Advertisement

 

மயிலிறகு – 7

 

நீண்ட குச்சியில் சுருட்டப்பட்டிருக்கும் சிறு இளஞ்சிவப்பு மேகம் போல் இருக்கும் அந்த காட்டு  மரத்தில் மலர்ந்த மஞ்சள் பூ, பார்ப்பதற்கு, நெருங்க காற்று போகும் வழி கூட இல்லாது பூத்திருந்தது…..அந்த மஞ்சள் நிற பூக்களின் கூட்டத்தை பார்க்கும் போது அடர்மஞ்சளிலும் பஞ்சுமிட்டாய் இருக்கிறதோ என்ற பிரம்மை ஏற்படும் பார்ப்பவர்களுக்கு…

அத்தகைய மலர், அதன் சிறு சிறு இதழ்களை, அம்மரத்தின் கீழ் நின்ற இழையினி மீது உதிரவிட்டபடி இருந்தது…..

 

அவளது கைகளிலோ ஆதவன் நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் கட்டிய , வினாடிக்கும் குறைவான நேரத்தில், அதை அவள் கழுத்தில் இருந்து கழட்டி எறியப்பட்ட அதே மஞ்சள் கயிறு இருக்க, அவளது விழிகள் கண்ணீரை உதிர்க்க…. இந்த மஞ்சள் நிற பூக்கள் கொண்ட மரமோ, இழயினிக்கு திருமணம் முடிந்து தூவப்படும் அக்ஷதை போல தனது இதழ்களை உதிர்த்துக் கொண்டு இருந்தது….

மறுப்புறம், ராகவனோ ஜோசியர் கூறிய வார்த்தைகளில் நிலை குலைந்து போனார்… இதே ஜோசியர், இவரது சொத்து முழுக்க பறிபோகும் என்று கூறி இருந்தால் கூட இத்தனை துயரம் கொண்டிருக்கமாட்டார்…. ஆனால் ஜோசியர் கூறியது அவரது செல்ல மகளின் திருமணத்தை பற்றி…

 

“இரு தாலி…. ” அதை நினைக்கும் பொழுதே ராகவனுக்கு அவர் உடலில் சொல்ல முடியாத நடுக்கமும், விவரிக்க முடியாத வேதனையும் சூழ்ந்துக் கொண்டன….

 

மரகதமும் பேச்சற்று நிற்க, பாகியத்திற்கோ சந்தோசம் பிடிப்படவில்லை… ஆனால் அதை இப்பொழுது வெளிக்காட்டுவது முட்டாள் தனம் என்று அறிந்த பாக்கியம் எதுவும் கூறாமல் அமைதிக் காத்தார்….

 

அதே நேரம், விடு விடுவென வேகநடை போட்ட ஆதவன், கடந்த ஒரு மணி நேரத்தில் நிகழ்ந்துவிட்ட விபரீதத்தை எண்ணி அவன் அறையில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்….

 

மறுநாள் பொழுது யாருக்கும் காத்திருக்காமல் அழகாக விடிந்தது…….

 

இரவு வெகுநேரம் கழித்து அழுது வீங்கிய கண்களோடு வந்த இழையினிக்கு, அவள் என்ன உணருகிறாள், எதற்காக அழுகிறாள் என்று எதுவும் தெரியவில்லை….. ஆனால் அவளது மனம் மட்டும் அமைதி இல்லாது தவித்தது. அப்போது தான் அவள் கைபேசி தொலைந்தது நினைவுவர, வேகமாக குடிலை விட்டு வெளியேறி, நேற்று சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தாள். சிறுது நேர தேடலுக்கு பிறகு அவளது கைபேசி கிடைக்க அதை எடுத்துக் கொண்டு வந்தவள், வரும் வழியிலே அவளுக்கு அழைப்பேசி அழைப்பு வர, பொத்தானை அழுத்தி காதுக்கு பொருத்தினாள்.

 

“அக்கா… நான் ரிசல்ட் க்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்… இன்னும் 1 மணி நேரத்துல சரியா அங்க இருப்பேன்… நீ கிளம்பி ரெடியா இரு, வந்ததும் நம்ம கிளம்புறோம் கா… ஆமாம் நீ ஏன் போன் எடுக்கவே இல்ல… கலையில இருந்து உனக்கு மூணு முறை ட்ரை பண்ணிட்டேன்… சரி இரு இரு ரிசல்ட் சொல்றாங்க, ரெடியா இரு டி … ” என்று கூறிவிட்டு போட்டியின் முடிவும் கேட்கும் ஆவலில் இதழா அழைப்பை துண்டித்தாள்.

 

அவள் அப்படி இழையினியின் பதிலை எதிர்ப்பார்க்காது துண்டித்ததுமே இழையினிக்கு அந்த நேரத்தில் நிம்மதி அளிக்கத்தான் செய்தது… நேராக கோத்தர்களின் குடிலை நோக்கி சென்றவள், அந்த மூதாட்டியிடம் அவள் கிளம்பும் செய்தியை பகிர, அவர்களோ அவளை மேலும் இரு நாட்கள் தங்குமாறு அன்போடு கேட்க, இழயினியும் அவர்களின் மனம் நோகாதபடி அவர்களிடம் மறுப்பு தெரிவித்தாள்.  

 

அப்போது தான், இழையினி கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றை கவனித்த மூதாட்டி, “என்ன தாய்… நோன்பு கயிற கழுத்துல கட்டி இருக்கியா… நல்லது நல்லது” என்று கூற இழையினிக்கு அந்த கயிறு அவள் கழுத்தில் வந்த நினைவுகள் நிழலாக ஓட ஆரம்பித்தது.

 

‘அவள் கழுத்தில், இதை கட்டியவன், அக்கயிற்றை கழட்டி எரிந்து சென்றபின், அதை கையில் வைத்து பார்த்தவளுக்கு, ஏனோ அதை தூக்கி எரிய மனம் இல்லை…. அவளது அறிவு இது திருமணம் இல்லை என்று எடுத்துக்கூற, அவளது மனமோ எல்லைசாமியின் முன்னிலையில் கட்டப்பட்ட இந்த மஞ்சள் கயிறு நிச்சயம் திருமணத்தை  தான் பறைசாற்றுவதாய் நம்பியது…

 

அவளது ஆழ்மனது, இந்த  போராட்டத்தில், அந்த மஞ்சள் நாணை அவள் மீண்டும் கழுத்தில் கட்டிக்கொள்ள வைத்தது…

 

யாராவனோ 

இருளில் வந்த மாயவனோ 
மானம் காக்க 
மாலையிட்ட மன்னவனோ 
மயிலாய் தோகைவிரித்து 
நடனமாடிய நங்கையின்
மதியில் குழப்பம் தந்தவனோ 
பார்த்த முதல்நாளிலே 
மூன்று முடிசிட்டவனோ 
முகம் மட்டும் காண்பித்து 
முகவரி மறைத்து சென்ற 
கள்வணவனோ….

— ராசி 

இது திருமணம் தான்… என்றும் இல்லை இது திருமணம் இல்லை என்றும் அவளது மனம் மாறி மாறி சிந்திக்க, நிலை குலைந்து போன இழையினி… நிகழ்ந்த யாவையும் தன் தந்தையிடம் கூற முடிவெடுத்தாள்.

 

அதன் பின்னே தான், சற்று சுய உணர்வுபெற்று குடிலை நோக்கி அவள் கால்கள் நடைப்போட்டன…’

 

அவள் கிளம்ப ஆயுத்தமான அதே நேரம், இளன், ஆதவனது அறைக்கதவை தட்ட, இரவு முழுக்க சிந்தனை வயப்பட்டு லேசாக கண்களில் சிவப்பு ஏறி இருந்த விழிகளுடன் ஆதவன் கதவை திறந்தான்….

 

“அண்ணா… இங்க வாங்க… யாரு வந்திருகிறதுன்னு பாருங்க… நீங்க நம்ம ஷாப் ஆட்-க்கு னு சொன்னதுனால, நானே இவுங்கக்கிட்ட பேசி, சில தகவல் சொல்லி கூப்பிட்டு வந்துருக்கேன்… ” என்று கூறி இளன் கை காட்டிய திசையில் பார்த்த ஆதவன் கண்டது அன்று எல்லை சாமி கோவிலில் கண்மூடி இருந்த பெண் என்று.

 

அவளை ஆதவனது விழிகள் எடைப்போட, அப்பெண்ணும் ஆதவனை பார்வையால் எடைப்போட்டாள்.

 

ஆதவன் – நல்ல உயரம்… உருண்டு திரண்டிருந்த தோள்கள்… சிறு கண்கள் ஆனால் அதில் தீக்ஷண்யமான பார்வை, தலை நிமிர்ந்து கர்வத்துடன் நின்ற தோரணை… அளவான மீசை… உடல் உழைப்பாலே இயற்கையாய் உருவாகி இருந்த கட்டான தேகம்… தமிழனின் பெருவாரியான நிறமாக கருத்தப்படும் கருப்பு க்கு சற்று மேல், மாநிறத்துக்கு சற்று கீழ் உள்ள நிறம்.

 

“அண்ணா… ” என்று மீண்டும் அழைக்க, ஆதவன் வந்தவளிடம் ஒரு வரவேற்கும் சிரிப்பை உதிரவிட்டப்படி அங்கிருந்த சோபாவில் அமர, மகிழனும் ஆதவன் அருகினிலே அமர்ந்தான்..

 

“இவுங்க அவனிக்கா, அன்னைக்கு நீங்க பார்த்ததா சொன்ன பெண் இவுங்க தான்…. நான் கூட அந்த பூஜை-ல காமித்தேனே…. ” என்று முடிக்க ஆதவனது கண்கள் அவனது அனுமதி இன்றி அப்பெண்ணின் பாதத்தை பார்க்க, அப்பெண்ணோ அவள் அணிந்திருந்த கான்வாஸ் ஷூவை கழற்றாமல் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து இருந்தாள்….

 

மகிழனின் மனதோ அவன் கட்டுப்பாடு இல்லாமல் பேச தொடங்கி இருந்தது….

 

‘டே, ஒரு பேச்சுக்கு கதை சொன்னா… இப்படி பொசுக்குனு கூப்பிட்டு வந்திருக்கான்… இவன்கிட்ட சொல்லி நம்ம கூட ஒரு பிகர உஷார் பண்ணலாம் போலவே… ‘ – மகிழன்

 

“அண்ணா … நான் இன்னும் முழுசா அவுங்ககிட்ட சொல்லல…” – இளன்

 

“ஹெலோ ஆதவன்… உங்க ப்ரதர்.. ஏதோ ஆட் சூட் சொன்னாரு… ஆக்சுவலி எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை… பட் உங்க தம்பி அட்லீஸ்ட் ஒன்ஸ் உங்கள மீட் பண்ண சொல்லி ரிக்வெஸ்ட் பண்ணினாரு… சோ ஐ கேம்… ” என்று நுனி நாக்கில் ஆங்கிலம் சரளமாக விளையாட, கொஞ்சும் தமிழ் கலந்து அவனிக்கா பேசினாள்.

 

“வாவ் வாட் எ பிகர்…. என்னமா இங்கிலிஸ் பேசுறா…” – மகிழன்

 

ஆதவன் எதுவும் கூறாமல் ஒரு சில நொடிகள் அமைதி காட்க, அந்த ஒரு சில நொடிகளில் உலகையே சுற்றி வரும் வல்லமை கொண்ட நெஞ்சமோ கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தது….

 

“இவள் தான்… நான் பார்த்த பெண்… இவளை தான் நான் காதலிக்கிறேன் ஆனா இவளுது முகத்தை இப்படி பார்க்கும் பொழுது தோன்றாத ஏதோ ஒன்னு, நேற்று அந்த பெண்ணை பார்க்கும் போது ஏன் தோனுச்சு….

அவ்வளவு ஏன், இப்பெண் நேற்று பார்த்தவளை விட நிச்சயம் அழகு தான்… ஆனால், அவளது முகத்தை மட்டும் பார்க்கும் பொழுது ஏதோ ஒரு உணர்வு…. இவள் பேரழகியே ஆனாலும், என் மனக்கண் முன் அப்பெண்ணே வர காரணம் என்ன

 

இப்ப இந்த அவனிக்கா, பேசும் முறைக்கும், சுடலை அவள் குணத்தை, பேச்சை சொன்ன முறைக்கும் ஏதோ ஒன்னு பொருந்திவரவில்லை…

 

ஆனா இது எப்படி சாத்தியம்… ?

சரி, இவளுடைய பாதத்தை பார்க்கனும்னு முயற்சி செய்தா, இவள் சூ கூட ரிமூவ் பண்ணவில்லையே…

 

நான் லவ் பண்றதா நினைக்கிறது இந்த பெண் தான… ஏன் எனக்குள்ள ஒன்னுமே தோணவில்லையே” என்று பலவாறாக சிந்தித்தப்படியே அவனிக்காவிடம் “ஒகே நோ ப்ராப்லம் மிஸ்.அவனிக்கா… பை தீ வே… உங்களுக்கு இந்த மக்கள் பத்தி நிறைய தகவல் கிடைச்சிருக்கு… உங்களுக்கு சுடலை தெரியுமா….?” என்று பொதுவாக கேட்பது போல் அவளை அறிய முயன்றான் ஆதவன்.

 

“கடலை போட வேண்டிய நேரத்துல என்னடா சுடலைய பத்தி பேச்சு ” – மகிழன் மனதினில்

 

“யா , ஐ நோ ஹிம்… ஹி இஸ் மை கைட்… ” – அவனிக்கா

 

“வாட் ?… அவரு உங்க கைடா…. ” – என்று ஆதவன் குழப்பம் நிறைந்த விழிகளுடன் , அவனிக்காவிடம் கேட்க அவளும் ஆமாம் என்பதாய் தலை அசைத்தாள்.

 

“அப்ப , நம்ம சண்டிவீரர் பார்த்த பெண் இது இல்லையோ… ” – மகிழன்

 

“ஒ அப்ப நீங்க எங்க இருந்து வரீங்க, எதுனால ஆட் சூட் ல இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொல்றீங்க… ” என்று இளன் வினவ, ஆதவனோ ஆழ்ந்த சிந்தனைக்கு போனான்.

 

“ஐ ம் ஒரிஜினலி பரம் பெங்களூர்… இப்ப சென்னை ல படிக்கிறேன்.. எனக்கு திருச்சி ல ஒரு வொர்க் இருக்கு… என் ப்ரெண்ட் என்ன ஒரு 10 டேஸ் ல பிக் பண்ணிகிறேனு  சொல்லி இருக்கான்… அக்சுவலி வி கேம் டுகெதர்.. ஹீ காட் சம் வொர்க்… சோ என் காலேஜ் மேட்ஸ் அல்ரெடி போட்ட பிளான் ல நானும் சடெனா ஜாயின் பண்ணிட்டேன், இவுங்கள காண்டக்ட் செய்த போது கொடைகானல்ல இருக்கிறதா சொன்னாங்க.. சோ ஐ ஜாயிண்ட் வித் தெம்… ” என்று எதையும் மறைக்காமல் சிறு வெகுளித்தனம் கலந்து அப்பெண் அவனிக்கா கூறினாள்.

 

ஆதவனுக்கு அவள் பேச்சைக் கேட்ட பிறகு நன்றாகவே புரிந்துவிட்டது… சுடலை கூறிய பெண் இவள் இல்லை… தான் பார்த்த பெண்ணும் இவளாக இருக்க வாய்ப்பு இல்லை… ஆனால் அந்த பாதம்?  அவளது பாதத்தை எப்படி பார்ப்பது… என்ற கேள்வி எழ, அதே நேரம் அப்படி இவள் இல்லாவிட்டாள் நான் நேசித்த பெண் தான் யார் என்ற கேள்வியும் எழும்பி  அவனை குழப்பியது.

 

எந்த ஒரு முடிவும் இல்லாத நிலையில் மகிழன் மனதினுள், “என்ன இவள் பாட்டுக்க இப்படி எல்லாத்தையும் சொல்றா… நம்ம 3 ஆம்பளைங்க இருக்கிற இடத்துல தனியா வேற வந்திருக்கா… தையிரியம் தான்..”  என்று என்ன அதையே ஆதவன் அவளிடம் வேறு வார்த்தைகளை பயன்படுத்தி நாசுக்காக கேட்டான்.

 

“அப்படி கேளுடா… என் செல்லாக்குட்டி… ஒரு வேளை நம்மளலாம் பார்த்தா காமெடி பீஸ் போல இருக்கோ…அதான் இந்த பொண்ணு இவ்ளோ தையிரியமா வந்திருக்கோ ” – மகிழன்

 

“நோ… இதுக்கு எதுக்கு பயம்… நான் என் வீட்ல இருந்த நாட்களை விட வெளியில் இருந்த நாட்கள் தான் அதிகம்… எனக்கு மனிதர்கள பார்த்தா பயமா இல்லை… என்ன பாத்துக்க எனக்கு தெரியும்…. எனக்கு நிறைய ப்ளேஸ் போகணும், நிறைய மக்கள் ட்ட பேசணும்… அது தான் எனக்கு பிடித்த விஷயம்…

 

தென் யு நோ, ஐ ம் ப்ளாக் பெல்ட் சாம்பியன்… ” என்று கூறி கல கலவென சிரித்தாள்.

 

“ப்ளாக் பெல்டா… சுடிதார்ல பெல்ட் கூட போடுங்க போல இந்த பெங்களூர் பிள்ளைங்க… ஆனா பெல்ட் வச்சு என்ன பண்ணுவா… கழட்டி அடிப்பாளோ ” – மகிழன் மனதினுள்

 

அந்த நேரத்தில் சரியாக வந்த சுடலை, “மேடம் நீங்க சொன்னது போலவே வந்துட்டேன்… மத்த எல்லாரும் சைட் சீயிங்-க்கு வெளில வெயிட் பண்றாங்க.. புறப்படலாமா?” என்று கேட்க, ஆதவனோ அவளை கேள்வியாக பார்த்து புருவம் உயர்த்த, அவனிக்காவோ, “எஸ் ஆதவன்… நான் போற ப்ளேஸ் இன்போர்ம் பண்ணிட்டு, கரக்டா 15 மின்ஸ் ல என்ன பிக் அப் பண்ண சொல்லிட்டு தான் வந்தேன்… ” என்று கூற ஆதவனும் மனதினுள் அவளை மெச்சினான்… அவளது துடுக்கான பேச்சுக்கும், முன் யோசனையுடன் தகவல் குடுத்து முன் பின் தெரியாத நம்பரை சந்திக்க வரும் போது செய்த புத்தி கூர்மைக்கும்…

 

ஆனால் அவன் நேசித்த குணம் கொண்ட பெண் இவள் இல்லை என்பதையும் அவன் மறக்கவில்லை. அவள் பாதத்தை மட்டுமே இப்போது பார்க்க முடிவு செய்தான். அவள் சுடலையுடன் கிளம்ப எத்தனித்து எழ, ஆதவனோ அவளிடம், “அவனிக்கா… அட்லீஸ்ட் ஹவ் எ க்ளாஸ் ஆப் வாட்டர்… ” என்று கூறி அவளிடம் ஒரு கண்ணாடி குடுவையை கொடுக்க, அவள் வாங்கும் போது வேண்டுமென்றே ஆதவன் அதை தவறவிட்டான்….

 

அவளது கால்களில், தண்ணீர் சிந்திவிட, காலனிக்குள் நீர் ஊடுருவி செல்ல, வேகமா அவனிக்கா, காலனியை கழட்டி நீரை வெளியேற்ற, ஆதவனோ “ஊப்ஸ், சாரி மிஸ் அவனிக்கா…” என்று கூறிக்கொண்டே அவள் பாதத்தை ஆராயிந்தான்.  

 

அந்த நொடி கண்டுக்கொண்டான்… அவனை ஈர்த்த பாதத்திற்கு சொந்தக்காரி அவள் இல்லை என்று…  ஆனால் நிச்சயம் சுடலை சொன்ன பெண்ணும், அந்த பாதங்களுக்கு சொந்தகாரியும் ஒருத்தியே என்று ஆதாரம் இல்லாமல் அவனது மனம் ஆணித்தரமாக அந்த நிமிடத்திலும் நம்பியது.

 

அப்படி அவன் நம்புவதற்கு காரணம் ஆதவனிடம் இல்லை. சில நேரங்களில், காரணங்களும் தேவை இல்லை, உள்ளுணர்வு உயிர்ப்புடன் இருக்கும் பொழுது… அவனிக்காவை பார்க்கும் போது, தோன்றாத உணர்வு ஏன் என்று அவனுக்கு அப்போது புரிந்தது.

.

அந்த நொடி இழையினியின் சிவந்த விழிகள் அவன் முன் நிழலாட, அடுத்த நொடி, அவளுக்கு உதவி செய்ய வந்த அவனையே அவள் குற்றம் சொல்லியதும் நினைவு வர ஆதவன் அவள் நினைவை ஒதிக்கி இப்போது சுடலையிடம் பேச முனைந்தான்.  

 

அதற்கு காரணம், சுடலையை அழைத்துக்கொண்டு அவன் கூறிய பெண்ணை அறிவதற்காக தான். அதே சமயம் அவனுக்காக சுற்றுலா பயணிகள் காத்திருப்பதும் அவனுக்கு நினைவு வர, சுடலையிடம், “சுடலை … உன்னோட வேலைய சீக்கிரம் முடித்திட்டு, என்ன வந்து பாரு… இன்னக்கு மதியம்-க்கு முன்… ” என்று கூற சுடலையும் சரி என்பதாய் தலை அசைத்துவிட்டு அவனிகாவுடன் நடக்க, அவனிக்கா அனைவரிடமும் ஒரு பொதுவான சிரிப்புடன், அவளது குட்டை முடியை கோதியவாறு உய்யாரமாக சென்றாள்.

 

போகின்ற அவளையே குறுகுறுவென பார்த்த மகிழன் மனதினுள், “பெல்ட்-னு சொன்னா… ஆனா அப்படி எதுவும் அவ போடலையே… பொய் சொல்லிட்டா போல… ராஸ்கல்…” என்று எண்ணிவிட்டு அவன் தூங்கும் பணியை தொடர சென்றான்.

 

ஆதவனுக்கு தான் இருப்பு கொள்ளவில்லை. ஏனோ நேற்று பார்த்த அப்பெண்னை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழ, அதற்கும் ஆதவனிடம் பதில் தான் இல்லை. அவன் மனதில் இடம்பிடித்த பெண் யார் என்றும் ஆதவனுக்கு தெரியவில்லை, ஏன் நேற்று பார்த்த பெண்ணின் கலங்கி சிவந்த விழிகள் அவன் முன் நிழலாடுகிறது என்றும் தெரியாமல் ஒரு குழம்பிய மன நிலையோடே வெளியில் செல்ல ஆயுத்தமானான்….

 

விராலிமலையில் – ராகவன், அவரது பாலிய சிநேகிதருடன் பேசிக்கொண்டு இருக்க, மரகதமோ மகளின் ஜாதக பலனை எண்ணி கவலையில் ஆழ்ந்திருந்தார்…. ராகவன், அவரது நண்பரோடு உண்டான பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஒரு பூரண நிம்மதி படறுவதை அவரால் மெல்ல மெல்ல உணர முடிந்தது….

 

அதே சமயம் இதழா, அவர்கள் வீட்டின் பன்ணையாள் உடன் கோத்தர்களின் குடிலை அடைந்திருந்தாள். சிலம்பில் பெற்ற வெற்றிக்கோப்பையுடன். வந்தவள் இழையினியை கட்டிக் கொண்டு சந்தோஷ ஆரவாரம் செய்ய, தங்கையிடம் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பூசிக்கொண்ட புன்னகையுடன் தங்கைக்கு வாழ்த்து கூறினாள்.

 

தங்கை வருவதற்கு முன்னதாகவே,  அவன் அணிவித்த சங்கலியை மற்றவர்கள் அறியாதவாறு ஆடைக்குள் மறைத்துக்கொண்டாள் இழையினி. ஆனால் அந்த மஞ்சள் நாணின் நீளம் சற்று குறைவாக இருந்ததனால், இழையினியால் சங்கலியை மட்டுமே மறைக்க முடிந்தது மஞ்சள் நாணை அல்ல.

 

அவர்கள் கிளம்பு நேரம் ஏனோ இழையினிக்கு எல்லை சாமி சன்னதி க்கு செல்ல மனம் ஏங்க, தங்கையும் அழைத்துக் கொண்டு போக, அந்த மூதாட்டியும், முதியவரும் அவர்களை பின்பற்றி நடந்தனர்.

 

அந்த இடத்தை அடைந்ததும், இழையினியின் கைகள் அவளை அறியாமல் அவள் கழுத்திலிருக்கும் மஞ்சள் கயிற்றை வருட, அதை கண்டுக்கொண்ட இதழா அது என்னவென்று கேட்க, அதற்கு பதில் மூதாட்டி கூறினார்.

 

“இது நோம்பு கயிறு தாயி… எதாச்சும் வேண்டுதலுக்கு கட்டி இருக்கும்னு நினைகிறேன்…” என்று கூறி இழையினியிடம், “இங்க பாரு தாயி, எல்லைச்சாமி முன்னாடி சாட்சிய வச்சு எது செஞ்சாலும், எது வேண்டினாலும் பொய்த்து போகாது தாய்…. ” என்று கூற, அவர் சொல்வது உண்மை என்பதை அவருடைய கணவன் அவரகளது மொழியான கோ மொழியில் ஒப்புக்கொண்டார்.

 

அந்த என்பது வயது மூதாட்டி கூறிய “பொய்த்து போகாது…” என்ற வார்த்தை, பூவை வட்டமிடும் வண்டாக, அவளது காதில் ரீங்காரமிட்டது.

 

“அப்போ… அவர சாட்சியாய் வைத்து கட்டிய இந்த மஞ்சள் நாண் கூட திருமணமா…?” என்ற கேள்வி மனதில் எழ அவளது தலை வின் வின் என்று வலிக்க தொடங்கியது.

 

அந்த மூதாட்டி கூறியதை கேட்ட இதழவோ, “இவளுக்கு என்ன வேண்டுதல்” என்று எண்ணமிட்டு பிறகு அதை ஒதிக்கி, தன் தமக்கையுடன்  அவர்களின் ஊரை நோக்கி புறப்பட ஆயுத்தமானாள். அவர்களது பயணமும் தொடங்கியது….

 

வழியில் ஒரு திருப்பத்தில் சுடலையும், அந்த சுற்றுலா பயணிகளும், அவனிக்காவும் வந்த வண்டி பழுது அடைந்து நிற்க, அவர்களை தாண்டி சென்ற வண்டியில் இழையினி போவதை, சுடலை பார்க்க நேரிட்டது. அவனது மனமோ, “அச்சோ… இவுங்களோட பெயர கேட்கவே இல்லையே.. எங்க தங்கி இருந்தாங்கன்னு கூட தெரியல… ஹ்ம்ம் நமக்கு தகவல் சொல்லி காசு பார்க்க உதவி செஞ்ச மேடம். கடைசியா ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல முடியலையே…. ” என்று எண்ணமிட்டபடி, அங்கு இருந்து வண்டியை பழுது பார்த்து எடுத்து செல்லும் பணியில் ஆழ்ந்தான்.

 

அவன் வண்டியை பழுது பார்த்து எடுத்து செல்ல, பின் பகல் நேரம் மூன்றை தொட்டு இருந்தது… அதற்குள் நேற்று சம்பவம் நடந்த இடத்திற்கு  சென்றவன் ஏதோ நினைவில் உலாவர, மருண்ட விழிக் கொண்ட மான் விழியால் நினைவே அவனுக்கு மீண்டும் மீண்டும் எழுந்தது. காரணமே தெரியாமல், ஆதவனுக்கு ஏனோ கோவம் துளிர்த்தது. திக்கு தெரியாத காட்டில் சிக்கிக்கொண்டது போல அவனுக்கு ஒரு பிரம்மை ஏற்பட்டது.

 

சில மணி நேரங்கள் அலைந்து திரிந்து வந்தவன், நேராக அவனது அறைக்கு சென்று முகம் கை கால் கழுவ, அப்பொழுது தான் அவனுக்கு அவன் காலையில் இருந்து உணவு உண்ணாததே நினைவு வந்தது….

 

உணவை கூட மறக்கும் அளவு தன் மனதில் புகுந்த அப்பெண் யார்…அவளை ஏன் தான் நேற்று அப்படி ஒரு சூழலில் சந்திக்க வேண்டும்… ஏன் யோசிக்காது அந்த மஞ்சள் கயிற்றை அவள் கழுத்தில் கட்டவேண்டும்… இதற்கு இடையில், என் மனதை முதலில் பறித்து சென்ற பெண் யார்… என்றெல்லாம் சிந்திக்க, அந்த சிந்தனையை கலைக்கும் விதமாய் சுடலை வந்து சேர்ந்தான்.

 

சுடலை-யை சந்தித்ததும் அந்த பாதங்களுக்கு சொந்தகாரியை அறியும் ஆவல் வந்தது… ஒரு வேளை நேற்று பார்த்த பெண்ணாக அது இருக்க கூடுமோ என்று லேசாக துளிர்விட்ட எண்ணம். காரணம், அந்த பதங்களை பார்த்த போது அவனுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, ஏனோ நேற்று பார்த்த அப்பெண்ணின் முகத்திலும், அவள் மருண்ட விழிகளிலும் அவனுக்கு ஏற்பட்டது. அதை அவனால் நேற்று வரை உணரமுடியவில்லை…. இன்று அவளை தேடி திரிந்த தருணங்களில் அவளாக இருக்க கூடுமோ என்று தோன்ற, அதை அறியும் பொருட்டு சுடலையிடம் அவன் கூறிய பெண்ணை பற்றி நேரடியாகவே கேட்டான் ஆதவன்.

 

“நீ அன்னைக்கு, ஒரு பெண் பற்றி பெருமையா சொன்னியே… ஹ்ம்ம் விவசாயம் பற்றி பேசிச்சு… அப்புறம் அந்த மால், சொக்குப்பட்டை… இந்த தகவல் எல்லாம் உனக்கு யார் சொன்னது… அந்த அவனிக்காவா ?” என்று ஆதவன் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே கேட்க, சுடலையோ, “அய சார்… அவனிக்கா மேடம் இல்ல… வேற ஒருத்தவங்க, அன்னைக்கு அவனிக்கா பக்கத்துல நின்னுட்டு இருந்தாங்க, நீங்க பார்க்கலியா ? நீள முடி, அவுங்க தான் இந்த தகவல் எல்லாம் சொன்னாங்க… இன்னும் அவுங்ககிட்ட கதை கேட்டு நாலு காசு பார்க்கலாம்னு நினைத்தேனுங்க, அதுக்குள்ள அவுக கிளம்பிட்டாங்க….அவுங்க பேரு, தங்குன இடம் னு கேட்கனும்னு நினச்சேன்…ஆனா அதுக்குள்ளார கிளம்பிட்டாக….அவுக போறத பார்த்துட்டு தான் வாரே சாரு, ஏன் சாரு கேட்குறீங்க… ” என்று சுடலை தலையை சொறிந்துக் கொண்டு சொல்லி முடிக்க ஆதவனது சிந்தனை வேகமாக செயல்ப்பட்டது.   

 

இளநிவன் அன்று அவனிக்காவை தான் தேடிய பெண் என்று தவறாக நினைத்து, என்னிடமும் அவனிக்காவையே காட்டி இருக்கிறான்… அதே போல், அவனிக்காவை காட்டி இந்த சுடலையிடம் தகவல் கேட்க, சுடலையோ தவறாக புரிந்துக் கொண்டு, அவனிக்காவின் அருகிலிருக்கும் பெண்ணை பற்றிய தகவலை தந்திருக்கிறான்.

 

நான் தேட சொல்லிய பெண்ணை, இளன் தவறாக கண்டுக்கொள்ள, இளன் காட்டிய பெண்ணாக இந்த சுடலை தவறாக புரிந்துக் கொண்டு இருக்கிறான். அப்படியானால் தான் பார்த்த பெண் தான் யார்?… இவ்வாறாக ஆதவனின் சிந்தனை இருக்க, சுடலை கூறிய கடைசி இரண்டு தகவல் அவன் மனதில் ஓட ஆரம்பித்தது.

 

அவளுக்கு நீண்ட கூந்தல், அப்பெண் இப்பொழுது இங்கு இல்லை. கிளம்பிவிட்டாள். இவை இரண்டு மட்டுமே ஆதவனுக்கு இறுதியாக கிடைத்த தகவல். நீண்ட கூந்தல் என்றதும், நேற்று பார்த்த பெண்ணின் கூந்தலும் நீளம் தான் என்று ஆதவனால், அவளோடு ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை.  

 

மறுபுறமோ, கோத்தகிரியிலிருந்து கிளம்பி சரியாக 5.30 மணி நேர பயணத்தின் பிறகு, பொழுது சாயும் வேலையில் இதழாவும், இழையினியும் அவர்கள் வீட்டிற்கு வர, முன் வாயில் வழி நுழைய இருந்த இழையினியை, வேகமாக வந்து தடுத்த அவள் அன்னை அவசரமாக கூறிய செய்தியில் இழையினி திடுக்கிட்டு விழித்தாள்.

 

Advertisement