Advertisement

 

மயிலிறகு– 9

 

ஆகாய நீலவண்ண சட்டையும், கருப்பு கால்சட்டையும் அணிந்து மிடுக்காக நின்றபடி, கையில் ஒரு காமெராவை வைத்து சரிப்பார்த்துக்கொண்டு இருந்தது, இழையினியின் குழம்பிய மனநிலைக்கு காரணமானவனே…. அவன் எதிரில் நின்ற மணப்பெண்னை பார்க்கவில்லை. ஆனால் இழையினி அவனை கண்டுக்கொண்டாள்….

 

ஆரியனுக்கும், இழையினிக்கும் நடுவில் நின்ற ஆதவன், சரியாக மணமகன் நின்ற திசையில் நிற்க, இழையினி ஆதவனை மணமகனாக பார்த்திருந்தாள்… அவனது கேமரா கொண்டு பெண்ணின் வருகையை பதிவு செய்ய முனைந்து கண்களில் பொருத்தியவன், கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி…

 

அவனது கண்களின் அதிர்ச்சி மற்றவர்க்கு தெரியவில்லை… காரணம் அவன் கண்ணோடு பொருத்தி இருந்த நிழற்படக் கருவி…நிழற்படக் கருவியின் (கேமெரா)கண்ணாடி வில்லையின் (லென்ஸ்) வழி இழையினியை முழு மணப்பெண் அலங்காரத்தில் பார்த்தவன் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத வலி, திகைப்பு கோவம் உண்டானது….

 

அந்த ஓரிரு நொடிகளிலே, இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்த நினைவுகள் அவன் மனதில் சட்டென்று மாறும் மழைக்கால வானிலையாய், அந்த காட்சிகள் வந்து போயின.

 

அவனை ஈர்த்த பாதங்களுக்கு சொந்தகாரியும் அவனுக்கு தெரியவில்லை, எதிர்பாரா நிகழ்வில், அவன் கையால் மஞ்சள் நாண் வாங்கிய பெண்ணின் நினைவும் போகவில்லை. அனால் அவனுடைய உள்ளுணர்வு மட்டும், இரெண்டுமே ஒரே பெண்ணாய் இருக்குமோ என்று எண்ண, அவனது நெற்றி யோசனையில் சுருங்கிற்று.

 

சிறுது நேரத்தில், வேகமாக வந்த இளநிவன், ஆதவனிடம், வேதா அம்மாவிற்கு உடல் நலம் சரி இல்லை என்று கூற, வேறு எதை பற்றியும் சிந்திக்காது, சிந்திக்கவும் வழி இல்லாது அவனது ஊருக்கு விரைந்தான்.

 

அவனது ஊருக்கு சென்றபின் இரண்டு நாட்கள், அடுத்தடுத்த வேலை பளுவில் ஆழ்ந்துவிட, காலை தான், அவரது தந்தை ருத்ரன் இன்று மாலை தனது ஒன்றுவிட்ட தம்பியின் மகனான ஆரியன் திருமணதிற்கு போகவேண்டும் என்று கூற, ஆதவனுக்கு அங்குவருவதில் அத்தனை விருப்பம் இல்லை.

 

ருத்ரனுக்கு தான், அவரது தம்பியின் மீது பாசம் அதிகம். ஆனால் ஆதவனும் ஆரியனும் அத்தனை தூரம் நெருக்கம் இல்லை. ஆதலால் வரமறுக்க, கடைசியாக வேதா அம்மாவின் பேச்சுக்கு இணங்கி வர சம்மதம் கூறியவன், மகிழனையும் அவனது விருப்பம் கேட்காமலே இழுத்து வந்திருந்தான்.

 

இளநிவனோ முதல் நாளே கிளம்பி அவன் நண்பர்களோடு, திட்டமிட்டப்படி ஒரு மாத சுற்றுலாவிற்கு சென்று இருந்தான்.

 

வரவேற்பு விழாவில் நேரத்தை நெட்டி தள்ள இயலாமல் அமர்ந்திருந்த ஆதவனை, மகிழன் தான் இழுத்து வந்து சில புகைப்படங்கள் எடுக்குமாறு கூறினான். அப்படி நேரத்தை கடத்த, நண்பனுக்கு மகிழன் ஆலோசனை கூற, ஒரு சில நல விசாரிப்பின் பின் ஆரியனும், ஆதவனும் சற்று நெருங்கி பேச ஆரம்பித்தனர்.

 

அந்த நேரம் தான், ஆரியனின் நட்பு பட்டாளம், பெண்னை பார்க்க, ஆரியனை அழைத்து வர, அப்படியே அவர்கள் ஆதவனையும்… “அண்ணா, நீங்களும் ஜாயின் பண்ணுங்க… இவன் அப்புறம் அந்த பெண்ணோட போடோஸ் வச்சு நம்ம பின்னாடி இவன ஓட்டலாம்” என்று ஒரு சேர கூற ஆதவனும் சம்மதமாய், ஒரு குறுஞ்சிரிப்பை உதிரவிட்டப்படி அவர்களுக்கு முன்னே வந்தான்…

 

ஆரியன் – 27 வயது நிரம்பியவன்…நல்ல நிறம், பார்த்ததும் பிடித்துக்கொள்ளும் சிரித்த முகம், சிரிக்கும் பொழுது விழுகும் கண்ணக்குழி என்று பார்ப்பவரின் மனதில் பட்டென்று ஒட்டிகொள்பவன்.

 

ஆதவனோ, ஆரியனை விட இரு வயது மூத்தவன்… ஆதலாலே, ஆரியனின் நட்பு வட்டாரம், ஆதவனை ‘அண்ணா’ என்று அழைத்தது.

 

புகைப்படம் எடுப்பதில் விருப்பம் கொண்ட ஆதவன், மணப்பெண்னை பாராமல், ஆரியனின் நடப்பு வட்டாரங்களின் கேலி கிண்டல்களை ரசித்தவாறு, கண்ணாடி வில்லை வழி பதுமையான மணப்பெண்னை பார்த்தவன் கண்களில் அதிர்ச்சி குடியேறியது.

 

இழையினிக்கும் அதே நிலை தான்… இழையினி ஆதவனையே கண் இமைக்காமல் பார்க்க, அவளது தோழிகளோ, “ஹே மாப்பிள்ளை அங்க இருக்காரு டி…” என்று ஆரியன் இருக்கும் திசைக்காட்டினர்.

 

ஆதவனை பார்த்த இழையினியின் இமைகள், விலக்க முடியாமல் விலக்கி ஆரியனை ஒருமுறை தீண்டி, மீண்டும் ஆதவனிடம் நிலைப்பெற்றது.

 

ஆதவன் வேகமாக ஓரிரு புகைப்படங்களை எடுத்துவிட்டு, மகிழனிடம் சொல்லிவிட்டு சற்று தனிமையை நாடி… இழையினி வீட்டின் பின்பக்கம் சென்று, அப்போது தான் பாலை விரித்திருந்த தென்னையின் மீது சாய்ந்து நின்றுக்கொண்டான்…

 

“எனக்கு ஏன் இப்படி அதிர்ச்சி… நான் நேசித்த பெண், ‘இவள் தான்’ – அப்படின்னு எனக்கு சரிவர தெரியாது இதுவரை…. இவளுக்கு நான் உதவி செய்தேன், அவளே சொன்னது போல, அது திருமணமும் ஆகாது… ஆனா எனக்கு ஏன் இரண்டு பெண்ணும் ஒருத்தியேன்னு தோணுது.

 

ஊரக்கூட்டி கல்யாணம்… இந்த நிறைந்த சபைல இதுக்கு மேல் என்ன செய்ய… அதோட அவளுக்கு முழு விருப்பமோ?

 

ஒருவேளை, இது முன்பே ஏற்பாடு பண்ணிய திருமணமாக இருந்திருக்கலாம்… அதனால தான், நான் கட்டிய தாலிய அவள் கல்யாணமே இல்லன்னு சொல்லி இருக்கணும்…

 

என்னது தாலியா? என் மனசுல அது தாலி தான், அப்படின்னு எப்படி பதிந்தது… அது மஞ்சள் நாண் தானே.. ?

 

சரி அது வெறும் கயிறோ, இல்லை தாலிக் கொடியோ ? ஆனா நிச்சயம் ஆனா பொண்ணு வேற என்ன செய்வா.. இந்த சம்பவம் நடந்த பிறகு, ஒருவேள இந்த திருமண பேச்சு வந்திருந்து, அப்போ இந்த பொண்ணு சம்மதம் சொல்லி இருந்தால், அது சரி இல்லை….

 

இந்த திருமணம் எப்ப நிச்சயக்கப்பட்டதா இருக்கும்… ? ” என்று பலவாறாக எண்ணி குழம்பிய ஆதவன், தீவிர சிந்தனை வையப்பட்டன்.

 

என்ன யோசித்தும் அவனுக்கு சரியான விடையும் கிடைக்கவில்லை… அவளுக்கு திருமணம் என்று அறிந்தது உவப்பான செய்தியாகவும் இல்லை. அவன் கண் முன்னே கண்ணாடி வில்லை வழி கண்ட அவளே நினைவு வந்தால்…..

 

அதேநேரம், இழையினியின் மனதில் மீண்டும் வேதனை வேர்விட தொடங்கியது. ஆயிரம் குழப்பங்கள் சூழ்ந்த போதும், கடவுளின் கைகளில் வாழ்க்கையை ஒப்புவித்தவள், மீண்டும் அவளது கழுத்தில் தாலியை கட்டிவனை கண்டு அடியோடு துவண்டுபோனாள்…..அந்த நொடி முதல், ஆரியனுடனான இந்த திருமணம் நிற்க வேண்டும், தனது தந்தைக்கு தலை  குனிவு வராதவாறு என்று மனம் குமுறி வேண்ட தொடங்கினாள்.

 

அவளது அறிவுக்கு தெரிகிறது… எந்த பிடிப்பும் இல்லாத நிலை, அவன் யார் என்று.. ஏன் அவனது பெயர் கூட தெரியாத நிலை.. அவன் கட்டியது முழுமையான மாங்கல்யமும் இல்லை… அவனுக்கு வேறு ஒரு காதலி இருக்கிறாள்… எதற்காக இப்போது இந்த திருமணம் வந்திருக்கிறான்…. அவன் முதலில் நிகழ்ந்ததை திருமணம் என்று நம்புவானா…இப்படி அனைத்து கேள்விகளும் அறிவு தொடுக்க, மனமோ… “எனக்கு எதுவுமே தெரியாது… ஆனா அவர் கட்டின இந்த வெறும் கயிறு, எனக்கு திருமணம் அப்படிங்கிற  பந்தத்தை தான் கொடுக்கிறது… இது எதிர்காலம் இல்லாத எதிர்பார்ப்பாகக்கூட இருக்கலாம்…… ஆனாலும் இப்போ இந்த திருமணம் எனக்கு சந்தோசத்தை தரவில்லை. கடவுளே எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்துங்க….” என்று கண்ணீர் வடித்தது.

 

மேடை மீது , ஆரியன் அருகில் நின்ற இழையினியின் மனநிலை விராலிமலை முருகனிடமும் கோரிக்கை வைத்து லயித்திருக்க, அவளது கண்களோ ஆதவனுக்காக அலைப்பாய்ந்தது.

 

சில மணித்துளிகள், இழயினியை பற்றிய சிந்தனையில் இருந்த ஆதவன்… இந்த திருமணம் எப்போது நிச்சயக்கப்பட்டது என்று அறிந்துக்கொள்ள வேட்கை எழ, அவனது சிறிய தந்தையை அதாவது மாப்பிள்ளையின் தந்தையை நோக்கி சென்று, சாதாரணமாக கேட்பவன் போல விசாரிக்க, இந்த திருமணம் நிச்சயக்கப்பட்டது மூன்று நாட்கள் க்கு முன்பு தான் என்று அறிந்துக்கொண்ட ஆதவனுக்கு, இழையினி மீது கோவம் துளிர்விட்டது…

 

அவன் மனமோ, “அன்னைக்கு அவ்ளோ அழுதாள்… இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு… ஆனா இவ்ளோ சீக்கிரம், இவள் கல்யாணத்திற்கு தயாரா இருக்கா… நிச்சயம் இவள் நான் மனசுல நினைத்த பொண்ணா இருக்கமாட்டாளோ….” என்று சிந்தித்தவன் கண்கள் இழையினியின் கண்களில் நிலைத்தது.

 

அந்த நொடி இழையினியின் கண்களும் அவனைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தது…. அவளது கண்களில், அன்று அவன் பார்த்த, அதே கலக்கம் இன்றும் குடி இருக்க, இவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ என்று ஒரு மனது வாதியாக வாதிட, மறுமனம் பிரதிவாதியாக மாறி, விசாரித்தவரையில் அப்பெண் அந்த வீட்டின் ராஜகுமாரி… அவள் சொல்லுக்கு மறுப்பு இல்லை என்று அறிந்த செய்தியை மீண்டும் நினைவூட்டியது….

 

அவளுக்கு வேறு ஒருத்தருடன் திருமணம் என்று அறிந்த பின்னும் அவனால் ஏனோ அவனது விழிகளை இழையினியை விட்டு பிரிக்கமுடியவில்லை. அவளை பார்த்துக் கொண்டு இருந்த ஆதவனது கூர் விழிகள், அவளுக்கு பின்னால் மின்னிக் கொண்டு இருந்த எழுத்தகள் மீது படிந்து மீண்டது….

 

‘இழையினி’ வெட்ஸ் ‘ஆரியன்’……

 

முதன் முதலாய், தன்னை இம்சிக்கும் விழி கொண்ட பெண்ணின் பெயரை அறிகிறான்… திருமணதிற்கு வந்தான் தான்… ஆனால் அவன், அழைப்பிதழையோ அல்லது அந்த எழுத்துக்களையோ அவன் கவனிக்கவில்லை. அப்படியே கவனித்திருந்தாலும், அது அவனது கருத்தில் பதியாமல் போய்விட்டதோ ? அவன் அறியான்…..

 

ஆரியன் உடன் அவள் பெயர் சேர்ந்திருப்பதை, ஆதவன் விரும்பவில்லை… அவன் மனமோ, எதுவும் சொல்லவும்முடியாமல், செய்யவும் முடியாமல் ஒரு சிறையில் சிக்கி தவித்தது…..

 

ஆதவன் தனிமை நாடி சென்றுவிட, மகிழன் தனித்துவிடப்பட்டான்…. என்ன செய்வது என்று அறியாமல் நம்பி வந்த நண்பன் ஒரு நிமிடத்தில் சகுனியாய் மாறி கழட்டிவிட்டு சென்றுவிட, அதை எண்ணியவனாக திரு திருவென முழித்தபடி முன் இருக்கையில் அமர்ந்திருக்க ஒரு இனிய குரல் அவன் கவனத்தை ஈர்த்தது….

 

“எக்ஸ்கியுஸ் மீ…, ஹெலோ உங்களைதான் எல்லோ ஷர்ட்…. ” என்று ஒரு பெண் குரல் கேட்க, முதலில் கவனம் பதிக்காமல் இருந்தவன், அவன் அணிந்திருந்த இளமஞ்சள் நிற சட்டையின் நிறத்தை குறிப்பிட்டு அழைக்கவும் அவசரமாக குரல் வந்த திசையில் மகிழனின் கரு விழி சுழல , இளமஞ்சள், பாசிபயறு பச்சை இரண்டும் கலந்து கற்கள் பதிக்கப்பட்டு வேலைபாடு மிகுந்த ஒரு சேலையில் மகிழன் கண்டான் அவளை.

 

“ப்ளீஸ், உங்க பக்கத்துல இருக்கவங்கள கூப்பிடுங்களே… ” என்று கூற மகிழனின் மனமோ. “வாவ்…. ” என்று குத்தாட்டம் போட, அப்பெண் சொன்ன நபரை அழைத்து அப்பெண்ணை கைகாட்டினான் மகிழன்…. மகிழனின் அருகில் இருந்தவரோ, “என்ன இதழா…” என்று கேட்க, மகிழனின் மனமோ, “இதழா…. உன்ன போலவே உன் பெயரும் அருமை… இதழா… இதழ்… இனி நீ தான் இந்த மகிழனுக்கு ஏற்ற மயில் ” என்று எண்ணமிட்டது.

மகிழனுக்கு அருகினில் இருந்தவரை நோக்கி, “அண்ணா இங்க வேற்கிறது…” – இதழா….

“நான் வேணும்னா..விசிரட்டுமா… கண்ணுக்குட்டி?” – மகிழனின் மனதில்

“ரொம்ப வியர்த்தா… போடோஸ் நல்லா விழாது அண்ணா.. சீக்கிரம் பேன் கொண்டு வரீங்களா…?” – இதழா

“உன்ன பார்த்தது இருந்து நானே உன்னோட பேன் ஆகிட்டேன்… உனக்கு எதுக்கு தனியா ஒரு பேன்…” – மகிழன் மனதில்

“அண்ணா , இந்த லைட்டும் அட்ஜஸ்ட் பண்ணுங்களே… ஒரே டிம்மா இருக்கு….” – இதழா

“நீ இருக்கும் போது, மத்த எல்லா லைட்டும் டிம்மா தான் தெரியும்…” – மகிழன் மனதில்

“ஒகே அண்ணா, தேங்க்ஸ்… அக்கா கொஞ்சம் சிரி… நான் மத்தது எல்லாம் பார்த்துட்டு வரேன் கீழ போய்…” – இதழா..

“ஆனா எனக்கு உன்ன பார்க்கிறது மட்டும் தான் ஒரே வேலை இனிமேல்…” – மகிழன் மனதில்…

“மாமா பார்த்துக்கோங்க….” என்று இதழா, ஆரியனிடம் கூற, இழையினின் கண்களில் உயிர்ப்பு இல்லாமல் ஒரு பார்வை, ஆரியன் மீது படிந்து மீண்டது….

“மாமாவா…? இதோ பாரு கண்ணமா, உனக்கு நான் மட்டும் தான் மாமா… சொல்லிபுட்டேன் ஆமா” – மகிழனின் மனதில்.

வந்தவர்களை வரவேற்றப்படி இதழா முன்னேற, அவள் பின்னோடு நடந்தான் மகிழனும். அப்போது எதிரில், இதழாவிற்கு தெரிந்த ஒரு பெண்மணி வர, இதழா அவர்களுடன் பேச தொடங்கினாள். அவர் கேட்கும் கேள்விகளுக்கு,இதழா பதில் கூற, எதிரில் இருந்த பெண்மணியின் குரலும், முகமும் மகிழனின் கவனத்திற்கு வெளியே இருக்க, இதழாவின் வாக்கியங்கள் மட்டும், மகிழனுக்கு வேத வாக்காய் இருந்தது.

 

“ஆமாம் ஆண்ட்டி… எனக்கு சிலம்பு தான் உயிர்…” – இதழா…

“சிலம்பு – அது கண்ணகியோட ப்ராபெர்ட்டி ஆச்சே… லாங் லாங்  எகோ நடந்த மேட்டர் ஆச்சே…. இவள் ஏன் இப்ப இத பத்தி பேசுறா…” – மகிழன் மனதில்.

” சிலம்புக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்….” – இதழா….

“அதே சிலம்புக்காக தான், கண்ணகி யும் மதுரை-க்கு போகி பண்டிகை போல பையர் வச்சாங்களாம்….ஹ்ம்ம்ம்ம் சேம் பீலிங்.. சரி இன்னும் என்ன சொல்றான்னு பார்ப்போம்…” – மகிழன்

“எனக்கு கல்யாணமா ?… அட போங்க ஆன்ட்டி” – இதழா

“ஆமாம் மயிலு, உனக்கு என்கூட தான்…” – மகிழன் மனதில்

“இப்போ ஐடியா இல்ல…” – இதழா…

“ஐடியா… ? எதுக்கு சொல்றா.. ? ஐடியா சிம் இல்ல போல.. அப்ப வேற என்ன சிம் யூஸ் பண்றா… சரி ஒரு ஐடியா சிம் வாங்கி தருவோம் ” – மகிழன்.

“சரி பார்ப்போம்… சிலம்போடு ஒருத்தன் வருவான்… சரி ஆன்ட்டி, போங்க போய் சாப்பிடுங்க… சாப்பிடாமா போகக்கூடாது” – இதழா

“சிலம்பு, ஐயோ இந்த ராத்திரியில எங்க போவேன்… ஏதாச்சும் நாடக கடையில போய் தேடுவோமா… வாடாகை எவ்ளோ வந்தாலும் பரவா இல்லை… சிலம்ப வாடகைக்கு எடுக்கிறோம், அவள் மனசுல நிரந்தரமா குடி ஏறுறோம்…” – மகிழன் மனதில்.

 

இவை அனைத்தும் ஒருபுறம் நிகழ, மறுபுறம் ஆதவனோ இமைக்காமல் இழையினியை பார்த்துக்கொண்டு இருந்தான்… அப்போது சரியாக, ஆதவனது தந்தை, சிறிய தந்தை மற்றும் இழையினியின் தந்தையுடன் வர, ராகவனிடம் ஆதவனை அறிமுகப்படுத்தினார் அவரது சிறிய தந்தை…..

 

“ஆதவா.. இது என்னோட சின்ன வயசு நண்பன்…. ராகவன், விவசாயம், தமிழ் கலை, இதுமேல ரொம்ப ஆர்வம் உள்ள ஒரு ஆளு… ராகவா, ஆதவனை ஏன் தெரியுமா இப்ப குறிப்பா உன்கிட்ட அறிமுக படுத்த கூப்பிட்டு வந்தேன்…. நீ சின்ன வயசுல இருந்ததைவிட ஒரு படி மேல விவசாயம் ல ஆதவன்…. விவசாயம் படுச்சிட்டு, புதுசு புதுசா நிறைய பன்றான்பா… ஆதவன் ஒரு முடிவெடுத்தா…தீர்க்கமா இருக்கும், ஆனால், ஆதவன் பேசுற தொனியோ, இல்லை குரலோ எதிர்ல இருக்கவங்கள, அவன் வார்த்தைக்கு மறுத்து பேசமுடியாதபடி பேசுவான்…மனசுல பட்டத சட்டுன்னு செய்வான்…” என்று ஆதவனது சிறிய தந்தை ஆதவனை பற்றியும், ராகவனை பற்றியும் பொதுவாக இருவரிடமும் கூற, ஆதவன் அவரை பார்த்து அளவான புன்னகையுடன் நின்று இருக்க, ராகவனது விழிகளோ ஆதவனை எடைப்போட்டது….

 

“அப்புறம் ஆதவா…. இன்னைக்கு என் நண்பன் இந்த ராகவன், நாளைக்கு என்னுடைய சம்மந்தி….” என்று கூறி சிரிக்க, ஆதவன் இழையினியின் தந்தையை முதன்முதலில் பார்த்தான்…. இத்தனை நேரம், இதழ் பிரிக்கா சிரிப்புடன் நின்றிருந்த ஆதவன் முகம் ஒரு நிமிடம் யோசனையை சுமந்து, மறு நொடியே அமைதியை தாங்கி நின்றது.

 

ராகவனோ சிரித்த முகத்தோடு, ” சம்மந்தி ஆனாலும் நீ எப்பொழுதும் என் நண்பன் தான்… பொண்ணு ஜாதகப்படி இன்னும் ஒரே வாரத்துல கல்யாணம் பண்ணனும்னு யோசித்தப்ப, நான் என்ன செய்யறதுன்னு யோசிக்கும் முன்னாடியே நீ உன் பையன என் மருமகன் ஆக்குறதா வாக்கு கொடுத்த, என் பொண்ணு தான் என் உலகம்… நானும் உன் மேல இருந்த நம்பிக்கையில சம்மதம் சொன்னேன்… மூனே நாட்கள் ல ஏற்பாடு பண்ணியதுனால, உன்னோட நெருங்கிய சொந்தம் கூட வெளிநாட்டுல இருந்து வரமுடியல, அப்படியும் அதை கூட நீ நினைக்காம எனக்காக இத்தனை சீக்கிரம் கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்ட….” என்று ராகவன் கம்பீரம் கலந்த குரல் நெகிழ கூறினார்.

 

அவர்கள் இருவரும் நட்பு பாராட்ட, ஆதவனது கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது…. அவனது மனமோ, “திடிர்னு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்… இவுங்க சொல்றத பார்த்தா, முன்னாடியே இழையா க்கு விருப்பம் இருந்திருக்க வாய்ப்பு இல்ல… ” என்று எண்ணமிட, அவனது மறுமனமோ, “என்ன ? இழையாவா ? அவுளுடைய பெயரே எனக்கு கொஞ்சம் முன்னாடி தான் தெரியும், அதுக்குள்ள அவளுடைய பெயரை ஏதோ நெருக்கமானவங்கள போல என் மனசு ஏன் சொல்லுது…” என்று எண்ணமிட்டது.

 

மேலும் அவனது மனம் அவனிடமே சில கேள்விகள் கேட்க, அதை பற்றி சிந்திக்கலானான்….

 

“நான் முதல்ல பார்த்த பெண் யார் , இவள் தான் னு இப்போ என் மனசு உணருது… ஆனா இங்கு மணப்பெண்ணா இருக்கிற இழையாவோட பாதத்த நான் இன்னும் பார்க்கல…. என்ன போலவே எண்ண போக்கு இருந்த அந்த பொண்ணும், என்னையே ஒரு கணுக்கால் மச்சத்துல தொலைய வைத்த பெண்ணும் ஒருத்தியே னு தோணுது….

 

இழயாவை பார்க்கும் போது, எனக்கே தெரியாம, என் மனச, அவ பின்னாடி ஓட வச்ச பெண் இவள் தானோ னு தோணுது….

 

ஆனா எல்லாமே என் உள்ளுணர்வு… சரி இது எல்லாம் நான் தெளிவு பண்ணனும்…  இப்பவே இன்னைக்கே… நாளைக்கு அவள் இன்னொருத்தனோட மனைவி ஆகிடுவா….” என்று அவன் மனதினுள் முடிவெடுக்க, அதை எப்படி அறிவது என யோசிக்கலானான்.

 

அந்த நேரம் சரியாக ஆரியனின் நண்பன் வந்து, “அண்ணா… மகிழன் அண்ணா எங்க? ஏதோ போட்டோ எடுக்க போஸ் சொல்லி தரேன்னு சொன்னாங்க…. அவுங்கள காணோமே… ” என்று கேட்க, ஆதவன் சிந்தனையில் சட்டென்று ஒரு திட்டம் உதயமானது….

 

“ஒ… அவன் எங்கனு தெரியல… சரி நான் ஹெல்ப் பண்றேன்… நீ இங்க இருந்து பாரு.. பொண்ணு, நம்ம ஆரியன்விட உயரம் கம்மியா இருக்குல? ” – ஆதவன் .

 

“இல்ல அண்ணா… சரியான உயரமாதான் தெரியிது…இதுவே உங்க பக்கத்துல அவுங்க நின்னா நிச்சயம் கம்மியா தெரியலாம்… நானே உங்கள நிமிர்ந்து பார்த்து தான் பேசுறேன்… ” – ஆரியனின் நண்பன்.

 

“இல்ல, நீ சரியா கவனிக்கல, இன்னும் கொஞ்சம் உயரமா இருந்தால், போடோஸ் விழும் போது நல்லா இருக்கும்….” – ஆதவன்

 

“அப்படியா சொல்றீங்க …? சரி அண்ணா, உங்கள பத்தி ஆரியன் சொன்னா… நீங்க சொல்றது எப்பவும் தப்பா போகாதாமே… அந்த பொண்ணு கொஞ்சம் குள்ளமா தான் தெரியிது….என்ன பண்ணலாம் ? ” – ஆரியனின் நண்பன்.

“ஹ்ம்ம் குட்… ஒரு சின்ன முக்காலி இல்லை பலகை இருக்கானு பாரு…. பொண்ண, அவுங்க போட்டிருக்க செப்பல் இல்லாம ஏற சொல்லு… அதுல ஏறும் போது கால் இடறிடமால்…. அதுக்கு பிறகு ரெண்டு பேரோட கண்ணும் கண்ணும் பார்க்கிறமாதி போட்டோ எடுங்க…” என்று ஆதவன் அவர்களின் வேண்டுதலுக்கு பதில் கூறியது போல், இழையினியின் பாதம் பார்க்க இந்த திட்டத்ததை கூற ஆரியனின் நண்பனும் அதை செய்யல படுத்த விரைந்தான்.

 

“ஆரியன்.. ஒரு ரொமாண்டிக் ஸ்டில் க்கு நான் ஒரு ஐடியா ரெடி பண்ணிட்டேன்…” என்று ஆரியனின் நண்பன் ஆதவன் கூறியதை கூற, ஆரியனோ, “டே எதுக்குடா இதெல்லாம்…” என்று கூற, இழயினியோ கடமையே என்று நின்றுந்தாள்….

 

ஒருவழியாக ஆரியனின் பள்ளி தோழன் பண்ணிய கலாட்டாவில் இழையினி ஒரு பலகையில் வெற்று பார்வையோடு ஏற போக, வேகமாக இடைபுகுந்த ஆரியனின் நண்பன், “சிஸ்டர்..ஸ்லிப் ஆகிடும், செப்பல் கழட்டிருங்க…” என்று கூற, எதுவும் கூறாமல், தரையை தழுவியபடி இருந்த சேலையை லேசாக தூக்கிப்பிடித்து, காலனியை கழட்டி அவளது ஒரு காலை பலகை மீது வைக்க, இதற்காகவே காத்திருந்த ஆதவன் அவள் கணுங்காலையும் பாதத்தையும் பார்க்க தவறவில்லை.

 

ஆதவனது திட்டத்துக்கு விதியும் துணை போனோதோ ? ஏனென்றால் அவன் அன்று அந்த ஓடைக்கரையில், மூங்கில் புதரின் இடையில் பார்த்த அவளது வலது காலையே அவள் பலகையின் மீது எடுத்து வைக்க, மெல்லிய கொலுசு கணுக்காலை சுற்றி இருக்க, பாதத்தை சுற்றி வைக்கப்படிருந்த மருந்தானி சிவப்பு படிந்திருக்க, கொலுசின் நடு முத்துக்கும், மருதாணி சிவப்பிற்கும் இடையில் அழகியை கருப்பு வண்டாக இருந்தது அவளது கணுக்கால் மச்சம்.

 

அவனுக்கு அந்த நொடி புரிந்தது…. “ஏன் தனக்கு அன்று அந்த நிலவொளியில் இவளது முகத்தை பார்த்த விழிகளை, அவளை விட்டு பிரிக்க முடியவில்லை என்று…. தன் மனதில் இருந்த ஈர்ப்பு க்கு காரணமானவளை தான் நான் கண்டு இன்னுமொருமுறை ஈர்க்கப்பட்டு இருகிறேன்” என்று உணர்ந்துக்கொண்டான் ஆதவன்.

 

அவன் அந்த சிந்தனையில் இருக்கும் பொழுதே, பலகையில் கவனம் இல்லாமல் கால் வைத்த இழையினி  தடுமாறி விழபோக அப்போது இதழா அவளது அருகில் வந்து , “கொஞ்சம் நேரம் உக்காருங்க அக்கா… மாமா, நான் ஒரு அஞ்சு நிமிசத்துல கூப்பிட்டு வறேன், அக்கா டையர்டா இருக்கா…ரெப்ரெஷ் பண்ணி கூப்பிட்டு வறேன்…” என்று இதமாக கூறி இழயினியை மேடையைவிட்டு இறங்க சொல்லி, அருகிலிருக்கும் அறைக்குள் அழைத்து போக, போகின்றவழியில், “அக்கா… உனக்கு என்ன தான் ஆச்சு..? நீ கோத்தகிரி போயிட்டு வந்தது இருந்து ஏன் ஒருமாதி இருக்க… எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லு அக்கா… நீ இப்படி இருக்கிறத பார்க்கும் போது, நம்ம ராகவன் உன்ன அனுப்பாமலே இருந்திருக்கலாம்… மீனு, தேனு, மால் கற்றவங்கனு, அதை எடுக்கிறவங்க வாழ்க்கை முறை னு அவுங்கள பத்தி என்கிட்ட சொன்ன நீ… என்கிட்ட மறைக்கிற விஷயமும் இருக்குனு தோணுதுக்கா… ப்ளீஸ் என்ன நடந்தது சொல்லே…..” என்று குரலை தனித்து கூற, ஆனாலும் மேடையின் பக்கவாட்டில் நின்ற ஆதவனுக்கோ அது தெளிவாக கேட்டது.

 

இழையினியும், இதழாவும் ஆதவனின் கண் பார்வையில் இருந்து மறைந்து ஒரு அறைக்குள் நுழைய ஆதவனுக்கோ அடுத்தடுத்து நிகழ்ந்தவை நினைவு வர தொடங்கியது…..

 

அவனுக்கு தெரிந்துவிட்டது… முதன் முதலில், இந்த 29 வயது ஆண்டுகளில் ஒரு பெண்ணிடம் அவன் மனது லய்த்திருகிறது என்றால் அது இழையினியிடமே… அதற்கு ஆரம்பம் அவளது பாதமாக இருக்க, அதை மேலும் வழு பெற செய்தது அவளது எண்ண ஓட்டமாக இருந்தது….இறுதியில், அவளது மருண்ட மான்விழியில் அவன் குழம்பித்தான் போனான். அவள் கண்ணீரை துடைக்க, அன்று அந்த தாலியை கட்டினான்… தாலியா… ? தாலி என்று தான் அவன் மனம் இப்போது முழுமையாக நம்புகிறது….

 

ஆனாலும் அவள் அன்று கூறியபடி இழையினி இதை திருமணமாக நினைக்கவில்லையோ… அப்படிதான் இருக்கும் என்று அவன் மனம் நம்ப தொடங்கியது… ஆதவன் காதலித்தான் தான்…. அவன் மனதிற்கு தெரிகிறது.. அனால் விடிந்தால் கல்யாணம் என்று இரு குடும்பம் இணைந்திருக்க, இழையினியும் மனதளவில் தயாராக இருக்க.. இதில் ஆதவன் இப்பொழுது என்ன செய்ய முடியும்… இப்படி தான் அவன் எண்ணம் இருந்தது….

 

இப்பொழுது எதையும் சொல்லி அவளது வாழ்வை திசைமாற்ற விருப்பம் இல்லை அவனுக்கு… எந்த புகைப்படத்தை மறைக்க நினைத்தானோ, எதற்காக அவள் கண்ணீர் சிந்த கூடாது என்று நினைத்தானோ அந்த சம்பவத்தை அனைவரிடமும் கூறி இந்த திருமணத்தை தடுக்க அவனது மனம் இடம் தரவில்லை.

 

அதே நேரம், அவனின் மனம் கவர்ந்தவள், மாற்றான் மனைவி ஆவதை பார்க்கும் ஜீவனும் அவனுக்கு இல்லாததால் அவன் அங்கு இருந்து கிளம்ப முடிவெடுத்தான்.

 

அதற்கு மேல் அங்கு ஆதவனால் இருக்கமுடியவில்லை… அவனது மனம் இப்போது தெளிவாக இருந்தது…..”நான் அந்த பெண்ணை முகம் தெரியாமலே நேசிச்சது உண்மை…. அவள் கால்தடம் பார்த்து, அவள் முகம் பார்க்க ஆசைப்பட்டு, அவளை தேட, நான் பார்த்ததோ அவனிக்காவை…அந்த அவனிக்காவை பார்க்கும் போது ஏன் எனக்குள்ள எந்த உணர்வும் தோன்றவில்லை னு எனக்கு குழப்பம் இருந்தது…. அந்த குழப்பத்தை, அவ தான் எனக்கு சரியான, நான் தேடுற பெண் னு , அவளோட குணம் பற்றி எனக்கு சுடலை மூலம் தெருஞ்சது… ஆனா அந்த எண்ணங்களுக்கும் சொந்தக்காரி நிச்சயமா இழையாவாகதான்  இருக்கும்….அப்படி நான் என் மனசுல இருந்த பாதங்களையும், அவளோட எண்ணங்களையும் நேசிக்க, எதிர்பாரா விதமா, இழையினியை சந்திக்க, அந்த பாதங்கள பார்த்தப்ப ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு வந்தது போல, அதே  ஈர்ப்பு அவளோட கண்கள் பார்க்கும் போதும்  எனக்குள்ள உருவாக ஆரம்பிச்சிடுச்சு…..

அப்படி அப்பவே என் மனசுல அவள் இடம் பிடிக்கலனா….நிச்சயம் அவளோட கண்ணீர தொடைக்கிறதுக்காக, நான் அவள் கழுத்துல தாலிய கட்டி இருக்க மாட்டேன்….

அது தாலிதான் அப்படி என் மனசு எண்ணுது… 

ஆனா அவளோட மனசு அப்படி சொல்லல்ல…. அது நிச்சயம் எனக்கு கோவம் தான்…. எந்த ஒரு பீலிங்கும் அவளோட மனசுல இல்லையா…. இல்ல வேண்டாம் அவள பத்தி நினைக்க வேண்டாம்… 

இப்போ இழையினி கல்யாண பெண்… அவளே விருப்பபட்டு நிற்கும்பொழுது, இதுக்குமேல நான் என்ன செய்ய… நடந்த விஷயம் சொல்லி அவள கல்யாணம் முறையா பண்ற உரிமை எனக்கு இருக்கு…

ஆனா அப்படி செய்தா… எத மறைக்க நான் இது பண்ணினேனோ, அதையே சொல்லும்படி ஆகும்… அதுவும் வேண்டாம்….

நான் தாலி கட்டின அவள் கழுத்துல, வேறு ஒருத்தன் கட்டிறத என்னால பார்க்க முடியாது…. இதுக்கு மேல நான் இங்கு இருந்தா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது… சோ ஐ ஹேவ் டு ஸ்டார்ட்….” என்று இவ்வாறாக அவனது மனம் எண்ணமிட்டது….

 

அவன் முடிவெடுத்த அடுத்த நொடி அதை அவன் செய்யல் படுத்தவும் துணிந்து விட்டான்… அவன் கிளம்ப எத்தனித்த நேரம் சரியாக மகிழன் அலைந்து திரிந்து வேர்க்க, விருவிருக்க வந்து சேர்ந்தான்…. மகிழனிடம் ஆதவன், “மகிழ், இப்ப நம்ம கிளம்புறோம் டா… வேதா அம்மாகிட்ட சொல்லிட்டு….” என்று கூற மகிழனோ மனதினுள், “நம்மள டம்மி பீசாவே வச்சுருகான்…இப்ப தான் நம்ம மயிலுக்கு சிலம்பு வாங்கிட்டு வந்தேன்… அதுக்குள்ள கிளம்ப சொல்றான்…” என்று எண்ணியவரே..”ஏன் நண்பா… எதுக்காக கிளம்ப சொல்ற…? வேதா அம்மாகிட்ட சொல்லிட்டியா?” என்று கேட்டுவிட்டு, “ஐயோ வேதா அம்மா… நிச்சயம் இதற்கு சரி சொல்லக்கூடாதே…. பிள்ளையார் அப்பா…உனக்கு நம்ம அய்யா சாமி கடையில இருந்து பத்து லட்டு, முழுசா பத்து லட்டு வாங்கி உனக்கு படைக்கிறேன்… பத்தா…? அவ்ளோ போய் வச்சா வேஸ்ட் ஆகிடாது… சரி அதுல அஞ்சு நம்ம எடுத்துக்கலாம், அஞ்சை மட்டும் பிள்ளையார் க்கு கொடுத்திடலாம்…. அட அப்ப கூட மீதியும் வேஸ்ட் ஆகுமே…சரி ஒன்பதே ஒன்பத நம்ம வச்சுக்கலாம்…. பட் அந்த ஒரு லட்ட… வினையாகருக்கே முழுசா எந்த பங்கும் கேட்காமல் அப்படியே அவருக்கே கொடுத்திடலாம்…. ” என்று வேண்டுதலும், பேரமும் வைத்துக்கொண்டு இருந்தான்….

அவனது லட்டு லஞ்சம் வினையாகருக்கும் கேட்டுவிட்டதோ, அந்த நேரம் சரியாக வேதா அம்மா, அங்கே வந்தார்…. “என்ன ஆதவா, மணி பத்து ஆச்சு… அழைப்பு-க்கு வந்த எல்லாரும் கிளம்பிட்டாங்க… நெருங்கிய சொந்தம் மட்டும் தான் இருக்கு… முகூர்த்தம் கோழிப்பிட வெள்ளனமா… அதுனால உன் சித்தப்பா மாப்பிள்ளை வீட்டு நெருங்கிய சொந்தங்கள இங்கயே தங்க சொல்லிட்டாரு… உன் சித்தப்பா நண்பர், அதான் பா பொண்ணோட அப்பா அவரும் ரொம்ப வற்புறுத்தி, இந்த நேரத்துல எதுக்கு திருச்சி க்கு விராலிமலை க்கு அலைஞ்சுகிட்டு அப்படின்னு ஒரே உபசரிப்பு…. உன் அப்பாவும் நானும் சரி சொல்லிட்டோம்…. மாடி அறையில உனக்கும் மகிழன்க்கும் அறை ஒதிக்கி இருக்காங்க… அதை சொல்லத்தான் வந்தேன்…..” என்று வேதா கூற, ஆதவனோ அமைதியாக நின்றான்….

“என்னப்பா…?” என்று வேதா கேட்க, ஆதவனோ அவன் கிளம்புவதாக கூறி, “அம்மா எனக்கு முக்கியமான வேலை இருக்கு… அதோட நம்ம மகிழ் க்கு உடம்பு முடியலை..அது தான் நாங்க கிளம்புறோம்…” என்று கூற மகிழனோ மனதினுள், “என்னாது எனக்கு முடியலையா…இது எப்ப இருந்து… சொல்லவே இல்ல… நம்மள இங்க இருந்து கிளப்பாமா விடமாட்டான் போலயே…” என்று எண்ணமிட்டான்.

ஆனால் ஆதவன் சொன்னதை வேதா அம்மா ஒப்புக்கொள்ளவில்லை…அதே போல ஆதவனும் அவன் சொல்லில் இருந்து மாறவில்லை.  இறுதிமுடிவாக அவன் கிளம்புவதாக மகிழனை இழுத்து சென்று அவனுக்காக ஏற்ப்பாடு செய்யப்பட்ட அறையில் வேதா அம்மா வைத்திருந்த அவனது உடமைகளை எடுத்துவிட்டு, குளியிலறையில் சென்று முகம் கைகழுவ போக, வேகமாக மகிழன் எதையோ யோசித்து அவனுக்குள் சிரித்துக்கொண்டான்…. அவன் சிரிப்பின் அர்த்தம் அவன் மட்டுமே அறிந்தது அந்த நொடியில்…..

வெளியில் வந்த ஆதவனை, எதற்காக உடனே கிளம்பவேண்டும் என்று அவன் கூறுகிறான் என்று மகிழன் வற்புறுத்தி கேட்க, இதுவரை அவனுக்கு மட்டுமே விஷயத்தை ஆதவன் மேலோட்டமாக இழையினியை பற்றி கூற, இப்போது மகிழன் உண்மையாகவே வருத்தப்பட்டான்… “சரி நண்பா கிளம்பலாம்…” என்று மகிழனும் ஆதவனுக்கு துணையாக நின்றான்……

மறுநாள் காலை, அதிகாலை முகூர்த்தம்….

கல்யாண வீட்டிற்கே உரிய பாணியில் கலையோடு, மாவிலை தோரணத்தோடும், சமைக்கப்படும் உணவின் மணத்தோடும், கட்டப்பட்டிருந்த குலை தள்ளிய வாழை மரத்தோடும், ஒலிபெருக்கியில் ஒலிப்பரப்பான சினிமா பாடல் சத்தத்தோடும், உறவினர்களின் வருகையோடும், குழந்தைகளின் குதூகலத்தோடும் கல்யாண வீட்டினரின் பரபரப்போடும் அழகா விடிந்தது….

அதிகாலை 6.30 க்கு முகூர்த்தம் இருக்க, ஆதவனை கண்களால் துலாவியபடி அலகரிக்கப்பட்ட பதுமை போல…அரக்கு சிவப்பு நிற பட்டுடுத்தி, ரோஜா இதழ் கொண்டு செய்யப்பட்ட கூந்தல் அலங்காரம் அவளை தேவதையாக காட்ட, பெரிய கற்சிமிக்கி காதில் ஆட, இலை இலையாய் கோர்க்கப்பட்ட வெள்ளை கல் மாட்டில் காதோடு பொருந்தி இருக்க, லேசான ஒப்பனையோடு, தீட்டப்பட்ட மைவிழியோடு, ஆனால் மை நிறைந்த கண்களில் சந்தோசம் இல்லாது, ஆதவனுக்கான ஒரு தேடலோடு நடந்து வந்தாள் இழையினி.

அவளது மனம் முழுதாக முருகனிடம் சரண் அடைந்தது…. “என் கழுத்துல ஒருமுறை தாலி ஏறிடுச்சு… இப்ப எனக்கு வேறு ஒருத்தரோடு கல்யாணமாம்… என் கழுத்துல அதை கட்டினவருக்கு, இது கல்யாணம் போல நினைக்க தோனல போல… அவர் தான் சொன்னாரே… அவருக்கு காதலி இருக்கிறதா… முருகா… எனக்கு எது நடந்தாலும் அது உன் பொறுப்பு… ஒரு வேளை என் கழுத்துல இரு தாலி ஏறுறதுதான் என் விதியா….? ” என்று அவள் மனம் கூக்குரல் இட்டது. 

மறுபுறமோ மணமகனான ஆரியனோ, உற்சாகமாக தனது திருமணதிற்கு தயார் ஆகி இருந்தான் மணமகள் வருகைக்காக காத்திருந்தான்…. இழையினி அழைத்துவரப்பட்டாள்…. கண்களில் கண்ணீர் திரை படர, நெஞ்சம், கூண்டில் அடைப்பட்ட புறாவாக படபடக்க, இழையினி தலை கவிழ்ந்து அமர்ந்திருக்க… அய்யர் ‘கெட்டிமேளம் கெட்டிமேளம்’ என்று கூற, மேளதாளங்கள் முழங்க இரண்டாவது முறையாக இழையினியின் கழுத்தில் பொன் தாலி கொண்ட மஞ்சள் நாண் ஏறியது…. சுற்றம், சொந்தம், பெரியவர்கள் புடை சூழ, அக்ஷதைகள் இழையினியின் மீது தூவப்பட… இனிதாக திருமணம் நிகழ்ந்து முடிந்திருந்தது….

Advertisement