Advertisement

தொட்டால் பூ மலரும் – 6

பார்பவர்களைத் தன்னிலை மறக்க செய்யும் கலைநயத்துடன் அமைக்கப்பெற்றிருந்த வேடுவெச்சி எனப்படும் மலை குறத்தியின் சிலையொன்று பனை கூடையை கையிலேந்தியபடி ஆவுடையார் கோவிலில் ஸ்தாபிக்கபட்டிருக்க, எல்லாரையும் போல் கனல்விழியும் கொடியுடன் சேர்ந்து அந்தச் சிலையின் அழகை மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதைப் பார்க்க பார்க்க அதன் அழகில் மூழ்கி சிலாகித்துத் தன்னை மறந்து நின்றிருந்தாள்.

“ஹே விழி, என்ன டி… நா பாட்டுக்க பேசிட்டு இருக்கே. நீ என்னடானா எதோ பராக் பாத்துட்டு இருக்க?” என விழியை உலுக்க, “கொடி, இப்ப எதுக்கு இப்படிக் கத்துற ? கொல்லப்போறே பாரு. நா ஒன்னு பராக் பாக்கல. எப்படிக் கட்டிருக்காங்க. இந்தக் கோவிலோட வரலாறு எப்பேருபட்டது தெரியுமா? இதுவரைக்கு மொத்தமே இரெண்டு தடவ தா அப்பா கூப்பிட்டு வந்துருக்காரு. அவரு சொன்ன எல்லா விஷயமும் இப்பவும் கேட்டுட்டே இருக்கு. இந்த அதிசயத்தைப் போய் அலட்சியமா சொல்லுற புள்ள ? ஒழுங்கா அமைதியா இரு” என அதட்டல் போட்டுவிட்டு, ஆவுடையார் கோவிலிற்குள் தரிசனம் செய்ய நுழைந்தாள்.

“அட என்ன ஓவர் சீனா இருக்கு. அப்படி என்னதா இதுல பிரமாதமான விஷயமிருக்கு ?”

“நிசமாவே இது அதிசயம்தா முல்ல கொடி. ஏனா உருவமே இல்லாத வழிபாடு வேற எந்தக் கோவில்லயும் கிடையாது. இங்க மட்டும்தா, அதுமட்டுமில்ல இங்க கொடிமரமும் கிடையாது நந்தியும் கிடையாது பலிபீடமும் கிடையாது. இது போல வேற ஏதாச்சுக் கோவில் உனக்குத் தெருஞ்சு இருக்கா என்ன ? சொல்லு பாப்போம்.

இது மாணிக்கவாசகர் கட்டுன கோவில்னு அப்பா சொன்னாரு. இங்க இருக்கத் தேரு எவ்ளோ பெருசு தெரியுமா ? அதுமட்டுமில்ல, இந்தக் கோவில்ல இருக்க எல்லாக் கற்சிலையும் இந்தத் தேருலயும் இருக்குதாம். அதே போல சிலயை மரத்தால செஞ்சுருக்காங்களாம்….

இப்ப பாத்தோமே வேடுவச்சி சிலை. அந்தச் சிலைல இருக்கக் கூடையைப் பாத்தியா ? அம்மாடியோ எதோ நிஜ பனை கூடப் போல எவ்ளோ சூப்பரா செஞ்சுருந்தாங்க. அத பாக்கும்போது தான் கத்தி கூச்சல் போட்டுட்ட.

அப்படி என்னதான் சொல்ல என்ன கூப்பிட்ட? இப்ப சொல்லு” எனக் கனல்விழி சற்றே சலிப்புடன் வினவ, இப்போது முல்லைக்கொடி கோவிலை சுற்றி பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இவர்களின் பேச்சு ஒருபுறமிருக்க, மறுபுறம் பாண்டி சக்கரையுடன் கதிரவனும் வந்துகொண்டிருந்தான். அதே ஆவுடையார் கோவிலிற்கு வெளியே.

ஆம்! தன்னைப் போல நான்கு ஆண்டுகள் கடந்திருந்தது. ஆனாலும் கதிரவன் அவர்களின் கிராமத்தில் நிரந்தரமாக மீண்டும் குடியேறி இருக்கவில்லை. மதுரை நோக்கி சென்றவன் இளங்கலை பட்டயபடிப்பை படித்தான். பிறகு அவன் செய்யவேண்டிய தொழிலுக்கு வேண்டிய முன் அனுபவத்திற்காகத் தூத்துக்குடியில் கடந்த ஒருவருடமாகப் பணியாற்றி வந்துகொண்டிருக்கின்றான்.

பஞ்சாயத்தின் தீர்ப்பின் படி மூன்று வருடங்கள் எவரோடும் தொடர்பில் இல்லை. படிப்பு முடிந்தவுடன் ஒருமுறை ஊருக்கு வந்து சென்றவன் பிறகு அவ்வப்போது பார்வதியிடம் மட்டும் பேசிக்கொண்டிருந்தான். இப்போது கைபேசியின் வளர்ச்சி ஓரளவு கணிசமாக முன்னேறியிருக்கத் தாயுடன் முடிந்த போதெல்லாம் பேசிக்கொண்டே இருந்தான்.

பாண்டியும் சக்கரையும் கூடத் தூத்துக்குடிக்கு ஓரிருமுறை சென்று வந்தார்கள். இப்போது புதுக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆவுடையார் கோவில் திருவிழாவுக்கென்று வந்திருந்தான்.

“கலர் கலரா இருக்குது பலகாரம்

என்ன சாப்பிடவிடாம தடுக்க

யாருக்கு இருக்கு அதிகாரம்” எனக் கூறியவன் வேறு யாருமில்லை சோமாஸ் பாண்டியே.

“யோவ் பாண்டி. டயலாக் பட்டய கிளப்புது போ…. திடீர்னு என்னையா ஆச்சு உனக்கு ?” எனச் சந்தேகம் கேட்டபடி வந்தவன் சக்கரை. அவர்கள் இருவரோடும் மெல்லிய சின்னப் புன்னகையுடன் வந்துகொண்டிருந்தான் கதிரவன்.

முன்பிருந்ததைவிட இப்போது உடலிலும் முகத்திலும் நிறையவே மாற்றம். நல்ல வளர்ந்த ஆண்மகனாய் இருந்தான்.

“எல்லாம் அதுவா வருது சக்கர…” எனக் காலரை பின்னாடி இழுத்துவிட்டபடி பந்தாவாக வேட்டியை ஏற்றிக்கட்டிக்கொண்டு சொல்ல, ஏதார்த்தமாக இரண்டு பெண்கள் பாண்டியை பார்த்துவிட்டு செல்ல, சக்கரையோ ஈஈ…. நுழைவது கூடத் தெரியாமல் வாய் பிளந்து நின்றான்.

“மாப்பு மாப்பு சொல்லுடா…எப்படி டா? டக்குனு அள்ளுறமாதி பேசுற ?” எனத் தொணதொணக்க,

“எல்லாம் சாந்தி அக்கா கடை பூந்தித்தாண்டா…. அத சாப்பிட்டதும் கவிதா…ச்சி சீ கவிதை ஜாமுன்ல இருக்குற ஜீராவாட்டம் வடியுதுடா”

“யோவ் பாண்டி… நிசமாதா சொல்லுறியா?”

“மாப்பு உன்ட போய்ப் பொய் சொல்லுவேனா?”

“சொல்லுவடா…எனக்கே தெரியமா எங்க கடையில ஒன்னு வாங்குன ஒன்னு ஓசி கொடுத்தவன்தானடா நீ…”

“அயோ…சக்கர. அது நான் பொய் சொல்லல. உன்னோட கடைக்குப் போய்ச் சொன்னே. பொய் சொல்றதுதா தப்பு. போய் சொல்றது தப்பில்ல. அத இன்னுமா ஞாபகம் வச்சுருக்க? பொறு ஒரு நட்ராஜ் ரப்பாரு வாங்கித்தரே. அழிச்சிடு . இப்ப இந்தப் பூந்தியை சாப்பிடு. அப்புறம் வரும் பாரு…” எனச் சமாதானமாகப் பாண்டி கூற,

“என்னது வாந்தியா?” எனச் சக்கரை நக்கலாக வினவ,

“டேய் கவிதைடா… இப்ப கொட்டும் பாரு” எனக் கூறியபடி அவன் வாயில் இனிப்பை திணிக்க,

“ஆ….” என்று சக்கரையும் பாண்டியும் ஒரு சேர அலறினர்.

“மாப்பு கவிதை கொட்டுனா வலிக்குமா என்ன?” என வினவியபடியே தலையைத் தேய்த்துக்கொண்டே சக்கரை பாண்டியிடம் சந்தேகம் கேட்க,

“டேய் என்னோட ஆருயிர் நட்புகளா, கொட்டுனது கவிதை இல்ல. நான் தான். என்னையா இது சின்னப் புள்ளத்தனமா ? வாங்க சாமி கும்பிடுவோம்” என அழைக்கத் தலையைப் பிடித்தபடி இருவரும் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்.

கோவிலிற்குள் உள் நுழைய, கனல்விழியோ கொடியுடன் வெளியே செல்லவிருந்த கடைசி நொடி, கதிரவன் விழியில் தென்பட்டுவிட, “ஹே கொடி…இருப்புள்ள…போறது பாக்க, அந்த அவரு போல இருக்குதுல” என முல்லை கொடியின் கைய பற்றி நிறுத்தியபடி சுற்றி சுற்றி பார்த்தாள்.

“யார தேடுற புள்ள?” என முல்லை கொடி கேட்க, “அவரு தான்…” என இன்னும் பார்வையைச் சுற்றியபடியே தேட, “அந்த அவரு யாரு? எனக்குத் தெரியாம காலேஜ்ல

எது ஹீரோவ புடுச்சிட்டியா ?” என ஆர்வத்துடன் கேட்டாள்.

“அட ச்சா…அப்படியெதும் இல்ல. இது அவுங்க… உன்னோட அண்ண கதிரவன். அவரைப் போலவே இருந்தாங்க.”

“ஓ கதிரண்ணனா? அவரு வந்துருக்காரு சொல்லத்தா அப்போ தொண்ட கிழிய கத்துனே. நீதா என்னனு கேட்கல”

“அடிபாவி, அவரு பேர முன்னமே சொல்லிருந்தா இந்நேரத்துக்கு அவர பார்க்க ஓடிருப்பேன்ல”

“என்ன விழி? இம்புட்டு அவசரம்? நீ சொல்ற ஜோர பாத்தா நன்றி சொல்ல போறது போலத் தெரியலையே. ஏப்புள்ள உண்மைய சொல்லு. உங்க அம்மாவுக்கு அதா என்னோட அத்தைக்குத் தெருஞ்சுச்சு நான் செத்தேன் ”

“ஐ… முல்ல… ‘அத்த செத்த’ … கவித கவித”

“அடியே கனல்விழி நல்லாப்போற என்னோட பொலப்புல பொங்க வச்சுட்டு போயிராதாடி… ஏதா இருந்தாலும் முன்னமே என்ட சொல்லிடு”

“அம்மாடியோ என்னமாதிரி கற்பன டி உன்னோடது? நான் போறது தேங்க்ஸ் சொல்ல மட்டும்தா. எதோ ஒருவிதமான அபிமானம் இருக்குறது நிசந்தா…ஆனா அது காதலுனு சொல்ல முடியாது. உன்ட மொக்கபோட்டு நேரந்தா வீனா போச்சு. வா அவர போய்த் தேடுவோம்” எனக் கூறியபடி முல்லைக்கொடியின் கைகளைப் பற்றி இழுத்துக்கொண்டு செல்ல, அவளின் இசைவுக்குக் கொடியும் பின்சென்றாள்.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததைக் கவனிப்போர் யாருமில்லை என்று சென்றிருக்க, அது பொய் என்பதாய் தூணின் பின்புறமிருந்து மகேஷ் வெளியே வந்தான்.

“வாடி வா…. நா ஊருமுன்னாடி அசிங்க படுத்த காரணமா இருந்தவ, அசிங்கப்படுத்தினவனுக்குத் தேங்க்ஸ் சொல்ல போறீங்களா? இந்தா வந்துட்டே. அதெப்படி பேசுறன்னு நானு பாக்குறே” என மனதிற்குள் கருவியபடி மின்னல் வேகத்தில் சுந்தரை நோக்கி ஓடினான்.

“டேய் சுந்தர், எம்பின்னாடியே வா. நா பேசுறதுக்குக் குறுக்க எதுவும் பேசாத. என்ன சொன்னாலும் அப்படியா ? காலக்கெட்டு கெடக்கு… தெரியலையே… இது போல மூணு வார்த்தையை மாத்தி மாத்தி பேசு. மத்தத விவரமா புறவு சொல்றே” எனச் சுந்தரின் கைகளைப் பற்றிக் கதிர் இருந்த புறமாகச் சென்றான்.

“மச்சா… தெரியுமா விஷய. இந்தப் பொம்பள பிள்ளைங்க இருக்கே அதுங்க நமக்கு மேல இருக்குதுடா…” என மெல்ல ஆரம்பித்தான். கதிர் ஒரு மரத்தின் கீழே வட்டமாகச் சுற்றி அமைத்திருந்த திண்டின் மீது அமர்ந்திருக்க, சக்கரையும் பாண்டியும் வெண்பொங்கல் சக்கரை பொங்கல் பிரசாதம் தரும் வரிசையில் ஆளுகொருபுறமாக நின்றிருந்தனர்.

நண்பர்கள் அடித்துப் பிடித்து வரிசையில் நிற்பதை புன்னகையுடன் பார்த்தபடியே கால்களைத் தொங்கபோட்ட படி ஆட்டிக்கொண்டிருந்தான். மரத்தின் மறுபுறம் தற்செயலாய் அமர்ந்து பேசுபவர்களைப் போல வந்தமர்ந்த மகேஷும் சுந்தரும் பேச்சை தொடர்ந்தனர்.

“என்ன சொல்லுற மஹேஷு”

“அட ஆமாடா… வழக்கம் போலப் பொண்ணுங்கள பாத்துட்டு வந்துட்டிருந்தே டா… ஆனா வம்பு எதுவும் பண்ணல. நம்ம ஊரு கதிரவக் கொடுத்த அடிய மறக்க முடியுமா என்ன ? அதுனால வேடிக்க மட்டுதா பாத்தே. ஆமா கதிர் ஊருக்கு வந்தாச்சா ?” என ஏதும் தெரியாதவனாகக் கேட்க, “தெரியலையேடா எனக்கும். தூத்துகுடில வேல பாக்குறதா கேள்விப்பட்டேன் என முடித்துக்கொள்ள, கதிர் என்ற பெயரில் கதிரவனின் கவனம் அவனையும் மீறி அவர்களின் பேச்சில் பதிந்தது.

“சரி விஷயத்துக்கு வாறே. பேசுன புள்ளைங்கள ஒன்னு என்னமா பேசுது. வாய் பாத்த நானே வாயடைச்சு போய்ட்டேன்டா, அதுங்க கிட்ட எவன் சிக்கப் போறானோ தெரியல”

“அப்படி என்னடா பேசுனாங்க?”

“அதுல ஒரு ராங்கிகாரி, அதுங்களுக்குள்ள பெட்டு கட்டிருக்காடா. ஆம்பளைங்க எல்லாரும் சுத்த வேஸ்ட்டாம். பொண்ணுங்ககிட்ட மயங்காத ஆம்பளைங்களே இல்லையாம்.. ஒன்னு சிரிச்சு மயக்குவாளாம் இல்ல பேசி மயக்குவாளாம். அதுக்கும் ஒத்து வராட்டி கண்ணுல ரெண்டு சொட்டுக் கண்ணீர் வந்தா போதுமா. எவனையும் கவுத்துருவாளாம்.

இப்ப எவனோ ஒருத்தன குறி வச்சுருக்குதாம். அவன்ட நேர போய்ப் பேசி விழ வைக்கிறேன்னு சபதம் போட்டு கிளம்புச்சுடா…

பாரே இந்தப் பொண்ணுங்க இப்படி இருக்குதுங்க. ஆனா பழி எல்லாம் நம்ம மேல” என ஆச்சர்யம் அதிர்ச்சி பரிதாபம் என அனைத்தையும் குரலில் காட்டி பேச பேச, கதிரவன் மனதில், “ச்சீய்… பாரிஜாத அத்த போலத் தா எல்லாரும் இருக்குங்க போல. அழுது காரியத்தைச் சாதிக்கிறதெல்லாம் ஒரு பொழப்பா ? இதுல ஆம்பளைங்கள இவ மதிப்புப் போடறாளாம். திமிரு பிடிச்சவ” என முனங்கி கொண்டான்.

சொல்லியவர்கள் தாமதிக்காமல் அங்கிருந்து நகன்று விட, சற்றுத் தொலைவில் அவர்கள் அவமான படக் காரணமாக இருந்த கனல்விழி முல்லைக்கொடியுடன் கதிரவனைக் கண்களால் தேடியபடி வந்துகொண்டிருக்கச் சட்டென்று யோசித்த மகேஷ் அருகில் இருந்த விபூதியை எடுத்து கூட்டத்தோடு கூட்டமாகச் சென்றவன் அவள் அருகில் சென்றவுடன் கனல்விழி எதிர்பாரா தருணத்தில் ‘ஊப்ப்’ என ஊதிவிட, அது சரியாகக் கனல்விழியின் கண்களில் பட்டு அவள் கண்ணைக் கசக்க அந்த நிமிட நேரத்தை பயன்படுத்திக்கொண்டு இருவரும் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்துவிட்டிருந்தனர்.

“அடியே என்னாச்சு? எதுக்குக் கண்ண தேக்கிற?” எனக் கேள்வியுடன் விழியின் முகத்தைப் பார்க்க கண்கள் கலங்கி சிவந்து இருந்தது.

அதேகணம் கதிரவன் இருந்தபுரமாகக் கோவில் வந்தவர் ஒருவர், “ஆத்தாடி இந்தப் பொண்ணு இம்புட்டு ஏமாத்துதே… கண்ணைக்கசக்கி அழுது நாடகமாடி காரியத்தைச் சாதிச்சுப்புடுச்சே. என்னையவே ஏமாத்திடுச்சே…. அது அழுகையைப் பார்த்து நானே ஒருநிமிச ஆடிப்போய்டே” எனக் கூறியபடி கதிரவனைக் கடந்து சென்றவர் கூற, கதிரவனுக்குச் சட்டென்று மகேஷின் வார்த்தைகள் நினைவு வர, “அண்ணே! யாரை சொல்றீங்க ?” என அவரை இடைமறித்துக் கேட்க, “அந்தா இருக்குதே அந்தப் புள்ளத்தாப்பா” என அவர் கைகளைக் காட்டிய திசையில் திருநீர் பட்டதால் கண்ணைக் கசக்கியபடி நின்றிருந்தவள் கனல்விழியே.

“ஏப்பா கேட்ட?” என அவர் பதில் கூறிவிட்டு எதிர்கேள்வி கேட்க, “ஒண்ணுமில்லண்ணே! சும்மாத்தா” எனப் புன்னைகைக்க, அவரும் வெள்ளந்தியாகக் கடந்துவிட்டிருந்தார். சிறிது தூரம் சென்று அவரின் குடும்பத்தோடு இணைய, “என்ன மச்சான் ? அங்க நின்னு யாரோட பேசிட்டு இருந்தீரு” எனக் கேட்க, “தெரியல மாப்ள. எல்லா உம்ம பொண்ணு

புகழாரந்தே… நம்ம முனுசாமிட்ட உம்ம பொண்ணு பண்ணின அலுச்சாட்டியத்தைச் சொன்னதும் முனுசாமி சிரிச்சது மட்டுமில்லாமா, யாருனே தெரியாதவரு கூட யாருனு கேட்டுட்டு போறாரு மச்சா. இந்த வாலுக்கு மூணு வயசுகூட ஆகல. ஆனா ஊரெல்லா உம்மபொண்ணுதா” எனத் தன் மச்சானின் கைகளில் இருந்த குட்டி மலரை வாங்கியவர் கொஞ்ச, அங்கே விதி கனல்விழிக்கு எதிராக விளையாடி இருந்தது.

ஏதோவொரு குழந்தையின் குழந்தைத்தனமான அழுகையையும் அடத்தையும் கனல்விழியோடு பொருத்தி கதிரவனுக்குக் காட்டியது விதியை அன்றி வேறு யார் ?

கதிரவனோடு பேசியவர் தன் குட்டி மருமகளை கைநீட்டி காட்ட, அந்தக் குழந்தைக்குப் பின்னால் நின்றிருந்த கனல்விழியைப் பார்க்க வைத்தது விதியை அன்றி வேறு யார் ?

இதை எதையும் அறியாமல், “தெரியல, எதோ விழுந்த மாதிரி இருக்குது முல்ல” எனக் கூறியபடியே கண்களைத் தேய்த்துவிட்டு பார்க்க, பார்வை மங்கலாகத்தான் இருந்தது. அந்த மங்கலான பார்வையின் வளையித்துள்ளும் கதிரவனின் பிம்பம் மட்டும் தெளிவாகத் தெரிய, “முல்ல கொடி, அது உங்க அண்ணா தான ?” எனக் கனல்விழி கேட்க, அந்தத் திசையில் பார்த்துவிட்டு, “ஆமா! ஆனா இந்த ரணகளத்துலயும் உன்னோட கண்ணுக்கு கதிரவ அண்ணனமட்டும் எப்டி டி தெரிஞ்சது ? கேட்டா ஒண்ணுமில்லன்னு சொல்லுவாளுங்க ” எனக் கேள்வி கேட்க, அதற்குப் பதில் கூற விழி அங்கு இல்லை.

மின்னல் வேகத்தில் கதிரவனை நெருங்கியிருந்தாள்.

“அடி ஆத்தி… இவ போற வேகத்தைப் பார்த்தா நம்ம கத ரொம்பச் சோகமாகப் போகுது போலவே” என முணுமுணுத்தபடி விழியை நெருங்க, தென்றல் வேகத்தில் சென்ற கனல்விழியின் கன்னத்தில் இடி இறங்கியிருந்தது.

“ஐயோ…என்ன ஆச்சு?” எனப் பதறியவளாய் முல்லை கொடி வேகமாக அவளருகில் செல்ல, கதிரவன் கொடியை கவனிக்காமல் சரமாரியாகத் திட்டிக்கொண்டிருந்தான்.

கனல் விழி ஒரு கையால் அடிவிழுந்த கன்னத்தைத் தாங்கி பிடித்திருந்தாள்.

கனல்விழிக்கும் கோபம் கன்னென்று இருந்தது. விட்டால் பொசுக்கிவிடுபவளை போல அவளுடைய நீள கண்ணில் நெருப்புத் துண்டுகள் ஜொலித்துக்கொண்டிருந்தன.

“இதோ பாரு. உன்னோட விளையாட்டுக்கு நான் ஆளு இல்ல. பெட் வச்சிட்டு வந்து கண்ண கசக்கினா மத்த ஆம்பளைங்க வேணும்னா மடியலாம். ஆனா நான் கதிரவன். என்ட இந்த வேலையெல்லாம் வச்சுக்கணும்னு கனவு கூடக் காணாத. அது உனக்கு நல்லதே இல்ல.

கட்டுன பொண்டாட்டிய அடிக்கிறவன கூட நான் ஒத்துக்காதவன். பொம்பளைங்க மேல கைநீட்டுறவன கைய உடைக்கணும்னு நினைப்பேன். ஆனா என்னையவே கை நீட்ட வச்சுட்டியே… ச்சீய்…

பொம்பள பிள்ளனா அடங்கிப் போகணும்னு அவசியமில்லதா. அதுக்காக இப்படி ஆட்டம்போட கூடாது. இப்படி அழுதா எத வேணும்னாலும் சாதிக்கலாம்னு உனக்கு யாரு சொன்னது ?” என அவன்பாட்டுக்குப் பேசிக்கொண்டே போக, கதிரவன் மனைவியைக் கணவன் அடிப்பதையே பொறுக்கமாட்டேன் என்று கூறிய வார்த்தையிலேயே கனல்விழியின் மனம் உழல தொடங்கியது.

கதிரவனுக்கு அழுகின்ற பெண்களை எவ்வளவு பிடிக்காதோ அதே அளவுக்குப் பெண்கள் மீது கைநீட்டும் ஆண்களையும் பிடிக்காது.

இரண்டிற்கும் காரணம் அவனின் தலைகட்டு தலைவரே.

தங்கையின் முதலை கண்ணீரை நம்பி, தன் மனைவியின் கன்னத்தில் தன் விரல் அச்சுப் பதியவைப்பவர். ஆதலால் தான் இத்தனை வெறுப்பு அவனிடம். கதிரவன் முன்னால் ஓடிவந்து நின்ற கனல்விழி மூச்சு வாங்க, கண்களும் முன்னமே சிவந்திருந்த நிலையில் அதைப் பார்த்த கதிரவனுக்கு அழுது அழுது கண்கள் சிவந்து தேம்பலுடன் நிற்பவளை போன்றே தோன்றியது.

சட்டென்று ஒரு மனம் யார் என்ன என்று பரிதாப படத் தொடங்கியபோது, அவனுடைய மூளை உள்ளே நுழைந்து.

‘உன்கிட்ட எதுக்கு இந்தப் பொண்ணு கண்ண கசக்கிட்டு வந்து நிக்கிது? அதும் சுத்தமா முகம் தெரியாத ஒருத்தி வந்து நிக்கிறாள்’ என அவனுடைய புத்தி அழகாகக் புத்தி சொல்ல, அவனுக்குச் சற்று முன் மகேஷும் சுந்தரும் பேசிய உரையாடல் நினைவு வர, சட்டென்று கோவத்தின் உச்சியைத் தொட்டான்.

“ஏங்க,.. அது வந்து. நா உங்ககிட்ட…. ” எனத் தட்டு தடுமாறி அவனைப் பார்த்தபடியே சிறு தயகுத்துடன் கனல் விழி ஆரம்பித்திருக்க, சட்டென்று கை நீட்டியிருந்தான்.

என்ன கன்னம் எரியுது என்ற எண்ணம் தான் கனல்விழியில் உணர்வில் முதலில். பிறகே மெல்ல மெல்ல இவன் தன்னை அடித்துவிட்டான் என்றே உணர்ந்தாள். அடித்தது மட்டுமில்லாமல் ஏதோ சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதோ பேசவேறு செய்கிறானே என்று கோபத்துடன் நின்றவளை அடுத்து அவன் பேசிய வார்த்தைகள் ஈர்த்தன.

ஆம்! அவன் பளார் என்று விட்ட அடியில் கோவம் தலைக்கேற நின்றவள், அடுத்தடுத்து அவன் பேசிய வார்த்தைகளில் அடிவாங்கியதையும் மறந்து அவனுடைய சிந்தனைகளை ரசிக்கத் தொடங்கியிருந்தாள்.

தன் தந்தையைப் போலவே என்ற சிந்தனையைக் கனல்விழிக்குத் தந்தது கதிரவனின் பேச்சு.

எந்தப் பெண்ணிற்கும் முதல் ஹீரோ தன் தந்தையே! அதில் கனல்விழியும் விலக்கல்ல. இரண்டாவது ஹீரோவாக அவளுடைய கண்களில் பட்டவன் கதிரவன். அந்தப் பஞ்சாயத்தில் அவள் கண்ட கதிரவன். அது காதலா என்றால் அவள் நிச்சயம் இல்லை என்றே கூறுவாள். பலமுறை அந்த நிகழ்வை தனக்குள் அசைபோட்டுக்கொண்டாள்.

கதிரவன் கண்ணியமானவனாகத் தெரிந்தான். தைரியமானவனாகத் தெரிந்தான். ஏன்? கதாநாயகனாகக் கூடத் தெரிந்தான். ஆனால் காதலனாகவோ தன்னுடைய நாயகனாகவோ ஒருமுறை கூடத் தெரியவே இல்லை. தெரியவில்லையா ? அல்லது அந்தக் கோணத்தில் அவள் சிந்திக்கவே இல்லையா என்பது அவளுக்கு மட்டுமே வெளிச்சம்.

இன்று கூட வெறுமனே நன்றி கூறியதுடன் சென்றிருப்பாள். அதன் பின் என்னவாகி இருக்குமோ… ஆனால் அவனின் அடியும், அதைத் தொடர்ந்து அவன் பேசிய பேச்சுக்களும், அதிலும் பெண்கள் மீது கை நீட்டுவதை அவன் ஏற்காததையும் அறிந்தவள் தன் தந்தையின் சிந்தனையோடு ஒப்பிட்டு அவளையே அறியாமல் வாழ்க்கையின் மீதி தூரத்தை இவனோடு பயணித்தால் என்ன என்று எண்ண தொடங்கி விட்டிருந்தாள்.

அவளின் மனம் போன திசைக்கண்டு திடுக்கிட்டவள் கனவிலிருந்து விடுப்பட்டவளை போல, கதிரவனைப் பார்க்க, “இதோ பாரு… இந்த அழுது நாடகம் போடற வேலைய இதோட நிறுத்திக்க” என எச்சரித்தவன் சற்று தள்ளி விழிக்குப் பின்னால் நின்ற முல்லை கொடியை கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் எந்தப் பலனும் இல்லை. அவன் அவளோடும் ஓரிரு வார்த்தைகள் அதுவும் முல்லையே, “கதிரண்ணா…” என அழைத்து நிறுத்தினால் மட்டுமே பேசுவான். ஆகவே அங்கே அவள் கனல்விழியின் இரட்சகி ஆகியிருக்க வாய்ப்பில்லை.

“அடியே கனல்விழி என்னடி பேயறைஞ்ச போல நிக்கிற” என விழியைப் பெயர் சொல்லி கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்துவிட்டு அவளிடம் அசைவு தெரியாததால் இப்படிச் சொல்லி உலுக்கிக்கொண்டிருந்தாள் முல்லை கொடி.

“அடியே…” என முதுகில் ஒன்று வைக்க, “ஏ..எதுக்கு டி என்ன அடிச்ச ? ” என்ற கேள்வியுடன் முறைத்தாள் கனல்விழி.

“ஹா…நல்லா கேளு இப்ப. மூக்க மூக்க வெடச்சு இப்ப என்ன கேள்வி கேக்குறள. கதிர் அண்ணே அடிச்சுச்சுல. அப்படியே நிண்ட? அதெப்படி” எனப் பதில் கேள்வி கேட்க,

“ஆமா புள்ள. அந்த அடி எப்படி இருந்துச்சு தெரியுமா?” என ரசனையோடு கனல்விழி இழுத்து சொல்ல, “தொட்டால் பூ மலரும்……” என்ற வரிகள் மிகச் சரியாக அதே நேரம் ஒலித்தது. திருவிழாக்கென்று கட்டப்பட்டிருந்த சவுண்ட் சர்விஸ் பாட்டை ஒலிக்க விட்டிருந்தான்.

“என்ன டயமிங்ல சாங்கு வருது” என வாய் விட்டு புலம்பிய முல்லையைப் பார்த்த விழி,

“பாத்தியா…? இந்தப் பாட்டுல வர போலதா பூ மலர்ந்த மாதிரி. ஒய் முல்ல … என்ன சாங்கு கேட்குதுல?” என அவளின் தோல்பட்டையில் இடித்துக் கேட்க,

“எனக்குச் சாங்கு சவுண்ட் கேட்கலடி. சங்கு சவுண்டுதா கேட்குது…..” என முழியை உருட்டி முல்லை சொன்னாள்.

“இதோ பாரு நான் முடிவு பண்ணிட்டேன்…” எனக் கனல்விழி கூற,

“என்னனு? உங்க போதைக்கு என்னை ஊறுகா போடலாம்னா ?” என முல்லை கேட்டாள்.

“அடியே! அது இல்ல…..” என மறுத்தவள் அடுத்து கனல்விழி செய்யவிருக்கும் காரியத்தை முல்லையிடம் கூற, முல்லை அலறினாள்.

Advertisement