Advertisement

பாசமும் காதலும் – 13
அன்றைய விடியல் கதிரவனுக்குப் பரபரப்பாக இருந்தது. நீலக்கடலை ஒட்டி அமைந்திருந்த தோப்பு வீட்டில் வான் கதிரவன் கண்விழிக்கும் முன்னே விழித்துவிட்டிருந்தான் நம் கதிரவன். வேகமாகக் குளித்து எப்போதும் போல ஒரு உடை அணிந்தவன் தன் பாட்டன் படத்தின் முன்பாக நின்று ஆசீர்வாதம் வேண்டுபவனைப் போல கண்களை மூடியபடி இதழை முணுமுணுத்துக்கொண்டிருந்தான்.
“நீ நினைக்கிறதெல்லாமே நடக்கும் மாப்புள” என அவன் வேண்டுதல் ஏற்றுக்கொள்ளப்பட்டதிற்கு அசரீரி ஒலிப்பது போல ஒலித்தது பாண்டியின் குரல்.
வேண்டுதலை முடித்துப் புன்னகையுடன் இமை பிரித்தான் கதிரவன்.
“வாங்கடா…. என்ன வரும்போதே ஆசீர்வாதத்தோட வரீங்க” எனக் கேட்டபடி போட்டுவைத்திருந்த டீ-யை மூவருக்கும் ஒரு குவளையில் ஊற்றியபடியே கேட்க, “நீ எல்லாத்துலயும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற தேவதை உன்னோட பக்கம் இருக்கிறப்ப, நீ நினைக்கிற எல்லாமே நடக்கும் மாப்பிள” என உள்ளர்த்ததுடன் கனல் விழியை மனதில் வைத்து சக்கரை கூற, கதிரவனோ, “என்னடா சொல்லுற?” எனக் கேட்டான்.
பாண்டி வேகமாகத் தன்னிடம் இருந்த துணிப்பையை நீட்ட, உள்ளிருந்த வேட்டி சட்டையைப் பார்த்தவனுக்கோ நேற்று இரவு தோப்பு வீட்டிற்குத் திரும்பு பொழுதில் எதிர்ப்பட்ட சங்கரன் கூறிச் சென்றது நினைவில் வந்தது.
“அண்ணே! அம்மா உனக்காகப் புது உடுப்பு வாங்கி வச்சுருக்கு. புதுப் பண்ணை புதுச் சட்டை கெளப்பு போ” எனக் கூறி சென்றதை நினைவு கூர்ந்தவன், “அம்மா வாங்குனாதாடா… ரொம்ப நல்லா இருக்குல்ல. அநேகமா இதுதான் எங்க அம்மா எடுத்த முதல் துணியா இருக்கும். என்னவோ ரொம்பச் சந்தோசமா இருக்குடா” எனக் கூறியபடி, டீயை கூடப் பருகாமல் புதுத் துணியை அவன் மாற்ற, சக்கரையும் பாண்டியும் ஒருவரை ஒருவர் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்துக்கொண்டனர்.
“என்னடா இவன் இப்படி நினைச்சுட்டான்?” எனப் பாண்டி கேட்க,
“விடு! விழினு பேரெடுத்தாலே திட்டிடுவான். எப்டியாச்சு போட்டானே. அதுவே போதும்” எனச் சக்கரை கூற,
“ஒருவேளை அம்மா வாங்குன பொருள் இது இல்லனு தெரிய வந்திடுச்சுனா?” எனப் பாண்டி படபடக்க,
“அப்படி வந்தா சமாளிப்போம். அந்தப் புள்ள எவ்ளோ ஆசைப்பட்டு வாங்கித் தந்துச்சு. இந்தச் சட்டையை இவனுக்கு வாங்க போய்தான் ரோட்ல அம்புட்டு அசிங்கப்பட்டுச்சு. அதுக்கு ஒரு அர்த்தம் வேணாமா ?” எனச் சக்கரை கூற, அதன் பிறகு பாண்டியும் எதுவும் கூறவில்லை.
அதன் பிறகு நிற்க நேரமின்றி அடுத்தடுத்த வேலைகள் மூவரையும் ஆக்ரமித்துக்கொண்டது.
“நெய்தல் இறால் பண்ணை”
கதிரவனின் நட்புகளுடனும் மரியாதைக்கு உரியவர்களுடனும் இனிதே திறக்கப்பட்டது.
புதுக்கோட்டையில் இறால் மீன் நண்டு ஏற்றுமதி இறக்குமதி சங்க தலைவரான சேனாதிபதியும் கதிரவனின் அழைப்பை ஏற்று வந்திருக்க, கதிரவனின் சிரத்தையும் உழைப்பும் அவன் ஓவ்வொரு விஷயத்தைக் கையாளும் பாங்கும் கண்டு ஆச்சர்யம் கலந்த மரியாதை கொண்டார்.
“கதிரவன்! எல்லா விழாவுக்கும் போறதுபோலத் தான் இங்கயும் வந்தே. ஆனா உன்னோட அணுகுமுறை வித்தியாசமா இருக்கு. அதுனால புதுக்கோட்டைக்கு உன்னோட பண்ணையில இருந்து இறால் சப்பளை பண்ற கான்ட்ராக்ட உன்ட கொடுக்கலாம்னு யோசிக்கிறே. என்னப்பா ? எடுத்து பண்ணிடுவியா ?” எனக் கேட்க, கதிரவனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
“கண்டிப்பா சார். சிறப்பா பண்ணி தரோம்” எனக் கூற, பாண்டியும் சக்கரையும் மனதளவில் மகிழ்ச்சி கொண்டனர்.
“நல்லா பண்ணுங்க கதிரவன்” என மேலும் அவர் வாழ்த்துக்கூற
“எல்லாம் உங்கள போலப் பெரியவங்க ஆசீர்வாதம்” எனக் கதிரவன் கூற,
“இது உங்க உழைப்புக்கு கிடைச்ச அங்கீகாரம். இனி வெற்றி தேவதை உங்க வீட்லதான் நிரந்தரமா தங்க போறா” என மேலும் அவரே கூற கதிரவனுக்கோ அவனைத் தேடிவந்த முதல் அன்பு பரிசுதான் தன்னுடைய இந்த நாளை சிறப்பாக அமைத்து தந்ததென்று எண்ணம் கொள்ள வைத்தது.
“ஏ மாப்பு எனக்கு ஒரு சந்தேகம். நம்ம தங்கச்சிதான கதிரவன் வீட்ல தங்கும். இவரு என்ன ஏதோ வெற்றி தேவதைனு சொல்லுறாரு” எனப் பாண்டி தன்னுடைய இரண்டு கைகளிலும் குளிர்பானத்தை வைத்துக்கொண்டு இரண்டு உறிஞ்சி குழாயை போட்டு ருசித்து ரசித்துப் பருகியபடியே மிகவும் தீவிரமாக இந்தக் கேள்வியை முன்வைக்க, “ஹ்ம்ம் இரண்டும் ஒண்ணுதான்” எனப் பற்களைக் கடித்தபடி சக்கரை கூற, “ஓ அப்படியா? நம்ம தங்கச்சி இந்தப் பேரு மாத்திடுச்சா ? என்ட சொல்லவே இல்ல. சரி அத விடு. எனக்கு இன்னொரு சந்தேக”
“வேணாம்டா! இதுக்குமேல கேட்ட… ” எனப் பொறுமையை இழுத்து பிடித்தபடி சக்கரை கூற,
“என்னடா? என்ன செய்வ ? என்ன அடிச்சிருவிய? ஹ்ம்ம் சொல்லு” எனத் தெனாவெட்டாகப் பாண்டி கூற,
“அடிக்க மாட்டேன்! பறிச்சிடுவேன்”
“எத?”
“ஹ்ம்ம் உன் கைல இருக்கக் கூல் ட்ரிங்க்ஸை”
“அடப்பாவி! எப்படிடா உன்னால இப்படிக் கொடூரமா யோசிக்க முடியுது? பச்சப்புள்ள பால்பாட்டுல தட்டிவிடறதும் இந்தப் பாண்டியோட கலர் பாட்டிலை தட்டிவிடறது ஒண்ணுதான்”
“அடே! நீ எங்க இருந்துடா இப்படியெல்லாம் பேச கத்துகிற? யாருடா சொல்லித்தரது ?”
“என்னோட மூளை சக்கர”
“எது ? இந்த வீட்ல இருக்குமே? நாலு சைடும். அதுவா ?”
“டேய்….” என இப்போது பல்லை கடிப்பது பாண்டியின் முறை ஆகிற்று.
அவர்களின் அலுச்சாட்டியங்களுக்கு முடிவுக்கட்டும் விதமாக அழைத்தான் கதிரவன்.
“சார், இவுங்க இரண்டு பேருதான் என்னோட உறவு நட்பு எல்லாமே” எனச் சேனாதிபதியிடம் அறிமுகம் செய்ய,
“அப்படியா? நல்லது. இவுங்க என்ன பண்றாங்க ?” எனக் கேட்க சிறிதும் யோசிக்காமல் சட்டென்று கதிரவன், “சக்கரை ஊருக்குள்ள கடை வச்சிருக்காங்க. இறால் பண்ணை கொஞ்சம் பெருசு பண்ணினதும் இங்க ஒரு கடையும் ஆரம்பிக்கப் போறான். ஏனா ஊருக்குள்ள இங்க இருந்து போறது தொலைவுல. இங்க வேல பாக்குறவங்களுக்கும் பக்கத்துல கடை கன்னின்னு வச்சாத்தான வசதியா இருக்கும். அதா சக்கரை எனக்கு இந்த யோசனையைச் சொன்னான்” எனக் கூற சக்கரையே ஒருநிமிடம் அதிர்ந்துதான் பார்த்தான்.
அவனுடைய அதிர்ச்சி விலகும் முன்னே, “இவன் பாண்டி. மீன்பிடிக்கிறவங்ககிட்ட இருந்து பண்ணைக்குத் தேவையான இறால் கொண்டு வர பொறுப்பா இவன்தான் பாத்துக்கப் போறான்” எனக் கூற, குளிர்பானத்தைக் கூட மறந்தவனாகப் பாண்டி நின்றுவிட்டான்.
சேனாதிபதியோ, “பரவாயில்லையேப்பா! இந்தக் காலத்து பசங்க எல்லாத்துலயும் கெட்டியாத்தான் இருக்கீங்க. சரி நான் புறப்படுறே! அவசர சோலிகிடக்கு. மத்த விவரத்தை பேச ஆபிஸ்க்கு வாங்கப்பா” எனக் கூறிவிட்டு கிளம்ப, கதிரவனிடம் சக்கரை, “டேய் என்னடா ? என்னென்னமோ சொல்லுற ?” எனக் கேட்க,
“ஆமா சக்கர! அந்தக் கடையதான் உங்க அப்பாவும் அம்மாவும் பாக்குறாங்கள்ல. நீ இங்கிட்டு ஒன்னு ஆரம்பி. மொத டி காபி ரொட்டினு வை. மெல்ல டிபன் போடலாம். ஒருவேளை மத்திய சாப்பாடு இங்க ஆர்டர் சொன்னா, தலையைக் கணக்கு பண்ணி ஊருக்குள்ள இருந்து இங்க பார்சல் எடுத்துட்டு வந்திடலாம்.” எனக் கூற சக்கரையோ, “இதெல்லாம் சரியா வருமா ?” என மீண்டும் நம்பாமல் கேட்க, “வரும், வர வைக்கிறோம்” என முடிவாகக் கூற, பாண்டியோ, “மாப்பி கலரு கரிக்கிது டா…” எனச் சோக கண்ணில் கூறினான்.
அதைக் கேட்ட சக்கரையோ மற்றவைகளை விட்டு, “டேய் கதிரவன் செஞ்ச நல்லதுக்கு நியாயமா நீ கண்ணு வேற்குதுனு தானே சொல்லிருக்கணும் ? நீ என்ன கலரு கரிக்கிதுன்னு சொல்லுற ?” எனப் புரியாமல் கேட்க,
“கண்ணு வேர்க்குறது பழசு. கலரு கரிக்கிது புதுசு” எனப் பாண்டி பதில் சொல்ல, மீண்டும் அவனே தொடங்கி, “என்ன புரியலையா மாப்பி ? என்னோட கண்ணு கலங்கி கண்ணீர் பொங்கி இந்தக் கலரோட கலந்துருச்சுடா…” எனக் கையில் இருந்த குளிர்பான பாட்டிலை காட்டியபடி சொன்னவன், “அடே!!!!” எனச் சக்கரை பல்லை கடிக்க,
“அட! என்ன நம்பலையா ?நீ இந்தக் கலரை குடிச்சு பாரு. அப்ப தெரியும்” எனத் தன் கைகளிலிருந்து ஒன்றை சக்கரையிடம் நீட்ட, வாங்கியவன் வாயில் ஊற்ற, சட்டென்று ‘தூ’வெனத் தும்பியேவிட்டான், “டேய் என்னடா நிசமாலுவே உப்புக்கரிக்கிது ?” எனக் கேட்டான்.
“பின்ன என்ன பொய்யா சொன்னேன் ? பொய் சொன்ன பிரியாணி கிடைக்காதுனு எங்க அப்பத்தா சொல்லுச்சு…அதுனால பாண்டி நிசத்த மட்டும்தான் பேசுவான்” என பாண்டி கூற,
சக்கரையோ, “என்னடா புதுசா புதுசா கிளப்பிவிடுறீங்க…?” என முழித்தான்.
“டேய் உண்மைய சொல்லு? எப்படி உப்பு வந்துச்சு?” எனக் கதிரவன் சிரித்தபடி வினவ,
“மச்சி கண்ணீர்தாண்டா… நான் என்ன இந்தக் குடத்துல இருக்கக் கடல்நீரையா கலந்துட்டு பொய் சொல்லபோறே. பிராமிசாடா” எனச் சிறுபுள்ளை போல அடம்பிடிக்க,
சிரிப்பினூடே, “என்ன சக்கரை பேர மாத்திடலாமா?” எனக் கதிரவன் கேட்க, இம்முறை சக்கரை யோசிக்கவே இல்ல. “கண்டிப்பா கதிரவா… இனி கூல் ட்ரிக்ஸ் பாண்டி” எனக் கூற, பாண்டியோ, “டேய் ஏதாவது ஒன்ன சொல்லி கூபிடுங்கடா…இப்படியே பேர மாத்திக்கிட்டே போன என்ன நம்பி எவண்டா பொண்ணு கொடுப்பான் ?” எனப் புலம்ப, இவர்களின் சிரிப்பும் கேலியுமாக அந்த இடம் நிறைந்தது.
சக்கரை மற்றும் பாண்டியின் குடும்பம் கதிரவனின் செய்யலை அறிந்து மகிழ்ந்தனர். முருகேஷனோ ஒருபடி மேலே சென்று, இப்படி ஒரு மகன் தனக்கில்லையே என்றே எண்ணத்தொடங்கியிருந்தார்.
“எதுனாலு என்ட வா கதிர். ஜனக்கட்டுக்கும் பணக்கட்டுக்கும் எப்பவும் நான் இருக்கே” எனக் கூற, கதிரவன் ஒரு சின்னச் சிரிப்புடன், “உங்க பாசமட்டும் போது சித்தப்பா” எனக் கூறி அவரிடம் நன்றாகப் பேசி உபசரித்து வழியனுப்பி வைத்தான்.
அது முருகேசனுக்கு அவனை இன்னும் பிடிக்கக் காரணமாகியது.
அன்று மாலை பார்வதியை காண கதிரவன் செல்ல, இந்தச் சட்டை அவர் வாங்கியதில்லை என்று தெரிந்துவிடுமோ ? அதற்கு என்ன சமாளிக்கலாம் என்ற சிந்தனையோடு பாண்டியும் சக்கரையும் உடன் செல்ல, பார்வதி வருவதற்கு முன்பே உள்ளிருந்து மாறன் வேகமாகப் பார்வதி வாங்கியிருந்த துணி பையுடன் வந்து நின்றான்.
“இவ என்னடா? வாட்ச்மேன் மாதிரி வந்து நிக்கிறான்” எனப் பாண்டி மனதிற்குள் நினைக்க, மாறனுக்குப் பின்னாடி வந்த பார்வதியோ, மாறன் எதற்காக இப்படி நிற்கிறான் என்று யோசித்தபடியே வெளியே வந்தார்.
“என்ன மாறா? எப்படி இருக்க ?” எனக் கதிரவன் சாதாரணமாகக் கேட்க, அவனோ பதில் கூறாமல், உள்ளிருந்து சட்டை வேட்டியை எடுத்து, “இது அம்மா எடுத்தது” எனக் கைகளில் எடுக்க, கதிரவனோ மனதில், “ஓ அம்மா எனக்குப் போலவே அவனுக்கும் எடுத்திருக்காங்க போல” என எண்ணினான்.
சக்கரையும் பாண்டியும், “இதென்னடா? இவன் வாட்ச்மேன்னு பார்த்தா , வில்லனா இருப்பான் போல. புதுச் சிக்கலாவுல இருக்கு” என எண்ணம் கொள்ள,
பார்வதியோ, “என்னாச்சு ? இப்ப மாறன் என்ன சொல்லுவான் ? கதிருக்கு ஒன்னும் நான் வாங்கித்தரலைனு சொல்ல போறானோ… இல்ல இது வேணாம்னு அவன்ட மூஞ்சில அடிச்சாப்புல கொடுக்கப் போறானோ ? என்ன பண்ண போற மாறா” என மனதிற்குள் இரண்டு மகன்களுக்கு நேருக்கு நேராக முரணான கருத்து தோன்றிவிடுமோ என்ற அச்சத்தில் நின்றிருக்க, இவர்கள் யாருக்கும் தெரியாமல் பக்கவாட்டு ஜன்னல் வழி சாந்தினி மாறனிடம், “ஹ்ம்ம் கொடு” எனச் சமிங்கை செய்துகொண்டிருந்தாள்.
மாறனுக்கு இந்தச் சட்டை தனகாணத்தல்ல என்று தெரிந்த போது கோபம் இயலாமை வெறுப்பு எல்லாம் வந்தது. அந்தச் சட்டையைத் தூக்கி எறிய எடுத்த நொடிதான் சாந்தினி வந்திருந்தாள்.
“ஒன்ன தூக்கிபோடறது சுலபம். ஆனா அத வாங்குறது ரொம்பச் சிரமம். அதே கஷ்டத்தைத்தான் உங்க அம்மாவும் பட்ருக்காங்க. இரண்டு மகன்ல ஒருத்தருக்கு மட்டும் ஏன் வாங்குனாங்கனு யோசுசீங்களா?
ஒருத்தர் மேல பாசம் இல்லாமல் இல்ல. இரண்டு பேருக்கும் வாங்க காசு இல்லாம. காசு இல்லாம நிக்க வச்சவங்க மேல தான் நீங்க கோபப்படணும். இந்தச் சட்ட மேல இல்ல. இத தூக்கி ஏறியிரத்துக்குப் பதிலா ஒரே ஒருதடவை உங்க அண்ணாக்கிட்ட கொடுத்து பாருங்க.
அவரு என்ன பண்றருனு பாப்போம். அதுக்கு அப்புறம் உங்க மன நிலை என்னனு சொல்லுங்க” என முதல் நாள் இரவு கூறியிருக்க, மாறனிடம் பதிலே இல்லை.
“என்ன அமைதியா இருக்கீங்க?”
“யோசிக்கிறேன்…”
“என்ன யோசனை?”
“இல்ல! உனக்கு இவ்ளோ பேச தெரியுமா ?” என்று கேட்ட மாறனின் மன நிலை முழுவதுமாக மாறியிருந்தது. அது சொல்லபட்ட விஷயத்தினாலா இல்ல சொல்லியவளின் வசியத்தினாலா என்பது அவனுக்கே வெளிச்சம்.
“தெரியல. ஆனா இப்போ பேசணும்னு தோணுச்சு” எனக் கூறியவள் சட்டென்று சிறிய வெக்கத்துடன் ஓடி மறைந்தாள்.
மெல்ல சாந்தினி கூறியதை நினைவு கூர்ந்தவன், “இப்படி அவன்கிட்ட கொடுத்தா..இவன் என்ன செய்வான்” எனக் கதிரவன் குறித்து எண்ணிக்கொண்டிருந்தான்.
இரண்டு மூன்று நொடிகள்தான். ஆனால் அதற்குள் உலகத்தையே வளம் வரும் சக்தி அங்கிருந்த அனைவரின் மனதிற்கும் இருந்தது.
சட்டையைப் பார்த்த கதிரவன், “ரொம்ப நல்லா இருக்குடா மாறா. அம்மா உனக்காகவே வாங்கியிருக்காங்க. பாரு உன்னோட நிறத்துக்குப் பொருத்தமா இருக்கும். ஒண்ணுதான் எடுத்துதந்தங்களா ? காலேஜ் போற பையன்ல. இன்னு ஒரு அரை டஜன் எடுத்துகோடா .நம்ம கணேஷ் அண்ணா கடைல எடு. காசு நான் கொடுத்துறே. அம்மா தம்பிக்கு சூப்பர இருக்கு” என மாறனிடமும் பார்வதியிடமும் சந்தோசமாகக் கூற, மாறனோ ஒரே சமயத்தில் குறைவாகவும் நிறைவாகவும் உணர்ந்தான்.
பார்வதிக்கு கூட மனதில் அழுத்திக்கொண்டிருந்த அத்தனை பாரமும் கரைந்து காணாமல் போவதாய் ஒரு உணர்வு ஏற்பட்டது. கதிரவன் இப்படி மாறனிடம் பேசியது இதுவே முதல் முறை. மாறன் இத்தனை நிமிடங்கள் கதிரவன் முன் நின்றதும் இதுவே முதல் முறை. அனைத்திற்கும் ஒரு ஆரம்பம் இருப்பது உண்மையென்றால் இந்த அண்ணன் தம்பி உறவுக்கும் இதுவே ஒரு ஆரம்பமாக இருக்கட்டும் என்று அவருடைய மனது உணர்வுபூர்வமான வேண்டுதலை வைத்தது.
இன்று ஏதோவொரு வகையில் இவர்கள் இணையச் சாந்தினி காரணமாக இருந்தாள். ஆனால் நாளை அவளே இவர்களின் பிரிவிற்கும் காரணமாகப் போகின்றாள் என்பது அந்த நிமிடம் அங்கிருந்த யாருமே அறியவில்லை. ஏன் சாந்தினி உட்பட.
மாறன் அங்கிருந்து சென்றுவிட்டான். கதிரவன் பார்வதியுடன் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டான். அவன் எப்போது பேசுவது போலத்தான். ஆனால் பார்வதிக்குத்தான் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி. விழாவிற்கும் போக முடியவில்லை. அவனுக்கு எதுவும் கொடுக்க முடியவில்லையே என்று.
“சட்ட ரொம்ப நல்லா இருக்கு கதிரு…” என மகன் போட்டிருந்த புதுச் சட்டையைப் பார்த்தபடி கூற, கதிரவன் என்ன சொல்லுவானோ எனச் சக்கரையின் நெஞ்சம் பதட்டமடைய, அந்நேரம் சரியாகக் கதிரவனுக்குக் கைபேசியில் அழைப்பு வந்தது.
“இதோ வரேமா” எனக் கூறியபடி சற்று தள்ளி செல்ல, வேகமாகப் பார்வதி சக்கரையிடம் நடந்ததைக் கூறி, “அம்மா வரலனு எதுவும் எம்மவ சங்கடப்பட்டானா ராசா” எனக் கேட்க, சக்கரையோ விதியின் விந்தையை நினைத்து ஆச்சர்யப்பட்டுப் போனான்.
“இல்லமா வருத்தப்படல. இன்னும் சொல்லப்போனா ரொம்பச் சந்தோஷப்பட்டான். அவன் போட்ருக்கச் சட்டையை நீங்க வாங்கிக் கொடுத்ததுனு நினைச்சுகிட்டு இருக்கான். ரொம்ப வருஷம் கழுச்சு கதிரவ உற்சாகமா இருக்கான். அது அப்படியே இருக்கட்டும். நீங்க வேற எதுவு பேசிக்க வேணாம்” எனக் கூற,
“அப்போ அத வாங்கிக் கொடுத்தது யாருப்பா?” எனப் பார்வதி கேட்க,
“உங்கள போலவே அவன் நல்லா இருக்கணும்னு நினைக்கிற தேவதைமா” எனக் கூற , மேலும் அவர்கள் பேச்சு வளர்வதற்கு முன்னதாகக் கதிரவன் வந்து சேர்ந்தான் .
ஆதலால் இருவரும் மேற்கொண்டு எதுவும் பேசவோ விவாதிக்கவோ இல்லை. சில நிமிடங்கள் இருந்துவிட்டு மூவரும் கிளம்ப, அடுத்தடுத்து வந்த நாட்கள் இறக்கை இல்லாமலே பறந்தது.
சாந்தினி சில நாட்கள் மட்டும் இருந்துவிட்டு பாட்டி வீட்டிற்குச் சென்று விட, மாறனுக்கும் கனல்விழிக்கும் கல்லூரியில் அரை வருட பரிக்ஷை (செமெஸ்டர்) தொடங்கியிருந்தது. சாந்தினி பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவிற்குக் காத்திருந்தாள்.
சக்கரை ஒரு டி காபி கடையை மட்டும் போட்டிருக்க, பாண்டி கடலிலிருந்து முதல் ரக இறால்களைக் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றிருந்தான். ஆரம்பித்த சில வாரங்களிலே கதிரவன் தொழில் செய்பவர்களிடம் நிறைய நன்மதிப்பை பெற்றிருந்தான்.
அந்த நன்மதிப்பு மச்சக்காளைக்கு வஞ்சகம் இல்லாமல் வயிற்றெரிச்சலை கிளப்பிவிட்டிருந்தது. அவர் தொழில் தொடர்பு இடங்களைக் கதிரவன் கைப்பற்றவில்லை. ஆனால் தரம் விலை இவைகளைக் கண்டு அவர்களே தானாகவே இவனை அணுக, அவர் முழி பிதுங்கி நின்றார்.
கதிரவனின் தொழிலை ஆட்டம் காண வைக்கும் ஆட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்.
இப்படியே ஆறுமாதங்கள் நிறைவு பெற்றிருந்தது. மச்சக்காளையின் சதித்திட்டம் எதுவும் கைகொடுக்கவில்லை. லிங்கமோ முன்பை போலக் கதிரவனிடம் வெறுப்பை உமிழ்வதை நிறுத்திவிட்டிருந்தார். அவன் தலை எடுத்து ஒரு மனிதனாக நிற்கும் பொழுது இவர் என்ன குறை காண முடியும் ? அதே நேரம் அவர் அவனைத் தன் மகனாக அங்கீகரிக்கவும் இல்லை. நீ யாரோ நான் யாரோ என்ற ரீதியில் இருந்தார்.
இந்த நிலையில்தான் மச்சக்காளைக்கு அந்த ரகசிய தகவல் வந்தது. அது கதிரவனுக்குப் புதுக்கோட்டை தொழில் சங்க தலைவர், வெளிநாட்டிற்கான ஏற்றுமதி ஒப்பந்தத்தை வழங்க போகிறார் என்றும். அதற்கான ஒப்பந்தம் அடுத்த இரண்டு நாட்களில் முடிவாகும் என்றும் தெரிந்துகொண்டார்.
“ஆரம்பிச்ச ஆறுமாசத்துல இந்தப் பொடி பைய வெளிநாட்டுக்கு சரக்கு அனுப்ப போறானாக்கும். அத நாங்க வேடிக்கை பாக்கணுமா… இம்புட்டு பெரிய வாய்ப்பை அவன்கிட்ட விட்டுடுவேனா ? கூடாது. ஏதாவது பண்ணனும்” என விஷம் நிறைந்த சிந்தனைகளை நெஞ்சில் வைத்திருந்தவர், அந்த விஷத்தையே ஆயுதமாக்க முடிவுகட்டினார்.
வெளிநாட்டுக்கு அனுப்பவிருக்கும் இறால் மாதிரியை புதுக்கோட்டைக்கு அனுப்பும்படியாகக் கதிரவனுக்குச் சொல்லியிருக்க, அவன் பார்த்து பார்த்து முதல் இரக இறால்களைத் தேர்வு செய்து அனுப்பியிருந்தான். ஆனால் அனுப்பப்பட்ட இறால் விரைவில் கெட்டுவிடும்படியான ரசாயனத்தைத் தன் ஆட்களில் மூலமாக மச்சக்காளை கட்டப்பட்ட பெட்டிக்குள் தெளித்துவிட, அது புதுக்கோட்டை போய்ச் சேரும் நேரம் கூடத் தாங்காது என்ற நிலைமையில் இருந்தது.
இப்படியொரு செய்யலை கதிரவன் எதிர்பார்க்கவில்லை. மாதிரிக்காக அனுப்பப்பட்ட இறால் இன்னும் சிறுது நேரத்தில் சேர்ந்துவிடும் என்ற சந்தோசத்தில் இருக்க, பாண்டியோ, “மாப்பு இன்னும் இரண்டுநாள்ல உன்னோட புறந்த நாள் வருதுடா ?” எனச் சந்தோசமாகக் கூவியபடி அங்கே வந்து சேர்ந்தான்.
“அதுக்கு ஏண்டா இம்புட்டு நீ சந்தோச படர? மாப்புள இவன் எதுக்கோ அடி போடறான். உஷாரா இருந்துக்கோ” எனச் சக்கரை கூற,
“அட நீ சும்மா இரு! நானே பரிசு பத்தி பேச வந்தேண்டா” எனப் பாண்டி கூற,
“டேய் அதெல்லாம் ஒன்னு வேணாம்டா… பரிசு அது இதெல்லாம் எதுக்கு நமக்குள்ள” எனக் கதிரவன் கூற, பாண்டியோ, “உனக்கு வாங்கித்தரேனு எப்படா சொன்னே ? நான் எனக்குச் சொல்லிக்கிட்டேன்.. உன்னோட புறந்தநாளைக்கு எனக்கென்ன பரிசு வாங்கித் தர போறேன்னு கேட்கவந்தே…நீ என்னடானா வேணா வேணுன்னு சொல்லிக்கிட்டு இருக்க” எனக் கூற, சக்கரை அவர்கள் இருவரையும் பார்த்து பக்கென்று சிரித்துவிட்டிருந்தான்.
“என்னடா? என்னையவே காமெடி பீஸ் ஆக்கிட்டியா?” எனப் புன்னகையுடன் கதிரவன் கேட்க,
“ஆமா எப்பவும் ஹீரோ ரோல் மட்டும் பண்ணனும்னு நினைக்கக் கூடாது மாப்புள. அப்ப அப்ப சிரிச்சு காமெடியும் பண்ணனும்” எனத் தீவிரமாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான் பாண்டி.
“ஒரு முடிவோடதான் வந்துருக்கனு சொல்லு…” எனச் சக்கரை கூற, “சரி என்ன வேணும்னு கேளுடா…” எனக் கதிரவன் சொல்ல, பாண்டியோ “வேறு என்ன? திங்கிற ஐட்டம் தான். பக்கத்து ஊருல புதுசா பிரியாணி கடை தொறந்துருக்கானாம். அங்க கூபிட்டுபோ. இந்தச் சக்கரக் கடையில சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு” எனக் கூற, “கண்டிப்பா போய்டலாம்” எனக் கதிரவன் கூற, சக்கரையோ கடுப்பாக, “செத்து போச்சுன்னா அடக்கம் பண்ணு” எனக் கூற, பாண்டியோ அலட்சியமாக, “பழைய ஜோக் மாப்ள. வேற வேற யோசி” எனக் கூறிவிட்டுச் சட்டையில் உள்ள காலரை ஏற்றிவிட, கதிரவன் சிரிக்கத் தொடங்கினான்.
சிரித்துக்கொண்டே, “என்ன மாப்பு பேரு வைக்கலாமா ?” எனக் கதிரவன் கேட்க, சக்கரை பதில் சொல்வதற்கு முன் முந்திக்கொண்டவன், “நீங்க என்னடா எனக்கு வைக்கிறது ? நானே வச்சுக்கிறே. இப்ப என்ன பிரியாணி பாண்டிதானே… பேரு வைப்பீங்களோ மோரு வைப்பீங்களோ, மொத சோர வையுங்க” எனக் கூறி அங்கிருந்தவர்களை வயிறு வலிக்க வலிக்கச் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தான்.
அதே நேரம், அவனின் பிறந்தநாள் ஆரவாரத்தில் கனல்விழியும் பறந்துகொண்டிருந்தாள்.
அவனுக்காகப் பார்த்து பார்த்து தேடி தேடி ஆசை ஆசையாக அவனுக்கான பரிசு பொருளொன்றை தேர்வு செய்திருந்தாள்.
தேர்வுகள் முடிந்து அனைவரும் அவரவர் ஊருக்கு செல்ல, இவள் மட்டும் பேருந்தில் ஏறும் முன்பாக, கதிரவனுக்குப் பிறந்தநாள் பரிசை வாங்குவதற்காக வந்திருந்தாள். இன்னும் சிறுது நேரத்தில் வீட்டிற்குச் சென்றுவிடுவாள். அதற்கு முன்னதாக விரைதூதர் சேவை மையத்தை (கூரியர்) அணுகியவள், தான் வாங்கிய பொருளை கதிரவனின் இறால் பண்ணைக்கு அனுப்பிவிட்டுச் சந்தோசமாகப் பேருந்தில் ஏறினாள்.
அவளின் கருத்தில் தற்போது இருக்கும் ஒரே சிந்தனை, “அவரை எப்படியாச்சும் பார்க்க முடியுமா? மாமா வீட்டுக்கு போக ஏதாவது வழியிருக்கா ?” என்ற எண்ணம் மட்டுமே. ஆனால் அவளுக்கு வழிதான் கிட்டவில்லை. போன முறை போல முருகேசனுக்கு அழைப்பு விடுத்து கூற முடியாது. கந்தசாமியும் தேவியும் அவளுடைய அண்ணனும் கூட அவளை ஆவலாய் எதிர்பார்த்திருப்பர். வந்ததும் வாராததுமாய் உடனடியாக முல்லை வீட்டிற்குப் போகவேண்டும் என்று கூற இயலாது. அதைக் கேட்க அவளுடைய மனமே கூட உறுத்தியது.
இத்தனை மாதங்கள் கழித்துத் தன்னுடைய தந்தை தாய் சகோதரனை காண செல்லும் ஆவல் கூடக் கதிரவனின் மீது கொண்டுள்ள காதலால் குறைந்துவிட்டதோ என்று அவளுடைய ஒரு மனம் முரண்டியது. இதயத்தில் நான்கு அறைகள் உண்டாம்… ஆனால் இப்போது கனல்விழியின் இதயத்தில் இரெண்டே அறைகள் தான். ஒன்று கதிரவனைப் பார்க்க முடியுமா என்ற எண்ணத்தைத் தன் அறையில் குடியேற்றியிருக்க, மற்றொன்றில் பெற்ற பாசம் குறைந்துவிட்டதா என்ற கேள்விகள் நிறைந்திருந்தன.
ஒன்றுக்கொன்று முரணான சிந்தனை தான். ஆனால் இரண்டையும் சுமந்து கொண்டிருந்தது அவளுடைய இதயம். அழுத்தமாக உணர்ந்தாள். பாரமாக உணர்ந்தாள். பாவமாகக் கூட உணர்ந்தாள். சந்தோசமாகக் காதலின் கைதியாகவும் இருந்தாள், சங்கடத்துடன் பெற்றோர் முன் கூண்டில் நிற்பதாகவும் தவித்தாள்.
அதே எண்ணத்துடன் சென்றவளின் முகத்திலும் அகத்திலும் இத்தனை நேரமிருந்த சந்தோசம் முற்றிலும் வடிந்திருந்தது. சிரித்த முகமாக வரும் பெண்ணிற்காகக் காத்திருந்த கந்தசாமி, கனல்விழியின் குழப்பம் நிறைந்த முகத்தைக் கண்டவர் யோசனைக்குத் தாவினார்.
“வா பாப்பா… என்ன ஏதோ ஒருமாதிரி இருக்க. தல வலிக்குதா? பரிட்சை எதுவும் செரியா பண்ணலியா ? என்னனு சொல்லு பாப்பா…சொன்னாதான அப்பாவுக்குத் தெரியும். எதுனாலும் சொல்லு” எனப் பேருந்து நிறுத்தத்திலிருந்து வீடு செல்லும் வரையிலும் கூடக் கேள்வியாகக் கேட்டுக்கொண்டே வர, கனல்விழிக்கோ இன்னமும் மனம் குன்றியது.
“அப்பாட்ட சொல்லிடலாமா? சொல்லிடு சொல்லிடு” என அவளுடய மனம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்த, “என்னனு சொல்லுவ? வேண்டாம்!” எனப் பகுத்தறிவு கொண்ட அவள் புத்தி புத்திமதி கூறியது.
அவளுடய மன போராட்டங்கள் முடியும் முன் அவர்களின் பயணதூரம் முடிந்து வீட்டிற்கு வந்து இறங்க, தேவியும் அவள் அண்ணன் பார்த்திபனும் தயார் நிலையில் இருந்தனர். அவர்களைப் பார்த்துக் கேள்வியாக முழித்தளே தவிர, அவளிடம் எப்போதும் இருக்கின்ற உற்சாகம் இல்லை. அதுவும் கந்தசாமியின் கண்களுக்குத் தப்பாமல் பட்டது.
“என்ன டி? அப்படியே வந்தது வந்தமேனிக்கு நிக்குற? போ வெரசா புறப்படு. வெளியூருக்கு போறோம்” எனக் கூறிவிட்டுக் கட்டைப்பை, துணிப்பை என்று ஏழெட்டுப் பைகளுடன் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, பார்த்திபனோ வழக்கத்திற்கு மாறாய் கொஞ்சம் உற்சாகமாக இருந்தான்.
“என்னடா நடக்குது இங்க?” என்ற புதுக் கேள்வி இப்போது கனல்விழியினுள்.
“எங்கப்பா போறோம்?” என வேறு தேவி முன்பே கேட்டு வைக்க, அவர் அப்பா மகள் இருவரையும் வசை பாடத்தொடங்கிவிட்டார்.
“நல்லா கேட்ட பாரு கேள்வி. ஏண்டி நீயும் உங்க அப்பாவும் அப்புறம் என்னதாண்டி வழி நெடுக பேசிட்டு வந்தீங்க. ஏங்கா எங்க எதுக்குப் போறோம்னு ஒண்ணுமே அவகிட்ட சொல்லலியா ? இப்ப பாருங்க சட்டுபுட்டுனு கிளம்பாம அசமந்தமா நிக்கிறா. போடி கட்டில்ல துணி எடுத்து வச்சுருக்கே. அத மாத்திட்டு வா. இந்தச் சாப்பாடு டேபிள்ல இருக்கு பாரு. சாப்பிட்டுட்டன, அத மட்டும் அலசி போட்டுட்டுக் கிளம்பிடலாம். நிக்காத போ போ” என விரட்ட, அவளோ சத்தமாகவே, “இவ்ளோ பெரிய வசனம் பேசுறதுக்குப் பதிலா, எங்க போறோம்னு ஒரு வார்த்தையிலே சொல்லிருக்கலாம்” எனக் கூற, “ஹ்ம்ம் இப்பவாவது கேட்கணும்னு தோணுச்சே. உங்க அண்ணனுக்குப் பொண்ணு கேட்டு போறோம்” என்ற தேவியின் வாக்கியம், அவளின் அத்தனை மன குழப்பத்தய்யும் சிதறடித்தது.
“நிஜமாவா மா? யாருமா பொண்ணு?” என அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்க, “எல்லாம் போறப்ப சொல்லுறே. நல்ல நேரத்துல கிளம்பனும். சீக்கிரம் போ” என விரட்ட, அடுத்தப் பத்தே நிமிடத்தில் வீடை பூட்டி, பார்த்திபனின் ராணியை நோக்கி பயணம் தொடங்கியது.

Advertisement