Advertisement

அன்பு பரிசு -12
“அப்பாடி மாஸா வந்தாச்சு…இனி எல்லாமே மாஸுதான்” எனக் கூறியபடி கண்களைச் சூழலவிட்டபடி பாண்டி வேக வேகமாக முன்னே நடக்க, சக்கரையோ கதிரவனிடம், “இப்ப இவன் எதுக்கு மாஸ்சு மாஸ்சுனு சொல்லுறான்னு தெரியுமா மாப்பு?” எனக் கேட்க, கொஞ்சம் யோசித்தவன், “தெரியலையே! ஏண்டா மாப்பு?” எனக் கேட்க, “எல்லாம் புதுக்கோட்டை ஸ்பெஷல் முட்ட மாஸுக்காகத்தான். நம்ம கூட அடம்பிடிச்சு வந்தது நாளைக்கு நீ திறக்க போற இறால் பண்ணைக்கு அழைக்க இல்ல. நீ இங்க இருக்கப் பெரிய மனுஷன பார்க்க வந்துருக்க. அவன் இங்க ஒரு வெட்டு வெட்டலாம்னு வந்துருக்கான்” எனக் கூறி சிரிக்க, கதிரவனோ முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு, “பாண்டி… இவன் சொல்லறது நிஜமா?” எனக் கேட்க, தலையும் புரியாமல் வாலும் புரியாமல், “என்னடா மாப்பு ?” எனத் திருதிருவென்று முழித்தான்.
சக்கரைகூட எதற்காகக் கதிரவனின் முகம் இத்தனை தீவிரமாக இருக்கிறது என்று கூட ஒரு நொடி யோசித்தான்.
“டேய் என்னனு சொல்லிட்டு முறைடா?” என மீண்டும் முறைத்துக்கொண்டிருந்த கதிரவனிடம் கேட்க, “நீ இங்க எதுக்கு வந்த? அந்த எஸ்போர்ட் ஆள பார்க்கவா? இல்ல முட்ட மாஸு சாப்பிடவா ?” எனத் தீவிரம் குறையாமல் வினவ, சக்கரையைப் பார்த்து முழியை உருட்டி, “ஏண்டா இது உன்னோட வேலைதானா ?” எனக் கேட்க, அவனோ உதடை பிதுக்கி, “டேய் நான் ஜாலிக்கு சொன்னேன்டா…இவன் என்னடானா சோலியை முடிகிற அளவுக்கு டெர்ரர் ஆகிட்டான்” என அவனும் புரியாமல் அப்பாவியாக கூறினான்.
“நல்லா பேசுறடா ரைமிங்கா…ஆனா என்னோட டைமிங்கிதான் சரி இல்ல” எனப் பதிலுக்கு இவன் பேச என அவர்களுக்குள் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருக்க, கடுப்பான கதிரவன், “டேய்… உன்டதான கேக்குறே. தொழில் முக்கியமா ? மூட்டமாஸ்ஸா?” எனத் திடிரென்று குரல் உயர்த்திக் கேட்க , சட்டென்று அவனின் கேள்விக்குத் திடுக்கிட்டு உண்மையைச் சொல்லிவிட்டிருந்தான்.
“முட்ட மாஸ்ஸுதான் மாப்பிள்ளை” எனக் கூறிய அடுத்த நொடி சுதாரித்து நாக்கை கடித்தபடி, “முட்ட மாஸ் அப்படினு சொல்லுவேன்னு நினைச்சியா? இல்ல இல்ல அப்படிச் சொல்லமாட்டேன்” எனச் சமாளிக்க முயல,கதிரவனோ, “உன்னோட சமாளிபிகேஷன் போதும். நிறுத்துறியா ?” எனக் கதிரவன் கூற, “மாப்பு…..” என இவன் இழுக்க, “இதோ பாரு நீ யாருனு எனக்குத் தெரியும். நான் யாருனு உனக்குத் தெரியும்….நாம இரெண்டு பேரும் யாருனு இந்த ஊருக்கே தெரியும்” எனக் கதிரவன் சினிமா பணியில் கூற, பாண்டியோ தன்னுடைய மனதில், “என்ன இவன் ? நம்மள மாதிரி பேசுறான்? இப்ப கோவமா இருக்கானா ? இல்ல நான் கோமாளியா இருக்கேனா ?” எனக் கேட்டுக்கொண்டவன், வெளியே கண்ணை உருட்டி முழிக்க மட்டும் செய்ய, கதிரவன் அவனை விடுத்து, “சக்கர, பேர மாத்திடலாம்டா”எனக் கூற, இப்போதோ சக்கரை பாண்டி என இருவருக்கும் சுத்தமாகக் கதிரவனின் போக்கு பிடிபடவில்லை.
“எந்தப் பேரடா?” எனச் சக்கரை கேட்க, “நம்ம பாண்டி பேரதான் சொல்லுறே” எனப் பதில் கூற, “என்னமோ பிளான் பண்ணிட்டானுங்க நம்மள வச்சு” என மனதிற்குள் பாண்டி நினைக்க, கதிரவன் தொடர்ந்தான்.
“அதான் சக்கர, நம்ம சோமாஸ் பாண்டிய மாத்திட்டு மாஸ் பாண்டினு வச்சிடலாம்னு. அதவாது முட்ட மாஸ் பாண்டி” எனக் கதிரவன் சிரிக்காமல் சொல்ல, சக்கரைதான் பக்கென்று சிரித்துவிட்டிருந்தான்.
“அடே என்ன ‘வச்சு’ நல்லா செயிரீங்கடா…. விட்டா நாளைக்கு நடக்கபோறது பண்ணை திறப்புவிழாவா இல்ல எனக்குப் பேர் சூட்டு விழாவனே சந்தேக வந்திடும். ‘நல்லா…..’ வருவடா” என அழுத்தி கூறினாலும் அவனும் புன்னகையுடன் கூற, “அப்போ “முட்ட மாஸ் பாண்டி ஓகே தான ?” எனக் கதிரவன் விடாமல் கேட்க, “அடே மொத அந்த முட்டை மாஸா கண்லயாவது காட்டுங்கடா….வாயிலையே வட சுடாம” எனக் கூற “டேய் நீ எப்படிச் சொன்னாலும் அதுலையேதான் நிப்பியா ?” எனச் சக்கரை கேட்க, “சோறு ரொம்ப முக்கியம் மாப்பு” எனத் தத்துவம் பேசினான்.
கதிரவன் பாண்டி சக்கரை என்று மூவரும் பேச்சும் சிரிப்புமாகப் புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து அவர்கள் போகவேண்டிய இடத்திற்குச் செல்வதற்காக ஆட்டோ பிடிக்கக் கதிரவன் செல்ல, கிடைத்த இடைவேளையில் வேகமாகக் கனல் விழியின் எண்ணெய் அழுத்தினான்.
“அண்ணா…என்ன திடிர்னு? ஒன்னுமில்லையே. அவரு நல்லாதானே இருக்காரு”என்ற கேள்விதான் கனல்விழியிடம் இருந்து முதலாவதாகப் புறப்பட்டது.
“அட என்னமா நீ? போன் வந்துச்சுனா மொத ஹெலோ சொல்லு. அப்புறம் இதெல்லாம் பேசு… அவனோட அம்மாவை போலவே நீ கூட எப்பவும் அவனப்பத்தியே யோசிக்கிறியேமா. உன்னோட அன்புக்காகவாச்சும் எல்லா நல்லபடியா நடக்கணும்” எனப் பேசியவன், அவனே தொடர்ந்து, “சரி! என்ன உன்னோட குரல் ஒருமாதிரி இருக்கு” எனக் கேட்க, அவளோ, “ஒண்ணுமில்ல! சாதாரன காய்ச்சல் தான்” எனக் கூறினாள்.
“ஐயோ இப்ப எப்படி இருக்க?”
“பரவாயில்ல அண்ணா”
“நாங்க புதுக்கோட்டைதான் வந்துருக்கோம். இங்க இறால் ஏற்றுமதி பண்ற தலைவர் இருக்காரு. அவரைத் திறப்பு விழாக்கு அழைக்க வந்தோம். அதா சும்மா கால் அடிச்சேன். ஒருவேளை நீ கதிரவனைப் பார்க்க வருவியோன்னு. அட இதெப்படி மறந்தே ? இன்னைக்குச் சனிக்கிழமை உனக்குக் காலேஜ் இருக்கா ? இல்ல லீவா ?” என அருகில் இருந்த கடையில் தொங்கவிடப்பட்டிருந்த நாட்குறிப்பில் ‘21.04.2012 (சனி)’ என்ற தேதியை பார்த்துக்கொண்டே கேட்டான்.  
“லீவு இல்ல. சரி அத விடுங்க. இப்போ சரியா எங்க இருக்கீங்க?”
சக்கரை தாங்கள் செல்லவிருக்கும் விலாசத்தைச் சொன்னான்.
“அப்படியா? நானு அங்கதான் இருக்கேன். நீங்க வர எப்படியும் இருப்பது நிமிஷம் ஆகும். நான் அதுக்குள்ள அவுங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு இங்க வெயிட் பண்றே. இன்னைக்காச்சும் அவுங்ககிட்ட பேச முடுஞ்சா நல்லா இருக்கும்” எனப் பலவீனமான குரலில் கூறினாள்.
“உனக்குத் தான் உடம்பு முடிலல. இப்போ எதுக்கு வெயிட் லாம் பண்ற ? வேணாம். ஹாஸ்டெல்க்கு போ. இன்னொருநாள் பார்த்துக்கலாம். இப்போ கடைகண்ணினு அழையாதமா. ஆமா நீ காலேஜ் இருக்கிறப்ப எதுக்கு வெளில வந்த ? அதுவும் காச்சலோட?”
“காச்சலுக்கு டாக்டர் பார்க்கத்தான் என்னோட பிரண்ட் கூட்டிட்டு வந்தே. வார்டன்கிட்ட சொல்லிட்டுதான் வந்துருக்கே. ஒன்னும் பிரச்னை இல்ல. எனக்கு அவரைப் பார்க்கணும் போல இருக்கு. இந்த முறையாச்சும் ஒரே ஒரு வார்த்தையாச்சும் சாதாரணமா பேசிடமாட்டோமான்னு இருக்கு. ப்ளீஸ் அண்ணே” என அவள் கெஞ்சும் குரலில் கேட்டாலும் உறுதியாக நிற்கவே சக்கரை சரி என்றுவிட்டிருந்தான்.
அடுத்த இருப்பது நிமிடத்தில் அவர்கள் சொல்லிய இடத்திற்குப் போக, அவர்கள் ஆட்டோவிலிருந்து இறங்கி கதிரவன் பணம் கொடுக்க, சரியாக அதே நேரம், அதே நிமிடம், அதே நொடி அவர்கள் நின்ற இடத்திற்கு எதிரே இருந்த துணிக்கடையிலிருந்து கனல்விழி வெளியே வர, எதார்த்தமாகப் பணம் கொடுத்துவிட்டு திரும்பியவன் விழித்ததே விழியன் முகத்தில் தான்.
அவளும் கதிரவனைச் சரியாக அப்போது எதிர்பார்க்கவில்லை. அவனைக் கண்டதும் சட்டென்று காய்ச்சலால் வாடியிருந்த முகம், சுணக்கத்தையும் மீறி புத்துயிர் பெற்றது. கண்களில் சந்தோசம் படர்ந்து மெல்ல சிரிக்க, கதிரவனோ புருவத்தைச் சுருக்கி, “இவளா ?….” என்று யோசிக்கும் போதே, அவன் மனதில் தோன்றிய அதே வார்த்தை, வெளியே வேறொருவரால் உச்சரிக்கப்பட்டது.
“இவளா….?” என ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி கூறியிருக்க, “ஆமாம்! அந்தப் பொண்ணுதான். ஆனா இங்க என்ன பண்ணுது ?” என உடன் இருந்த மற்றொரு பெண்மணி கேட்டார்.
கதிரவனுக்கு அக்கம் பக்கமாய்ச் சக்கரையும் பாண்டியும் இன்றாவது இவளை நல்ல முறையில் அறிமுகம் செய்திடவேண்டும் என்ற பேராவலில் காத்திருக்க, கதிருவனுக்காகக் கனல் விழி பார்த்து பார்த்து வாங்கி இருந்த சட்டை வேட்டியை ஆசையுடன் கைகளில் பிடித்திருக்க, நேருக்கு நேர் கோட்டில் கதிரவனும் கனல்விழியும் நின்றிருக்க, யாரும் எதிர்பார்க்கா சமயத்தில் அந்த இரண்டு பெண்மணிகளும் இருவருக்கும் நடுவே வந்தனர்.
கதிரவனுக்கும் கனல்விழிக்கும் கணிசமான இடைவெளி மட்டும் சில பாதையோர கடைகள் இருந்ததால், அந்த மூவருடனும் சேர்த்து கனல்விழியை அந்தப் பெண்மணி எண்ணவில்லை.
“கனல்விழி… என்ன இதெல்லாம்? பொய் சொல்லிட்டு ஊர் சுத்துறியா ? உனக்கு எவ்ளோ நெஞ்சழுத்தம் இருக்கும் ?
ஹாஸ்டல்ல காச்சல் முடியல ஆஸ்பத்திரி போறேன்னு சொல்லிட்டு இங்க வந்து ஊர் சுத்திட்டு இருக்க?
இப்பெல்லாம் பசங்கள கூட நம்பிடலாம் போல. இந்தப் பொம்பள பிள்ளைங்களைத்தான் நம்பவே முடியல. சரியான நாடகக்காரியா இருப்ப போல.” என ஒருபெண்மணி சகட்டுமேனிக்கு பேச, உடன் வந்திருந்த மற்றொரு பெண்மணியோ, “இங்க வேணாம் மேடம். நம்ம காலேஜ்க்குதான் கெட்ட பேரு. அங்க பிரின்சிபால் ரூம்ல என்குயரி வைக்கலாம். இப்ப வாங்க. இந்த மாதிரி பொண்ணுங்களாம் இப்பவே இவ்ளோ பண்ணுதுங்க. இன்னும் போகப் போக என்னென்ன பண்ணுங்களோ.
நம்ம காலத்துல வாசலதாண்டவே அம்புட்டு யோசுச்சோம். இதுங்க சுவர் ஏறி குதிக்கக் கூடத் தயங்காதுங்க போலவே” என அவரும் அவர் பங்கிற்குப் பேச, கதிரவன் கண்களுக்குக் கனல் விழி பொய்யின் மொத்த உருவமாகவே தெரிந்தாள்.
அவனுடைய பார்வையே அவள் மீது வெறுப்பைச் சிந்தியது. சட்டென்று முகத்தைத் திருப்பியவன், அந்தத் துணிக்கடைக்கு அருகே இருந்த சிறிய ஏற்றுமதி இறக்குமதி நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்துவிட, உள்ளே நுழைவதற்கு முன் அவன் பார்த்த பார்வையில் கனல் விழி இடிந்து போனாள்.
சக்கரையும் பாண்டியும் கூட இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு உடனடியாக என்ன செய்யவேண்டும் என்று கூடத் தோன்றவே இல்லை. தாங்கள் சென்று வக்காலத்து வாங்கினால், அதுவே அவளுக்கு அவப்பெயரை வாங்கித் தந்துவிடுமோ எனப் பயம்கொண்டவர்களாகச் சிந்திக்க, கதிரவனுடன் செல்லாமல் அதே இடத்தில் பின்தங்கினர்.
எப்போதும் சட்டென்று துணிந்து பேசிவிடுபவள், இன்று உடல் சோர்வினாலும், மேலும் கதிரவன் முன் இப்படியாகிவிட்டதே என்ற தடுமாற்றத்திலும் சுதாரிக்கத் தவறினாள். முதல் முறை சந்திப்பு தவறாய் போனதற்கு அவள் பெரிதாகக் கலங்கவில்லை. இரண்டாம் முறை நடந்தது அவளுக்குச் சில மாதங்கள் வரை தெரியவே இல்லை. ஆதலால் சந்தோஷமாகவே வளைய வந்தாள்.
சமீபத்தில்தான் வேறு பேச்சை எடுப்பதைப் போல, சக்கரையும் பாண்டியும் இவளை பற்றி ஆரம்பிக்க, “அந்தப் பொண்ணா ? சரியான திமிரு பிடிச்சவ. வாய் துறந்தா பொய், பித்தலாட்டம், நாடகம். இப்போ ஆசாத் கல்யாணத்துல அம்மா கூடப் பேசுனத அவுங்கள கவுத்துட்டே பாத்தியானு சொல்லிட்டு இருந்தாடா…அன்னைக்கும் என்னவோ பண்ணிருக்கா… அவளப்பத்தி சும்மா கூடப் பேசாதீங்க” எனக் கதிரவன் கூறியிருந்ததைப் பாண்டி அப்படியே விழியிடம் சொல்லிவிட்டிருக்க மனது முதல் முறையாக அவளுக்குக் கனத்தது.
பாரம் இருந்தது ஆனால் அவள் சோர்ந்து போகவில்லை. அவளுடைய காதல் அந்தப் பாரத்தைத் தாங்கும் சக்தியை தந்தது. பொறுமை என்னும் வலிமையையும் தந்தது. எல்லாவற்றையும் சரி செய்திட முடியும் என்ற நம்பிக்கையையும் தந்தது.
அத்தனை திடமாக இருந்தும் இன்று எதிர்பாராமல் நடந்தது அதைத் தொடர்ந்து கதிரவனின் வெறுப்பானா பார்வை அவளை அசைத்துவிட்டிருந்தது. உடலில் இருந்த சோர்வுடன் சேர்ந்து இப்போது மனதிலும் சோர்வு ஏற்பட்டிருக்கப் பேசமுடியாமல் ஒரு சில நொடிகள் நின்றுவிட்டிருந்தாள்.
மேற்கொண்டு அந்த இரண்டு பெண்மணிகளும் பேசுவதற்கு முன்னால் அங்கு அவளைக் காட்கவந்த தெய்வமாக வந்து சேர்ந்தாள் அவள் உடன் வந்த தோழி மீனாம்பாள்.
“குட் ஈவினிங் மேம்” என அவர்களிடம் வணக்கம் தெரிவித்தவள், வேகமாக விழியிடம், “ஏண்டி இம்புட்டு லேட்? டாக்டருக்கு காசு கொடுக்கச் சில்லறை மாத்திட்டு வரேன்னு போன. நான் போறேனாலும் கேட்காம என்ன அங்க உக்கார வச்சிட்டு வந்த. சில்லறை கிடைச்சதா? அந்த நர்சம்மா நான் ஊசி மருந்த தூக்கிட்டு போக வந்தவ மாதிரியே பார்க்குது. சீக்கிரம் வந்து காச கொடு டி. நான் மருந்தும் அங்கேயே வாங்கிட்டேன். அதுக்கும் காசு கொடுக்கணும்” எனப் படப் படவென்று பட்டாசாக வெடிக்க, அப்போது தான் உணர்வு வந்தவளாக, கதிரவனின் பார்வை வீச்சில் அடிபட்டு விழுந்திருந்தவள் மெல்ல மனதால் எழுந்தாள்.
“யாருமே ஆயிரம் ரூபாய்க்கு கொடுக்கல டி மீனா. அதான் இந்தத் துணிக்கடையில வியாபாரம் பண்ணி ரூபா நோட்ட மாத்தவேண்டியதா போச்சு. இந்தா…” என நான்கு நூறு ருபாய் நோட்டுகளை மீனாவின் கைகளில் திணிக்க, அதை வாங்கிக்கொண்டு, ” நீ மறுபடியும் நடக்காத. அப்பவே தலையைச் சுத்துச்சு சொன்னல. இங்னவே இரு. கொடுத்துட்டு ஆட்டோ கூப்பிட்டு வாறே” என ஆஸ்பத்திரி நோக்கி செல்ல, கனல்விழியை வாய்த் திறக்கவிடாமல் பேசிய இருவரும் சங்கடமாக நெளிந்தனர். இருந்தும் அவர்கள் அவளின் ஆசிரியர் என்பதால் அந்தப் பகட்டை விட்டுக்கொடுக்காமல், “இத முன்னாடியே சொல்லுறதுக்கென்ன ? மத்த நேரமெல்லாம் வாய் கிழிய பேசுவல? சரி மீனாம்பாள் வந்ததும் ஹாஸ்டெல்க்குச் சீக்கிரம் போங்க. அங்க இங்கனு சுத்தாதீங்க” எனக் கண்டிப்புடன் கூறிவிட்டு கிளம்ப, அவர்களைத் திட்டவேண்டுமென்று சக்கரை நெருங்க போக, அவனைக் கனல் விழி பார்வையாலே தடுத்தாள்.
அவர்கள் இருவரும் சென்றுவிட, மீனாம்பாள் திரும்பி வருவதற்குள், “வேணாம் அண்ணா.. அவுங்ககிட்ட இப்ப நீங்க பேசுனா நீங்க யாரு என்னனு பிரச்சனை தான் வரும். அதோட நான் சில்லறை மாத்த வந்திருந்தாலும், வராட்டியும் இங்க அவருக்கு டிரஸ் எடுக்கக் கண்டிப்பா வந்துருப்பேன். எனக்கு இது சரிதான். ஆனா வார்டன்க்கு இது தப்புதானே… அதுனால விடுங்க அண்ணா” என அவர்களுக்கு இவள் சமாதானம் கூற, அவர்களோ இவளை பிரமிப்பாகப் பார்த்தார்கள்.
கல்லூரி இரண்டாம் ஆண்டுப் படிக்கின்ற பெண், இப்படியொரு சூழலில் பெரும்பாலானோர் நிச்சயம் அழுதிருப்பார்கள். அப்படியில்லை என்றாலும் கூட, பதட்டமாவது கொண்டு புலம்பியிருப்பார்கள். அதுவமில்லை என்றால் ஆசிரியர்கள் சென்றவுடன் தான் கதிரவனிடம் அவ பெயர் எடுத்ததிற்கு அவர்கள் தான் காரணம் என்று தனிமையிலாவது திட்டியிருப்பார்கள். ஆனால் கனல்விழி இந்த மூன்றையும் செய்யவில்லை.
கதிரவன் அப்படிச் சென்றதும் அவள் கண்ணில் வலி தோன்றியது. அப்படியே நின்றாலே ஒழிய வேறு உணர்ச்சிகளை அவளும் அவள் முகமும் பிரதிபலிக்கவில்லை. இப்போதோ அவளுக்குத் தாங்கள் ஆறுதல் கூறவேண்டும் என எண்ணியிருக்க, அவளோ அவர்களுக்குக் கூறிக்கொண்டிருந்தாள்.
இதைப் பாண்டி சக்கரை இருவரும் உணர்ந்தாலும் அவளிடம் சொல்லவோ கேட்கவோ முற்படவில்லை.
“அண்ணா என்னோட பிரண்ட் வந்திடுவா… இப்போ அவுங்கள பாக்குறது சரியா இருக்காது. கடவுள் நாங்க பேசவேண்டிய சந்தர்ப்பம் இது இல்லனு நினைக்கிறாரு போல. அதுனால எனக்கு ஒரு உதவி பண்றீங்களா ?”
“சொல்லுமா என்ன பண்ணனும் ?”
“இந்த வேட்டி சட்டையை அவரை நாளைக்குப் போடவைக்க முடியுமா? அவருக்கு ஒரு நல்லது நடக்குற நாள்ல நான்தான் பக்கத்துல இல்ல. நான் அவருக்காகவே வாங்குனது இது. அவர்கிட்ட நான் கொடுத்ததுனு சொல்லாம ஏதாவது பண்ணி போடவைக்கிறீங்களா ?” எனக் கேட்டபடி துணி பையை நீட்ட, பாண்டி வாங்கிக்கொள்ள, சக்கரை “கண்டிபாமா… நீ பார்த்து போ” என்று கூறிவிட்டுக் கொஞ்சம் தள்ளி நிற்க, கதிரவனும் மீனாம்பாளும் ஒரே சமயத்தில் வர அங்கிருந்து இருவரும் நேரெதிர் திசையில் பயணிக்கத் தொடங்கினர்.
கதிரவன் பார்க்காத போது கனல்விழி அவனைப் பார்க்க, அந்தப் பார்வையைப் பார்த்துவிட்ட சக்கரைக்கும் பாண்டிக்கும் மனது பாரமானது.
“டேய் அந்தப் புள்ள பொய் சொல்லலடா” எனப் பாண்டி ஆரம்பிக்க, “இதோ பாருங்க. அவ யாரு நமக்கு ? எப்ப பாரு அவ பேச்சே எடுக்குறீங்க ? அவ என்னவா இருந்தா நமக்கென்ன ? நல்லவேளை இவ நம்ம ஊரு இல்ல. இல்லாட்டி இவ முகத்துல அடிக்கடி முழிக்க வேண்டி வந்திருக்கும். யார் வீட்டுக்கோ விருந்தாளியா வந்திருப்பா போல. அதுவும் தூரத்து சொந்தமா இருக்கணும் . அதா அந்தக் கல்யாணத்துக்கு மொத முறையா வந்திருக்கா….
நமக்குத் தெருஞ்ச குடும்பத்து வீட்டு புள்ளைங்க யாரும் இவளைப்போல இருக்கவே மாட்டாங்க. சரி அவளைப் பத்தி இனி பேச்சு வேண்டாம்” என்று கூற சக்கரைக்கும் பாண்டிக்கும் அயர்ச்சியாகவும் ஆயாசமாகவும் இருந்தது.
“இவனுக்குக் கனல்விழிதான் இவன் காப்புத்துன பொண்ணுனே தெரியல. இதெல்லாம் எப்படிச் சொல்லி புரியவைக்கப் போறோமோ ? அந்தப் புள்ள நிலைமையை நினச்சா ரொம்பப் பாவமா இருக்கு. நாம வேணும்னா அந்தப் பொண்ணுதான் இந்தப் பொண்ணுன்னு சொல்லிடலாமா ?” எனப் பாண்டி சக்கரையின் காதை கடிக்க, சக்கரையோ, “வேணாம்! நம்ம நினைக்கிறதுக்கு எதிரா நடந்துருச்சுனா. இப்பவாது பஞ்சாயத்துல காப்புத்துன பொண்ணு யாருனே தெரியாட்டியும் ஒரு நல்ல பேரு இருக்கு. இரண்டும் ஒண்ணுதான்னு சொல்ல போய், அந்தச் சின்ன வயசு விழியையும் இவன் வெறுத்துட்டா” எனக் கேட்டான்.
“அப்போ நம்ம என்னதான் பண்றது?” எனப் புரியாமல் பாண்டி கேட்க,
“காதல் புருஞ்சு வரணும். புரியவச்சு வரவழைக்க முடியாது…. அதுக்குமேல அவுங்க இரண்டு பேரு கைலதான் இருக்கு. பொறுத்திருந்து பார்க்கலாம்” எனச் சக்கரை பேச்சை முடித்துக்கொண்டான்.
அதே சமயம், இவர்கள் இங்கே புதுக்கோட்டையில் இருந்த அதே நேரம், சாந்தினி லிங்கத்தின் வீட்டில் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்க, அங்கே இடைவேளையில் ஓடிக்கொண்டிருந்த விளம்பரத்தில் பார்வையைப் பதித்திருந்தாள்.
இந்த மூன்று நாட்களாய் மாறனுக்கு சாந்தினி இருக்குமிடமே குளிர்ப்பரதேசம். அக்னி நக்ஷத்திரம் வஞ்சனை இல்லாமல் வாரி வழங்கியிருந்த வெப்பத்தைக் கொஞ்சமும் உணராதவனாகக் கோடையில் குளிர் காய நெருப்பைத் தேடுபவனைப் போலச் சாந்தினியின் அருகே இதமான குளிரை உணர்ந்தான்.
அவள் வந்த நாளிலிருந்து இப்போதுவரை பார்வையாலே அவளைத் தொடர, அவளும் பார்வையாலே அவன் தொடருவதை அனுமதிக்க என அங்கே மௌனமான உறவு பிறந்துவிட்டிருந்தது. அவர்களின் இதழ்கள் பேசிய வார்த்தைகள் சொற்பமே. இமைகள் மட்டுமே அடிக்கடி பேச அந்தச் சத்தத்தை வீட்டிலிருந்த பெரியோர்களால் கேட்க முடியவில்லை.
முற்றத்தில் பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்தபடி முறத்தில் பார்வதி போட்டுக்கொண்டிருக்க, அவருக்கு எதிரேஏதோ படிப்பவன் போலப் புத்தகத்தை வைத்துக்கொண்டு மனதையும் பார்வையையும் சாந்தினி மேல் வைத்திருந்தான்.
அவளும் தொலைக்காட்சியில் கண்களைச் செலுத்தினாலும் நிமிடத்திற்கு நூறுமுறை மாறனை பார்க்கவும் தவறவில்லை. அப்போதுதான் சரியாக அந்தச் சட்டை விளம்பரம் வர, உய்யாரமாக ஆண் ஒருவன் சட்டையைப் போட்டு நடித்துக்கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த மாறன், கண்களால் அவளிடம், “இது எனக்கு எப்படி இருக்கும் ?” என்று அவளிடம் வினவ, இவ்ளோ புன்னகைத்தபடி தலையை மட்டும் வெக்கம் கலந்து அசைக்க, கேட்கவில்லை என்று காதில் கைவைத்து இவன் பதில் சைகை செய்ய, சாந்தினி சுற்றம் மறந்தவளாய், “சூப்பரா இருக்கும்” என மெல்ல கூறிவிட்டிருந்தாள்.
அவள் கூறியது மெல்ல என்றாலும், அது பார்வதியின் காதில் சரியாக விழுந்துவிட, “என்ன சூப்பரா இருக்கும் சொல்லுற ?” எனக் கேட்க, “இல்ல ! இல்ல அத்த… அது இந்தச் சட்ட நல்லா இருக்குனு சொன்னே” எனத் தட்டு தடுமாறி கூற, அவரோ வெள்ளந்தியாய், “நல்ல புள்ள போ…டீவி பொட்டிக்கிட்ட போய்ப் பேசிட்டு இருக்கவ” எனக் கூறியபடியே அந்த விளம்பரத்தை பார்த்தார்.
அதைப் பார்த்ததும் சட்டென்று அவர் மனதில் ஒன்று தோன்ற அப்படியே கீரையை வைத்துவிட்டு வெளியே சென்றார்.
வேகமாக முன்கட்டை தாண்டி கொட்டத்திற்கு வந்தவர் அருகே கட்டிக்கிடந்த பசுவும் கன்றும் அவரைப் பார்த்து ‘மா’ என்று கத்துவதையும் பொருட்படுத்தாமல், யாரவது தன்னைக் கவனிக்கின்றனரா என்ற எச்சரிக்கை உணர்வுடன் எதிர்வீட்டு பையன் சங்கரை அழைத்தார்.
“ஏப்பா சங்கர்…. வீட்ல இருக்கியா?”
“சொல்லுங்க அத்த” என்றபடி உள்ளிருந்து வந்தான்.
“ஏங்கண்ணு எதாவது உனக்கு இப்ப அவசர சோலிகிடக்கா ?”
“ஏ அத்த அதைப்பத்திலாம் கவலைப்படுற. உனக்கு என்ன செய்யணும்னு சொல்லு. உடனே பண்ணுறே. அதைவிட எனக்கு என்ன வேல இருக்கு” என உரிமையாகப் பேச, அவரோ கொஞ்சம் சங்கடம் கொண்டவராய், “வேலை சொல்லுறேன்னு தப்பா நினைக்காத கண்ணு. கதிரவனுக்கு ஒரு வேட்டி சட்ட எடுக்கணும். பக்கத்து ஊருக்கு போய் நல்லதா பார்த்து எடுத்துட்டு வரியா ? உனக்கு அளவெல்லாம் தெரியுமா ?” எனத் தயக்கத்துடனே கேட்க, “அண்ணனுக்கா ? கண்டிப்பா பண்ணுறே. இதுக்கு எதுக்கு இம்புட்டு தயங்குறீங்க. நான் இப்பவே புறப்படுறே” எனக் கூறியவன் அடுத்த ஒரு மணிநேரத்தில் அவர் முன் துணி பையுடன் நின்றிருந்தான்.
“அத்த அண்ணனுக்கு ஏத்தமாதிதான் வாங்கிருக்கே. இந்தா…” என நீட்ட, எங்கோ வெளியே சென்றுவிட்டு வந்துகொண்டிருந்த பாரிஜாதத்தின் கண்களில் இது தப்பாமல் பட்டது. சட்டென்று வைக்கப்போர் பின்புறமாகத் தன்னுடைய பெரிய உடம்பை மறைத்துக்கொண்டு, அவர்களின் உரையாடலை கவனிக்கத் தொடங்கினாள்.
“ரொம்ப நன்றி கண்ணு” என வாங்கியவரிடம், “எதுக்கு அத்த புதுத் துணி? கதிரு அண்ணனுக்குப் புறந்தநாளா என்ன ?” எனக் கேட்க, அவரோ, “இல்ல கண்ணு. எம்மவ நாளைக்குப் பண்ணை திறக்க போறான்ல, அதா” எனக் கூற, அவனோ “நல்லதுங்க அத்த. சரி நான் வாறே” எனக் கூறிவிட்டு கிளம்ப, பாரிஜாதமோ, “அப்படிப் போகுதா சங்கதி. பண்ணைக்குப் போகக்கூடாதுனு அண்ணே சொன்னதுனால அவுங்க பாசத்தைச் சட்டையில தச்சு அண்ணி அனுப்புதா? பாத்துக்கிறே. அந்தச் சட்ட எப்படி அவன்ட போய்ச் சேருதுனு நானு பாக்குறே” என மனதிற்குள் வினயமாக நினைத்துக்கொண்டபடி வீட்டிற்குள் நுழைந்தார்.
இரவு சாப்பாட்டிற்கு லிங்கம் அமரும் வரையிலும் கூட அமைதியாக இருந்தவர், லிங்கமும் மாறனும் வந்தமர்ந்தவுடன், மெல்ல தூண்டிலை வீசினர்.
“பரவாயில்ல அண்ணே! அண்ணிக்கு இப்பெல்லாம் மாறனையும் கண்ணுக்கு தெரியுது. என்னாலே நம்ப முடில்ல. எப்ப எப்படி என்ன மாறுமோ? ஏதோ அந்தக் கதிரவன் மட்டும்தான் ஊரு உலகத்துல இல்லாத உசத்தி மாதிரி திருஞ்சவங்க ஏதோ ஞான உதய வந்தது போலத் திடுதிப்புனு நம்ம ராசா மேல பாசாங்காட்டுறாங்க. எது எப்படியோ நம்ம மாறனோட அருமை இப்பவாது தெரிஞ்சதே” என அளந்துகொண்டிருக்க, “என்ன ஆச்சுப் பாரிஜாதம் ?” என லிங்கம் கேட்க, மாறனோ  ”அம்மா அப்படி என்ன திடிர்னு செஞ்சாங்க ?” என நினைக்க, பார்வதியோ, “இவுங்க இன்னைக்கு என்ன பஞ்சாயத்தைக் கூட்ட அடிபோடறாங்க ? என்னவா இருக்கும்” எனத் திகிலுடன் யோசனைக்குத் தாவினார்.
பார்வதியின் யோசனைக்கு முற்று புள்ளி வைப்பதற்குச் சட்டென்று பாரிஜாதம் விஷயத்தைப் போட்டுடைத்தார்.
“என்ன நிஜமாவா ?” என மாறன் பார்வதியை பார்த்தபடி முகம் முழுக்கச் சந்தோசமாக வினவ, மீண்டும் பாரிஜாதம் பார்வதியின் மீது வன்மம் கலந்த சிரிப்பை சிந்தியபடி, “அட ஆமா மாறா உங்க அம்மா உலக அதிசயமா உனக்குன்னு பாத்து பாத்துப் புதுச் சொக்கா எடுத்துருக்காங்க. அதுவு உனக்கு மட்டும். அவளோட மூத்த மவனுக்கு எடுக்கல கண்ணு. இது அதிசயத்துலயும் அதிசயம்தான்” எனக் கூற, மாறனால் நம்பவே முடியவில்லை.
பார்வதி இதற்கு முன்னால் கதிரவன் மாறன் என்று இருவருக்குமே துணி எதுவும் எடுத்ததே கிடையாது. ஏன் அவருக்குமே. பொங்கல் தீபாவளி என்று லிங்கம் வீட்டிலிருக்கும் அனைவர்க்கும் எடுத்துத் தருவதுதான். அதைத் தவிர வேறு இல்லை. கதிரவன் இந்த வீட்டிலிருந்த வரைக்கும் லிங்கத்திற்கு அவன் மீது பிடித்தம் இல்லையென்றாலும் கூட வருடா வருடம் அவனுக்கும் துணிகள் வந்திடும். அவன் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு பார்வதி எத்தனை சொல்லியும் அவன் துணிகளை லிங்கத்திடமிருந்து வாங்குவதில்லை. மெல்ல அவரும் எடுப்பதை நிறுத்திவிட்டிருந்தார்.
கதிரவனுக்குப் பணம் பிரச்சனையாக இல்லை. ஏனெனில் அவன் இருக்கும் தோப்பும் தோப்புவிடும் அவனுடைய தாத்தாவின் பேரில் இருந்தது. ஆதலால் அவன் லிங்கத்திடம் பணத்திற்காக நிற்கவேண்டிய அவசியமில்லை.
இன்றுதான் முதன் முதலில் பார்வதி துணி எடுத்திருப்பது. வாழ்க்கையில் முதன் முறையாக என்று கூடச் சொல்லலாம். அப்படி எடுக்கும் பொழுது இரண்டு மகனுக்கும் எடுக்காமல் ஒருவனுக்கு மட்டும் எடுத்திருப்பது தவறோ என்று ஒரு கணம் கூனி குறுகிவிட்டார். பாரிஜாதத்தின் பேச்சும் பார்வையும் அவருக்கு இந்தத் துணி கதிரவனுக்கானது என்று தெரிந்தே தான் கூறுகிறாள் என்பது புரியத்தான் செய்தது.
புரிந்தாலும் அவருக்கு இந்தமுறை பாரிஜாதத்தின் மீது கோபம் வரவில்லை. கோபம் வந்ததென்னவோ தன் மீதுதான். அவரிடம் கையிலிருந்த பணத்தில் கதிரவனுக்கு எடுக்கவேண்டும். தான் தான் போகமுடியாது, அதற்குப் பதிலாகச் சட்டையாவது கொடுப்போமே என்று தான் எண்ணினார். அந்த நொடி மாறனை நினைக்கத் தவறிவிட்டோமே என்பது அவருக்கே கோபம் கலந்த வருத்தத்தைத் தந்துவிட்டது.
அதிலும் மாறன் அத்தனை ஆர்வமாய் “நிஜமாவா?” எனக் கேட்க, அந்த நொடி, “கதிரவனைப் பத்தின கவலையில் இவன கவனிக்கத் தவறிட்டேனா ? பாரிஜாத எம்புள்ளைகிட்ட என்ன நெருங்கவிடாட்டி கூட நானும் கொஞ்சம் கொஞ்சமா ஒதுங்கிட்டேனோ” எனக் கண்கலங்கினார்.
ஆதலால் எதுவும் யோசிக்காமல் அந்த நிமிஷம் அவர் வாங்கியிருந்த துணியை எடுத்து மாறன் கைகளில் கொடுக்க, அவனுக்கு அத்தனை சந்தோசம். இவருக்கும்தான். ஆனால் கதிரவனுக்கு நாளை தன் சார்பாய் என்ன கொடுப்பதென்று அவருக்குத் தெரியவில்லை. ஒரே ஒரு இரவு. வேறு வாங்க முடியாது. வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது. அவரிடம் பணமில்லை. அனைத்து நிர்வாகமும் லிங்கம் மட்டும் பாரிஜாதத்திடம். இந்தப் பணம் இருந்ததே பெரிய விஷயம் அவரிடம்.
தன் பரிசை மகன் எதிர்பார்பானோ என்று ஒரு மனம் சுணங்கியது. அதே வேளையில் கனல்விழியோ, “நான் அவருக்காக வாங்குன சட்டையை அவரு நாளைக்குப் போட்டுக்குவாரா ?” என்று எண்ணியது.
கவலையோடு அமர்ந்திருந்த பார்வதியின் அருகில் வந்த சாந்தினியோ, “என்ன அத்த ? ஏ இப்படி இருக்கீங்க ? எனக்குத் தெரியும். நான் பார்த்தே. நீங்க கதிர் மாமாக்கு வாங்கின சட்டையை எங்க அம்மா வேணும்னே மாறன் மாமாக்கு வாங்கிக் கொடுத்திடுச்சு. நீங்க கவலைப்படாதீங்க. கதிர் மாமாக்கு கிடைக்கும்னு நீங்க நினைக்கிறது கண்டிப்பா ஏதாவது ஒருவழில கிடைக்கும். அத கொடுக்கவும் யாரவது இருப்பாங்க…. ” எனக் கூற, அவள் கூறியதை கேட்டு அவளுடைய தலையை ஆதரவாக வருடிவிட, அதைத் தற்செயலாகக் கேட்டுவிட்ட மாறன் அதிர்ந்து போனான்.
“அவருக்கு அந்தச் சட்டை போய்ச் சேரனும்….” எனக் கனல் விழி
“எம்மவனுக்கு ஒரு சட்ட வாங்கித்தரக் கூடக் காசு இல்லாம என்ன அந்த ஆண்டவ இப்படி ஒரு நிலையில வச்சுருக்கானே” எனப் பார்வதி
“எங்க அம்மா மொத மொத வாங்குன சட்ட எனக்கில்லையா? அப்போ அத்த சொல்றபோல அம்மாக்கு அவுங்க மூத்த மகன் தான் முக்கியமா ?” என மாறன்
“தங்கச்சி கொடுத்த சட்டையை எப்படி என்ன சொல்லி கதிரவனைப் போடவைக்கிறது?” எனச் சக்கரையும் பாண்டியும்….
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவு. ஆனால் நினைவுகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவன் கதிரவன் நம் கனல் விழியின் நாயகன்.

Advertisement