Advertisement

 

மயிலிறகு – 26

 

புயலில் சிக்கி தவித்தவன் போல  களைத்துப்போய், தனக்கே உரிய கம்பீரத்தை இழந்து கையாலாகாத்தனத்துடன் ஆதவன் அமர்ந்திருப்பதாக வேதாவும், நிவனும் எக்காளமிட, இப்பொழுது காலை நேரத்து ஆதவனுக்கு இணையாய் சிவந்திருந்த ஆதவனது முகம் எதை உணர்த்தியதோ, ஆனால் அவனது உதட்டில் உறைந்த வெற்றி புன்னகையும், கண்களில் தெரிந்த கோப தீ ஜுவாலையும், இத்தனை நேரம் அவன் முகம் பூசிக்கொண்டிருந்த அமைதி புயலுக்கு பின்னால் இருந்த அமைதி அல்ல, புயலுக்கு முன்னால் இருக்கும் அமைதி என்று.

 

அவர்கள் இருவரும், சந்தோசத்தில் கூக்குரலிட்டு, ஆணவத்தில் மூழ்கி திளைத்திருக்க, அவர்களது சிந்தனையை கலைத்தது, ஆதவன் கை தட்டும் ஓசை. அவனின் இந்த திடீர் விசித்திர செயலுக்கு அர்த்தம் விளங்காது தாயும் மகனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, அவர்கள் கண்டது ஆதவனின் மறுமுகத்தை. அவன் கண்களில் கோபம், உதட்டில் தவழ்ந்திருந்த கடை இதழ் புன்னகை…. முகத்தில் எந்த ஒரு குழப்பும் இல்லாத தெள்ளென தெளிந்த நிலை…. இவை அனைத்தும் ஏதோ சரி இல்லை என்று வஞ்சகத்தில் பட்டப்படிப்பை முடித்திருந்த வேதாவிற்கு புலனாயிற்று.

 

ஆனால் சூழ்ச்சியில் கத்துக்குட்டியான நிவனுக்கோ, ஆதவன் இந்த நிலையில் இப்படி நடந்துக்கொள்வது முட்டாள் தனமாக தோன்ற, “டே ஆதவா… உனக்கு என்ன லூசு பிடித்திருக்கா… உன் பொண்டாட்டி என் கஸ்டடி இருக்குறா, அந்த பயம் கொஞ்சம் கூட இல்லாம… என்ன இது…” என்று குரலை உயர்த்த, ஆதவனோ குரலை உயர்த்தாமல், அதே சமயம் மிகவும் இறுகிய குரலில், ” முட்டாள் யாருன்னு இப்போ தெரிஞ்சிடும்….கொஞ்சம் வாசல பாரு….” என்று கூறினான், அவனது குறுஞ்சிரிப்பு மாறாமலே.

 

அப்படி என்ன தான் வாசலில் தெரிகிறது என்று நிவனும், வேதாவும் ஒரு சேர பார்க்க, அங்கே ராகவன் வந்துக்கொண்டிருந்தார்….

 

ராகவன் தானே வருகிறார், ஒருவேளை அவர் வந்ததால் பலம் கூடியது போல உணர்ந்து சிரிக்கின்றானோ…ஆனால் அவனது மனைவி அவர்களது கையில் இருக்கும் போது எதற்கு கவலை. அவள் ஒருத்தியே போதுமே, அவளை பகடை காயாய் வைத்து, ஆதவன் ராகவன் என்று இரு தலையையும் அவர்களின் விருப்பத்திற்கு ஆட்டி வைக்க முடியுமே. இப்படி வேதா, நிவன் என்ற இருவரும் அவரவர் மனதில் நினைக்க, அவர்கள் நினைவலைகளில் இருந்த பொழுதே… திடு திடுவென ஒரு பத்து நபர்கள் ராகவனின் ஊரை சார்ந்தவர்கள் போலும், அவரின் கண் அசைவில், வேதா அம்மாளின் ஆட்களான அந்த ஆறு நபர்களை வெளியில் இழுத்து செல்ல முயன்றனர்.

 

“யோ… எங்க வந்து யார பிடிச்சு இழுத்துட்டு போறீங்க…. யாருடா நீங்களா… ராகவன் உம்ம வேலையா இது …. ? எத்தன தையிரியம் இருந்தா, இதை பண்ணி இருப்பீங்க ? ஒ சரி சரி, உம்ம மாப்பிள்ளை உம்மகிட்ட மறைத்திருப்பாறு…. அருமை பெருமையா பெத்து வளர்தீங்களே உம்ம செல்ல மகள், அவ இப்ப எங்க பொறுப்புள… புரியிதா.. ? மொதல்ல என் ஆளுங்கள விட சொல்லுங்க… இல்ல உங்க மருமகனுக்கு உதவி பண்றதா நினைச்சு, மகளை இழந்திட போறீங்க….” என்று மரியாதையை சற்றும் கை விட்ட தொணியில், மிரட்டும் பாணியில் வேதா கூறினாலும், ராகவன் படை சூழ வந்தது, ஆதவனது தெளிந்த முகம் இவை அனைத்தும் வேதாவிற்கு கலக்கத்தை தான் தந்தது.

 

வேதாவின் கூச்சலுக்கு அங்கிருந்த யாரும் செவிமடுக்காது, மேலும் அவர் சொன்னதை சற்றும் இலட்சியம் செய்யாமல், வந்திருந்தவர்கள் அந்த ஆறு நபர்களை அடித்து இழுத்து வெளி போக, குடும்பத்தினர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

 

மனைவியின் பெயரை சொல்லிக்கூட, ஆதவன் இத்தனை நெஞ்சழுத்ததுடனும், ராகவன் மகள் பாசமற்றவரை போல நடந்துக் கொள்வதற்கும் காரணம் அறியாமல், விழிக்க, அந்த நேரத்தில் ஆதவனது குரல் அங்கிருந்தவர்களின் எண்ண ஓட்டங்களை தடை செய்தது.

 

‘இழையா….’ என்று ஆதவன் குரல் கொடுக்க, பலவீனமான நடையுடன் இழையினி உள்ளே வர, இதழாவும் மரகதமும் இழையினியின் பக்கவாட்டில் அவளை கைத்தாங்களாக பிடித்துவர, வேதாவிற்கும், நிவனுக்கும் அவர்களது கண்களையே அவர்களால் நம்பமுடியவில்லை.

 

அவர்களது மனமோ, “இல்லை இது பிரமை… எப்படி அவள் இங்கு வர முடியும்.. வாய்ப்பே இல்லையே ….” என்று வேதா, நிவன் இருவரது மனமும் ஒரு சேர என்ன, ஒரே நேரத்தில் இருவரும் செவ்வந்தியின் முகத்தை பார்த்தனர்.

 

செவ்வந்தியின் முகமும் அப்பட்டமாக குழப்பத்தை பிரதிபளிக்க, அந்த குழப்பம் வேதா, நிவன் என இருவருக்கும் ஒட்டிக்கொண்டது.

 

“அங்க என்ன அவள் முகத்த பார்க்குறீங்க… விளக்கத்த நான் சொல்றேன்….” என்று தனது வலதுக்கையை அவனது தலைக்கு நேராக உயர்த்தி சுடக்கிட்டப்படி, வேதா, நிவன் இருவரது கவனத்தையும் அவன் பக்கமாய் திருப்பினான் ஆதவன்.

 

ஆதவன் என்ன சொல்ல வருகிறான் என்ற குழப்பத்தில் இருந்தவர்கள், மேற்கொண்டு எதுவும் பேசாமல், அவன் சொல்வதை கேட்கலானர்.

 

“நேத்து உங்களுக்கு உடம்பு சரி இல்லன்னு, உங்க அறைக்கு வந்தேனே… நினைவு இருக்கா… அப்போ நீங்க மயக்கமா இருக்கிறதா சொன்னாங்க…. அரை நினைவு தான் இருக்குனு சொன்னாங்க… ஆனா உங்க இமைகள் மூடி இருந்ததே தவிர, உங்க கண்கள் நிஜமான மயக்கத்துல இல்ல..ஏன்னா உங்களோட விழி, அசைவு..மூடிய இமைகளுக்கு மேல நான் பார்த்தேன்…. ஆனா நான் எதுவும் கேட்கல. மேற்கொண்டு அதை பத்தி யோசிக்கவும் இல்லை.

 

இழையினிய தேடும் பொழுது தான் எனக்கு அவள் வீட்ல இல்லன்னு தெரியவந்தது. அவள பற்றின தகவல் தெரிந்துக் கொண்டு, நான் அவள காத்திருக்க சொன்ன ஆற்றங்கரைக்கு போனேன்….

 

அங்க அவள் இல்லை…. ஆனா அவளுடைய செப்பல் அங்க தான் இருந்தது… செப்பல கூட மாட்டாம போயிருக்கணும்னா, நிச்சயம் என்னோட இழையா ஏதாவது ஒரு பதட்டத்துல இருந்திருக்கணும்னு முடிவு செய்து, அவளுடைய காலடி தடத்த தேட ஆரம்பித்தேன்….

 

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா… 100 காலடி தடங்கள்  இருந்தாலும், அதுல எது என் இழையாவோடதுணு நான் சரியா சொல்லிடுவேன்…

 

அதுனால, இழையா நடத்து போன திசையை கண்டு பிடிக்க ரொம்ப நேரம் எடுக்கல. அதை வச்சு தான், நான் நம்ம தேங்காய் கிடங்கு-க்கு போனேன்… அங்க போய் முதல்ல பார்த்தப்ப எனக்கு ஏமாற்றம் தான்… ஆனா எனக்குள்ள ஏதோ ஒரு உள்ளுணர்வு. அதுனால, அந்த கிடங்கோட நிலவறைய பார்த்தேன்…. நிலவறைல தேங்காவை தவிர வேறு எதுவும் இல்லை. அப்பதான் தேங்கா குவியில்க்கு மறுப்புறம் இருந்த முதியவர்கள் தாழிய பார்த்தேன்….

 

அதை நிச்சயம் பார்க்கணும்னு எனக்கு தோணுச்சு… நினைவு தெரிந்த நாள்ல இருந்து, அதுல எதுவும் இல்லன்னு எனக்கு தெரியும் அதை  நம்ம யாரும் எதுக்காகவும் பயன்படுத்துறதும் இல்லன்னு தெரியும். இருந்தும் நேத்து அதையும் பார்க்கணும்னு தோணவே, அதை போய் பார்த்தப்ப….” என்று சொல்லிக்கொண்டிருந்த ஆதவன், தனது கை முஷ்டி இறுக, அருகில் இருந்த தூணில் ஓங்கி குத்த, நிவன் ஆதவனின் கோவத்தை கண்டு குலை நடுங்கி போனான்.

 

ஆனாலும் வெளிக்கு எதையும் காட்டாமல், இப்பொழுது கை எழுத்தாகி இருக்கும் சொத்தை எப்படி கை நழுவ விடாது, கைப்பற்றுவது என சிந்திக்கலானான்…

 

ஒரு நிமிடம் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர பேச்சை நிறுத்திய ஆதவன், மீண்டும் விட்ட இடத்திலிருந்தே தொடங்கினான்…

 

“அங்க நான் பார்த்தது, மயக்கமா இருந்த என்னோட இழையாவ… வாய், கை காலு எல்லாம் கட்டப்பட்டிருந்த நிலையில. வயசானவங்களுக்கு சமாதி கட்டுற அந்த தாழில என்னோட இழையாவ பார்த்த நொடி, நீங்க யாரவது என் கைல கிடைத்திருந்தா, அவுங்க நிஜமாவே அந்த தாழில உயிரோட சமாதி ஆகி இருப்பாங்க….

 

அப்புறம் இழையவோட மயக்கத்த்த தெளிய வைக்க, ஒரு தேங்காய் உடச்சு தண்ணீர் தெளிச்சு எழுப்பி கேட்ட போது, என்னோட இழையா விட்ட கண்ணீர்ல அவ எவ்ளோ துன்பத்தை அனுபவிசிருக்காணு புரிஞ்சுக்கிட்டேன்…. அவ அழுதது, அவளுக்கு ஏதோ ஆகிடும்னு இல்லை, எனக்கு ஏதோ ஆகிடுச்சுனு… அப்ப தான், இந்த செவந்தி தான் இதுக்கெலாம் காரணம்னு தெரிய வந்தது….. ஆனா அவள் எதுக்கு இதை செய்யணும்னு தான் எனக்கு புரியல. அந்த கேள்விய தற்காலியமா ஒதிக்கிட்டு, என்னோட இழையா மீது கவனம் செழுத்துனேன்…

 

இழையாவ பாதுக்காப்பா, யாரு பார்க்காம, நான் மகிழன் வீட்டுக்கு அழைச்சிட்டு போனேன்…அங்க மகிழன் அம்மா கிட்ட இவள பத்திரமா பார்த்துக்க சொல்லிட்டு, என்னோட மாமானாருக்கு தகவல் சொல்லி வரவச்சு, எல்லாரும் மகிழன் வீட்ல தங்கும் படி ஏற்பாடு பண்ணிட்டு தான், நேத்து நான் இந்த வீட்டுக்கே வந்தேன்….

 

நான் வீட்டுக்கு வந்ததும் காத்திருந்த மகிழன்கிட்ட கூட பேசாம, முதல்ல உங்க அறைக்கு தான் வந்தேன்… உங்களோட நலத்தை பார்க்க மட்டுமே… ஆனா உங்களுக்கு மாத்திரை கொடுக்க, மாத்திரை தேட, பார்வதி பாட்டி, அது உங்க அலமாரியில இருக்குதுன்னு சொல்லவும், மாத்திரை சிட்டையோட, ஒரு துண்டு காகிதமும் எனக்கு கிடைச்சது. அதை நான் வாசிக்க அப்ப போதிய அவகாசம் இல்லை. ஆனா பேப்பர் அடியில இழையினினு பெயரை பார்த்ததும், அதை ரகசியமா வச்சுக்கிட்டேன்…. உங்களுக்கு மாத்திரை கொடுத்துட்டு, மகிழன சந்திக்க போனேன்.

 

மகிழன் சந்தித்த பொழுது, அவன் சொன்ன தகவல்ல எனக்கு நிவன் மீது சந்தேகம். ஆனாலும் இதுல செவ்வந்தி சம்பந்தம் பட்டிருக்கிறது, உங்க அறையில கிடைத்த காகிதம், இது  இரண்டுக்கும் தொடர்பு இருக்குமோணு என்ன யோசிக்க வைத்தது.

 

அதுக்கு பிறகு, மகிழனுக்கு கூட தெரியப்படுத்தாம, அந்த காகிதத்துல இருந்த செய்திய படிச்சேன்… அதுல இழையினிக்கு என்னோட வாழ விருப்பம் இல்லைனும், அவள் அவளுடைய அத்தை பையன் மாணிக்கமுடன் செல்வதாகவும்… இரத்தின சுருக்கமாக இருந்த வரிகள், அதோட இழையாவோட கையொப்பம்…

 

அந்த லட்டெர் படிச்சதும், எனக்குள்ள ஆயிரம் கேள்வி. அது உங்க அறையில ஏன் வந்தது அப்படின்னு. ஆனா அதுல இருக்குற விஷயத்த நான் நம்பவில்லை. என் மனைவி பத்தி ஒரு காகிதம் இல்ல… அந்த கடவுளே வந்து சொன்னாக் கூட, நான் எதையும் நம்பமாட்டேன்… ஆனா அது பாவம் உங்களுக்கு தெரியாமல் போச்சு….

 

என்ன டா…இவன் இப்படி சொல்லுறான், ஆனா ஆரியன் வந்த பொழுது அதை வைத்து இவுங்களுகுள்ள சண்டை வந்தது தானே அப்படின்னு நீங்க கேட்கலாம், ஆமாம் சண்டை வந்தது…ஆனா அந்த சண்டைக்கு காரணம் சந்தேகம் இல்லை. கோபம், என் இழையா எனக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கணும்னு எதிர்ப்பார்த்ததால வந்த கோபம் அது.

 

சரி அதை விடுங்க, இதை பார்த்ததும், முதல்ல உங்க அறையில நீங்க மயக்கமாகவே இல்லையோ அப்படின்னு எனக்கு தோணிச்சு…. அதுக்கு மூடிய இமைக்குள்ள உங்க விழி தொடர்ந்து அசைந்துகிட்டே இருந்ததும் ஒரு காரணம். இன்னும் உங்க அறைய செக் பண்ணனும்னு நினைத்தேன்…

 

நீங்க சாப்பிட்டது தூக்க மாத்திரை. ஓய்வுக்காக டாக்டர் கொடுத்தது தான்… அதை பயன்ப்படுத்தி உங்க அறைல மறுபடியும் ஏதாவது தடயம் இருக்குதான்னு பார்த்தேன்… அங்க எனக்கு கிடைச்சது இழையாவோட துணிகள் இருக்குற பேக்… செவ்வந்தி, நிவன் மீது இருந்த சந்தேகம் எனக்கு உங்க மீது வர ஆரம்பித்தது.

 

ஆனா, உங்கள என்னால முழுசா சந்தேகப்பட முடியல. நீங்க என்கிட்ட இதுவர ஒரு உண்மையான தாய் பாசத்தை காட்டினது இல்லன்னு என்னால உணரமுடிந்தாலும் கூட, உங்களுக்கு என் மீது சுத்தமா பாசமே இல்லாம, வெறுப்பும் பகையும் மட்டும் இருக்கும்னு நான் நினச்சு பார்க்கல.

 

ஆனா பிரச்சனையை உங்க மூணு பெயர் கிட்ட தான் இருக்குதுன்னு எனக்கு தெரிஞ்சது. முழுசா எல்லா விவரங்களும் தெரிஞ்சிக்க தான் எதையும் வெளிக்காட்டாம அமைதியா இருந்தேன்….

 

நீ நிச்சயம் சொத்த தான் எழுதி வாங்குவ, அது தான் அந்த பத்திரம் அப்படியும் நான் யூகித்தேன்… ஆனா இதுக்கு பின்னாடி என்ன தான் இருக்குனு தெரிஞ்சு, இன்னைகோட முற்று புள்ளி வைக்கணும்னு தான் காத்திட்டு இருந்தேன்…

 

சொத்து போனாலும் பரவாயில்ல, உண்மையா என்ன சுத்தி என்ன தான் நடந்திருக்குனு தெரிஞ்சிக்க தான் இவ்ளோ நேர என்னோட அமைதிக்கு காரணம்…

 

உங்களுக்கு பணம் மட்டும் தான் பெருசா தெரிஞ்சதா… உங்க கூடவே வளர்ந்த எங்க அம்மா பத்தி கொஞ்சம் கூட யோசிக்க தோணலியா…

 

ஆனா நீங்க இதுக்காக, அம்மா அப்படிகிற உறவை சொல்லி என்ன இத்தனை வருஷம் ஏமாற்றி இருக்க வேணாம்… ” என்று அதுவரை கம்பீரமாக கூறியவன், இறுதியில் குரல் தழுதழுக்க, அதை வேகமாக  சமாளித்தப்படி, மறுப்புறம் திரும்பி அவன் கண்களை ஆள்காட்டி மற்றும் கட்டை விரல் கொண்டு லேசாக யாரும் பார்க்காத வண்ணம் அழுத்தினான்… கலங்கிய அவன் கண்களை சரி செய்யும் பொருட்டு.

 

அதை யார் கவனித்தார்களோ இல்லையோ, இழையினி சரியாக கவனித்துவிட்டாள். செவ்வந்தி கொடுத்த ஏதோ செடியின் வேரை சுவாசித்ததும், வந்த மயக்கம்.. இப்போது மயக்கம் தெளிந்த போதினிலும், அவள் மான் விழிகள் சொருகிக்கொண்டே தான் இருந்தது. அந்த நிலையிலும், தன் கணவனது வலி நிறைந்த கண்கள், இழையினியின் கண்களுக்கு தப்பவில்லை.

 

ஆதவன் மனநிலை இவ்வாறாக இருக்க, மறுப்புறம் நிவன், தனது தாயின் பெயரில் இருக்கும் சொத்து பறிபோக கூடாது என்று மட்டுமே எண்ணி இருந்தான்…

 

வேதவோ, எதற்கும் அசையாமல் இருந்தவர், இறுதியாக பேசும்போது கூட தன்னை ஆதவன் மரியாதையை கை விட்டு பேசவில்லை என்றும், தன் மீது சந்தேகம் வந்தும் கூட சொத்தை முழுதாக எழுதி கொடுத்ததிலும் ஒரு நிமிடம் தனது கொள்கையிலிருந்து தளர்ந்து தான் போனார்.

 

ஆனால் , அவர் மேற்கொண்டு எதையும் திருத்திக்கொள்ள யோசிக்கவில்லை. தான், தனக்கு பிறகு தன் மகன். அவன் ஆஸ்த்தி அந்தஸ்த்துடன் நலமாக வாழ, எதையும் செய்யலாம் என்ற எண்ணம் மேலோங்க, ஆதவனின் வருத்தமோ, ருத்ரனின் கோபமோ, பெரியவர்களின் குற்றம் சாட்டும் பார்வை மற்றும் அவர்களது இடிந்துப்போன தோற்றமோ, எதுவும் வேதாவை அசைக்க வில்லை. ஏன் உயிருக்கு உயிராக, அவள் மீது அன்பு வைத்திருந்த சக்தியை கூட வேதா மறந்துவிட்டார்… எங்கே நினைவு வைத்திருந்தால் தானே மறப்பதற்கு…

 

மறுப்புறம் இழையினி, தனது கணவனை பார்த்துவிட்டு தந்தையை பார்க்க, அவரோ இழையினி அருகினில் வந்து அவளது தலை-யை அன்புடன் தடவியப்படி, ” எனக்கு இது முன்பே தெரியும் பாப்பா… அதுனால தான் உன்ன நம்ம வீட்டுக்கு கூட இத்தனை நாளா தங்குறது போல கூப்பிடல” என்று மெதுவான குரலில், தன் மகளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூற, தன் கணவனுக்கு இனி தாய் அன்பு கொடுக்க வேண்டியது அவளது கடமை என்று உணர்ந்தாள்..ஆனால் அவள் கண்களில் இருந்து கண்ணீர் ஏனோ சிந்த தொடங்கியது.

 

ருத்ரனுக்கோ வேதாவின் வார்த்தைகளை இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு வகையில் சக்தியின் மறைவுக்கு காரணம் வேதா என்று தோன்றியது. அதோடு இத்தனை காலமும் உறவாடி கெடுத்துவந்தது, தன் மகனை தன்னை விட்டு தூரமாக விலக்கி வைத்தது என்று ஒவ்வென்றாக, அவர் நெஞ்சில் ஊர்வலம் வர, கண்களில் கோபத்தின் தீ எரிய தொடங்கியது.

 

ஆத்திரத்துடன் ருத்ரன் முன்னேறி வேதா அம்மாளின் கழுத்தை நெரித்தபடி, இத்தனை வருடமாய் அவர் பட்ட குற்ற உணர்ச்சிக்கும், வேதனைக்கும், வடிகாலாய் வேதாவை வார்த்தையால் வதைக்க தொடங்கினார்…

 

கழுத்து நெறிக்கப்பட்டதால், அவர் அதிலிருந்து விடுப்பட போராட, அவரது கையில் இருந்த உயில் நழுவி கீழே விழ, சில நொடிகளில் நடந்துவிட்ட இந்த சந்தர்ப்பத்தை நிவன் அவனுக்கு சாதகமாக திருப்ப நினைத்தான்.

 

வேகமாக நழுவிய உயிலை கைப்பற்றியவன், தாயை காப்பாற்றும் எண்ணம் சிறிதுமில்லாமல் நழுவ முயல, பெரியவர்கள், ஆதவன் ராகவன் என்று அனைவரும் ருத்ரனை இழுக்க முயன்றுக்கொண்டிருக்க, யாருக்கும் நிவனின் நினைவு வரவில்லை. ஆனால் மகிழன் மட்டும் நிவனை கண்காணிக்க, நிவன் நழுவ முயன்றதை அறிந்து, அவனை கெட்டியாக பிடித்துக்கொள்ள, இப்போது அனைவரது கவனமும் நிவன் மீது விழுந்தது.

 

வேதா, தொண்டை செறும, இருமிக்கொண்டே,  கழுத்து நெறிக்கப்பட்டதால் கண்கள் சிவந்து, தள்ளாடியவர் மனதளவில் அடிவாங்கியவராய் நிவனை பார்க்க, அவன் இறுக்கமாக அந்த பத்திரத்தை பிடித்திருந்தான்.

 

இப்போது ஆதவன், மகிழனுக்கு சமிக்கை செய்ய, நிவனை விட்டு மகிழன் ஓர் அடி தள்ளி நின்றுக்கொண்டான். மனதில் வேதனை பொங்க வேதா அம்மாள், “நிவா.. அம்மாவ காப்பாத்தணும்னு தோணலியா பா.. உனக்காக தான இத்தனையும் …” என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே மீண்டும் செருமல் வர, நெஞ்சை பிடித்துக்கொண்டு மெதுவாக பேச, நிவனோ சற்றும் தாயின் நிலையை யோசிக்காது, “நீ தானே அம்மா சொல்லிக்கொடுத்த, சொத்த விட எதுவும் பெருசு இல்லன்னு… அதை தான் பண்றேன்…

 

அம்மா… நீங்க , நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிற தான? இந்த சொத்து முழுக்க எனக்கே வரணும்னு தானே உன்னோட ஆசை… உன்ன காப்பாத்த நினச்சுருந்தா, அப்புறம் என்னோட சேர்ந்து பத்திரமும் அவுங்க கைக்கு போய் இருக்குமே மா… அதுனால தான ஓட முயற்சி பண்ணேன்” என்று நிவன் சட்டமாக சொல்ல, அந்த நிமிடம் வேதா, சுக்கு நூறாக உடைந்தார்….

 

இருந்தும் ஒருவேளை மகன் புரியாமல் பேசுகிறானோ என்று ஒரு அவநம்பிக்கையில், “நிவா…. என்ன டா சொல்ற? ஒருவேள இவுங்க தடுக்காட்டி, நிச்சயம் அந்த மனுஷன் என்ன கொண்ணு போட்டு இருப்பார் டா… அம்மா செத்துட்டா…? ” என்று குரல் நடுங்க அவர் கேட்க, நிவனோ வெகு நிதானமாய், “ஆமாம் அம்மா, அதை தான் நானும் எதிர்ப்பார்த்தேன்..எப்படியும் நீ செத்துட்டா, குடும்பமே கொலைபழில உள்ள போய்டும், உன் பேருல இருக்க சொத்து தானா எனக்கு வந்து சேர்ந்திடும். ஆனா அதுக்குள்ள இவனுங்க கெடுத்துடாங்க… ” என்று கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே, அதை கேட்டுக்கொண்டிருந்த வேதாவிற்கு அவர் மகனின் துரோகத்தை ஜீரணிக்க முடியவில்லை.

 

அதிலும் இறுதி வாக்கியத்தை கேட்ட வேதா, இத்தனைக்கும் காரணம் அந்த பத்திரம் தான் என்ற எண்ணம் எழ, ஆவேசம் வந்தவாராக, தன்  மகனை நெருங்கி, கையில் இருக்கும் பத்திரத்தை  பி டுங்க முயல, அவனோ அதை தக்கவைத்துக்கொள்ள போராட, அந்த பத்திரம் இரண்டாக கிழிந்துவிட, அதை பார்த்த நிவன் ஆத்திரம் தாங்காமல், தாய் என்பதையும் மறந்து வேதா அம்மாளின் கன்னத்தில் ஒரு அரை விட, வேதா சற்று எட்ட தள்ளி விழுந்தார்.

 

அவர் விழுந்ததும், யாரும் முன்வராமல் இருக்க, ஆதவன் மட்டும் அவரை தாங்கி, ஒரு தூணில் சாய்த்து அமரவைத்தவன், மகிழனை நோக்கி, “மகிழ்… அவுங்க பண்ணின சதிக்கு அவுங்களே எண்டும் போட்டுடாங்க…அந்த பத்திரத்த கிழுச்சு…. இவுங்க கிளம்பினதும் சொல்லு நான் அதுவரை மேல இருக்கேன்…. ” என்று கூறியவன் இழையினி நோக்கி நகர, இத்தனை நேரம் கண்கள் சொருகுவது போல நிற்க முடியாமல் நின்ற இழையினி, அப்படியே மயங்கி சரிய, ஆதவன் வேகமாய் முன்னேறி இழையினியை தன் கைகளில் தாங்கிக்கொண்டான்….

 

ராகவன் பதற, இதழா, மரகதம் துடிக்க, மகிழன் வேகமாக தண்ணீர் எடுக்க சென்றான். பார்வதி பாட்டி வேகமாக இழையினி அருகில் வந்து, அவள் உடலை தொட்டு பார்த்தவர், அவளின் நாடி பிடித்து பார்க்க, பார்வதி பாட்டிக்கு புரிந்துவிட்டது. அவர் கொள்ளு பாட்டி ஆகிவிட்டார் என்று.

 

அதை அவர் தெரிவிக்க, அங்கே அனைவர்க்கும் மனதில் சந்தோசம் கரைப்புரண்டு ஓடியது.

 

மயங்கிய இழையினியை கைகளில் தூக்கிய ஆதவன், பாட்டியின் அறையில் படுக்க வைக்க, அனைவருமே பாட்டியின் அறையில், கூடினர் வேதா நிவனை தவிர்த்து. சில நிமிடங்களில் கண் விழித்த இழையினி செய்திக் கேட்டு சந்தோசம் பொங்க, ஆதவனை பார்த்து மெலிதாக சிரிக்க, அவன் அவள் கரத்தை எடுத்து அவன் கண்களில் வைத்துக்கொண்டான்….

 

அனைவரும் சந்தோஷ ஆராவாரமிட, இப்போது இதழாவின் கண்கள், அவ்வபோது மகிழனை மீட்டி மீட்டி காதல் இசை சேர்த்தன. ஆனால் மகிழன் மறந்தும் இதழாவின் புறம் திரும்பவில்லை.

 

வெளியே தனித்து விடப்பட்ட நிவன் வேதா மனதில் சொல்லமுடியாத வேதனை சூழ்ந்திருந்தது. திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை  விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழியை எண்ணாமல் இருக்க முடியவில்லை. மகனின் முகத்தையும் பார்க்க விரும்பாதவராய், முகம் திரும்பி எழ முயற்சி செய்ய, அப்போதுதான், தாயை கை நீட்டி அறைந்தது நிவனுக்கு புத்தியில் உரைத்தது.

 

சொத்தை அடைய வேண்டும் என்ற சொல் மீண்டும் மீண்டும் அவனுள் உருபோடப்பட்டிருக்க, அந்த சொல் அவனுக்கு ஒரு மந்திரம் போல ஆகி போனது. அந்த மந்திரத்தில் கட்டுண்டு இருந்தவனுக்கு சொத்தும் பறிபோய் இப்போது தனியே அனாதையாய் நிற்கும் போது தான், அவன் தாயிடம் நடந்துக்கொண்ட விதம் அவனுக்கு புரிந்தது.

 

வேகமாக சென்று, வேதா அம்மாளிடம் மன்னிப்பு கேட்டு மன்றாட, வேதா அம்மாளோ, “நீ என்கிட்ட கேட்க வேண்டாம், நம்ம இவ்ளோ பண்ணின பிறகும், நம்மள எதுவும் செய்யாம விட்டு போன இவுங்ககிட்ட நம்ம மன்னிப்ப கேட்டுட்டு இந்த ஊரைவிட்டே போய்டுவோம்…

 

ஏன்னா..பெத்த புள்ள நீயே என்ன அடிக்க வந்துட்ட, ஆனா நான் அத்தனை கொடுமை செய்தும், எனக்கு கடைசிவர மரியாதை கொடுத்த ஆதவன் முன்னாடி என் நிலை ரொம்ப தாழ்ந்து போச்சு… ” என்று கூற, நிவன் முகத்தில் அறைவாங்கியத்தை போல உணர்ந்தான்.

 

அதன் பின் இருவரும் சென்று, ஆதவன், ருத்ரன், பார்வதி, ராஜ சக்ரவர்த்தி, ராகவன் இழையினி என்று அனைவரிடம் மன்னிப்ப கேட்க, போகின்றவர்களை தடுத்தான் ஆதவன்.

 

அவர்களை தடுத்ததும்,  எங்கே அவர்களை இங்கே தங்கும்படி கூறிவிடுவானோ மகன், இவர்கள் பாம்பை விட கொடியவர்கள் ஆயிற்றே என்று மனதால் வேதாவை வெறுத்துக் கொண்டிருந்த ருத்ரன் எண்ணமிட, ஆதவனது அழைப்புக்கு காரணம் வேறாக இருந்தது.

 

“நீங்க இங்க இருந்து போறது தான் எல்லாருக்கும் நல்லது…ஆனா நீங்க எங்கயும் போகவேண்டாம்… அப்பா உங்க பேருல முன்னாடியே வாங்குன சொத்து உங்களோட பெயர்லையே  இருக்கட்டும்….  உங்களுக்கு பிறகு அது உங்க மகனுக்கு வந்திடும்….

 

எப்படியும் ஒரு தென்னந்தோப்பு, கும்பகோணம் 30 ஏக்கர்ல இருக்கிற பண்ணை வீடும், அதோட விவசாயத்தையும் வச்சு உங்க வாழ்க்கை இங்க போலவே, எந்த குறையும் இல்லாம இருக்கும்னு நம்புறேன்…

 

ஆனா மறுபடியும் இங்க வரவேண்டாம்… பத்திரம் உங்க கைக்கு இரண்டு நாள்ல வந்து சேர்ந்திடும்.

 

மாறா… இவுங்க இரண்டு பேரையும் வண்டில போய் கும்பகோண பண்ணை வீட்ல விட்டுடு…” எற்று ஆளுமை குரலில் கூற, எப்பொழுதும் போல், இப்பொழுதும் ஆதவன் பேசுவதை தடுக்க யாருமில்லை.

 

வேதாவும், நிவனும் கூனி குறுகி பதில் பேச இயலாத நிலையில் வெளியேறினர்.

 

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில், நிவனால் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணிக்கம் போதை தெளிந்து, நிவன் இருப்பான் என்று நம்பி ஆதவன் வீட்டுக்குள் வர, அங்கே ராகவனை பார்த்த மாணிக்கம், திகில் கொண்டு அசையாது நின்றான்…

 

அதன் பின் ராகவன் கடுமையாக மாணிக்கத்தை எச்சரித்துவிட, எக்காரணம் கொண்டும் இனி தலையிட மாட்டேன் என்று சத்தியம் செய்யாத குறையாய், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் எடுத்தான்.

 

செவ்வந்தி மட்டும் என்ன செய்வது என்று செய்வதறியாது, ஆதவனின் கோபத்தை கண்டு நடுங்கி, அங்கேயே ஒரு மூலையில் அண்டி நிற்க, ஆனால் ஆதவன் அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. பார்வதி பாட்டியிடம் ஆதவன், அவளை பார்த்துக் கொள்ளுமாறு சமிக்கை காட்டிவிட்டு, இழையினி இருந்த அறைக்கு செல்ல, பார்வதி பாட்டி என்ற அந்த பெண் சிங்கத்திடம் சிக்கிக்கொண்டாள் செவ்வந்தி.

 

இனி கனவிலும், குடியை கெடுக்க துணிவு வராத அளவுக்கு பார்வதி பாட்டி செவ்வந்திக்கு பரிசுக் கொடுக்க, வாங்கின பரிசுகளை அள்ளமுடியாமல் அள்ளிச் சென்றாள் செவ்வந்தி.

 

அவனின் இழையா இருந்த அறைக்குள் சென்ற ஆதவன், கண்களில் காதலுடனும், தந்தையாக போகும் கர்வத்துடனும், இழந்ததை திரும்ப பெற்றுவிட்ட சந்தோசத்துடனும், இழையாவிடம் நெருங்கினான்….

 

அழகிய சிப்பி போல, இமை கவிழ்ந்து அவள் படுத்திருக்க, ஆதவன் மெதுவாக முன்னேறி, அவளது தூக்கம் கலைந்திடாதவாறு, அவன் குழந்தை வளரும் அவளது வயிற்றோடு மென்மையாக இதழ் பதித்தான்…

 

திடிரென்று ஏற்பட்ட வித்தியாசமான உணர்வில், மெல்ல விழி பிரித்தவளுக்கு, அருகில் இருப்பவன் ஆதவன் என்பதை அறிந்துக்கொள்ள ஒரு நொடி கூட தேவை இல்லாமல் போனது.

 

அவளிடம் அசைவை உணர்ந்து, அவன் அவசரமாக விலக, இழையினியோ மாறாக, ஆதவனை அருகில் அழைத்து அவனது பரந்த மார்பில், தன் முகத்தை ஆதரவாக புதைக்க, மெளனமாக சில நிமிடங்கள் கரைந்தது. அந்த மௌன நிமிடங்களின் அழகை, இமைகள் மூடி ரசித்திருந்தாள் இழையா…

 

“இழையா பயந்துட்டியாடா நேற்று…? ” மென்மையாக ஒலித்தது ஆதவனது குரல்.

“இல்லைங்க…. எனக்கு தெரியும்… எனக்கு நிச்சயம் எதுவும் ஆகாதுன்னு” உறுதியாக ஒலித்தது இழையினியின் குரல்.

“எப்படி சொல்ற இழையா..? ” அவளின் உறுதிக்கான காரணத்தை அறிந்துக்கொள்ளும் ஆர்வத்துடன் ஆதவன் கேட்க, “உங்களுக்கு விபத்துன்னு செவ்வந்தி சொன்னதும், உயிரே போனது போல எதுவுமே விசாரிக்காம தான் ஓடுனேன்… ஆனா போயிட்டு இருக்கும் பொழுதே, உங்களுக்கும் எனக்கும் அத்தனை சீக்கிரம் பிரிவு வராதுன்னு தீர்க்கமா நம்பிக்கையோடு போனேன்… நம்ம எண்ணத்துக்கு வலிமை இருக்குங்க, அது நிச்சயம் நடக்கும்… அந்த நம்பிக்கை நம்ம அன்பு மீதிருந்த நம்பிக்கை. அத்தனை சீக்கிரம் உங்கள விட்டு எங்கையும் நான் போகமாட்டேன்….” என்று கூறி, மேலும் கணவனது மார்பில் அழுந்த முகம் புதைக்க, அந்த நொடி ஆதவனுக்கு வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத நொடியாகி போனது.

 

அந்த இன்பமான சூழலில், வேகமாக வெளியேறி, அவனது காரில் இருந்து ஒரு பையை கொண்டு வந்தான். எதை அவளிடம் கொடுப்பதற்காக நேற்று அவன் இழையினியை ஆற்றங்கரைக்கு வர சொன்னானோ, அந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை, அவன் கையோடு கொண்டு வந்திருந்த பையிலிருந்து எடுத்து, அவனின் காதல் மனைவியிடம் கொடுக்க, அதை ஒரு குழந்தையின் குதுகலத்துடன், ஒரு குழந்தையை தன் வயிற்றில் சுமந்துக்கொண்டிருந்த இழையினி வாங்கி கொண்டாள்…

 

Advertisement