Advertisement

நின்மேல் காதலாகி நின்றேன்!…

 

கதிரவனும் கனல்விழியும் – 1

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்……



தனித்திருக்கும் நிலவும்

தாகம் தனிக்காத கடலும்

வான் நிறைந்த காற்றும்

சலசலக்கும் தென்னங்கீற்றுகளும்

என் தனிமையை விரட்டுவதால்

என்னுடைய சொந்தங்களாயினவோ ?

 

இரண்டு தென்னம் பாலைகளுக்கு நடுவே, நிலவின் ஒளி ஊடுருவி கதிரவன் அமர்ந்திருந்த கயிற்றுக் கட்டிலில் வெளிச்சத்தைத் தெளித்திருந்தது. அனைத்தும் இருந்தும் இல்லாதவனாய் அமர்ந்திருந்தான். அருகிலே சிறு ஓட்டுவீடு. நீளமான ஒரே அறைகொண்ட வீடது. கடற்கரைக்கு வெகு சமீபத்தில் இருந்த தோப்பிற்குள் அவனுக்கு அவனே கட்டிக்கொண்ட தோப்பு வீடு.

 

ஊருக்குளே பெரிய முற்றத்துடன் ஆறு அறைகள் கொண்ட வீடு இருந்தது. ஆனாலும் அவன் அங்குப் போவது எப்போதாவது தான். தொண்டியிலிருந்து மீமிசல்க்கு இடைப்பட்ட தூரத்தில் நடுவே அமைந்துள்ள எண்ணற்ற குட்கிராமங்களுள் அதுவும் ஒன்று. கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்திருந்த அழகான கடற்கரை கிராமம். நெய்தல் முல்லை மருதமென்று மூன்று திணைகளையும் இங்கே நாம் காண முடியும்.

 

விவசாயமும் நடந்தது உப்பளமமும் இருந்தது. நீண்ட கடற்கரையிற்கு நடு நடுவே ஆங்காங்கே அலையாத்தி காடுகளும் மண்டிக்கிடந்தன. இங்கே அலைகளோ மணல்பரபோ இல்லாத, சட்டென்று இறங்கினால் ஆழ் கடல் வந்துவிடும் நிலையில் கடல் மிகச் சமீபத்தில் இருந்தது. மதுரை திருச்சி மக்களுக்குக் கடல் என்பது வெகு தூரம் பயணப்பட்டுச் செல்லும் சுற்றுலா தளம் போலவும் சென்னை மக்களுக்கு வார இறுதியில் கழிக்கும் ஒரு பொழுதுபோக்கிடம் என்பதெல்லாம் இந்தக் கிராம மக்களுக்குத் தெரியவே தெரியாது. ஏதோ அருகிலிருக்கும் குளம் குட்டையைக் காண்பதை போல எளிதாகக் கடந்து சென்றுவிடுவார்கள்.

 

இன்னமும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு தேநீர் கடைக்குத் தேவையான நீரை இரண்டே எட்டில் எடுத்துக்கொள்ளும் அளவில் எந்தவொரு பந்தாவோ பகட்டோ இல்லாமல் கடைக்குப் பின்னாலே கடல் இருக்கும். பல ஊர்மக்கள் அதிசயமாகப் பார்க்கும் கடல் இங்குச் சர்வ சாதாரணம்.

 

அதுமட்டுமில்லாமல் நடந்து செல்கின்ற போதே தரையோடு தரையாகக் குளங்களும் குட்டைகளும் வெள்ளை அல்லி மலர்களாலும் சிவப்பு அல்லி மலர்களாலும் நிறைந்து கிடக்கும் பேரழகும் இவ்வழி கிராமங்களுக்கு இயற்கை அளித்த வரப்பிரச்சாதம்.

 

“கதிரூ, சாப்பிட வீட்டுக்கு போவலியா? அம்மா என்ன வயிது (திட்டுவது). உன்ன சாப்ட கூட்டியாரதா வந்தே. கிளம்பு மாப்பு” எனக் கையில் ஒரு பொட்டலத்தோடு வந்து நின்றான் சோமாஸ் பாண்டி.

 

ஐந்தாவது படிக்கும் போது அந்த வகுப்பு ஆசாரியை சாப்பிடுவதற்காக வைத்திருந்த சோமாஸை பார்த்து நாவில் எச்சி ஊறவிட்டவன், அவர் அறியாமல் அதை எடுத்து உண்ணும் போது கையும் களவுமாகப் பிடிபட்டுவிட அன்றிலிருந்து அந்த வகுப்புப் பசங்களுக்கு அவன் சோமாஸ் பாண்டியாகி போனான்.

 

மெல்ல மெல்ல ஊருக்குள்ளும் இந்தப் பெயர் பரவி, அதுவே அவனுக்குப் பட்டபெயராகிப் போனது. ஆனாலும் அந்தப் பெயர் அவனுக்குப் பொருத்தமே. எங்கு எப்போது சோமாஸ் போட்டாலும் அங்கே கண்டிப்பாகப் பாண்டியை நம்மால் பார்க்க முடியும்.

 

“அம்மா? என்ன கூப்ட்டு வர சொல்லுச்சு ? இத நா நம்பணுமா ? வழக்கமா எனக்குச் சோறுதான கொடுத்துவிடு. உண்மைய சொல்லு. தலகட்டு தலவரு வீட்ல இருந்தாராக்கும் ?”

 

“அட ஆமா மாப்பு, சரியா புடுச்சுட்டியே. உங்கம்மா நெத்திலி கருவாட்டு ஆனமும் (குழம்பு) சின்ன வெங்காயமும் வச்சிருந்துச்சு போல. வாட ஆளையே தூக்குச்சு. நா வேகமா தூக்குவாளிய தூக்குற முன்னாடி உங்க அய்யா வந்துட்டாரு. அம்புட்டுதான், சோலி முடுஞ்சிடிச்சு.

 

தப்புச்சே பொலச்சேனு ஓடியாந்தே. சோறு வேணுனா வீட்டுக்கு தான் போவணுமா. சோறு யார தேடியும் போகாதா”

 

“இத யாரு சொன்னது எங்க அம்மாவை?”

 

“அட! உங்க அம்மா என்னக்கி உங்க அய்யா முன்னாடி வாய் துறந்துச்சு. இந்தப் பன்ச்-அ அள்ளி தெளிச்சது உங்க தலகட்டு தலைவருதே” என அலுத்துக்கொண்டான் சோமாஸ் பாண்டி.

 

அவர்கள் பிரிவை சேர்ந்தவர்களுள் ஒரு பெரிய கூட்டத்திற்கே தலைவர் கதிரவனின் அப்பா, சிவலிங்கம். எந்தப் பஞ்சாயத்தானாலும் சண்டை சச்சரவானாலும் அவரும் அவருடைய கூட்டமும் அங்கே கட்டாயம் இருக்கும். பஞ்சாயத்து ப்ரெசிடெண்ட் போர்டில் தலைவர் ஸ்தானத்திலும் இருப்பவர். அவரைக் கதிரவன் அப்பா என்று அழைப்பதற்குப் பதில் இப்படியே தான் அழைப்பான். அவருக்கும் கதிரவன் தன்னை அப்பாவென்று அழைப்பதில் விருப்பமில்லை.

 

“என்னடா தோப்பு முழுக்கப் பரோட்டா கம கமனு மணக்குது” எனக் கைலியை மடித்துக் கட்டியபடி அவர்களின் பேச்சில் கலந்துகொள்ள மூன்றாவது ஆளாக வந்தான் சக்கரவர்த்தி.

 

“வாடா சக்கர. என்னடா ஆள காணோமேன்னு பாத்தே. கடையெல்லா மூடிட்டியா ?” எனக் கதிரவன் வினவ, “ஆமா பெரிய ஹோட்டல் அதிபரு விசாரிக்கிறாங்கே. நாலு தென்னெந்தட்டிய வச்சு இரெண்டு இத்து போன பெஞ்ச வச்சு ஒரு பரோட்டா கட நடத்திட்டு ரொம்ப ஆடுறாங்கே” என மனதில் நினைத்துக் கொண்ட சோமாஸ் பாண்டியிடம், சக்கர, “என்ன பண்ண சோமாசு ? அதுல இருந்து தானே உனக்கு ஓசி பரோட்டோ வருது” எனப் புன்னைகையுடன் பதில் கொடுக்க, பாண்டி திருத் திருவென முழிக்கத் தொடங்கினான்.

 

“சக்கரப் பாத்துப் பதுசா பேசு. இது ஒன்னு எனக்கில்ல. இந்த உக்காந்துருக்கானே கதிரு அவனுக்குதா. நீயும் சாப்ட்ருக்க மாட்டேன்னு தா உங்க அம்மாவ பத்து ரொட்டி கட்ட சொன்னே. நா வீட்லயே சாப்டுத்தா வந்தே. மறுபடியு சாப்பிடற சோலியெல்லா என்ட கிடையாதாக்கு” என முறிக்கிக்கொண்டான்.

 

“இம்புட்டு பாசக்கார பயபுள்ளையாடா நீ?” எனச் சக்கர வினவ, “பின்ன உசுருடா” எனப் பாண்டி பதிலளித்தான்.

 

“எது? ரொட்டியும் சால்னாவும்தான ?”

 

“ஆமா மாப்பு, கரெக்டா புடிச்சுப்புடியே”

 

“என்ன சொன்ன?” எனச் சக்கர வேகமாக ஓர் அடி முன் வைக்க, “ஐயோ உண்மைய உளறிப்புட்டேனா” என மனதில் நினைத்த பாண்டி சட்சட்டென்று பேச்சை மாற்றி, “சரி சரி எனத் தவனமுறையில கூட அடிச்சுக்கலாம். எங்க போவ போறே, உங்க வீட்டு புள்ள. இப்ப கதிரு பசியா இருப்பா. சாப்பிடுங்க. அவுங்க அம்மாட்ட கதிரு சாப்பிடறது என் பொறுப்புன்னு சொல்லியாந்தே” என இருவருக்கும் கொடுத்தது போக நான்கு பரோட்டா மீதமிருந்தது.

 

சக்கரையும் கதிரவனும் பாண்டியின் கண்கள் ரொட்டியை(பரோட்டா) மேய்வதைக் கண்டும் காணாதது போல, “சக்கர, இந்தப் பாண்டி நம்ம இரெண்டு பேருக்கு தானே கொண்டு வந்தா. அவ சாப்டாச்சு போல. மிஞ்சுனா ரொட்டியை நாய்க்கு போற்றலாமா டா ?” எனக் கதிரவன் சிரிக்காமல் வினவ, “ஆமா கதிரு கண்டிப்பா இப்போ பாண்டிக்கு பசிக்கவும் செயாது” எனக் கூற, “என்னடா இவனுகளா மாத்தி மாத்தி பேசுறாங்க. நம்மட்ட ஒரு வார்த்த கூடக் கேட்கமாற்றேங்களே” என மனதில் புலம்பிக்கொண்டிருந்தான்.

 

“மான வேற கருத்துருக்கு. கொஞ்ச நேரத்துல நல்ல மழ வரும் போல” என இவனைக் கண்டுகொள்ளாமல் அடுத்தகட்ட பேச்சுக்கு தாவ, “நாலு ரொட்டிக்கு நாய் படாதா பாடு படவேண்டியதா இருக்கு. நாய்க்கு கூடப் போடுவானுங்க போல, நமக்குப் போடா மாற்றங்களே. இது சரி வராது” எனப் புலம்பியவாறு, “டேய் நா கிளம்புறே” என ரோஷமாக எழுந்தான்.

 

எழுந்தவனின் கைலியை பிடித்து இழுத்த கதிரவன், “சாப்ட்டு போ பாண்டி” எனப் புன்னைகையுடன் கூறிவிட்டுப் பரோட்டா பொட்டலத்தைத் தேட அங்கு ஏதும் இல்லை.

 

“என்னடா இங்கதான இருந்துச்சு அதுக்குள்ள எங்க போச்சு?” என இருவரும் தேட, பாண்டி மட்டும் திருட்டு முழியோடு கைலியை இருக்கப் பற்றியபடி நின்றிருந்தான்

 

“நாய் ஏதும் தூக்கிருக்குமோ ?” எனக் குனிந்து குனிந்து சக்கரை தேட, இவனின் திருட்டு முழியை வைத்துக் கண்டுகொண்ட கதிரவன், “சரியா சொன்ன சக்கர, ஆனா இரண்டு கால் நாய்” எனக் கூற, பாண்டியின் கைலியை இருவரும் பிடித்து இழுக்க, இருவரின் கைகளிலும் இரண்டாகப் பிரிந்து வந்திருந்தது.

 

“அட இத்து போனவனே, இப்படித் தொட்ட உடனே கையோட வர மாதிரியாடா கைலி காட்டுவ?” எனக் கதிரவன் புன்னைகையோடு வினவ, “கையோட வரதுனாலதா மச்சி அதுக்குப் பெரு கைலி” எனக் கூறிய பாண்டி கைலி கிழிந்ததைப் பற்றிக் கவலை கொள்ளாமல், “நல்லவேளை மாப்பு நீங்க இழுத்த இழுல ரொட்டி கட்டிருந்த வாழ இல கிழிஞ்சிடும்னு பயந்தே போயிட்டே” என நிம்மதி பெருமூச்சோடு கூறிவிட்டு, கட்டிலில் அமர்ந்து பரோட்டாவை இரண்டு கைகளாலும் பிய்த்து போட்டு சால்னாவாய் வாடை பிடித்துக்கொண்டே ஊற்ற தொடங்கினான்.

 

“டேய் சக்கர? நீ என்னடா அப்படியே யோசனையா நிக்குற ?” என வாய்க்குள் திணித்தபடி வினவ, “இல்ல அது உண்ட சொன்னா சரியா இருக்காது பாண்டி” என பீடிகை போட்டான்.

 

“அதென்னடா ? சொல்லு நான் சொல்லறே ” என விடாப்பிடியாகக் கேட்க, “அதில்ல மாப்பு, உன்ன சோமாஸ் பாண்டில இருந்து டவுசர் பாண்டினு பேர மாத்திடலாமான்னு தாண்டா யோசனையா இருக்கு, கழுதை உனக்கு எது புடிச்சிருக்குனு நீயே சொல்லிடே” எனச் சிரிக்காமல் அவன் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு சக்கரை கூற, கையிலெடுத்த ரொட்டியை வாய்க்குள் வைப்பதற்குப் பதிலாய் சக்கரையைத் துரத்திக்கொண்டு ஓட, அவர்களைப் பார்த்த காத்திரவன் வாய்விட்டுச் சிரித்தான்.

 

இத்தனை நேரம் அவனைச் சூழ்ந்திருந்த தனிமையைத் தானே அவனின் நபர்கள் இருவரும் துரத்திக்கொண்டு சென்றிருந்தனர். பிடிப்பட்ட சக்கரையின் வாயில் கையிலிருந்த பரோட்டாவை அப்படியே திணித்த பாண்டி, “இனி பேசுவா ? பேசுன உன்கட ரொட்டில தானே டா உனக்கு ஆப்பு வைப்பேன்” எனக் கூறியபடி இழுத்து வர, அவ்விருவரையும் பார்த்த கதிரவன் இன்னமும் சத்தமாகச் சிரித்தான்.

 

இவன் வாய்விட்டுச் சிரிப்பத்தைப் பார்த்த பாண்டியும் சக்கரவர்த்தியும் அர்த்தமுள்ள ஒரு பார்வையைத் தங்களுக்குள் பார்த்துக்கொண்டு சற்றே நிம்மதி அடைந்தனர். அவன் சிரிப்பானென்றே இந்த ஊரில் உள்ள பலருக்குத் தெரியாது. ஏன் அவன் அன்னை பார்வதி உட்பட இவன் இத்தனை சத்தமாய்ச் சிரித்துப் பார்த்திருக்க மாட்டார்.

 

தற்போது தான் லேசாக அரும்பியிருந்த மீசை, பன்னிரெண்டாம் வகுப்பில் கதிரவனும் பாண்டியும் இருந்தனர். சக்கரவர்த்தி மட்டும் பத்தாம் வகுப்பில் வரும் பொது தேர்வுக்குப் பயந்தே படிப்புக்கு முழுக்குப்போட்டவன். ஆனால் தொழிலில் கெட்டி. அவன் தாய் தகப்பனாருடன் சேர்ந்து அவர்களின் பரோட்டா கடையில் நன்றாகவே உழைத்துவந்தான்.

 

கடையை அடைத்த மறுநிமிடம் கதிரவனைத் தேடி வந்துவிடுவான். பாண்டியும் அப்படியே. அவனின் அம்மா வீதி வீதியாய் துடைப்பத்துடன் தேடினாலும் சிக்காதா சிலவண்டாய் ஓடி வந்திவிடுவான். வீட்டிற்கு ஒரு வேலையும் இதுவரை செய்ததில்லை. கதிருடன் இருப்பதற்காகவே உருண்டு பிரண்டு குட்டிக்கரணம் போட்டுப் பஞ்சாயத்தலாம் வைத்துப் பாஸ் பண்ணி பன்னிரெண்டாவது வரை வந்திருந்தான்.

 

“சரி சரி சீக்கிரம் தூங்கனு. அப்போதா நாளைக்குப் பள்ளிச்சினு இருக்க முடியு…நா வீட்டுக்கு போறே. போறப்ப என்னையு சேர்த்துக்கோங்கடா, டேய் கதிரு மாப்பு உன்னோட யூனிபார்ம் ஒன்னு எனக்குத் தாயே” எனக் கூறிக்கொண்டு கிளம்ப ஆயத்தமாக நின்றான் சக்கர.

 

“உள்ளதா இருக்கு. எடுத்துக்கோ..ஆனா எதுக்குச் சக்கர ?” எனக் கதிரவன் வினவ, பாண்டியோ,”என்ன சக்கரைக்கு ஸ்கூலுமேல அக்கற?” என ஓட்டினான்.

 

“டேய் துரோகிங்களா? இப்படி இரண்டு பேரு என்ன கழட்டிவிட முடிபண்ணிடீங்களா ? ஏண்டா நாளைக்குத் தான பள்ளிக்கூடக் கண்காட்சி. சுத்துவட்டார பள்ளிக்கூடப் பொம்பலபிள்ளைங்கெல்லாம் வருதுன்னு நீ தானடா சொன்ன சோமாசு. என்ன விட்டுட்டு நீங்கமட்டு போலாம்னு பாக்குறீங்களா?” எனக் கத்திவிட்டு, “ஏண்டா சோமாசு, என்ன எப்படினாச்சு உள்ள கூப்டு போனா சோமசு வாங்கித் தரேன்னு சொன்னேனே ? மரண்டியா ?” என வினவ, முழியை அங்கிட்டும் இங்கிட்டும் உருட்டி உருட்டி யோசித்தவன், “பட்டாணி வச்ச சோமாசா பாத்து வாங்கித் தரியா ?” என அவனிடம் பேரம் பேச தொடங்கினான்.

 

“வாங்கித்தரே டா… எப்டியாச்சு கூப்ட்டு போடா, புள்ளைங்க வச்சுருக்கப் பொருளை வேடிக்கப் பாக்குற மாதிரி பிள்ளைங்களைக் கிட்ட பாக்கலா, நம்ம ஊரு முசுடுங்கள பாத்து பாத்து ஒரே போர் மாப்பு” எனச் சக்கரை கூற, “சத்தியமாவா? வாங்கித்தருவல?” என மீண்டும் உறுதி கேட்டான் பாண்டி.

 

“அட! உங்கம்மாட்ட அடிவாங்குற விளக்கமாத்துமேல சாத்தியமா வாங்கித்தரே. கூட்டி போடா” என இவனும் கூற, இவர்கள் பேச்சிற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்பதைப் போல அமைதியை அமர்ந்திருந்தான் கதிரவன்.

 

“நீயேண்டா உம்முனு ஆயிட்ட?” எனச் சக்கரை கதிரை பார்த்து வினவ, அதற்கு முந்திக்கொண்டு பாண்டி, “டேய் அவனுக்குத் தான் பிடிக்காதுல, அப்புற ஏ கேட்குற? ” எனக் குறிக்கிட்டான்.

 

“அது தெரியும்டா…அதுக்குன்னு சும்மாகூடவா பாக்கமாட்டான்…

 

இப்படியே போன கல்யாணமே பண்ணிக்கமாட்டா போலவே ? அப்படியெல்லாம் இருக்க முடியாதுடா ?” எனச் சக்கரை ஆதங்கமாகக் கூற, “ஆமா ! கல்யாணமு வேணா ஒரு இழவு வேணா. எல்லாப் பொண்ணுங்களு ஒரே போலத் தா. ஒன்னு வாயே தொறக்காம அழுவாங்க. இல்ல அழுதழுதே காரிய சாதிப்பாங்க. மொத்தத்துல அழுகாத பொண்ணுமில்ல, அழறவளுக்கு என்னோட வாழ்க்கையில இடமும் இல்ல” என உறுதியாகக் கூறிவிட்டு வீடு நோக்கி சென்றான்.

 

மறுபுறமோ, தேவி ஏகத்திற்கும் தன் மகளைக் கத்திக்கொண்டிருந்தாள். செவிடன் காதில் சங்கென்பார்களே அப்படி அமர்ந்திருந்தாள் நம் நாயகி கனல்விழி. அத்தனை ஏச்சுக்கும் பேச்சுக்கும் வேறொரு பெண்ணாய் இருந்திருந்தால் குறைந்த பட்சம் ஒரு துளி கண்ணீராவது துளிர்த்திருக்கும். ஆனால் கனல்விழியின் கண்களில் கண்ணீருக்குப் பதில் கனலே இருந்தது.

 

“எப்படிக் குத்துக்கல்லாட்ட உக்காந்துருக்கா பாரு…இந்த திட்டு திட்டறேனே, கொஞ்சமாச்சு அசருறாளா. அரங்க அரங்க” என மண்டையில் இன்னுமொரு கொட்டு வைக்க, அப்போதும் கொஞ்சம் கூடக் கலங்காமல் இருந்த இடத்திலே இருந்தாள்.

 

“போமாட்டேனு வாய் துறக்குறாளா பாரு எரும எரும” எனச் சத்தம் போட்டுக்கொண்டே உள்ளே செல்ல, “தேவி….” என்ற அழைப்புடன் வந்து சேர்ந்தார் கந்தசாமி.

 

“என்ன வீடே சத்தமா இருக்கு? ” என்று மனைவியிடம் கேட்டபடியே “கண்ணம்மா கொஞ்ச தண்ணீ கொண்டு வறியடா” எனக் கேட்க, அவள் கண்ணம்மா என்ற கனல் விழி சட்டென்று அடுக்களை நோக்கி தண்ணீர் எடுக்கச் சிட்டாகச் சென்றாள்.

 

ஒன்பதாம் வாங்குப்பு படிக்கிறாள். நாளை நடக்கவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் அவர்களின் பள்ளி சார்பாகக் கலந்து கொள்ளப் போகிறவள். கடல் நீரில் எவ்வாறு உப்பு இருக்கிறதென்பதை செயல்முறை விளக்கமாக எடுத்து காட்டி தன்னுடைய திட்டத்தை விவரிக்கவெனத் தாயிடம் அனுமதி கோரா, வயதிற்கு வந்த பெண்ணை இரண்டு கிராமங்கள் தள்ளி நடக்கும் கூட்டத்திற்கு அனுப்ப முடியாது என்றே தேவி குதித்துக்கொண்டிருந்தார்.

 

கனல்விழி கந்தசாமிக்கு தேவிக்கும் இரண்டாவது மகள். மூத்தவன் பார்த்திபன். அன்னையின் செல்லம், மிகவும் அமைதியானவன். தாய் சொல்லை தட்டாதவன் என்பது போல எத்தனை கதாநாயகன் நடித்து எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் அதற்கு ஒரு படி மேலே போய் அம்மாவென்று அழைக்காத உயிரில்லையே எனப் பாட்டு பாடுபவன். இதுவரை பெற்றோர்கள் முன் ஒரு வார்த்தைகூட எதிர்த்து பேசாதவன், மேலும் தனக்கு வேண்டியவற்றைக் கூட வாய் திறந்து கேட்க தயங்குபவன். பெற்றோர்களின் சிறு சுணக்கமும் அவன் கண்களில் கண்ணீரை வரவைத்து விடும். பதினொன்றாம் வகுப்புப் படிக்கிறான்.

 

கனல்விழி துடுக்கும் தைரியமும் நிறைந்தவள். கந்தஸ்வாமி அரசாங்க பள்ளி தலைமை ஆசிரியர். பாரதி கண்ட புதுமை பெண்ணாய் தன் செல்ல மகளை வளர்ப்பவர். பெண்களுக்குக் கண்ணீர் ஆயுதமில்லை, தையிரம் தான் ஆயுதம் என்று மீண்டும் மீண்டும் உறுப்போட அதுவே விழியன் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பள்ளியிலும் தோழிகளுக்கும் அவள் விழி. அன்னைக்குக் கண்ணு, எரும, அரங்க..இப்படி பற்பல. தந்தைக்கு மட்டும் அவள் கண்ணம்மா.

 

தேவி என்னதான் மகளைத் திட்டினாலும் அவருக்கும் பாசம் அதிகமே. இப்படித் திமிராகக் கனல்விழி கேட்காமல் சிறு கண்ணீரோடு கேட்டிருந்தால் நிச்சயம் சம்மந்தம் தந்திருப்பார். இத்தனை பேச்சுகளையோ ஏச்சுகளையோ கேட்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. ஆனால் கனல்விழி இதுவரை எதற்கும் அழுத்ததில்லை. அழுது கேட்பதில் அவளுக்குத் துளியும் விருப்பம் கிடையாது. என்ன பேசினாலும் அமைதியாகவும் உறுதியாகவும் இருப்பவள் சில நேரங்களில் புன்னைகையோடு கூடக் கடந்துவிடுவாள். ஆனால் கண்ணீர் ? ஹம்ம்ஹும்…. வரவே வராது. இதுவரை வந்ததுமில்லை!

 

“கண்ணமாவ எதுக்காகச் சத்தப்போடறவா? ஏண்டி அவள திட்டலேனா உனக்குக் கோழி கூவதோ ?” எனக் கேட்க, “நல்லா கேளுங்க, சமஞ்சவ ஊருவிட்டு ஊரு போய் எதோ பாட எடுக்குறாளாம். இத்தல நல்லாவா இருக்கு ?” என மீண்டும் ஆரம்பிக்க, “அப்பா…” எனப் புன்னைகையோடு தண்ணீர் சொம்பை நீட்டினாள்.

 

“என்னமா? அம்மா சொல்லுறா ?”

 

“அப்பா உங்களுக்குத் தா தெரியுமே. சயின்ஸ் எஸ்ஹிபிஷன். அதுக்குதான் போகணும்”

 

“நீ போயிட்டு வா டா”

 

“ஏங்கா நா சொலிட்டே இருக்கே. நீங்க என்னடானா அவ கூடச் சேந்து ஆடுறீங்க. இப்ப படிசென்ன கலெக்ட்ராவா போறா ?” என ஏகத்துக்கும் குறைபட “கலெக்டர் ஆகுதோ இல்லையோ எம் பொண்ணு தைரியமா இருக்கன்னு. எல்லாத்துக்கு யாரையாச்சு துண தேடிட்டிடோ எதிர்பார்த்தோ இருக்கக் கூடாது. ஒரு பொண்ணு தைரிய அவளோட வம்சத்தையே தைரியமாக்குத் தேவி.

 

நா பாத்துக்கிறே. நீ போய்ச் சோத்த எடுத்து வை” என அதோடு முடிந்தது என்பதாய் போக, “அம்மா! என் செல்ல அம்மால. சிரிச்ச முகமா அனுப்பு தாய். என் தேவி பராசக்தியில…” எனக் கன்னம் கிள்ளி கொஞ்ச, “சேரி சேரி அப்பனுக்குப் பொண்ணுக்கு இதே வேல. பாத்துச் சூதானமா போயிட்டு வா. பொட்டப்புள்ள நாளைக்கு வேற வீட்டுக்கு வாழ போனும். அடக்கொடுக்கமா போனோமா வந்தமான்னு இருக்கன்னு. எல்லா இந்த மனுஷ தர இட” என நொடித்துவிட்டு விழி பார்க்காதவாறு இதழில் சிறு புன்னைகையை ஒளித்து வைத்துக்கொண்டு சென்றார்.

 

நம் நாயகனும் நாயகியும் நாளை சந்திப்பார்களா ? சுட்டெரிக்கும் கதிரவனும் கனலை வாரி வழங்கும் கனல்விழியும் பார்க்கும் வாய்பை விதி அமைக்குமா ?

 

Advertisement