Advertisement

நண்பனோ அன்பனோ – 10
“ஐயோ என்ன இவரு அநியாயத்துக்கு அமைதியா இருக்காரு. எதாவது பேசுங்க” என மனதிற்குள் கூறிக்கொண்டிருந்தவள் கனல்விழியே.
ஒரு சாரார் கதிரவன் ஆரம்பிக்கவிருக்கும் இறால் பண்ணைக்கு எதிராகக் குரல் கொடுக்க, முருகேசனும் அவன் ஜனகட்டிற்கு ஜாடை காட்ட, எதிர்ப்பவர்களை எதிர்க்க ஒரு கூட்டம் தயார் நிலையில் இருந்தது.
“இப்படி ஆளாளுக்குப் பேசாம, ஏம்பா கதிரவா, வாயத் தொறந்து உன்னோட தரப்பை சொல்லு. இல்லாட்டி எங்க தீர்ப்புக்கு கட்டுப்படுறியா” என முடிவாகத் துணை பஞ்சாயத்து தலைவர் கேட்க, கதிரவன் பேசப்போகும் சொல்லுக்காகச் சலசலப்பு அடங்கியது.
“பேசுறதெல்லாம் பேசியாச்சா? இல்ல என்னோட பாசமான மாமா இன்னு எதாவது பேச இருக்குதா ? அப்படினா முழுசா பேசிடுங்க. நான் வெயிட் பண்றே. அதுலயும் ஊர முதன்மையா வச்சு யோசுசீங்களே, நீங்க நின்னு அடிச்சு ஆடுறீங்க மாமோவ். என்னா பொதுநலம், என்னா நல்ல மனசு. இந்த மனசெல்லாம் கோடில ஒருத்தருக்குத்தான் இருக்கும் மாமோவ்” என மச்சக்காளையிடம் சின்னச் சிரிப்புடன் பேச, “என்ன இவன் ? தாம்தூம்னு குதிப்பான் , இல்ல சண்டைக்கு வருஞ்சுகட்டிட்டு வருவான், அதுவும் இல்லாட்டி கொஞ்ச பதட்டமாச்சு படுவானு பார்த்தா, இப்படி ஈஈனு இழுச்சுக்கிட்டுப் பேசுறான்” என மனதிற்குள் வேக வேக மாக யோசனைகளை ஓட்டியவர், அருகிலிருப்பவனை அழைத்து, “ஏண்டா…நான் இம்புட்டு நேர சரியாதான பேசுனே?” எனக் கேட்க, அவனோ, “ஆமாங்க அய்யா” என்றான் அவர் காதில் கிசுகிசுப்பாக.
“அவனோட சோலிக்கு மொத்தமா உலவைக்கத்தான இந்தக் கூட்டம்? நானு அப்படித்தான பேசுனே ?” என மீண்டும் கேட்க, அவனோ பாவமாய், “சத்தியமா அப்படித்தாங்க பேசுனீங்க” எனக் கூற, பளார் என்று ஒரு அறையை அவன் எதிர்பார்க்கும் முன்னர் அவனுக்குக் கொடுத்த மச்சக்காளை, மீண்டும் அவனிடமே, “அப்புற எந்தத் தைரியத்துலடா இவன் இம்புட்டுத் தெனாவட்டா பேசுறான்?” எனக் கேட்க, அடிவாங்கியவன் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு பதில் பேசாமல் நின்றான்.
“அட மாமா! என்ன நீங்க ? நான் இங்கன உங்கள பாராட்டிட்டு கிடக்கே. நீங்க என்னடானா அந்த வாயில்லா பூச்சிய அடிச்சுகிட்டு இருக்கீங்க…. நீங்க அடிக்கணும்னு நினைக்கிற இடமே வேற மாமா… இப்படி வாங்க, எங்க எப்படி அடிக்கணும்னு சொல்லுறே” எனக் கூற,
“என்னடா? அடிப்பே கிளிப்பேனு சொல்லுற ? பஞ்சாயத்துனு மட்டு மருவாத இல்லாம பேசுற. என்னையே மிரட்டி பாக்குறியா ? உம்ம மேல பிராது கொடுத்தா, அடிச்சிருவேன்னு மறைமுகமா மிரட்டுறீரோ” எனப் பிரச்சனையின் போக்கை மச்சக்காளை திசை திருப்ப, முருகேசன் உட்புகுந்து, “இதோ பாருப்பா…. கதிரவனைப் பேசவிடு. அவன் ஒருவார்த்தை சொன்னா நீ ஒம்பது வார்த்த சேர்த்து பேசுற. கொஞ்சம் பொறுயா” என அடக்கிவிட்டுக் கதிரவனிடம் சைகை காட்ட, முருகேசனை நோக்கி சின்னச் சிரிப்பை கதிரவன் விட, தூரத்தில் இருந்தாலும் கதிரவனின் அந்தக் குறுஞ்சிரிப்பு கனல்விழியைச் சொக்கவும் வைத்தது கொக்கிபோட்டு இழுக்கவும் செய்தது.
“எப்படிச் சிரிகிறாங்க பாரு…. அம்மாடியோ விழி இவர்கிட்ட நீ உஷாரா இருக்கணும். சிருச்சே ஆள கவுத்துருவாரு போல. ஆனா இவரு எப்பவாவது தான சிரிக்கவே செய்றாரு. அதுனால தான் இம்புட்டு அழகோ…நல்லவேளை வயசு பிள்ளைங்களைப் பஞ்சாயத்து கூட்டிவரக்கூடாதுனு நல்ல சட்டம் போட்டாங்க” என மனதிற்குள் ரசிப்புச் சிரிப்பு நிம்மதி என்று பல உணர்ச்சிகளைக் கரைபுரள செய்துகொண்டிருந்தாள். ஆனால் அவளின் பார்வை மட்டும் கதிரவனை விட்டு நகரவே இல்லை.
“பாத்தீங்களா மக்களே, பஞ்சாயத்து பெரிய மனுஷங்களே; நல்லா பார்த்துக்கோங்க. இதுதான் என்னோட மாமாவோட புத்திசாலித்தனம். அவரு வெள்ளந்தியா வளந்துப்புட்டாரு. அடிக்கிறதுனு சொன்னதும் அவரைத்தான் நான் சொல்லுறேன்னு எப்படித் தப்புத் தப்பா புருஞ்சுகிட்டாரு பாருங்க. அது ஒண்ணுமில்ல. இந்த ஊருக்குள்ளையே இருக்கறதுனால அத தாண்டி அவருக்கு யோசிக்கத் தெரியல.
இது போலத்தான் இந்தப் பஞ்சாயத்துல அவரு கொடுத்திருக்கப் பிராதும். நான் ஒன்னு செய்யப் போனா இவரு வேற ஒன்ன சொல்லி ஊர ஒன்னுகூட வச்சிருக்காரு. ஆனா இதுல கண்டிப்பா எங்க மாமாவை பாராட்டியே ஆகணும். ஜனங்களோட பொழப்ப பத்தி இவருக்குத்தான் எம்புட்டு அக்கரை? சரி இப்ப கொஞ்சம் சீரியஸா பதில் சொல்லுறே. எல்லாருக்கும் புரியிற போல” எனக் கூறி சற்றே இடைவேளை விட்டான்.
லிங்கம் கூட என்ன சொல்ல போகிறான் என்பதாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“நம்ம ஊருல நான் ஒரு இறால் பண்ணை வைக்கப் போறது உண்மைதான். ஏற்கனவே இருக்கறப்ப நான் எதுக்கு இன்னொன்னு வைக்கணும்னு உங்க எல்லாருக்கும் தோணும்… அதுக்குக் காரணத்தையும் நானே சொல்லுறே.
மாமா சொன்ன அதே உதாரணத்தை நானும் சொல்லுறே… ஒரு ஹோட்டல் மட்டும் ஒரு ஊருல இருந்துச்சுன்னா, சாப்பாடு விளையும் அதிகமா சொல்லுவாங்க தரமும் குறைய வாய்ப்பு இருக்கு. நானே ராஜா நானே மந்திரினு கதை ஆகிடும்.
அதே இரெண்டு இருந்துச்சுன்னா, போட்டி போட்டு ஜனங்களுக்கு நல்ல சாப்பாட நியாமான விலையில தருவாங்கல. அதேதான்…இரண்டு பண்ணை இருக்கறப்ப அங்க வேலை செய்யிற தொழிலாளிக்கு நியாமான சம்பளம், இறால் சப்பளை பண்ற மீனவங்களுக்கு நியாமான விளையும் கிடைக்கும்.
அதுமட்டுமில்ல, ஒரு பண்ணையில முப்பது பேருக்கு வேல கிடைக்கிதுன்னா இன்னொரு பண்ணையில நம்ம ஊரு மக்கள்ல இன்னுமொரு முப்பது பேருக்கு வேல கிடைக்குமே… அது நம்ம ஊருக்குத்தானே நல்லது.
இது இல்லாம இன்னொரு விஷயமும் இருக்கு. ஒரு வேல மாமா அவரு பிடிக்கிற கான்ட்ராக்டரை நானும் பிடிச்சு அவரு தொழிலை படுக்க வச்சிடுவேனோனு பயப்படவேணாம். ஏன்னா நான் வெளிநாட்டுக்கு தான் ஏற்றுமதி பண்ணை போறே. அதுனால இவரு பண்ணையிலிருந்து மதுரை தஞ்சை கும்பகோணம் திருச்சி போற எந்த லோடுக்குப் பிரச்சனை வராது.
இதெல்லாம் விட இன்னொரு முக்கியமான விஷயமிருக்கு. அது என்னனா, மத்தவங்க பொழப்புல மண்ணை அள்ளி போடக்கூடாதுன்னுதான் நான் தனியா ஆரம்பிக்கப் போறே. ஏனா அது எங்க தாத்தா ஆரம்பிச்சதுனாலும் அதுல எனக்குச் சகல உரிமை இருக்குதுனாலும் அதையே இப்ப நம்பி இருக்க என்னோட மாமாட்ட இருந்து அத பிடிங்க எனக்கு இஷ்டமில்லைங்க.
இதெல்லாம் என்கிட்ட ஒருவாட்டி கலந்து பேசிட்டு, அப்படியே ஆலோசனை கேட்டுட்டுப் பஞ்சாயத்தைக் கூட்டிருக்கலாம். இதுனால நேரமும் வேஸ்ட் எங்க மாமா தம்கட்டி பேசியதும் வேஸ்ட்” எனக் கூறிவிட்டு எதுவுமே நடவாதவன் போலக் கதிரவன் நின்றுகொள்ள, அவன் முகத்திலிருந்து எந்த உணர்ச்சியும் வெளிப்படாத காரணத்தினால் மச்சக்காளையால் அவன் நம்மை மிரட்டுகிறானா ? இல்லை சொத்து அவனுடையது என்று குத்தி காட்டுகிறானா ? இல்லை சொத்தில் பங்கு வேண்டாம் என்று ஒதுங்கி கொள்கிறேன் என்று சொல்கிறானா ? எனப் பிரித்து இனம் காண முடியாமல் தடுமாறினார்.
பாரிஜாதத்திற்கோ, “என்ன இவன் ? புதுசா தாத்தாவோடது அது இதுனு பேசுறான்… இத இப்படியே வளரவிடக் கூடாதே” எனத் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினாள்.
மற்றவர்களுக்கோ கதிரவன் கூறிய அனைத்தும் சரியாகப் பட்டதால் இன்னும் சொல்லப்போனால் அவன் பேசியது மட்டுமே சரி என்று பட்டதால், கதிரவன் பக்கம் சாய, முருகேசன் அதற்கு மேலும் வழு சேர்ப்பது போல எடுத்து பேச, பெரும்பாலானோர் கதிரவன் திறக்கவிருக்கும் பண்ணைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அனைவரும் லிங்கத்தின் முகம் பார்க்க, அனைவரது எண்ணமும் அவர்களின் பேச்சுக்கள் மூலம் புரிந்த்துவிட, அதோடு கதிரவன் வேறு ஓவ்வொரு விஷயத்தையும் விளக்கி கூறியிருக்க, கொடுத்த புகாரை ரத்து செய்வதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை.
“கதிரவன் சொல்லுற எல்லா விஷயமும் சரியா இருக்கு. அதுனால புதுப் பண்ணை தொறக்க போறத தடுக்க முடியாது. ஊர் ஆதரவும் கதிரவனுக்கு இருக்கறதுனால, மச்சக்காளை கொடுத்த புகாரை இந்தப் பஞ்சாயத்து ஏத்துக்கல” என லிங்கம் கூற, துணை பஞ்சாயத்து தலைவர், “ஏம்ப்பா மச்சக்காளை பஞ்சாயத்துல கொடுத்த பிராத திரும்ப வாங்கிட்டு மறுபடியும் இப்படிச் செய்யமா இருக்கணும். இந்தத் தீர்ப்புக்கு நீ கட்டுப்படுறியா ?” எனக் கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதே, கனல் விழி இனி நிச்சயமாகத் தீர்ப்பு அவளின் நாயகனிற்குச் சாதகமாகத் தான் வரும் என்ற நம்பிக்கையில் அதோடு இன்னமும் தாமதித்தால் கூட்டம் களைந்து அனைவரும் வந்துவிடுவதற்கான அபாயமான சூழல் இருப்பதால் எப்படி வந்தாளோ அதே போலப் பதுங்கி பதுங்கி வெளியேறி இருட்டுக்குள் புதைந்தபடி வீடு நோக்கி வேக வேகமாக நடக்கத் தொடங்கியிருந்தாள்.
மறுபுறமோ துணை பஞ்சாயத்து தலைவர் கேட்ட கேள்விக்கு, “ஒத்துக்கிட்டுதானே ஆகணும். ஒருவேளை சம்மதிக்கலனா இதையே சாக்கா வச்சு பாட்டன் சொத்துனு இந்தப் படுபாவி உள்ள நுழைஞ்சுட்டா? முதலுக்கே மோசமாகிடும். வேணாம்! அவன் ஆரம்பிக்கட்டும். இதே ஊருதான. என்ன மீறி எப்படிப் பண்ணைய நடத்திடறானு நானு பாத்துக்கிறே” என மனதிற்குள் சூளுரைத்துக்கொண்டவராக, “சரி சரி” எனப் பட்டும் படாமலும் பேசிவிட்டு கதிரவனை முறைத்தபடி நிற்க, அருகில் வந்தபாண்டியோ, “மாமா…” என அழைக்க, “என்னடா…?” என கோபத்தோடு மச்சக்காளை  கேட்க, “என்னோட மாப்பி என்ன உங்க மொறப்பொண்ணா ? ” என கேட்டு வைத்து, அவரை பற்களை நறநறவென்று கடிக்க வைத்தான். அவரின் கோபத்தை பார்த்த பாண்டி ஓரடி பின்நகர்ந்து, “இல்ல..? மொறச்சு மொறச்சு பாக்குறீங்க… அதான் கேட்டேன். பொறவு இன்னொரு முக்கியமான விஷயம்” என கூற,  என்ன என்பதாய் அவர் பார்க்க, பாண்டியோ, “பஞ்சாயத்து முடுஞ்சு மூணுநிமிசமாச்சு.” என கிண்டலடிக்க,விருட்டென்று கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
முருகேசன் கதிரவன் அருகில்வந்து அவன் தோளின் மீது கைவைத்து, “சபாஷ் கதிரவா… உன்னோட புதுத் தொழிலுக்கு என்னோட வாழ்த்துக்கள். உனக்கு என்ன உதவி வேணும்னாலும் எப்பவேணும்னாலும் என்கிட்ட தயங்காம கேளு சரியா ?” எனக் கூறி புன்னைகைக்க, கதிரவனும் புன்னகைத்தான்.
“அட என்ன உன்னோட மாமான இந்த வாங்கு வாங்கிட்ட ? நாங்க யாரும் பேசவே வேணாம் போலவே. களத்துல நின்னு விளையாடற கதிரவா. போற போக்க பார்த்த இனி உன்னோட சட்டம் தான் போல” என மேலும் பாராட்டியபடி உண்மையான சந்தோசத்தில் அவர் கூற, பாண்டியும் சக்கரையும் கூட அதிகபட்ச சந்தோசத்தில், “மாப்புள்ளையா கொக்கா… காளை முட்ட வந்துச்சு. ஆனா எங்க மாப்பிள மூக்கணாங்கயிறு போட்டு அடிமாடா ஆக்கிபுட்டான்ல. எங்களுக்கு ரொம்பச் சந்தோசமா இருக்கு கதிர்” எனப் பாண்டி கூற, அதே சந்தோசத்துடன் பேசியபடி களைந்து செல்ல, ஊர் மக்கள் திரும்பி வரும் சத்தம் கேட்க, விழி ஓட்டமும் நடையுமாக வள்ளிவீட்டிற்குள் புக, அதே நேரம் சரியாக உள்ளிருந்து வெளியே முல்லை வர, வாசலில் மல்லி நின்றிருந்தார்.
மல்லியை பார்த்ததும் முல்லைக்கொடி திருதிருவென்று முழிக்க, கனல்விழியும், “ஐயோ எப்ப என்ன சொல்றது ?” என நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுதே வள்ளியும் அவள் அம்மாவும் வெளியே வர, “இன்னைக்குத் தொலைஞ்சேன்” என முல்லைக்கொடி மொத்த நம்பிக்கையையும் இழந்தே விட்டாள்.
“இன்னைக்கு எதவச்சு அடிப்பாங்க? தோசை கரண்டியா ? சப்பாத்தி கட்டையா  ? இல்ல ஜல்லி கரண்டியா?” எனத் தீவிரமாகத் தனக்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தாள்.
“ஹ்ம்ம் தொடப்பத்த வச்சு” என அவள் காதை கடித்தவள் கனல் விழியே.
“என்ன புள்ள விளையாடறியா? நான் சொல்ல சொல்ல கேட்காம இப்படி வம்புல மாட்டிவிட்டுட்டியே. பாரு இப்ப வசமா சிக்கிட்டோம்” எனப் பதிலுக்குக் காதை கடிக்க, மல்லியுடன் கனல் விழி வந்திருப்பதாய் நினைத்து வள்ளியின் அம்மா, “கூப்பிட்டு போக வந்தீங்களா ?” எனப் பன்மையில் கேட்க, மல்லியோ தன்னை அவர் எப்போதும் வாங்க போங்க என்று மரியாதை தொனியில் அழைப்பதாய் நினைத்து, “ஆமா! அவுங்க அப்பா வந்துடுவாங்க. அதா வெரசா இழுத்துட்டு போக வந்தே. பொம்பள பிள்ளையே இராத்திரில அனுப்புனா வையுவாங்க” எனப் பதில் கூறியபடியே, “அப்புறமா இன்னொருநாள் வாறே” எனக் கூறிவிட்டு இருவரையும் இழுத்து செல்ல, முல்லைக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
“ஏண்டி இரண்டு பேரும் ஆடி அசஞ்சு வெளில வரீங்க? கூட்டம் முடுஞ்சு போச்சு. தெரியும்ல? உங்க அப்பா வந்தா, உங்க இரெண்டு பேரையும் ஏன் தனியா விட்டனு என்னதான் ஏசுவாரு. பாரு விழி கூட வேகமா தட்டி கதவு வர வந்துட்டா. ஆனா நீ அப்பத்தான் திருவிழா தேராட்டாம் அசஞ்சு அசஞ்சு வர” எனப் பேசியபடி வேகமாக முன்னே நடக்க, அவரின் நடைக்கு ஈடு கொடுத்தபடி இருவரும் ஓடி சென்றனர்.
“ஏண்டி கனல்விழி, பஞ்சாயத்துல என்ன ஆச்சு?” என மெல்ல முல்லை கிசுகிசுக்க, “அவருக்கு எதிரா எதுவும் நிக்கமுடியுமா ? இல்ல எதுத்துக்கிட்டுதான் நின்னுட முடியுமா ?” எனப் பெருமையாக விழி கூற, “புறவு எதுக்கு நீ அடிச்சு பிடிச்சு ஓடுன ?” என முல்லை கொடி கேட்க, “அது பாசம்…வேற டிபார்ட்மென்ட்” எனச் சினிமா பாணியில் விழி கூற, தலையில் அடித்தபடி, “எல்லாம் எனக்குத் தேவ தான். இனி அவளைக் கேள்வி கேட்ப ?” என அவளுக்கு அவளே கேட்டுக்கொண்டாள்.
“சரி அதெல்லாம் விடு. அங்கன வள்ளிவீட்ல எப்படிக் கரெக்டா தொடப்பம்னு சொன்ன ?” என்ற அதிமுக்கிய கேள்வியைக் கேட்க, “ஓ… அதுவா உன் மைண்ட் வாய்ஸ் கொஞ்சம் சத்தமா என் காது வரைக்கும் கேட்ருச்சு. அதான்” எனப் புன்னைகையுடன் கூற, “உளறிட்டேனா” எனக் கூறி கொடி அசடு வழிந்தாள்.
மறுபுறமோ லிங்கத்தின் வீடு ரணகளத்தில் அதகளப்பட்டுக்கொண்டிருந்தது.
லிங்கம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் என்ன நினைக்கின்றார் என்று பாரிஜாததாலே இனம் காண முடியவில்லை. அதே இறுக்கத்துடன் அவரது அறைக்குச் சென்று விட, மச்சக்காளைக்கும் பாரிஜாதத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய கோப வடிகாலாகப் பார்வதி மாறிப்போனார்.
கதிரவனின் மீதெழுந்த அத்தனை கோபத்தையும் சுடும் தணலாக மாற்றிப் பார்வதி மீது கொட்டி தீர்த்தனர். ஆனால் எப்போதும் போல் இல்லாமல் பார்வதிக்கு அந்தக் கொதிக்கின்ற வார்த்தைகள் ரணத்திற்குப் பதிலாக இதத்தை அளித்தது. காரணம் எப்பொழுதும் மச்சக்காளையின் சொல்லே இதுவரை ஜெயித்திருந்தது. இன்று இந்தநாள் கதிரவனின் சொல்லை ஊரே கேட்டது. அதுவே அவருடைய நிம்மதிக்குக் காரணம்.
ஏனோ இனம் புரியாமல் ‘இனி எல்லாம் சரியாகிவிடும் மெல்ல மெல்ல” என்ற எண்ணம் அவருக்குள் முதல் முறையாகத் தோன்றியது.
மறுநாள் காலை முதல் பேருந்திற்கு முருகேசன் மல்லி முல்லை விழி என்று அனைவரும் கல்லுக்கால் அருகிலிருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நிற்க, ஊருக்குள் நல்ல ஜன நடமாட்டம் தொடங்கியிருந்தது.
பால் வண்டிக்காரர், காய்கறிக்கடை போட்டிருந்த பாட்டி, பூக்கடை வைத்திருக்கும் பூங்கோதை அக்கா, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப் போகும் அர்ச்சகர், மூட்டைகளை டெம்போவில் ஏற்றிக்கொண்டிருந்த தொழிலாளிகள், கருவாடை கடை பரப்பியபடி இருந்த அக்கா என்று எல்லாரும் அங்கே அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாலும், அங்கு யாருமே இல்லாமல் தெருவே வெறிச்சோடி கிடப்பது போன்ற பிரம்மையில் கனல் விழி நின்றிருந்தாள்.
காரணம் அங்குக் கதிரவன் இல்லை.
ஒரே ஒருமுறையாவது அவனைப் பார்த்திட அவள் விழிகள் கெஞ்சின. அங்குமிங்கும் அவனைத் தேடி தேடி களைத்தன. அந்த இடமே களையிழந்து இருப்பது போலவும், அங்கே பார்ப்பதர்க்கு எதுவுமே இல்லாததைப் போலவும் அவளுக்கு எண்ணம் தோன்றியது.
அவளது மனமோ, “ஏதாச்சும் ஒரு மாயம் நடந்திடாதா ? அவரைக் கண்டிப்பா பார்க்கணுமே, ஐயோ பஸ் ஹார்ன் சத்தம் வேற கேட்குதே” என எண்ணிக்கொண்டிருக்கும்போதே அவள் எதிர்ப்பார்த்த மாயம் நடக்கத் தொடங்கியது.
சட்டென்று நிகழ்ந்துவிட்ட மாயத்தில் அந்தப் பேருந்து நிறுத்தம் பேரழகானாது.
பாண்டியுடன் வம்பு பேசியபடி சின்னச் சிரிப்புடன் வந்தவனைக் கண்டுவிட்டவளின் உள்ளம் எகிறித்தான் குதித்தது. குதிக்கின்ற இதயம் வெளியே விழுந்து விடாமல் இருக்க நெஞ்சை பத்திரமாகப் பிடித்துக்கொள்ள வேண்டுமோ என்று கூட ஒரு நொடி நினைத்துக்கொண்டாள்.
அவன் அருகில் வர வர வேக வேகமாக இதயம் படக் படக் என்று சுகமான தாளத்தை மீட்டியது.
ஒரு நொடி முன்பு வரை அந்த இடத்தில் அவள் பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. ஆனால் இப்பொழுதோ பார்க்கின்ற இடமெல்லாம் வண்ணமாகத் தெரிந்தது. அனைத்துமே அழகிய ஓவியங்களாகத் தோன்றின. வருகின்ற வழியில் தென்படுவோரிடம் நட்பாகப் பேசினான். அந்த நிமிஷம் அப்படி ஓர் அறிமுகம் தனக்கும் அவனுக்கும் இல்லையே என்று ஏங்கவும் செய்தாள்.
மாயம் செய்தவனே
என் மாயவனே
என்னைச் சுற்றி வர்ணங்கள்
தீட்டிய மாயக் கண்ணனே
என் அன்பனாக இல்லாவிடில்
ஓரிரு வார்த்தை பேசும்
நண்பனாகவாது இருந்திட மாட்டாயோ  
முருகேஷனை அவன் பார்த்துவிட்டால் அருகில் வந்து பேசுவானா ? என்று அவள் சிந்தனை செல்லும் வழியை அடைத்தபடி வந்து நின்றது அவர்கள் செல்ல வேண்டிய பேருந்து.
அனைவருடனும் பேருந்தில் ஏறியவள், ஜன்னல் வழியே அவனைத் திரும்பி திரும்பி பார்க்க, இப்படியொருத்தி தன் மீது அன்புவைத்துளாள் என்பதே அறியாதவனாகக் கதிரவன்.

Advertisement