசையா இருந்துச்சு. நானும் பார்ப்பேன் அவளை. ஆனா பேசமாட்டேன்”
“நீ பேசுனாதான் உலகம் அழிஞ்சிடுக்குமே” என விழி கூறி சிரிக்க,
“கிண்டல் பண்ணாத பாப்பா. ஆனா நானும் முல்லைய பார்ப்பேன்”
“நீ கடைசிவரைக்கும் பார்க்க மட்டும்தான் செஞ்சிருப்பனு தெரியும். லவ் யாரு சொன்னது ?”
“உங்க அண்ணிதான். நான் பார்த்துட்டு யோசிச்சிட்டு போய்டுவே. ஆனா முல்ல சட்டுனு வந்து பட்டுனு கல்யாணம் பண்ணிக்கிறியா மாமான்னு கேட்டுடுச்சு. நான் அப்படியே ஆடிபோய்ட்டேன்”
“அட சூப்பரு! அப்புறம்? என்ன ஆச்சு ? ஒகே சொல்லிட்டியா ? அப்போ முல்ல என்ன சொன்னா?” எனக் கனல்விழி வேக வேகமாகக் கேள்விகளை அடுக்க,
“நான் வீட்ல பேசுறேன்”
“என்ன அண்ணா? நீ வீட்ல பேசுறேன்னு சொன்னியா ? இதுக்கு என்ன அர்த்தம் எனக்கு ஒன்னு புரியல” எனப் புரியாமல் பார்த்திபனிடம் விழி கேட்க,
“எனக்கும் தான் புரியல விழி. எனக்கு மட்டும் இல்ல முல்லைக்கும். ஏன்னா வீட்ல பேசுறேன்னு சொன்னது நான் இல்ல. நம்ம அப்பா. நாங்க ரெண்டுபேரும் பயந்து போய் நின்னுட்டோம்.
முல்லைக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. எனக்குக் தரையில படாம கால் கிடுகிடுன்னு ஆடிடுச்சு… அப்பதான் நம்ம அப்பா சொன்னாரு, ‘இதோ பாரு மா முல்ல. உன்னோட மனசுல இருக்குறத சொல்லிட்ட. வீட்ல எதுவும் சொல்லிக்காத. நான் தேவிகிட்ட பேசிட்டு அப்புறம் உங்க வீட்டுக்கு வந்து பேசுறேன். அதுக்குக் கொஞ்ச நாள் ஆகும். பார்த்திபன் இப்பதான் கடை வச்சிருக்கான். தொழில் கொஞ்சம் சூடு பிடிக்கட்டும், அப்புறம் இதெல்லாம் பார்க்கலாம். அதுவரைக்கும் நீங்க பேசுறதெல்லாம் வேணாம்’ அப்படினு கொஞ்சம் அரட்டியே சொன்னாரு. ஆனாலும் எனக்கும் முல்லைக்கும் சந்தோசம் தான். சொல்லிட்டு ‘சரி போங்க’ அப்படினதும் இரண்டு பேரும் ஜூட் னு ஓடிட்டோம் . இது தான் எங்க ஸ்டோரி” என முடித்தான்.
“அப்புறம்? அப்புறம் மறுபடியும் பார்க்கவோ பேசவோ இல்லையா ?” என ஆவல் பொங்க கேட்டாள்.
“இல்ல பார்க்கல, அவ இங்க வரும்போது நான் வெளியூர் போயிட்டே கடைக்குச் சரக்கு எடுக்க. ஆனா அப்பப்ப போன்ல பேசிப்போம். ஆனா ரொம்ப இல்ல. எப்பவாவதுதான்”
“அப்படியா? சூப்பர் அண்ணா கலக்கலான காதல் தான். காதல் சொன்ன அப்பவே கல்யாணத்துக்கும் சம்மதம் கிடைச்சிருக்கு. முல்ல அதுக்கு அப்புறம் எப்ப பேசுனா ? என்ன பேசுனா அண்ணா ?”
“லவ் சொன்ன பிறகு அப்பா போய், முருகேசன் மாமா நம்பிக்கையைக் கெடுக்கக் கூடாது. நானே வந்து பேசுற வரைக்கும் பொறுமையா இருன்னு முல்லைக்கிட்ட சொல்லிட்டு, அன்னைக்கி சாயிங்காலமே கூட்டிட்டு போய்ட்டாரு. கிட்டத்தட்ட இரண்டுவார கழுச்சுதான் என்னால அவகிட்ட பேச முடுஞ்சது. எதார்த்தமா போன் எடுத்துட்டா… அப்போதான் நான் பேசுறேனே அவளுக்குத் தெருஞ்சது. நான் முருகேசன் மாமாட்ட கடை விஷயமா பேச போன் அடிச்சேன்”
“அப்படியா? சூப்பர் அண்ணா. கடவுளே உங்களுக்கு ஹெல்ப்  பன்றாரு. முல்ல ரொம்பச் சந்தோச பட்டிருக்கும். என்ன சொல்லுச்சு ? அப்பா சம்மதம் கிடைச்ச பிறகு மொத மொத என்ன பேசுச்சு” என ஆர்வமாகக் கேட்டாள்.
“அது…. அது….” எனத் தயக்கத்துடன் பார்த்திபன் இழுக்க,
“டேய் அண்ணா சொல்ல கூடாத பெர்சனல் அப்படினா வேணாம். ரொம்ப இழுக்காத. ஆனா நம்ம பிரிஎண்ட்ஸ் போலன்னு சொல்லிட்டு இப்ப இப்படி மறைக்கிற. கவனிச்சுக்கிறே ” எனக் கூற,
“மறைக்கல. ஆனா சொன்னா நீ ஓட்டக்கூடாது”
“என்னது ஓட்றதா? அப்படி என்னடா சொன்னா ?”
“ஏதும் சொல்லல. கேள்விதா கேட்டுச்சு”
“சரி! என்ன கேட்டா ? நீயும் என்ன லவ் பண்றியான்னு கேட்டுச்சா?”
“அப்படிக் கேட்ருந்தாதான் பரவாயில்லையே. அதைவிட்டு, உங்களுக்குப் பேஸ்மெண்ட் வீக்கானு கேட்டுடா விழி. அன்னைக்கு அப்பாவை பார்த்ததும் கால் ஆடுச்சுல. அத மனசுல வச்சு கேட்டுபுட்டா. என்னோட மானமே போச்சு” எனப் பாவமாக முகத்தை வைத்து கூற, கனல்விழியோ பெரிதாகச் சிரித்துக்கொண்டிருந்தாள்.
அவளை முறைத்தவன், மேற்கொண்டு அவனே தொடர்ந்து, “கேட்டது கூடப் பரவாயில்ல. கேட்டுபுட்டு கெக்க புக்கன்னு சிரிக்கவேற செய்றா பாப்பா… அதுதான் அண்ணனுக்கு ரொம்ப அவமானமா போச்சு” எனத் தீவிரமாகப் பேசியவனைப் பார்த்த கனல்விழியின் கண்களில் ஆனந்த கணீர் வரும் வரை சிரித்ததோடு, “நீ ரொம்ப ஸ்வீட் அண்ணா… முல்ல ரொம்ப லக்கி” என மனதார கூற, அவர்கள் முருகேசனின் வீடு வந்து சேர்ந்திருந்தார்கள்.
வாடகைக்குச் சுமோ எடுத்து வந்திருந்தார்கள். பணம் இரண்டு வீட்டிலும் இருக்கிறதென்றாலும் நான்கு சக்கர வாகனம் வாங்கவேண்டும் என்று கந்தசாமி முருகேசன் என இருவருக்கும் தோன்றவும் இல்லை, விருப்பமும் இல்லை. அதை வாங்குவதற்குக் காணியை வாங்கி உழுவது சிறப்பு என்ற எண்ணம் மட்டுமே.
அவசியமோ அவசரமோ என்றால் மட்டுமே வாடகைக்கு எடுத்துகொள்வர்.
இப்போது பொண்ணு கேட்க போவதால் எப்போது போல அல்லாமல் கார்-யில் வந்திருந்தனர். ஓட்டுனருக்கு பின்னாடி இருக்கையில் தேவியும் கந்தசாமியும் இருக்க, அவர்கள் பின்னால் இருந்த ‘ப’ போன்ற இருக்கையில் அண்ணன் தங்கை என இருவரும் ரகசியம் பேசியபடி வந்து சேர்ந்தனர்.
வீடு வந்திருக்க, “அப்படி என்னத்த தாண்டி உங்க அண்ணகிட்ட ஓதிட்டே வர, வந்து இந்தச் சாமான்லாம் இறக்க ஒத்தாசையா இரு. எப்ப பாரு பேச்சு மட்டும் தான் இந்தச் சின்னக் கழுதைக்கு” எனக் கூறியபடியே இறங்க, விழியோ அதையெல்லாம் காதில் வாங்கவே இல்லை. வேகமாக இறங்கியவள், அத்தை மாமா எனக் கூச்சலிட்ட படியே உள்ளே செல்ல, முருகேசனும் மல்லியும் இவர்கள் வருவதைப் பார்த்துப் புன்னகை முகத்துடன் வாசல் வரை வந்து வரவேற்றனர்.
அவர்களின் முகத்தில் புன்னைகையென்றால், அவர்களின் செல்ல மகள் முல்லை முகத்திலோ புன்னகைக்குள் ஒளிந்திருந்த நாணம் மெல்ல மெல்ல பார்த்திபனை பார்த்து எட்டி பார்த்தது.
“வாமா தங்கச்சி. வாங்க மச்சான், காலைல பேசுனப்பகூட வரதா ஒருவார்த்த கூடச் சொல்லல. சரி சொல்லிட்டு வந்தாலும் சொல்லாம வந்தாலும் நீங்க வந்தது சந்தோசம்தான். உள்ள வாங்க” என அழைத்துச் செல்ல, கந்தசாமியும் தேவியும் வழக்கத்திற்கு மாறாய் இருப்பது போல முருகேசனுக்குத் தோன்றியது.
“என்ன மாப்பிள்ளை நான் மட்டுமே பேசுறே. என்னதா ஆச்சு ?” என முருகேசன் வினவ,
“இவ்ளோ சந்தோசமா நாங்க இங்க இருந்து கிளம்புவோமான்னு யோசிக்கிறோம். என்ன தேவி ?” எனக் கந்தசாமி பதிலை கூறியபடியே தேவியிடம் கேட்க, முருகேஷனுடன் சேர்ந்து மல்லியும் குழம்பினார்.
“என்ன அண்ணே? இப்படிப் பேசுறீங்க. உங்க மனசு நோகுறத போல என்னைக்காச்சும் நடந்துருக்கோமா ? நீங்க எனக்குக் கூடப் பொறந்த பொறப்பு போல. அப்படிலாம் ஒருநாளு நடக்காது. மனசுல எதயு வச்சுப் பேசாமா தேங்கா உடைச்சத போலப் பட்டுனு உடைச்சிடுங்க. என்னனு சொல்லுங்க அண்ணே. மதினி நீங்களாச்சும் சொல்லுங்களே, எனக்குப் பதட்டமா இருக்கு” என மல்லி ஒரு புறம் நீளமாகப் பேசிக்கொண்டிருக்க,
“நான் பார்த்திபனுக்குக் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்” எனத் தொடங்கினார் கந்தசாமி.
“அட இம்புட்டு நல்ல விஷயத்துக்கு எதுக்கு இவ்ளோ தடுமாறுறீங்க?” என முருகேசன் வினவ மல்லியின் முகம் மாறியது. இத்தனை நேரம் பேசியது மல்லியென்றால் யாரும் நம்ப மாட்டார்கள். சட்டென்று மல்லியின் முகம் முழுவதும் மாறியிருந்தது.
“என்ன தங்கச்சி நீ ஒன்னு செல்ல மாட்டீங்கற?” எனக் கந்தசாமி மல்லியை பார்த்து கேட்க,
“நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல அண்ணே” என முகத்திற்கு நேராகக் கேட்டுவிட, முருகேசனும் தேவியும் தான் பதறி போனார்கள்.
மல்லி இந்நாள் வரையிலும் இப்படிப் பேசியதே இல்லை. கந்தசாமிக்கும் ஒருமாதிரி ஆகிவிட்டது. மேலும் மல்லியே தொடர்ந்து, “உங்க மேல எம்புட்டு நம்பிக்கை வச்சிருந்தே. இப்படி என்னோட நம்பிக்கையைப் பொய் ஆக்கிப்புட்டீங்களே”
“இல்ல மா மல்லி. பார்த்திபன் ஆசைப்பட்டுட்டான். அதா… மத்தபடி பொண்ணு மேல…” எனத் தொடங்கும் போதே இடை மறித்த மல்லி, “வேணாம் அண்ணே. எதுவு சொல்ல வேணா. எனக்கு ஒரே பொட்ட பிள்ளையா போச்சு. விழியைத் தான் என்னால மறுமவளா ஆக்கிக்க முடியாது. எம்மவளையாச்சும் உங்க வீட்டுக்கு அனுப்பிவைக்கலாம்னு மலை போல நம்பியிருந்தே. ஆனா பார்த்திபனுக்குப் பொண்ணு பார்க்க, வண்டி பிடிச்சிட்டு வந்து எங்களையும் துணைக்குக் கூப்பிடறீங்க. ஏ அண்ணே, உனக்கு முல்ல நினைவு கொஞ்சம் கூட வரவே இல்லையா ? நான் மட்டும் தான் நம்ம இரெண்டு குடும்பமும் ஒன்னு மன்னா இருக்கணும்னு கிறுக்கு தனமா நினைச்சிட்டு இருக்கேன்” எனப் பேச, கந்தசாமிக்கு தேவிக்கும் போன உயிர் திரும்பி வந்திருந்தது.
முல்லைக்கு அப்போது தான் இத்தனை நேரம் வேலை நிறுத்தம் செய்திருந்த இருதயம் மீண்டும் பணிக்கத் திரும்பியது. பார்த்திபனும், கனல்விழியும், “அட சுபம் போட்றதுக்குத்தான், இந்த அத்த இம்புட்டு பில்டப்போட ட்விஸ்ட் வச்சாங்களா ?” எனத் தங்களுக்குள் கிசு கிசுக்க, முருகேசன் மட்டும் மல்லியை அடக்க அப்பாவியாய் வழி தேடிக்கொண்டிருந்தார்.
“மல்லி, செத்த சும்மா இரு. மாப்பிள்ளையும் தங்கச்சியும் எது செஞ்சாலும் சரியாதா இருக்கும். நீ தேவ இல்லாம பிரச்சனை பண்ணாத” எனக் கடிந்துகொண்டிருக்க, சிரிப்பை மறைத்தபடி கந்தசாமியும் தேவியும், “இதோ பாருங்க. புருஷ பொண்டாட்டி இரெண்டு பேரு அப்பறமா சண்டை போடுங்க. நாங்க இப்ப பொண்ணு வீட்ல தட்ட மாத்தனும்” எனக் கூறியபடியே, தாம்பூலத்தில் பூ பழம் தேங்காய் என அனைத்தும் வைத்து, அவர்கள் முன் நிற்க, இப்போது முருகேசனும் மல்லியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“என்ன சம்மந்தி ? அப்படி நான் உங்கள கூப்பிடலாம்ல ?” எனக் கந்தசாமி முருகேசனை பார்த்து கேட்ட பிறகே மல்லிக்கும் முருகேஷனுக்கும் புரிந்தது. புரிந்த மறு நொடி இருவரது முகத்திலும் அத்தனை சந்தோசம்.
“என்ன மா மல்லி? இம்புட்டு கோவக்காரியா இருக்கியே… எம்மருமக ராசாதியாட்டம் முல்லைக்கொடி இருக்கறப்ப நான் வெளில பொண்ணு தேடுவேனா ?” என மல்லியை பார்த்து கந்தசாமி கேட்க, மல்லி அசடு வழிந்தார்.
“மன்னிச்சுடுங்க அண்ணே. ஏதோ உணர்ச்சிவசப்பட்டுட்டே. ஏங்க அண்ணே கைல இருக்கத் தட்ட வாங்கிக்கோங்க” என மல்லி கூற, முருகேஷனோ சிறிது யோசித்து, “எங்களுக்கு ரொம்பச் சந்தோசம். ஒரு வார்த்த முல்லகிட்டையும் கேட்கிறே மாப்பிள” எனக் கூறியபடி முல்லையை அழைக்க, அவளுக்குத் தான் குற்ற உணர்வாகி போனது.
“எங்க அப்பா என்ட கேட்டு செய்றாரு. ஆனா நான் கேட்கலியே, இப்போ மாமா அப்பாட்ட சொல்லிடுவாரோ? எப்படி அப்பா முகத்துல முழிப்பே” எனப் பலவாறு யோசித்தபடியே வந்து நிற்க, அவளின் மனநிலை புரிந்தவராய் கந்தசாமி, “முல்ல நீங்க இரெண்டு பேரு என்ன சொன்னாலும் கேட்கும் முருகேச. அதோட அத்தையும் மாமாவையும் நம்ம முல்லைக்கு ரொம்பப் பிடிக்கும். ஏ அத்த பசங்கனு நம்ம பார்த்திபன் விழியைக் கூட ரொம்பப் பிடிக்கும். என்ன மருமகளே சரிதானே?” எனக் கேட்க, முல்லை அவரை நன்றியுடன் பார்த்தாள்.
“சம்மதம்னு சொல்லிடு தாய்” எனக் கந்தசாமி செல்ல, முல்லை கண்களில் கண்ணீர் கோர்த்தது. உதடுகளில் மென்னகை மலர்ந்தது. புன்னகையும் கண்ணீரும் ஒரு சேர உதிக்கும் தருணம் உன்னதத் தருணம். அந்த நிமிடத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாள் முல்லை. அதே சிரிப்புடன், “சம்மதம்” என்று கூற, அங்கே சந்தோசம் சூழ்ந்தது.
தந்தை முன் குற்ற உணர்ச்சியுடன் நிற்க தேவை இல்லாததாய் கந்தசாமியின் செயல் அவளைக் காப்பாற்றியது. அவளுக்குப் பார்த்திபன் மீது நேசம் உண்டு என்பதையும் சபையில் சொல்லிவிட்டார், அதே நேரம் தான் காதலை சொன்னதால்தான் இத்தனை தூரம் கந்தசாமி செயலில் இறங்குகிறார் என்றும் அவள் புரிந்துகொண்டாள். முருகேசன், மல்லி, ஏன் தேவியிடம் கூட, இருவருக்கும் திருமணம் பேச வேண்டும் என்று சொன்னாரே ஒழிய, முல்லை தன் காதலை பார்த்திபனிடம் சொல்லியதை யாரிடமும் அவர் சொல்லவில்லை.
அவராகவே நடத்துவதைப் போலப் பெரிய மனிதராய் நடத்திவிட்டிருந்தார் கந்தசாமி.
முல்லையின் மனதில் தன் வருங்கால மாமனார், மலை அளவு உயர்ந்து நின்றுவிட்டிருந்தார். இவள் காதலிக்கிறாள் என்று சொன்னால் சொல்லியிருந்தால் திருமணம் நடந்திருக்கும் தான். ஆனால் இதே அளவு சந்தோசம், இதே அளவு பெருமிதம், இதே அளவு உறவும் இப்படியே இருந்திருக்குமா என்றால் அதற்கான விடை முல்லையிடம் இல்லை. நடந்திருக்கலாம், நடக்காமலும் போயிருக்கலாம். ஆனால் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லாது பண்ணியவர் கந்தசாமி என்ற ஒற்றை மனிதர்.
மனதார முல்லை, “மாமா, இனிமேல் நீங்க எனக்கு இன்னொரு அப்பா…” என மனதோடு மெல்ல கூறிக்கொள்ள, சட்டென்று அவள் புறமாகத் திரும்பிய கந்தசாமி, “இங்க வா….” என்று அழைத்தவர், தலையில் கை வைத்து, “நல்லா இருப்பமா” எனக் கூறினார். அங்கே மாமனார் மருமகள் என்ற உறவுகளின் உண்மையான அர்த்தமாய்த் தந்தை மற்றொரு மகள் என்ற உன்னதமான உறவு வந்திருந்தது.
ஆகிற்று இந்தச் சம்பவம் முடிந்து முழுதாக இரண்டு நாட்கள் ஓடியிருந்தது. முல்லைக்குப் பூ வைத்துப் பரிசம் போட்டு, அன்றே கந்தசாமி தேவி பார்த்திபன் என அனைவரும் கிளம்பியிருக்க, முல்லையுடன் விழியை நான்கு நாட்கள் இருக்கட்டும் என்று விட்டு சென்றிருந்தனர்.
இன்று காலை விடிந்ததிலிருந்தே கனல் விழிக்கு இருப்பு கொள்ளவில்லை. இன்றுதான் கதிரவனின் பிறந்தநாள். கடந்த இரெண்டு நாட்களாக இங்கே இருந்திருந்தாலும் கதிரவனை அவள் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவே இல்லை. சக்கரை பாண்டியை கூட அவள் பார்க்கவில்லை.
கைபேசியில் ஒருமுறை அழைத்த போது, அவர்கள் இருவரின் குரலும் சரி இல்லை.
“தங்கச்சி, இங்க பண்ணைல பிரச்சனைமா. நாங்களே மறுபடியும் கூப்பிடறோம். வேற எதுவும் சொல்லனுமா ?”
“அயோ அண்ணா. என்ன சொல்றீங்க? என்ன ஆச்சு ? அவரு… அவரு நல்லாத்தானே இருக்காரு? என்ன பிரச்சனை அண்ணா?”
“அவன் கொஞ்ச சிக்கல்லதான் இருக்கான். ஆனா சமாளிச்சிடுவான். எவ்ளோவா பார்த்துட்டான். அதுனால இதுல இருந்தும் வந்திடுவான். புதுக்கோட்டைக்கு அனுப்புன சாம்பிள் லோட்ல பிரச்சனை. அத நாங்க பாத்துகிறோம். நீ கவலைப்படாத”
“சரி அண்ணே. அப்புற நான் எதுக்குக் கால் பண்ணினேனா, அவருக்கு ஒரு கிபிட் வாங்குனே. பண்ணைக்குத்தான் அனுப்பிருக்கேன். அத சொல்லத்தான் கூப்பிட்டேன். அவரைப் பார்த்துக்கோங்க. வச்சிடறேன்” என முதல் நாள் பேசிய அனைத்தும் அவளுக்குப் படமாய் நினைவில் ஓடியது. அவளுடைய எண்ணத்தில், “அந்தப் பிரச்சனை என்ன ஆகியிருக்கும் ? சக்கரை அண்ணே வேற மறுபடியும் கூப்பிட வேணாம்னு சொல்லுச்சே. அனுப்பின பொருள் போச்சா இல்லையானு தெரியலையே. அவருக்கு என்னால ஒரு வாழ்த்துக்கூடச் சொல்ல முடியலையே. சொல்றத விடு, அவரைப் பார்க்க கூட முடியலையே…. சரி கோவிலுக்காச்சும் போய் ஒரு அர்ச்சனை பண்ணுவோம்” என ஓடிக்கொண்டிருந்தது.
அதே போல வேகமாகக் குளித்து முடித்துக் கோவிலுக்குச் செல்ல, சக்கரையின் பரோட்டா கடை பார்த்தததுமே முதல் நாள் கதிரவன் அவளைக் காப்பற்ற வந்ததில் தொடங்கி, அவனை அவள் கண்ட பொழுதுகள் அனைத்தும் மனதில் ஓட தொடங்கியது.
அவன் அமர்ந்த நாற்காலி, அவன் நின்றிருந்த கல்லுக்கால், அவன் நின்று பேசிக்கொண்டிருந்த பூ கடை, பஞ்சாயத்தில் நின்றிருந்த பஞ்சாயத்து கல் என அனைத்துமே அங்கிருந்த அனைத்துமே அவனுடைய பிம்பங்களைப் பிரதிபலிக்க அவள் காணும் இடமெல்லாம் அவனே நிறைந்திருந்தான்.
காட்சி பிழையோ – உன்னை
கண்டதுதான் பிழையோ
காணுமிடமெல்லாம் நீ  
என்ற வரிகளை சுகமாக வரித்துக்கொண்ட வீடு சேர்ந்தாள்.
“ஹே ஏண்டி இம்புட்டு நேரம். உனக்காகத்தான் காத்திட்டு இருக்கோம்” என அவசரப்படுத்தினாள் முல்லை.
“ஏண்டி என்ன ஆச்சு?”
“மறந்துட்டியா? கடல்ல போனதே இல்லனு எப்பவு சொல்லிட்டே இருப்பல. அதா அப்பா உனக்காக ஏற்பாடு பண்ணியிருக்காங்க. நம்ம சிலுவை தாத்தா இன்னைக்கு மீன்பிடிக்கக் கடலுக்குப் போகலியாம். சும்மா கொஞ்ச தூரம் நம்மள கூப்பிட்டு போறாங்களானு அப்பா கேட்டாங்க. அவரு உடனே சரினு சொல்லிட்டாரு. வேற யாரும்னா வீட்ல விடவே மாட்டாங்க.
நம்ம நல்ல நேரம் இன்னைக்குச் சிலுவதாத்தாவே வந்திருக்காரு. புறப்படு வெரசா. இது போல இன்னோரு சந்தர்ப்பம் அமையவே அமையாது.
கடல் காத்ததான் சுவாசிக்கிறோம். ஆனா கப்பல்ல போனதே இல்ல, கடலுக்குள்ள பயணச் செஞ்சதே இல்லனு சொன்னா ஊரே சிரிக்கும்.
நானாச்சும் பரவாயில்ல டி. அப்பா கூட ஒருவாட்டி போனே. நீதா சுத்தம். இப்பயாச்சும் போகலாம் வா” எனப் படப் படவென்று பேச, கனல் விழி சந்தோஷமாகவே கிளம்பினாள்.
அவளுக்குக் கடலில் சிறிது தூரமாவது செல்ல வேண்டுமென்று அலாதி பிரியம். ஆனால் இதுவரை தேவி விட்டதே இல்லை. இன்று முல்லை சொல்லியதும் அவளுக்குள் சந்தோஷத்தையும் மீறி இனம் புரியாத உணர்வு ஒன்று உள்ளுக்குள் உருவாகத் தொடங்கியது. அது என்னவென்று அவளுக்குச் சரியாக விளங்கவில்லை. ஆனால் ஏதோ ஒன்று வித்தியாசமாக உணர்ந்தாள்.
முருகேசன் அவர்களிடம் சொல்லிவிட்டு தோப்பிற்குச் சென்று விட, மல்லியோ அவர்கள் இருவருக்கும் பிடித்த அசைவ உணவை தயாரிப்பதாகச் சொல்லியவர், பத்திரமாகச் சிலுவை தாத்தாவோடு சென்றுவிட்டு விரைந்து வந்துவிட வேண்டும் எனவும் கூறினார்.
சந்தோஷமாகவே கிளம்பினார்கள்.
முல்லையை ஊரில் அனைவர்க்கும் தெரியும். விழியை ஒரு சிலருக்கு தெரியும். எப்படியும் அவள் முல்லையுடன் வருவதால், மற்றவர்களுக்கும் அவ்விரண்டு பேரும் முருகேசனின் வீட்டுப் பெண்கள் எனப் புரிந்தது.
இவர்கள் இருவரும் சலசலத்தபடி பின்னே செல்ல, விழியின் பார்வை மட்டும் எங்காவது கதிரவன் தென்படுகிறானா ? என அலைபாய்ந்தபடியே வந்துகொண்டிருந்தது.
தோப்பை தாண்டி கடல் கண் எட்டும் தூரத்தில் வந்ததும் அவர்கள் இருவர் முன்பும் வந்து வழியை மறைத்தபடி நின்றது ஓர் உருவம்.

Advertisement