Advertisement

மயிலிறகு– 8

கொழுந்து வெற்றில்லை, கருசிவப்பு நிறத்தை தோற்கடிக்கும் கொட்டை பாக்கும், ஒரு ரூபாய் அளவு பொன் காசுகள் வைத்த தாம்பூலம், இழையினியின் கண்முன்னே நிச்சய தாம்பூலமாக மாற்றப்பட, உறைந்த உறைபனியாய்  அமர்ந்திருந்தாள் அந்த பனிமலர்.

 

சிறு சிறு இதயங்களாக

பச்சை நிறத்தை கொண்டிருந்த இலைகள்,  

அடுக்கப்பட்டது தாம்பூலத்தில்,

வெற்றிலை என்னும் பெயரில்….  

 

அச்சிறு சிறு இதயங்கள்

இரு தாம்பூலத்தில் மாற்றப்பட

அத்திருமணத்தை ஏற்க போகும்

மணமகளின் இதயமோ துயரத்தில் நழுவியது….

 

                                                                      — ராசி

 

இதழாவும், இழையினியும் வீட்டிற்கு வந்து சேர, சரியாக இழையினியின் அன்னை அவளை பின்கட்டு வழியாக அழைத்து சென்று ஒரு பட்டுப்புடவையை கொடுத்து மாற்ற சொல்ல, இழையினி விவரம் கேட்கும் முன் பாக்கியத்தின் விஜயம் அவ்விடம் நிகழ, இழையினி மௌனதாரகையாய் உருமாறினாள்.

 

இழையினி மனதில், “பொண்ணு பார்க்க வந்திருக்காங்க… ஆனா நான் அப்பா கிட்ட பேசணுமே… நிச்சயம் பேசிடுவேன், ஆனா எப்படி… ” என்று சிந்திக்கும் பொழுதே இரு பெண்மணிகள் இழையினி மற்றும் இதழாவின் அறையில் நுழைய, கேள்வியாக இழையினி அவர்களை பார்த்தாலும், அவளது உதடுகளோ அவர்களை வரவேற்கும் முறையாக ‘வாங்க’ என்ற சொல் அவள் அறியாமலே வந்தது.

 

வந்தவர்களோ இழையினியிடம் பொதுவாக பேச, அதற்கு பதில் கூறியவள், மனதினுள் ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டு இருந்தாள்.

அப்போது, “புடவை எல்லாம் மாத்த நேரம் இல்ல டா… நல்ல நேரம் முடியும் முன் கீழ போகணும், அப்படியே வா மா… ” என்று ஒரு பெண்மணி அழைக்க, பாக்கியமும், மரகதமும் இழையினியுடன் நடக்க, இதழா அறையிலே தங்கினாள்.

 

அங்கு ஒரு சிலர் குழுமி இருக்க, ஒப்பனை இல்லாது, சுடிதாரில் வந்தபோதிலும் இழையினி கண்ணனுக்கு நிறைவாய் இருக்க, குழுமி இருந்தவர்கள் நிறைவாய் ஒரு பார்வை பரிமாற்றத்தை பகிர, இழையினியின் கண்கள் அவசரமாக தனது தந்தையை தேடி அலைந்தது.

 

அதை கண்டுக்கொண்ட ராகவனோ, இழையினியிடம் ஒரு புன்னகையை சிந்த, மாப்பிளையின் தந்தை, பெண்ணின் சம்மதத்தை கேட்க, ராகவனோ “என் பொண்ண கேட்காம நான் எதுவுமே செய்யமாட்டேன்… பாப்பாவோட முழு சம்மதத்தோடு தான் உங்கள இங்க வரவே சொன்னேன்… ” என்று கண்களில் பெருமை பொங்க கூற இழையினி குழப்பத்தில் சிக்கி தத்தளித்தாள்.

 

“பொண்ண அருமையா வளர்த்திருக்க டா… பொண்ண பெற்றா, உன்னை போல தான் வளக்கணும்… என் பையனுக்கு உன் பொண்ண எடுக்குறதுல எனக்கு ரொம்ப சந்தோசம்… அம்மாடி பையன் இன்னைக்கு வரமுடியல, உங்க அப்பா கிட்ட போட்டோ கொடுத்திருக்கேன்… ” என்று கூற, இழையினி எதுவும் கூறாமல் தலையை குனிந்துக்கொள்ள, யாரோ ஒரு பெண்மணி, “பெண்ணிற்கு வெக்கம்” என்று கூற, அனைவரும் சிரிக்க, அடுத்த ஓரிரு நொடிகளில் தாம்பூலம் மாற்றப்பட்டது.

 

பெண் பார்க்கும் படலம் என்று இழையினி நினைத்திருக்க, தாம்பூலம் மாற்றி இழையினியின் மனதில் இடியை இறக்கிய ஒரு சில நொடிகளில் அடுத்த அம்பு அவளது நெஞ்சில் தைக்க தொடங்கியது.

 

திருமணம் இன்னும் 3 தினங்களில்…. இழையினியின் வீட்டில் தான் திருமணமாம்… தந்தையின் நண்பர் தான் மாப்பிளையின் அப்பாவாம்… திருச்சி தான் அவர்களது பூர்வீகம். மாப்பிள்ளை சென்னையில் படிப்பை முடித்து, அங்கேயே பணிபுரிபவர்… ஆனால் திருச்சியில் சொந்தமாக தொழில் தொடங்கவிருக்கிறாராம்…. அதன் பிறகு திருச்சியிலே நிரந்தரமாக இருப்பாராம்… பெயர் ஆரியன். இவை அனைத்தும் தான் இழையினிக்கு கூறப்பட்ட செய்திகள்.

 

மூன்றே நாட்களில் திருமணம் என்பதால், ராகவனுக்கு வேலை ரெக்கைகட்டி பறக்க, இழையினியை சுற்றி எப்போதும் உறவு வளையங்கள் இருந்துக் கொண்டே இருந்தன. அவளது மனம், சூறாவளியில் சிக்கிக்கொண்ட சிறு இலை போல் காற்றோடு சுழன்றுக் கொண்டு இருந்தது. தந்தையை தனித்து பார்த்து பேசும் சந்தர்ப்பத்தை இழையினி உருவாக்க முயல, அந்த முயற்சி மறுநாளே வெற்றிப்பெற்றது….

 

“சொல்லு பாப்பா…அப்பா-வ விட்டு போகணுமேன்னு வருத்தபடறியா…” என்று கேட்டபடி அவளது தலையை ஆசையாக வருட, இழையினியோ மெதுவாக தன் தந்தையிடம் “அப்பா.. எனக்கு உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்… அது வந்து கல்யாணத்த பற்றி… ” என்று அவள் இதழ்கள் மெதுவாக முணுமுணுக்க, அந்த நேரம் சரியாக பாக்கியம் அங்கு வந்து சேர்ந்தார்.

 

அவர் வந்ததிலிருந்து மூன்று நாட்களாக ஏதேனும் பிரச்சனை வருமா…அப்படி வந்தால், பெண்ணை பற்றி தவறாக பேசி, இந்த கல்யாணத்தில் ஏதேனும் குழப்பம் விழைவிக்க இயலுமா என்று கழுகு பார்வை கொண்டு அவ்வீட்டை பாக்கியம் வட்டமிட, இழையினி-யின் அமைதியை கண்டு உள்ளத்தில் உவகை கொண்டார். அவளது பெற்றோரும், தங்கையும் வீட்டை இத்தனை சீக்கிரம் பிரிந்து செல்லவதே இழையினியின் மௌனத்திற்கு காரணம் என்று எண்ண, பாக்கியமோ, இதில் அவரது விளையாட்டை நடத்த முடுவெடுத்து இழையினியை கண்காணித்துக் கொண்டே இருந்தார்.

 

ஆதலால், தன் தந்தை தனியாக இருப்பதை அறிந்து இழையினி அவரை நாடி செல்ல, பாக்கியம் இழையினியை பின்பற்றி சென்றார். இழையினியின் கெட்ட நேரமோ, அல்லது பாக்கியத்தின் நல்லநேரமோ, இழையினி கூறியது, அவரது காதில் விழவே, வேகநடையுடன் அவர்களிடம் முன்னேறினார் பாக்கியம்.

 

“அப்பா… அது வந்து, அங்க கோத்தகிரில….” என்று தொடங்க, சரியாக பாக்கியம் இடைபுகுந்தார்…. “ஹ்ம்ம் சொல்லு கண்ணு… கோத்தகிரில எதுவும் பையன பார்த்தியா… அவன பத்தி உன் மனசுல ஆசை வளர்த்துக்கிட்டியா..? தயங்காம சொல்லு கண்ணு” என்று குரலில் பணிவையும், வார்த்தையில் விஷத்தையும் வைத்து பாக்கியம் கேட்க, பின்னோடு இதழாவும், மரகதமும் வந்து சேர்ந்தனர்….

 

அவரது குரலில் திடிக்கிட்டு இழையினி திரும்ப, அவளது தங்க சங்கலியின் ஊடே மெலிதாக சிக்கிக்கிடந்த மஞ்சள் கயிறு அவர் கண்ணில் பட்டுவிடவே அவரது மனமோ, “அட நேத்து இருந்து, இந்த ஊமைக்கொட்டான் கூட தானே இருந்தேன், இது என் கண்-ல படவே இல்லையே… ” என்று எண்ணமிட்டப்படி, “அட இழையினி, கல்யாணமே பண்ணிக்கிட்டு வந்துட்டியா… அட கொடுமைய பாரேன்…

 

உங்க அப்பன்தான் உசுரு-னு சொல்லுவ, அவன்கிட்ட சொல்லாம கொள்ளாம கல்யாணமே பண்ணிக்கிட்டியா? , அட இது என்ன டி அதிசயமா  இருக்கு.

 

ஊருல இல்லாத மகராசிய பெத்து வச்சுருகிறதா, பெருமை பேசுவியே, அந்த பிள்ள பண்ணி இருக்கிற வேலைய பார்த்தியா…

 

இதுக்கு தான் பொட்ட கழுதைய படிக்க வைக்காத, காலம் பொழுது இருக்கும் போதே என் சிங்க குட்டிக்கு கல்யாணம் முடிக்கலாம்னு சொன்னேன்…கேட்டிய.. உன் தலைல மண் அள்ளி போட்டுட்டாளே பாவி மவ, அவ வாயில மண் விழ” என்று அவர் பாட்டுக்க வசனம் பேச, அவர் பேசுவதை கேட்டு திடுக்கிட்டு பேசமுடியாமல் இழையினி ஸ்தம்பிக்க, மரகதமோ திகைத்து நிற்க, இதழாவின் குரல் ஓங்கி ஒலித்தது….

 

“நிறுத்துங்க… ஏதோ அத்தை ஆச்சேன்னு பார்க்குறேன்… எங்க அக்காவ பத்தி உங்களுக்கு என்ன தெரியும்… அவ கழுத்துல இருக்கிறது நோம்பு கயிறு… வேண்டுதல் வச்சு கட்டி இருக்கா…” என்று இதழா கூற, ராகவனோ அனைவரையும் பொறுமையாக இருக்கும் படி செய்கை செய்தார்.

 

“அக்கா” என்று அழுத்தமாக, பாக்கியத்தை அழைக்க, அவர் கொடுத்த அழுத்தத்திலே அனைவர்க்கும் தெரிந்தது அவரது கோவத்தின் ரூபம்.

அந்த குரலில், பாக்கியம் சற்று நடுங்க தான் செய்தார் ஆகினும், இந்த திருமணம் நல்ல முறையில் நடக்கவிட கூடாது என்ற எண்ணத்தில் அதை வெளிக்காட்டாமல் சாதரணமாகவே நின்றார்.  

 

“என் பொண்ண பத்தி எனக்கு தெரியும்… அவளோட வார்த்தைய கேட்காம நான் எந்த முடிவும் எடுக்கல. என் பொண்ணு என்கிட்டே எதையும் மறைக்கமாட்டா… ஏதோ கயிறுன்னு சொன்னீங்களே…? அது நோம்பு கயிறு-னு சொல்ல என் சின்ன பொண்ணு சாட்சிக் கூட தேவை இல்லை.

 

என் பொண்ணு, என்கிட்டே தும்மல் வந்தாக் கூட சொல்லிடுவா… அவளுக்கு வேற ஒரு பையன் மீது விருப்பம் வந்தால் , நிச்சயம் அந்த பையன்க்கிட்ட சொல்றதுக்கு முன், என்கிட்டதான் என் பொண்ணு சொல்லி இருப்பா… நானும் நிச்சயம் சம்மதம் சொல்லி இருப்பேன்….

 

ஆனா என் பொண்ணு மனசுல எந்த காதலும் இல்லை, எதையும் என்கிட்ட மறைக்கிற தையிரியமும் கிடையாது…

 

அப்படி அவ மனசுல ஏதாச்சும் இருந்தா, நிச்சயம் என் பொண்ணு சபைல நிண்ணுருக்கமாட்டா… அப்படி நிரஞ்ச சபைல அமைதியா இருந்திட்டு, பின்னாடி வந்து என் கழுத்தருக்கவும் மாட்டா…

 

என் பொண்ண பத்தி இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனா, நிச்சயம் இத்தனை நாள் விட்டது போல, உங்கள சும்மா விடமாட்டேன்….” என்று அடிக்குரலில், நிறுத்தி நிதானமாக, அதே சமயம் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து கூற பாக்கியத்துக்கு அவரது திட்டம் தவிடு போடி ஆனாதில் சர்வமும் அடங்கிற்று.

 

ஆயினும், தம்பி பேசியதிற்கு குறைந்தபச்சமாக அவர்களுக்கு மனக்கலக்கத்தையாவது கொடுக்க எண்ணமிட்ட பாக்கியம், “இல்ல தம்பி…. இப்ப ஏன் கோவப்படுற… ” என்று எதுவுமே நடவாதது போல கேட்க, இப்போது பொங்குவது மரகதத்தின் முறையானது.

 

“அண்ணி.. போதும், இதுவரைக்கும் நான் எதுவும் உங்கள பேசியது இல்லை… ஆனா என் பொண்ண பற்றி பேசுனா, நான் அதே போல இருக்கமாட்டேன்….” என்று மரகதம் குரலை உயர்த்தாமல், அதே சமயம் இறுகிய குரலில் கூற பாக்கியத்திற்கு உள்ளூர கோவம் துளிர்விட்டது.

 

“என்ன மரகதம்… ஆளு ஆளுக்கு பேசுறீங்க.. என் தம்பி முகத்திற்காக தான் சும்மா இருக்கேன் … இதோ நேத்து பொறந்த இந்த புள்ளலாம் என்ன கை நீட்டி பேசுது” என்று இதழாவை கை காட்டி கூறிய பாக்கியம், அவரே மேலும் தொடர்ந்து, “இங்க இருக்க அத்தனை பேரும் என்கிட்டே பேச வருஞ்சுக்கட்டி வரீங்களே… இதோ இங்க குத்துக்கல்லாட்டம் நிக்கிறவ வாய தொறந்தாளா ?

 

ஏன் அமைதியா இருக்கா? அப்ப அவ மனசுல ஏதோ குத்தம் இருக்குதுதானே…

 

இத்தன வருசமா தலை நிமிர்ந்தது நடந்த என் தம்பி, நிச்சயம் இவளாள தலை குனிய போறான் இந்த கல்யாணத்துல

 

ஊமை ஊர கெடுக்குமாம்… இதோ நிக்கிறாளே, நிச்சயம் இவ என் தம்பி க்கு ஏதோ பெரிய அவமானத்த தர போறா.. அப்ப தெரியும்… ஊரே காறித்துப்ப அசிங்கப்பட்டு போவீங்கடா…” என்று நல்ல பாம்பின் விஷத்தை விட கொடிய நஞ்சு வார்த்தைகளை பாக்கியம் துப்ப, ‘தந்தை’ என்ற சொல் இழையினிக்கு மந்திரமாய் ஒலித்தது.

 

அதே நேரம், பாக்கியம் கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே, ராகவனை பார்க்க வந்த அந்த ஊர் பெரியவர்கள் காதிலும் பாக்கியத்தின் வார்த்தைகள் விழ, பேச்சு வார்த்தையின் முழு சாரமும் புதிதாக வந்தவர்களுக்கு புரியாவிட்டாலும், இழையினிக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லையோ என்று அவர்களை எண்ணவைத்தது.

 

அவர்கள் ராகவனை பார்த்து ஏதோ தங்களுக்குள் முணுமுணுக்க, அது இழையினியின் கண்களுக்கு தப்பவில்லை.

 

அவளது குழப்பங்கள், அவளது நிலை, அவளது கழுத்தில் இருந்த அந்த மஞ்சள் நாண், எல்லை சாமி கோவில் சாட்சியாய் முன் பின் அறியாதவன் தாலி என்று கட்டியது, என்று அனைத்தையும் ஒரு நிமிடம் மறந்தாள். இல்லை நினைக்கவே கூடாது என்று பிடிவாதமாக தள்ளி வைத்தாளோ… அவள் அறியாள். அவளை பற்றி தவறாக பேசிய போது துடிக்காத அவள் நெஞ்சம், அவளது தந்தைக்கு ‘அவமானம்’ என்ற சொல்லில், துடிக்க வேண்டிய நெஞ்சம் துடிப்பதற்கு பதிலாக வெடித்து சிதறியது….

 

தன்னை விடவும், ஏன் இந்த உலகத்தில் எதை விடவும் உயர்ந்தது அவள் தந்தையே… பாக்கியம் கூறிய வார்த்தைகள் அவள் உணர, தணல் மீது நிற்பது போல அவள் பூவுடல் தகிக்க ஆரம்பித்தது.

 

இத்தனை நேரம் அமைதியாய் கிணற்று நீராய் இருந்த இழையினி, புயல் சீற்றம் கொண்ட கடல் நீராய் மாறினாள்.

 

“அத்தை போதும்… என் அப்பா -க்கு அவமானம் வருவது போல எந்த ஒரு விஷயத்தையும் நான் எப்பயும் செய்யமாட்டேன்…. அப்படி செய்யவேண்டிய நிலைமை வந்தா என் உசுர விட்டாலும் விடுவேனே தவிர்த்து எங்க அப்பா க்கு தலை குனிவு வராது….

 

அவரு யார சொல்றாரோ அவரை கல்யாணம் பண்ணிப்பேன்…” என்று  இழையினி, கோவம் அப்பட்டமாக வெளிப்படும்படி கூற, பாக்கியத்தின் முகம் சுருங்கி போயிற்று.

 

புதிதாய் வந்தவர்கள் அதை கேட்டு, மற்றவர்களுக்கு கேட்கும் படி, “எனக்கு அப்பவே தெரியும்.. நம்ம ராகவன் வளர்ப்பு தவறா போகாதுனு… இந்த அம்மா க்கு வேற வேலையே இல்ல, தன் மகனுக்கு கட்டிக் கொடுக்கலன்னு இப்படி பேசுதுன்னு… ” என்று கூற பாக்கியம் எதுவும் கூறாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து செல்ல, ராகவனோ மகளின் அருகே வந்து, “பாப்பா.. என்ன வார்த்தைடா சொல்லிட்ட.. இனி ஒருமுறை உசுர விற்றுவேனு எந்த சூழலிலும் சொல்லக் கூடாது. என் பொண்ண நான் அவ்வளவு கோழையா வளர்க்கலன்னு நம்புறேன்.. ” என்று கூறி, இதழாவிடம், இழையினியை பார்த்துகொல்லுமாறு கண் அசைவில் உணர்த்திவிட்டு, வந்த புதியமனிதர்களை நோக்கி விரைந்தார்.

 

அடுத்த இரண்டு நாட்களும் மின்னலின் வேகத்தில் நகர்ந்திட, இழையினிக்கு பட்டு, நகைகள் வாங்குவது, மாலை, மலர் அலங்காரங்கள், சாப்பாடு, திருமண பத்திரிகை அடித்தல், நேரில் சென்று அழைத்தல் என்று ஆளுக்கொரு வேலை கவனிக்க, இழையினிக்கு மனதினுள் மகிழ்ச்சி மொத்தமாக வடிந்துவிட்டது.

 

அதே நேரம் இந்த இரு நாட்களில், அவள் அந்த மஞ்சள் நாணையும், அவன் இட்ட பொன் சங்கலியையும் கழட்டவும்  இல்லை. அவள் மனதிற்கு இந்த திருமண ஏற்பாடு உவகை தரவில்லை. அவளது கழுத்தில் இருந்த மஞ்சள் நாண், நித்தமும் அவளுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்று உணர்த்த, அவளது அறிவோ அவளிடம், “அவன் யார் என்றே தெரியாது.. ஒருமுறை தான் பார்த்த, என்னனு சொல்லுவ… யார்கிட்ட போய் கேட்ப. உன்னோடது திருமணமே இல்லை. அப்படியே நீ இத திருமணம் னு நம்பினா கூட, இது திருமணமா இருந்தா கூட, இதை கட்டினவனும் உனக்கு யாருன்னு தெரியாது.. அதோட அவனுக்கு காதலி இருக்கிறதா சொன்னான். உனக்கு நினைவு இருக்கா…? ” என்று அவளிடமே கேள்வி கேட்க, இழையினி முழுதாக குழம்பி போனாள்.

அவளுக்கு, அவள் இப்போது என்ன செய்யவேண்டும் என்று அவளுக்கே புரியவில்லை. அவள் அறிந்தது ஒன்று தான்…. அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. அதற்கு காரணம், பெயர் தெரியாத அவனும், அவன் கண நேரத்தில் கட்டிய மஞ்சள் நாணும்.

 

யாரடா நீ ?

 

யாரென்று தெரியாத நீ

என் கணவனாம்!

என் இதயம்

இப்படி தான் சொல்கிறது;

என்னிடம் மட்டும்

 

உன்னை வெளியில் சொல்ல

என் இதயத்திற்கு

உன் முகவரி தெரியாது

ஆதலால் தான் என்னைமட்டும்

கொள்கிறது மெல்ல மெல்ல

 

                           — ராசி

 

இன்னும் மூன்று மணிநேரத்தில் மாலை வரவேற்பு,  விடிந்தால் திருமணம், இழையினி அருகினில் மெல்ல இதழா வந்தாள்….

 

“அக்கா… நீ, நம்ம போயிட்டு வந்தது இருந்து நீ நீயாகவே இல்ல… எனக்கு புரியிது, கல்யாணம் பண்ணி அப்பாவை விட்டு பிரியிற கலக்கத்துல நீ இருக்க, இந்த லூசு கிழவி ஏது ஏதோ பேசி உன்ன கஷ்டபடுத்திருச்சு… ஆனா அதுக்காக நீ ரெண்டு நாளா, இப்படி அமைதியா இருக்கணும்னு இல்லைக்கா… ப்ளீஸ்.. எனக்காக, பழையபடி கலகலப்பா இரு அக்கா…” என்று இழையினியின் கைகளை பிடித்தபடி இதழா கேட்க, இழையினிக்கோ குற்ற உணர்ச்சி மேலிட்டது.

 

கவலை என்றால் என்னவென்று அறியாத இதழா, இன்று கவலையுடன் பேசுவதற்கு காரணம், தான் தான் என்ற உணர்வு இழையினியிடம் தோன்ற, இழையினி வெளிக்கு சகஜமாக பேச முயன்று அதில் ஓரளவு வெற்றியும் கண்டாள்.

 

அடுத்த முப்பது நிமிடங்களில், இதழாவின் ஏற்பாட்டில் அழகு நிலைய பெண்கள் வர, இழையினி தனது வாழ்க்கையை முழுதாக , கடவளிடம் விட்டுவிட்டு, அலங்காரம் செய்துக்கொண்டாள்…..

 

உள்ளம் நிறைய குழப்பங்களும், வேதனையும் நிறைந்திருக்க, அவ்வற்றை மறைக்க, தலை நிறைய மல்லிகையையும், உதடு முழுக்க புன்னகையையும் பூசிக்கொண்டாள்.

 

வரவேற்பின் ஆரம்பமாக, பெண்ணின் கையில் குத்துவிளக்கை கொடுத்து, அருகிலிருக்கும் கோவிலிற்கு சென்று வழிப்பட்டுவிட்டு, பின்பு அந்த குத்துவிளக்கை ஏந்தியபடி, திருமணம் நிகழும் அவளது வீட்டிற்கு வரவேண்டும். அவளுடன், உறவுகளும், நடப்புகளும் சேர்ந்துக்கொள்ள, குடும்பம் படை சூழ இழையினி கோவிலிற்கு சென்று வணங்கிவிட்டு, அவளது வீட்டை நோக்கி முன்னேறினாள்.

 

அனைவரது கல்யாண கேலி கிண்டலுக்கு, அமைதியாக அவர்களுடன் வந்தவள் தலையை குனிந்துக் கொண்டு வெக்கம் என்ற போர்வையில் அவர்களை சமாளித்து வந்தாள்.

 

அவள் கோவில் சென்று இருந்த வேலை, மாப்பிளை வீட்டினர் வந்திருக்க, மாப்பிளையை அவனது பாலிய நண்பர்கள் வாசலுக்கே அழைத்து வந்து மணமகளின் வரவிற்காக காத்திருந்தனர்.

 

தலை குனிந்தபடி, இழையினி தலைய தலைய பட்டுடுத்திவர, வாசலை அடைந்தவளுக்கு முன் சில பெண்மணிகள் ஆலம் கரைத்து எடுத்துவர, ஒரு சில சடங்குகள் செய்யப்பட்டது. ஆலம் சுற்றி, அவளுக்கு சிறு கீற்று போல் குங்குமிட, பழக்கத்தில் கண்களை மூட அப்போது அவளுக்கு வெகு அருகில், அவளது பள்ளி தோழிகள் அவளிடம், “ஹே … இதோ பாரு டி … மாப்பிளை உன்ன பார்க்க, வாசலுக்கே வந்துட்டாரு..” என்று குரல் கேட்க, அதே சமயம் மூடிய இமைய, சிப்பி போல் இழையினி திறக்க, எதிரில் இருந்தவனை கண்டு, அவளது இமைகள் அளவுக்கதிகமாக விரிந்தது.

அங்கு மணமகன் இடத்தில் நின்றுக்கொண்டிருந்தது…. ஆதவனே

 

Advertisement